கடந்த சில வாரங்களாக கடற்கரைத் தெருவில் புதிதாக எழுந்தருளியிருக்கும் ஜொஹரா அம்மாள் என்கிற அவுலியா அவர்களின் கைக்கூலி தராமல் வந்திருக்கும் மருமகளுடைய கபுரைப் பற்றி நமதூரைச் சேர்ந்த பல வலைதள ஊடகங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
ஒரு மருமகளுக்கு இப்படி ஒரு மரியாதை செய்யப்படுகிறது என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். கண்ணீர் சிந்திக் கொண்டு கனவில் வரும் மருமகள்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி கபுர் கட்டச்சொன்ன மருமகளைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இப்படி ஒரு மருமகளே கபுர் கட்டச் சொல்லி வந்தால் “அவளுக்கே கபுர், எனக்கு இல்லையா?” என்று நாளை ஒரு மாமியார் வந்தால் நாம் ஆச்சரியப் படத்தேவை இல்லை.
ஜொஹரா அம்மாள் கபூர் பற்றி அதிரைநிருபர் வலைதளத்தில் ஒரு விவாதக் களமும் வைத்தோம். அந்த விவாதக்களத்தில் பலரும் பங்கெடுத்து கருத்துக்களை சொன்னார்கள். அவை தொடர்பாக மேலும் கருத்துக்களை சொல்ல வேண்டி இருப்பதாலும்-கருத்துக்களின் சாரம் மற்றும் முக்கிய அம்சங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கிலும் ஏடு இட்டோர் இயல் தெளிவாக அலசுகிறது..
இந்தப் பிரச்னை பற்றி கடற்கரைத் தெருவைச் சேர்ந்த சில நண்பர்களிடம் பேசினோம். பலரும் இந்த அடக்கஸ்தலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் இதைத் தடுக்க அல்லது நேரடியாக ஈடுபட்டு இடிக்கவோ இடிக்கும் ஆட்களைத் திரட்டவோ முன் வரத் தயங்குகிறார்கள்.
இந்த கபுரை கட்டிய முயற்சிக்கு தலைமை தாங்கியவர் ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பவராம். இன்றுள்ள அரசியல்வாதிகளின் ஆயுதம் பொய்வழக்குப் போடுவது- போலீசை கையில் வைத்து மிரட்டுவது- அடுத்தவர் பிரச்னையில் அனாவசியமாக மூக்கை நுழைத்து பேனைப் பெருமாளாக்குவது ஆகியவைகளாகும். பல தீராத பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம். இந்தப் பிரச்னைகள் தீர்ந்துவிட்டால் இவர்கள் தீர்ந்து விடுவார்கள்.
உள்ளூரில் உள்ள சில்லுண்டி அரசியல்வாதிகளை நாம் கவனித்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி அரசியல் வாதிகளாயிருந்தாலும் ஒரு சிண்டிகேட்டாக செயல்பட்டு நில மோசடி ரியல் எஸ்டேட்- புறம்போக்கு வளைப்பு- கோயில் நிலம் கொள்ளை- உட்பட ஜாமீன் எடுப்பது வரை கூட்டாக செயல்பட்டு இளித்த வாயர்களிடம் புடுங்கியதை தோசையம்மா தோசை! அம்மா சுட்ட தோசை! அப்பாவுக்கு நாலு! அண்ணனுக்கு மூணு! அக்காவுக்கு இரண்டு! எனக்கு ஒன்னு! என்று ஆளாளுக்கு பிரித்துக் கொள்வதும் ஆகும். நமதூர் காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள தேநீர்க் கடைகளில் இவர்கள் அனைவரும் உஜாலா நீலம் போட்ட சட்டை போட்டு ஒன்றாக அமர்ந்து அல்லது திரிந்து மாமன் மச்சான் முறை வைத்து குசுகுசுவென்று பேசிகொண்டிருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியல்வாதிகளில் பல பேர் அரசு ஊழியர்களின் பாக்கெட்டை நிரப்பும் லஞ்ச வணிகத்துக்கு மார்கெட்டிங் மேனேஜர்களாகவே செயல் படுகிறார்கள். வாங்குவதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இவர்களுக்குத் தரப்படும்.
கடற்கரைத் தெருவில் உள்ள பல இளைஞர்கள் வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் வந்துள்ளவர்கள் . அல்லாஹ்வுக்கு பயப்படுவதற்கு அடுத்து அவர்கள் கம்பெனி நிர்வாகத்துக்கும் பாஸ்போர்ட்டில் உள்ள விசாவுக்கும் கையில் உள்ள ரிடர்ன் டிக்கெட்டுக்கும் பயப்படுகிறார்கள். ஏதாவது ஒரு விவகாரம் என்று மாட்டிவிடப்பட்டால் பிறகு பயணம் போக முடியாவிட்டால் என்ன செய்வது என்கிற நியாயமான கவலை அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் குறிப்பாக மாமியார் வீடுகளிலும் தென்படுகிறது.
முன்பெல்லாம் உள்ளூரில் இருந்து பிழைத்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்த துணிச்சல் பரவலாக வெளிநாடுகள் செல்ல ஆரம்பித்த பிறகு குறைந்து போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். சொத்து வாங்க- அக்கா தங்கை திருமணம்- வாப்பா உம்மா வைத்திய செலவு- மனைவியின் கவர்னர் மாலைக் கனவு என்று பல வகைகளில் “கமிட்” ஆகிவிடுகிறார்கள். அதனால் பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்துவிட்டது. அது மட்டுமல்ல நமது இப்போதைய நிலைக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்கிற மனப்பான்மையும்தான்.
கிட்டத்தட்ட இத்தகைய WALK BY மனப்பான்மை லெபனான், இஸ்ரேல், காசா, ஈராக், எகிப்து, லிபியா, ஆப்கான் பிரச்னைகளில் ஏனைய அரபு நாடுகள் காட்டும் மனப் பான்மையை ஒத்தே இருக்கிறது.
சின்ன வயதில் இஸ்ரேலுக்கும் சிரியா மற்றும் எகிப்துக்கும் போர் நடந்தது. சின்னஞ்சிறு இஸ்ரேல் சிரியாவில் சில பகுதிகளையும் எகிப்தின் சில பகுதிகளையும் வென்று ஆக்ரமிப்பு செய்துவிட்டது. இதை செய்திப் பத்திரிகைகளின் வாயிலாகப் படித்த நமதூரின் சிறந்த அரசியல் கமேன்ட்ஸ்களுக்குப் பெயர் போன ஒரு பெரிய மனிதர் (மர்ஹூம்) ஒருவர் ஒரு கமெண்ட் அடித்தார் . அந்த கமெண்ட் இன்னும் நினைவில் உள்ளது. அவர் சொன்னது “எல்லா அரபு நாடுகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் ஒண்ணுக்குப் போனால் கூட இஸ்ரேல் மிதந்துவிடும் இவனுங்க ஒண்ணுமே செய்யாமல் வேடிக்கை பாக்குனாருங்களே” என்றார்.
அதன் பிறகு அரபு உலகில் நடை பெற்ற எத்தனையோ அத்து மீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், படுகொலைகள் ஆகியவற்றை அரபு நாடுகள் வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள கிடங்குகளையும் போர் விமானக்களையும், போர்க் கப்பல்களையும் நிறுத்திக்கொள்ள வசதிகளையும் செய்து கொடுத்தன. இவற்றிற்கெல்லாம் காரணம் அரபுகள், தான் சாப்பிடும் கஜூருக்கும், குடிக்கும் காஹ்வாவுக்கும் எவ்வித இடையூறும் வந்துவிடக்கூடாது என்று பயந்துதான். இதே எண்ணம்தான் இன்று பல இளைஞர்களின் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த எண்ணங்களையும் மீறி பல இயக்கங்களில் துடிப்பாக ஈடுபட்டு வேலை செய்யும் சிலர் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பெரும்பான்மையினோரின் உள் நோக்கம் அரசியலில் அறியப்பட்டு பின்னாளில் பணம் பண்ண வேண்டுமென்பதே. இத்தகையோரில் பலர், கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு இப்போதே பணம் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில விதி விலக்குகள் இருக்கின்றன என்பதையும் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறோம்.
மற்றோர் முக்கிய பிரச்னையையும் சொல்லியாக வேண்டும்.
நமதூரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் ஒரு அப்பாவி சிறுவன் கொல்லப்பட்டான். அது தொடர்பான வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. அநியாயமாக வழக்கில் தொடர்பே இல்லாத பலர் இந்த வழக்கில் பலி கடாவாக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலருடைய தொழில்கள் நசிந்துவிட்டன. சிலருடைய பாஸ்போர்ட்டுகள் இன்றுவரை முடக்கப்பட்டு இருக்கின்றன. அவர்களின் குடும்பங்கள் அல்லல் படுகின்றன. இந்த வழக்கில் பாதிக்கப் பட்டோருக்கு இவ்வளவு பெரிய ஊர் ஜமாஅத் செய்த உதவிகள் என்ன? இந்த வழக்கில் அவரவர்கள் சொந்தமாக ஆஜர் ஆகிறார்கள். அவர்களால் எவ்விதத் தொழிலும் செய்ய முடியவில்லை; எந்த ஊருக்கும் செல்ல முடியவில்லை. இந்த வழக்கில் அநியாயமாக சேர்க்கப்பட்ட ஒரே ஒரு முக்கியஸ்தர் மட்டும் பல பெரிய மனிதர்களின் முயற்சியால் விடுவிக்கப் பட்டார். மற்றவர்கள் நிலை? வழக்கு செலவுக்கு மற்றும் போக்குவரத்துக்கு கூட அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் ஊர் மொத்தமும் அவர்கள் பிரச்னையை அவர்கள் பார்க்கட்டுமென்று ஒதுங்கிவிட்டது.
அடுத்து இன்னொரு கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். ஊரில் சில இளைஞர்கள் தீவிரவாதிகள் என்று அரசு இயந்திரங்களால் முத்திரை குத்தப் பட்டுப் பழி வாங்கப் பட்டு இருக்கிறார்கள். இவை உண்மையா பொய்யா என்று இந்த ஊரின் திரண்ட மக்கள் தொகை உள்ள ஜமாஅத் ஆராய்ந்து இருக்கிறதா? ஊரைச் சேர்ந்த ஒருவர் ஒரு குறிப்பிட்டக் காரணம் சொல்லப் பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். அவர் அப்படி செய்து இருந்தால் அதற்குரிய நியாமான தண்டனையை அவர் ஏற்றே ஆகவேண்டும். ஆனால் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஏதோ காரணங்களுக்காக பழி வாங்கப் படுகிறார் என்றால் அந்தக் களங்கத்தைப் போக்க ஊர் ஒன்று கூடி செய்தது என்ன? ஒன்று ஊர் மூலமாக ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அப்படி தேசத்துரோகத்தில் அந்த இளைஞர் ஈடுபட்டிருந்தது உண்மை என்றால் அரசுத்தரப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ஊர் பெயரைக் கெடுத்தவனுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர அரசுடன் ஒத்துழைத்திருக்க வேண்டும். இரண்டு இப்படி ஒரு அப்பாவியை தேசத்துரோகக் குற்றம் சாட்டி ஜாமீனில் கூட வெளிவர முடியாமல் செய்திருக்கும் அரசை சட்டம் மற்றும் நீதி மன்றங்களின் மூலமாக ஊர் ஒன்று கூடி அந்த இளைஞனை வெளியே கொண்டு வந்து அந்தக் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்து இருக்க வேண்டும். இவற்றில் எதையுமே நாம் செய்யவில்லை.
அடுத்ததாக நமது ஊரைச் சேர்ந்த ஒரு தெருவில் நம்மில் இரு பிரிவினர் திரும்பத் திரும்ப சொந்தப் பகைகள் அல்லது ஈகோ காரணமாக தெருவின் அமைதியையும் ஊரின் பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருதரப்பின் வன்முறைகளின் காரணமாக பலமுறை காவல் துறை தலையிட்டும் இன்னும் முழு அமைதி திரும்பாமல் இருக்கிறது. அந்தப் பள்ளியில் நிலவும் சுகாதாரமான காற்றுக்காக வெளித் தெருக்களில் இருந்தெல்லாம் அங்கு தொழ வந்துகொண்டிருந்த கூட்டம் அங்கு நிலவும் திடீர் வன்முறைகள் காரணமாக குறைந்து விட்டது. கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குப் பிறகு அந்தப் பள்ளியில் ஒரு லோடு சவுக்குக் கட்டைகள் ஆங்காங்கே கிடந்தன. கற்களை வீசித் தாக்கிக்கொள்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். ஒரு வித அச்ச உணர்வு தெருவில் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனைகளை ஆக்க பூர்வமாக தீர்த்து இரு தரப்பாரையும் உண்மையில் ஒற்றுமைப் படுத்த நமது ஊரார் செய்த முயற்சிகள் யாவை? அந்தத் தெருவில் அடித்துக் கொள்கிறார்கள் நமக்கென்ன என்கிற ஒதுங்கும் மனப்பான்மைதானே மேலோங்கிவிட்டது?
இப்போது கடற்கரைத் தெருவில் கட்டப்பட்ட கபுரை துணிச்சல் மிக்க சில இளைஞர்கள் இடிக்கப் புறப்பட்டால் நாளை அந்த இளஞர்களுக்கு ஏதாவது சட்டச் சிக்கல் ஏற்பட்டால் இன்று உசுப்பி விடுவோர் துணை நிற்பார்களா என்பதே விடை தெரியாத வினா. இந்த ஊரில் தற்போது உள்ள எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்காது. கண்டனத் தீர்மானம் மட்டும் போடுவார்கள். தேனைத் தாளில் தேன் என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
இவற்றிற்கு என்னதான் தீர்வுகளாக இருக்க முடியும்?
ஜொஹரா அம்மாளை நோக்கி வரும் மக்களை பிரச்சாரம் செய்துதான் திருத்த வேண்டும். தப்லீக் உடைய பணிகளும், தாருத் தவ்ஹீத் உடைய பிரச்சாரமும், இன்னும் மற்ற தவ்ஹீது அமைப்புகளுடைய பிரச்சாரமும் மக்கள் மனதில் சென்று பாயும் வண்ணம் தீவிரப் படுத்தப் பட வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பின் வாராந்திரக் கூட்டம் பிலால் நகரில் வெள்ளிக் கிழமை நடப்பது போல் ஒவ்வொரு வியாழன் மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் கடல்கரைத் தெருவில் பெரிய புளிய மரத்தின் அருகில் உள்ள கொடி மர மேடைக்கு அருகிலும் விலைக்காரத் தெருவின் முச்சந்தியிலும் மாறி மாறி மார்க்க சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும்.
கபுரை இடிப்பதை விட மக்கள் மனதில் புரையோடிவிட்ட குபுரை இடிக்க பிரச்சாரம் தீவிரப் படுத்தப்பட வேண்டும். வன்முறையைக் கையில் எடுப்பதைவிட வார்த்தைகளால் மக்களை திருத்த பிரச்சாரங்கள் அதிகப்படுத்தப் படவேண்டும். இந்த கபுர் வணக்கத்துக்குக் காரணமானோரை ஊரில் உள்ள ஆலிம்கள் அவர்களின் வீடு தேடிச் சென்று விளங்கச்செய்ய வேண்டும். ஆலிம்கள், அநியாத்தை தட்டிக் கேட்க திராணியற்ற அரபிகள் போல் சுகவாசிகளாக சமூகப் பொறுப்பின்றி இருந்தால் அனாச்சாரங்கள் இன்னும் மேலோங்கும்.
ஊர் கெட்டுப்போக காரணம் செயல்படும் கெட்டவர்கள் மட்டுமல்ல செயல்படாத நல்லவர்களும்தான்.
அதிரைநிருபர் பதிப்பகம்
22 Responses So Far:
எதார்த்தமான தலையங்கம். ஊரின் ஒட்டுமொத்த நிலமைகளையும் ஒரே தலையங்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றீர்கள் அடக்கித் திருத்துவதை விடவும் அன்பால் திருத்துவதே சாலச் சிறந்த உத்தி; அஃதே விவேகமுடையோரின் புத்தி! சிந்திப்போம்; செயல்படுவோம்.
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
கடற்கரைத் தெரு வாசிகளுக்கு
நல்ல காலம் பொறக்குது
ஹாஜா ஒலியப்பா சொல்றாங்க
ஜொஹராம்மா சொல்றாஙக
ரெண்டு ஹந்தூரி வரப்போகுது
ரெண்டு ஹந்தூரி வரப்போகுத்
மாமனாருக்கு ஒன்னு
மருமயளுக்கு ஒன்னு
ரெண்டு ஹந்தூரி வரப்போகுது
ரெண்டு கூடு
ரெண்டு கொடியூர்வலம்
ரெண்டுங்கெட்டான் கூட்டத்தின்
ரெட்டை வேஷம் களையப்போகுது
ரெண்டு ஃபாதிஹா
ரெண்டு ரெக்கார்ட் டான்ஸ்
ரெண்டு உண்டியல் நிறையப்போகுது
அதிராம்பட்டினம் பேர் வெளங்கப்போகுது
அசலூர்க்காரனெல்லாம் காரித்துப்பப்போறான்
தெருவைவிட அதிகமா சங்கமுண்டு அமைப்புமுண்டு
அத்தினி பேருக்கும் ஆப்பு வச்ச ஆளைப்பாரு
உண்மை வெளங்கிப்போச்சி
உணமை வெளங்கிப்போச்சி
அவுலியாக்கல் உருவான
அண்டப்புலுகு அம்பலமாச்சி
எந்த ஒரு அவுலியாவும் அடங்கலீங்க அடங்கலீங்க
இப்படித்தான் இப்படித்தான்
கண்ட கனா கபுராச்சு
கபுரெல்லாம் தர்காவாச்சு.
எத்தனை கனவுண்டோ
அத்தனைக்கும் கபுருண்டு
ஜாகிலியா திரும்பிடிச்சு
ஜாகிலியா திரும்பிடிச்சு
கபுர் வணங்கும் ஊரைவிட்டு
சபுர் செய்ய தோணுதுங்கோ
விஸ்வரூபம் எதிர்த்தாச்சு
அதைவிட அசிங்கம்
இப்ப எழுந்தருளி நிலைச்சாச்சு.
*அதிரையர் அத்தனைவரும் அவசியம் அறிந்து சிந்திக்க வேண்டிய தருணமும் அதற்கு தலையாய தலையங்கமும்!
*தப்லீக் உடைய பணிகளும், தவ்ஹீத் உடைய பிரச்சாரமும், இன்னும் மற்ற அமைப்புகளுடைய பிரச்சாரமும் மக்கள் மனதில் சென்று பாயும் வண்ணம் தீவிரப் படுத்தப் பட வேண்டும்.
* இந்த கபுர் வணக்கத்துக்குக் காரணமானோரை ஊரில் உள்ள ஆலிம்களும் அவர்களிடம் அன்னியோன்யமாய் பழகுபவர்களும் வீடு தேடிச் சென்று விளங்கச்செய்ய வேண்டும்.
*மூன்றாம் கபுரின் உதயம் ஏனையவற்றிற்கும் தீர்வாக இருக்கும். இன்சா அல்லாஹ்!
-----------------------------------------------------------------------------------------------------
ரபியுள் ஆகிர் 2
ஹிஜ்ரி1434
மயிரை பிடுங்கி எறிவது போல
இந்த கபுரை உடைத்து எறிய
அண்ணல் நபி சொன்ன அறிவுரை ஏற்று
அணிவகுப்போம் இன்ஷா அல்லாஹ்
அவ்லியாக்கள் என்று சொல்லி
வயிறு வளர்க்கும் கூட்டம்
இனி உணருமா ?
இது இஸ்லாத்தில் இல்லையென்று.
தப்லீக்கும் தவ்ஹீதும் ஒன்று சேர
இது ஒரு தருணம்
அவ்லியா சைத்தானை
விரட்ட ஒரு புது சபதம்
எனக்குத்தெரிந்து மிகவும் எதார்த்தமாக உண்மையை முகத்தில் அடித்தாற்போல் சொல்லப்பட்ட தலையங்கம் இது.
எடுத்துக்காட்டாக இருந்த தெருக்கள் இப்போது ஏளனத்துக்கு உள்ளானதற்கு காரணம் தேவையில்லாமல் உருவான கபுரும் / வன்முறையும்தான்.
/எடுத்துக்காட்டாக இருந்த தெருக்கள் இப்போது ஏளனத்துக்கு உள்ளானதற்கு காரணம் தேவையில்லாமல் உருவான கபுரும் / வன்முறையும்தான்//
விகிதாச்சாரம் பார்த்தால் இந்த இழிநிலைக்குக் காரணம் ஓரிரண்டு குடும்பங்கள் மட்டுமே. அவமானமோ மொத்தத் தெருக்களுக்குமே, ஏன், மொத்த ஊருக்குமே என்கிறபோது, பெரும்பான்மை தெருவாசிகளும் ஊர்க்காரர்களும் அநீதியை/ஷிர்க்கை கண்டும் காணாமல் இருந்தால் மாறுமையில் அல்லாஹ் பிடிக்கமாட்டானா?
இம்மையில் வெட்கமில்லாமல் போய்விடுமா?
அடக் கொடுமையே !!!
கனவுல வந்த ஜொஹராம்மா கபுரை கட்டிவிட்டு இடிக்காமல் இருக்க ஸ்டே ஆர்டருமா வாங்கச் சொன்னாங்க !?
குரோதக் கும்பலின் துரோகச் செயல் !
நல்லதொரு தெளிவான விளக்கமான தலையங்கம்!
கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற பழைய மொழி!
தர்காவை திறந்து வைத்தேன் வருமானத்திற்காக
உண்டியலில் காசு போட ஆளில்லை என்ற நிலை எப்பொழுதும் வரும்!
Assalamu Alaikkum,
Good analysis. Solution oriented article.
And solution can not be obtained in short term(as I had mentioned in the previous comments in related articles,"to remove the poisonous plant pluck out the root instead of cutting leaves and branches").
We have to realize solution is in the long term. I wish the proposed solution(bring the light to make the dark go away) is effectively initiated soon.
When a person in his daily prayer deeply says that
"اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ" - "Show us the straight way... ", he/she will be more probably in the right path, InshaAllah.
May Almighty Allah shower his blessings on us.
Thanks and best regards,
B. Ahamed Ameen
அவ்லியா மருமகளுக்கு??? கபுர் கட்டியாகி விட்டது?
இத்தனை நாள் தனியாக இருந்த அவ்லியாவுக்கு போர் அடித்து காரணத்தால் மீண்டும் கனவில் வருவார் கீழே உள்ள குடும்பத்திற்கும்??? கபுர் கேட்பார்.
அவ்லியா மனைவிக்கு? கபுர்
அவ்லியா மகனுக்கு? கபுர்
அவ்லியா பேரனுக்கு? கபுர்
அவ்லியா பேத்திக்கு? கபுர்
புளியமரம் விளையாடும் இடமெல்லாம் கபுராக? போகிறதோ!
தலையங்கத்தில் விலா வாரியாக தீமையை தடுக்க நினைப்பவர்களுக்கு வரும் பாதிப்பை விளக்கிய காரணத்தால் நமக்கு யாருக்கும் கனவு!???
Good analysis. Solution oriented article.
அதிரையர் அத்தனைவரும் அவசியம் அறிந்து சிந்திக்க வேண்டிய தருணமும் அதற்கு தலையாய தலையங்கமும்!
*தப்லீக் உடைய பணிகளும், தவ்ஹீத் உடைய பிரச்சாரமும், இன்னும் மற்ற அமைப்புகளுடைய பிரச்சாரமும் மக்கள் மனதில் சென்று பாயும் வண்ணம் தீவிரப் படுத்தப் பட வேண்டும்.
* இந்த கபுர் வணக்கத்துக்குக் காரணமானோரை ஊரில் உள்ள ஆலிம்களும் அவர்களிடம் அன்னியோன்யமாய் பழகுபவர்களும் வீடு தேடிச் சென்று விளங்கச்செய்ய வேண்டும்.
*மூன்றாம் கபுரின் உதயம் ஏனையவற்றிற்கும் தீர்வாக இருக்கும். இன்சா அல்லாஹ்!
அவசிய-அவசரமான பதிவு!
அஸ்ஸலாமு அலைக்கும்
மிக அருமையான பதிவு. உண்மை நிலையை உரக்க சொன்ன யதார்த்தமான ஆக்கம். நிலைமை மோசம் அடைந்து கொண்டிருக்கிறது - நாம் அனைவரும் கவலைப்படுகிறோம் பேசுகிறோம் இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்ட நம்மில் பலருக்கும் எண்ணத்தில் ஓட்டம் இருந்திருக்கலாம்- எழுத்தில் பதிய அல்லாஹ் உங்களுக்கு நாட்டத்தை தந்துள்ளான்.
///கபுரை இடிப்பதை விட மக்கள் மனதில் புரையோடிவிட்ட குபுரை இடிக்க பிரச்சாரம் தீவிரப் படுத்தப்பட வேண்டும். வன்முறையைக் கையில் எடுப்பதைவிட வார்த்தைகளால் மக்களை திருத்த பிரச்சாரங்கள் அதிகப்படுத்தப் படவேண்டும். இந்த கபுர் வணக்கத்துக்குக் காரணமானோரை ஊரில் உள்ள ஆலிம்கள் அவர்களின் வீடு தேடிச் சென்று விளங்கச்செய்ய வேண்டும். ஆலிம்கள், அநியாத்தை தட்டிக் கேட்க திராணியற்ற அரபிகள் போல் சுகவாசிகளாக சமூகப் பொறுப்பின்றி இருந்தால் அனாச்சாரங்கள் இன்னும் மேலோங்கும். ////
தங்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ஊர் அளவிலும் நாட்டளவிலும் உலக அளவிலும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஒன்றுபோல்தான் தெரிகிறது. அளவில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். இதனை நாம் சமாளிப்பது எப்படி?
இதனைவிட மோசமான சூழலில் இருந்து அதனை சமாளித்து சாதித்து காட்டிய வழிகாட்டி நம் இறைத்தூதர் இருக்கிறார்கள் - அவர்களின் வழி இருக்கிறது. அதனை செயல்படுத்துவதில்தான் நமக்கு தீர்வும் வெற்றியும் உள்ளது என்று நம் தப்லீக்,த த ஜ, அ த ஜ, த மு மு க, இ த ஜ இன்னும் உள்ள இயக்கங்கள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் உணர்ந்து ஒன்றுபட, செயல்பட முன்வர வேண்டும். இதெல்லாம் நடக்குமா என நாம் நினைத்தால் இன்னும் பல தீய விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் - அல்லாஹ் பாதுகாப்பானாக-
அது சரி, குஃப்ர்/ஷிர்க் என்பதன் வரவிலக்கணம் என்னவென்று முதலில் நாம் தெளிவடைய வேண்டும்.ஏனெனில் ஒரு பக்கம் சூஃபிகள் படைத்தவனையும் படைப்பினத்தையும் ஒன்றுசேர்க்கும் அத்வைதம் என்னும் ஷிர்க்கில் திளைக்கும் போது,மறுபக்கம் நம் தவ்ஹீதிகள் ஷிர்க்கிற்கு புதிது புதிதாக இலக்கணம் வகுக்கின்றனர். ஜூலை 2012 அப்டேட்படி நம் தௌஹீதிகளைப் பொறுத்து கண் திருஷ்டி என்று உள்ளது என நம்புவது ஷிர்க்காம் (அது சம்பந்தமாக ஷஹீஹைனில் பதிவான ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுகிறதாம். அதை நம்புபவர்கள்/நம்பியவர்கள் அனைவரும் ஷிர்க் செய்கின்றனர்).புதிய புதிய ஆய்வு முடிவுகளால் தௌஹீத் (??) நவீனமடையும் போது (2013ல் எது எது ஷிர்க்/குஃப்ர் ஆகும் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே வெளிச்சம்), நாம் ஷிர்க்/குஃப்ரிக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்வது என்னைப் பொறுத்து நகைப்பாக தோன்றுகிறது.
ஏனெனில் சத்தியத்தில் இருக்கும் ஒரு கூட்டம் அதாவது முஹாஜிர்கள், அன்ஸார்கள் உள்ளிட்ட சத்திய சஹாபாக்கள்,மற்றும் அவர்களைப் பின் தொடர்த்த நன்மக்களான இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம், இமாம் இப்னு மாஜா, இமாம் அபூதாவூத், இமாம் நஸயீ, இமாம் திர்மிதி, இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா, ஷைகுல் இஸ்லாம் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப், இமாம் அல்பானி, ஷைக் பின் பாஜ், ஷைக் இப்னு உதைமீன் உள்ளிட்டவர்களுக்கெல்லாம் தெரிய வராத ஷிர்க்/குஃப்ர் நம்மால் ஹிஜ்ரி 15ம் நூற்றாண்டில் ஆய்வுகள் மூலம் தெரியவரும் போது நீங்கள் எந்த ஷிர்க்கை, எந்த குஃப்ரை எதிர்த்து குரல் கொடுப்பீர்கள்???
நினைவில் கொள்ளவும். தௌஹீத் என்பது வெறுமனே சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கங்களையும்,சில சமூக குற்றங்களையும் எதிர்ப்பது மட்டுமல்ல. அல்லாஹ்வையும், நம்ப வேண்டியவற்றையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவதும் தௌஹீதின்பாற்பட்டதே.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தப் பதிவு அதிரை நிருபரில் வெளிவந்து பின் அதிரை எக்ஸ்பிரசிலும் வெளியிடப்பட்டிருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. அல்லாஹ் பெரியவன். பொதுப் பிரச்சனைகளில் அனைவரும் இணைந்து செயல்பட இன்னும் ஆற்றலைத் தருவானாக!
Ebrahim Ansari சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
///இந்தப் பதிவு அதிரை நிருபரில் வெளிவந்து பின் அதிரை எக்ஸ்பிரசிலும் வெளியிடப்பட்டிருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. அல்லாஹ் பெரியவன். பொதுப் பிரச்சனைகளில் அனைவரும் இணைந்து செயல்பட இன்னும் ஆற்றலைத் தருவானாக!///
வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா,
இறைமறுப்பை நம் இரு இணையங்களும் இணைந்து எதிர்த்ததே நமக்கு சந்த்தோசமாக இருக்கும் போது நம் ஊர் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ,ஜமாத்துக்களும் ஒன்றிணைந்து ஒரு தலைமையின் கீழ் இதற்காகவாவது முதலில் ஒன்றுபட்டு எதிர்த்து அதனை இடித்து துணைபோகும் அவர்கட்கு எதிர்ப்பை காட்டட்டும்.
எப்படி ஒரு விஸ(வ)ரூபத்திற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களூம் ஒன்றுபட்டு எதிர்த்து வலிமையை காட்டியதோ அது போல.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் அவர்கள் ஏகத்துவப்பிரச்சாரத்திற்க்காக அம்மக்களிடையே அவர்களின் ஷிர்க் போன்ற பெரும்பாவங்கள் குறித்து எடுத்துசொல்லும்போது சொல்லொனா துயரங்கள் பட்டு ஊர் விலக்கு செய்து அவர்களும் அவர்களைச்சார்ந்த சிலரும் தனிமைப்படுத்தப்பட்டனர். நீண்ட பொறுமைக்குப் பின் அல்லாஹ் அருளால் அவர்களுக்கு உதவி கிடைத்தது நிலைமை மாறி அசத்தியம் அழிந்து சத்தியம் தழைத்தது. பின் அவர்கள் வழிவந்தவர்களின் முயற்ச்சிகள், தியாகங்களின் காரணமாக இஸ்லாம் வளர்ந்தது.
தற்போது 25 அல்லது 30 வருடங்களுக்கு முன் ஏகத்துவம் மங்கி இருந்த நேரத்தில் ஒரு சில மார்க்க் மேதைகள் மீண்டும் ஏகத்துவத்தினை மக்களிடம் விளக்க வேன்டும் என்ற நோக்கத்தில் எடுத்து சொல்லும்போதும் அவர்களும் அவர்களைச்சார்ந்தவர்களும் ஊர்விலக்கு செய்யப்பட்டனர். பல சோதனைகளையும் அனுபவித்தனர். ஆனால் பணியில் துவண்டுவிடவில்லை. தமிழகத்தில் உள்ள பல தர்காக்களுக்கு எதிரிலேயெ மேடை அமைத்து பிரச்சாரம் செய்தனர். சத்தியம் தழைக்க தங்களால் முடிந்த அளவுக்குப்பாடு பட்டனர்.
ஆனால் தற்போது அந்த பிரச்சாத்தில் தொய்வு ஏற்பட்டதால் தானோ என்னவோ இது போன்ற கழிவறை கப்ருகள் எல்லாம் மீண்டும் முளைக்க ஆரம்பித்துவிட்டன என நினைக்கத்தோன்றுகிறது. எனவே சத்தியம் மீண்டும் தழைக்கவேண்டுமெனில் ஏகத்துவம் மீண்டும் முழுவீச்சில் நாலா பக்கங்களிலும் எடுதுரைக்கப்பட வேண்டும். ஒருமித்த குரலில் ஒரு தலைமையின் கீழ்.
அதே சமயம் இந்த திடீர் கழிவறைக்கபுருக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் அனைத்து ஜமாத், தெரு, முஹல்லாவாசிகளும் ஒன்றுபட்டு அதற்க்கு காரணமானவர்களிடம் எடுத்துக்கூறி அதனை அகற்ற முயற்ச்சி செய்ய வேண்டும். அவர்கள் அதற்க்கு இணங்கவில்லையெனில் அவர்களை நாம் அனைவரும் இனங்கண்டு ஊர் விலக்கு செய்யவேண்டும் - இது சத்தியத்திற்க்காக - அல்ல்லஹ்விற்க்காக
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் / வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். இந்த பழமொழிக்கும் கடற்கரைத்தெருவின் 50 வருட வரலாற்றுக்கும் சம்பந்தம் இருப்பதாக வயதில் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அன்புச் சகோதரர் அஹ்மத் ஃபிர்தெளஸ்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாங்கள் அதிரை நிருபரின் வாசகாராக இருப்பதில் ரொம்ப சந்தோஷம்.
உங்கள் முதல் பின்னூட்டம் கவனிக்கப்படாமல் இருப்பதிலிருந்து ஒன்றை நீங்கள் யூகித்திருக்க வேண்டும். பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் கவனம் ஈர்க்காது. தனியாகப் புலம்புவதுபோல் ஒரு தோற்றத்தை தங்களுக்கு ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.
இயக்கம், கூட்டம், கொள்கை என்றெல்லாம் பெரிய பெரிய விடயங்கள் பேசுவதற்கு முன்னால், இந்தப் பதிவின் பேசுபொருளான
"திடீர் கபுர் சரியா ஷிர்க்கா?" என்னும் இந்தக் கேள்வியில் தங்களின் நிலைபாட்டைச் சொல்லும் பட்சத்தில் மேற்கொண்டு உங்கள் பின்னூட்டங்கள் கவனிக்கப்படும்.
அன்றேல், சகோ. பீ.ஜே.யைப் பற்றிய தனிமனித விமரிசனத்துடன் கூடிய உங்களின் லேட்டஸ்ட் பின்னூட்டமும் மட்டுறுத்தப்படும்(பட வேண்டும் என்பது அ.நி.க்கு என் வேண்டுகோள்)
///நினைவில் கொள்ளவும். தௌஹீத் என்பது வெறுமனே சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கங்களையும்,சில சமூக குற்றங்களையும் எதிர்ப்பது மட்டுமல்ல. அல்லாஹ்வையும், நம்ப வேண்டியவற்றையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவதும் தௌஹீதின்பாற்பட்டதே.///
இதில் மாற்றுக்கருத்து இல்லை என்று வைத்துக்கோள்வோம்.
ஆனால்"திடீர் கப்ர் சரியார் ஷிர்க்கா?"
ஏனைய விசயங்களில் நாம் ஒருமித்த தெளிவடையவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திடீர் கப்ரை ஒருமித்த்து எதிர்ப்பதில் தாமதம் காட்டினால் ஒரு வேளை நாளை மருமகளில் துவங்கி பேத்திவரை கப்ர் வந்தால் கூட ஆச்சர்யப்படுவதர்க்கில்லை - அல்லாஹ் பாதுகாப்பானாக.
சகோ. அஹ்மத் ஃபிர்தெளஸ்,
மேற்கொண்டு பொத்தாம் பொதுவாகவேப் பேசிச்செல்கிறீர்கள். தவிர, கட்டுரையில் தாங்கள் குறுக்கிடும் இடங்கள் என மேற்கோள் காட்டியிருப்பவைப் பற்றியும் தங்களின் நிலைபாட்டைச் சொல்லவில்லை.
//1)கபுரை இடிப்பதை விட மக்கள் மனதில் புரையோடிவிட்ட குபுரை இடிக்க பிரச்சாரம் தீவிரப் படுத்தப்பட வேண்டும்.//
இதில் தங்களின் நிலபாடு என்ன? குஃபுரை இடிப்போமா வேண்டாமா?
//2)தாருத் தவ்ஹீத் உடைய பிரச்சாரமும், இன்னும் மற்ற தவ்ஹீது அமைப்புகளுடைய பிரச்சாரமும் மக்கள் மனதில் சென்று பாயும் வண்ணம் தீவிரப் படுத்தப் பட வேண்டும்//.
இந்த இரண்டாவது மேற்கோளில் கட்டுரையிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யும்போது (தவறுதலாக ? :) ) கீழ்கண்ட வார்த்தைகள் விடுபட்டுப்போய் விட்டன. சேர்த்துக்கொண்டு மேலே சொல்லவும்.
////// தப்லீக் உடைய பணிகளும்,////
கவனித்தீர்களா? தங்களின் பின்னூட்டத்திற்கு நாகரிகமாக நான் பதில் தந்துவிட்டேன். தாங்களும் என் கேள்விக்கு பதில் தருவதுதானே முறை?
கடற்கரைத்தெருவில் புதிதாக எழுந்தருளியிருக்கும் கபுர் சரியா ஷிர்க்கா?
2000க்குமுன் ஷிர்க்கல்ல; 2025ல் ஷிர்க்காகலாம் என்கிற கதை வேண்டாமே ப்ளீஸ்.
இப்ப, இன்று நான் ஷிர்க் என்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
Post a Comment