Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 14 24

அதிரைநிருபர் பதிப்பகம் | April 20, 2013 | , ,



தொடர் : பதிநான்கு 

இஸ்லாமிய பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள்...

வெல்லப் போவது யார் இறைவனின் சட்டங்களா ? பேராசை கொண்ட மனிதனின் திட்டங்களா?

நிச்சயமாக இறைவனின் சட்டங்கள்தான்.

அடிப்படையில் இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கியும் தூக்கியும்  நிறுத்தும் தூண்களைப் பற்றி இனி விவாதிக்க வேண்டிய கட்டத்துக்கு வந்துள்ளோம். இஸ்லாம் காட்டும் பொருளாதாரத்தின் தூண்கள் என்று வரிசைப்படுத்தினால் இவற்றுள் பொருளும் செல்வமும்  சார்ந்த துறைகளாக இருப்பதால் - தவிர்க்கப்பட வேண்டிய கருமித்தனம், ஏற்கப்பட வேண்டிய ஈகைத்தனம், பின்பற்றப்பட வேண்டிய ஏழைவரி என்று புகழப்படும் கடமையாக்கப்பட்ட ஜகாத், செல்வங்களின்  சேமிப்பு. முதலீடு ஆகியவைகள் தொடர்பாக  இனி விவாதிக்கலாம்.    

ஒரு ஊரில்  ஈரோட்டு ஜமுக்காளத்திலே  வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும்,   அவற்றில் இருந்து செலவு  செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான்.  இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை.  இவனது கஞ்சத்தனம், இமயமலையின்   கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானது.  தனது செல்வத்தை ஒரு மண் சட்டியில் போட்டு பூமியில் புதைத்து வைப்பான். இதை கவனித்துக் கொண்டிருந்த மற்றொருவன் இந்த கஞ்சனுக்குத் தெரியாமல் அவன் புதைத்து வைத்திருந்த சட்டிப் பணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டுபோய் செலவு செய்துவிட்டான். அடுத்த நாள்,  தான் புதைத்து வைத்து இருந்த பணத்தைத் தேடிய கஞ்சன் பணத்துடன் மண் சட்டியைக் காணாமல் போய்விட்டதால்  அதுபற்றி அரசர்  இடம் போய் முறையிட்டான்.   அரசர் அவனிடம் விசாரணை செய்தார். 

“பணத்தை எங்கே வைத்து இருந்தாய்?

“மண்சட்டியில் போட்டு மண்ணில் புதைத்து வைத்து இருந்தேன்”

“அந்தப் பணம் இப்போது உனக்குத் தேவைப்படுகிறதா? ”

“இல்லை தேவை இல்லை! ஆனால் அது என் பணம்”

“யாருக்கும் கொடுக்கப் போகிறாயா? எதுவும் வாங்கப் போகிறாயா?

“இல்லை”

“ உனக்கு திருமணமாகிவிட்டதா?”

“இல்லை”

“இத்தனை வயதாகியும் ஏன் இன்னும் மணமாகவில்லை”

“அவளுக்கு வேறு சோறு போடவேண்டும்”

“உன் உடைகள் ஏன் அழுக்காக  இருக்கின்றன?”

“அவைகளை துவைக்க செலவாகும்”

"தலையில் கூட எண்ணெய் தேய்க்காமல் பரட்டையாக இருக்கிறாய். முகமெல்லாம் தாடி மீசை மழிக்காமல் இருக்கிறாய். அது சரி காலையில் சாப்பிட்டாயா?”

“அதற்கெல்லாம் செலவாகும். இந்தப் பணத்தை இழந்த கவலையில், தினமும் பிச்சை எடுக்கும் வீட்டுக்குப் போய் பழைய சாதம்  வாங்கி சாப்பிட இயலாமல் போய்விட்டது அதனால் சாப்பிடவில்லை. “

“உன்  அம்மா அப்பா எங்கே?”

“அவர்கள் வேறொரு ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள்”

“ஏன் பேசும்போது இப்படி இருமுகிறாய்? மூச்சுத் திணறுகிறது?

“வெட்டவெளியில் படுத்து இருப்பதால்  உடம்பு நல்ல சுகம் இல்லை”

“மருத்துவரிடம் போனாயா?”

“அவர் பணம் கேட்கிறார் செலவாகும் “

“இப்போது நீ இழந்த பணம் எவ்வளவு இருக்கும் ?”

“நேற்றுத்தான் எண்ணி வைத்தேன். மொத்தம் பத்து லட்சம்”

“அப்படியா? அடப்பாவமே! இருந்தாலும் பரவாயில்லை. நீ  ஒரு வேலை செய். நீ புதைத்து வைத்த பணம்  மண் சட்டியோடு மண்ணிலேயே புதைக்கப் பட்டே இருக்கிறது என்று நினைத்துக் கொள். மனதை சமாதானப் படுத்திக்கொள்.  காரணம், அந்தப் பணம் இந்த நாட்டின் பூமியில்தான் புதைக்கப்பட்டு இருந்தது. உனது எந்தத் தேவைக்கும் நீ அந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எந்த செலவும் செய்யவில்லை. உண்டு, உடுத்தி, உதவி  அனுபவிக்கவில்லை. உனக்கு இப்போதும் எந்தத் தேவையுமில்லை.  உனக்கு இனியும் அது தேவைப்படாது. யாரோ தேவைப்பட்டு செலவு செய்பவன் எடுத்துக் கொண்டு போய்விட்டான். ஆகவே அது உன் கையில் இருந்தாலும் ஒன்றுதான் மண்ணின் கீழே இருந்தாலும் ஒன்றுதான்  மண்ணில் புதைக்கப்பாட்டு அந்தப் பணம் பத்திரமாக இருப்பதாகவே நினைத்து  மனம் திருப்தி கொள் ! “

இத்துடன் சபை கலையலாம் என்று அரசர்  தீர்ப்பளித்தார்.

யாருக்கும் ஈயாதவனின் செல்வம் ‘ஈயார் தேட்டை தீயார்கொள்வர்’ என்று போய்விடும்.  “பாடுபட்டுப் பணத்தை தேடி சேர்த்துவைத்த பாவிகளே!  கேளுங்கள் கூடுவிட்டு ஆவிதான் போனபின்னர் யார்தான் அனுபவிப்பர் பாவிகாள் அந்தப்பணம்?”

பாடுபட்டுப் பணத்தை தேடிவைத்த பலரின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பணம் என்பது பலர் கைகளுக்கு மாறும் இயல்பாக இருந்தால்தான் பொருளாதார நடவடிக்கைகளையும் சுழற்சியையும்  ஏற்படுத்தும். இறைவன் மனிதனுக்கு செல்வத்தை வழங்குவது அவன் அந்த செல்வத்தை செலவு செய்து சுகம் தேடவும் மனமகிழ்வு கொள்ளவுமே. பணத்தைப் பூட்டி வைத்திருப்பது அந்த பணம் படைக்கப் பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் ஆக்கிவிடும். இப்படிப்பட்ட கஞ்சர்களை சரியான இரும்புபெட்டி என்று வர்ணிப்பார்கள்.

கருமித்தனமும் கஞ்சத்தனமும் மிகவும் கெட்டிகாரத்தனமென்று சிலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். பொருளை செலவிடாமல் சேமித்து சமுதாயத்தின் முன்பு  பணக்காரர்களாக ஆவதற்கு கருமித்தனம் கை   கொடுக்குமென்று கருதுகின்றனர். இதை ஷைத்தான் தூண்டுவதாக அல்லாஹ் தனது அருள் மறையில் இப்படி சொல்லிக் காட்டுகிறான்.

(தர்மம் செய்வதால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சமூட்டி (கஞ்சத்தனம் என்னும்) அருவருப்பானதைக் கொண்டு ஏவுவான். ஆனால் அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கிறான். ( அல் பகரா – 268).

இப்படி கவனப் படுத்துவதுடன் மேலும்  அல்லாஹ் எச்சரிக்கிறான்.

“இன்னும் அல்லாஹ் தனது அருளினால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு கஞ்சத்தனம் செய்கின்றவர்கள் , அது அவர்களுக்கு நல்லதென்று நிச்சயமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். அவ்வாறல்ல. அது அவர்களுக்குத் தீங்கே யாகும். எதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தனரோ , அது மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் அறிகண்டமாக அணிவிக்கப்படும்” (ஆலு இம்ரான் : 180)

மேலும் நபி மொழி சுட்டிக்காட்டுகிறது,

“கொடையானது சுவர்க்கலோகத்தின் ஒரு மரமாகும். எனவே கொடையாளிகள் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் புகுந்துவிடுகிரார்கள்.  கஞ்சத்தனம் என்பது நரகத்தின் ஒரு மரமாகும் . கஞ்சனாக இருப்பவர்கள் அதன் கிளைகளைப் பிடித்துகொண்டு நரகத்தில் புகுந்துவிடுகிறார்கள்.”  (ஹஜரத் அபூஹுரைரா- மிஷ்காத்)   

கஞ்சத்தனம்எவ்வாறு களையப்படவேண்டிய குணமோ அவ்வாறே ஊதாரித்தனமும் அன்றாட வாழ்வில் அகற்றப்பட வேண்டியதாகும்.  ஆடை அணிகலன் ஆடம்பரங்களை அல்லாஹ்  விரும்புவதில்லை. ஈட்டிய பொருளில் இருந்து தனது நியாயமான தேவைகள் போக எஞ்சி இருப்பதை  தர்மம் செய்வதற்கு நாம் எண்ணும்போது நம்மிடம் இருப்பது குறைந்து விடுமே என்ற எண்ணம் மனிதர்களுக்கு இயல்பாக  ஏற்படுகிறது. ஆனால் இறைவனின் வழியில் அவன் வகுத்த வழிகளில் அவை வழங்கப் படும்போது அந்த செல்வம்  இரட்டிப்பாக ஆகிவிடும் என்கிற ஆன்மீக உண்மை பலருக்குத்  தெரிவதில்லை.

பணம் அல்லது செல்வத்தை தேடுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. 

பெண்கள், ஆண்மக்கள், பொன், வெள்ளியிளிருந்து சேகரிக்கப்பட்ட குவியல்கள், அடையாளமிடப்பட்ட உயர்வகை குதிரைகள் , கால்நடைகள் மற்றும் வேளாண்மை ஆகிய இச்சையூட்டுவைகளை  நேசிப்பது மனிதர்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளது . இவை யாவும் உலக வாழ்வின் இன்பப் பொருள்களாகும் ( ஆலு இம்ரான் :14).

மேலும்,

தொழுகை நிறைவேற்றப் பட்டுவிட்டால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள். ( 62:10)    என்றும்

அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (2:275) 

என்றும் வழிகாட்டப் பட்டு இருக்கிறது.

இன்னும் பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி- முஸ்லிம் ஆகியவைகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது “ IF A SON OF ADAM HAS TWO VALLEYS OF GOLD HE WOULD SEEK TO GET A THIRD VALLEY”  “ஆதம் உடைய மகன் தன்னிடம் இரண்டு தங்க வயல்களை வைத்து இருந்தாலும் கூட மூன்றாவதையும் தேடி சேர்த்துக் கொள்ளட்டும்( Ref: Relevance Definition and Methodology of Islamic Economics- Dr. Mansoor Kahf)

மேலே காணும் இரு அறிவிப்புகளும் மனிதனுடைய பொருள் தேடும் இயற்கையான இயல்புகளை விவரிப்பதுடன், செல்வங்களின் மேல ஆசைவைப்பதையும் அவற்றை தேடி சேர்ப்பதையும் ஊக்கப்படுத்துகின்றன. 

எனவே இவ்வுலகில் வாழத் தேவையான அனைத்தையும் சம்பாதித்துக்கொள்வதென்பது அவசியம். எனினும் வாழ்வில் பொருள் தேடுவது என்பது அவசியம் என்பதற்கும், பொருள் தேடுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளத் தவறியதே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் குழப்பத்தினை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த உண்மையான இஸ்லாமிய நோக்கம் இல்லாவிட்டால் இத்தகைய பொருள்தேடும் முயற்சிகள் இஸ்லாத்திற்கு எதிராகவே அமையும். 


எனவே இவ்வுலக வாழ்வில், பொருளாதார அடிப்படை, தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ இறைவன் கூறிய வழியிலேயே அமையவேண்டும். 
பெருமானார் ( ஸல் ) அவர்கள்  கூறுகிறார்கள் 


என்றென்றும் வாழ்வது போல எண்ணி இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேடுங்கள், மறுநாளே இறப்பது போல எண்ணி மறுவுலகிற்காக அருள் தேடுங்கள்

 தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேர்த்துவைப்பதை தவறு என்றும்  இஸ்லாம் கூறவில்லை.

தனது தேவை என்கிற கருத்தில் ஒரு தனி மனிதன் தான் உண்ண உடுத்த அனுபவிக்க என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவனுக்கும் அவனை சார்ந்திருக்கும் குழந்தைகள் உட்பட்ட குடும்பத்தினருக்கும் சேர்த்த தேவைகளின் ஒட்டுமொத்த மதிப்பே மனிதனின் தேவை என்று கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தின் தலைவன் தன் பிள்ளைகளை மனைவியை பார்க்க வைத்துக் கொண்டு அல்லது பட்டினி போட்டுவிட்டு தான் மட்டும் தன் வயிறு நிறைந்தால் போதும் என்று இருந்துவிட முடியுமா? அல்லது தான் வாழும் காலம் வரை நன்றாக அனுபவித்துவிட்டு தனது இன்ப அனுபவத்துக்காகவே செல்வங்களை அழித்துவிட்டு மரணம் அடைந்துவிட்டால் அவன் பிள்ளைகளை நோக்கி இதோ போகிறான் வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு என்று நகைக்க மாட்டார்களா? 

 கீழ்வரும்  நபி மொழிகள் இவற்றை நெறிப்படுத்துகின்றன.
  
ச அத் பின் அபீ வக்காஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் மூலம் நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவு உடையவர்களாக விட்டுச் செல்வது, அவர்களை மற்றவர்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட நல்லதாகுமென்று பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறியதாக அறிகிறோம். (புகாரி – ரஹ்மத் பதிப்பகம் மூன்றாம் பாகம் 2742).

மேலும்,

பெருமானார் ( ஸல் ) அவர்களுக்கு அல்லாஹ் தொடர்ந்து வெற்றிகளை வழங்கியபோது அதன் மூலம் அரசின் கருவூலத்தில் நிறைய நிதிகள் சேர்ந்தன. அந்நேரம் நபிகள் நவின்ற மொழி இதுவாகும்

“நம்பிக்கையாளர்களான மூமின்களுக்கு அவர்களின் உயிரை விட நான் மிகவும் உரித்தானவன். எனவே அவர்களில் யாரேனும் கொடுக்கவேண்டிய கடன்களை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றுவது என்னைச் சேர்ந்ததாகும்.  யாரேனும் செல்வத்தை விட்டு மரணமடைந்தால் அது அவரவர் வாரிசுகளுக்கு உரியதாகும் “ என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

இதனால் தனது மக்களுக்காக செல்வம் சேர்த்துவைப்பது இஸ்லாமியப் பொருளியலில் அனுமதிக்கப் பட்ட ஒன்றே என்று நாம் உணர்ந்து அறிய  வேண்டி இருக்கிறது. மேலும் முன்னோர்கள் விட்டுச்செல்கின்ற சொத்துக்களை எவ்விதம் பங்கு பாகம் பிரிப்பது என்கிற வழிகாட்டல் மற்றும் சட்டங்கள் இஸ்லாத்தில் நிரம்பி வழிகின்றன. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன்னுடைய தர்மத்தைத்) தொடங்கு என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 தனக்குத் தேவையானது போக எஞ்சியதை அடுத்தவர்க்கு வழங்குவோர் அடையும் சிறப்பை அல் பகரா அத்தியாய த்தில் 177- வது வசனத்தில்:-

“எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டு செல்வத்தை தம் விருப்பத்துடன் உறவினர்கள், அனாதைகள் , ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகம் கேட்போர் முதலியோருக்கும் (கடன் துன்பத்திலிருந்தும் அடிமைத்தளையிளிருந்தும்) விடுபடுவதற்கு கொடுத்து உதவுபவரும் மேலும் தொழுகையை நிலை நிறுத்தி ஜகாத்தை வழங்கி வருபவரும், மேலும் ( க்குறுதி அளித்தால்) வாக்குறுதிகளை       நிறைவேற்றுபவரும் கடும் வறுமையிலும் பிணியிலும் போர்க்காலத்திலும் பொறுமையை மேற்கொள்பவரும் தான்  . இத்தகையோரே உண்மையாளர். இன்னும் அவர்கள்தாம் இறையச்சம் கொண்டோர்."

என்று நம்மால் வழங்கப் படத் தகுதிபடைத்தோரை வரிசைப்படுத்தி அதாவது- உறவினர்- அனாதைகள் – ஏழைகள்- வழிப்போக்கர்கள்- யாசகம் கேட்போர்கள் – மற்றவரை கடனில் இருந்து விடுவிக்க என்பதாக  பொருளாதார புரோடோகால் வகுத்துத் தருகிறான் வல்ல இறைவன். 

“ஈதல்  இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு “

“ஈத்துவக்கும் இன்பம் அறியாதார் வைத்திழக்கும் வன்கணவர்”

என்பன நமது வாதத்துக்கு வலு சேர்க்கும் வள்ளுவனின் வாக்குகள். நமது கல்வி முறையில் அதிகம் குர் ஆன் ஹதீஸ்களைப் படித்தைவிட – தேர்வுக்குப் பாடமாக கட்டாயமாக படிக்கவேண்டிய நிலையில் சில தமிழ்ப் புலவர்களின் கருத்துக்களையே நாமெல்லாம் அதிகம் கற்கும் நிலைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறோம். அதனால் அவற்றையும் அறிந்துள்ளோம் என்பதால் நமக்குப் பயன்படும்  இத்தகைய கருத்துக்களையும் மேற்கோளாகக்  காட்டிச் செல்லவேண்டியும்  இருக்கிறது.

செல்வம் தேடு ! தேடியதை சேர்த்துவை! கருமித்தனம் செய்யாதே! ஆடம்பரமாக ஊதாரித்தனம் செய்யாதே! உன் தேவைகளை நல்ல வழிகளில் நிறைவேற்றிக்கொள்! எஞ்சி இருப்பதை இறைவன் காட்டிய முறைப்படி தானம் செய்! என்பதுதான் இஸ்லாம் காட்டும் பொருளாதார வாழ்க்கை வழி.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி



24 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நமது கல்வி முறையில் அதிகம் குர் ஆன் ஹதீஸ்களைப் படித்தைவிட – தேர்வுக்குப் பாடமாக கட்டாயமாக படிக்கவேண்டிய நிலையில் சில தமிழ்ப் புலவர்களின் கருத்துக்களையே நாமெல்லாம் அதிகம் கற்கும் நிலைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறோம். அதனால் அவற்றையும் அறிந்துள்ளோம் என்பதால் நமக்குப் பயன்படும் இத்தகைய கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டிச் செல்லவேண்டியும் இருக்கிறது.//

காக்கா, இதுவரை வெளிவந்த இந்த தொடரை தவறாது படித்து வரும் பிறமத நண்பர் ஒருவர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விக்கான பதில் !

இதனையும் அவர் படிப்பார், என்னை அலைபேசியிலும் அழைப்பார் ! காத்திருக்கிறேன்...

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
ஈனா ஆனா காக்கா,
 
சேதாரம் இல்லாமல் பொருளாதாரத்தைச் செலவு செய்வதெப்படி என்கிற சூட்சுமத்தை குர் ஆன் ஹதீஸிலிருந்து எடுத்தாண்டு ஆதாரத்தோடு தந்திருக்கிறீர்கள் வாழ்வாதாரக் கோட்பாடுகளை.  ஓருதார இருதார மற்றும் பலதார மாந்தர்களும் இவ்வகையில் பொருளாதாரத்தை கையாண்டால் காதோர நரைக்குப் பின்னரும் காலார நடக்கும் நிம்மதியைப் பெறுவர்.
தாராத கருமியிடமிருந்து ஒரு தம்பிடி உணவும் பேராது; வாராத செல்வம் எண்ணிப் பாராது; சேராது என நினைந்து மனம் சோராது வாழ்வதற்கான  வழிமுறைகள் கட்டுரையில் உள.
 
தங்களின் பொருளாதாரச் சிந்தனைகளை மார்க்க அஸ்திவாரத்தில் ஸ்திரமாகவே செதுக்கி வருகிறீர்கள்.
 
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா,  காக்கா.

sabeer.abushahruk said...

/-செல்வம் தேடு ! தேடியதை சேர்த்துவை! கருமித்தனம் செய்யாதே! ஆடம்பரமாக ஊதாரித்தனம் செய்யாதே! உன் தேவைகளை நல்ல வழிகளில் நிறைவேற்றிக்கொள்! எஞ்சி இருப்பதை இறைவன் காட்டிய முறைப்படி தானம் செய்! என்பதுதான் இஸ்லாம் காட்டும் பொருளாதார வாழ்க்கை வழி.//

இவை 
மேற்கோள்களா
பூமிக்கோளின் மனிதர்களுக்கு
வெற்றிக்கான குறிக்கோள்களா


sabeer.abushahruk said...

/-செல்வம் தேடு ! தேடியதை சேர்த்துவை! கருமித்தனம் செய்யாதே! ஆடம்பரமாக ஊதாரித்தனம் செய்யாதே! உன் தேவைகளை நல்ல வழிகளில் நிறைவேற்றிக்கொள்! எஞ்சி இருப்பதை இறைவன் காட்டிய முறைப்படி தானம் செய்! என்பதுதான் இஸ்லாம் காட்டும் பொருளாதார வாழ்க்கை வழி.//

இவை 
மேற்கோள்களா
பூமிக்கோளின் மனிதர்களுக்கு
வெற்றிக்கான குறிக்கோள்களா


Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கு,

//நமது கல்வி முறையில் அதிகம் குர் ஆன் ஹதீஸ்களைப் படித்தைவிட – தேர்வுக்குப் பாடமாக கட்டாயமாக படிக்கவேண்டிய நிலையில் சில தமிழ்ப் புலவர்களின் கருத்துக்களையே நாமெல்லாம் அதிகம் கற்கும் நிலைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறோம். அதனால் அவற்றையும் அறிந்துள்ளோம் என்பதால் நமக்குப் பயன்படும் இத்தகைய கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டிச் செல்லவேண்டியும் இருக்கிறது.//

இதை நான் கட்டுரையில் குறிப்பிடக் காரணம் இஸ்லாமியப் பொருளாதாரக் கட்டுரையில் திருவள்ளுவர் எங்கே இருந்து வந்தார் என்று , நமது சில சகோதரர்கள் எண்ணிவிடக்கூடும் என்பதாலேயே.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தெளிவான விளக்கங்கள்! வாழ்த்துக்கள்!

/// செல்வம் தேடு ! தேடியதை சேர்த்துவை! கருமித்தனம் செய்யாதே! ஆடம்பரமாக ஊதாரித்தனம் செய்யாதே! உன் தேவைகளை நல்ல வழிகளில் நிறைவேற்றிக்கொள்! எஞ்சி இருப்பதை இறைவன் காட்டிய முறைப்படி தானம் செய்! என்பதுதான் இஸ்லாம் காட்டும் பொருளாதார வாழ்க்கை வழி. ///

இஸ்லாம் காட்டும் பொருளாதார வாழ்க்கையை வழியைப் பின்பற்றினால் இம்மை மறுமையில் வெற்றி பெறலாம்.

முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு: தொழுவார், ஹஜ் கடமையெல்லாம் நிறைவு செய்வார். உறவினர் படும் துன்பத்தைக் கண்டும் காணாதது போல் இருப்பார்கள். ஆனால் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக – பணத்தை தண்ணீராக வாரி இறைக்கிறார்கள் முஸ்லிம்? செல்வந்தர்கள்.

Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

தங்களுடைய பின்னூட்டம் என்னைப் பொருத்தவரை வெறும் பின்னூட்டமல்ல.
ஊட்டச்சத்து தரும் ஊட்டம். அங்கீகாரம். ஜசக் அல்லாஹ்.

sabeer.abushahruk said...

காக்கா,

வழக்கமான கேள்வி கேட்பதற்காக இரண்டு முறை வாசித்துப்பார்த்து விட்டேன்; பூதக்கண்ணாடி வைத்துத் தேடியும்விட்டேன். கேள்வி கேட்க வழியில்லா இறை வசனங்களும் சந்தேகிக்க முடியாத நபிமொழிகளும் முழுமையான அறிவுஜீவிய்ன் சிந்தனைஊம் என வலுவாயிருக்கிறது இந்த அத்தியாயம். மாஷா அல்லாஹ்!

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி சபீர்! ஒரு உண்மையாய் சொல்லவா? தொடரை எழுதும் போது சபீர் இடம் இருந்து கேள்வி வராமல் கவனமாக எழுதவேண்டும் என்ற கவலையும் கவனமும் இயல்பாக என்னிடம் ஒட்டிக கொண்ட உண்மையை சொல்லவா?

ஆனாலும் கேள்விகளை மனமார வரவேற்கிறேன்.

அவைகள் அனைவரின் அறிவையும் ஆழமும் அகலமுமாக ஆக்குகின்றன. நீங்களோ அல்லது நானோ மதரசாக்களில் ஓதி மார்க்கம் கற்றவர்கள் அல்ல. கல்வி மற்றும் கேள்வி அறிவுகளே. தவறுகள் வரலாம். இயன்றவரை அவைகளை தவிர்க்கப் போராடுகிறேன். து ஆச செய்யுங்கள். ஜசக் அல்லாஹ்.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,
 
மற்றொரு பதிவில் “போதுமென்ற மனம் வேண்டும்” என்று சொன்ன என் நண்பன் காதருக்கு எதிர் வாதமாக “இல்லையில்லை. நிச்சயமாக எங்கேயாவது குர் ஆனிலோ ஹதீஸிலோ நமக்குச் சொல்லப்பட்டிருக்கும், போதாத்தென்று உழைக்கச்சொல்லி” என்று சொன்னேன். நினைவிருக்கலாம். இதோ, அதை நீங்கள் கிழே கொடுத்திருக்கிறீர்கள்:
 
 
// If a son of Adam has 2 valleys of Gold he would seek to get a third valley//
 
இந்த ஹதீஸுக்கு என் நண்பன் காதர்தான் பதில் சொல்ல வேண்டும்.
 
என் புரிதலில், “ If a son of Adam has 2 valleys of Gold he ‘WILL’ seek to get a third valley” என்றிருக்குமானால் அது மனிதனின் தன்மையை, இயல்பைச் சொல்வது. மாறாக, “ If a son of Adam has 2 valleys of Gold he WOULD  seek to get a third valley” என்றிருப்பதால், மார்க்கமே நம்மைப் போதுமென்று இருந்துவிடாதே தேடிச்செல் என்று சொல்வதாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
இப்ப கேட்பது வேண்டுமானால் கொஞ்சம் சடப்பா இருக்கலாம்.  ராஜாமடம் பாலத்தில் அமர்ந்து கேட்பதாக நினைத்துச் சொல்லுங்களேன். “இறைவன் கொடுத்தது போதும் என்று இருக்கலாகுமா?”
 

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ் .பாசத்திற்குரிய இ.அ.காக்கா அவர்களின்.அருமையான தொடரை படிக்க தவறியவைக்கு மனம் வேதனை படுகிறது.தொடர்ந்து படிக்க இறைவன் அருள் புரிவானாக.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,

கட்டுரையில் நான் குறிப்பிட்டு நீங்கள் கேட்டிருந்த ஆங்கில வாசகங்களை மேற்கோளாக எடுத்தது Dr. Mansoor Kahf என்பவர் எழுதிய நூலில் இருந்து. இவர் ஒரு Syrian American professor of Islamic economics and finance. He received his Ph.D. in economics from University of Utah in 1975 and lives in Westminster, California.

இவருடைய வாசகப்படி WOULD என்றுதான் பயன்படுத்தி இருக்கிறார். அவர் மேலும் குறிப்பிடும்போது the statement describe the behavior of human beings with regard to accumulation of wealth . என்று குறிப்பிடுகிறார்.

இன்னும் பல அத்தியாயங்கள் வணிகம் பற்றியும் எழுத இருக்கும்போது மனிதனின் பொருளைத் தேடிச்செல்லும் இயற்கை இயல்புகளைப் பற்றியும் அவைகளை இஸ்லாம் வரையறுப்பவைகள் பற்றியும் எழுத இருப்பதால் காத்து இருக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

உதாரணமாக அரபுகள் ஒட்டகங்களில் பொருள்களை ஏற்றிக் கொண்டு வணிகக் கூட்டங்களாக போனது , கப்பல்களில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூர தேசங்களுக்குப் போனது போன்ற செயல்கள் எல்லாம் பொருள் தேடும் மனித முயற்சிகள் என்கிற வாதங்கள் எல்லாம் விளக்கமாக வரும் அத்தியாங்களில் எடுத்துவைக்கப்பட இருக்கின்றன. இத்தகைய செயல்களை ஊக்கபப்டுத்திய இறைவாசகங்களும் ஹதீஸ் ஆதாரங்களும் எடுத்துவைக்கப்பட இருக்கின்றன.


இன்ஷா அல்லாஹ்.


Ebrahim Ansari said...

தம்பி அபூபக்கர் அவர்களே!

நீங்கள் வளதலத்தில்தான் வரவில்லை. ஆனால் அடிக்கடி அலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பதிலும், நேரம் கிடைத்தால் நேரில் வருவதிலும் காட்டும் அன்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். ஜசக் அல்லாஹ்.

sabeer.abushahruk said...

Dear Ahamed Ameen,

I would appreciate if you can comment on this concept. As I have mentioned Islam doesn't just state about the natural behavior of human, but it commands them to seek more and more wealth (obviously in Halal methods).

Please comment. thanks.

// If a son of Adam has 2 valleys of Gold he would seek to get a third valley//

இந்த ஹதீஸுக்கு என் நண்பன் காதர்தான் பதில் சொல்ல வேண்டும்.

என் புரிதலில், “ If a son of Adam has 2 valleys of Gold he ‘WILL’ seek to get a third valley” என்றிருக்குமானால் அது மனிதனின் தன்மையை, இயல்பைச் சொல்வது. மாறாக, “ If a son of Adam has 2 valleys of Gold he WOULD seek to get a third valley” என்றிருப்பதால், மார்க்கமே நம்மைப் போதுமென்று இருந்துவிடாதே தேடிச்செல் என்று சொல்வதாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.//

sabeer.abushahruk said...

காக்கா,

would என்று இருந்தால் அது தன்மையைக் குறிக்காது; will என்று இருந்தாலே தன்மையைக் குறிக்கும்.

எனக்கு இந்தச் சந்தேகம் வந்ததும் அபு இபுவுக்கு அலைபேசி, இந்த ஆங்கில சொற்றொடரை கூகுளில் மொழிபெயர்க்கச் சொன்னேன். அவரும் அவ்வாறே செய்தபோது, .....தேட வேண்டும்...என்கிற கட்டளைச் சொல் வந்த்ததைச் சொன்னார்.

எனவே, என் வாதத்தின்படி, இஸ்லாம் மேலும் மேலும் பொருளைத் தேடச் சொல்கிறது.

(அதை எப்படி நிர்வகிப்பது என்பதை ஈனா ஆனா காக்காவிடம் கேட்கச் சொல்லி இருக்கிறது என்பதாகும். ஆதாரம்: அதிரை நிருபர் பதிவு)

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரார்கள் : சபீர், இப்ராஹீம் அன்சாரி, அபூ இப்ராஹீம் தங்களுக்கு சிறு விளக்கம்: // If a son of Adam has 2 valleys of Gold he would seek to get a third valley//
********************************************************************

இதற்கு சரியான விளக்கம் கீழே உள்ள ஹதீஸ் தெளிவாக்குகிறது.:::::)--


6436. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.


6438. அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன்மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
Volume :7 Book :81


6439. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா...

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் என்பது தேடு அதனை இஸ்லாம் காட்டிய வழியில் செலவிடு இதன் மூலம் இம்மையிலும் அதன் அளவில் குறையேதும் ஏற்பட்டுவிடாது மாறாக மறுமையில் மலையளவு நன்மையையே கிடக்கச்செய்யும் என்பது தங்களின் ஆய்வின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது

சுருக்கமாகச் சொல்லபோனால் இம்மைக்கும் மறுமைக்குமான ஆக்கப்பூர்வ பொருளாதாரம் பற்றிய ஒரு ஆக்கபூர்வ தொடர்தான் இது.

ஜஜாகல்லாஹு கைரன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மார்க்கம் சொல்லும் பொருளாதாரம் பற்றிய தெளிவான விரிவுரை. ஜஸாகல்லாஹ் ஹைர் காக்கா.

அலாவுதீன்.S. said...

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:1-7)

Shameed said...

மாமா வின் கட்டுரையில் இருந்து மார்க்க பொருளாதாரம் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் வாழ்க்கையில் இவைகளை பின் பற்ற எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவனாக ஆமின்

Yasir said...

மாஷா அல்லாஹ்...அசரவைக்கும் குர் ஆன் வழி சான்றுகள்...அதிரவைக்கும் எழுத்துநடை......வல்லோன் சொல்லியபடி பகிர்ந்தளிக்க முற்ப்பட்டுவிட்டால் ....ஏழ்மையேது ....அறிவுக்கு செறிவு சேர்க்கும் தொடர்...தொடர்ந்து எழுதுங்கள் மாமா..

//நம்மால் வழங்கப் படத் தகுதிபடைத்தோரை வரிசைப்படுத்தி அதாவது- உறவினர்- அனாதைகள் – ஏழைகள்- வழிப்போக்கர்கள்- யாசகம் கேட்போர்கள் – மற்றவரை கடனில் இருந்து விடுவிக்க என்பதாக பொருளாதார புரோடோகால் வகுத்துத் தருகிறான் வல்ல இறைவன். /// அல்லாஹூ அக்பர்

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,

Eventhough I finished reading this article I was too busy to comment.

God's law and order is the ultimate and undisputable. Nice examples which elaborates the nature of frugality and noble hadees and Quranic verses which are clariying the concepts.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com




Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Abushahruk,

Eventhough I finished reading this article I was too busy to comment.

Islam the ultimate guidance framework for life from God Almighty preaches everything by well knowing the nature(psycology) of human.

Human has set of built in desires from where the decisions and actions spring.

So, human has tendancy and desire to pursue the wealth.

Similar to river of a forest, desire would get uncontrolled and human would become greedy and doing illegitimate activities(Haram).

Earning great wealth in halal ways is appreciated in Islam.

The guidance of God Almighty is the salvation to great living here in this world.

Hope my insight is shedding some light on this concept and expecting your feedback too.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு