Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 12 25

அதிரைநிருபர் பதிப்பகம் | April 06, 2013 | , , ,


தொடர் : பனிரெண்டு
படைத்தவன் படைத்தது பற்றாக்குறையா? - 1

இந்த தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில்  லயனல் ராபின்ஸ் என்கிற பொருளியல் வல்லுநர்  சுட்டிக்காட்டிய கோட்பாடு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். அதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது தொடர்ந்த விளக்கங்களுக்கும் விளங்கிக் கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும். லயனல் ராபின்சின்   கோட்பாட்டின் அடிப்படை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை :
  • மனிதனின் தேவைகள் அதிகம். ( Countless Desires)
  • அந்தத்  தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றாக்குறையானவை . ( Scarce Means)
  • அவ்விதம் வரையறைக்குட்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள்  மனிதனுக்கு ஒரே நேரத்தில் எழக்கூடிய மற்ற தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள மாற்றிப் பயன்படுத்தத் தக்கவை. (Alternative Uses). 
இறைவன் வழங்கி இருக்கக் கூடிய உலகின் வளங்கள் மற்றும் தனிமனிதனின் உடல் உழைப்பு மற்றும் புத்திசாலித்தனம் உட்பட யாவுமே ஒரு வரையறைக்குட்பட்டதே. வரையறைக்குட்பட்டதை எப்படிப்  பயன்படுத்துகிறோம் என்பதே  நாம் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளை அமைந்து இன்பம் அல்லது துன்பத்தை விளைவிக்கிறது.

அருள்மறை இதையே இவ்வாறு கூறுகிறது ,

“ எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கிறோம் .

And there is not a thing but its (sources and)  treasures are with Us; but We only send down thereof in due and ascertainable measures” ( Al Hijr 15: 21) .

மேலும் இறைவன் கூறுகிறான்

“ நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் அதனதன் அளவில்  ஒரு குறிப்பிட்ட விதி முறையின்படி     படைத் திருக்கின்றோம்.”  

Verily, all things We have created in proportion and measures “ ( Al Qamar 54:49).  

உலகம் பின்னாளில் மட்டுமல்ல இந்நாள்வரை ஒப்புக் கொண்ட  லயனல் ராபின்சின் பொருளியல் தத்துவம் இஸ்லாத்தின் வித்திலிருந்து வீறிட்டுக் கிளம்பிய கோட்பாடே என்பதற்கு இவையே சான்றாகும். நவீனப் பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக இஸ்லாமிய மாணவர்கள் மனதில் இருத்திக் கொள்ளவேண்டியவை இவை.  ஆங்கிலேயர்கள்தான் அனைத்து கலை மற்றும் அறிவியல் கருத்துக்களின் புதுப் பரிமாணங்களுக்குச்  சொந்தக்காரர்கள் என்று உலகம் நம்பும் வகையில் வடித்து வைத்து புட்டிப் பாலாய்  புகட்டப்  பட்ட வரலாற்றுப் புரட்டுக்களை இடுப்பொடிக்க உதவும் வாதங்கள் இவை. 

இறைவனால் அளவிட்டு வழங்கப் பட்ட வளங்களை கைப்பற்றி அவற்றை  வகைப் படுத்தி , வளப்படுத்தி அதே இறைவனால் தனக்கு வழங்கப் பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்தி எதை , எங்கு,  எதற்காக நமது   இம்மை மறுமைகளின்   வாழ்வுக்கு ஏற்றதாய் மாற்றிக் கொள்வதுதான் மனிதன் மேற்கொள்ள வேண்டிய  பொருளாதார நடவடிக்கைள் என்பதே இதன் பொருள்.

அதே நேரம், படைப்பினங்களின் மனம்  துவண்டுவிடாதவண்ணம்  இறைவன் அருளி இருக்கிற அளவற்ற செல்வங்களையும் அவை பற்றி நம்பிக்கை ஊட்டும்  விதத்தில் அவன் வழங்கி இருக்கிற கீழ்க்கண்ட வரிகளையும் நாம் எண்ணிப் பார்த்துக் கொள்வது நமது தன்னம்பிக்கையை தளரவிடாமல் செய்யும் இறைவாசகங்கள் .

“ உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்டையும் சென்று சேருமிடத்தையும் அவன் நன்கு அறிகிறான்”  

“There is not a moving creature on earth but its sustenance is on Allah.” ( ஹூத்   11:6 ) என்றும்

எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை. அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான்; உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான்.”  

How many creatures that carry not their own sustenance. It is Allah Who feeds them and you ( அல் அன் கன்பூத் 29:60 )

மேலே காணப்படும் இறைவாசகங்களில் ஒரு புறம் பற்றாக்குறை அல்லது அளவோடு படைத்திருப்பதையும் மறுபுறம் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் பொறுப்பேற்று  இருப்பதையும் எண்ணிப் பார்க்கும்போது பொருளாதாரக் கோட்பாடுகளின் அம்சங்களாகிய பற்றாக்குறை மற்றும் தன்னிறைவு  (SCARCITY & SUFFICIENCY ) ஆகியவற்றின் கூட்டுக் கோட்பாடே இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு என்கிற எண்ணம் நம்மிடம் உறுதிப்படும் என்பதை உணரலாம்.  பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படுகிற நேரங்களில் அவற்றிற்கான  தீர்வு இறைவனின் வழிகாட்டுதலின்படியும் அண்ணல நபி அவர்களின் வாழ்வு முறைகளையும் சீர்தூக்கி   மனிதன் நடைமுறையான மார்க்கம் பேணும்  முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே இங்கு நாம் அறிய வேண்டியது ஆகும் . 

இறைவன்  வழங்கி இருக்கிற மூலவளங்களை தனது வாழ்வுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும்  ஏற்றபடி தனது உழைப்பின் மூலமும் அறிவின் மூலமும் கண்டறிந்து,  பயன்படுத்தி தனது  மனம் திருப்திஅடையும் அளவுக்குத்தக்கபடி  பயன்படுத்தி கொள்வதற்கு மனிதனுக்கு உரிமைகள் உள்ளன. வேறொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் இறைவன் மனித இனத்துக்கு மட்டுமல்ல தன்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வழங்கி இருக்கிற வாழும் வாய்ப்புகளையும் செல்வங்களையும்  மனித இனம் தனக்கு உரித்தாக்கிக் கொள்வதும் அவற்றில் வெற்றி காண்பதும்   அவரவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள், முயற்சிகள், வாய்ப்புகள் திறமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பயன் படுத்துவதிலேதான் அமையும். இது தனி மனித வளம் சார்ந்த திறமைகளை வளர்ப்பது மற்றும் செயல் படுத்துவதன் வெற்றிகளைக் குறித்து நாம் விளங்க வேண்டியதாகும். மனித வளங்களில்  மறைந்திருக்கும் மேம்பாடுகளை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கோட்பாடு இங்கே வெளிப்படுகிறது.  திருமறை தீர்க்கமாகக்  கூறுகிறது,
   
“ ( அதாவது பாவச்சுமையை ச் ) சுமக்கக்கூடியது எதுவும் மற்றொன்றின் ( பாவச் ) சுமையை சுமக்காது. மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததேயல்லாமல் ( வேறு) இல்லை.”  

Namely, that no bearer of burdens can bear the burden of another; that human can have nothing but what he strives for “ ( அன்னஜ்ம்  53: 38-39).

மேலும்

“ அல்லாஹ்விடமே நீங்கள் உணவைத்தேடுங்கள் 

“ Then seek your sustenance from Allah  (அல் அல்கன்பூத்   29:17) .

மேலேகண்ட நாம் விவாதித்த கருத்துக்களில் நாம் காண்பது இறைவன் படைத்து வழங்கி இருக்கும்  உலக வளங்கள் மனித குலம் ஒட்டு மொத்ததுக்கும் பற்றாதா    என்று அடிமனதில் கேள்விகளை எழுப்பலாம்.  ஆனால் எல்லோருக்கும் எல்லாம் படைத்திருப்பதாகவும் தேவைகளை இறைவனிடமே கேட்கவேண்டுமென்றும் அப்படியே கேட்டாலும் அவரவர் திறமைக்கு ஏற்றபடியே மெய் வருத்தக் கூலி வழங்கப்படும் என்றும் இறைவாசகங்களில் இருந்து  நாம் உறுதியுடன் விளங்கலாம்.  பற்றாகுறை என்பது படைத்தவன் படைத்ததல்ல.  மனிதனுடைய ஊதாரித்தனம், திறமையின்மை, பேராசை, பதுக்கல் , விரயம் செய்வது , வீணாக்குவது , தேவைக்கு மேலே சேர்த்து வைக்கும் எண்ணம் , முக்கியமாக நிர்வாகக் குறைபாடுகள், வேண்டியவர்களுக்கு சலுகைகள் ஆகியவையே பற்றாக் குறையை     ( SCARCITY)  ஏற்படுத்துகின்றன.

மனிதன்,  என்னுடைய பொருள் , என்னுடைய பொருள் என்று ஆவலாகப்  பறக்கிறான். உண்மையில் மனிதனுடைய பொருள் யாது என வினவப்பட்டபோது அவனுடைய பொருள் என்பது அவன் உண்டு முடித்திருக்கும் உணவு, அவன் அணிந்து கிழிந்துபட்ட ஆடைகள், அல்லாஹ்வுடைய வழியில் அவன் செலவழித்திருக்கும் செல்வம் ஆகிய மூன்றும்தான் என்று அண்ணல் பெருமானார்( ஸல்) அவர்கள் கூறியதாக நபி மொழி ( முஸ்லிம்) குறிப்பிடுகிறது.

 திருடன் என்பவன் யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டபோது  “ தேவைக்கு மேலே சேர்த்து  வைப்பவனே திருடன்! ஏனென்றால் இவன்,  இறைவன், எல்லோருக்குமாகப் படைத்ததிலிருந்து திருடுகிறான் ” என்று கூறினார். 

பற்றாக்குறை பற்றி இன்னும் சூடாக விவாதிக்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.  ( தொடரும்).

இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

Unknown said...

அன்புச்சகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்களே!

தங்களின் இஸ்லாமிய பொருலாதாரத்தொடர் உண்மையில் புருவங்களை
உயர்த்த வைக்கின்றன.

உலகின் உண்மைத்திருடன் தேவைக்குமேல் பதுக்கி வைத்திருப்பவனே என்ற கூற்று சிந்த்திக்க வைக்கிறது. பற்றாகுறை என்பது படைத்தவன் படைத்ததல்ல. மனிதனுடைய ஊதாரித்தனம், திறமையின்மை, பேராசை, பதுக்கல் , விரயம் செய்வது , வீணாக்குவது , தேவைக்கு மேலே சேர்த்து வைக்கும் எண்ணம் , முக்கியமாக நிர்வாகக் குறைபாடுகள், வேண்டியவர்களுக்கு சலுகைகள் ஆகியவையே பற்றாக் குறையை ( SCARCITY) ஏற்படுத்துகின்றன.என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

உலகின் பசி பட்டினிக்கு உண்மைக்காரனமானவன் இந்த பதுக்கல் காரர்களே என்பது தெள்ளத்தெளிவு.

" ஒவ்வரு உயிரின் உணவுக்கும் "வாக்குறுதி அளித்தவன் பற்றாக்குறையை ஏற்ப்படுத்துவானா?

மேலும் சிந்திக்கத்தூண்டுகிறது.

தொடரட்டும் உங்கள் தொடர்.

அன்புடன்,

அபு ஆசிப் என்ற அப்துல் காதர்
ரியாத், சவுதி அரேபியா.

sabeer.abushahruk said...

ஈனா ஆன காக்கா,

மன்னிக்கவும். தங்களின் பதிவை முழுவதும் வாசித்துக் கருத்திட சற்று சமயம் வேண்டும். ஆனால், காதரின் பின்னூட்டத்தை வசித்ததும் அவனிடம் ஒரு விண்ணப்பம் வைக்கத் தோன்றியது.

காதர், உன் கமென்ட்களில் அனுபவமும் மார்க்க பிடிப்பும் மிகுவதை அவதானித்த வகையில் "நீ இங்கு ஒரு தனிப் பதிவு எழுத வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறேன்.


அது, உனக்குப் பிடித்தப் பேசுபொருளாகவோ அன்வர் நூருல்லாஹ்வுடனான பள்ளிப்பிராயங்களின் நினைவலைகளாகவோ இருக்கலாம்.

வாய்த்தால் அவர்களுக்கும் மன்சூருக்கும் என் சலாம் சொல். (முடிந்தால் இங்கு இழுத்து வா)

sabeer.abushahruk said...

மிகத் தெளிவான விரிவுறை. நிதானமாக வாசித்துக்கிரகித்தேன். இந்த வாரப் பாடத்தில் பத்து மார்க் கேள்விக்குக்கூட என்னால் பதில் தர முடியும்.

தவிர, தேவக்கு மேல் சேர்த்து வைப்பவன் திருடன் என்கிற கான்ஸெப்ட்டில் எனக்கு மேலும் விளக்கம் வேண்டும்.

தேவைகளின் எல்லையை நிர்ணயிப்பது எது அல்லது யார்? அதாவது தேவையின் கால வரையரை என்ன?

நாளைக்காகச் சேமிப்பதே தேவைக்கதிகமா அடுத்த வருடத்திற்காகச் சேர்ப்பதா? பிள்ளைக்காக? பேரனுக்காக? சந்ததிக்காக?

(காக்கா, முறைக்காதிய. பதிலச் சொல்லுங்களேன்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் ! காட்டுகள் ஒரு காட்டு காட்டுகின்றன !

காக்கா, நாங்கள் தொட்டு வைத்தோம் துவட்டி எடுப்பதில் நீங்கள் வல்லவர்தான்... !

எனக்கு கேள்வி ஞானம் கம்மிதான் இருந்தாலும் பற்றாக் குறைக்கு இத்தனை குறைகளா ? (இதுதான் என் கேள்வி)

மாஷா அல்லாஹ் ! காட்டுகள் ஒரு காட்டு காட்டுகின்றன !

தமீம் said...

இஸ்லாமும் அதிலிருந்தே பொருளாதாராமும் சிறந்த ஒரு தொடராக்கம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

\\காதர், உன் கமென்ட்களில் அனுபவமும் மார்க்க பிடிப்பும் மிகுவதை அவதானித்த வகையில் "நீ இங்கு ஒரு தனிப் பதிவு எழுத வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறேன்\\

கவிவேந்தரின் கட்டளையை அடியேனும் வரவேற்கிறேன்.

என் ஆருயிரின் (தலைத்தனையன் - தமீம்) மாமனாய், என் இனிய நண்பனாய், என்றும் நான் இரசிக்கும் பாடகனாய் இருக்கும் அப்துல் காதிர் அவர்கட்கு , அஸ்ஸலாமு அலைக்கும்.

புதியதாய் இணையத்தில் வலம் வந்து எம் இதயத்தைக் கவரும் இனிய கருத்துக்களை வழங்கி வரும் உங்களை உன்னிப்பாய் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் ஆக்கம் - தொடர் எங்கட்கு ஊக்கம் தரும் ஒளிச் சுடர்; உடன் எழுதல் உங்கள் கடன் என வேண்டுகிறேன்.

கவிவேந்தர் சபீர்: என் ஆருயிரை- தலைத்தனையனை- அப்துல் காதிரின் மருமகனைத் தூண்டில் போட்டு இவ்வலைக்குள் விழ வைப்பீர்களா? ஏங்குகிறேன் அவனைக் காணாமல்....

Abdul Razik said...

We have lot of strategies subordinate with economics like, trade policy, money policy etc. But there is no prompt food circulation policy, cause of profitable mind.
அந்தத் தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் பற்றாக்குறையானவை, என்பது தவரு. மாறாக அந்தத் தேவைகளை நிறைவேற்றும் சேவைகள் பற்றாக்குறையானவை என்பது சரி.பற்றாக்குறை (Scarcity) மனிதனாக ஏற்படுத்திக்கொள்வது, உலகில் இருக்கும் 600 கோடிக்கு மேற்பட்ட மனிதர்களின் தேவைக்கு மேலாகவே உணவு உற்பத்தி செய்யப்படுகின்றது, முறையான பகிர்வின்மையால் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைவதில்லை, காரணம் லாப நோக்கம். இஸ்லாமிய பகிர்வு முறை வரும் வரை உலகில் பற்றக்குறை இருந்துகொண்டுதான் இருக்கும்.
பல்வேறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளே முறையான தீர்வு என்று பல அறிவியல் வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்காலத்தில் , உணவு பகிர்வு மற்றும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இஸ்லாமிய கோட்பாடே சரியான வழி என்று அனைவராலும் ஒத்துக்கொல்லும் காலமும் விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ்.
இப்ராகிம் காக்கா எழுதும் இத்தொடர் இனி நிறைய சிந்திக்கக்கூடிய பொன்னான கருத்துக்களோடு தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.

Abdul Razik
Dubai

KALAM SHAICK ABDUL KADER said...

\\ திருடன் என்பவன் யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டபோது “ தேவைக்கு மேலே சேர்த்து வைப்பவனே திருடன்! ஏனென்றால் இவன், இறைவன், எல்லோருக்குமாகப் படைத்ததிலிருந்து திருடுகிறான் ” என்று கூறினார். \\

உண்மையிலும் உண்மை முனைவர் அவர்களே! ஆயினும் கவிவேந்தரின் ஐயங்கள் எனக்கும் “பொருளாதார வகுப்பில்” (புகுமுக வகுப்பில்) தோன்றின; அவ்வினாக்கட்கு என் பேராசிரியர் அப்துல் ஜப்பார் அவர்கள் சொன்னார்கள்

need, necessity, luxury என்ற இச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும்; காலச்சக்கரத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளதால் இம்மூன்றும் காலத்தின் நிலைக்கொப்ப மாறுபடலாம் என்றார்கள். அக்கூற்று இற்றைப் பொழுதில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம். செல்லிடைப்பேசி என்பது ஒரு காலத்தில் luxury ஆக இருந்தது; ஆனால் இன்று necessity ஆகி விட்டது!

இந்த அளவுகோலை வைத்துத் “தேவைகள்” பற்றிய விளக்கம் தேவை என்று கருதுகிறேன்.

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்கா,

வழக்கமாகச் சொல்லும் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன்.  

அதிக, கடின ஹோம் ஒர்க் தேவைப்படும் இந்தத் தொடரை நல்ல முறையில் தொடர, 

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

(கவியன்பன், கவலை வேண்டாம். எங்கெல்லாம் நானும் காதரும் ஒன்னாயிருக்கிறோமோ அங்கெல்லாம் தேடி வந்துவிடுவார் தலைத்தனயன் தமீம்...அது சவுதியின் ஜுபைலாகயிருக்கட்டும்; அதிரையின் எம் எஸ் எம் பள்ளியாகயிருக்கட்டும்; அதிரை நிருபராக இருக்கட்டும்.

கண்படும் அளவுக்கு பாசக்காரர்கள் இந்த மாமனும் மருமகனும்.)

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

தம்பி சபீர்/ உலகக் கவியன்பன் / தம்பி அபூ இப்ராஹீம்.

நேற்று இரவு தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுடன் பேசும்போது இந்த அப்துல் காதர் என்கிற புது வரவு கருத்துரைப்பதில் ஒரு கலக்கு கலக்குகிறாரே அவருக்கு தனிப்பதிவாளராக பதவி உயர்வு அளித்தால் எண்ண என்று கேட்டேன். இன்ஷா அல்லாஹ் என்று பதில் வந்தது. நானும் கூறுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

தம்பி சபீர் அவர்களின் அருமையான கேள்விகளுக்கு வரும் அத்தியாயங்களில் இன்ஷா அல்லாஹ் பதில் கூறி விளக்க முயற்சிக்கிறேன்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் Razik

//அந்தத் தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் பற்றாக்குறையானவை, என்பது தவரு. மாறாக அந்தத் தேவைகளை நிறைவேற்றும் சேவைகள் பற்றாக்குறையானவை என்பது சரி.//

பொருளியலில் materials and services என்றே குறிப்பிடப்படும் . both are scarce.
தங்களின் அன்பான கருத்திடலுக்கு நன்றி.

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர் அவர்களின் அறிவுபூர்வமான கேள்விகளுக்கு Demand- Supply- Savings - Investment ஆகியன பற்றிப் பேசும்போது இன்ஷா அல்லாஹ் பதில் அளிக்கிறேன்.

தொடராக எழுதுவதால் பற்றாக்குறை பற்றிய இன்னொரு அத்தியாயமும் இருக்கிறது. மிச்சத்தையும் அதையும் விவாதித்துவிடலாம் அடுத்த வாரம் . சொச்சத்தையும் தொடரலாம் தொடர்ந்து.

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு - அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

//// மனிதன், என்னுடைய பொருள் , என்னுடைய பொருள் என்று ஆவலாகப் பறக்கிறான். உண்மையில் மனிதனுடைய பொருள் யாது என வினவப்பட்டபோது அவனுடைய பொருள் என்பது அவன் உண்டு முடித்திருக்கும் உணவு, அவன் அணிந்து கிழிந்துபட்ட ஆடைகள், அல்லாஹ்வுடைய வழியில் அவன் செலவழித்திருக்கும் செல்வம் ஆகிய மூன்றும்தான் என்று அண்ணல் பெருமானார்( ஸல்) அவர்கள் கூறியதாக நபி மொழி ( முஸ்லிம்) குறிப்பிடுகிறது.////

இந்த ஹதீஸை ஆணித்தரமாக மனதில் வைத்தால் மனிதர்களுடைய உரிமைகள் சரியானபடி சென்றடையும். பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமிருக்காது.

தெளிவான கட்டுரைக்கு வாழ்த்துக்கள்!

ZAKIR HUSSAIN said...

தேவைக்கு மேல் சேர்த்துவைப்பதற்கான காரணம் எதிர்காலத்தின் மீது பயம்.

தேவைக்கு அதிகம் சம்பாதிப்பத்து அதில் தர்மத்தை அதிகப்படுத்தினால் 'போரஎடத்துக்கு புண்ணியமாப்போவும்'

ஆனால் சிலர் மார்க்கம் பேசுகிறேன் என்று சம்பாதிப்பதையே ' உலக ஆசை" ..அது தேவையற்றது என்பது இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டல். தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டு 'ஒன்னுக்கும் உதவாமல்" இருக்கும் இந்த "குரூப்" தனது மனைவியிடம் தான் ரொம்பவும் " பாட்டு" வாங்கும் குரூப் ஆகிவிடுகிறது.

Ebrahim Ansari said...

"தேவைக்கு மேல் சேர்ப்பது"

நாம் திருடன் என்று யாரைப் பற்றி பேசுகிறோம்? கடல் கடந்து -பாடுபட்டு- பாலை வெயிலில் வெந்து - குடும்பம் வாழ ஒரு வீடு - மகளுக்கு வேண்டுமென்று கொஞ்சம் நகை- பிள்ளைகள் எதிர்காலத்தில் படிப்பதற்காக ஒரு தொகை- வயதான காலத்தில் வேண்டுமென்ற ஒரு சேமிப்பு- வருமானம் தரும்படியான ஹலாலான ஒரு வணிகத்தில் முதலீடு - இவை யாவுமே தேவை என்கிற வகையில்தான் பார்க்க வேண்டும். தேவைக்கு மேல என்கிற வகையில் பார்க்கக்கக்கூடாது.இவைகளும் தேவைதான் என்றே பார்க்க வேண்டும். ஆனால்

அதே நேரம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் வருடக் கணக்கில் நடப்பதைப் பாருங்கள். அறுநூறு ஜோடி காலணிகள் கைப்பற்றப் பட்டதைப் பாருங்கள் பெறாத மகனுக்கு நூறு கோடி செலவில் திருமணம் பாருங்கள்- ஓட்டை டிரங்க்க் பெட்டியுடன் திருட்டு ரயில் ஏறி வந்தவர்கள் உலகத்தின் பணக்காரர்கள் வரிசையில் வந்துள்ள வரலாறு பாருங்கள்- - பல ஆயிரம் கோடி ஊழல்கள் செய்து பதினோராவது தலைமுறைக்கும் சேர்த்துவைக்கும் சொத்துக்கள் குறுகிய காலத்தில் குவிவதைப் பாருங்கள்- இத்துப் போன செருப்பைப் போட்டு இரண்டுமாதம் முன்பு நடந்தவன் இந்நோவா காரில் போகும் வகை ஏற்பட்டதைப் பாருங்கள்- ஓட்டை டி வி வாங்கி வைக்கக்கூட வக்கற்றவர்கள் சொந்தமாக டி வி சேனல தொடங்கும் நிலை வந்ததைப் பாருங்கள்- கிரானைட் மாளிகைகளைப் பாருங்கள்- ஓட்டை சைக்கிள் வைத்திருந்தவன் வீட்டில் ஒன்பது கார்கள் நிற்பதைப் பாருங்கள்- இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் திருடர்கள் இல்லாமல் யாவர் ?

Ebrahim Ansari said...

https://www.facebook.com/photo.php?fbid=351957404905438&set=a.216599685107878.35766.100002735459170&type=1&ref=nf

KALAM SHAICK ABDUL KADER said...

\\ஆனால் சிலர் மார்க்கம் பேசுகிறேன் என்று சம்பாதிப்பதையே ' உலக ஆசை" ..அது தேவையற்றது என்பது இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டல். தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டு 'ஒன்னுக்கும் உதவாமல்" இருக்கும் இந்த "குரூப்" தனது மனைவியிடம் தான் ரொம்பவும் " பாட்டு" வாங்கும் குரூப் ஆகிவிடுகிறது.\\

உண்மையை உரக்கச் சொன்னீர்கள் உளவியலார் அவர்களே!

Unknown said...

என் இனிய நண்பா!

நீ என்னை விட்டு ஒருவருடம் இடைவெளியிலோ, அல்லது பல வருட இடைவெளியிலோ,தவணை முறையில் நம் நட்பு தொடர்வதும் பின்பு எதிர்பாராத இடைவெளி விழுவதுமகாத்தான் நட்பு என்னும் இனிய தோணியில் பிரயாநிக்கிறோம்.

காலங்களும், சந்தர்ப்பங்களும், இப்படி நட்பின் நடுவில் தற்காலிக நங்கூரமாய் நின்றாலும் நம் நட்பு என்னும் தோணி என்றும் பயணத்திலேயே இருக்கும் என்று நம் நட்புக்கு இலக்கணம் தந்தவனாக,

உன் சந்தேகங்களை தெளிவுக்கு கொண்டுவர என் அறிவுக்கு (?) ( இப்படி கேள்விக்குரிஎல்லாம் மனதில் எழுப்பாதே) பட்டதை உன் கழுத்துக்கு மேல் (மண்டை ஓட்டுக்குள் உள்ள 30 கிராம்) மாமிசத்துண்டுக்கு பார்சல் செய்கிறேன்
பெற்றுக்கொள்.

தேவைகளின் எல்லையை நிர்ணயிப்பது எது அல்லது யார்? அதாவது தேவையின் கால வரையரை என்ன?

நாளைக்காகச் சேமிப்பதே தேவைக்கதிகமா அடுத்த வருடத்திற்காகச் சேர்ப்பதா? பிள்ளைக்காக? பேரனுக்காக? சந்ததிக்காக?

இப்படி சதேகங்களை கேள்வியாக அடுக்கத்தேவையில்லை . ஒன்றை புரிந்து
கொள். உனக்கு அல்லாஹ் தந்த அறிவைக்கொண்.டு நீ சேர்க்கும் பொருளுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த விதத்திலும் கேள்வி கணக்கு இல்லை. ஏனனில் உழைத்தது நீ. உழைப்பது என்பது நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அது சுன்னத் (இபாதத்) . இஸ்லாம் சோம்பலை விரும்பவில்லை. அது உழைக்கச்சொல்கிறது.

தேவைக்கு அதிகம் என்பது , உன் உழைப்பின் மூலம் வரும் வருவாயால் யாரும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடாது. அது வந்த வழி நீதிக்கும் நேர்மைக்கும்
உட்பட்ட வழியாக இருக்கணும். ஏழை வரி என்று சொல்வதை விட, ஏழைகளின் உரிமை என்று சொல்லப்படும் ஜக்காத் முறையாக கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டிறிக்கவேனும்

இஸ்லாத்தின் தூய வழியில் பொருள் ஈட்டும்போது , நீ கோடி கோடியாக
சம்பாதித்தாலும் உனக்கு நாளை மஹ்ஷரில் அது நன்மையாகவே வந்து முடியும். ஏனனில் நீ உன் அறிவையும் உன் உடலையும் சம்பாத்தியம் என்னும்
சுன்னத்தை வாழ்நாள் முழுதும் உய்ர்ப்பிக்க அர்ப்பணித்து இருக்கின்றாய்.

ஆனால் பொருள் வர வர அது அல்லாஹ்வை marakkadippathaagavol அல்லது இவ்வுலக ஆசா பாசங்களில் மூழ்கடிப்பதாகவோ ஆக்கி விடக்கூடாது. ஆனால் ஒன்று, நீ விரும்பும்போது உன் தர்மத்தின் அளவைக்கூட்டிக்கொல்வதோ, நம்மைவிட தாழ்ந்துள்ள ஏழைகளின் கண்நீரைத்துடைப்பதில் முனைப்பு காட்டுவதோ உன் அந்தஸ்த்தை நாளை மஹ்ஷரில் உயர்த்த போதுமானதாகும்.

ஒருமுறை ரசூல் (ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி வந்து , யா ரசூலுல்லாஹ் ,
நான் என் சொத்துகள் அனைத்தையும் தர்மம் செய்ய தங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று சொன்ன பொழுது,அதை மறுத்து உமக்கென்றும் வைத்துக்கொண்டு மற்றவற்றை தர்மம் செய்யுங்கள் என்று சொன்னதாக ஹதீதில் வருகிறது.

ஆதலால் நாம் இறக்கும் தருவாயில் எவ்வளவு வைத்துவிட்டு செல்லவேண்டும் எத்தனை தலைமுறைக்கு வைத்துவிட்டுச்செல்லவேனும்
என்று இஸ்லாம் வருமானத்தையோ அல்லது சொத்து சுகங்கலையோ வரையறுக்கவில்லை.

மாறாக அது வந்தவழி, சென்ற வழி, அதைக்கொண்டு கடமையாக்கப்பட்ட அணைத்து விஷயங்களும் நீதியோடு செயல் படுத்தப்பட்டுள்ளதா ? என்பதுதான் அல்லாஹ் நம் முன்னே வைக்க இருக்கும் கேள்வி.
t
இவைகள் முறையாக நம் முன்னோடி நபியவர்களின் அடிச்சுவட்டின்
வழியில் நடத்தாட்டப்பட்டிருக்கின்றதா , சொத்து சேர்க்கும்போது, நம் முன்னே
திருக்குர்ஆன் விரிந்ததா ?

ஆம் என்றால் நீ உலகில் எத்தனை கோடி வேணும் என்றாலும் சம்பாதித்துக்கொள் . அனைத்தும் நன்மையே.

யா அல்லாஹ் எனக்கும், நான் யாருக்காக இந்த பின்னூட்டத்தை என் விரல் கொண்டு தட்டிநேனோ அவனுக்கும் உன் பறக்கத் பொருந்திய கடுகளவும்
ஹராம் என்னும் தீது கலக்காத செல்வத்தை தருவாயாக!
அதை உன்வழியில் செலவழிக்கும் ஆர்வத்தையும் எங்களுக்கு தருவாயாக!

ஆமீன் , யாரப்பல் ஆலமீன்.

அன்புடன் அப்துல் காதர்
ரியாத், சவுதி அரேபியா.,


Unknown said...

இஸ்லாத்தை தவறான முறையில் அறிமுகம் செய்ததில் ஏற்ப்பட்ட விளைவுகள் கணிசமான முறையில் சமுதாயத்தை விட்டு நீங்கிய நிலையில்,
மீதமிருக்கும் கொஞ்சம் அப்புறப்படுத்த வேண்டியவைகளில் இந்த பேச்சுக்களும் அறைவேக்கட்டுச்சிந்தனைகளும் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

இன்ஷா அல்லா காலப்போக்கில் அவைகளும் சமூகத்திலிருந்து துடைத்து எறியப்பட்டுவிடும். தூய இஸ்லாத்தினைப்பேனும் சமூகம் இன்ஷா அல்லாஹ்
நம் சுமுதாயத்தின் அனைத்து காரியங்களுக்கும் வழிகாட்டும்..

எதிர்பார்த்து காத்திருப்போம்

அன்புடன்.

அப்துல் காதர்,
(அபு ஆசிப்)
ரியாத், சவுதி அரேபியா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கருத்தாடல் வரை நிறைய விசயங்கள், நன்றி காக்கா.

Ebrahim Ansari said...

சகோதரர் அப்துல் காதர் அவர்கள் என் வேலையைப் பாதியாக குறைத்து விட்டீர்கள். ஜசக் அல்லாஹ் .

Unknown said...

//யா அல்லாஹ் எனக்கும், நான் யாருக்காக இந்த பின்னூட்டத்தை என் விரல் கொண்டு தட்டிநேனோ அவனுக்கும் உன் பறக்கத் பொருந்திய கடுகளவும்
ஹராம் என்னும் தீது கலக்காத செல்வத்தை தருவாயாக!
அதை உன்வழியில் செலவழிக்கும் ஆர்வத்தையும் எங்களுக்கு தருவாயாக!//

ஏன் கெஞ்சத்தனம்? பிரத்தனையில் எல்லோரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் கேட்பது ரப்பிடம்!

Adirai pasanga😎 said...

குறிப்பாக இறைவசனமும், இறத்தூதர் மொழியும் என்றும் நினைவில் நிறுத்தி செயலில் வரவேண்டியவைகளாகும்.

//“ உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்டையும் சென்று சேருமிடத்தையும் அவன் நன்கு அறிகிறான்”//

//மனிதன், என்னுடைய பொருள் , என்னுடைய பொருள் என்று ஆவலாகப் பறக்கிறான். உண்மையில் மனிதனுடைய பொருள் யாது என வினவப்பட்டபோது அவனுடைய பொருள் என்பது அவன் உண்டு முடித்திருக்கும் உணவு, அவன் அணிந்து கிழிந்துபட்ட ஆடைகள், அல்லாஹ்வுடைய வழியில் அவன் செலவழித்திருக்கும் செல்வம் ஆகிய மூன்றும்தான் என்று அண்ணல் பெருமானார்( ஸல்) அவர்கள் கூறியதாக நபி மொழி ( முஸ்லிம்) குறிப்பிடுகிறது.//

இக்கணம் இது மிகவும் சிந்திக்க வேண்டியவைகளாகும்.

Unknown said...

Assaamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,

//படைத்தவன் படைத்தது பற்றாக்குறையா? - 1//

The concept of The Creator is explained through the arabic word "Rab" which is interepreted as Rab is a creator one who create a creature such that before the creature come to exist he would have created all supporting mechanisms from food, shelter, air, living environment(The universe where the only living planet earth is the miracle to all thinking human beings.) etc., through which the creature can survive.

So, the scarcity as per your explanation is illusion in the mind, artificially created by human.

Its the mercy of the Creator Almighty Allah has given such guidance through his revelations to human to live good life here.

Alhamdulillah.

Thanks and best regards,

B. Ahamed Ameen

www.dubaibuyer.blogspot.com.

Yasir said...

அன்சாரி மாமாவின் இந்த அளப்பரிய பணிக்கு அல்லாஹ் தகுந்த கூலி கொடுப்பானாக...செல்வத்தையும் ,வளத்தையும் கொடுத்து அல்லாஹ் தன் வாக்குறுதியை காப்பாற்றிக்கொண்டுதான் உள்ளான்...ஆனால் மனிதன் தான் மாடாக திரிகின்றான் அதனை பகிர்ந்தளிக்க தெரிந்தும் தெரியாமல்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு