Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சேமிப்பு 55

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2013 | , , ,

அகிலத்தின் இயக்கத்தை
ஆண்டவன் திட்டமிட்டான்
அட்சரம் பிசகாமல்
அமைந்தது உலகு

இன்றே திட்டமிடு
நாளையை உனதாக்கு
கனவுகளைக் கைப்பற்ற
காரியங்களைத் திட்டமிடு

வட்டமிடும்
கழுகெனவே வாழ்க்கை
வெட்டவெளிக்
கோழிக்குஞ்சு மனிதன்
கொத்தப்படு முன்
திட்டமிடு

கருடப் பார்வையிலிருந்து
கணநேரம் தப்பிக்கலாம்
காலத்தின் பிடியிலிருந்து
கற்றோர்கூட தப்பவியலாது

காலம்...
பணி மூப்பென்றொரு
போர் தொடுக்கும்
நீ...
சேமிப்பு என்றொரு
சேனை வளர்
பணிமூப்புப் பட்டாளம்
புறமுதுகிடும்

ஊர்வனகூட
உணவைச் சேமிக்கின்றன
கலைஞர்களோ
கனவைச் சேமிப்பர்
சேமித்த
உணவும் கனவும்
உயர்வுக்குக் கைகொடுக்கும்

சேமிக்கும்போதுதான்
சில்லறை,
சேர்ந்துவிட்டால்
சில்லென்ற அறையில்
செல்லமான வாழ்க்கை

களவுபோகு முன்னரே
காபந்து செய்வதறிவு
செலவு செய்யும் முன்னரே
சேமிப்புச் செய்வதுயர்வு

இம்மையில் நன்மைகள்
மறுமைக்கான சேமிப்பு
உண்மையில் அதுவே
உயர்வுக்கானத் திட்டம்

ஊதாரித்தனமின்றி
உலோபியென சுருங்காமல்
கணக்கிட்டு தர்மம் செய்து
மெனக்கெட்டுச் சேமித்தால்
இம்மையும் இன்பமாகும்.

திட்டமிட்டுச் சேமிக்கக்
கற்றவரே கரைசேர்வர்
இம்மை மறுமையெனும்
ஈருலகிலும் ஈடேறுவர்.

Sabeer AbuShahruk

55 Responses So Far:

crown said...


வட்டமிடும்
கழுகெனவே வாழ்க்கை
வெட்டவெளிக்
கோழிக்குஞ்சு மனிதன்
கொத்தப்படு முன்
திட்டமிடு
--------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இதற்கு கருத்தை எழுத இதையே அப்படி அச்சரம் பிசகாமல் திருப்பி எழுதுவதுதான் சாலச்சிறந்தது! அருமையான எச்சரிகை மணி!

crown said...

கருடப் பார்வையிலிருந்து
கணநேரம் தப்பிக்கலாம்
காலத்தின் பிடியிலிருந்து
கற்றோர்கூட தப்பவியலாது
-------------------------------------
எதார்த்த விதையின் விருட்சம் இந்த வார்தை வரிகள்!பாதார்தத்தில் பாதம் தூவள் இருப்பதுபோல் எடுப்பாகவும், சுவையாகவும் பறிமாறப்பட்ட உணவு, நல்லதொரு விழிப்புணர்வு பிரட்சாரம், உங்களுக்கு தொழுகை வைக்கப்படும் முன் தொழுதுகொள்ளுங்கள் என்பதை நினைவுபடுத்துவதுபோல் பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை,அல்லாஹ்வின் அருள் இல்லாதவருக்கு அவ்வுலகில் சுவர்கம் இல்லை என்பதை சொல்ல வந்த நாலடி வரியி காவியம்.

crown said...

காலம்...
பணி மூப்பென்றொரு
போர் தொடுக்கும்
நீ...
சேமிப்பு என்றொரு
சேனை வளர்
பணிமூப்புப் பட்டாளம்
புறமுதுகிடும்
--------------------------------------

உழைப்பு வெளிச்சம் ,இல்லாமை இருளை விரட்டும் என்பதை இப்படி அழகாய் கவிசக்கரவர்தியால்தான் வடிக்கமுடியும். அல்ஹம்துலில்லாஹ்!இந்த வரிகளை எழுதிய உங்களை நெஞ்சுக்கு நேராய் அன்புடன் தழுவிக்கொள்ள மனம் சொல்கிறது.

crown said...

ஊர்வனகூட
உணவைச் சேமிக்கின்றன
கலைஞர்களோ
கனவைச் சேமிப்பர்
சேமித்த
உணவும் கனவும்
உயர்வுக்குக் கைகொடுக்கும்.
--------------------------------------------
உழைக்காதவன் சோதையின் உணவு, வெறும் கணவாகவே முடியும் என்பதை நிசமாய் சொல்லும் வரிகள்.

crown said...

இம்மையில் நன்மைகள்
மறுமைக்கான சேமிப்பு
உண்மையில் அதுவே
உயர்வுக்கானத் திட்டம்.
-------------------------------
இபாதத்தை தத்து எடுத்துக்கொண்டால் போகும் மஹ்சரிலே தத்தளிக்க மாட்டாய்! என்பதாக சொல்லவந்த உயர்வான திட்டம்!இதை கடைபிடிக்காவிட்டால் இம்மையிலும், மறுமையிலும் நட்டம்!

KALAM SHAICK ABDUL KADER said...

\\களவுபோகு முன்னரே
காபந்து செய்வதறிவு
செலவு செய்யும் முன்னரே
சேமிப்புச் செய்வதுயர்வு//

எனக்குப் பிடித்தமான வரிகள்! ஏனென்றால், எதுகையும், மோனையும் இணைந்து கூடுகட்டிய கவிக்குடில் இவ்வடிகள்!

crown said...

ஊதாரித்தனமின்றி
உலோபியென சுருங்காமல்
கணக்கிட்டு தர்மம் செய்து
மெனக்கெட்டுச் சேமித்தால்
இம்மையும் இன்பமாகும்.

திட்டமிட்டுச் சேமிக்கக்
கற்றவரே கரைசேர்வர்
இம்மை மறுமையெனும்
ஈருலகிலும் ஈடேறுவர்.
---------------------------------------------

இஸ்லாம் எவ்வாறு செய்யலாம் என சொன்னதை நடைமுறைப்படுத்தினாலே கணக்கிலா அருள் வந்து அதுவாய் சேரும்!அடிப்படை தர்மம், நல்ல கர்மம்(செயல்) ஆகும் இது எதிர்கால மர்ம முடிச்சை அவிழ்கும் கையாகும் அதனால்தான் ஈகை! வாகையாய் கொண்டு சேர்க்கும் வாகனம்!அது அடையும் இடம் சுவனம்! அல்ஹம்துலில்லாஹ் வழக்கம் போல் நல்ல சிந்தைனை மிக்க கவிதை வரிகள் கவிராசாவிடமிருந்து.

crown said...

சேமிக்கும்போதுதான்
சில்லறை,
சேர்ந்துவிட்டால்
சில்லென்ற அறையில்
செல்லமான வாழ்க்கை
---------------------------------
குளிரில் விடுபட்ட வார்தைகளை மறுபடிம் தேடி போர்வைக்குள் போர்த்திகொண்டேன்! எவ்வளவு நேர்த்தியாக எழுதப்பட்ட வார்தை கோர்வை!வேர்வை சிந்தி உழைதால் பின் சில்லென வாழ்கை செல்லமாய் நம்மை அணைக்கும் என்பதை சொல்லவந்த விதம் இதம்!(cool)

crown said...

களவுபோகு முன்னரே
காபந்து செய்வதறிவு
செலவு செய்யும் முன்னரே
சேமிப்புச் செய்வதுயர்வு
--------------------------------------
காபந்து செய்வது மிகமிக அவசியம் !மேலும் காலப்பந்து உருண்டோடிவிடும் முன் சேமிப்பு கோல்களை அடித்துவிடவேண்டும்!இல்லையென்றால் வாழ்கை விளையாட்டில் பவுல் எனும் பிழை வந்து சேரும்!

Unknown said...

நீ எழுதிய சேமிப்பின் கவியில் எனக்குப்பிடித்த
குரான் கூறிய அந்த அழகிய சொற்றொடரை

அதுதான்...

ஐந்து வரிகளில்
பத்து சொற்களில் :

ஊதாரித்தனமின்றி
உலோபியென சுருங்காமல்
கணக்கிட்டு தர்மம் செய்து
மெனக்கெட்டுச் சேமித்தால்
இம்மையும் இன்பமாகும்.

என்ன ஒரு நடு நிலையான வாழ்க்கை வாழச்சொல்கிறது இஸ்லாம்.
குரானிலே அல்லாஹ் கூறுகிறான்.:

"நபியே நீர் உமது கைகளை விரித்தும் விடாதீர்
சுருக்கியும் விடாதீர்" என்ற குரானின் சொற்றடொரை
அழகிய கவிதை வடிவில் தந்த என் நண்பன் சபீர் உண்மையிலேயே
ஒரு அழகியே கவிஞனே.

குரான் கவிதை வடிவில் இறங்கி இருந்தாலும், அது கவிதையை போதிப்பதற்காக இறங்கவில்லை. ரசூளுல்லாவோடு போட்டிபோட்ட அந்தக்காலத்து குறைஷிக் காபிர்களுக்கு சாவால் விடக்கூடிய அளவுக்கு மிக நேர்த்தியாக , ஒவ்வரு காலகட்டத்திற்கு தகுந்தார்ப்போல் , அல்லாஹ் இறக்கி அனைத்து குறைஷிகளின் சவால்களை வெல்ல வைத்தான்.

உன் சேமிப்புக்கவிதையும் உண்மையில் சேமிக்க இதுவரை தவரியவர்களைக்கூட யோசிக்க வைக்கும்.கவிதை டா.

என் நண்பனின் வார்த்தை ஜாலத்தைக்கண்டு வாய் பிளக்கிறேன்.

வாவ்.

அன்பு நட்பு

அபு ஆசிப்.



கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

சேமிப்பு - இது தலைப்பு.

தலைப்பு சேமிப்பாக இருந்தாலும் கவி வார்த்தைகளோ தாராளம். பல கோணங்களில் சேமிப்பை குறித்து எடுத்துரைத்து இருப்பது மிகவும் அருமை.

//இம்மையில் நன்மைகள்
மறுமைக்கான சேமிப்பு
உண்மையில் அதுவே
உயர்வுக்கானத் திட்டம்//

இம்மையில் நன்மைகள் மறுமைக்கான சேமிப்பு, இது ஒன்றே இறுதிவரை நமக்கு சொந்தமான ஒரு பொக்கிஷமாகும், இதைவிட வேறு ஏதேனும் சொல்லனுமா இந்த மானிடம் சிந்திப்பதற்கு(திருந்துவதற்கு)?

காலத்திற்கு ஏற்ற ஆக்கம், பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சேமிப்பு
பிரமிப்பாக தெரிந்தவர்களுக்கு....
கவிதையின் வரிகள்
ஏணிப் படிகள்...
சிகரம் தொட !

கிரவ்னுரைக்கு அருகில் என்னுரை எப்படிங்க நிற்கும் ! (அசந்து உட்கார்ந்துடுச்சு...)

Abdul Razik said...

நாம் சேர்த்து வைத்த
தேனடையை இழந்துவிட்ட
தேனீக்கள்

Shameed said...

கவி வரிகள் அத்தனையும் சேமித்து வைக்கப்பட வேண்டியவை

புதுசுரபி said...

//திட்டமிட்டுச் சேமிக்கக்
கற்றவரே கரைசேர்வர்
இம்மை மறுமையெனும்
ஈருலகிலும் ஈடேறுவர்.//

என்ன ஒரு அற்புதமான வரிகள்!
ஈருலத்திற்குத் தேவையா சேமிப்பை இங்கே இக்கணமே சேர்த்துக்கொள் - திட்டமிட்டு கற்று கரைசேர்......... ஆஹா.. என்ன அருமையான கரிசனம்!!

சூப்பர்ப்..................

Adirai pasanga😎 said...

சகோதரர் சபீர் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்

எனக்குப் பிடித்த வரிகள்

//இம்மையில் நன்மைகள்
மறுமைக்கான சேமிப்பு
உண்மையில் அதுவே
உயர்வுக்கானத் திட்டம்//

மறுமைக்கு நன்மையதை சேர்ப்பவனே
உண்மையான புத்திசாலி என்றே
காருண்ய நபி பகன்றார் நன்றே
நாமும் பேணுவோம் அவர் வழி நின்றே!

crown said...

கருடப் பார்வையிலிருந்து
கணநேரம் தப்பிக்கலாம்
காலத்தின் பிடியிலிருந்து
கற்றோர்கூட தப்பவியலாது
-------------------------------------
எதார்த்த விதையின் விருட்சம் இந்த வார்தை வரிகள்!பாதார்தத்தில் ""பாதம்""தூவள் இருப்பதுபோல் எடுப்பாகவும், சுவையாகவும் பறிமாறப்பட்ட உணவு, நல்லதொரு விழிப்புணர்வு பிரட்சாரம், உங்களுக்கு தொழுகை வைக்கப்படும் முன் தொழுதுகொள்ளுங்கள் என்பதை நினைவுபடுத்துவதுபோல் பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை,அல்லாஹ்வின் அருள் இல்லாதவருக்கு அவ்வுலகில் சுவர்கம் இல்லை என்பதை சொல்ல வந்த நாலடி வரியி காவியம்.
--------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். அட! கவனிக்க வில்லைங்க! பாதாம் கால் இழந்து பாதம் ஆன (கால்)விந்தை! என்னை பதம் பார்க்காமல் விட்டதே! மாற்றி வாசிக்கவும்.

sabeer.abushahruk said...


நீர்நிலையை யொத்த…
 
என்னை எடுத்துக்கொண்டு
யாராவது எனக்கொரு
அதிர்வுகளற்ற
ஆன்மாவைத் தாருங்களேன்
 
நீர்நிலையின் மேற்புறத்தின்
பரப்பு இழு விசையில்
சிறு
பொத்தல்கூட விழாமல் நடமாடும்
நீர்ப்பூச்சியை யொத்த
நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்
 
சர்வமும் சாந்தியான
சீவிதமே என் நாட்டம்
 
ஒரு
புள்ளியெனக்கூட வேதனை
செய்யாதிருப்பீர்
அது
வட்டமெழுப்பி
சடசடவென விட்டங்கள் கூட்டி
பெரும்
வாட்டமாக விரிந்துபோகிறது
 
வதனத்தில்
சலனங்களற்றுப் போனால்
சவமாகி விடமாட்டேன்
 
உள்ளே
உராய்வுகளின் உஷ்னமற்ற
நீச்சலுக்கும்
செவுள்வழி சுவாசித்துப் பிரித்தெடுக்க
பிராண வாயுவும்
ஆழத்தில்
வண்ணவண்ண நீர்த் தாவரங்களுமென
வளமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
 
கூழாங்கற்களைப் போன்றே
முத்தைச் சுமக்கும்
சிப்பிகளும் சிதறிக்கிடக்கும்
அடி மனத்தில்
ஆர்ப்பரிப்பில்லாத அமைதியை
அனுபவித்துப் பார்க்க வேண்டும் நீங்கள்
 
என்னோடு சேர்ந்தே
தன்னுயரம் நீட்டும்
தாமரை உயர
தண்ணீர் தரும் தயாளன் நான்
 
அதிர்வுகளின்றியே
என்னைக் கடந்து செல்லுங்கள்
ஏனெனில்
எனக்குள்ளும் இயக்கமற்றுக் கிடக்கின்றன
எத்தனையோ சுனாமிகள்

- சபீர் அஹ்மது அபுஷாருக்
நன்றி: திண்ணை

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

வட்டமிடும்
கழுகெனவே வாழ்க்கை
வெட்டவெளிக்
கோழிக்குஞ்சு மனிதன்
கொத்தப்படு முன்
திட்டமிடு
அருமையான வரிகள்
வாழ்த்துக்களும் துவாவும்

sabeer.abushahruk said...

காதரு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கவிதை எழுத கற்பிக்கச் சொல்லி கவியன்பன் அவர்களைக் கேட்டிருந்தாய். அவர்கள் ஏனோ என்னைக் காட்டினார்கள், தன்னால் முடியும், ஆனால் இலக்கணம் "கைக்கும்" இத்தளம் வேண்டாம் என்கிற கொள்கை முடிவுடன்.

கவிதை ஒன்றும்
கணக்குப் பதிவியலோ
கணினி அறிவியலோ அல்ல
கற்பிக்கவும் கற்றிடவும்

கவிதைக்கும் மொழிக்கும்
காத தூரம் இடைவெளியுண்டு

மொழியில் உள்ள வார்த்தைகள் வைத்து இசகாமல் பிசகாமல் இலக்கண இழையால் பின்னியெடுத்து பத்திகள் எழுதலாம்; தட்டாத தளை, பிழையில்லாச் சீர், தலையாட்ட காலாட்ட வைக்கும் சந்தம் என்று உத்திகள் செய்து பக்கம் நிரப்பலாம்; வெண்பா எழுதலாம் நண்பா! 

இவற்றை எல்லாத் தமிழ் ஆசான்களுமே திறம்படச் செய்வர்; அவர்கள் யாவரையும் கவிஞன் என்றா அழைக்கிறோம்? இல்லையே!  அவர்கள் தமிழாசான்கள்  - கவிஞர்கள் அல்லர்.

லியோனா ட டாவின்ஸியின் தூரிகை வேண்டும் என்கிறாய். தந்தால் உன்னால் மோனாலிஸாவை வரைந்திட முடியுமா?

தூரிகையைப்போலத்தான் மொழி; உளியைப்போலத்தான் மொழி. வறைவதும் செதுக்குவதும் ஓவியனின், சிற்பியின் ரசனையின்பாற்பட்டது.

நீ கவிதை எழுத கற்க முயலாதே. உன்னை பாதிக்கும் எதைப் பற்றியும் உணர்வுபூர்வமாக உள்வாங்கி உத்வேகத்தோடு அப்படி அப்படியே எழுது. 

எதுகை மோனை
அதுவாய் அமைகையில்
கவிஞன் பிறக்கிறான்

எதுகைக்காக எதையோ எழுத
மோனை வைத்து முதுகைச் சொறிய
சொக்கும் சுகத்தில்
சாகும் கவிதை!

உன்
கவிதைகளுக்கு
நீ அமைப்பதுதான் இலக்கணம்!

(டேய், அப்டியே அந்த உருக்கும் குரலில்  "தாயிஃப் நகரத்து வீதியிலே எங்கள் தாஹா நபி நடக்கையிலே" என்று நெஞ்சை அள்ளுவாயே, அதை எனக்குக் கொஞ்சம் கற்றுத்தருவாயா?)

சாம்ப்பிளுக்கு கீழே உள்ளதுகூட கவிதைதான்

 'மம்மி' தாலாட்டு!

நல்ல டைனோஸர்
மிளகாச் சட்னி கேட்காமல்
இட்லி உண்டது
படுக்கச்செல்லுமுன் 
பால் குடித்தது
'மூச்சா' வந்தால்
டாடி டைனோஸரை எழுப்பியது

தொப்பி யணிந்து
பள்ளி சென்றது
பள்ளிக்கூட 
உணவு இடைவேளையில்
அம்மா தந்துவிட்ட
சிற்றுண்டி உண்டது

கருப்புக் காரை
விரட்டியது
கணக்கு சாரை
மிரட்டியது

சுலைமானுடனும் ஷாருக்குடனும்
விளையாடியது
பலூன் பாலுவிடம்
'கட்டி' விட்டது
சுஷ்மிதா திருடிய
ஷார்ப்பெனெரை
பிடுங்கித் தந்தது

மம்ஸார் பார்க்கில்
கிரிக்கெட்டில்
ஷாருக்குக்கு நாட் அவுட் சொன்னது

மேலும்
நல்ல டைனோஸர்
எழுந்ததும் பல் துலக்கியது
சுவரில் கிறுக்காமல்
காகிதத்தில் எழுதியது
உடை ஈரமானால்
உடனே மாற்றியது

...மகன் உறங்கியதும்
மேலும்
கேவலப் படுவதிலிருந்தும்
தப்பியது டைனோஸர்!

KALAM SHAICK ABDUL KADER said...

அற்புதமான கவிதைப் பாடம்
அப்துல் காதிர் அப்படியே படித்துக் கொள்
யாப்பு என்பது வேறு; கவிதை என்பது வேறு
மூப்பு என்பது வேறு; இளமை என்பது வேறு
இலக்கணம் கேட்டதால் இயலாமை என்றேன்
“தலக்கனம்” கொண்டு தட்டிக் கழிக்கவில்லை
புதுமையில் புகுந்து விளையாடு
ஏதுமையில் எழுதினாலும் “எதுகை”வேண்டும்!

இறையருட்”கவி” மணியும்
அருட்”கவி”யும்
“கவி”ஞர்கள் அல்லர்; தமிழாசானகளாகி விட்ட போதில்

“கவி”யன்பனும் ஒரு கற்றுக்குட்டித் தமிழ் மாணவனே அன்றி ; கவிஞன் அல்லன்!
கவிஞன் அல்லாதானிடம் கவிதையைப் பற்றி படிக்க எண்ணியது கண்டு இப்பொழுதுத் தவறென்று உணர்ந்துக் கொள், அப்துல் காதிர்.

கவிஞன் வேறு; புலவன் வேறு
யான் கவிஞனும் அல்லன்; புலவனும் அல்லன்;
கவிதையை அன்பாய் நேசிக்கும் “கவியன்பன்”

عبد الرحيم بن جميل said...

அஸ்ஸலாமு அலைக்கும் சபீர் மாமா!!

சும்மா நச்சுனு ஒரு கவிதை வடித்தீர்...அவசியமான செய்திகளை கவிதையாய் எங்களுக்கு தந்தமைக்கு நன்றி!!

sabeer.abushahruk said...

கவியன்பன்,

// அவர்கள் யாவரையும் கவிஞன் என்றா அழைக்கிறோம்?//

//யாவரையும்// அதாவது "யாவரையும்"
என்னும் என் மேற்கோளுக்கு


//இறையருட்”கவி” மணியும்
அருட்”கவி”யும்
“கவி”ஞர்கள் அல்லர்; தமிழாசானகளாகி விட்ட போதில்//

எனபதுதான் பதிலா?

என் நிலைபாடு "தமிழி செய்யுள் கற்பிக்கும் யாவரும், அதாவது யாவரும் கவிஞர்கள் அல்லர். ஆனால், வெண்பா தெரிந்தும் வெண்பா வடிக்காமல் கவிதையில் சொல்லும் கவிக்கோ, மு.மேத்தா, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், பா விஜய் ஆகியோர் கவிஞர்கள்தானே?

கவிதைகள் குறித்த விவாததற்கு நான் தயார்,கவியன்பன்.

ஆனால்,

//“கவி”யன்பனும் ஒரு கற்றுக்குட்டித் தமிழ் மாணவனே அன்றி ; கவிஞன் அல்லன்!//

//யான் கவிஞனும் அல்லன்; புலவனும் அல்லன்;//

என்று தன்னைத்தானே தவறாக சுயவிமரிசனம் கூடாது, தன்மேல் கழிவிறக்கம் கூடாது என்கிற நிபந்தனைக்குட்பட்டால் மட்டுமே.

ஏனெனில், உங்களைப்பற்றி இத்தளத்திலும் எல்லோரிடமும் மிகச் சிறந்த கவிஞர்/மரபுப் புலமை எளிதல்ல; ஆனால், அதில் இவர் விற்பன்னர்; புலமை மிக்கவர் என்று சொல்லி வருகிறேன்.

வாருங்கள் கவிஞர்களுக்கே உரித்தான திமிரோடு விவாதிப்போம்.

sabeer.abushahruk said...

இலக்கணம் மீறியதால்தான்;

கனமான உலோகம் விமானமாகப் பறக்கின்றது; கருப்பான இரவுகள் கலையோடு ஒளிர்கின்றன; மூன்றே வருடங்களில் தென்னைக் காய்க்கின்றது; முட்டை அடைகாக்காமல் குஞ்சு பொறிக்கின்றது

இறைவன் வகுத்தவையா இலக்கணங்கள்? மனிதன் தொகுத்தது; தொல்காப்பியன் பகுத்தது! அவனவன் ரசனைக்கும் அதனதன் வரிசைக்கும் ஏதுவாகவும் தோதாகவும் எழுதி வைத்துவிட்டால்...? அதற்குள் முடங்கிப்போக அவை என்ன நபிமொழிகளா?

இலக்கணம் என்று பெயரிட்டு தொகுத்தவைகள் நமக்கு உதவினால் நன்றியோடு எடுத்தாள்வோம்; நாம் சொல்ல வந்தவற்றை சிதைத்தால், நாம் சொல்லிவற்றிலிருந்தே குறிப்புகள் எடுத்து எழுதுவோம் ஒரு புது இலக்கணம்.

கரைகளுக்குக் கட்டுப்பட்டவை என்றுமே கால்வாயாகவோ வாய்க்காலாகவோதான் ஊர்ந்து கொண்டிருக்கும். மகா நதிகளோ தத்தமது கரைகளைத் தாமே தீர்மானிக்கும் கரைபுரண்டு ஓடும்.

மரபை ஒன்றும் விதியல்ல; மரபை மதிப்போம்; மனிதத்தை மட்டுமே மதிப்போம்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

கடைசி வரி,

மரபு ஒன்றும் மனிதனின் விதியல்ல. மரபை மதிப்போம்; மனிதத்தை மட்டுமே பதிப்போம் என்றிருக்க வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விளம்பர இடைவேளை...

"கவிஞர்களுக்கு கோபம் நல்லது !
ஏன்னா!
நல்ல கருத்துகள் வெளியே வரும் !

மீண்டும் தொடர்கிறது....

எது கவிதைன்னு ஒன்னு எழுதுனீங்களே ! அதை அப்துல் காதிர் காக்காவுக்கு மீள்பதிவு செய்யலாமே...

//உன்
கவிதைகளுக்கு
நீ அமைப்பதுதான் இலக்கணம்!//

இந்த டீலிங்க் ரொம்ப பிடிச்சிருக்கு காக்கா...

Ebrahim Ansari said...

//ஊதாரித்தனமின்றி
உலோபியென சுருங்காமல்
கணக்கிட்டு தர்மம் செய்து
மெனக்கெட்டுச் சேமித்தால்
இம்மையும் இன்பமாகும்.

திட்டமிட்டுச் சேமிக்கக்
கற்றவரே கரைசேர்வர்
இம்மை மறுமையெனும்
ஈருலகிலும் ஈடேறுவர்.
---------------------------------------------

இஸ்லாம் எவ்வாறு செய்யலாம் என சொன்னதை நடைமுறைப்படுத்தினாலே கணக்கிலா அருள் வந்து அதுவாய் சேரும்!அடிப்படை தர்மம், நல்ல கர்மம்(செயல்) ஆகும் இது எதிர்கால மர்ம முடிச்சை அவிழ்கும் கையாகும் அதனால்தான் ஈகை! வாகையாய் கொண்டு சேர்க்கும் வாகனம்!அது அடையும் இடம் சுவனம்! அல்ஹம்துலில்லாஹ் வழக்கம் போல் நல்ல சிந்தைனை மிக்க கவிதை வரிகள் கவிராசாவிடமிருந்து.//
=====================================================================

இன்ஷா அல்லாஹ் நாளை வரவிருக்கும் இஸ்லாமியப் பொருளாதார தொடருக்கு அறிமுக உரையாக இந்தக் கவி வரிகள் மற்றும் தம்பி கிரவுன் அவர்களின் பின்னுட்டம் அமைந்தது காண ஆச்சரியம் எனக்கு. அல்லாஹு அக்பர்.

Ebrahim Ansari said...

இலக்கணம் கவிதைக்கு விலங்கு என்று எங்களின் பேராசிரியர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன்.

நான் குறிப்பிடும் பேராசிரியர்களில் ஒருவர் புதுக்கவிதை உலகின் அரசாராக முடி சூட்டப்பட்டவர்.

ஞாயிறு சந்தித்தேன்
திங்கள் போல இருந்தாள்
செவ்வாய் திறந்து பேசினாள்
புதன் புறப்பட முடிவு செய்தோம்
வியாழன் அன்று
வெள்ளி முளைக்குமுன் வீட்டை விட்டு ஓடினோம்
அது ஒரு சனி என்று அப்புறம்தான் தெரிந்தது.

என்ற ஒரு இளமைக்கால எண்ணக் கிறுக்கலை கவிதையாய் அங்கீகரித்து தன் கரங்களால் பரிசு வழங்கியவர். கவிக்கோ என்று உலகம் அவரை அடை மொழி சூட்டி அழைக்கிறது.

மேரா நாம் அப்துல் ரகுமான்! மேரா நாம் அப்துல் ரகுமான்! என்று அவர் பாடினாலும் அதுவும் கவிதையாகிவிடும்.

Ebrahim Ansari said...

//இறைவன் வகுத்தவையா இலக்கணங்கள்? மனிதன் தொகுத்தது; தொல்காப்பியன் பகுத்தது! அவனவன் ரசனைக்கும் அதனதன் வரிசைக்கும் ஏதுவாகவும் தோதாகவும் எழுதி வைத்துவிட்டால்...? அதற்குள் முடங்கிப்போக அவை என்ன நபிமொழிகளா?

இலக்கணம் என்று பெயரிட்டு தொகுத்தவைகள் நமக்கு உதவினால் நன்றியோடு எடுத்தாள்வோம்; நாம் சொல்ல வந்தவற்றை சிதைத்தால், நாம் சொல்லிவற்றிலிருந்தே குறிப்புகள் எடுத்து எழுதுவோம் ஒரு புது இலக்கணம்.

கரைகளுக்குக் கட்டுப்பட்டவை என்றுமே கால்வாயாகவோ வாய்க்காலாகவோதான் ஊர்ந்து கொண்டிருக்கும். மகா நதிகளோ தத்தமது கரைகளைத் தாமே தீர்மானிக்கும் கரைபுரண்டு ஓடும்// ஆமா ஆமா ஆமா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நான் குறிப்பிடும் பேராசிரியர்களில் ஒருவர் புதுக்கவிதை உலகின் அரசாராக முடி சூட்டப்பட்டவர். //

திருட அழைக்கும் அழகு ! எழுதிய ஸ்டாராச்சே ! :) இப்போ அதை இங்கே பதிந்தால்... திருந்துங்கப்'பா' ன்னு சத்தம் வந்துடும்...

அலாவுதீன்.S. said...

இதுதான்
/// இம்மையில் நன்மைகள்
மறுமைக்கான சேமிப்பு
உண்மையில் அதுவே
உயர்வுக்கானத் திட்டம் ///

உண்மையான சேமிப்பு

Ebrahim Ansari said...

//இறையருட்”கவி” மணியும்
அருட்”கவி”யும்
“கவி”ஞர்கள் அல்லர்; தமிழாசானகளாகி விட்ட போதில்//

இறையருட் கவிமணி கவிஞர் அல்லவா? எனக்குப் புரியவில்லை. மர்ஹூம் கா. அப்துல் கபூர் அவர்கள் எழுதிய மும்மணி மாலை கவிதை அல்லவா?

sabeer.abushahruk said...

// //இறையருட்”கவி” மணியும்
அருட்”கவி”யும்
“கவி”ஞர்கள் அல்லர்; தமிழாசானகளாகி விட்ட போதில்//

இறையருட் கவிமணி கவிஞர் அல்லவா? எனக்குப் புரியவில்லை. மர்ஹூம் கா. அப்துல் கபூர் அவர்கள் எழுதிய மும்மணி மாலை கவிதை அல்லவா? //

உ.: தமிழ் திரைப்படத்துறையைச் சார்ந்தவர் யாவரும் நடிகர்கள் அல்லர் என்னும் என் கூற்றிற்கு, "ரஜினிகாந்தும் கமலஹாசனும் நடிகர்கள் அல்லர்; தமிழ் திரைத்துறையச் சார்ந்தவர்கள் ஆகிவிட்ட போதில்" என்று பதில் சொன்னால் நான் எப்படி விவாதிக்க முடியும் காக்கா?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் கவி காக்கா அவர்களின் நலம் அறிய உங்கள் தம்பியின் ஆவல்.

// திட்டமிட்டுச் சேமிக்கக்
கற்றவரே கரைசேர்வர்
இம்மை மறுமையெனும்
ஈருலகிலும் ஈடேறுவர்.//

காக்கா கோபித்திக் கொள்ளாதிய கொஞ்சம் மாற்றி எழுதுறே

திட்டமிட்டு வீண் விரயம் செய்ய
கை தேர்ந்தவர்கள் நம்மவர்கள்.
நிம்மதியாய் இங்கையும் அங்கையும்
இருக்க விடாமல் வெற்றி கண்டவர்கள்

.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கடைசியாக வந்துட்டேன்,
கவியும் அதன் பின் டீலிங்கும் ரொம்ப நல்லாவேயிருக்கு.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் கவிவேந்தே! அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த நிமிடம் தான் நான் என் அறைக்குள் நுழைந்தேன்; காலையில் என் பின்னூட்டத்தை இட்டு விட்டுத் துபையில் எனக்கு நடந்த பாராட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குக் குழுமியிருந்த நூற்றுக் கணக்கான தமிழர்கள் முன்னிலையில் அதிரையில் பிறந்த அடியேன் துபாய்த் தமிழர்ச் சங்கமம் வழங்கிய மரியாதையும், நினவுப் பரிசுகளையும் பெற்றுக் கொண்டு ஏற்புரையும் வழங்கி விட்டு அங்குக் குழுமியிருந்த அத்தனை தமிழ் உள்ளங்களிலும் “கவியன்பன் கலாம்” என்றால் யார் என்பதைப் பதிய வைத்துவிட்ட பேரானந்தத்துடன் உங்களின் மறுமொழி காண மடிக்கணியைத் திறந்தேன்; விவாதத்துக்கு அழைக்கும் உங்கள் பணியைக் கண்டு திகைத்தேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

நான் புதுக்கவிதையை எழுதாதவனா? என் வலைத்தளத் தோட்டத்தில் உங்களின் பார்வைப் பாதம் பட்டு ஆங்குப் பதியமிடப்பட்டுள்ள கவிமலர்களில் மரபும் , புதுமையும் , ஹைக்கூவும் கலந்தே இருப்பதைக் கண்டுமா நான் புதுக்கவிதையைப் புரியாதவன் என்று புரிந்து வைத்துள்ளீர்கள்?

KALAM SHAICK ABDUL KADER said...

“கல்வி” என்னும் என் (இத்தளத்தின் கடைசி) கவிதையில் ஒரு வினா எழுப்பினேன்; அதற்குரிய விடையை உங்களிடம் எதிர்பார்த்துத்தான் உண்மையில் அக்கவிதையையே என் சொந்தத் தளத்தில் இட்ட போதிலும், வேண்டுமென்றே இத்தளத்தில் இட வேண்டும் என்று வலியுறுத்தி நின்றேன். அவ்வினாவிற்குரிய விடையை நீங்கள் கொடுத்திருந்தால் என்னிடம் என்ன இருக்கின்றது என்பதை உங்களால் தெளிவாக உணர்ந்துமிருப்பீர்கள்; இப்படி விவாதத்திற்கும் அழைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் அக்கவிதையை என் முகநூலின் இரு முகவரிகளிலும் இட்டுக் குறிப்பாக ஆங்குக் குழுமியிருக்கும் அதிகமான கவிஞர்களிடமும் அவ்வினாவை எழுப்பினேன்; அவர்களில் என்னுடன் இலண்டன் தமிழ் வானொலியில் தொடர்ந்து கவிதைகளைப் பதிந்து வரும் இலங்கை- சம்மாந்துறை அன்சார் என்னும் கவிஞரும், நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான என் அருமை நண்பர் அன்புடன் புகாரி என்னும் கனடாக் கவிஞரும் ஓரளவுக்கு ஊகித்து என் விடைக்கு அணமையில் நெருக்கமாக இருக்கின்ற அளல்வுக்கு இருவருமே அக்கவிதையிலிருந்து அவர்கட்கு விருப்பமான நான்கடிகளை மட்டும் சொல்லி - அவ்வரிகளே அவர்களை மிகவும் ஈர்த்தன என்றனர்; ஆம் அவ்வரிகட்குட்தான் என் வினாவுக்கான விடையும் இருந்தது என்பதால், இனிமேல் இதே சூட்சமத்தை- சூத்திரத்தை இன்ஷா அல்லாஹ் இனிமேல் அடியேன் வனைய போகும் பாக்களில் வைப்பேன் என்ற முடிவைக் கொடுத்து விட்டது அவர்களின் அப்பின்னூட்டங்கள். அதனடிப்படையில் தான், |அம்மா என்னும் அன்பை நேசி” என்னும் கவிதையும் அந்தச் சூட்சமத்தை- சூத்திரத்தை வைத்து (நான் கேட்ட அவ்வினாவின் கருவை வைத்து) வனைந்தேன்; எதிர்பார்த்தற்கும் மேலாக அக்கவிதை இன்று பதியப்பட்ட இடங்களிலெல்லாம் மிகுந்த வரவேற்பைப் பெற்று விட்டன! அல்-ஹம்துலில்லாஹ்!

KALAM SHAICK ABDUL KADER said...

குறிப்பு: இந்தக் கவிதையின் பாடுபொருளைக் கருவாக வைத்து என் சொந்த வலைத்தளத்திலும் -,முகநூலின் கவிதைப் போட்டியிலும் “தாயே” என்னும் தலைப்பில் எழுதினேன்; முழுக்க முழுக்க நீங்கள் விரும்பும் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட மரபை அறிந்தும் புதுக்கவிதையில் பேரும் புகழும் பெற்றுள்ளவர்கள் விரும்பும் அதே புதுக்கவிதையின் பாணியில் எழுதினேன். முகநூலின் கவிதைப் போட்டியிலும் வென்றது! அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும், அதே கருவை வைத்து நான் கண்டுகொண்ட- நீண்ட நாட்களாய் இப்படித்தான் அமைக்க வேண்டும் ஆவலுடன் காத்திருந்த அந்தச் சூத்திரத்தின்= சூட்சமத்தின் அடிப்படையில் அப்படியே ஒரே கருவை வைத்து இப்பொழுது “|அம்மா என்னும் அன்பை நேசி” என்னும் தலைப்பிட்டு அமைத்தேன். ஆகவே எனக்கும் அன்று 2010ல் எழுதி முகநூலின் கவிதைப் போட்டியில் வென்றப் புதுக்கவிதையும் படைக்கத் தெரியும்; இன்று அதிகமான உள்ளங்களை உருக வைத்த “ அம்மா என்னும் அன்பை நேசி” என்னும் தலைப்பில் இப்பாமலரில் ஒளித்து வைத்துள்ள “மூவிதழ்களும்” என்னும் சூத்திரத்தில்= சூட்சமத்தில் எண்சீர் கழிநெடிலடியின் விருத்தப்பாவும் இயற்றத் தெரியும் என்றிருக்கும் போதில், அடியேன் எதற்காக மரபா? புதுமையா என்றெல்லாம் விவாதக்களம் அமைக்க வேண்டும்?

KALAM SHAICK ABDUL KADER said...

இப்பட்டி மன்ற விடயத்தால், கல்லில் தலையை முட்டிக் கொள்ளும் வேலைக்கு நான் ஆயத்தமாகவில்லையே! என்னை இலங்கையிலிருந்து செயல்படும் சர்வதேச அளவிலான “தடாகம்” இலக்கிய வட்டம் நேர்காணல் செய்த நேரத்தில் இப்படிப்பட்ட வினாவும் என் முன்னே வைத்தனர்(நீங்களும் அப்பேட்டியைப் படித்து விட்டு என்னைப் பாரட்டியிருக்கின்றீர்கள்) அங்குச் சென்று பாருங்கள்; அதில் ஓரிடத்தில் கூட நான் புதுக்கவிதையின் எதிரி என்று சொல்லவில்லை; மேலும், எல்லாக் கவிதைகளும் உணவின் ஒவ்வொரு சுவைபும் வடிவமும் போலவே உள என்று தானே அழகான காட்டுடன் விடையளித்தேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

மேலும், என் கவிதைத் தொகுப்புக்குக் கருத்துரைக் கேட்டு இருபெரும் கவிஞர்கட்கு அனுப்பியிருந்தேன்; அதில் இருவருமே என் கவிதைத் தொகுப்பைப் படித்து விட்டு அவரவர்க்கு எந்த முறை விருப்பமோ அந்த முறையை விரும்பி என் தொகுப்பிலிருந்து அவரவர்க்கு விருப்பமானவற்றை மட்டும் சுட்டிக் காட்டி வாழ்த்துரை வழங்கியிருக்கின்றார்கள்

”இத்தொகுப்பில் மரபும், புதுமையுமாக (சலாட் போல)கலந்திருந்தாலும், யான் மரபுப்பாவை மட்டுமே விரும்புவேன்” என்றும் கூறி அத்தொகுப்பிலிருந்து தனக்கு விருப்பமான வெண்பாக்களைச் சுட்டிக் காட்டி எனக்குக் கருத்துரை வழங்கினார்கள் ஒருவர்.

“இத்தொகுப்பில் புதுக்கவிதைகளும் உள; நாட்டுப்புற பாடல் முறையில் “கடுதாசி’ என்னும் தலைப்பில் உள்ள பாடலும் உள்ளது; எனவே, எனக்கு விருப்பமான அப்புதுக்கவிதைகளையும் இந்நாட்டுப்புறப் பாடலையும் விரும்பி வாழ்த்துகிறேன்” என்றும் மற்றொருவர் வாழ்த்துரை வழங்கினார்.

KALAM SHAICK ABDUL KADER said...

இவற்றிற்கெல்லாம் மேலாக என் ஆசான், காப்பியக்கோ (என்னை அவர்களின் வாரிசு என்று பொதுமேடையில் அறிவித்த )இலங்கை ஜின்னா ஷரிஃப்தீன் வாப்பா அவர்கள் சென்ற வாரம் துபையில் அவர்கள் முன்னிலையில் யான் கவிதை வாசித்த பின்னர் என்னிடம் சொன்னார்கள், “ விரைவாக இன்ஷா அல்லாஹ் 26/04/13 அன்று உன் கவிதைத் தொகுப்பை காகிதத்தில் அச்சடித்துக் கொண்டு வா; என் அணிந்துரையை வழங்குகின்றேன்; காரணம், உன் கவிதைகள் மட்டுமே ஆழமான ஆளுமை உடையன” என்றார்கள்.

அவர்கள் என்பாலும் என் மரபுப்பாக்களின் பாலும் வைத்துள்ள விருப்பத்தை மனத்தினில் கொண்டு இப்பொழுதுள்ள என் உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் இன்ஷா அல்லாஹ் இப்பொழுது முதல் அவர்கள் விரும்பிய வண்ணம் பிழைகள் இல்லாப் பாக்களாகத் தெரிவு செய்து தொகுத்துக் கொண்டிருக்கின்றேன். அவர்களின் அணிந்துரை என்னும் ஆசி கிடைத்தல் யான் பெற்ற பேறென்பேன்; அல்ஹம்துலில்லாஹ்!

KALAM SHAICK ABDUL KADER said...

இத்தனை விளக்கங்கள் போதும் என்றே நினைக்கிறேன்; இத்துடன் வீணாக கற்பிக்கப்பட்ட அல்லது கற்பனைக்குள் உருவான குழப்பங்களும் விவாதங்களும் முற்றுப் பெறல் நலம் என்ற நன்னம்பிக்கையுடன் முடிக்கிறேன்.

குறிப்பு: என் உடல்நிலை, மருத்துவரின் ஆலோசனை மற்றும் துபையிலிருந்து வந்த பயணக்களைப்பு இவற்றை எல்லாம் மறுத்து/ மறந்து உங்களின் தூய அன்பை மட்டும் நாடியவனாக இந்த நடுநிசி நேரத்தில்(அறை நண்பர்கள் உறங்கிய பின்னரும் இருட்டில் இருந்து கொண்டு) தட்டச்சு செய்து இக்கடுதாசியை அனுப்புகிறேன். ஏற்பீராக; இதில் உண்டாகியிருக்கும் ஒற்றுப்பிழைகளையும் மன்னிப்பீராக!

;

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். என்ன அபு.இபு.காக்கா! கவிஞர் ஏற்புரை ஏற்றால் நிறைய நார்சா எனக்கு அள்ளித்தருவாங்க இப்பவெல்லாம் நார்சா வழங்குறத நிறுத்திட்டாங்களே! ஏன்னு கேட்டு எழுதுங்க காக்கா!புள்ள குட்டி காரன் நார்சா தந்த ரெண்டு வேள சாப்பாடு மிஞ்சும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அஸ்ஸலாமு அலைக்கும். என்ன அபு.இபு.காக்கா! கவிஞர் ஏற்புரை ஏற்றால் நிறைய நார்சா எனக்கு அள்ளித்தருவாங்க இப்பவெல்லாம் நார்சா வழங்குறத நிறுத்திட்டாங்களே! ஏன்னு கேட்டு எழுதுங்க காக்கா!புள்ள குட்டி காரன் நார்சா தந்த ரெண்டு வேள சாப்பாடு மிஞ்சும்!//

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ், கிரவ்னு...

இன்னும் பாயைச் சுருட்டவில்லை எங்கேயும் போயிடாதே(டா)ப்பா... நிச்சயம் இருக்கு ! :)

ஒரு விஷயம் காதோடு வச்சுக்க... : பொறுப்புகள் மாறின பள்ளியிவாசலில் பேரமெல்லாம் நடந்திருக்காம் ! எப்ப்பூடீ நார்சாவை தவறாமல் கொடுக்கலாம்னு !

அப்துல்மாலிக் said...

சேமிப்பின் அவசியத்தை பத்தி பத்தியா எழுதி போரடிக்காமல் நச்சுனு உச்சி மண்டையிலே குட்டியா மாதிரியான உணர்வு...

அதிரை.மெய்சா said...

சேமிப்பின் அவசியத்தை சிறப்பாக கவி வடித்து
பேணிப்பாய் நீயெழுதி பேதைமை போகச்செய்தாய்
நானிப்போ செவிமடுத்தேன் நீ தந்த வரிகளை சேமிப்பாய்.!

வாழ்த்துக்கள். நண்பனே.!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், காக்கா

சூடான சேமிப்பு விழிப்புணர்வு.

//இம்மையில் நன்மைகள்
மறுமைக்கான சேமிப்பு
உண்மையில் அதுவே
உயர்வுக்கானத் திட்டம்//

நிச்சயமாக.. காக்கா..

நம்முடைய திறன், படிப்பு, செல்வம், பதவி இவைகளுக்காக மனிதர்களால் தரப்படும் பாராட்டுக்கள் ஒருவித மனத் திருப்தியே தவிர, இவ்வுலக வாழ்வுக்கோ, மறுவுலக வாழ்வுக்கோ உதவாத சேமிப்பு.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
சேமிக்கச் சொன்னதை ஏற்று இங்கு ஒப்பமிட்ட அனைவருக்கும் நன்றியும் துஆவும்.  இந்தப் பதிவு என் நண்பன் ஜாகிர் எழுதிக்கேட்டு சில மாதங்களுக்கு முன் மலேசியாவின் ஏதோ ஓர் இடத்தில் வாசிக்கப்பட்ட ஒன்று.  அதிரை நிருபருக்காக ஆங்காங்கே சற்று மெறுகேற்றியிருந்தேன்.
கொடியசைந்ததும் காற்று வந்ததா; காற்று வந்ததும் கொடியசைந்ததா என்பது போல், கவிதை பதிந்ததும் கிரவுன் வந்தாரா; கிரவுன் வந்ததால் கவிதைப் பதியப்பட்டதா என்று வியக்கும் அளவுக்கு மிகவும் விரைவாக வந்து முதல் ஒப்பமிட்டது மதிப்பிற்குரிய கிரவுன்.  ரிலே ரேஸின் பட்டன்போல் முதலிலேயே கிரவுன் வந்து தந்துவிட்டதால் இலக்கும் எட்டப்பட்டுவிட்டது. நன்றி கிரவுன்.
“பதார்த்தத்தில் தூவப்பட்ட பாதாம் போல” என்னும் உவமையில் (கை தவறி?) கால் தவறி “பாதம்’ ஆனதைச் சொன்ன விதம் கிரவுனுக்கே கைவந்த பதம். குடித்த சுவை படித்ததிலேயே கிட்ட வைத்ததே இவரிடம் எனக்குப் பிடித்தது. 
 
நெஞ்சுக்கு நேராக தழுவும் ஆவல் என்னையும் தொற்றிக்கொண்டாலும் கிரவுன், சற்று பொறுங்கள் நான் சேமித்து வைத்திருக்கும் தொப்பையைச் சற்று செலவு செய்துவிட்டு வருகிறேன்.
 
“குளிரில் விடுபட்ட வார்த்தைகளை மறுபடியும் தேடி போர்வைக்குள் போர்த்திக்கொண்டேன்” இப்படியெல்லாம் எழுதினால், பின்னூட்டத்திற்கே பின்னூட்டம் எழுதாமல் என்ன செய்வது?
 
 

sabeer.abushahruk said...

மதிப்பிற்குரிய கவியன்பன்,
தங்களுக்குப் பிடித்த வரிகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. ஆனால், அதற்கான காரணமாக நீங்கள் சொல்லியிருப்பது நான் வருவித்தது அல்ல.
 
அன்பின் அப்துல் காதர்,
உன் ரசனையான கருத்தே நீ கவிஞனாவதற்கான அடையாளம்தான். உன் பாராட்டுக்கு நன்றி.  இருப்பினும், குர் ஆனை கவிதை வடிவம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.  குர் ஆன் இறைவேதம். அது மனிதர்கள் வகுத்த இலக்கண வரம்புகளுக்குள் கட்டுப்படாது. குர் ஆன் தனித்தன்மையது. ஆங்காங்கே சந்தங்கள் கிடைத்தால் மனித பகுப்புகளுக்குள் அடக்க முயல்வது அறியாமை.  குர் ஆனை வேறெந்த புத்தகத்தோடோ மொழி வடிவத்தோடோ பொறுத்தாதே.
 
ஜமால் காக்கா,
சேமிப்பை, தாராளம் என்னும் வார்த்தை கொண்டு விமரிசித்ததை ரசித்தேன். நன்றியும் துஆவும்.
 
அபு இபுறாகீம்,
சேமிப்பு வரிகளை ஏணிப்படிகள் என்று உயர்த்தியமைக்காக நன்றி.
 
Abdul Razik,
“நாம் சேர்த்து வைத்த
தேனடையை
இழந்துவிட்ட தேனீக்கள்”   - அழகான கற்பனை.  இதில் தொணிக்கும் ஏமாற்ற அசூகையைத் தவிர்க்க… இப்படி முடித்திருக்கலாம்:
 
கொண்டுபோக அனுமதித்த
கொட்டாத கொடைவள்ளல்கள்!
 
ஹமீது,
வெல்கம் பேக்.  வரிகளை மனத்தில் சேமித்தால் வாழ்க்கையில் வெற்றி விளையும்.  நன்றி.
 
 
 
 

sabeer.abushahruk said...

சகோ. புதுசுரபி,
தங்களின் முற்போக்கு எண்ணங்களை உசுப்பியிருக்கிறது சேமிப்பு.  இல்லையேல் இத்துணை உற்சாகமான பாராட்டு கிடைத்திருக்காது.  கற்றோர் வாழ்த்துவதே பேரின்பன். நன்றி.
 
Ibn abdulWaheed,
உஙகளுக்குப் பிடிக்கும் என்று தெரிந்தே எழுதிய வரிகள் அவை. நன்றி.
 
சகோ. NKM அப்துல் வாஹித் அண்ணாவியார்,
உங்கள் கருத்தை எதிர்பார்க்க வைக்கும் அளவுக்கு என் பதிவுகளுக்குக் கருத்திடும் தங்களுக்கு நன்றியும் துஆவும்
 
மருமகன் அப்துர்ரஹீம்,
நச்சென்று சொன்னால் மட்டுமே அது கவிதை. நசநசவென்று சொன்னால் அது கவிதை அல்ல. இப்படி எனக்கு ஒரு முறை சொன்னது தஙகளின் தந்தை அவர்கள்.  பாராட்டுக்கு நன்றியும் துஆவும்.
 
ஈனா ஆனா காக்கா,
கற்றோரிடமும் மூத்தோரிடமும் பாராட்டும் வாழ்த்தும் வாய்க்கப் பெறுவது எனக்கு பெரும் பேறு.  அதுவும் எனக்குப் பிடித்த கல்வியாளரும் சிந்தனையாளருமான தாங்கள் பாராட்டும்போதுதான் “ஓஹோ, நமக்கும் ஏதோ எழுத வருகிறது: என்கிற நம்பிக்கை வலுக்கிறது.  நன்றியும் துஆவும், காக்கா.
 
அலாவுதீன், அப்துல் மாலிக் மற்றும் எம் ஹெச் ஜே:  பாராட்டுக்கு நன்றியும் துஆவும்.
எல் எம் எஸ்:  மீள்வரவுக்கு வரவேற்பு.  தங்களைக் காணாமல் தேடியது எனக்காக மட்டுமல்ல; இத்தளத்தின்மூலமாகவும் இதற்கு முன்பதாகவும் தங்களுடன் நட்பாகிய அனைவரின் சார்பாகவும்தான்.  தொடர்ந்து இணைந்திருக்க அல்லாஹ் அருள்வானாக.
பாராட்டுக்கு நன்றியும் துஆவும்.
 
அதிரை மெய்சா,
அதிரை நிருபரில் உன் வரவிற்கு வரவேற்பு. அஹ்லன் வசஹ்லன். சேமிப்புப் பதிவை பாராட்டி நீ எழுதியிருக்கும் எதுகை மோனை நல்ல சந்தமாக இருக்கிறது.  நன்றி.
 
தம்பி தாஜுதீன், மிக்க நன்றி.  யாசிர் எங்கே?
நிறைவாக: கவியன்பன் அவர்களே. தங்களைப் பாராட்டிய மேடையிலாவது தாங்கள் கவிஞர்தான்/ புலவர்தான் என்று ஏற்றுக்கொண்டீர்களா?  தாங்கள் மென்மேலும் பேரும் புகழும் பெற்று நீடூழி வாழவும் நிறைய கவிதைகள், பாக்கள் இயற்றவும் என் துஆ.
 
வஸ்ஸலாம்.
 

KALAM SHAICK ABDUL KADER said...


\\நிறைவாக: கவியன்பன் அவர்களே. தங்களைப் பாராட்டிய மேடையிலாவது தாங்கள் கவிஞர்தான்/ புலவர்தான் என்று ஏற்றுக்கொண்டீர்களா? தாங்கள் மென்மேலும் பேரும் புகழும் பெற்று நீடூழி வாழவும் நிறைய கவிதைகள், பாக்கள் இயற்றவும் என் துஆ.\\

கவிவேந்தே! அங்கும் பட்டங்களும் புதிதாய்க் கிடைக்கப் பெற்றாலும், என் ஏற்புரையில் சொன்னதை ஈண்டுப் பதிவது பொருத்தம் என்பதாலும் உங்களின் வினாவுக்கு விடை என்பதாலும் அதை அப்படியே சொல்கிறேன்:

“அன்பானவர்களே! என்னை கவுரவித்து மரியாதை செய்த என்னை ஏற்றி விட்ட ஏணியாக இருக்கும் சங்கமம் தொலைக்காட்சி நிறுவனர் கலையன்பன் தந்தப் பட்டம் நட்சத்திர கவிஞர் என்பதாகட்டும், இங்கு அறிமுக உரையில் சொல்லப்பட்ட “யாப்புக் கவிஞர்- மூப்புக் கவிஞர்” என்ற பட்டங்களாகட்டும் எல்லாம் உங்களின் நாவின் வழியாக இறைவன் எனக்குத் தருகின்ற அருட்கொடைகள் என்றே கருதினாலும், எனக்கு மாணவர் பருவத்தில் கலைஞரின் வாயால் சொல்லப்பட்ட “கவியன்பன்” என்பதையே நிரந்தரமாக என் பெயருடன் இணைத்துக் கொள்கிறேன்; மற்றவைகளை என் இருதயத்துக்குள்ளே வைத்துக் கொள்கிறேன்;காரணம். அன்று மாணவர் பருவத்தில் கலைஞர் என்னை அவ்வண்ணம் அழைக்கும் முன்னர் என்னை “கவிஞர் கலாம்” என்றே அந்த மேடையில் (நான் அவரை பாராட்டிய கவிதையில் உள்ள சிலேடையைப் புகழ்ந்து) சொன்ன போதில், நான் சொன்னேன், “அய்யா நான் கவிஞன் அல்லன்; கவிதையை அன்பாய் நேசிப்பவன்” என்றதும் உடன் மாற்றி என்னை “கவியன்பன் கலாம்” என்றார்; அதனால் அன்றும் இன்றும் என்றும் அடியேன் கவியன்பனாய் இருக்கின்றேன்” என்றேன்.

ஆம். இங்குப் பின்னூட்டங்களிலும், “நச்” என்றிருந்தால் மட்டுமே கவிதை என்ற அங்கீகாரம் கிடைக்கின்றது; நச நசவென்றிருந்தால் கவிதை என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதும் அறிவேன்; அதேநேரத்தில் ரியாத் தமிழ்ச்சங்கம் உலகளாவிய அளவில் சுமார் 39 கவிஞர்கள் (என் ஆசானகள் உட்பட) கலந்து கொண்ட அப்போட்டியில் அடியேன் வனைந்தனுப்பிய “இயக்கமே வாழ்க்கை; வாழ்க்கையே இயக்கம்(movemen is life; life is movement) என்ற தலைப்பில் எழுசீர் விருத்தப்பா எழுதியதை அக்குழுவின் நடுவர்கள் என்னை ஒரு கவிஞர் என்ற அங்கீகாரத்துடன் ஆறுதல் பரிசும் (என் ஆசானுக்கும் ஆறுதல் பரிசு என்பதும் ஆறுதல்) அளித்தது ஏனோ? என்றும் அறிவேன்.

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Abushahruk,

Your excellent lines on Planning and Saving which are moving our minds.



Knowledge is a sign of power

Seclusion a sign of wisdom

Saving is a sign of smartness

Loving is a sign of humaneness


Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஒரு விஷயம் காதோடு வச்சுக்க... : பொறுப்புகள் மாறின பள்ளியிவாசலில் பேரமெல்லாம் நடந்திருக்காம் ! எப்ப்பூடீ நார்சாவை தவறாமல் கொடுக்கலாம்னு !//

காசு கொடுத்து நார்சா கொடுக்க ஆலோசனை பன்னுறவங்க. காசு இல்லாமல் கடிதம் கொடுக்க யோசிக்கிராங்கலாமே!

இப்பதான் புரிது எழுத்துக்கு மில்லியன் 1000 பவர் இருக்குதென்று.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு