அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
அல்லாஹ், தன் அடியானை நேசிப்பதின் அடையாளங்கள்:
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:31)
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாரளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 5:54)
''அல்லாஹ், தன் அடியான் ஒருவனை விரும்பி விட்டால், ஜிப்ரீல்(அலை) அவர்களை (அழைத்து) நிச்சயமாக அல்லாஹ், இன்ன மனிதரை விரும்புகிறான். அவனை நீயும் விரும்பு!'' என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவனை விரும்புவார். அவர் வானத்தில் உள்ளோரிடம் ''நிச்சயமாக அல்லாஹ், இன்னாரை விரும்புகிறான். எனவே அவரை நீங்களும் விரும்புங்கள்'' என்று கூறுவார். வானில் உள்ளோரும் அவனை விரும்புவார்கள். பின்பு பூமியில் அவரை (எல்லோரும் விரும்பிட) ஒப்புதல் ஏற்படுத்தப்படும்'' (பூமியில் உள்ளவர்களும் நேசிப்பர்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 387)
"லாயிலாஹ இல்லல்லாஹ்" என்று ஒருவர் கூறி, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கப்படுவதை வெறுத்தால், அவனது சொத்தும், அவனது ரத்தமும் (உயிரும்) பாதுகாப்புப் பெறும். அவனது கேள்வி கணக்கு, அல்லாஹ்விடம் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.(அறிவிப்பவர்: அபூஅப்துல்லாஹ் என்ற தாரிக் இப்னு உஷைம் (ரலி) (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 391)
அல்லாஹ்வை பயப்படுதல்:
அல்லாஹ் கூறுகிறான்:
''என்னையே அஞ்சுங்கள்'' (அல்குர்ஆன்: 2:40)
உமது இறைவனின் பிடி கடுமையானது. (அல்குர்ஆன்: 85:12)
அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தரக்கூடியது: கடினமானது. (அல்குர்ஆன்: 11:102)
மறுமைiயில் வேதனையை அஞ்சுவோருக்கு இதில் பாடம் உள்ளது. அதுவே மக்கள் ஒன்று திரட்டப்படும் நாள், அதுவே (அனைவரும் இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள். (அல்குர்ஆன்: 11:103)
குறிப்பிட்ட காலக் கெடுவுக்காகவே அதைப் பிற்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 11:104)
அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர். (அல்குர்ஆன் : 11:105)
கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.(அல்குர்ஆன் : 11:106)
''நிச்சயமாக மறுமை நாளில் நரகவாசிகளில் வேதனையால் மிக இலகுவான ஒரு மனிதர் இருப்பார். அவரின் இரு பாதங்களின் கீழ் இரண்டு நெருப்புக் கட்டிகள் வைக்கப்படும். அதன் காரணமாக அவனது மூளை கொதித்து விடும். தன்னைவிட வேதனையால் மிகக் கடுமையானவர் என எவரையும் எண்ண மாட்டார். ஆனால் அவர்தான், வேதனையில் இலகுவானவர்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 398)
''(நரகவாசிகளான) அவர்களில் ஒருவனை அவனது கரண்டை வரை நரகம் பிடித்துக் கொள்ளும். அவர்களில், ஒருவனை இரண்டு முட்டுக்கால்கள் வரை பிடித்துக் கொள்ளும். அவர்களில் ஒருவனை அவனது இடுப்பு வரை பிடித்துக் கொள்ளும். அவர்களில் ஒருவனை அவனது தொண்டைக்குழி வரை பிடித்துக் கொள்ளும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி)அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 399)
''மறுமையில் உலக மக்களது இறைவனின் முன் மனிதர்கள் நிற்பார்கள். அவர்களில் (பயத்தால்) ஒருவன் தன் இரு காதுகள் வரை வியர்வையால் மூழ்கி நிற்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 400)
''கியாமத் நாளில் சூரியன் மற்ற படைப்புகளுக்கு நெருக்கமாக ஒரு மைல் தூர அளவுக்கு மனிதர்களுக்கு அருகில் இருக்கும். மேலும் மக்கள் அவர்களது செயல்களின் அளவுக்கு ஏற்ப வியர்வையில் (மூழ்கி) இருப்பர். அவர்களில் ஒருவர் தன் இரு கரண்டை வரை (வியர்வையில்) இருப்பார். மேலும் அவர்களில் ஒருவர் தன் இரண்டு முட்டுக்கால்கள் வரை (வியர்வையில்) இருப்பார். மேலும் அவர்களில் ஒருவர் தன் இடுப்பு வரை (வியர்வையில்) இருப்பார். மேலும் அவர்களில் ஒருவர் தன் வாய் வரை (வியர்வையில்) இருப்பார்'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் தன்கையை வாய் வரை சமிக்ஞை செய்தார்கள். (அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 402)
"உங்கள் எவரிடமும் தன் இறைவன் (மறுமையில்) பேசாமல் இருக்கமாட்டான். அவனுக்கும் அவருக்குமிடையே மொழி பெயர்ப்பாளர் இருக்கமாட்டார். தனது வலது புறம் பார்ப்பான். அங்கே தான் முன்பு அனுப்பி வைத்த (செயல்களை)த் தவிர வேறொன்றையும் பார்க்கமாட்டான். பின்பு இடது புறம் பார்ப்பான். தான் முன்பு செய்திட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) பார்க்கமாட்டான். தனக்கு முன்னே பார்ப்பான். அங்கே முகத்துக்கு நேராக நரகத்தைத் தவிர (மற்றதைப்) பார்க்கமாட்டான். எனவே பேரீத்தம் பழத்(தின் பாதியை தர்மம் செய்)தேனும் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாதம்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 405)
''ஓர் அடியான் தன் வயதை எப்படிக் கழித்தான்? தன் கல்வியை எதற்குப் பயன்படுத்தினான்? தன் சொத்தை எப்படி சம்பாதித்து, எதில் செலவழித்தான்? தன் உடலை எதில் ஈடுபடுத்தினான்? என்று கேள்வி கேட்கப்படும் வரை அந்த அடியானின் இரு கால்களும் (மறுமையில்) நகராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபர்ஸா என்ற நழ்லா இப்னு உபைத் அஸ்லமீ (ரலி) (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 407)
''மறுமை நாளில் மனிதர்கள் காலில் செருப்பு அணியாதவர்களாக, ஆடை இல்லாதவர்களாக, 'கத்னா' செய்யப்படாதவர்களாக ஒன்று சேர்க்கப்படுவார்கள்'' என்று நபி(ஸல்) கூறிட, நான் கேட்டேன். ''இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமாகவா?) ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்களில் சிலர் சிலரைப் பார்ப்பார்களே'' என்று நான் கூறினேன். ''ஆயிஷாவே! அன்றைய நாளின் விஷயம், அவர்களை (இதுமாதிரி) ஈடுபடச் செய்யும் ஒன்றை விட மிகக் கடுமையானது'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 411)
"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.
4 Responses So Far:
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அமைதியற்ற உள்ளங்கள் அலைபாய்கின்றன அமைதியைத் தேடி - பணம், பட்டம், பதவி இன்னும் உலகத் தேவைகள் எதுவெல்லாமோ அவற்றைத் தேடி, அவைக்கிடைத்தும் அமைதிபெறலாம் என்பதில் ஏமாற்றமே மிச்சம்.
ஆனால் நல்ல மாற்றம் - அருள் மறையும், நபி வழி யும் தம் வாழ்விற்கு நலம் பயக்கும் மருந்தாகுமே என வரும் வரை மட்டுமே.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !
ஜஸாக்கல்லாஹ் ஹைர். காக்கா
Post a Comment