Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை! – 4 19

அதிரைநிருபர் பதிப்பகம் | June 10, 2013 | , , , , , ,

தமிழக சட்டசபை மற்றும் அரசு நிர்வாகம் என்கிற எண்ணங்களில் நாம் எண்ணிப் பார்க்கிறபோது ஒரு சில தனிப்பட்ட உயர்ந்த குணசீலர்கள் மற்றும் தன்மையாளர்கள் நமது எண்ண அலைகளின் மேல்  மட்டத்தில் எழுந்து வருவதை தவிர்க்க முடியாது. காமராஜர் தனது அமைச்சரவையில் வெறும் எட்டு பேர்களை மட்டுமே வைத்து இருந்தார். அவர்கள் அனைவரும் தலை சிறந்த நிர்வாகிகள். அவர்களுள் சி. சுப்பிரமணியம், வெங்கட் ராமன், கக்கன் ஆகியோர் என்றுமே நினைவில் நிற்பார்கள். கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரும் முஸ்லிம்களுடைய பிரதிநிதியாக காமராசரின் அமைச்சரவையில் பங்கேற்று இருந்தார்.  இவர்களிலும்        சி. சுப்ரமணியம் காமராசரை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர் என்றாலும் அவரையும் அமைச்சரவையில் சேர்த்து கல்வியமைச்சர் பொறுப்புக் கொடுத்து அரவணைத்தது காமராசரின் கரங்கள். 

அதேபோல் வெங்கட் ராமன் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகள் அளிக்கப்பட்டு சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார். ஆனால் இவரது பிறந்த  ஊரான இராஜாமடத்துக்கோ அல்லது அதை அடுத்து இருக்கிற அதிராம்பட்டினத்துக்கோ தனது பதவி காலத்தில் எந்த நன்மையையும் செய்யவில்லை. சேதுரோடு என்பது  வேதாரணியத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை கடற்கரை வழியாக செல்வதுதான். வெங்கட்ராமன் மனது வைத்து இருந்தால் கருங்குளம் அருகில் நசுவினி ஆற்றிலும் இராஜமடம் அருகில் அக்கினி ஆற்றிலும் அன்றே பாலங்கள் கட்டி  சேதுரோட்டை போக்குவரத்துக்கு திறந்து விட்டு இருக்கலாம். ஆனால் தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் இருந்து அதிரை நோக்கி வந்திருக்க வேண்டிய சேது சாலையை பட்டுக்கோட்டைக்கு உள்ளே திருப்பிவிட்டு பிறகு அதை சேதுபாவா  சத்திரத்தில் கொண்டுபோய் இணைத்த செயல் நம்மைப் பொருத்தவரையில் இவரது சாதனைப் பட்டியலில் ஒரு கரும்புள்ளி.  ஆனால் தமிழகமெங்கும் தொழில் மயமாவதில் காமராசருக்கு வலதுகரமாகத் திகழ்ந்தார். 

காமராசர் அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த பக்தவத்சலம் மக்களின் நினைவில் இருந்து மறைந்துவிட்டார். 1967 தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில்      தி. மு. க வின் வெற்றியைப் பார்த்துவிட்டு “நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்று சொல்லிய அவரின்  வார்த்தைகள் மட்டுமே இன்றும்  நிற்கின்றன. 

இவர்களுள் திரு. கக்கன் அவர்களைப் பற்றி தனி அத்தியாயம் எழுதலாம். கக்கன் அவர்களுக்கு அவருடைய சாதி இனம் பாராமல்   மிகப் பெரும் பொறுப்புகளை எல்லாம் காமராசர் அளித்து இருந்தார். கக்கனுக்குப் பிறகு அவரது இனத்தை அல்லது தலித் இனத்தை சார்ந்தவர்களுக்கெல்லாம் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை , மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை  போன்ற  முக்கியத்துறைகள் எந்த முதலமைச்சரின் அமைச்சரவையிலும்  வழங்கப்படவில்லை. பால் வளம், செய்திதுறை, பிறபட்டோர் நலம் போன்ற பெரும் அதிகாரமற்ற  துறைகளே வழங்கப்பட்டன/ பட்டிருக்கின்றன. ஆனால் திரு. கக்கன் காமராசரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் இன்னொரு காமராசராகவேத் திகழ்ந்தார். 

கக்கன் அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்குமுன் காஞ்சியில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். அன்றைய காஞ்சி மடாதிபதி சந்திர சேகரப் பெரியவர் ஒரு முறை கக்கன் அவர்களை சந்தித்து ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது , ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தார் என்பது ஒரு களங்கம் நிறைந்த வரலாறு. அதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.   அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறேன். பார்ப்பனீயமும் சாதீயமும் வேரூன்றிய இந்த மண்ணில் இத்தகைய வேதனையான விஷயங்கள் நடப்பது வழக்கமே. 


கக்கன் என்கிற பெயர் நிகழ் காலம் முற்றிலுமாக  மறந்துவிட்ட பெயர். இவரை நினைவூட்ட சில வரிகளை  இங்கே எழுதுவது அவசியமாகிறது.  மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டுக்கு மேலாகிறது.  காமராஜரையே மறந்துவிட்ட மக்கள்  கக்கனையா நினைவில் நிறுத்திப் போற்றப் போகிறார்கள்? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.

சத்தியமூர்த்தி காமராஜரை தவிர்க்க முடியாமல் தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். பொது உடைமைக் கட்சியின் புகழ்பெற்ற  தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.

காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். (இன்று குறைந்த காலம் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பணியாற்றியவர்கள் தனியாக தொலைகாட்சி தொடங்கும் அளவுக்கு தனிப்பட்ட வசதி பெறுகிறார்கள்.) 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு,  அறநிலையத்துறை போன்ற பல்வேறு முக்கிய இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.


பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 -
தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். 

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘ உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி’  என்று கைகூப்பினார் கக்கன்.

திரு.  கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 

இன்று அந்த இடம் 5  கோடிக்கு  மேல் மதிப்புள்ளதாகும். 

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மா பேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. யார் யாருக்கோ நினைவுச் சின்னம் அமைக்கும் அரசுகள் கக்கனையும் அவரது நினைவையும் அம்போவென்று விட்டுவிட்டன.  ‘இன்று கக்கனை நினைப்போர் யாருமில்லை.  அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் காலத்தில். அதுவும் தோட்டியின்  மகனாகப் பிறந்ததுதான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். ஏழையாகப் பிறந்து எளிமையாக வாழ்ந்து உயர்ந்த பதவிகளை பலகாலம் வகித்த போதும் ஏழையாகவே மறைந்த திரு. கக்கனை  இன்றைய உலகம் பிழைக்கத் தெரியாதவர்  என்றே பட்டம் தந்து பழி தூற்றும். மூன்று வருடம் வட்டச் செயலாளராக இருக்கும் ஒருவர் வாழும் ஆடம்பர வாழ்வை இன்று நாம் கட்சிக் கொடி தாங்கி ஓடும் கார்களின் வனப்பில்  காணலாம். அறுந்து போன செருப்பைத் தைக்க அரை ரூபாய் இல்லாமல் இருந்தவர்கள் அரசியலில் பதவி பெற்றுப் போடும் ஆட்டம் காண சகிக்கவில்லை. பத்து தலைமுறைக்கு சொத்து தேடி வைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? தனது தலைமுறையிலேயே தரையில் படுத்துக் கொண்டு மருத்துவம் பார்த்த கக்கனைப் போன்றவர்கள் எங்கே?

ஒரு கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.  பொது வாழ்வுக்கு வந்த பின் எளிமையும் நேர்மையும் வாழ்வில் அங்கமாக இருக்க வேண்டுமென்று கக்கன் காமராசரிடம் கற்றுக் கொண்டு செயல் படுத்தினாரென்றால் காமராசருக்கு பெரியாரின் தாக்கம் இருந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்து இருந்தால் காமராசர்,  சத்திய மூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக மட்டுமே இருந்து மறைந்து இருப்பார். அனைவருக்கும் கல்வி என்றும் மதிய உணவுத்  திட்டமென்றும் தனது ஆட்சிகாலத்தில் தொடங்கி நடத்திவர காமராசருக்கு பெரியார் உடைய சிந்தனைகளின் வெளிச்சம் உதவியது. அதனால்தான் நமது நினைவுகளில் உயர்ந்து நிற்கிறார். அதேபோல், அண்ணா முதல்வராக இருந்தார் என்பது சிறப்பல்ல. அவர் பெரியாரோடு இருந்தார் என்பதுதான் அவருக்கான சிறப்பு. பெரியாருக்கு எதிராக தீவிரமாக இயங்கிய மிக மோசமான முதலமைச்சரான பக்தவச்சலத்தை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குக்கூட அவருடைய  நினைவு மறந்து  இருக்கும் அல்லது மறத்துப் போய் இருக்கும். 

தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர்களை பெரும்பாலும் மக்களே தேர்ந்தெடுத்தார்கள் என்று சொல்லலாம். பொதுத்தேர்தல் நடைபெறும்போதே இன்னார்தான் முதலமைச்சராக வருவார் என்று மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தலைமை தாங்கும் கட்சிக்கு வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். மக்களின் எண்ணத்தை தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் எதிரொலிப்பார்கள். இதே ரீதியில்தான் அண்ணா, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முதன் முதலில் காமராஜர் முதல்வரானதும், முதன் முதலாக கருணாநிதி முதல்வரானதும் அன்றைய சூழ்நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுக்கப்பட்டே. ஆகும் . அதன் பின் நடந்த தேர்தல்களில் இவர்கள் மக்கள் ஆதரவும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர். 

அந்த வகையில் பார்த்தால் காமராஜர் முதல்வரானது ஒரு நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் . காமராசருக்கு முன்பு இராஜாஜிதான் தமிழ் நாட்டின் முதலமைச்சர். இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித்திட்டம் அவரது பதவிக்கு வேட்டு வைத்தது. குலக் கல்வித்திட்டம் என்பது கிட்டத்தட்ட மனு நீதியோடு தொடர்புடையது. இராஜாஜி ஒரு பிராமணர் என்பதால் சாதிய அடிப்படையில் மற்றும் தொழில்களின் அடிப்படையில் கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தார். அதாவது எந்தத் தொழில் செய்பவர்கள் ஆனாலும்            செய்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள்  காலை ஒரு நேரம் பள்ளிக்கூடம் போய் படித்துவிட்டு மலை நேரங்களில் அவரவர் சாதி, குல , இனத்துக்குரிய தொழில்களைச் செய்யப்  பழகிக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கல்வித்திட்டம் அமைக்கப் பட்டது. அதாவது குயவர் இனத்தில் பிறந்த பிள்ளை மாலை வேளைகளில் சட்டி பானை செய்யப் போகவேண்டும் செருப்புத்தைக்கும் இனத்தில் பிறந்த பிள்ளைகள் சக்கிலியத் தொழிலையும் தோட்டிகளின் பிள்ளைகள் தோட்டி வேலைக்கும்  தச்சர் வீட்டில் பிறந்த பிள்ளைகளும் செல்ல வேண்டுமென்பதே குலக்கல்வித்திட்டம். பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் இரு நேரமும் கல்வி கற்கும் வழி இது.  

மனுநீதி கூறிய வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் இந்தத்திட்டம் இருப்பதாகக் கூறி  நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இராஜாஜி பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரே கொந்தளித்தனர். பெரியார் உட்பட்ட திராவிட இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவர் காமராசர். அதனால்  இராஜாஜியை  சந்தித்து குலக்கல்வித்திட்டத்தை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்டு முதல்வர் பதவியில் தொடரும்படி கோரினார். ஆனால் இரத்தத்தின்  அணுக்களில் பார்ப்பனீயம் கலந்துவிட்ட   இராஜாஜி , காமராஜரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனால் பிரச்னை,  பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவிடம் சென்றது. நேரு இராஜாஜியை அழைத்து பதவி விலகி விடும்படியும்  வேறொரு முதல்வரைத் தேர்ந்தெடுக்க வழிவிடும்படியும் கட்டளை இட்டார். இதனால் இராஜாஜி பதவி விலக நேரிட்டது. 

அடுத்த  முதல்வராக வேண்டுமென்று காமராஜர் விரும்பவில்லை. ஆனால் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியினர் அவரே முதல்வராக வேண்டுமென்று ஒருமித்த குரலில் கூறினர். இருந்தாலும் இராஜாஜி கடைசி நிமிடம் வரை தனது இடத்தில் சி. சுப்ரமணித்தைக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று சட்டமன்றக் கூட்டத்தில் சுப்ரமணியத்தின் பெயரை முன் மொழிந்தார். ஆனால் போதுமான ஆதரவு இல்லாமல் சுப்ரமணியம் காமராசரிடம் தோற்றுப் போனார். இதே  இராஜாஜி  காமராஜர் முதல்வராக வருவதை விரும்பவில்லை. ஆனால் 1952 – ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ்  கட்சிக் கூட்டத்தில் ராஜாஜி பெயரை காமராஜர் முன்மொழிய ராஜாஜி முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  காமராஜரின் முயற்சியால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு துவங்கிய ராஜாஜியின் ஆட்சி, ராஜாஜின் வீண் பிடிவாத்த்தால் குலக்கல்வித் திட்டம் வழியாக 1954 – இல் முடிவுக்கு வந்தது. அதுதான் காமராஜரின் ஆட்சிக் காலத்தை தமிழகம் காண முதல் துவக்கமாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டில் (1903 ஆம் ஆண்டு) பிறந்து பதவியை ஏற்ற முதலாமவர் காமராஜர்தான். இவருக்கு முன்பிருந்தவர்கள் அத்துணை பேரும் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழ்நாட்டின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது நினைத்தப் பார்த்திட முடியாத நிலையில், முதலமைச்சராக உயர்ந்தவர் காமராஜர். சென்னை மாகாணப் பிரதமராகப் பதவிப் பொறுப்பை ஏற்ற டி. பிரகாசமும் ஏழ்மையான குடும்பதில் பிறந்து, தன்னுடைய தனிப்பட்ட உழைப்பின் காரணமாக உயர்ந்தவர்தான். ஆனால், தன்னுடைய பொருளாதார நிலை உயர்ந்து, வாழ்க்கை மேம்பட்ட பின்னர் பொது வாழ்க்கைக்கு வந்தவர் டி. பிரகாசம். மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னுடைய பொருளாதார நிலை உயர்வைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.

அதே போல் அண்ணாவுடைய மறைவுக்குப் பின் தமிழகம் மற்றொரு முதல்வர் தேர்தலை சந்திக்க வேண்டிய கேட்ட சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டது.  இரா.நெடுஞ்செழியன்தான் இடைக்கால முதல்வராக இருந்தார். அமைச்சரவையிலும் இரண்டாம் இடம் அவருக்குத்தான். தி மு க வின் பொதுச் செயலாளராக அண்ணா காலத்திலேயே “தம்பி வா! தலைமை தாங்க வா!“ என்று அழைக்கப் பட்ட பெருமைகளுக்குரியவர். இரண்டு முதுகலைப் பட்டங்களுக்கு சொந்தக்காரர்.ஆனால் அரசியல் சதுரங்கத்தின் முதல்வர் போட்டியில் கருணாநிதியால் வீழ்த்தப் பட்டார். யாரும் எதிர்பாராமல் கருணாநிதி முதல்வரானார்.  இதன் பிறகே தமிழகத்தில் அரசியல் விளையாட்டு , சூதாட்டம் மிகுந்ததாக ஆனது.    

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
முத்துப் பேட்டை P. பகுருதீன். B.Sc;

19 Responses So Far:

Unknown said...

கக்கனுக்கு சிலை வேண்டாம்,
அவரிடம் உள்ள பெருந்தன்மை, எளிமை , இவற்றை கற்றுக்கொண்டாலே
போதும், வட்டச்செயலாலருக்கெல்லாம், வான் முட்ட சொத்துக்கள்
வந்து குவிய வாய்ப்பே வராது.

சொத்து சேர்ப்பதை குறி வைத்து வரும் இன்றைய அரசியல் வாதிகள்
கக்கனின் அரசியல் நேர்மையைப்படிக்க நேரிட்டால் , இந்தக்கதில் வாங்கி
அந்தக்காதில் விட்டுவிடுவார்கள்.

நேர்மை அது கிலோ என்ன விலை ?
இதுதான் இன்றைய அரசியல் வாதிகள் நிலை.

அபு ஆசிப்.

Unknown said...

பார்பனீயத்தின் நச்சுத்தன்மை,அந்தக்கால அரசியலையும் விட்டு வைக்கவில்லை.

இதற்க்கு ராஜாஜியே ஒரு எடுத்துக்காட்டு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அரசியல் பாடங்களுக்கு நன்றி. காக்கா.

ibrahim said...

//அதேபோல் வெங்கட் ராமன் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகள் அளிக்கப்பட்டு சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார். ஆனால் இவரது பிறந்த ஊரான இராஜாமடத்துக்கோ அல்லது அதை அடுத்து இருக்கிற அதிராம்பட்டினத்துக்கோ தனது பதவி காலத்தில் எந்த நன்மையையும் செய்யவில்லை//
நூற்றுக்கு நூறு உண்மை காக்கா,

// சேதுரோடு என்பது வேதாரணியத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை கடற்கரை வழியாக செல்வதுதான். வெங்கட்ராமன் மனது வைத்து இருந்தால் கருங்குளம் அருகில் நசுவினி ஆற்றிலும் இராஜமடம் அருகில் அக்கினி ஆற்றிலும் அன்றே பாலங்கள் கட்டி சேதுரோட்டை போக்குவரத்துக்கு திறந்து விட்டு இருக்கலாம். ஆனால் தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் இருந்து அதிரை நோக்கி வந்திருக்க வேண்டிய சேது சாலையை பட்டுக்கோட்டைக்கு உள்ளே திருப்பிவிட்டு பிறகு அதை சேதுபாவா சத்திரத்தில் கொண்டுபோய் இணைத்த செயல் நம்மைப் பொருத்தவரையில் இவரது சாதனைப் பட்டியலில் ஒரு கரும்புள்ளி.//

சேது ரோடு என்பது தற்போதைய கிழக்கு கடற்கரை சாலை (ecr )தங்கள் சொல்வது போல் தம்பிகோட்டை முக்கூடிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக சேதுபாவாசத்திரத்தில் கொண்டுபோய் சேர்க்க வெங்கட்ராமன் திட்டம் போட்டு சர்வே எல்லாம் முடிந்துவிட்டது .இதை அறிந்த அன்றைய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பனராக இருந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் ஹாஜி எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் அவர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில்
பேசி போராடி அதை அதிரை வழியே கொண்டு வந்து பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தார்கள் .இவை அனைத்தும்
தமிழக சட்டசபை அவை குறிப்புகளில் உள்ளன . ஆனால் அபுல்ஹசன் அவர்கள் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து ரெண்டு முறை ஜெயித்து mla ஆகியருந்தாலும் மயிலாடுதுறைக்கு செய்ததைவிட அதிரம்பட்டினதிர்க்கு செய்ததுதான் அதிகம் என்று மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு வருத்தம் உண்டு .



Ebrahim Ansari said...

மர்ஹூம் M.M.S.அபுல் ஹசன அவர்களுடைய சாதனைகள் எண்ணற்றவை.

ஒரு தொழிலுக்காகப் போன ஊரின் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதுடன் அந்ததொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு அந்தப் பகுதி மக்களின் மனதில் கட்சி வேறுபாடு இன்றி இன்றளவும் இடம் பெற்று இருக்கிற அபுல் ஹசன் அவர்கள் அதிரைக்கு பெருமை சேர்த்தவர்களில் சிறந்தவரில் ஒருவர்.

இன்றும் அவர் பெயர் தாங்கி மயிலாடுதுறையில் நிற்கும் நகராட்சி வணிக வளாகம் என்று ம் அவர் புகழ் கூறும். அதிராம் பட்டினத்தில் இருந்து வருகிறோம் என்று மயிலாடுதுறை சீர்காழி பகுதிகளில் சொன்னால்நமக்குக் கிடைக்கும் மரியாதையே தனி.

ibrahim said...

மர்ஹும் எம்.எஸ்.எஸ்.அபுல்ஹசன் ஹாஜியார் அவர்களிடம் நெருங்கி பழகியவன் என்பதால் எனக்கு அவர்கள் ecr சாலையை அதிரை வழியாக கொண்டு செல்வதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் எனக்கு தெரியும் இன்று ecr சாலை அதிரை வழியாக செல்கிறது என்றால் அதற்க்கு முழு புகழும் அபுலஹசன் ஹாஜியார் அவர்களையே சேரும் .அதுமட்டுமல்ல பம்பாய் ஹஜ் கமிட்டி கட்டிடத்தை பம்பாய் மாநகராட்சி இடிக்க முற்பட்டப்போது ஹஜ்ஜூக்கு செல்வதற்காக அங்கு தங்கி இருந்த அபுல்ஹசன் ஹாஜியார் அவர்களுக்கு விபரம் தெரிய வருகிறது உடனே அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருந்த திரு மூப்பனார் அவர்களை தொடர்புகொண்டு ஹஜ் கமிட்டி கட்டிடம் இடிக்கபடுவதை தடுத்து நிறுத்தினார்கள் இன்றும் மும்பையில் ஹஜ் கமிட்டி கட்டிடம்
கம்பீரம்மாக நின்று அவர்களுக்கு புகழ் சேர்க்கிறது

Yasir said...

பயனுள்ள வரலாற்றுக் குறிப்புகள்...சம்பவங்கள்...நயவஞ்சக பேய்களின் உண்மை முகங்கள்....தொடர் களைக்கட்டுகின்றது

Yasir said...

மர்ஹூம் M.M.S.அபுல் ஹசன் அவர்களின் சாதனைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றது...அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்ளவேண்டும்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மர்ஹூம் M.M.S.அபுல் ஹசன் அவர்களின் சாதனைகள் இங்கு கண்டு வியப்படைந்தேன்...

நம்மூருக்கு பெருமை சேர்த்த மயிலாடுதுறை MLA காக்கா அவர்களின் சமூகப்பணி அவ்வூரிலும் தற்பொழுது கூட பேசாதவர் எவருமில்லை இதன் மூலம் அறிந்தேன் அல்ஹம்துலில்லாஹ்...

எல்லாம் வல்ல நாயன் அவருக்கு அஹிரத்திலும் வெற்றியை தந்தருள்வானாக...

நேற்று,இன்று, நாளை இது அற்புதமான நெடுந்தொடராக அமைந்து மேலும் பல தகவல்களை அ.நி. யின் மூலம் இவ்வுலக மக்கள் அறியச் செய்தமைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோ.P. பகுருதீன்.

sabeer.abushahruk said...

எதிர்க்கட்சி தலைவரை மதித்தல், மக்கள் நலன், ஆரோக்கியமான விமரிசனங்கள், எளிமையான வாழ்க்கை, அதிகாரமிருந்தும் அதைத் துஷ்பிரயோகம் செய்யாத நேர்மை, ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராடுவதில் கட்சி பேதமைப் பாராமல் ஒன்றுபடுதல் போன்ற நற்குணங்கள் இக்கால அரசியல்வாதி ஒருவரிடமாவது உள்ளதா?

ஏங்கவைக்கின்றது அந்தக் கால அரசியல்.

அற்புதமான தகவல்களை சுவாரஸ்யம் குன்றாமல் தரும் தங்களுக்கு, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

சட்டமன்ற நிகழ்வுகளின் அடிப்படையில் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் வரலாற்றுப் பதிவுகள் இங்கு விவாதிக்கபப்படும்போது நமதூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வேறொரு ஊரின் பிரதிநிதியாக செயல்பட்டாலும் பிறந்த ஊரை மறக்காமல் செய்த சேவைகள் மகிழ்வூட்டுகின்றன.

அதே நேரம் நமது ஊர் சட்ட மன்றத் தொகுதியாக இருந்து எ. ஆர் . மாரிமுத்து மற்றும் எம். தண்டாயுதபாணி ஆகியோர் நமக்காக செய்தது என்ன? ஒரு விரலைக் கூட விடமுடியவில்லை. பட்டுக் கொட்டை தொகுதியில் இணைந்த பிறகு கூட நம்பி வயல நாகராஜன், என். ராமசாமி,மற்றும் இன்றைய எம் எல் ஏ ஆகியோர் நமக்காகச் செய்த குறிப்பிடத்தக்க சாதனை என்ன?

யாராவது சொல்வீர்களா?

அது போகட்டும் காமராஜர் காலத்தில் இருந்த அதிராம் பட்டினம் சட்டமன்றத் தொகுதி இன்றுவரை மீண்டு வரவில்லையே அதைக் கொண்டுவர யாராவது முயன்றார்களா? ஒவ்வொரு ஊறும் வசதிகளைப் பெற்று வளரும்போது அதிரைக்கு ஏன் இந்த சோதனைகள்?

திருமணங்களில் நாற்பது ஆடுகளை அறுத்து சாப்பிட்டால் மட்டும் போதுமா?
அடுத்தவரைக் கெடுக்க குழி தோண்டுவதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு ஆக்கப் பணிகளில் ஈடுபடலாமா?

m.liyakat ali said...

யாருப்பா அது மஜீத் சாஹிப் ,கக்கன்ஜி மந்திரி பதவிக்கே மரியாதை இல்லாமல் செய்துவிட்டு சென்றுள்ளார்கள் .நாங்கள் இல்லாம் இப்போ 1 கோடி 2 கோடி 10 கோடி அல்ல
100 கோடி 1000 கோடி கோட அல்ல லட்சம் கோடி என்று மந்திரி பதவி என்பதை உலகறிய செய்தவர்கள் 2ஜி 3 ஜி என்றாலோ காமன் வெல்த் என்றாலோ எங்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்

ibrahim said...

ar மாரிமுத்து(காங்) ,நம்பிவயல் நாகராஜன்(காங்),
89-91அண்ணாதுரை (தி.மு.க.) ,
91-96 பாலசுப்ரமணியன்(அ.தி.மு.க.) 96-2001 ஏனாதி பாலு(தி.மு.க).இதில் அண்ணாதுரை அவர்கல்
அதிரை மக்களிடத்தில் நட்புடன் பழக கூடியவர் மற்றபடி யாரும் அதிரைக்காக வேண்டி பெருசாக எதையுமே செய்துவிடவில்லை .91-96 அ.தி.மு.கவை சேர்ந்த பாலசுப்ரமணிய ஐயர் எம்.எல். ஏ வாக இருந்தபோது 96-2001 ஏனாதி பாலு எம்.எல்.ஏ வாக இருந்த போதும் 10 ஆண்டுகள் இருமுறை எம் எல்.ஏ.வாக மயிலாடுதுறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் ஹாஜியார் அதிரைக்கு செய்த பணிகள் ஏராளம் ராஜாம்படத்தில் பிறந்து பிறகு இந்திய நாட்டின் முதல் குடிமகனாக ஜனாதிபதியாக இரு முறை தேர்வு செய்யப்பட்டவெங்கட்ராமன் அதிரைக்கு செய்த மிகப்பெரிய சாதனை (துரோகம் )அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதியாக இருந்ததை மாற்றியது

Unknown said...

எளிமைக்கும் நேர்மைக்கும், இலக்கணமாக திகழ்ந்த , கக்கன் போன்ற தூய அரசியல்வாதிகளை, அவர் ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் என்ற ஒரே காரணத்திற்க்காக , அவர் தயவு தேவையோ வேறு என்ன காரணமோ , அவரை பார்த்தே ஆக வேண்டிய சூழ்நிலையிலும் , இந்த கேடு கெட்ட குழி தோண்டி புதைக்கப்பட வேண்டிய கொள்கை மேலோங்கி நிற்க , அவருக்கும் , இந்த பார்ப்பனீயத்துக்கும் இடையில் ஒரு பசு மாட்டை நிறுத்தி , அவரை நேரில் கண்ணால் பார்க்கக்கூடாது என்பதற்க்காக , ஜாதி வெறி எவ்வளவு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலமாக இருந்திருக்கும் என்பதை என்னிப்பார்க்கும்பொழுது மனிதனை நல்வழிப்படுத்த வேண்டிய வேதமே இப்படிக்கற்றுத்தருகின்றதா ? என்பதுதான் கேள்வி .

, இந்த மாதிரி மனிதனை மனிதனே (மிருகம்போன்ற) பிரித்துப்பார்க்கின்ற கொடுமைக்கு வழிகாட்டும் நூல் வேதநூலாக இருக்க தகுதி இருக்கின்றதா ?
இவர்கள் வேதாந்திகள் என்ற போர்வையில் செய்து வருகின்ற கொடுமைகள்
தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக, அவர் கெளரவம் , பாதிக்கப்படுகின்றதே என்பதைக்கூட கருத்தில் கொள்ளாமல் நடக்கும் இவர்களை என்னவென்று சொல்வது ?

கக்கன் போன்ற அரசியல் வாதிகள் இனி கனவில் கூட தமிழக சட்ட சபையை
ஒரு M.L.A . வாகவோ, அல்லது ஒரு M.P. யாகவோ, அலங்கரிக்கப்போவதில்லை, அந்த நேர்மைக்கு எடுத்துக்காட்டானவர்கள் , இன்றுள்ள அரசியல் நிலையை பார்த்தால், கேடுகெட்ட இந்தக்காலத்தில் நாம் ஏன் வாழுகின்றோம் என்று பார்த்த அன்றே அரசியல் துறவறம் மேற்க்கொண்டிருப்பார்கள். . நல்ல வேலை அவர்கள் இந்தக்காலத்தில் இல்லை.

இன்றைய அரசியலுக்கும்,நேர்மைக்கும் மிக நீண்ட தூரம்.

அந்த நேர்மை என்னும் கோட்டை இன்றைய அரசியல வாதிகள் ஒருவராலும் தொடமுடியாது.

அதற்க்கு முன்புள்ளவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும்.
அது சாத்தியமற்றது.

ibrahim said...

அதிரையில் எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் ஹாஜியாருக்கு இரண்டு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள் ஒருவர் கடல்கரைதெரு மர்ஹும் ஜனாப் இப்ராகிம் காக்கா
(மின்னார்,ரயில்வே)அவர்கள் மற்றொருவர் நடுத்தெரு மர்ஹும் ஜனாப் த.அ.செய் முகமது காக்கா அவர்கள்.
1991 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிப்பதற்காக மன்னம்பந்தளுக்கும்(avc காலேஜ்)
வடகரைக்கும் இடையில் உள்ள அவர்கள் தொகுதிக்குட்பட்ட கோடங்குடி என்ற கிராமத்திற்கு செல்கிறார்கள் அங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 25 குடும்பங்கள் தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகவும் அவர்கள் தொழுவதற்கு ஒரு இடமும் அவர்கள் குடிநீர் தேவையையும் ஒலு செய்வதற்கும் சேர்தாற்போல் தாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஒரு அடி பம்ப் போட்டுகொடுங்கள் என்று அபுல்ஹசன் ஹாஜியார் இடத்தில கோரிக்கை வைத்தார்கள் .இது இறைவனின் பனி என்பதால் தேர்தலுக்கு முன்பே தன் சொந்த செலவில் அங்கு ஒரு கொட்டகையை அமைத்து அதன் அருகில் ஒரு அடி பம்பையும் அமைத்து கொடுத்து வடகரையில் இருந்து ஒரு இமாமையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் .அப்போது கூட வந்த நண்பர் ஒருவர் அபுல்ஹசன் ஹாஜியார் இடத்தில கேட்டார்கள் இந்த மக்கள் உங்களுக்கு ஒட்டு போடுமா? அவர்கள் சொன்ன பதில் இது சமுதாய பனி அல்லாஹ் எனக்கு நர்கூலி வழங்குவான் துவா செய்யுங்கள்.அல்லாஹ் அந்த தேர்தலில் அவர்களை வெற்றியடைய செய்தான் ,,வெற்றி பெற்ற பிறகும் அந்த 25 குடும்பங்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்து கொடுதுகொண்டேதான் இருந்தார்கள் மதமாரியவர்கள் என்பதால் சாதி சான்றிதழ் பிரச்னை வந்தது .தற்போது கலக்டர் அலுவலகலங்களில் நடைபெருகிறேதே மனு நீதி நாள் அதே போல் அன்றே அவர்களது மண்டியில் தாசில்தார் வரவலைக்கபட்டு ஒரே நாளில் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்தார்கள் .சமீபத்தில் எதோ ஒரு வலை தலத்தில் நாகை மாவட்டம் கோடங்குடி பள்ளிக்கு உதவ வேண்டி தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் புகைபடுத்துடன் விளம்பரம் செய்து இருந்தார்கள் அன்று அபுல்ஹசன் ஹாஜியார் நிர்மாணித்த அதே நிலையில் தான் அந்த பள்ளி இருந்தது கண்டு மித மனம் வேதனை அடைந்தது .இன்ஷா அல்லாஹ் ஒரு நியத் உண்டு அது நிறைவேற அதிரை நிருபர் வாசகர்கள் துஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்







.





ibrahim said...

மர்ஹும் எம்.எஸ்.எஸ்.அபுல்ஹசன் ஹாஜியார் பற்றி மர்ஹும் ஜனாப் தா.அ. செய் முகமது காக்கா நிறைய சொல்லி உள்ளார்கள் சில சம்பவங்களை பஹுருதீன் காக்கா வின் நேற்று இன்று நாளை மூலமாக இங்கு பகிர்ந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்துல்மாலிக் said...

வரலாற்றில் நிறைய மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் உள்ளது, நிறைய உண்மைகளை அலசி ஆராய்ந்து வெளிக்கொணரப்படுகிறது

பகிர்வுக்கு நன்றி

Raashid Ahamed said...

பெருமானார் ஸல் அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸ் நினைவுக்கு வருகிறது. “பின்வரும் காலங்களில் வருபவர்கள் முன்னால் இருந்த காலங்களே நல்லதாக இருந்ததே என ஏங்குவார்களாம்” அது போல் இனிவருபவர்கள் எப்படி இருப்பார்களோ என அஞ்சத் தான் தோன்றுகிறது. இப்போது அரசியலில் உள்ளவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அயோக்கியர்கள் இரண்டு மோசமான அயோக்கியர்கள். இனி வருபவர்கள் எப்படிப்பட்டவர்களோ ? என்னென்ன செய்ய காத்திருக்கிறார்களோ ? நாம் நம்மை திருத்திக்கொள்ளவில்லையென்றால் மோசமான ஆட்சியாளர்களை இறைவன் நம் மீது ஏவுவான் என்பது இறை வாக்காகும். எனவே நம் சமுதாயத்திற்காக துஆ செய்வோம்.

Anonymous said...

தமிழக அரசியல் வரலாற்று தொடர் இளைய தலைமுறைக்கு ஒரு பாடநூல்.. சமகால வயதுடையவர்களுக்கு நினைவுகளை புதுப்பிக்கும் ஒருபணி'.

ஆரியம் அடக்கி ஆண்ட பெரும்மக்கள் திரளின் கண்களை திறந்தவர் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.. பெரியார். பாசறையில் பட்டை தீட்டப்பட்ட போர்வாளேன அண்ணா வந்தார். அண்ணா வந்தபின் தூய்மை சிகரம். கமராசரும் காங்ரசும் விடை பிரியாவிடை பெற்றது.

அண்ணா சிலகாலம் அவரும் போய் விட்டார். அண்ணா போட்டபடி யரிசி காங்கிரசுக்கு '' வாய்க்கரிசி''ஆனது அது ஊழல் மணமக்களுக்கு வாழ்த்து கூறி தூவிய மஞ்சள் அரிசியாகவும் ஆனது. பின்பு திராவிட ஆட்சியில் மணமக்கள் பதினாறும் பெற்று பெரும் [பெறும்] வாழ்வு வாழ்கிறார்கள்..

s.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு