Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் - 13 20

அதிரைநிருபர் பதிப்பகம் | April 13, 2013 | , ,



தொடர் : பதிமூன்று
படைத்தவன் படைத்தது பற்றாக்குறையா? தொடர்ச்சி...

பற்றாக்குறை , பஞ்சம் வறுமை ஆகிய சூழ்நிலைகளில் இஸ்லாம் கூறும் தீர்வு என்ன ? இருப்பதைப் பகிருங்கள். இருப்பவர்கள் இல்லாதோர்க்கு உதவிடுங்கள் பற்றாக்குறையும் பஞ்சமும் வறுமையும் பறந்தோடிவிடும் என்பதே வாழ்க்கை நெறியான இஸ்லாம் காட்டும் பொருளாதார வழி. இதை  சாதிப்பதும் நிலை நிறுத்துவதும் வன்முறையால் அல்ல ; அன்பாலும் ஆன்மீக உணர்வாலும் இறை அச்சத்தாலும் மறுமையின் தேட்டத்தாலுமே. 

அருள்மறை கூறுகிறது 

"தங்களுக்குத் தேவை இருந்தபோதிலும் சரி, தங்களைவிடப் பிறரையே அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்" ( அல் ஹஷ்ர்  59:9) . 

இந்தப் பண்பாட்டில் திளைத்த சஹபாக்கள் உடைய தியாக  வரலாறுகள் குவிந்து கிடக்கின்றன.  

வறுமை தாண்டவமாடிய ஒரு காலகட்டத்தில், ஒரு சஹாபிக்கு மற்றொருவர் ஒரு ஆட்டுத்தலையை அனுப்பிவைத்தார். அதைப் பார்த்த அந்த  சஹாபி  இந்த ஆட்டுத்தலை  என்னைவிட வறுமையில் வாடும்  இன்னொரு சஹாபிக்குப் போனால் உதவியாக இருக்கும் என்று அவரிடம் அனுப்பி வைத்தார். அந்த இன்னொருவர் அதேபோல் எண்ணி மற்றவருக்கு அனுப்பிவைத்தார். அந்த மற்றவரும் இன்னொரு ஏழை சஹாபிக்கு அனுப்பி வைத்தார். இப்படியே  ஏழுபேர்களிடம் சுற்றி சுற்றி சென்ற  அந்த ஆட்டுத்தலை முதலாவதாக அனுப்பட்ட சஹாபி இடமே திரும்பவும் வந்து சேர்ந்தது. 

விருந்தாளியாக வந்த வறுமை நிறைந்த ஒருவருக்கு உணவளிப்பதற்காக தனது குழந்தைகளை ஓர் இரவு பட்டினி இருக்கச் செய்துவிட்டு விரைவில்  விளக்கை அணைத்து அவர்களை உறங்க வைத்துவிட்டு ஏழை விருந்தாளியின் வயிறை நிரப்பி அனுப்பிய மற்றொரு நபித்தோழரின்  வரலாற்றையும் படித்து கண்ணீர் வடிக்கிறோம். 

பிறருக்காக தங்களது தற்காலிகத் துயரங்களைத் தாங்கிக்கொண்டு , இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை எங்கே வருகிறது?  படைத்தவனின் வழிகாட்டலில் வறுமை வந்த வழி சென்றுவிடுகிறது ; பற்றாக்குறை பறந்து போய்விடுகிறது. அல்ஹம்துலில்லாஹி  ஷுக்கூர் அகிலமெங்கும் முழங்குகிறது. 

செல்வத்தையும் சுகத்தையும் பங்கு போட்டு வாழ்வதுதான் உயரிய பொருளாதார வாழ்வு என்று எண்ணிக்  கொண்டு இருப்பவர்களுக்கு வறுமையையும் கஷ்டங்களையும் பங்கு போட்டுக் கொள்வதும்  இறைவனுக்குப் பொருத்தமான  பொருளாதார வாழ்வுதான்  என்பதை புரியும்படி சொல்லிக் கொடுக்கிறது இஸ்லாம்.  ஆன்மிகம் கலந்த, அனைவருக்கும் அனைத்தும் என்பதே  இஸ்லாம் தரும் பொருளாதாரம். பற்றாக்குறை நிலவும் சமூகத்தில் சட்டத்தினால் , வன்முறையால் சாதிக்க இயலாததை ஆன்மீகத்தால்,  சகிப்புத்தன்மையால்,  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதால்   சாதிக்கலாம் என்று  சான்று பகரும் சரித்திரங்கள் பல நிரம்பியது இஸ்லாம். 

அதுமட்டுமல்ல. “உண்ணுங்கள் ! பருகுங்கள்!  வீண் விரயம் செய்யாதீர்கள்” என்று  அறிவுரை பகர்கிறது இஸ்லாம்.  உணவுப் பொருட்களை வீணாக்குவது இறைவனின் முன்  தண்டனைக்குரிய குற்றம் என்று கண்டிப்பது இஸ்லாம். சாப்பிடும்போது கீழே சிந்தாமல் சாப்பிடுவது- தட்டைகளில் இருப்பவற்றை  மிச்சம் வைக்காமல் தட்டையை வழித்தும் விரல்களை சூப்பியும் சாப்பிடுவது- நம்மால் சாப்பிட முடியாவிட்டால் ஒருவர் தட்டிலிருந்து அடுத்தவர் தட்டுக்கு மாற்றிக் கொள்வதும் தவறில்லை என்றும் சொல்லியும் வாழ்ந்தும் காட்டிய பெருமானார் போதித்த சுன்னத்துக்கள்  பற்றாக்குறை ஏற்படாமல் பாதுகாக்கும் பொருளாதாரமே அல்லாமல் வேறென்ன? அடுத்தவர் கை பட்ட உணவை தீட்டுப் பட்ட உணவு என்று கழிவுகள் ஓடும்  கால்வாயில் கொட்ட சாத்திரம் வகுத்திருக்கும் சமுதாயங்களுக்கு மத்தியில்  ஒரே தட்டில் உட்கார்ந்து பகிர்ந்துண்ணும் சகோதரத்துவத்தை சொல்லிக் கொடுத்திருப்பது இஸ்லாம். 

வீட்டில் சமைத்தது பிடிக்கவில்லை என்று விடுதிகளில்  சாப்பிடுவது – கோபம்  வந்தால் உணவுத் தட்டுக்களை உணவுடன் பறக்க விடுவது-  ஆடம்பரமான திருமண விருந்துகள்- அஜீரணம் ஏற்படுத்தும்  அறுபது வகை அயிட்டங்கள்- ஒரே நாளில் திட்டமிடாத பலர் வீட்டுத் திருமணங்கள்- விருந்துகள் -  கொடி மரம்  ஏற்றி அல்லது கொடி ஏற்றி, இறக்கி கூடைகளில் சோற்றை அள்ளி வீசும் செயல்கள்- இன்னபிற மனித இனத்தின் மூட ஆடம்பரச் செயல்களால்தான் பற்றாக்குறை ஏற்படுகிறது. இறைவனின் சாபமும் உண்டாகிறது.  

“நீங்கள் தினமும் சிதறவிடும் 
ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் 
எங்களின் உயிர் 
இன்னும் சிலநாட்கள் 
இந்த பூமியில் சுவாசித்திருக்கும்”

என்று  ஒரு கவிஞன் கண்ணீர் வடிக்கிறான்.

சிந்திச் சிதறும் உணவுப் பருக்கைகளில் கூட இறைவனின் பரக்கத் விரவி இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.   

ஸஹீ ஹ் முஸ்லிம்  556 – வது ஹதீஸில் அப்துல்லாஹ் பின் அம்ரு மின் அல் ஆஸ் ( ரலி அல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள் 

“எவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தேவையின் அளவுக்கு வாழ்வாதரங்கள்  கொடுக்கப் பட்டு மற்றும் அவன்   கொடுத்ததைக் கொண்டு அல்லாஹ் எவரை திருப்தியடையச் செய்தானோ, அவர் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார். “ 

ஸ்ஹீஹ் முஸ்லிம் 563 – வது ஹதீஸில் அபூஹுரைரா ( ரலி) அவர்கள் கீழ்க்கண்ட நபி மொழியை அறிவிக்கிறார்கள்., 

உலக சுகபோகங்கள் அதிகமாகப் பெற்று இருப்பது சீமான தனமல்ல; போதுமென்ற மனமுடையவராக மனத்தால் சீமானாக இருப்பதுவே சீமான் தனமாகும்.”   போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றுகூட கேட்டிருக்கிறோம்.  

உலகில் ஒரு புறம் பசியால் வரும் ஏப்பம்; மறு புறம்  அஜீரணத்தால் புளித்த ஏப்பம். வளமிக்க நாடுகளில் விளைச்சல் அதிகமாகி  உணவுப் பொருட்களை கடலில் கொட்டுகிறார்கள். மறு புறமோ பச்சிளங்குழந்தைகள் கூட பால் இன்றித் தவிக்கிறார்கள். எதியோப்பியா, சோமாலியா, செனகல், கென்யா  போன்ற நாடுகளில் உள்ளவர்கள் உணவின்றி ‘ எலும்பு தோல் போர்த்த உடம்பு’ என்பதற்கு இலக்கணமாகிறார்கள். பட்டினிச்சாவுகள் பரவலாகிவிட்ட செய்திகள் வருகின்றன. கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பஞ்சம் அதிகப் பட்டிருக்கிறது. அதேநேரம் வளமிக்க நாடுகளில் அல்லது செல்வமிக்க நாடுகளில் வீணடிக்கப் படும் உணவுப் பொருட்களை கணக்கிட முடியுமா?  சமைக்கப்பட்ட  உணவில் சாப்பிட்டது போக மிச்சப் பட்டுக்  குப்பைத்தொட்டியில் கொட்டப்படும் உணவு வகைகளுக்குக்  கணக்குண்டா?  ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஆடம்பர விருந்துகளில் கொறிக்கப் படுவது போக கொட்டப்படுவது எவ்வளவு?

சென்ற சில நூற்றாண்டுகளில் காலனிய ஆதிக்கம் செய்து வந்த இங்கிலாந்தில் மக்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பங்கை வீணாக்குகிறார்களாம். ஸ்வீடனிலும் தாங்கள் வாங்கும் உணவுப் பொருள்களில் நான்கில் ஒரு பங்கை வீணாக்குகிறார்களாம். புனிதமான நோன்பு மாதத்தில் கூட எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளில் எவ்வளவு உணவுப் பொருட்கள் இறைவனின் கட்டளைக்கு  விரோதமாக வீணாக்கப்படுகின்றன? ஏழைகள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் , வறுமைக்கு ஒரு கோடு போட்டு அந்தக் கோட்டின் கீழே மக்களைக் கொட்டி வைத்திருக்கும் இந்தியாவில் வருடத்துக்கு 50, 000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாக்கப்படுகின்றன என்று புள்ளிவிபரம் சொல்கிறது.  இப்படி, வளரும் மற்றும்  வளர்ந்துவிட்ட நாடுகளில் வாழுபவர்களில் நிறையப் பேருக்கு உலகின் மற்ற பகுதிகளில் எவ்வளவு வறுமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நேரமும் இல்லை, ஆர்வமும் இல்லை.  தன் வயிறு நிரம்பினால் சரி என்கிற மனப்பான்மை ஓங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. 

உலகில் உணவுப் பொருள்களின் விலை கூடியிருப்பதற்கும் பகிர்வு பரவலாக்கப்படாமலிருப்பதற்கும்  வீணாக்குவது மட்டும் காரணமில்லை. உணவுப் பொருள்கள் விளைவிக்கப் பயன்படுத்தப்படும் நிலங்களை எரிபொருள்களுக்கான தானியங்கள் விளைவிக்கப் பயன்படுத்தும் காரணத்தோடு பூமியின் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் வறட்சி ஏற்பட்டுத் தானியங்களின் உற்பத்தியும்  பாதிக்கப்பட்டிருக்கிறது. விளைந்து கொண்டிருக்கும் நிலங்கள் விதவைகளாக்கப்பட்டு நெல் விளைந்த பூமிகளில் கல்  விளைந்திருப்பது கண்கூடான காட்சி.    

இன்னொரு முக்கிய காரணம் உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization) கொள்கைகளின்படி சில நாடுகள் சில சாமான்களை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமாம். இதன்படி ஜப்பான் நிறைய அரிசியை இறக்குமதி செய்து வைத்திருக்கிறதாம். ஆனால் அதை உபயோகிப்போர் இல்லையாம். அந்த அரிசி அப்படியே அவர்கள் கிடங்கில் கிடந்து மக்க ஆரம்பித்த பிறகு அதைக் கால்நடைகளுக்குக் கொடுக்கிறார்களாம்! இதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உலக வர்த்தக அமைப்பின் அனுமதி தேவையாம்! இப்படி ஒரு கொடுமை! இஸ்லாத்தை அலட்சியப் படுத்தும்  அமெரிக்காவின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் உலக வர்த்தக அமைப்பு இயங்கும் லட்சணம்! யூத , கிருத்தவ அமைப்புகள் மற்றும் அவற்றின்  அரசியல்   பொருளாதாரம் உலகை ஆட்டுவிக்கும் இலட்சணத்தின் விளைவுகளே இவை. 

சோமாலியா போன்ற நாடுகளில் மனிதர்கள் பட்டினியால் இறக்கும் அளவிற்கு உணவுப் பற்றாக்குறை இருப்பதற்கு இந்த மேலை நாடுகளும் , செல்வச்செழிப்புள்ள நாடுகளும்  காரணமாக இருப்பதை ஒதுக்க முடியாது. இஸ்லாமிய நாடுகளிலும் கூட செல்வச்செழிப்பு காரணமாக கடல்கடந்து வரும் உணவுப் பொருள்கள் காலடியில் போட்டு நசுக்கப் படுவதையும் மறுப்பதற்கில்லை ; மறைப்பதற்கில்லை.  தொழில்நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் எத்தனையோ சாதனைகள் புரிந்து வரும் மனித இனம், இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சிலர் உணவில்லாமல் உயிர் இழக்கிறார்கள் என்பதை உணர்ந்து தலை குனிய வேண்டும், அதை முழுவதுமாக ஒழிக்க முழு மனதோடு பாடுபட வேண்டும். 

இருக்கும் நாடுகள் இல்லாத ஏழை நாடுகளுக்கும் உதவும் எண்ணம் ஓங்கவேண்டுமானால் அடிப்படையில் நடைமுறையில் அவை இஸ்லாமியப் பொருளாதார சிந்தனைகளை  பின்பற்ற வேண்டும். உலகமெங்கும் ஒரே மொழி! உண்மை பேசும் மொழியாக இஸ்லாம் ஓங்கி நிற்கும்போது மட்டுமல்ல இறைவனின் கட்டளைகள் அமுல்படுத்தப் படும்போதுதான் இவை உண்மையில் நிறைவேறும் .

இறைவன் படைத்தளித்த உலகின் வளங்கள்,   ஒரு சிலர் அல்லது ஒரு சில நாடுகளின்  கைகளில் சிக்கி முறையான பகிர்வு இன்றிப் போகும்போது – இறைவனின் பொருளாதார  சட்டங்களுக்கு மாறாக மனித மனங்களில் மவுடீகம் மண்டி இருக்கும்போது பற்றாக்குறை! பற்றாக்குறை! என்று படைத்தவன் மேல்  பழி போட்டு பயன் இல்லை. உலகம் இஸ்லாத்தை ஏற்க வேண்டும். 

ஒருவர் மற்றொருவருடைய பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள் ; மேலும் பிற மனிதார்க்ளுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக – அது தவறு என்று நீங்கள் அறிந்திருந்தும் – அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்" (அல் –பகரா 2: 188 ) 

என்கிற இறைவனின் அச்சுறுத்தல் , இலஞ்ச லாவண்யங்களைக் கண்டிக்கிறது. ஆனால் இவைகளை மீறி ஏழைகளுக்குரிய அரசு தரும் ரேஷன் அரிசிகளை கடத்திக் கொள்ளை இலாபம் அடிப்பவர்களை நாம் காணாமல் இருக்கிறோமா? நமக்கு அடுத்த வீட்டு அரிச்சந்திரர்கள்  அவர்கள்தானே?

ஆன்மிகத்தின் அடிப்படையில் அல்லாஹ் சொன்ன பொருளாதாரத்தை செயற்கைப் பற்றாக்குறையை உண்டாக்கும் ஆன்  லைன் பொருளாதாரம், ஆசைகளின் உச்சாணிக் கொம்பில் ஏறி  ஆக்கிரமித்ததாலும்  பஞ்சம், பசி, பட்டினிச் சாவுகள் பரவலாகின்றன.   பெற்றோர் சொல் கேளாத பிள்ளை உருப்படாது. படைத்தவன் விதித்த  கட்டளைகளை பின்பற்றாத  சமுதாயமும் மேன்மையடையாது. இஸ்லாம் சொல்லும் சிந்தனைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.  இருப்பதை எல்லோருக்கும் எல்லா இடங்களுக்கும் பகிர வேண்டும். 

வரம்பு மீறியவர்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்தவர்களை திருமறை இப்படி இடித்துரைக்கிறது . 

இன்னும் அந்த உண்மை மனோ இச்சையைப் பின்பற்றி இருப்பின், நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளோரும் குழப்பத்தில் ஆகியிருப்பர். மாறாக, அவர்களுக்கு ( குர் ஆன் எனும் ) நல்லுபதேசத்தையே கொடுத்தோம். ஆயினும் , அவர்கள் தங்களுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்." (அல்-மூமிநூன் 23: 71).

வெல்லப் போவது யார் இறைவனின் சட்டங்களா ? பேராசை கொண்ட மனிதனின் திட்டங்களா?  
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

20 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தொடரில் இத்தொகுப்பும் மற்றொரு மைல் கல்!

உலகம் இஸ்லாத்தை ஏற்பதன் பலனை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.

அரிசியும் சக்கரை வள்ளிக் கிழங்கும் பிரதான விவசாய உற்பத்தியாக இருந்து ஜப்பான் தன்னிறைவுடன் அமோக விளைச்சல் பெறும்போது மேலும் இறக்குமதி செய்து உணவை வீணாக்கச் சொல்லும் ஆவாத வர்த்தக மைய வழிகாட்டலின் பயன் ஏழ்மையை வளர்ப்பதாகவே உள்ளது.

இன்று இங்கிலாந்து உணவை சிக்கனமாக சமைக்க, உபயோகிக்க சொல்கிறது. இல்லாதவர்களுக்கு கொடுக்க செய்யும் இஸ்லாமிய வழிகாட்டல் அல்ல. உணவுக் கழிவுகளை அப்புறப்படுத்த நிர்வாக செலவுகள் ஜாஸ்தியாம். இஸ்லாமிய ஞானம் இருந்தால் அதை வறியோர்க்கு உதவச் சொல்லும் அறிவுரை இருக்கும்.

அரபிகள் தாங்களுக்கு கிடைத்த செல்வத்தை புனித இடத்துக்கு அருகில் இருக்கிறோம் என்ற இறைபய உணர்வுடன் உணவுகளை வீணடிக்காமல் பகிர்ந்தளிக்கும் உணர்வுடன் முழு இஸ்லாமியத்தை கடைபிடித்தாலே கணிசமான அளவு ஏழ்மை ஒழிந்து இருக்கும்.

இஸ்லாம் சொல்லும் ஏழை வரியாகிய ஜகாத்தை கடமையானவர்கள் முழுமையாக பகிர்ந்தாலே இவ்வுலகில் ஏழ்மை என்பதே இருக்காது.

அனைத்தும் சுமூகமாகிட இன்று தேவை உலகம் இஸ்லாத்தை ஏற்க வேண்டும்!

--------------------------------------------------------
ஜமாத்துல் ஆகிர் பிறை 2 / 1434

ZAKIR HUSSAIN said...

//இஸ்லாம் சொல்லும் ஏழை வரியாகிய ஜகாத்தை கடமையானவர்கள் முழுமையாக பகிர்ந்தாலே இவ்வுலகில் ஏழ்மை என்பதே இருக்காது//

மிக மிக மிக மிக மிக மிக சரியாக சொன்னீர்கள் Dear MHJ...

Unknown said...

ஒரு அருமையான பொருளாதார பகிர் ஆய்வு.

உலகின் ஏழ்மையையும் , பசி பட்டினி, பொருளாதார ஏற்றைத்தாழ்வை களைய
ஒரு அருமையான சிந்தனை மிக்க ஆய்வு.

இஸ்லாத்தின் உன்மைப்பொருலாதாரம் நிலவும் காலம் வரும்வரை,
இந்த ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாதது.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

எவ்வளவு விரிவுபடுத்தினாலும் என்னென்னவற்றை உதாரணங்களாய்க் காட்டினாலும் எத்தனையெத்தனை மேற்கோல்களால் வலிமைப்படுத்தினாலும் அவையாவும் பேசுபொருளைச் சுற்றியே நிலவுமாறு எழுதுவதென்பது சுலபமல்ல காக்கா.

ஆனால், இப்பதிவை அத்தகைய லாவகத்தோடு நீங்கள் நகர்த்திச் செல்வது தங்கள் எழுத்துத்திறமைமீது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ்... காக்கா!

தலைப்புக்கேற்ற கருவோடு கியரை உசுப்பு விட்டிருக்கீங்க !

எவ்வித இடரின்றி தொடர்ந்து வெளிவரவும் ஆராய்ச்சிக்காக உங்களின் ஆரோக்கியத்திற்காக துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

காக்கா,

வழக்கம்போலவே, உங்கள் பாடத்தில் பலகீனனாகிய என் கேள்விகளைப் பொறுத்துக்கொண்டு (சகித்துக்கொண்டு?) பதில் தரவும்.

இஸ்லாமியப் பொருளாதாரக்கொள்கையைத்தான் இஸ்லாமிய நாடுகள் என்று அடயாளப்படுத்திக்கொள்ளும் அரபு நாடுகள் பின்பற்றுகின்றனவா?

மலேசியாவின் பொருளாதாரக் கொள்கை எதைச் சார்ந்தது?

பொருளாதாரத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையையாப் பின்பற்றுகிறது?

மேற்சொன்ன முரண்பாட்டிற்கான காரணிகள் யாவை?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,,

//அதேநேரம் வளமிக்க நாடுகளில் அல்லது செல்வமிக்க நாடுகளில் வீணடிக்கப் படும் உணவுப் பொருட்களை கணக்கிட முடியுமா? சமைக்கப்பட்ட உணவில் சாப்பிட்டது போக மிச்சப் பட்டுக் குப்பைத்தொட்டியில் கொட்டப்படும் உணவு வகைகளுக்குக் கணக்குண்டா? ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஆடம்பர விருந்துகளில் கொறிக்கப் படுவது போக கொட்டப்படுவது எவ்வளவு?//

//விளைந்து கொண்டிருக்கும் நிலங்கள் விதவைகளாக்கப்பட்டு நெல் விளைந்த பூமிகளில் கல் விளைந்திருப்பது கண்கூடான காட்சி. //

//பெற்றோர் சொல் கேளாத பிள்ளை உருப்படாது. படைத்தவன் விதித்த கட்டளைகளை பின்பற்றாத சமுதாயமும் மேன்மையடையாது.//


மிக அருமை காக்கா..

நிச்சயம் வெல்லப் போவது அல்லாஹ்வின் சட்டங்களே..

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

By observing the concepts and points in the above article we may have to realize that the guidance from Rabbil Aalameen - The Creator of the universe God Almighty is superior over any other form of knowledge and direction, similar to the selfless and loving parents' guidance towards their children.

Who has better knowledge about internals(physiology and psycology) of creatures in universe to give superior guidance than The Creator God Almighty?

Actually complications(from DNA, cells, organs, various systems in human body, and the lot of systems in the universe) are simplified by the grace of Almighty Allah. AlHamdu Lillah.

But every simple thing is complicated by human which fetches all the chaos in the human living.


Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

KALAM SHAICK ABDUL KADER said...

தங்களின் பாடமும் அதனைச் சுட்டிக்காட்டும் (வீண்விரயத்தை)படமும், நாலுவரிகளில் நச் என்று நெஞ்சைத் தொட்ட கவிதை வரிகளும் என் நெஞ்சை விட்டு அகலாமல் இன்னும் சிந்திக்கின்றேன்; ஏன் இன்னும் இவர்கள் இப்படி வீணாகக் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள் இறைவன் எல்லார்க்குமாகப் படைத்த இந்த உணவை?

சில நேரங்களில் நோன்பு துறக்க இவர்கள் ஏற்பாடும் செய்யும் கூடாரங்களில் வீணாக்கப்படும் உணவுகளை எண்ணினால் (இப்படமும் அதுபோன்றதொரு நோன்புதுறக்கும் நேர உணவு தான்) ,”திட்டமிடலில் குறைபாடா?” திருமறையின் சட்டம்- கட்டளை (உண்ணுங்கள்; பருகுங்கள்-வீணாக்காதீர்)அறிந்தும் செய்யும் திமிரா? என்று ஒரே குழப்பம். இவர்கள் செய்யும் தவறுகளாற்றான் இஸ்லாம் பற்றிய குறுகிய கண்ணோட்டம் மாற்று மத நண்பர்களிடம் ஏற்பட்டு என்னால் அவர்கட்கு விளக்கம் சொல்ல முடியாமல் போய்விடுகின்றது!


Unknown said...

Assalamu Alaikkum,

Dear brother Mr. Kaviyanban AbulKalam,

//இவர்கள் செய்யும் தவறுகளாற்றான் இஸ்லாம் பற்றிய குறுகிய கண்ணோட்டம் மாற்று மத நண்பர்களிடம் ஏற்பட்டு என்னால் அவர்கட்கு விளக்கம் சொல்ல முடியாமல் போய்விடுகின்றது!//

Our manners, behaviour in day to day interactions with our fellow non muslims brothers and sisters should set an ideal model which is easier to attract and move the minds towards Islam, than showing other muslims on whom we have little influence to change their defected behaviour. Actually few defects which could be abnormal are highlighted more than the genuineness in every situation of life(those become news in media).

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

அப்துல்மாலிக் said...

மனிதன் வாழ்தறகு முக்கியம் உணவு, அதை பற்றி சிறப்பாக அலசி அதன் சிறப்பு தன்மையும் வீன் விரயத்தை பற்றிய தொகுப்பு அருமை காக்கா... எலியை புடிச்சி சுட்டு திண்டும் அவலம் இன்னும் இருக்கதான் செய்யுது. அந்த எலியையே BBQ செய்து ஸ்டார் ஹோட்டலில் உயர்வகை உணவு என்ரு பறிமாரப்படுவதும் இருக்கதான் செய்கிறது...

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி கவிஞர் சபீர் அவர்கள் கேட்டது

//இஸ்லாமியப் பொருளாதாரக்கொள்கையைத்தான் இஸ்லாமிய நாடுகள் என்று அடயாளப்படுத்திக்கொள்ளும் அரபு நாடுகள் பின்பற்றுகின்றனவா?//

ஓரளவுக்குத்தான் என்று உங்களுக்கும் தெரியுமே!உலகமயமாக்கலின் சூதுக் கொட்டை குலுக்கப்படும்போது அரபு நாடுகளும் ஹாட்டினில் வைக்கலாமா குலாவரில் வைக்கலாமா என்றுதான் தங்களுக்குள் குழம்பி வருகின்றன. முழுக்க இஸ்லாமியப் பொருளாதார விதிகள் கடைப்பிடிக்கப் பட்டால் அங்கு எதற்காக இஸ்லாமிக் பேங்க் என்றும் இஸ்லாமிக் விதிகளைப் பின்பற்றாத பேங்க் என்றும் பாகுபாடுகள்? கடன் அட்டைகளின் சாம்ராஜ்ஜியத்தின் கொடியும் அரபு நாடுகளின் கொடியும் சேர்ந்தே பட்டொளி வீசிப் பறப்பதை உங்களைப் போல நீண்ட காலம் அரபு நாடுகளில் வசித்து வருபவர்கள் உணர்ந்து அல்லது அவதானித்தே இருப்பீர்கள். வருத்தத்துடன் இதைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது. அஜ்மானில் திறந்திருக்கும் மதுக்கடைகளை - மஸ்கட்டில் திறக்கப் பட்டு இருக்கும் மதுபான விடுதிகளில் அந்நாட்டு மக்களின் கூட்டத்தைப் பார்த்து வியந்தவன் நான். இதைப் பற்றி தனியாகவே ஒரு வேதனையான பதிவு போடவேண்டும் அளவு செய்திகள் உள்ளன. விபச்சாரம் ஒரு வியாபாரமாக நடத்தப் ஆடுவதை முழுதுமாக தடுக்க முடியாத இஸ்லாமிய நாடுகள் இருப்பதை வேதனியுடன் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். உலகப் பொருளாதார நடவடிக்கைகளுடன் ஒத்துப் போவதே கொள்கை என்றே இவைகளும் பெரும்பாலும் வைத்திருக்கின்றன.பல தனிப்பட்ட அரபுகள் உழைப்போர் வியர்வையை உறிஞ்சி வாழ்கின்றனர். ஸ்பான்சர் என்கிற வெட்டுக்கிளிகள் - பல மாதங்கள் சம்பளம் தராத முதலாளிகள்- வீட்டு வேலைக்கு வந்த பெண்களுடன் முறை தவறி நடக்கும் அரபுகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. வழிப்பறியில் ஈடுபடும் சிலர் உண்டு. இவர்கள் எல்லாம் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள் என்று வெட்கமிலாமல் என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. உலக ஆசைகள் தரும் மயக்கத்தில் அரபு நாட்டு மக்களில் சிலரும் விழுந்தே கிடக்கின்றனர். அரசுகளும் அப்படியே . அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். ( இப்படி எல்லாம் சீண்டி விட்டு செய்தி கறப்பது கவிக்கலையா ஹஹஹா .?)

மலேசியாவின் பொருளாதாரக் கொள்கை எதைச் சார்ந்தது?= தெரியவில்லை. ஆய்ந்தே பதில் சொல்ல இயலும் . இல்லாவிட்டால் அறிந்தவர்கள் எழுதினால் எல்லோரும் தெரிந்து கொள்ளலாம். (குளத்தின் படிக்கட்டில் நின்று கொண்டு ஒரு சின்னத் தூண்டில் )

பொருளாதாரத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையையாப் பின்பற்றுகிறது? = இல்லையாம். ஆனால் மக்கள் நலம் , நல்ல நீதி, நல்ல நிர்வாகம் , ஊழல அற்ற அரசு ஆகியன கோலோச்சினால் இஸ்லாம் கோலோச்சுகிறதோ என்று எண்ணம் வருவது இயற்கை . அரசியல் சட்டத்தில் இஸ்லாமியக் கொள்கைகள் என்று அறிவிக்கப் படாவிட்டாலும் நல்லவற்றை அந்த அரசு செய்வதால் இப்படி எண்ணத்தோன்றுகிறது என்று அங்கு இருந்தவர்கள் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

மேற்சொன்ன முரண்பாட்டிற்கான காரணிகள் யாவை? = உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், சுதந்திர பொருளாதாரக் கோட்பாடுகள், தடையற்ற வணிகம் , தனியார் மயமாக்கல் ஆகியவற்றின் மீது அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆவல்கள் " ஷைத்தானிய்ம்" என்று அழைக்கப் படலாம்.

இது எது போல இருக்கிறது என்றால் நான்கு வேளை தொழுகைக்கு ஜமாத்துக்கு வரக்கூடிய பலரை பஜ்ர் தொழுகையில் மட்டும் காணமுடியாது அது போலதான். முப்பது நோன்பும் முழுசாப் பிடிக்கும் நாடுகளைக் காண முடியவில்லை- துரதிஷடவசமாக.

இஸ்லாம் சொல்லும் கோட்பாடுகளை மட்டுமே நாம் இப்போது விவாதித்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் அவை நடை முறையில் உள்ளனவா - நாடுகள் பின்பற்றுகின்றனவா - இல்லையென்றால் ஏன் என்பதையும் அல்லாஹ் நாடினால் ஆய்ந்து தகவல்களைத் திரட்டி அறியத்தரலாம். து ஆச் செய்யுங்கள்.

கேள்விகளுக்கு நன்றி. வரவேற்கிறேன். தெரிந்தவரை பதில் கூறி இருக்கிறேன். முகம் சுளிக்கவில்லை. இப்போது இருக்கும் என் முகத்தை சுளித்தால் இன்னும் நல்லா இருக்காது.

sabeer.abushahruk said...

//எலியை புடிச்சி சுட்டு திண்டும் அவலம் இன்னும் இருக்கதான் செய்யுது. அந்த எலியையே BBQ செய்து ஸ்டார் ஹோட்டலில் உயர்வகை உணவு என்ரு பறிமாரப்படுவதும் இருக்கதான் செய்கிறது...//

என்ன பயம் காட்டுறீய?

நெஜமாவா?

Unknown said...

வீன் விரயங்களைப் பற்றி முஸ்லிம்களே சிந்திக்கவில்லையெனில் பின் யார்தான் சிதிப்பது?
அல்லாஹ்வினதும், தூதரினதும் வழிகாட்டுதலை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுதிருக்கும் சமுதாயம் எல்லா விடயங்களிலும் பிறருக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை என்பது வேதனையே.

ஒரு கேரளத்துச் சகோதரனிடம் தண்ணீரை விரயம் செய்யாதே என்று சொன்னபோது அவர் சொன்னது தமிழ் நாட்டில் தண்ணிர் குறைவு அதனால் நீங்கள் குறைவாகப் பயன்படுத்துகிறீர்கள் எங்கள் கேரளத்திலே தண்ணீர் நிறைய இருக்கிறது அதனால் நாங்கள் தாரலமாகப் பயன்படுத்துகின்றோம் என்று பாலைவனத்தில் (துபாய்) இருந்துகொன்டு சொன்னது அவர் அறிவின் முதிர்ச்சியைக்(!) காட்டியது. அப்படி தேவைக்கு மீறிய தண்ணிரை தமிழத்தின் வாழ்வாதாராத்துக்க தர மறுப்போறை என்னவென்று சொல்ல.

இப்படி ஒவ்வொறு மனிதனும் பிறர் நலம் பேனமலிருப்பதே இன்றை பொருளாதரத்தின் தோழ்வி என்பதை தங்களுக்கேயுரியா வகையில் அழகாகச் கொல்லியுள்ளீர்.

Jazakallahu Khairan காக்கா

புதுசுரபி said...

ஆறுமாதங்களுக்கு முன் நான் துபை வந்தவுடன் துபை பற்றிய முதல் செய்தியாய்(THE NATIONAL வழியாக) நானறிந்தது, இங்கு(ஐ.அ.எ) மூன்றில் இருவர் உணவை வீணடிப்பதாகவும், ஆனால் அதைப்பற்றி துளிகூட அவர்களுக்கு கவலையில்லை என்பதுதான்.

மேலும் அந்த செய்தியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைக்காட்டிலும் இங்கே அதிகமாக விரயம் செய்யப்படுகிறது என் அறிந்தேன். இங்குள்ள ஹைப்பர் மார்க்கெட்டின் முதலாளி சொல்லும் போது “அனேக ஆசியநாட்டினர் ஐரோப்பியர்கள் காய்கறி வாங்கும்போது கிண்டலடிப்பார்களாம், மூன்று தக்காளி, பாதி வெள்ளரி என்று வாங்குகிறார்கள்” என்று, உண்மைதானே, அவர்களுக்குத் தேவைக்குத் தகுந்தாற்போல வாங்குகிறார்களே, வீணடிக்கவில்லையே.....

இங்கு உணவாகின்ற மூலப்பொருட்கள் 90சதவீதம் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படுகிறது.. வீணடிப்பதினால் வீணாவது சுற்றுச்சூழல் மட்டுமல்ல பொருளாதாரமும் தான்....

இந்த நாடு அந்த நாடு என்றில்லாமல் இறைவன் தந்த அருளை முறையாக பயன்படுத்துவோமேயானால் பஞ்சம் என்றுமில்லை.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

உணவு, பொருளாதார பகிர்வு பற்றிய தெளிவான விளக்கங்கள்!

////வெல்லப் போவது யார் இறைவனின் சட்டங்களா ? பேராசை கொண்ட மனிதனின் திட்டங்களா? ///

மனிதனின் பேராசையாகிய திட்டங்கள் மண்ணில் புதைக்கப்பட்டு -

நிச்சயம் வெல்லப்போவது இறைவனின் சட்டங்கள்தான். ஆனால் வல்ல அல்லாஹ் நாடிய நேரத்தில் அமலாகும்.

ZAKIR HUSSAIN said...

To bro Ebrahim Ansari

//நிலங்கள் விதவைகளாக்கப்பட்டு நெல் விளைந்த பூமிகளில் கல் விளைந்திருப்பது கண்கூடான காட்சி.//

இதைத்தான் சிந்தனை செய்து "இப்படி விலை நிலங்களை மனை போடாதீர்கள் என்று சொல்லிவீட்டு மக்கள் டி வி போன்றவைகள் சீரியலில் நடிக்கும் நடிகைகளை வைத்து கூவி கூவி விற்கிறார்கள்.

Adirai pasanga😎 said...

இஸ்லாமிய ஒளியில் அருமையான அலசல், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பொருளாதார ஆய்வு. இது அனைவருக்கும் எத்திவைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் ஓளிமயமான எதிர்காலம் என்பது ஏமாற்றம் இருக்காது. இன்ஸா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்திட்ட அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் ஜசக் அல்லாஹ் ஹைரன்.
உங்களின் ஆர்வமூட்டலே இந்தத் தொடரை எழுத உற்சாகப் படுத்துகின்றன.

தம்பி தாஜுதீன்! தம்பி அஹமது அமீன்!மற்றும் சகோதரர் அலாவுதீன் ! வ அலைக்குமுஸ் ஸலாம்.

இன்னும் இந்த தொடரில் பயணிக்க வேண்டி இருப்பதால் தாங்கள் அனைவரின் து ஆவை யும் கோருகிறேன். வஸ்ஸலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு