Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முன் மாதிரி! ( உன்னப்பனின் விண்ணப்பம் - II ) 40

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2013 | , , ,


அற்றுச் செல்லும் நேரமதில்
உன்னிடம்
விட்டுச் செல்வதன் சாரமிது

நகைக்கும் பற்களில் பழுப்பேற
புகைக்கும் பழக்கம் எனக்கு
நீ பிறந்த நாள்தான் அப்பழக்கம்
நான் துறந்த நாள்
புகை அற்ற வாயால்
பெயர் வைத்தேன் உனக்கு

பொக்கைவாய்ப் புன்னகையால் - நீ
புதுவுலகை எனக்களிக்க -உன்
பிடரியில் கைதாங்கி
பூமுகத்தில் முத்தமிட்டேன்.

பக்கத்தில் உனைக் கிடத்தி
பகுத்தறிவு போதித்தேன்
.
இறைமறை ஓதுவதை
இளநகையோடுப் பார்த்திருந்தாய்
பள்ளிக்கூடம் போகுமுன்பே
எழுத்துகளைப் பயிற்றுவித்தேன்

உன்னை நான் வளர்த்தெடுக்க
என்னை நான் வார்த்தெடுத்தேன்

முன்கோபம் முறியடித்து
முகமன் சொல்ல வைத்தேன்

காசுபணம் சொத்துசுகம்
கவனத்தைச் சிதைக்காமல்
கல்வியையும் கண்ணியத்தையும்
கடமையென உணர வைத்தேன்

உடல் சுத்தம் உடை சுத்தம்
உளச்சுத்தம் உயர்ந்ததென
இடஞ்சுட்டி பொருள் விளக்க
எடுத்துக்காட்டாய் நான் நின்றேன்

உண்மையும் உழைப்புமே
உயர்வுக்கு உகந்ததென்றேன்

என்னைப் பார்த்தே
எல்லாம் கற்கும்
உன்னைப் பார்த்து
உள்ளம் பூரித்தேன்

மாதிரி மனிதனாய் உன்முன்
பரிணமிக்க முயன்றேன்

அதிகாலை தொழுது
அழகான விடியலில்
அருள்வேதம் ஓது
அந்நாள் உனக்கு நன்னாளே

பொழுது புலர்வதை
நீ காணும் நாட்களே
உன்
வாழ்நாட்கள் என கணக்கில் வை

நன்னீராடு பசிக்குப் புசி
நல்லோரோடு ரசித்துச் சிரி
நளினம் கொள் நற்சொற்கள் சொல்

விண்முட்டும் கட்டடத்திற்கும்
முதற்படிதான் துவக்கம்
முறைப்படி முதலில் படி
முன்னேறுவாய் படித்தபடி

உழைத்து உண்
உனைவிட
இளைத்த மனிதருக்கு
உண்ணக் கொடு

தடுக்கி விழுவோரைத்
தாங்கிப் பிடி
தடுமாறி நடப்போருக்குக்
கைத்தடியாகு

மின்னணு எந்திரங்களில்
நுண்ணறிவு பெறு
கண்ணொளி கருதி
கட்டுப்பாட்டுடன் கையாள்

வீண் வாதம் தவிர் - அது
ஒரு  வழிப் பாதையில்
எதிர் வழிச் செல்லும்
பிடிவாத மன்றோ

வழியெலாம் வாய்த்த
வாய்ப்புகள் விடுத்து
வாய்ப் புகழ் பாடி
ஏய்ப்பவர் அறி

இருப்போரோ இறந்தோரோ
மூத்தவர் பலரும்
நேற்றைய தினம் வரை
இன்றைய தலைமுறையின்
நாளை சிறக்க
நன்னயம் செய்யவே நாடினர்

நன்மையை நாடினர்
உண்மையைத் தேடினர்
தேடியபோதினில்
தெளிவின்றிப் போயினும்
நாடிய மனங்களின்
நன்றி மறக்காதே

இஸ்லாம் முதற்கொண்டு
இனியவை யாவையும்
எல்லோர்க்கும் எத்திவை

மாற்று மதத்தவரும்
மனிதர் என்ற பார்வைகொள்
மத நல்லிணக்கம்
மாற்றம் கொணர
துவேஷம் ஒத்திவை

போகும் வழியெல்லாம்
புன்னகை தூவிச் செல்
திரும்பி வருகயில்
உனக்காகக் காத்திருக்கும்
ஒரு
புன்னகை தேசம்!


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

40 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எப்பொழுதும் போல இப்பொழுதும் எழுதபட்ட முப்பொழுதும் சிறக்கும் கவிதை சாரம்! இது வாழ்கை பாடத்தை தன் மகனுக்கு சொல்லிய அ(ற)றிவுரை! இது மரணத்தருவாயில் நுழையும் முன் மொழிந்த சாசனம்! நீதி போதனை! வாழ்த்துக்கள்.

crown said...

நகைக்கும் பற்களில் பழுப்பேற
புகைக்கும் பழக்கம் எனக்கு
நீ பிறந்த நாள்தான் அப்பழக்கம்
நான் துறந்த நாள்
புகை அற்ற வாயால்
பெயர் வைத்தேன் உனக்கு
-----------------------------------

புகைக்கும் பழக்கம் அற்று போனது
ஈறூகள் இற்று போனதால் அல்ல!
பட்டுமேனிகொண்ட என் பச்சிளம் பாலகன்
பிறந்த பாசத்தின் பற்றால் அந்த புற்று
நோயின் தாய் அற்று போனது!
சேயின் வருகையில் நோயின் வருகை
தடுக்கபட்ட விந்தை! அதனால் மகிழ்தது தந்தை!

crown said...

பொக்கைவாய்ப் புன்னகையால் - நீ
புதுவுலகை எனக்களிக்க -உன்
பிடரியில் கைதாங்கி
பூமுகத்தில் முத்தமிட்டேன்.
--------------------------------------------
பொக்கை வாய் புன்னகை
அது பொதிகையில் மலர்ந்த தாமரை!
உலகிற்கு வந்த புதுவரவு! அந்த உறவு தந்தது புது உலகம்! அதன் பிடரியில் கைதாங்கி
பூமுகத்தில் முத்தமிட்டது காரணம் சந்ததி இல்லை என்று யாரும் முச்சந்தியில் கூவி இடர செய்யாமல்
இருக்க வந்த பரிசு அதனால் முத்த பரிசு!

crown said...

பக்கத்தில் உனைக் கிடத்தி
பகுத்தறிவு போதித்தேன்
.
இறைமறை ஓதுவதை
இளநகையோடுப் பார்த்திருந்தாய்
பள்ளிக்கூடம் போகுமுன்பே
எழுத்துகளைப் பயிற்றுவித்தேன்

உன்னை நான் வளர்த்தெடுக்க
என்னை நான் வார்த்தெடுத்தேன்

முன்கோபம் முறியடித்து
முகமன் சொல்ல வைத்தேன்
-------------------------
உனக்கு நான் அறிந்த அறிவை போதித்தேன்!
உனக்கு முதல் ஆசிரியன் ஆனேன்!
தங்கம் உனைவளர்த்தெடுக்க
என்னை வார்தெடுத்தேன்! நீ ஒரு போதிமரமாய்
எனக்கு ஞான நிழல் தந்தாயோ? உன்னை ஊக்குவிக்க என்னை நீ ஊக்கிவித்தாய்! பெரும் வித்தாய்!
சேயாய் வந்து மகிழவைத்"தாய்!
சைதானின் குணம் ஒன்றாம் கோபம்,அதை முகமன் கூற போதித்து சைத்தான் அழிய வைத்தேனே! எல்லாம் யாருக்காக என் சேயான உனக்கும் உன் பின் வரும் சந்ததிக்கும்.

crown said...

காசுபணம் சொத்துசுகம்
கவனத்தைச் சிதைக்காமல்
கல்வியையும் கண்ணியத்தையும்
கடமையென உணர வைத்தேன்

உடல் சுத்தம் உடை சுத்தம்
உளச்சுத்தம் உயர்ந்ததென
இடஞ்சுட்டி பொருள் விளக்க
எடுத்துக்காட்டாய் நான் நின்றேன்
-----------------------------------------
யாது கடமையென உணர்த்தினேன்!
எல்லாம் முன்மாதிரியாய் உன் முன் வாழ்ந்து காட்டுகிறேன்!இது என் கடமை! என்பதையும் அறிய வைக்கின்றேன்!

crown said...

அதிகாலை தொழுது
அழகான விடியலில்
அருள்வேதம் ஓது
அந்நாள் உனக்கு நன்னாளே
-------------------------------------------
அதிகாலை தொழுது!அல்லாஹ்விடம் பாவ மன்னிபிற்க்கு அழுது! கடக்கும் அன்றைய பொழுது!அல்லாஹ்வின் பாதுகாப்பில் கழியும் இனிய நன்னாள்!

crown said...

உழைத்து உண்
உனைவிட
இளைத்த மனிதருக்கு
உண்ணக் கொடு
-------------------------
தந்தை எழுதிய ஆத்தி சூடி!
இதன் வழித்தேடி!வாழ்க நல்வாழ்கை! எளியோருக்கு உதவு! இளைத்தோருக்கும் உதவு! இப்படி இளைத்தோருக்கு கொடுக்கும் செல்வம் கொழுத்து வளரும் ! நன்மையும் தழைக்கும்.

crown said...

தடுக்கி விழுவோரைத்
தாங்கிப் பிடி
தடுமாறி நடப்போருக்குக்
கைத்தடியாகு
--------------------------------------------
இப்படி தாங்கிபிடிக்கும், தோள் கொடுக்கும் கையே ஈகை! அதன் பின் வாழ்வெல்லாம் வாகை! நன்மை நம்மை தேடிவரும்! அல்லாஹ் அருளினால். ஆமின்

crown said...

வீண் வாதம் தவிர் - அது
ஒரு வழிப் பாதையில்
எதிர் வழிச் செல்லும்
பிடிவாத மன்றோ
-----------------------------------
இலக்கில்லா பயணம் இருதியில் முடிவும் இல்லாமல் நட்ட நடுவில் நாதியற்று நிற்பதுபோல் வீண்விவாதம் என பொருள் பொருந்திய எழுத்தாடல்! கவியரின் கற்பனையும், கவிவரியும் மனதை கொள்ளைஇடுகிறது

crown said...

இருப்போரோ இறந்தோரோ
மூத்தவர் பலரும்
நேற்றைய தினம் வரை
இன்றைய தலைமுறையின்
நாளை சிறக்க
நன்னயம் செய்யவே நாடினர்
-------------------------------------------
அப்பப்பா!அப்பாக்கள் எல்லாம்,செய்த செயல்கள் இப்ப வாப்பாக்களுக்கும், பிறகு வந்த உன் போன்றவர்களுக்கும் , பின் உன் சந்ததிக்கும் நல்வழி செய்தியே! அவர்களின் வாழ்கை ஒரு பாடமே என அப்பாக்கள்மூலம் கவிபாக்கள் வடித்த கவிஞரின் வார்த்தை ஜாலம் ! ஆனாலும் நல்லதொரு வகுப்பெடுப்பு!

crown said...

நன்மையை நாடினர்
உண்மையைத் தேடினர்
தேடியபோதினில்
தெளிவின்றிப் போயினும்
நாடிய மனங்களின்
நன்றி மறக்காதே
----------------------------------
நன்றி மறத்தளை விட கீழ் செயல் வேறில்லை என சொல்லலாம்!ஆகவே நன்றி மறவாதே!மறந்தால் நல்வாழ்கை கிட்டாது! இப்படி வரிக்கு வரி எல்லாம் நன்மை விதைக்கும் கவிஞரின் வரிகள் எல்லாம் அவருக்கும் அதை பின் பற்றும் எல்லோருக்கும் நன்மை பகருவதாக உள்ளது! எல்லாம் நன்மைக்கே!

crown said...

மாற்று மதத்தவரும்
மனிதர் என்ற பார்வைகொள்
மத நல்லிணக்கம்
மாற்றம் கொணர
துவேஷம் ஒத்திவை
----------------------------------------
மனித நேயம் !அது இஸ்லாத்தின் கொள்கை வழி!
மாற்று மதத்தினரும் மனிதர் என நினை மாற்றன் தோட்டதிலும் நல் மணம் வீசும் பூக்கள் உண்டு! நம் தோட்டத்தில் சில காகித பூக்களும் உண்டு! எனவே, துவேசம் கொள்ளும் தூ............... அந்த வேசம் வேண்டாம்! மனிதனை மதி! பிறகு செல்லும் இடமெல்லாம் நிம்மதி!

crown said...

போகும் வழியெல்லாம்
புன்னகை தூவிச் செல்
திரும்பி வருகயில்
உனக்காகக் காத்திருக்கும்
ஒரு
புன்னகை தேசம்!
------------------------------------

புன்னகை விதைத்தால் ஒரு தேசமே விளையும் எனும் கோட்பாடு! வாழ்வின் அவசியம்! அதை உணர்த்தும் கவிஞரின் கவிதை "கரு" நாளைய "தரு"(மரம்). எல்லாம் தரும் மரமாக இந்த கவிதை அரசரின் எழுத்து மிக எழுந்து நிற்கிறது!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

An excellent poem with instructions for building core characters in a personality.

All lines are glowing with excellent piece of advice.

"There is no greater chanting(mantra) than a father's word" - Tamil proverb.

Your collection of timely advice to a son are to be considered not a set of requests, but directive instructions with inspiration.(I observe that there is an irony in the title)

This poem can also be considered as social reforming one.

Jazakkallah Khairan,

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Assalamu alaikkum kaka

//என்னைப் பார்த்தே
எல்லாம் கற்கும்
உன்னைப் பார்த்து
உள்ளம் பூரித்தேன்

மாதிரி மனிதனாய் உன்முன்
பரிணமிக்க முயன்றேன்//

நல்ல தகப்பனின் உள்மனதில் உள்ளவைகளில் வெளிப்பாடு இந்த வரிகளும் அத்தனை வரிகளும்.

ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

نتائج الاعداية بسوريا said...

//தடுக்கி விழுவோரைத்
தாங்கிப் பிடி
தடுமாறி நடப்போருக்குக்
கைத்தடியாகு//

பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வேணும் என்ற வரிகள்
எனக்கு ரொம்பப்பிடித்தது

அப்பனின் விண்ணப்பம்
அர்த்தமுள்ள விண்ணப்பம்

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எல்லாம் இனிமை!
அதில் இது நன்மை தரும் உண்மை வரிகள்!

//இஸ்லாம் முதற்கொண்டு
இனியவை யாவையும்
எல்லோர்க்கும் எத்திவை

மாற்று மதத்தவரும்
மனிதர் என்ற பார்வைகொள்
மத நல்லிணக்கம்
மாற்றம் கொணர
துவேஷம் ஒத்திவை

முன்கோபம் முறியடித்து
முகமன் சொல்ல வைத்தேன்//

Yasir said...

சொற்க்களை சுருக்கி அர்த்தங்களை அள்ளித்தெளித்து அனுபவித்து எழுத்தப்பட்ட கவிதை.....அப்பனின் விண்ணப்பம் வண்ணங்கள் கொண்டு ஜொலிக்கின்றது எங்க ஆஸ்தான கவிக்காக்காவின் கைகள் பட்டு

ZAKIR HUSSAIN said...

//உண்மையும் உழைப்புமே
உயர்வுக்கு உகந்ததென்றேன்//

எல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் நம்மிடம் மிஞ்சியது இதுதான்.

//உழைத்து உண்
உனைவிட
இளைத்த மனிதருக்கு
உண்ணக் கொடு//

இதுவே தர்மம்...இப்படி செய்பவர்கள் மனிதர்கள் மத்தியில் செல்லுபடியாவதில்லை..இறைவன் இடத்தில் எப்போதும் உதவி கிடைக்கும்.

NOTE: கவிதையை மூன்றாம் பகுதியாக்கும் அளவுக்கு பெரிதாக இருக்கிறது. இதை 2 பகுதியாகவும் வெளியிடலாம். [ ரசிகப்பெருமக்களே கல் எடுத்து அடிக்காதீங்க...]




Ebrahim Ansari said...

//காசுபணம் சொத்துசுகம்
கவனத்தைச் சிதைக்காமல்
கல்வியையும் கண்ணியத்தையும்
கடமையென உணர வைத்தேன்

உடல் சுத்தம் உடை சுத்தம்
உளச்சுத்தம் உயர்ந்ததென
இடஞ்சுட்டி பொருள் விளக்க
எடுத்துக்காட்டாய் நான் நின்றேன்

உண்மையும் உழைப்புமே
உயர்வுக்கு உகந்ததென்றேன்// நினைவுகளைப் பறவையாக்கிவிட்ட வரிகள்.

sabeer.abushahruk said...

வஅலைக்குமுஸ்ஸலாம் க்ரவுன்,
என் பதிவுகளுக்குத் தங்களின் விளக்கவுரை அலங்காரமாகவே அமைந்து விடுவது வாடிக்கை.  இம்முறை அந்த அலங்காரம் ஆங்காங்கே தங்கமும் வைரமும் என ஜொலிக்கிறது.  ‘கிரவுனுரை’ என்று நான் செல்லமாக குறிப்பிடும் தங்களின் தெளிவுரைகளுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது; நான் கடன்பட்டவன் என்பதே உண்மை.
ஒவ்வொரு பெற்றோரும் தத்தம் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதின் சாரமே இந்தப் பதிவு. ஏனெனில், மகன் தன் தந்தையையும் மகள் தன் தாயையுமே அவர்களின் மாதிரிகளாக எடுத்துக் கொள்கிறார்கள்.  கவிதை வடிவத்திற்கே உரிய உக்தியான “என் மகனுக்கு என்னைப் பற்றிச் சொல்வதுபோல் எல்லாத் தந்தைகளுக்கும் சொல்வதே” நோக்கம்.
 
இதைச் சொல்வதில் ஏதும் தடுமாற்றம் இருந்திருப்பின் அதைத் தங்களின் தெளிவுரை தெள்ளத்தெளிவாக விவரிக்கின்றது.  தாங்கள் பதிவுகளாக எழுதித்தருவதைக் குறைத்துவிட்டது ஒரு குறையாகவே நிற்பதால் தங்களின் பின்னூட்டங்களைப் பற்றியாவது விமரிசிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.  தோன்றுவதைச் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் எனக்கு.  அடுத்த சில பின்னூட்டங்களில் தங்களின் தமிழை நான் விமரிசிக்கப் போகிறேன்.

sabeer.abushahruk said...

/பொக்கைவாய்ப் புன்னகை
அது
பொதிகையில் மலர்ந்த தாமரை//
 
அலர்ந்த தாமரைபோலவே இருக்கும் வாய்ப் பிளந்த பிள்ளை முகம். அதுவும் பொதிகையில் இருக்கும்போது இன்னும் புத்தம் புதிதாய். என் கைகளில் தவழ்ந்த பிள்ளையைவிட நீங்கள் பொதிகையில் வைத்துப் பார்த்த பிள்ளையே கொள்ளை அழகு.  நான் பிள்ளையை மட்டுமே கொஞ்ச நீங்களோ பிள்ளையைக் கொஞ்சும் சாக்கில் தமிழையும் கொஞ்சுகிறீர்கள்.
 
//நீ
ஒரு போதிமரமாய்
எனக்கு
ஞான நிழல் தந்தாயோ//
 
மடியில் கிடக்கும் மகன் - (போதி)மரத்
தடியில் கிடத்தி
நிழலெனவே - சில
நிஜங்களை உணர்த்தியது உண்மை. 
இதை நான் வரிவரியாய்ச் சொல்ல கஷ்ட்டப்பட நீங்களோ நெறிப்படுத்தி இலகுவாக புத்தியில் புகுத்தி விட்டீர்கள்.
 
//இளைத்தோருக்குக்
கொடுக்கும் செல்வம்
கொழுத்து வளரும் //
 
இரைக்கின்ற கேணியே ஊறும் என்பது பிரபல்யமான தமிழ் பலமொழி.  இனி உங்களின் சுந்தரத் தமிழில் ‘செல்வம் கொழுக்கும்”  சூத்திரமாக இளைத்தோருக்குக் கொடுக்கச் சொல்லலாம்.  மனிதன் இளைப்பதையும் செல்வம் கொழுப்பதையும் சடையைப்போல் பின்னி, பின்னி யெடுக்கிறீர்கள்.
 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

To : இபு
Sub : உன்னப்பனின் விண்ணப்பம் II

Msg : http://adirainirubar.blogspot.ae/2013/06/ii.html

Tks : கவிக் காக்கா

fm : அபு

sabeer.abushahruk said...

/தோள் கொடுக்கும் கையே
ஈகை
தொடரும் வாழ்வெல்லாம்
வாகை//
 
சர்க்கரை ‘பாகை’ சுவைத்ததுபோல் இனிக்கிறது உமது தமிழ்.  ‘ஆகை’யால், ‘சோகை’யின்றி ‘தோகை’ விரிக்கும் மயிலழகு உம் புனைவு என்கிறேன்.
 
//இலக்கில்லாப் பயணம்
நட்ட நடுவில்
நாதியற்று நிற்பதுபோல்தான்
வீண் வாதம்//
 
சிறப்பான உதாரணம்.  இலக்கில்லாப் பயணமும் வீண்வாதமும் ஒத்த குணமுடையவை.  முடிவற்றவை.
 
//மாற்றான் தோட்டத்தில்
வாசனைப் பூக்கள்போல்
நம் தோட்டத்திலும்
சில
காகிதப் பூக்களுண்டு.//
 
எதார்த்தத்தைத் தைரியமாக ஒப்புக்கொள்ளும் தங்களின் பண்பு என்னிலும் இருப்பதால் இந்த உதாரணம் எனக்கு மிகப் பிடித்துப் போனது.  
 
மீண்டும் நன்றியும் வாழ்த்துகளும், க்ரவுன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மாற்றான் தோட்டத்தில்
வாசனைப் பூக்கள்போல்
நம் தோட்டத்திலும்
சில
காகிதப் பூக்களுண்டு.//

அட கிரவ்னு...

என்னடா(ப்பா) இப்புடி ஒரு தூண்டில் போட்டத்தான் வருவியா ?

க'விதை'யில் மட்டும்தான் உன் காத்திருப்புக்கான 'விதை'யிருப்பதாக தேடும் உன் தேடலும் எப்போதுடா(ப்பா) பதிவுக்குள் வரும்...

பருவங்கள் மாறுவது நியதி, ஏதோ ஒரு துருவத்தில் இருப்பது போன்று இருக்காதே(டா)ப்பா !

அப்பா(டா)... லேத்து பட்டரையை ஞாபகப் படுத்திட்டேன்னு... மலேஷியாவிலேயிருந்து கமெண்டு வந்தால்... நான் பார்த்துக்கிறேன்(டா)ப்பா !

))((( = இதைத்தான் லேத்து பட்டறைப் பக்கம் போனாமாதிரி இருக்குன்னு மலேஷியாவிலேயிருந்து சொல்லுவாங்க !

Anonymous said...

/தேடிய போதினில்
தெளிவின்றி போயினும்
நாடிய மனங்களின்
நன்றியை மறக்காதே/'

ஒவ்வொரு பாலர் பள்ளி சுவற்றிலும் எழுதப்பட வேண்டிய' புதிய ஆத்திசூடி!
'வள்ளுவருக்கும் ஔவையாருக்கும் கிட்டாத இந்த வரிகள் என் நெஞ்சில் தொட்டில் கட்டி ஆடுகிறது..

பத்திரமாக வைத்து இருக்கிறேன். வள்ளுவரிடமும் ஔவைரிடமும் கொடுத்தால் திருக்குறளிலும் ஆத்திசூடியிலும் போட்டுக் கொள்வார்கள்.

வரிகள் கவிதை நயமும் கருத்து நயமும் கொண்டு ஒன்றோடு ஒன்று கை கோர்த்து நடக்கிறது.

நான் தேடிய கவிதை அதுதான். கொண்டுவா நான் 'கை எழுத்து போட்டுத் தருகிறேன்'' என்கிறது' சங்கப்பலகை' மருமகன் சபீர்அபுசாருக்கின் வரிகள் கண்ணில் பட்டதும் என் நாவில் தேன்பட்டது போல் ஒரு இனிமை.

கடிக்கத்தான் ஆசை ஆனால் பல் இல்லை; நானோ பால் குடிபிள்ளை.

S. முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

Anonymous said...

//அதிகாலை தொழுது
அழகான விடியலில்
அருள்வேதம் ஓது
அந்நாள் உனக்கு நன்னாளே//

எவன் ஒருவன் அதிகாலையில் எழுந்து சுபுஹு தொழுகை தொழுகிறானோ அவனுக்கு அன்றை நாள் முழுவதும் அல்லாஹ் பொறுப்பேற்றுருக்கிறான்.

Anonymous said...

நானும் ஒரு விண்ணப்பம் போடுகிறேன், அது என்ன 'லேத்து பட்டறை?!' எனக்கு புரியலியே... நானும் மலேசியாவில் வாழ்தவந்தான். என் காதில் படாத புது வார்த்தையா இருக்குது!?

S.முஹம்மதுபாரூக். அதிராம்பட்டினம்

crown said...

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

நானும் ஒரு விண்ணப்பம் போடுகிறேன், அது என்ன 'லேத்து பட்டறை?!' எனக்கு புரியலியே... நானும் மலேசியாவில் வாழ்தவந்தான். என் காதில் படாத புது வார்த்தையா இருக்குது!?

S.முஹம்மதுபாரூக். அதிராம்பட்டினம்
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். பெரியவர் பாரூக்காக்கா அவர்களுக்கு, பருவங்கள் மாறுவது நியதி, ஏதோ ஒரு துருவத்தில் இருப்பது போன்று இருக்காதே(டா)ப்பா !--
இதில் "துரு"என்கிற வார்தையில் துருபிடித்த உலோகங்கள் (இரும்பு....இன்ன பிற)இருப்பதால் மலேசியாவிலிருந்து ஜாஹிர் காக்கா கிண்டலாக கேட்பார்கள் என்ற யூகம்தான் இது மலேசியா பற்றி அல்ல! நான் இருப்பது அமெரிக்காவில் மற்றொரு துருவம்!இது சும்மா ஜாலிக்கு எழுதியது ஆர்வத்தின் காரணமாய் உங்கள் புருவம் உயர்ந்து கேட்ட கேள்விக்கு என் விளக்கம்(சரிதானே? அபு.இபு காக்கா)

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

சபீர்

எல்லாவரிகளும் அருமை ஒவ்வொரு வரியாக
என் மச்சான் க்ரவுன் பாட்டுக்கு பாட்டுபோல்
கவிதைக்கு கவிதையாய் ஆக இருவரும் சேர்ந்து
வார்த்தைகளை அதிரை நிருபரில் விளையாட விட்டு வேடிக்கை பார்துக்கொண்டிருக்கின்றீர்கள்
நாங்களோ எங்களுக்கு கிடைத்த கவிதை பானத்தை ருசித்துக்கொண்டிருக்கின்றோம்.

அடே ரொம்ப நேரம் கம்பியூட்டரில் உட்காரதே
கன்னு கெட்டுபோய்விடும் என்ற வார்த்தையை
எவ்வளவு அழகாக வடித்தெடுத்திருக்கின்றாய்
"மின்னணு எந்திரங்களில்
நுண்ணறிவு பெறு
கண்ணொளி கருதி
கட்டுப்பாட்டுடன் கையாள் "
மிகவும் அருமை.
இதெல்லாம் எப்படி ஒரு டேபில் போட்டு யோசிப்பியோ
வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பு ஃபாரூக் காக்கா & கிரவ்னு !

ஜாஹிர் காக்காவுக்கு ஒரு மெயில் போட்டிருந்தேன் அதில் சொல்ல வேண்டிய விஷயமும் மனசுல நினைத்த விஷயங்களையும் இணைத்து நிறைய ((()) = அடைப்புக்குள் போட்டு இருந்தேன் அதனைப் பார்த்து விட்டு அவர்கள் அடித்த கமெண்டு.... அடைப்புக்குறிக்குள் இருக்கும் இருக்கும் எழுத்துக்களை எடுத்து விட்டல்... லேத்து பட்டறை உள்ளே சென்ற ஃபீலிங்க் வருது... உடைந்த இரும்புத் துண்டுகள் போன்ற சாயல் என்று அந்த பிராக்கெட்களை பற்றி சொன்னது ! :)))))))

அசத்தல் காக்காவே வருவாங்கன்னு இருந்தேன்... !

adiraimansoor said...

சபீர் உன் வார்த்தைகளில் எத்தனை ஜாலங்கள் எத்தனை வருணங்கள் ?

உன்னை நான் வளர்த்தெடுக்க
என்னை நான் வார்த்தெடுத்தேன்

முன்கோபம் முறியடித்து
முகமன் சொல்ல வைத்தேன்

adiraimansoor said...



போகும் வழியெல்லாம்
புன்னகை தூவிச் செல்
திரும்பி வருகயில்
உனக்காகக் காத்திருக்கும்
ஒரு
புன்னகை தேசம்!

மிகவும் அருமை
வம்பு தும்பில்லாத தேசம் உருவாகும்

Anonymous said...

அன்புத் தம்பிகள் Crown, &M.Nainalthambi-அபுஇப்ராஹிம் இருவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

என் வினவலுக்கு இருவரும் உடனடி அளித்த பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

இது நெருங்கிய நண்பர்களுக்குகிடையே நிலவும் 'குழுவுக்குறி' சொல். என் வினாவையும் 'லேத்து பட்டறையில்' போடாமல் பதில் அளித்த இரு தம்பிகளுக்கும் நன்றி!

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.

sabeer.abushahruk said...

இந்தப் பதிவை வாசித்துக் கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

நாம் நம் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக நல்லொழுக்கத்தோடும் நற் பழக்க வழக்கங்களோடும் வாழ்ந்து காட்டினால் மட்டுமே நம் பிள்ளைகளும் நல்லவரகளாகவும் வல்லவர்களாகவும் வளர வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கும்.

நாம் நம் இச்சைகளுக்கு இணங்கி மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு நம் மகன் அவ்வாறான செய்கைகளில் ஈடுபடும்போது அவனைத் தடுக்கவும் அடிக்கவும் முனைவது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதற்கு சமானம்.

இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்கள், ஃபாருக் மாமா அவர்கள் இருவரின் பாராட்டையும் வாழ்த்துகளையும் என் பாக்கியமாகக் கருதுகிறேன்.

என் பதிவுகளை வாடிக்கையாக ரசிக்கும் எம் ஹெச் ஜே, யாசிர், அபு இபுறாகிம், தாஜுதீன், ஜாகிர், அஹ்மது அமீன், காதர் மற்றும் மன்சூர் ஆகியோருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும். அபுபக்கர் அமேஜானுக்கும் என் நன்றி.

மன்சூரின் ஆழ்ந்த வாசிப்பையும் அபு இபுறாகீம் தன் மகனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் மிகவும் ரசித்தேன். கிரவுனின் எக்ஸ்க்லூஸிவ் விமரிசனங்களில் சொக்கிப் போனேன்.

மற்றொரு பதிவில் உரையாடுவோம். வஸ்ஸலாம்.

Riyaz Ahamed said...

சலாம்
பிள்ளைக்காக புகையை விட்ட பெரியண்ணன் வாழ்க.பிள்ளைக்கு அறிவுரை சொல்லி, அனைவருக்கும் தேவையான அறிவுரை தந்த அண்ணன் சிறப்புடன் வாழ என் துவா

அதிரைக்காரன் said...

குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதார். அந்த மழலைகள் அறியாமலே பலர் இன்றும் புகைத்த வாயோடு முத்தமிடுகின்றனர். நல்லவேளை என் பிள்ளைகளுக்கு நிகோடின் கலவாத முத்தம்தான் இதுவரை பரிசளித்திருக்கிறேன்.சுயதம்பட்டமல்ல சபீர் காக்காவும் புகைப்பழக்கத்தைக் கைவிட்டதற்கு ஒத்த காரணம் இருந்ததாலும். மற்றவர்களுக்கும் நினைவூட்டவே இப்பகிர்வு.

டேய் தம்பி ஷஹ்ரூக்! கொடுத்த வச்சவன்டா நீ. வாப்பாவின் கவிதையை படுக்கையறையில் பதிந்துவை. உன் மகனுக்கும் (இன்ஷா அல்லாஹ்) உதவும்.

அப்துல்மாலிக் said...

பிள்ளை பெற்றெடுத்து அதுக்கு முழு பொறுப்புணர்வையும் ஊட்டி வளக்கும் விதம், ஒவ்வொரு தகப்பனும் படிப்பினை பெற உதவும் வரிகள்

KALAM SHAICK ABDUL KADER said...

// விண்முட்டும் கட்டடத்திற்கும்
முதற்படிதான் துவக்கம்//

"கான்க்ரீட் காடுகள்” என்னும் கவித்துவச் சொற்களைக் கவிதைக் கட்டிடத்துக்குள் புகுத்திய கவிவேந்தர் என்னும் பொறியாளரின் மற்றுமோர் ஆழமான ஞான அஸ்திவாரம்!

//பொழுது புலர்வதை
நீ காணும் நாட்களே
உன்
வாழ்நாட்கள் என கணக்கில் வை//

உறங்கப் போகு முன்பாக உள்ளத்தில் பதிய வைக்க வேண்டிய உன்னதமான வரிகள்.

//என்னைப் பார்த்தே
எல்லாம் கற்கும்
உன்னைப் பார்த்து
உள்ளம் பூரித்தேன்//

எந்தத் தகப்பனும் இந்த அளவுக்குத் தன்னிலையை அளவுகோலாய்த் துணிந்துச் சொல்ல முடியாது!(இற்றைப் பொழுதினில்...)

குறிப்பு;
தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு