Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிரியமில்லா பிரிவுகள்! 35

அதிரைநிருபர் | June 09, 2013 | , , , ,

படித்த பள்ளியையும், ஆசிரியப் பெருமக்களையும், பள்ளி கால நட்பு வட்டாரத்தையும் இறுதித் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குப் பின் மேற்படிப்பிற்காக வேறொரு பள்ளி/வேறொரு ஊருக்கு புறப்பட்டுச் செல்லுதல் என்பது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

ஓரளவு கற்ற பின் தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தனக்கும், உடன் பிறந்தோருக்கும் திருமண காரியங்கள் நடந்தேறவும்வீட்டுத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் பாஸ்போர்ட் எடுத்து அயல்நாடு செல்ல விசா வந்து பின் புறப்பட்டுச் செல்ல இருக்கும் தேதியில் அந்த பரிதாபமான உள்ளம் படும் பாடு அது ஒரு பிரியமில்லா பிரிவு.


வியாபார, வணிக நோக்கத்திற்காகவோ அல்லது வாழ்வாதாரத் தேவைகளுக்-காகவோ பாசமிக்க பெற்றோர், அன்பு மனைவி, ஆசைக் குழந்தைகளை கொஞ்ச காலம் விட்டுப் பிரிந்து தொலை தூரங்கள் கிழம்பிச் செல்வது ஒரு பிரியமில்லா பிரிவு.

ஒரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து விட்டு வேறு வேலை காரணமாகவோ அல்லது சொந்த தொழில் தொடங்கும் எண்ணத்திலோ அந்த நிறுவனத்தின் பணியையும், நட்பு வட்டாரத்தின் நேரடி தொடர்புகளையும் முடித்துக் கொண்டு ராஜினாமா செய்து விட்டு புறப்படுவது வாழ்வின் வசந்தத்திற்காக புறப்பட்டாலும் அது ஒரு பிரியமில்லா பிரிவு.

புனித பயணங்கள் மேற்கொண்டு உள்ளத்தில் தினந்தோறும் நிழலாடும் அந்த புனித நகரங்களான மக்கமாநகரம், மதீனமாநகரத்தில் சில நாட்கள் தங்கிவல்ல இறையோனை அழுது, தொழுது வணங்கி நல்ல பல அமல்கள் செய்து வரையறுக்கப்பட்ட காலம் முடிந்ததும் அப்புனித பூமியை விட்டு நகரும் சமயம் இனி இன்னொரு முறை இத்தலங்களை வந்து தரிசிக்க இறைவன் நாட்டம் உண்டோ? இல்லையோ? என உள்ளத்துக்குள் நினைத்துக் கொண்டு கண்கள் பனித்து உள்ளத்தை பரவசப்படுத்தி கரையவைக்கும் பிரிவு ஒரு பிரியமில்லா பிரிவு.

ஊரில் மிச்சம் மீதியாய், சொச்சமாய் இருக்கும் வீட்டின் மூத்த, வயோதிக சொந்தங்களை விட்டு காலத்தின் சூழ்ச்சியில் பிரிவது ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

மரணித்த சொந்த பந்தங்களின் ஜனாஸாவை முறையே குளிப்பாட்டி கஃபனிட்டு இறுதியாய் முகத்தை மட்டும் கொஞ்சம் திறந்து வைத்து உறவினர்கள் கடைசியாய் கண்ணீர் மல்க அந்த ஜனாஸாவை பார்த்து பிரியாவிடை கொடுத்தனுப்புவது ஒரு பிரியமில்லா பிரிவு. (பிரியப்பட்டாலும், பிரியப்படா விட்டாலும் ஒவ்வொரு ஆன்மாவும் இந்த இறுதிப் பயணத்தை மேற்கொண்டே ஆக வேண்டியுள்ளது).

தன் வீட்டு பிள்ளைச்செல்வங்களை கொஞ்ச காலம் வீட்டினர்களுடன் இருந்து படிக்க வைத்து பிறகு பெரியவனாக ஆன பின் மேற்படிப்பிற்காக அவனை எங்கேனும் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்க அனுப்பி வைப்பது ஒரு பிரியமில்லா பிரிவு.

அயல் நாடுகளில் தனிமையில் இருப்பவர்களும், குடும்பத்துடன் இருந்து வருபவர்களும் தாயகம் புறப்பட்டு சென்று குறிப்பிட்ட காலம் தான் பிறந்து, வளர்ந்து ஆளான ஊரில் சொந்த பந்தங்களுடன் சுகமாய் இருந்து விட்டு பிறகு காலச் சூழலில் அவர்களை விட்டு பிரிந்து புறப்பட்டு செல்வது ஒரு பிரியமில்லா பிரிவு.

நமதூரில் மார்க்கத்திற்கு மாறாக பெரும்பாலும் திருமணம் முடித்து ஆண் மகன் சொந்தத்திற்குள்ளேயே, ஊருக்குள்ளேயே என்ற ஒரு வரம்பு வட்டத்திற்குள் இருந்தாலும் திருமணம் முடித்து பிறந்து, வளர்ந்த வீட்டை விட்டு அவன் மனைவி வீடு செல்வது என்பது அவனை வளர்த்து ஆளாக்கிய அந்த பெற்றோர்களுக்கும், அவனுக்கும் காலத்தின் கேட்டால் ஒரு பிரியமில்லா பிரிவு.

உலகில் அது எந்த இடமாக இருந்தாலும் நாம் கொஞ்ச காலம் தன் வசிப்பிடத்தை அங்கு ஏற்படுத்தி வாழ்ந்து வந்த அந்த இடங்களை, பழக்கப்பட்ட அந்த சுற்றுப்புற சூழலை விட்டு ஏதேனும் காரணத்தால் பிரிய வேண்டி இருப்பது ஒரு பிரியமில்லா பிரிவு.

ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதத்தை பிறை நோக்கி சீரும், சிறப்புடன் எதிர்கொண்டு அதனை நல்ல முறையில் வரவேற்று அமல்கள் பலசெய்து வல்லோனை அவன் விரும்பும் வழியில் வழிபட்டு தத்தமது ஆன்மாக்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மறுமைக் கணக்கில் அதிக வரவுகளை நன்கு ஏற்படுத்திக் கொண்டு பிறகு 29ம் நாள் அல்லது 30ம் நாள் நம்மை எல்லாம் உடலாலும், உள்ளத்தாலும் குதூகலப்படுத்திய அப்புனித ரமழான் அடுத்த வருடம் நாம் அதை இதே சங்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்புகள் இருக்குமோ? இல்லையோ? என எவருக்கும் விடை தெரியாமல் விடை பெற்றுச் செல்வது நம் அனைவருக்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

வியாபார, வர்த்தகம் மூலம் லாபங்கள் பல ஈட்டி சுகபோகத்தில் இருந்து வாழ்ந்து வந்த மனிதன் ஏதேனும் காலச் சூழ்நிலையால் அதே வியாபாரத்தில் பெரும் நஷ்டமடைந்து அவனுடைய சுகபோகங்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அல்லது மொத்தமாய் இழக்க நேரிடின் அதன் பிரிவு அவனுக்கு ஒரு பிரியமில்லா பிரிவு.

இல்லற வாழ்க்கை இறையோனின் கிருபையால் நல்லறமாய் நடந்தேறிக் கொண்டிருக்கும் பொழுது வாழ்வில் குறுக்கிடும் ஏதேனும் சிறு, சிறுபிணக்குகளால், சஞ்சலங்களால் பக்குவமற்ற குடும்ப பெரியவர்கள் சிலரின் பயனற்ற அறிவுரையாலும், சமயோசித புத்தியின்மையாலும், குறிப்பாக மார்க்க தெளிவின்மையாலும் சில நல்ல தம்பதிகள் கூட நிரந்தரமாய் விவாகரத்து மூலம் பிள்ளைகள் பெற்ற பின்பும் ஒருவருக்கொருவர் பிரிந்து செல்வது இருவருக்கும் நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு (எந்த பிள்ளையும் புதிய வாப்பா, உம்மாவை அந்தளவுக்கு உள்ளத்திற்குள் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை).

நல்ல குடும்பங்களில் குடும்ப நல விரும்பிகள் போல் போலி வேசமிட்டு வரும் சில சைத்தான்களின் குறுக்கீட்டாலும், தவறான வழி காட்டுதலாலும் நிலம், சொத்து, வியாபார கொடுக்கல், வாங்கல், திருமண சம்மந்தம் என சில உலகாதாய சில்லரை சமாச்சாரங்களுக்காக உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்குள் கூட ஒரு பெரும் பிணக்கை, சச்சரவை ஏற்படுத்தி அந்தப் பிரிவினையினூடே எவருக்கேனும் ஒருவருக்கு மரணம் சம்பவித்தாலும் கூட அவன்/அவள் வீட்டுப்படி ஏறி மையத்தின் முகம் கூட பார்க்கமாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்ய வைத்து தேவையற்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி இரு குடும்பங்களுக்கும் ஹயாத்திற்கும், மவுத்திற்கும், எதற்கும் கிடையாது என வீராவேசம் பேசி பிரிவது நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு.

செல்லமாய் வீட்டில் பிள்ளை போல் வளர்ந்த மாடு, கன்று, கோழி,குஞ்சு போன்ற வீட்டு பிராணிகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாலோ அல்லது காணாமல் போய் விட்டாலோ அதை சீரும், சிறப்புடன் தினம், தினம் கவனித்து வளர்த்து வந்த வீட்டினர்களுக்கு வாயில்லா ஜீவனாக அது இருந்த போதிலும் அதன் பிரிவு நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு.

என்ன தான் நாம் உடலாலும், உள்ளத்தாலும் பலசாலிகளாக இருந்து வந்தாலும் அல்லது அது போல் நடித்துக் கொண்டாலும் சில எதிர்பாராத திடீர் பிரிவுகள் எம்மை நிலைகுலைய வைத்து உடலாலும், உள்ளத்தாலும் பலஹீனமடைய வைத்து அவை பால் போன்ற கண்களில் பரிசல் போல் மிதக்கும் கருவிழிகளுடன் சிவக்கச் செய்து கண்ணீர் மூலம் பகிரங்கப்படுத்தி விடும் உள்ளத்தை உலுக்கிய அவ்வேதனைகளை.

இப்படி பிரிவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். குறிப்பாக, நம்மூரில் மற்ற ஊர்களைக் காட்டிலும், பிற மதத்தினர்களைக் காட்டிலும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அடிக்கடி நம் வாழ்வில் விரும்பியோ, விரும்பாமலோ சம்பவிக்கும் வேதனை தரும் இது போன்ற பிரிவுகள் அதிகமே. இதில் விடுபட்ட உங்கள் வாழ்வில் சங்கடத்தை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பல பிரிவுகளை நீங்கள் பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம்.

வஸ்ஸலாம்.

பிரியமில்லா பிரிவுகள் முடியவில்லை இன்னும்...!

மு.செ.மு. நெய்னா முஹம்மது

35 Responses So Far:

Unknown said...

பிரியமில்லா பிரிவுகளில் மூன்று வகை :

1. :வாழ்க்கையில் வந்தே தீருவது, யாரும் இதற்க்கு தடையாக இருக்க `````முடியாது இது ஒரு வகை..

2. நாமாக நம்முடைய அறிவீனத்தின் காரணமாகவோ, அல்லது குடும்ப `````சூழ்நிலையோ ஏற்ப்படுத்துவது இது ஒரு வகை.

3. நம் வாழ்க்கையின் நாம் எதிர்பாராத நட்புகள் நம்மோடு அங்கமாய் `````கலந்துவிட்ட பிறகு, அந்த சூழ்நிலையில் , நட்புக்கிடையில் ஏற்படும் `````பிரிவு.

இந்த மூன்று சூழ்நிலைகளே பிரியமில்லா பிரிவுகள் ஏற்படக் காரணம்.

adiraimansoor said...

முனா.செனா.முனாவின்
"பிரியமில்லா பிரிவின்"
துய‌ர‌ம் ப‌டித்து

இதயம் வலிக்கின்றது
இந்த பிரிவுகள் சமயங்களில்
நிறந்தரமாவதும் உண்டு.
அமெரிக்கா பயணித்தவர் பயணித்தவர்தான்
சவூதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
கத்தார் சென்றவரை மீண்டும் பார்க்கமுடியாத
துயரத்தில் சொந்த பந்தங்கள்
இதயம் நிஜமாகவே வலிக்கின்றது
பிரிவில் தனிமையில் கடந்த நாட்களல்ல‌
மாதங்கள‌ல்ல, வருடங்களல்ல,
முழு வாழ்க்கையையே தொலைத்து விட்டு
இன்னும் தனிம‌யிலே பிரிவின் துய‌ர‌த்திலேயே
வாழும் சொந்த‌ங்க‌ள் எண்ணில‌ட‌ங்காது.
இது
சொல்லாத சோகம்
யாரும் வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும்
கண்ணீரின் கீதம்

அதிரைமன்சூர்
ரியாத்

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

பாஸ்போர்ட் எடுத்து அயல்நாடு செல்ல விசா வந்து பின் புறப்பட்டுச் செல்ல இருக்கும் தேதியில் அந்த பரிதாபமான உள்ளம் படும் பாடு அது ஒரு பிரியமில்லா பிரிவு.நம் ஊரில் பலருக்கு ஏற்படுகின்ற பிரியமில்லா பிரிவு

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு உயிர் அல்லது பொருள் சில காலம் நம்முடன் இருந்து பழகி விட்டு அது பிரியும் பொழுது அல்லது தொலைந்து போகும் பொழுது அதற்கு பண மதிப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அது கொஞ்சம் காலம் நம்முடன் கூடவே இருந்து நம் உள்ளத்தில் பிடித்துக்கொண்ட இடத்திற்காகவே பெரும்பாலும் அழுகிறோம்.

Ebrahim Ansari said...

பிரியமில்லாப் பிரிவுகள்! நல்ல தலைப்பை கையில் எடுத்து இருக்கிறீர்கள் தம்பி நெய்னா.

குடும்ப உறவுகளை பிரிவது தற்காலிகமானது. மீண்டும் இணைவோம் என்ற நம்பிக்கை, அதற்கான முயற்சி, கட்டாயம் இருந்து கொண்டே இருக்கிறது.

பள்ளித்தோழர்களைக் கூட பிரியலாம் சந்திக்கலாம் காரணம் மிகக் கூடியவரை ஒரே ஊர் தெரு வட்டாரம் ஆகியவற்றை சார்ந்து இருப்போம்.

ஆனால் கல்லூரியில் அதுவும் விடுதிகளில் மூன்று ஆண்டுகாலம் ஒன்றாக தங்கி உண்டு உறைந்து இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொண்டு இன்னும் சொல்லப்போனால் சட்டைகளைக் கூட மாற்றி மாற்றிப் போட்டு மாமு என்றும் மச்சான் என்றும் தலைவரே என்றும் தம்பி என்றும் பழகிய நண்பர்களை கல்வியாண்டுகள் முடிந்ததும் நிரந்தரமாகப் பிரியும் நிலை சொல்லமுடியாத சோகம்.

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
இந்த அழகை அந்த விழியில் கொண்டு சொல்வோமோ - என்ற வரிகள் எத்தனை அர்த்தம் நிறைந்த வரிகள்?

நினைவுக்குகைகளில் பதுங்கி இருக்கும் என் வகுப்புத் தோழர்களை -அறையில் ஒன்றாக வசித்த அன்பர்களை நினைக்கும்போதெல்லாம் இனம் புரியாத ஏக்கம் ஏற்படுகிறது .

உணர்ச்சிவசப்படவைத்த பதிவு.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மிக மிக அருமையான ஆக்கம் பிரியமில்லா பிரிவு ஆழ்ந்த சித்தனை வரிகள் அதனின் சிறப்பான வரிக்கொர்வை பின்னிட்டியே காக்கா....

தன் தாய்/தந்தையர்களின் பிரிவைக்கான முடியாத பலர் அயல்நாட்டில் படும் வேதனை என்றென்றும் மனதைவிட்டு பிரியாத பிரிவு வேதனையிலும் கொடிய வேதனை...

ஜசக்கல்லாஹ் ஹைர் அற்புதமான பல பேரின் நினைவலைகளின் கண்ணீர்த்துளிகள் வரவைத்த பதிவு...

நிச்சயம் ஒரு நாள் சந்திப்போம்
என்ற நம்பிக்கையில் பிரிவதை விட

என்றும் நினைவுகளுடன்
கலந்து இருப்போம் என்ற நம்பிக்கையில் பிரிந்து

நினைவுகளுடன் என்றும் இணைந்து இருப்போம்
என்பதே பிரிவின் அர்த்தம்.....

Yasir said...

பல”பிரியமில்லா பிரிவுகளை” சந்தித்துவிட்டு மனதை ஆறுதல் படுத்திக்கொண்டிருப்பதால் தான் பல பேரின் வாழ்க்கைத்தரம் கொஞ்சமாவது உயர்ந்து இருக்கின்றது...ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடியும் என்ற வார்த்தைகள் உண்மைதான்.....இதனை இங்கு எழுதிய சகோ.நெய்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brother MSM Naina Muhammed,

Your sixteen paras are ending with so melancholic touching "ஒரு பிரியமில்லா பிரிவு - a non willing parting".

Since the separation is unavoidable(a reality) in most of the circumstances, we have to to seek Allah's help to bear the pains.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சிறு பிள்ளைப்பருவத்தில் ஆசையாய் கடைத்தெருவிலிருந்து வாங்கி வந்த கலர் கெரண்டு குஞ்சு, மீன் தொட்டியில் வளர்க்கும் மீன்கள், குளத்தில், ஆற்றிலிருந்து பிடித்து வந்த மீன் குஞ்சு, இரால் குஞ்சு, குட்டி நண்டு, ஜோடிப்புறாக்களை வாங்கி வந்து அதன் சிறகை நன்கு பழகும் வரை கத்தரித்து பிறகு வானில் நம்பிக்கையோடு பறக்க விட்டு நம் வீட்டையே வானில் சுற்றி,சுற்றி வரும் அந்த புறாக்கள், கிளி, கோழி, ஆடு, மாடு,கன்றுக்குட்டி, பூனைக்குட்டி போன்ற வீட்டின் செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உறங்கிக்கொண்டிருந்தாலோ, மரணித்து விட்டாலோ அல்லது எங்கேனும் கண் காணாமல் போய் விட்டாலோ அந்த பிரிவை தாங்காமல் சிறு வயது பிஞ்சு மனசு வேதனையில் வருந்தும். கண்களை குளமாக்கும். பசியின்றி உணவை ஒதுக்கும். இரவு உறக்கத்தை தொலைத்து விடும். வாயில்லா ஜீவன்களின் பிரிவை கூட தாங்காத உள்ளம் சொந்த,பந்த மனித உயிர்களின் தற்காலிக, நிரந்தர பிரிவு எப்படியெல்லாம் உள்ளத்தை துக்கத்தால் தொலைத்தெடுக்கும் என்பது நமக்கெல்லாம் நன்கறிந்ததே.......

Unknown said...

Assalamu Alaikkum

I would like to ask Mr. Naina Muhammad about remembering heart weighing moments is enriching our minds and improve our health or not.

crown said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது,அஸ்ஸலாமுஅலைக்கும்.
அவசரம் ரபியா காக்காவின் கைபேசி எண் வேண்டுமே கிடைக்குமா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வ'அலைக்குமுஸ்ஸலாம். தஸ்தகீர், நலமா? ரஃபியா காக்கா தற்சமயம் (ஊரில்) தஞ்சையில் இருக்கிறார்கள். அவர்களின் கைபேசி எண் எனக்கு தெரியவில்லை. எனவே தஞ்சையில் இருக்கும் அவர்கள் மருமகன் சஹியிடம் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரமறிந்து கொள்ளலாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இது தான் நம்பர் : 91 994 470 2007.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

As asked Brother Ahamed Ameen, It's depends the men's situation and strength of the heart. In brave heart, eventhough the past and sad heart weighing moments will make refreshment with motivation to achieve something in their upcoming life instead of tired with fed-up of the life. This is the main thing that how to face and deal it. Whatever it is, it should not disturb our deep sleeping and daily normal routines. If we think deeply our timebeing (temporary) life here and the final destination from here to almighty Allah, nothing can be annihilated our daily minimum happy and pleasures even though we are poors with struggling to run our daily life. This is my small answer from my little knowledge and experience to your big and precious question brother.

N. Fath huddeen said...

ரஃபியாவுக்கு என்ன ஆச்சு? நலம் தானே?

ZAKIR HUSSAIN said...

பிரிவுகள் மனதுக்கு கஷ்டத்தை கொடுப்பதை இவ்வளவு பட்டியலிட்டிருக்கிறீர்கள்.

விவாகரத்தில் பிரியும் தம்பதிகளை பற்றி எழுதியிருக்கிறீர்கள், அதுவும் பெரியவர்கள் சொல்லி மனம் விருப்பம் இல்லாமல் என்று.....எப்படி ??? கல்யாணம் கட்டிக்கொள்ள தெரியும் , பிள்ளை பெற்றுக்கொள்ள தெரியும்... விவாகரத்து செய்யும்போது மட்டும் மூளைக்கு போர ஸ்விட்ச் ஆஃப் ஆகி கிடக்குமா? - சொந்த முடிவு என்று எடுக்க தெரியாதா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்கா, உங்கள் ஆதங்கத்தில் நானும் உடன் படுகிறேன். எது எப்படியோ? மொதமொதல்ல புள்ளை குடுத்துப்புட்டா அதுக்கப்புறம் பொண்ணு ஊடு ஈசியா எதுலையும் முண்ட முடியாது பாருங்க அதான்.....எவ்ளோவ் தொலைநோக்கு சிந்தனை??? கடைசியில் மாங்கா புளிக்கிது, பால் புளிக்கிதுண்டு எதையாச்சும் காரணம் சொல்லிகிட்டு எப்புடியாவது திருமண பந்தத்தை சில சில்லரை மேட்டருக்காக முறித்துக்கொண்டு அவ்வொ சொல்லிட்டாஹ, இவ்வொ சொல்லிட்டாஹண்டு சொல்லி எஸ்க்கேப் ஆகி அந்தப்பெண்ணையும், அதற்குப்பிறந்த பிள்ளைகளையும் அம்போவென உட்டுட்டு வேற எங்கையாச்சும் மேய புறப்பட்டு விடும் சம்பவங்கள் நம்மூரிலும் நடக்காமல் இல்லை. அல்லாஹ், எவ்வித ஆதரவும், உதவியும், பரிவும் இன்றி நிராயுதபாணியாக நிற்கும் அந்தக்குடும்பங்களுக்கு அவனே உற்ற துணையாக நின்று மென்மேலும் பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக....ஆமீன்...

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா!

பிரிவுகளைப் பற்றி எழுதி அழகாக இருக்கிறீர்கள்.

நமதூரில் பலரது பிரிவுகள் ஒரு காலவரையறைக்குள் இல்லை. பிழைப்பு என்கிற பெயரில் தங்களது இளமையைத் தொலைத்துவிட்டு ஐந்து வருடத்துக்கு மேலும் பிரிந்து இருந்து அரண்மனை போல் வீடு கட்டுகிறார்கள். இளமையைத் தொலைத்துவிட்டு ஏசி யூனிட் வைத்த அறைகளில் யார்தான் வாழ்வது?

அறிவியல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கைத்தேவைகள் இருக்கின்றன. இயற்கைத்தேவைகள் நிறைவேறாத போது மன வியாதிகள் உட்பட்ட உடல் உபாதைகள் உண்டாகின்றன.

உதாரணமாக வெயிலில் நின்றால் வேர்க்க வேண்டும் . இது இயற்கை .
அதேபோல் உடம்புக்கு ஒவ்வாமை வந்தால் தும்ம வேண்டும்.
புளிப்பை கண்டால் எச்சில் ஊற வேண்டும்.
தாகம் ஏற்பட்டால் தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலைக் கடன்களை சரிவர கழித்துவிட வேண்டும். ஒரு நாள் தவறினாலும் அவஸ்தைதான்.
வயிற்றில் காற்று சேர்ந்தால் அது பிரிய வேண்டும். ஏப்பம் வந்தால் வெளியிட்டுவிட வேண்டும்.
நேரத்துக்குப் பசிக்க வேண்டும் பின் புசிக்க வேண்டும். மனித உடலின் தேவைகள் இந்த நியதிகளுக்கு உட்பட்டவை. இல்லாவிட்டால் இயற்கை எதிரியாகிவிடும்

இவைகளைப் போலத்தான் அந்தரங்க ஆசைகள். உடலுக்கும் வயதுக்கும் தேவையான வாழ்க்கைத் தேவைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவைகள்.

இளமையில் ஐந்தாறு ஆண்டுகாலங்கள் பிரிந்திருக்கும் தம்பதியினர் தங்களின் மற்ற இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது போல் தங்களின் எல்லாத் தேவைகளையும் தங்களின் பொருள் தேடும் பிரிவின் காரணமாக இழக்கின்றனர்.

இன்று மகளிர் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதக் காரணம் வெளியில் சொல்ல முடியாத பிரிவாற்றாமை என்பதை முதலில் உணரவேண்டும். இது ஒரு சமூகப் பிரச்னை. பலர் மன உளைச்சலில் சிக்கி வெளியிலும் சொல்ல முடியாத உணர்வுகளில் தவிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்.
ஒரு இளம்பெண்ணை மருத்துவ சோதனைக்கு ஆளாக்கிய சிறப்புப் பெண் மருத்துவர் கேட்ட கேள்வி இந்தப் பெண்ணின் கணவர் எங்கே இருக்கிறார்?
பதில் : அமெரிக்காவில்
கேள்வி: எவ்வளவு நாட்களாக?
பதில் : ஆறு ஆண்டுகளாக.
மருத்துவர்: இவருக்கு எந்த மருந்தும் தேவை இல்லை. இவர் கணவரை உடனே புறப்பட்டு வரச்சொல்லுங்கள்.

நான் சபை ஒழுங்கு கருதி நாகரீகமாக இதை எழுதுகிறேன்.

வங்கியில் சேமிக்கும் கோடிகள் வாழ்க்கையைத் தந்துவிடாது. அடுக்குமாடி வீடுகள் -அமெரிக்க விசாக்கள் அகவாழ்வை அள்ளித் தந்துவிடாது. இயற்கையில் நிகழவேண்டியவைகள் நிகழாவிட்டால் நிகழ்கால வாழ்வுமில்லை. எதிர்கால வாழ்வும் இல்லை.பிரிவுக்கும் ஒரு காலவரையறை வைப்போமா?

Ebrahim Ansari said...

// விவாகரத்து செய்யும்போது மட்டும் மூளைக்கு போர ஸ்விட்ச் ஆஃப் ஆகி கிடக்குமா?// There you are Zakir.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

// விவாகரத்து செய்யும்போது மட்டும் மூளைக்கு போர ஸ்விட்ச் ஆஃப் ஆகி கிடக்குமா?// ஆஃப் ஆகாது....அது பொசிங்கி போய் கெடக்கும். மாப்ளையுடன் கொஞ்ச காலம் வாழ்ந்த பின் மாப்பிள்ளை அல்லாஹ்வின் நாட்டத்தில் இறக்க நேரிட்டால் அவருடன் வாழ்ந்த அந்த அற்புதமான வாழ்க்கையே எனக்கு இறுதி மூச்சு வரை போதும் என மனதில் திடமான வைராக்கியத்துடன் எவ்வித தவறும் செய்யாமல் வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் கண்மணியான பெண்மணிகளும் நம்மூரில் இருந்தார்கள், இருக்கத்தான் செய்கிறார்கள்.

உடல் பசிக்காகவும், இருப்பிட வசதிக்காகவும் நம்மூரிலுள்ள‌ பெரும்பாண்மையான ஆண், பெண் வர்க்கத்தின் உள்ளப்பசி காற்றோடு காற்றாக உலகின் எங்கோ ஒரு மூலையில் பனிக்காற்றுடனோ, அல்லது அனல் பறக்கும் பாலைக்காற்றுடனோ அன்று முதல் இன்று வரை க‌ரைந்து கொண்டு தான் இருக்கிற‌து இ.அ. காக்கா....

அப்துல்மாலிக் said...

பேச்சிலரா இருக்கும்போது உள்ளூருலே கிடைத்த வேலையையோ அல்லது சொந்த தொழிலையோ விட்டுவிட்டு விசா கிடைத்ததும் இருக்கும் சந்தோஷம் அடுத்த ஆண்டே கல்யாணம் செய்துட்டு பிரியும்போது இருப்பதில்லை.... அப்போ மனது நினைக்கும் ஏண்டா சொந்த தொழிலை விட்டோம்னு.. சரிதானே நெய்னா

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மிக அற்புதமாக தெள்ளத்தெளிவாக தெரிவித்து விட்டீர்கள் இ.அ காக்கா...

நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை இதை அவர்களின் பெற்றோர்களுக்கு யார் சொல்வது...

தன்னால் சம்பாதிக்கும் அவனால் முடியுமா??

இல்லை தன் மனைவியை காண ஊர் வருகிறேன் என்று சொல்ல முடியாமல் தன்னால் மெழுகுவர்த்தி போல் தன்னுள் ஊருகுகிறான்

இதற்கு யார் காரணம் தன் பெற்றோர்கள் மற்றும் தன் தங்கையின் தேவைகளுக்காக என்று அடித்து கூறுவேன்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பிரியமில்லாப் பிரிவுகளின் பல்வேறு பிரிவுகள் சிறப்பான தொகுப்பு நெய்னா!

பிள்ளையின் முதன்மைப் பருவத்தில் என்னதான் அது அடம்பிடித்தாலும் அவசியம் கருதி பள்ளியில் விட்டு வருவதும் ஒரு பிரியமில்லா கட்டாய பிரிவு!

என்னதான் மகிழ்வாக திருமண ஏற்பாடு செய்தாலும் பெண் வீட்டுக்கு நிக்காஹுக்கு அனுப்பும் அந்த நேரத்தில் தாயின் கண்ணீர் பிரியமில்லா ஏக்கப் பிரிவு!

வயோதிகர்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு கஸ்டத்தை கொடுத்தாலும், போய் சேர்ந்தால் தான் நிம்மதி என்று நினைக்கும் அளவுக்கு காலம் கடத்தப்பட்டாலும் மரண தருவாய் ஒரு பிரியமில்லா துயர பிரிவு!
--------------------------------------------------------------

இன்று ஷஃபான் மாத தலைப்பிறை / அடுத்த தலைபிறை ரமலான் இன்சா அல்லாஹ்

crown said...

N. Fath huddeen சொன்னது…

ரஃபியாவுக்கு என்ன ஆச்சு? நலம் தானே?
Reply ஞாயிறு, ஜூன் 09, 2013 4:01:00 PM
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா!.ரபியா காக்கா சிறிது உடல் நிலை சரியில்லாமல் தன்னிலையை மருத்துவரிடம் பரிசோதித்து அல்ஹம்துலில்லாஹ் நலம், இரு நாட்களில் ஜித்தா புறப்பட்டு விடுவார்கள். அவர்களின் தொடர் நலத்திற்கு துஆ செய்துகொள்ளுங்கள்.அவர்களின் கைபேசி எண்:
966505329499

sabeer.abushahruk said...

பிரிவுகளை வகைப்படுத்தி அதன் வலிகளை உணர வைக்கும் சகோ நெய்னாவின் எழுத்துத்தான் எத்துணை வலிமை வாய்ந்தது.

சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி வாசித்தால் அது இனிக்காது என்பர். ஆனால் நெய்னா சொல்லும் பிரிவுகளின் தாக்கம் வாசிக்கும்போதே வலிக்கிறது.

அருமையானப் பதிவு.

வாழ்த்துகள்.

Meerashah Rafia said...

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல்தான் சின்ன நைனா(சித்தப்பா/சாச்சாங்கிறது இப்படி சொல்லி இன்னொரு வகையா வச்சிகிடலாம்ல!) அவர்களின் இந்த ஆக்கம் எமக்கு.

Unknown said...

மன்சூர் காக்காவின் அருமையான வரி
///யாரும் வெல்லாத வீரம்/// அதுதான் பிரிவு.நெயனாவின் அருமையான ஆக்கத்திற்கு ஊக்கம்மூட்டும் வரி .உண்மையில் ஒரு ரத்த கண்ணீர் .

Unknown said...

நீ என்னை விட்டுப் பிரிந்தாய் இன்று
அதனால் எனக்கு எதிலுமே பிரியமில்லை
உலகத்தில் நான் விரும்பியவையில்
முதல்மையானது உன் நட்பு..

ஏன் உன் பாசம் பாதியிலே
பறிபோகும் என்பதாலா ???
ஏன் என் மனதிற்கு புரியவில்லை
உன் பாசம் பாதியிலே
போவது தெரிந்து இருந்தால்
உனக்கு முன் பாவி நான் மாறியிருப்பேன்...

அன்பு காட்டியவர்கள் எல்லாம்
என்னை விட்டுப் பிரிந்த போதும்
நீ மட்டும் பிரியாமல் இருந்தாய் ...
அது நிரந்தர பிரிவுக்கு
அஸ்திவாரம் என்பதை அறியாமல் - இன்று
நிம்மதியின்றி நிமிடங்கள் கரைகிறது ...

உன்னை பிரிவதை நினைத்து
இன்றும் நான் அழுகிறேன்
நீயோ அழ வைத்து வேடிக்கை பார்க்கிறாய்
நான் சுத்தமாக சுவாசித்தது உன்னையும் - உன்
நினைவுகளையும் மட்டும் - ஏன்
மீண்டும் மீண்டும் விட்டுச் செல்கிறாய் .........???

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம் வாழ்வில் சந்திக்கும் உள்ளத்தின் சில உண்மை வலிகளை இங்கு பகிர்ந்து கொண்டு படித்த உங்களையெல்லாம் சங்கட‌த்தில் சஞ்சலப்பட‌ வைத்தமைக்கு மன்னிக்கவும். வாழ்வில் குறுக்கிடும் சில சந்தோச நிகழ்வுகள் ஒட்டு மொத்த எம் வலிகளுக்கு நல்ல மருந்திட்டு அதன் மேல் சாமரம் வீசிச்சென்று விடுகிறது.

இங்கு கருத்திட்டு தங்கள் உள்ளக்கிடங்கிலிருந்து நல்ல பல கருத்துக்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்ட அத்துனை நல்லுள்ளங்களுக்கும் எம் நன்றிகளும், து'ஆவும் சென்றடையட்டுமாக.

ZAKIR HUSSAIN said...

அப்துல்காதர்....என்னப்பா இப்படி எழுதியிருக்கே...பொழிப்புரை இதற்கு உன் க்ளாஸ்மேட் சபீர் எழுதுவாப்லெயா?

KALAM SHAICK ABDUL KADER said...

//வங்கியில் சேமிக்கும் கோடிகள் வாழ்க்கையைத் தந்துவிடாது. அடுக்குமாடி வீடுகள் -அமெரிக்க விசாக்கள் அகவாழ்வை அள்ளித் தந்துவிடாது. இயற்கையில் நிகழவேண்டியவைகள் நிகழாவிட்டால் நிகழ்கால வாழ்வுமில்லை. எதிர்கால வாழ்வும் இல்லை.பிரிவுக்கும் ஒரு காலவரையறை வைப்போமா?//

உண்மையிலும் உண்மை! அனுபவப்பூர்வமான உண்மை

ஊரில். ஓர் இரவு மட்டும் இடியும் மழையுமாய் இருந்தாலும்,

அன்பு மழைக்கு முன்னால்
அடைமழை எனக்குப் பெரிதா?
இன்ப மழைக்கு முன்னால்
இடிமழை எனக்குப் பெரிதா?

N. Fath huddeen said...

JAZAKALLAHU KHAIRAN WAL AAFIA.

adiraimansoor said...

அபுல்கலாம்.!!!!!!!!!!!!!!!
கீழ்கண்ட உன் வரிகள் என் இதயத்திற்கு மருந்தலித்தன

"அன்பு மழைக்கு முன்னால்
அடைமழை எனக்குப் பெரிதா?
இன்ப மழைக்கு முன்னால்
இடிமழை எனக்குப் பெரிதா? "

அடைமழைக்கும் இடிமழைக்கும்
நாம் ஒதுங்கவில்லை
அன்பு மழைக்கும் இன்பமழைக்கும்தான்
நாம் ஒதிங்கி (பிரிந்து) இருக்கின்றோம்
என்பதை நினைத்துதான் நாம்
பிரிவின் துயரத்திலிருந்து ஆறுதல்
அடைந்து வருகின்றோம்
அதுதன் நிதர்சனம்.

Anonymous said...

மு.செ.மு. அவர்களின்'' பிரிவு''ஒரு நல்லதலைப் '' பூ'' மட்டுமல்ல தலைபுக்கெல்லாம் தலைப்பு. பெரும்பாலும் இந்த ''பூவை' நுகராதவர்கள் இருக்கவாய்ப்பூ இல்லை.. ஏதேனும் ஒருவகையில் [பிரிவு] பூவை சந்தித்து இருக்கலாம் [பூவை] இங்கு பூவை என்று நான்சொன்னது மலரை.

நீங்கள் வேறு மீனிங்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.

இப்போ தொழிலுக்கு வருவோம். என்னை சந்தித்த பிரிவுகளில் நினைவில் நிலைத்திருப்பது இரண்டு ஒன்று பள்ளி படிப்புக்கு முற்றும் போட்டு விட்டு பினாங்கு போக ரெடி. அப்போ எங்கிருந்தோ வந்தது ஒரு நினைவு அது சொன்னது "நீ உன் தாய் இடமிருந்து பிரியாவா போரே?''. அன்றைக்கே உடைந்தது என் நெஞ்சு.. புறப்படும் நாள் வரை தாய் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை' பயண நாள் வரை தாய் முகாம் காண துணிவு இல்லை.. அடுத்தது.. மரண படுக்கையில் என்தாய் ''உம்மா..உம்மா''வாய் திறக்கவில்லை கண்திறந்தும் என்னை பார்க்கவில்லை. வாய்திறந்தும் ''மகனே என்றும் சொல்லவில்லை.. என்மேல் கோபமா.? இல்லை. என் தாயே அழைத்துச் சென்றது கோமா. இது இன்றும் என் நினைவில் நிற்கும் நீங்காப் பிரிவு.

s.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

Unknown said...

Assalamu Alaikkum

A friend replied yesterday to my email that he is missing me.

My reply to him would be

That if my soul has impressed him such that
he is thinking in his 'mind' that he is missing me...

Actually he is not missing me, since
My soul's impression is still there with him.

Physical missing is not a separation as long as
the connection is made at the soul.

Let that connection of souls not bring pain when parting
Let the connection can give the hope for further life.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம் ஊரில் பெரும்பாலும் திருமண வைபவங்களில் நிக்காஹ் முடிந்ததும் மணமகள் வீட்டை விட மணமகன் வீட்டினர் தான் அதிகம் கண்ணீர் வடிக்கின்றனர். இது ஆனந்தக்கண்ணீரா? வேதனைக்கண்ணீரா? அவன் தனிமையில் நம்முடன் வீட்டில் உறவாடி, உறங்கிய நாட்கள் இத்துடன் முற்றுப்பெருகிறது என்பதாலோ? அல்லது இனி அவன் அதிகம் புழங்கும் இடம் மணமகள் வீடாகிப்போகுமே என்ற ஏக்கத்தாலோ? அல்லாஹ் அஹ்ழம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு