Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று! நாளை! - 6 23

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2013 | , , , , , , ,

ஒரு அரசாங்க சமஸ்தானத்தில் வேலை  பார்த்த புலவரிடம் இன்னொருவர் “சமஸ்தானத்தில் வேலை  பார்க்கிறீரே ! எவ்வளவு சம்பளம்?” என்று விசாரித்தாராம். புலவரும் “ மாசம்பத்து “ என்று பதில் கூறினாராம்.மாசம்பத்து என்கிற சொல்லுக்கு மா அதாவது பெரிய என்றும் அதிகம் என்றும்  சம்பத்து என்பதற்கு பணம் என்றும் பொருள் கொள்ளலாம். மாசம் பத்து ரூபாய் மட்டுமே என்றும் பொருள் கொள்ளலாம். இதை இங்கு குறிப்பிடக் காரணம் சம்பத் என்றால் செல்வம், செல்வாக்கு, பணம் என்று பொருள்படும். இங்கு நாம் விவரிக்க இருக்கும் ஈ . வெ. கி. சம்பத் அவர்களும் நல்ல செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர்.   ஈ. வெ. கி. சம்பத் எனப்படும் ஈரோடு வெங்கட நாயகர் கிருஷ்ணசாமி சம்பத் (1926 - 1977) . இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன். சம்பத் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடர் கழகத்திலும் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம்  தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா,இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன்). ஈ.வெ. கி. சம்பத் என்கிற பெயர் தமிழக அரசியல் உலகில் இன்று மறக்கப் பட்டாலும் ஒரு காலத்தில் தமிழகத்தை ஒரு கலக்குக் கலக்கிய பெயர். இந்த வரலாற்றுத் தொடர் சம்பத் போன்ற ஒரு அரசியல் பண்பாளரைப் பற்றி எழுதப் படாவிட்டால் நிறைவு பெற்றதாக ஆகாது.

அவர் அண்ணா அவர்களுடன் தோளோடு தோள் நின்று கட்சி வளர்த்தவர். அன்றைய கால கட்டத்தில் சுயமரியாதை அல்லது திராவிட இயக்கங்கள் ஆகட்டும் எல்லாம் ஏழ்மையின் நிழலில் வாழ்ந்தவர்கள்தான். இன்று கோடீஸ்வரர்களின் பட்டியலில் பெயர்கள் இருப்பவர்கள் ஒரு காலத்தில் மனைவிக்கு ஐந்து ரூபாய் மணிஆர்டர் அனுப்ப வழி இல்லாமல் இருந்தவர்கள்தான். இற்றுப் போன செருப்பை கக்கத்தில் வைத்து நடந்தவர்கள் இன்று இன்னோவாகார்களில் வலம் வரலாம்.  ஆனால் சம்பத் பிறவிப் பணக்காரர். பொருள் படைத்த மனிதர். அந்தக் காலத்தில்     ஈரோட்டில் பிறந்தவர் சென்னையில் தங்கி எம். ஏ. படிப்பது சாதாரணமான விஷயமல்ல. படித்ததுடன் பண்பாளராகவும் வாழ்ந்தார்.

தி .மு.க என்பது ஆரம்பத்தில் கையில் காசு இல்லாமல் பெரியாரை விட்டும் பிரிந்து தத்தளித்த கட்சியே. ஆனால் பெரியாரின் அண்ணன் மகனாகிய சம்பத்தின்  பையிலும் கையிலும்  இருந்த பணம் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன் பட்டது. அதே போல் நடிப்பிசைப்புலவர் கே. ஆர். ராமசாமி     என்கிற நடிகர் நாடகங்கள் நடத்தி கட்சி வளர நிதியுதவிகள் செய்தார். இலட்சிய நடிகர் என்று பெயர் பெற்ற எஸ். எஸ். இராஜேந்திரனின் பங்களிப்பும் கணிசமானது ; மறக்க முடியாதது. 

ஆரம்ப காலங்களில் அண்ணாவும் சம்பத்தும் தங்களின் கரங்களால் சுவரொட்டிகள் ஒட்டுவார்களாம். சுவரொட்டி ஓட்டுவது கைக்கு எட்டாத தூரத்தில் ஓட்டவேண்டும். இல்லாவிட்டால் இப்போது மாடுகள் சுவரொட்டிகளைத் தின்பது போல் அன்று மாடுகள் மட்டுமல்ல  மனித மாடுகளும் கிழித்துவிடுவார்கள். எனவேதான் எட்டாத உயரத்தில் ஓட்ட வேண்டும். சம்பத் அவர்கள் குனிந்து கொள்ளவும் அண்ணா அவர் மீதேறி சுவரொட்டி ஒட்டுவதும் அண்ணா குனிந்து கொள்வதும் சம்பத் அவர் மீதேறி சுவரொட்டி ஒட்டுவதும் வைகறை வேளைகளில் வழக்கமான நிகழ்வுகள்.  

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து விஷயத்துக்குள் சென்றால் அண்ணாவை கை ரிக்ஷாவில் வைத்து சம்பத்தும் , சம்பத்தை கை ரிக்க்ஷாவில் வைத்து அண்ணாவும் இழுத்துச் சென்று சுவரொட்டிகள் ஒட்டிய நிகழ்ச்சிகளும் பிரச்சாரப் பயணங்களும் நிறையவே இருந்தன. 

சுவரொட்டி என்றதும் நினைவுக்கு வருபவை அந்த நாளைய சுவரொட்டிகளின் கவர்ச்சிமிகு அடுக்கு மொழி வாசகங்கள். எவ்வளவு நாகரிகமான வாசகங்கள் அன்றைய சுவரொட்டிகளில் சுயமரியாதை உணர்வுடன் ஒட்டப்பட்டன. இன்று போல் "வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்”  என்றெல்லாம் வக்கற்ற  சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை. "சென்று வா! புகழ் மொண்டு வா!" என்றெல்லாம் மொக்கையான சுவரொட்டிகள் ஓட்டப்படவில்லை. அன்றைய சுவரொட்டிகள் ஒரு வரலாற்றை சொல்லும் . உதாரணத்துக்கு சில :-

“ நாட்டு வாட்டம் போக்கிட நோட்டடித்தால் போதுமா?” – பண நோட்டுகளை அச்சடித்த போது 

“ காகிதப் பூ மணக்காது ! காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது “- ஆவடி காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு ,

“சாலை ஓரத்தில் வேலையற்றதுகள்; வேலையற்றவர்களின் நெஞ்சங்களில் விபரீத எண்ணங்கள் ! அரசே! இது ஆபத்தின் அறிகுறி! “- வேலை  இல்லாத் திண்டாட்டத்தை சுட்டிக் காட்ட   

“ கூலி உயர்வு கேட்டார் அத்தான் குண்டடி பட்டு செத்தார்”- துப்பாக்கி சூட்டில் ஒரு தொழிலாளி செத்ததற்கு, 

“ காவல்துறை அமைச்சர் கக்கா! மாணவர்கள் என்ன கொக்கா?”- இந்தி எதிர்ப்புப் போரின் போது 

இவற்றில் “காகிதப்பூ” என்கிற வார்த்தையைப் பார்க்கும்போது நினைவுக்கு வரும் மற்றொரு செய்தியை பகிராமல் இருக்க இயலாது. இந்த வார்த்தையை தலைப்பாக வைத்து கருணாநிதி ஒரு நாடகத்தை 1967 –ல் தேர்தல் நிதிக்காக நடத்தி அதில் தானே கதாநாயகனாக நடித்தார். இந்த நாடகத்தில் ஒரு காதல் பூவும் மலர்ந்தது. ஆம்! இந்த   நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர் பின்னாளில் அவரது வாழ்விலும் நாயகியானார். அவரே கருணாநிதியின் இன்னொரு மனைவியான திருமதி இராசாத்தி அம்மையார்.  காகிதப்பூவாக இருந்தாலும் அவரது இதயத்தில் மணம் வீசியவர். கருணாநிதியின் நாதஸ்வரத்தில் ஒலித்த மொழியே கனிமொழி என்கிற தனி மொழி. இவை பற்றி நிறைய பின்னர் பேசலாம்.  இப்போது திரு. சம்பத் அவர்களைப் பற்றி ,  1957 பாராளுமன்றத் தேர்தலில் தி மு க சார்பில் இரண்டுபேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஒருவர் நாமக்கல் தொகுதியிலிருந்து சம்பத் மற்றவர் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து தர்மலிங்கம் என்பவர். சொல்லின் செல்வர் என்று புகழப்பட்ட சம்பத் அவர்களின் மேடைப் பேச்சு கேட்பதற்கு இனிமையாக இருக்கும். யாரையும் மனம் நோகும்படிப் பேசமாட்டார். சொல்ல வந்ததை  கண்ணியமுடன் நயமாகப்        பேசுபவர். பொக்கிஷத்தில் உள்ள முத்துக் குவியலை அவிழ்த்து விட்டதைப் போல சரளமான ஒலி எழுப்பியும் தடங்கள் இல்லாமல் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். பொய்யை பொய் என்று சொல்லமாட்டார். உண்மைக்குப் புறம்பு என்பார். தோல்வி என்று சொல்ல மாட்டார். வெற்றி வாய்ப்பு இழந்தார் என்பார். பண்டித ஜவஹர்லால் நேருடன் இந்தி மொழி பற்றி பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக வாதாடிய வல்லமைக்கு சொந்தக்காரர்.   

திமுக'வின் ஆரம்ப காலங்களில் முடிதிருத்தும் கடைகளில், தேநீர் கடைகளில் , வெற்றிலை பாக்குக் கடைகளில், ‘ திராவிட நாடு திராவிடருக்கே’  என்கிற வாசகத்துடன் ஒரு படம் கண்ணாடி பிரேம் போட்டு தொங்கிக் கொண்டு இருக்கும். முதலில் அண்ணா அவருக்கு எதிர்ப் புறம்  சம்பத் படமும் இருக்கும். அதைத்தொடர்ந்து நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி நடராசன்,                  சத்யவாணி முத்து, சி. பி. சிற்றரசு, டி.கே  சீனிவாசன் ( இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்  டி. கே. எஸ். இளங்கோவனின் தந்தை) , என். எஸ். இளங்கோ, மதியழகன், ஆசைத்தம்பி, எஸ். எஸ். ராஜேந்திரன்      ஆகியோரின் படங்களும் இருக்கும். 

ஒரு கட்டத்தில் அதாவது 1962 பொதுத் தேர்தலுக்கு முன் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும் கருணாநிதி பொருளாளராகவும் இருந்தனர். சிறுக, சிறுக கட்சிக்குள் முனகல் சப்தம் வெளியில் கேட்க  ஆரம்பித்து விட்டது.  பாராளுமன்ற உறுப்பினராக சம்பத் அடிக்கடி டில்லியிலேயே தங்கி விட்டதால் கட்சியில் பிடிமானம் சற்று தளர்ந்து போனது மட்டுமல்லாமல் டில்லி அசோகா  ஓட்டலில் ஏதோ ஒன்று  அவரை தடுக்கி விட்டது. மாயமா, மந்திரமா, மனத் தடுமாற்றமா என்று புரியவில்லை. 

அறிஞர் அண்ணா என்று மேடைகளில் முழங்கிவந்த சம்பத் தோழர் அண்ணாத்துரை என்று பேச ஆரம்பித்தார். கட்சித்தலைவர்களும் நாடும் வியப்படைந்தனர். காரணம் தெரியாமல் விழித்தனர். கட்சிக்குள் தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தது.   நெடுஞ்செழியன் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டி இட்டார். யாரும் எதிர் பாராத நிலையில் சம்பத்  தானும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். கட்சியில் பிளவு வரும் நிலை வந்தது. நெடுஞ்செழியன் மற்றும் சம்பத் ஆகியோர் போட்டி இடப் போகின்றனர் என்கிற அறிவிப்பு வெளியிடப்போகும் நேரத்தில் நாடகத்தில் காட்சி மாறுவது போல் அண்ணா தான் போட்டி இடப் போவதாகச் சொன்னார். உடனே போட்டியிட்ட இருவரும் போட்டியில் இருந்து விலகினர் . இதனால் அந்த முறை அண்ணாவே பொதுச் செயலாளர் ஆனார். 

ஆனால் மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. நாளாக நாளாக விரிசல் அதிகமாகிக் கொண்டே போனது. மாயவரம்  பொதுக் குழுவுக்குப் பிறகு சம்பத் சில கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்ற வற்புறுத்தியபோது திரைப்படத்துறையில் இருப்பவர்களை குறிவைத்தே அந்த  தீர்மானங்கள் வர இருப்பதாக பேசப்பட்டது. பொருளாளரான கருணாநிதி கார் வாங்கவும், திரைப்படம் எடுக்கவும் கட்சி நிதியைப் பயன்படுத்தியதாக அரசால புரசலாக   பேசப்பட்டது. கொந்தளிப்பு நிறைந்த சூழலில் திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வேலூரில் கூடியது. அப்போது அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் எதிராக ஆறு தீர்மானங்களை சம்பத் குழுவினர் கொண்டுவர இருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கின. பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் குறைக்கப்படும். அவைத் தலைவருக்கு அதிக அதிகாரங்கள் தரப்படும். பொருளாளர் பதவி கணக்கர் பதவி போல மாற்றப்படும் என்றெல்லாம் பேசப்பட்டன.

சம்பத்தின் பேச்சும் போக்கும் அண்ணாவை அதிருப்தி அடையச் செய்தன. அதை எல்லோருக்கும் புரியவைக்கும் வகையில் திராவிட நாடு இதழில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற தலைப்பில் தொடர்கட்டுரை ஒன்றை எழுதினார். பெர்னார்ட் ஷா எழுதிய ஆப்பிள் கார்ட் என்ற கதையைத் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எழுதியிருந்தார். அந்தக் கதையில் வரும் போனார்ஜிஸ் என்ற பாத்திரத்தின் பெயரை புயலார் என்று மாற்றியிருந்தார். கதையில் வரும் மன்னரை புயலார் இளக்காரமாகப் பார்ப்பார், அவமதிப்பார், மமதையுடன் நடந்துகொள்வார். கதையில் வரும் மன்னர் அண்ணா என்றும் புயலார் என்பது சம்பத் என்றும் கட்சியினர் பேசத் தொடங்கினர்.

அண்ணாவின் பொடிவைத்த பேச்சுகள், குத்தல் நடை அனைத்தும் சம்பத்தைத் தாக்கும் வகையில் இருந்தன. ஆத்திரமடைந்த சம்பத், அண்ணாவுக்குப் பதில் கொடுக்கும் வகையில் அண்ணாவின் மன்னன் என்ற தலைப்பில் பதில் கட்டுரை ஒன்றை எழுதினார். அது, கண்ணதாசனின் தென்றல் இதழில் வெளியானது. அண்ணாவைப் போல அல்லாமல் சம்பத் நேரடி யுத்தத்தைத் தொடங்கியிருந்தார். சம்பத் – கருணாநிதி மோதல் என்பது சம்பத் – அண்ணா மோதலாக மாறியது. பத்திரிகைகளுக்கு அபார தீனி. அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் மோதல் முற்றிவிட்டது; விரைவில் திமுக உடைகிறது என்று எழுதினர்.

பிறகு சம்பத் எழுதிய அண்ணாவின் மன்னன் கட்டுரை பற்றி கட்சியின் பொதுக்குழுவில்  பேச்சு எழுந்தது. எல்லோரும் சம்பத்தைக் கண்டித்துப் பேச, அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் சம்பத். அதன்பிறகு பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு வழக்கு விவரங்களை செயற்குழுவில் தாக்கல் செய்தார் கருணாநிதி. கார் வாங்கியது, திரைப்படத் தயாரிப்பு ஆகியவற்றுக்குக் கட்சியின் நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை விளக்கும் வகையில் வங்கிக்கணக்கு புத்தகத்தையும்  தாக்கல் செய்தார் கருணாநிதி.

சம்பத்தின் ராஜினாமாவோடு பிரச்னைகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பற்றி அண்ணாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தனது பாணியில், ‘ காதில் போட்டிருந்த  கடுக்கன் காதை சற்றுப் புண்ணாக்கிவிட்டது அதனால் கழற்றி வைத்திருக்கிறேன். புண் ஆறியதும் எடுத்து மீண்டும் அணிந்து கொள்வேன் ‘ என்றார்.  ஆனால் புதிய புதிய பிரச்னைகளைக் கிளப்பினார் சம்பத்.  குறிப்பாக, பொதுக்கூட்டம் ஒன்றில் கவிஞர் கண்ணதாசன் தாக்கப்பட்டதை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் சம்பத். திடீரென பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் கருணாநிதி. சிக்கல்களை சீர்செய்யும் முயற்சியில் அண்ணா இறங்கினார். பிறகு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சம்பத். தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றார் கருணாநிதி.

உண்ணாவிரதம் முடிந்த கையோடு டெல்லி புறப்பட்டார் சம்பத். அசோகா வனத்தில் மாட்டிக் கொண்ட சீதை  போல அசோகா ஓட்டலில் நடந்த அதிசயத்தில் சம்பத் மாட்டிக் கொண்டார் என்று யூகங்கள் வந்தன.  அங்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின. சில நாள்களில் சென்னை திரும்பிய சம்பத், 9 ஏப்ரல் 1961 அன்று திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தனது முதல் பிளவைச் சந்தித்தது.

சம்பத்துடன் கண்ணதாசன், மதியழகன், இளங்கோ, ஆசைத்தம்பி ஆகியோரும் பிரிந்தனர். ஆனாலும் ஆசைத்தம்பியும் மதியழகனும் மீண்டும் திமுகவுக்குத் திரும்பிச் சென்றனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் காங்கிரசார் தலைகால் புரியாமல் மகிழ்ந்தனர். கட்சிகளை உடைக்கும் கலையில் ஒரு கட்டம் அரசியல் அரங்கில் அரங்கேறியது. 

திமுகவை விட்டு வெளியேறிய சில  தினங்களில் சம்பத்தின் புதிய கட்சி உருவாகிற்று. திராவிட நாடு என்று முழங்கிக் கொண்டிருந்த சம்பத் தமிழ் தேசியம் என்கிற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினார். திமுகவும் த தே க வும் ஒருவருக்கொருவர்  குற்றச்சாட்டுகளையும் வசவுகளையும் கக்கினார்கள். அப்போது 1962 பொதுத் தேர்தல் வந்தது. தென் சென்னை பாராளுமன்றத் தொகுதியில் சம்பத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி மு கவின் மற்றொரு சொல் வல்லோன் நாஞ்சில் மனோகரன் போட்டியிட்டார். நாஞ்சில் மனோகரன் ஏற்கனவே  நாகை பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். எனவே போட்டி கடுமையாக இருந்தது.  அப்போது சம்பத் பேசிய வார்த்தைகள் இன்றளவும் பலரால் பயன் படுத்தப் படுகிறது. தென் சென்னையில் தி மு க வுக்கு நல்ல ஆதரவு இருந்ததால் சம்பத் கூறினார், “ சிங்கத்தை   அதன் குகையிலேயே சந்திக்கிறேன்” என்றார். பத்திரிக்கைகள் இந்த தொகுதி பற்றிய  செய்திகளை பரபரப்பாக்கின. புளிய மரத்தடிகள் மக்கள் கூடிப் பேசும் அரசியல் அரங்குகளாயின. நல்ல  வேளை மருத்துவர் ஐயா அப்போது வளரவில்லை அதனால் மரங்கள் நிழல் தரும் அளவுக்கு வளர்ந்து இருந்தன. தேர்தல் முடிவுகள் வெளி வந்தன. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கச்  சென்ற சம்பத்,  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அன்றைய மாலைமுரசு பத்திரிகையில் இந்த தோல்வியே கார்டூனாக வந்தது. அதாவது குகைக்குள் நுழைந்த சம்பத்தை ஒரு சிங்கம் சதையையும் தோலையும் சாப்பிட்டுவிட்டு முள்ளை மட்டும் வெளியில் கொண்டு வந்து கக்கியது போன்ற     படம் வந்து பிரமாதப் படுத்தியது. இந்தத்  தோல்விக்குப் பிறகு சம்பத் வேறு எந்த தேர்தலிலும் போட்டி இட்டதாக தெரியவில்லை. 

சம்பத்துடன் திமுகவை விட்டு விலகிய பலர் மீண்டும் தி மு கவுக்கு திரும்பிவிட கண்ணதாசன் முதலிய சிலருடன் மட்டும் கை கோர்த்துக் கொண்டு சம்பத் தமிழ் தேசியக் கட்சிக்கு மூடுவிழா நடத்திவிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.    இப்படி பெரியாரின் அண்ணன் மகனாக , அண்ணாவின் நண்பராக அரசியல் செய்து புகழ் பெற்ற சம்பத் பெருந்தலைவர் காமராசரின் சீடரானார். தமிழ் தேசியக் கட்சியின் ஒரே சாதனை அதுவரை திருமணம் வேண்டாம் என்று இருந்த என். எஸ். இளங்கோவுக்கு திருமணம் செய்து வைத்ததுதான். கட்சி ஆரம்பித்த சமயம் ஏற்றி வைக்கப் பட்ட அந்தக் கட்சியின் கொடிகள் சாயம் வெளுத்துப் போய் இருந்ததை    மாற்றக் கூட அந்தக் கட்சியில் தொண்டர் பலம் இருக்கவில்லை.  

சம்பத்தும் கண்ணதாசனும் காங்கிரசில் சேர தருணம் பார்த்திருந்த சமயத்தில் கண்ணதாசன் இப்படி எழுதினார். 

"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி ! 
நான் சேரும் நாள் பார்க்க சொல்லடி" 

என்பதே அந்த வரிகள். காமராசரின் அம்மா பெயர் சிவகாமி என்பது ஊர் அறிந்தது. இதே போல் அரசியல் நிகழ்வுகளை பாடல்களில் புகுத்தி எழுதுவது கண்ணதாசனுக்கு   வழக்கம். 

இதே முறையில்தான்  1962ல் வெளியான ஒரு திரைப்படத்தின்  படப்பிடிப்பு 1961லேயே நடந்து வந்தது. அப்போதுதான் கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வை விட்டு விலகி (ஏப்ரல் 11, 1961) ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கி அதில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்களிலும் கட்டுரைகளிலும் தி.மு.க. தலைவர் அண்ணாதுரையை கடுமையாக தாக்கி வந்தார். அந்த நேரம் பார்த்து இயக்குனர் பீம்சிங், படித்தால் மட்டும் போதுமாவுக்காக, தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி பாடல் எழுத வேண்டும் என்று கேட்டபோது, கவிஞருக்கு அண்ணாதுரையை தாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து, உடனே விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினருடன் அமர்ந்து விட்டார்.

அவர் பாடல் வரிகளைச் சொல்லச் சொல்ல தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி  கதையைத் தழுவிய பாடல்தான் இது  என்று தயாரிப்பாளர்கள் எண்ணினார்கள்.  படம் வெளியான பின்புதான் கவிஞர் சொன்னார், அது அண்ணாதுரையை தாக்கி நான் எழுதியது என்று. அந்த வரிகள் இதுதான் :-

அண்ணன் காட்டிய வழியம்மா – இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா – என்
கையே என்னை அடித்ததம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் 
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்

அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை. 

இது மட்டுமல்ல . திமுக பெரிய கட்சி ; தமிழ் தேசியக் கட்சி சிறிய கட்சி என்கிற விமர்சனங்கள் வந்தபோது 

ஓதிய மரங்கள் பெருத்து இருந்தாலும் 
உத்திரமாகாது 
உருவத்தில் சிறியது கடுகானாலும் 
காரம்  போகாது – என்று எழுதினார். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
முத்துப் பேட்டை  P. பகுருதீன் .B.Sc;

23 Responses So Far:

Ebrahim Ansari said...

அன்பான நண்பர்களே! சகோதர சகோதரிகளே!

நண்பர் பகுருதீன் அவர்கள் மூலமான ஒரு கருத்தை அவர் சார்பில் பதிய விரும்புகிறேன்.

பொதுவாக அதிரை நிருபர் வலைத்தளம் திரைப் படப பாடல்களை வெளியிடுவது இல்லை. ஆனால் இந்தத்தொடர் ஒரு அரசியல் தொடர்புடைய தொடர். தமிழக அரசியலை திரைப்படங்களின் செல்வாக்கு எப்படி எல்லாம் ஆட்டிப் படைத்தது இன்றளவும் ஆட்டிப் படைக்கிறது என்பதை விவரிக்கும் தொடர் ஆகையால் மிக்க வருத்தத்துடன் வேறு வழி இன்றி அரசியல் தொடர்பு உடைய சில திரைப்படங்களில் வந்த பாடல்களை குறிப்பிட வேண்டி வருகிறது. தொடரின் இறுதியில் இவைபற்றிய சாடல்கள் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.

அன்பு வாசகர்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ள வெடி இந்த தன்னிலை விளக்கம் தரப்படுகிறது.

ஜசக் அல்லாஹ்.

Ebrahim Ansari said...

//அன்பு வாசகர்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ள வெடி இந்த தன்னிலை விளக்கம் தரப்படுகிறது.//

அன்பு வாசகர்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ள வேண்டி இந்த தன்னிலை விளக்கம் தரப்படுகிறது.

என்று படிக்க வேண்டுகிறேன். தட்டச்சுத் தவறுக்கு வருந்துகிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//புரிந்து கொள்ள வெடி இந்த தன்னிலை விளக்கம் தரப்படுகிறது.// அதானே பார்த்தேன்....முந்தைய‌ ப‌திவு போல் இந்த‌ ப‌திவுக்கும் இ.அ. காக்கா வெடி வைத்து ஆர‌ம்பித்து வைக்கிறார்க‌ளோ என‌ நென‌ச்சிக்கிட்டேன்.....

மேலே குறிப்பிட்டு சொல்ல‌ப்ப‌ட்ட‌ அக்கால கண்ணதாசனின் பாட‌ல் வ‌ரிக‌ள் ஏதோ இக்கால‌ க‌விக்காக்காவின் க‌வி வ‌ரிக‌ள் போல் தான் உள்ள‌து. இதில் ஆபாச‌, இறைந‌ம்பிக்கையை த‌க‌ர்த்தெறியும் வார்த்தைப்பிர‌யோக‌ங்க‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வே இல்லை. இவ்ளோவ் அட்டூழிய‌ங்க‌ள் ப‌ண்ணிப்புட்டுத்தான் இக்கால‌ வ‌யோதிக‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் அப்பாவியாய் விலையுய‌ர் வாக‌ன‌ங்க‌ளில் வ‌ல‌ம் வ‌ருகிறார்க‌ளோ என‌ எண்ண‌த்தோன்றுகிற‌து. ந‌ல்ல‌ ஒச‌த்தியான‌ அக்கால‌ அர‌சிய‌லும், அது ப‌ற்றிய‌ அழ‌கான‌ வ‌ருண‌னையும் இவ்வாக்காம். பாராட்டுக்க‌ள்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கறுப்பு செவப்பு பக்கமிருந்தாலே இந்தமாதிரியான தில்லாலங்கடி பிறவிக் குணமாக மாறிடுமோ !?

தாத்தா என்னமா சீன் போட்டிருக்காரு அப்பவே !

அறியத் தவறிய வரலாற்று குறிப்புகளோடு அவர்கள் எழுதிய 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' மற்றும் 'அண்ணாவின் மன்னன்' என்ற தொடர்களையும் மிஞ்சும் அழகிய எழுத்தோடை இந்த தொடர் இது !

ஆக, சினிமாவை வைத்து இனிமா கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ibrahim said...

மு சே முனா கண்ணதாசனின் வனவாசத்தை படித்தீர் களானால் கவிஞரும் கலைஞரும் அடித்த கூத்துக்களை அப்பட்டமாக வெட்டவெளிச்சமாக சொல்லி இருப்பார் கண்ணதாசன் கண்ணதாசன் பிறந்த தேதி ஜூன் 24

sabeer.abushahruk said...

பாடப்புத்தகங்களில் இத்துணை சுவாரஸ்யமாக வரலாற்றுப் பாடங்கள் சொல்லித்தரப்படுவதில்லையே ஏன்?  வாத்தியாரோ பெற்றோரோ படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாமலேயே தானாகவே படிக்க ஆர்வம் மேலிடுகிறதே அதெப்படி?
 
இசையோ குரலோ கலக்காதவரை எந்த எழுத்து வடிவத்தையும் திரைப்படப் பாடல்களாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  எனவே, அன்சாரி காக்கா சங்கடத்தோடு விளக்கம் தரவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி கவிஞர் சபீர் அவர்கள் சொல்வது

//இசையோ குரலோ கலக்காதவரை எந்த எழுத்து வடிவத்தையும் திரைப்படப் பாடல்களாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. எனவே, அன்சாரி காக்கா சங்கடத்தோடு விளக்கம் தரவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.//

அப்போ புகுந்து விளையாட வேண்டியதுதான். தேவைக்கேற்றபடி பரிமாறப்படும்.

அதிரை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி டூரிங்க் டாக்கீஸில் அடுத்து திரையிட இருப்பது

"ஓடி விளையாடு தாத்தா "

இன்றைய தாத்தாவின் அன்றைய ஆரம்ப காலம் தொட்டு விளையாட்டுக்கள் விபரீதங்கள் நிறைந்த சண்டைக் காட்சிகள் நிறைந்த குடும்ப(ங்களின்) சித்திரம்.

காலம் , கட்டணம், கண்டிஷன் வழக்கம்போல். காணத்தவறாதீர்கள்.

Ebrahim Ansari said...

//ஓதிய மரங்கள் பெருத்து இருந்தாலும்
உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும்
காரம் போகாது – என்று எழுதினார். //

இந்தப் பாடலின் தொடர்ச்சி.

பழிப்பதனாலே தெளிவுள்ள மனது
பாழ்பட்டுப் போகாது
பாதையைவிட்டு விலகிய கால்கள்
ஊர் போய்ச் சேராது
காற்றைக் கையில் பிடித்தவன் இல்லை
தூற்றித் தூற்றி வாழ்ந்தவன் இல்லை.
ஓஹோ ஓஹோ மனிதர்களே!
ஒடுவதேங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கிப்
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள். - கண்ணதாசன்.

இது முழுக்க முழுக்க அன்றைய அரசியல் வரணம் அடிக்கப் பட்ட பாடல்.

மேலும்

அடிப்படையின்றி கட்டிய மாளிகை
காற்றுக்கு நிக்காது ( அதாவது திராவிடநாடு கொள்கை)
அழகாய் இருக்கும் காஞ்சிபுரம் புடவை ( அண்ணாதான்)
சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன்
வாழ்க்கை நிரந்தரமாகாது ( எம்ஜியாரை)
விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல்
வெளிச்சம் கிடைக்காது. - கண்ணதாசன்.

அதிரைக்காரன் said...

1) முன்னாள் மத்திய அமைச்சர் E.V.K.S. இளங்கோவன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரல்லர். கடந்த தேர்தலில் திமுகவின் உள்ளடிவேலையால் கூட்டணியிலிருந்தபோதும் தோற்கடிப்பட்டார். இதனாலேயே அவ்வப்போது திமுகவை சீண்டிக்கொண்டிருக்கிறார்.தமிழக காங்கிரஸை சாமான்யர்களிடம் கொண்டு சென்றதில் திரு.E.V.K.S. இளங்கோவனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாவைக் கட்டுப்படுத்தி, திமுகவுடன் ஒத்தூதி இருந்தால் இன்றும் மத்திய அமைச்சராக இருந்திருப்பார்.

2) திமுகவிடம் நிரந்தரமாக முஸ்லிம்களை ஒப்படைத்த கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் - திமுகவுடன் ஏன் அவ்வளவு நெருக்கமாக இருந்தார்? அப்போதைய காரணங்கள் நியாயமானதாக இருந்திருப்பினும், பின்னாட்களில் முஸ்லிம்லீக் தலைவர்களாக இருந்தவர்களும் திமுக ஒதுக்கும் ஓரிரு இருக்கைகளுக்காகவோ அல்லது இதயத்தில் கிடைக்கும் இடத்திற்காகவோ திமுகவின் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தது ஏன்? என்பது குறித்து எழுதுங்கள்.

தமிழக அரசியலைப் புரட்டிப்போட்ட திராவிட கட்சிகளின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் வரலாற்றுத் தொடர். 1980-களின்போது அதிரையில் கொடிகட்டிப்பறந்த திமுக யுகத்திற்கே அழைத்துச் செல்கிறது. சுவாரஸ்யமான எழுத்து.

Anonymous said...

அஸ்ஸலாமு அல்லைக்கும் [வரஹ்]

//அண்ணா குனிந்து கொள்ள அவர் மேல் சம்பத் ஏறி கைக்கு எட்டாத உயரத்தில் சுவரொட்டி ஒட்ட்னார். அதுபோல் சம்பத் குனிந்து கொள்ள அண்ணாவும் கைக்கு எட்டாத உயரத்தில் சுவரொட்டி ஓட்டினார்//

இப்படி இரு தலைவர்களும் மாறி 'மாறி 'கைக்கு எட்டாத' உயரத்தில் ஓட்டியதால்தான் இன்றைய தி.மு க..வின் 'சம்பத்' அவர்கள் 'கைக்கு' எட்டாமல்' போனதோ?!

'சரித்திரம் திரும்பத் திரும்ப நிகழ்கிறது- ['History Repeats itself.] இவர்கள் விசயத்தில் இன்றைய' அறுவடை 'திசை' மாறிப்போனது ஏன்?

பெரியாரும் அண்ணாவும் என்னதான் சுயமரியாதை, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தும் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவும் எருமை மாட்டின் மேல் பெய்த மழையாக வீன்போனது'

இதற்க்கு ஒரு எடுதுக்காட்டு "வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்' 'இது சுயமரியாதை-பகுத்தறிவு, இரண்டையும் விற்று காசு பார்க்கும் கொள்கை. ''வாழ்த்த வயதில்லை அதனால் வாழ்த்தவில்லை' 'என்ற போஸ்டர் ஓட்டினால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் அதை செய்யவில்லை.

சம்பத்தும் கண்ணதாசனும் தி.மு.க.வை விட்டு பிரிந்த பின் கண்ணதாசன் அண்ணாவுக்கு எழுதிய இன்னொரு பாடல் ''எட்டு அடுக்கு மாளிகையில் ஏற்றி ஏற்றி வைய்த்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி வேறுபட்டு நின்றானடி ''என்ற காதலனின் பிரிவை தாங்க முடியாத காதலி கண்ணீர் துளிகளை சிந்தி பாடியது போன்ற ஒரு நிறைந்த இனியபாடல். இது கண்ணதாசனின் ஸ்டையில்.//

மொத்தத்தில் எந்த விருப்பும் வெறுப்பும் இன்றி கடந்த காலத்தின் பாதையில் தடுமாற்றம் இன்றி நம்மை அழைத்து செல்லும் முத்தப்பேட்டை ஜனாப் அவரகளின் எழுத்து நடை ஒரு சிற்றோடையின் இனிய சலசலப்பை காதில் ஊட்டுகிறது கண்ணில் காட்டுகிறது கருத்தில் மாட்டுகிறது. மீண்டும் சந்திப்போம்

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.

Anonymous said...

மேல் காணும் கட்டுரைக்கு நான் எழுதிய முந்தைய commentil முத்துபேட்டை ஜனாப் பகுருதீன் என்பதற்கு பதிலாக ''முத்துப்பேட்டை'ஜனாப்' என்று மட்டும் இருக்கிறது. இது தவறு. தயவு செய்து இதை' முத்துப்பேட்டை ஜனாப் பகுருதீன்' என்று மாற்றி படிக்கவும்

S.முஹம்மது பாருக்அதிராம்பட்டினம்.

Yasir said...

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அரசியல் வரலாற்று தகவல்கள்..சுவைப்பட இன்று நடப்பதுபோல் சூடாகத் தரும் நானா முத்துப் பேட்டை P. பகுருதீன் .B.Sc அவர்களுக்கு வாழ்த்துக்களும் துவாக்களும்

அதிரைக்காரன் said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அரசியலில் மட்டுமல்ல சொந்த வாழ்வையும் திரைப்படப் பாடல்களில் கலந்து எழுதுவதும் கண்ணதாசனின் பழக்கம்.

"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான வுலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் ஸ்ரீநிவாசன் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால்.

சம்பத் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு
“காலத்தை மாற்றினான்
கட்சியை மாற்றினான்
கோலத்தை மாற்றினான்
கொள்கையை மாற்றினான் – ஆனால்
மனிதன் மாறவில்லை ” என்று எழுதினார்.

அண்ணாத்துரை அமெரிக்காவில் புற்று நோய்க்கு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பி வந்த போது “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா?“

கருணாநிதியை எதிர்த்து வந்த கண்ணதாசன் எம்ஜியார் திமுகவில் இருந்து விலகியபின் கருணாநிதி மீது ஊழல பட்டியல் கொடுத்த போது எழுதியது .

"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள்.

காமராசருக்கு மக்கள் ஆதரவு திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '

எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன்.

எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்

" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன்” என்றெல்லாம் எழுதினார்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
அதிரைக்காரன் said...
This comment has been removed by the author.
Unknown said...

தமிழக அரசியல் வரலாற்றை ஒரு தெளிந்த நீரோடைபோல தந்து கொண்டு இருக்கின்றீர்கள்.

இன்றைய சட்ட சபையை அலங்கரித்து கொன்றிருக்கும் ஏதாவது ஒரு M.L.A. இடம் போய் தமிழக அரசியல் வரலாற்றைப்பற்றிக்கேட்டால் , இப்படி ஒரு
புள்ளி விவரோத்தொடு தரமுடியுமா ?

100 க்கு 0 மார்க்குதான் போட முடியும்.

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரசியல் அறிய அரிய தொகுப்பு!

Ebrahim Ansari said...

சகோதரர் அதிரைக்காரன் அவர்களும் கவிஞர் சபீர் அவர்களும் வணக்கம்/வழிபாடு பற்றி இந்தப் பதிவில் விவாதிப்பது தொடர்பாக நண்பர் பகுருதீன் தனது புருவத்தை உயர்த்துகிறார். வேறொரு பதிவு தொடர்பாக விவாதிக்க வேண்டியது இந்தப் பதிவின் கருத்தாக தவறாக வந்துவிட்டதா என்று விளக்கம் தர கேட்டுக் கொள்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நீதிக்கட்சி, சுயமரியாதைக்கட்சி, பாரம்பரிய திராவிடக்கொள்கை என பல இடங்களில் வீராப்பு பேசி விட்டு தன் மகன் சென்னையின் மேயராக ஆக்கப்பட்ட பின் சென்னை மாநாகராட்சிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்திலும், மனுக்களிலும் "வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள்" என்று அச்சிட்டு அல்லது எழுதப்பட்டு தான் அனுப்பப்பட வேண்டும் என்ற கட்டாய விதியை அமல்படுத்தி இறைவன் ஒருவனை வணங்கும் கோடான கோடி மக்களின் உள்ளங்களை சுழிக்க வைத்தவர் தான் இந்த மு.க.

அதற்கப்புறம் பிடித்த சனி இன்னும் ஆட்டிக்கொண்டு தான் இருக்கிறது பல்லாயிரக்கணக்கான கோடிகள் கைகளில் புரண்ட பொழுதிலும்....

sabeer.abushahruk said...

காக்கா,
 
மன்னிக்கவும், என் கருத்துகளை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.  நானும் கவனித்தேன். எனது மற்றும் அதிரைக்காரனின் கருத்துகளில் மைக்கைத் தவிர பதிவுக்கு தொடர்பாக எந்த வார்த்தையும் இல்லை. 
 
அதிரைக்காரனின் கூட்டணி சகவாசம் சரியில்லை, என்ன செய்ய காக்கா.  
 
சபாநாயகர் பகுருதீன் காக்காவிடம் இதைச் சொல்லி மன்னித்துவிடும்படி பணிவன்புடன் வேண்டிவிரும்பி அன்பொழுக, ஆரவாரமின்றி, அழகுத்தமிழில் கேட்டுக்கொண்டதாக தாங்கள் அறிவித்துவிடுங்கள்.  நன்றி சொல்லி அமர்கிறேன்.
 

அதிரைக்காரன் said...

சகோ.S.முஹம்மது ஃபாரூக் அவர்களின் பின்னூட்டத்தில் வணக்கம் குறித்து எழுதப்பட்டிருந்தது தொடர்பாகவே என் கருத்தை வைத்தேன். பதிவுக்கு தொடர்பற்றது என்று பதிவர் கருதுவதால் என் கருத்தை நீக்கிவிட்டேன். நன்றி.

சபீர் காக்கா...:))

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு