Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் 19 29

அதிரைநிருபர் பதிப்பகம் | June 08, 2013 | ,


தொடர் : பத்தொன்பது

இஸ்லாமிய பொருளாதாரத்தைத்  தாங்கி நிற்கும் தூண்கள். (வணிகத்தில் நேர்மை)

அண்மைக் காலமாக உணவு தானியங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களின் கழுத்தை நெறித்து வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கும் எதிர்பாராத அளவுக்கும்  உயர்ந்துள்ளன.            ரூ. 2830 ஆக இருந்த உளுத்தம் பருப்பின் விலை இன்று ரூ. 5055 ஆக உயர்ந்து விட்டது. இதர அகப் பொருள்களான  அடுக்களைப் பொருள்களின்  விலைகள் வானுயர               உயர்ந்துவிட்டன. குறிப்பாக  பருப்பு வகைகளின் விலைகள்  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. 

திடீர் திடீரென   ஏற்படும்  இந்த விலையேற்றத்துக்குக் காரணம் என்ன? முன்னறிவிப்பில்லாத நடுநிசியில் நடக்கும்  பெட்ரோல் டீசல் விலையேற்றம் ஒரு புறம் ஒரு முக்கிய காரணம் என்றாலும், அதையும் மீறி இந்த விலைவாசி ஏற்றத்தை ஆட்டிப் படைக்கும் பிசாசு என்ன? அந்தப் பிசாசின் பெயர் “ஆன்லைன் வணிகம்” எனப்படும் "இணையதள விற்பனை நடைமுறை '' எனும் உலகளாவிய ஊக வணிகமே இந்த விலையேற்றத்துக்கு அடிப்படையாக உள்ளது.

ஆங்கிலத்தில் ""ஆன்லைன் டிரேடிங்'' (Online Commodity Trading; Futures Trading) என்றழைக்கப்படும் இணைய தள விற்பனை என்பது, இரு நபர்களுக்கிடையே அல்லது இரு நிறுவனங்களுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் ( SPECULATION)  அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தமாகும். அதாவது, ஒரு விற்பனையாளர் சில  மாதங்களுக்குப் பிறகு தோராயமான ஊக விலைக்கு உணவு தானியங்களை வாங்குவதாக, வாங்குபவரிடம் இணையதளம் மூலம் ஒப்புக் கொள்ளும் முறையாகும். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருள்கள் தற்போது "ஆன்லைன் வர்த்தகம்'' எனப்படும் இணையதள விற்பனைக்கு வந்துள்ளன. 

இத்தகைய இணையதள விற்பனையை எளிதாக்கும் பொருட்டு பல்வேறு தொடர்பக நிறுவனங்கள் (எக்ஸ்சேஞ்சுகள்) இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் ஒருநாளைக்கு ஏறத்தாழ ரூ. 5,000 கோடி அளவுக்கு விற்பனைப் பரிமாற்றங்கள் நடந்து வருகின்றன என அளவிடப்பட்டுள்ளது. 

மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது ஒரு எளிய பரிமாற்றமுறை போலத் தோன்றினாலும், உண்மையில் இது ஊக வணிகர்களின் கொள்ளைக்கும் பதுக்கலுக்கும் கள்ளச் சந்தைக்கும்  விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடேயாகும். உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும், உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களின் அழிவுக்கும், பல நாட்டு செலாவணியின் அதாவது ரூபாயாக இருந்தாலும் ரூபிலாக இருந்தாலும் லிராவாக இருந்தாலும் திர்ஹமாக இருந்தாலும் தினாராக இருந்தாலும்  அவற்றின்  மதிப்பில் எதிர்பாராத ஏற்ற தாழ்வுகள் ஏற்படவும் சில நேரங்களில் செல்லாக்காசாகிப் போவதற்குமான இன்னுமொரு ஏகாதிபத்திய சதியே ஆகும்.

சில உதாரணங்களைக் கூறி விளக்குவது சற்று எளிதாக அமையலாம். 

முதலாவதாக இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் எந்த உணவுப் பொருளை    ஈடுபடுத்துகிறோமோ அந்தப் பொருள் உங்களிடம் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பாக உங்கள் கிடங்குகளில் அடுக்கி வைக்கப் பட்டு இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.  ஐநூறு மூட்டை நெல்லை ஒருவருக்கு விற்பதாக நீங்கள் ஒப்புக்கொண்டால் அந்த ஐநூறு மூட்டை நெல் உங்களிடம் இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. உங்களிடம் இணைய தள வசதியுடன் கூடிய ஒரு செல் போன் இருந்தால் போதும். 

சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி  சோம்பல்  இல்லாமல் ஏர் நடத்தி கம்மாக் கரையை ஒசத்திக் கட்டி கரும்புக் கொள்ளையில் வாய்க்கால் வெட்டி   சம்பாப் பயிரை பறித்து நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நீங்கள் நெல் விளைவித்திருக்க வேண்டியது இல்லை. 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் ஒன்று விவசாய வேலைகளை பட்டியல் இடுகிறது. 

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டை  உழுதுபோட்டு                 பசுந்தழையைப்போட்டு பாடுபட்டு ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித விதச்சி நாத்தப் பறிச்சி நட்டுப்போட்டு தண்ணியை ஏத்தம் புடிச்சி இறைச்சிப் போட்டு கருத நல்லா வேலைய வச்சு மருத ஜில்லா ஆளவச்சு  களத்து மேட்டுலே அறுத்துப் போட்டு நல்லா அடிச்சி தூத்தி அளந்து போட்டு பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருது நகர்  வியாபாரிக்கு வித்துப் போட்டு பணத்த எண்ணு என்று அந்தப் பாட்டு பட்டியலியலிடுகிறது. ஒரு மணி  நெல் விளைவிக்கவும்   அதை விற்கவும்  இவ்வளவும் செய்ய வேண்டும். 

“ஏரினும் நன்றாமெருவிடுதல் இட்டபின் 
நீரினும் நன்றதன் காப்பு.”
  
என்றும் இன்னும் பலபடவும் உழவின் மேன்மையையும் முறையையும் வழிகளையும் பற்றி வள்ளுவரும் பேசுகிறார்.   

ஆகவே நிலத்தில் விவசாயி வியர்வை வடித்து உழைத்தால்தான் உணவுப் பொருள் உற்பத்தியாகும் என்பதே பொதுவான விதி. 

ஆனால் நிலம் இல்லாமல் நீர் இல்லாமல் விவசாயம் பண்ணாமல் வியர்வை வடிக்காமல் உற்பத்தி செய்ய முடியும் என்றால் அது ஆன் லைனில் முடியும். ஒரு நெல் மணியைக் கண்ணால் கூட காணாதவன் கூட ஆயிரக்கணக்கான  மூட்டைகள் நெல்லை வாங்க முடியும் விற்கவும் முடியும் அதில் பெரு இலாபமும் சம்பாதிக்க முடியும். 

இது எப்படி சாத்திய மாகும்? 

ஒரு பருப்பு வியாபாரியிடம் 5 டன் பருப்பு மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவரிடம் ஒரு நிறுவனம் இணையதளம் மூலம் கிலோ ரூ. 30க்கு உளுத்தம் பருப்பு வாங்க ஒப்பந்தம் செய்து கொள்கிறது. பிறகு, வேறொரு நிறுவனம் அதே வியாபாரியிடம் ஒரு கிலோ பருப்பை ரூ. 50க்கு வாங்குவதாகவும், தமக்கு 10 டன் பருப்பு தேவை என்றும் கேட்கிறது. அவர் ரூ. 30க்கு பருப்பை விற்பதாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடமிருந்து, அதே பருப்பை ரூ. 40க்கு வாங்கிக் கொள்வதாக புதிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அந்தப் பருப்பை ரூ. 50க்கு வாங்குவதாகக் கூறிய நிறுவனத்திடம் விற்க ஒப்புக் கொள்கிறார். இப்படி பல நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கின்றன. நாட்டின் ஒட்டு மொத்த பருப்பு விளைச்சலும் இந்த நிறுவனங்களின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டு விடுகிறது. உண்மையில் உற்பத்தியானதும் கிட்டங்கியில் இருப்பதும் ஐந்து டன் தானியமாக இருந்தாலும் இந்த ஐந்து தன்னை வைத்து ஐநூறு வர்த்தகர்கள் ஆன்லைனில் விளையாடவும் விலையாடவும் முடியும். விளைவு விலையேற்றம்.

பிறகு இந்த நிறுவனங்கள், அவற்றைப் பதுக்கி வைத்துக் கொண்டு தட்டுப்பாட்டை உருவாக்கி, மீண்டும் விலையை உயர்த்தி அதே பருப்பு வியாபாரியிடம் கிலோ ரூ. 60க்கு விற்கின்றன. கடைசியில் ரூ. 30க்கு விற்ற பருப்பு இந்த இணையதள ஊக வணிக சூதாட்டத்துக்குப் பிறகு ஒரு மடங்கு விலை ஏறிவிடுகிறது. இதனால் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிக்கோ,  வாங்கி நுகரும் பொதுமக்களுக்கோ   ஒரு பலனுமில்லை; மாறாக, விலையேற்றத்தின் பாரத்தை அவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. உற்பத்தியிலோ விற்பனையிலோ எவ்வித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்களான இந்த நிறுவனங்கள், ஊக வணிகத்தின் மூலம் ஓடும் காரில் இருந்துகொண்டும் பறக்கும் விமானத்தில் இருந்து கொண்டும் கோடிகோடியாய் கொள்ளையடிக்கின்றன. இப்படி உற்பத்தியே ஆகாத பொருள்களை கற்பனையாக விற்று வாங்கி நடத்தும் வர்த்தக சூதாட்டமே ஆன் லைன் வர்த்தகம். ஆண் தன்மையற்ற வணிகமே ஆன்லைன் வர்த்தகம். கழனிகள் உணவை உற்பத்தி செய்த காலம் போய் கணினிகள் உற்பத்தி செய்யும் காலம்.  கற்பனை வணிகத்தில் காசுகள் கொட்டும் காலம்.

கடந்த சில மாதங்களில், இணைய தள விற்பனையின் விளைவாக, உளுந்துக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு, உளுத்தம் பருப்பின் விலை ஒரு மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் அப்பள உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. 

இந்தியாவின் பருப்புத் தேவை ஆண்டுக்கு ஏறத்தாழ 300 லட்சம் டன்கள்தான். ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 6 கோடி டன்கள் அளவுக்கு ""ஆன்லைன் வர்த்தகம்'' மூலம் சூதாட்டம் நடந்துள்ளது. 

இவ்வளவு பிரம்மாண்டமாக இந்த சூதாட்ட வர்த்தகம் நடந்தபோதிலும், உண்மையில் இந்த இணையதள விற்பனை மூலம் ஏறத்தாழ 6000 டன்கள் அளவுக்குத்தான் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  6000 டன் பருப்பு வாங்கிய ஒருவர் அதை 6 கோடி டன் பருப்பாக மாற்றி விற்க முடியுமா? ஒருக்காலும் சாத்தியமில்லை என்று நீங்கள் அடித்துச் சொல்லலாம். ஆனால், இதுதான் ஊக வணிகச் சூதாட்டம். எவ்வித உரிமமோ, கட்டுப்பாடோ இல்லாமல், உற்பத்திக்கும் வியாபாரத்துக்கும் தொடர்பே இல்லாத கோட்டுசூட்டு போட்ட பேர்வழிகள், குளுகுளு அறையில் கணிப்பொறி முன்னே அமர்ந்து கொண்டு நடத்தும் இந்த சூதாட்டக் கொள்ளைக்குப் பெயர்தான் "ஆன்லைன் வர்த்தகம்." சூடாக நடக்கும் இந்தச் சூதாட்டத்தைத்தான், "விறுவிறுப்பான வர்த்தகம், பங்குச் சந்தை விலைப் புள்ளிகள் உயர்வு" என்றெல்லாம் பொருளாதார சூரப்புலிகளும் ஆட்சியாளர்களும் சித்தரித்து, நாடு நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாக நமது காதில் பூச்சுற்றுகின்றனர். அத்துடன் இப்படிப்பட்ட கனவு மாளிகையில் பரிமாற்றம் செய்யப்படும் தொகைகளின் அளவும் நாட்டின் வர்த்தக வளர்ச்சி விகிதத்தில் சேர்த்து கணக்கிடப்படுவது பொருளாதாரப் புள்ளிவிபர அறியாமையின்  உச்சகட்டம். 

இணையதள விற்பனை எனப்படும் இந்த ஊக வணிகச் சூதாட்டத்தினால், விலைவாசிகள் தாறுமாறாக உயர்கின்றன. இணைய தள சூதாட்ட வர்த்தகர்கள் செயற்கையான உணவுதானியத் தட்டுப்பாட்டை உருவாக்குவதால் கடத்தலும் பதுக்கலும் கள்ளச் சந்தையும் பெருகுகின்றன. இந்த இணையதள விற்பனையால், நேரடி கொள்முதல் விற்பனைக்காக வாய்ப்புகள் குறைந்து பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளும், மண்டித் தொழிலாளர்களும் சரக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களும் வாழ்விழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரமே சூதாட்டமாகி திவாலாகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், நாட்டைச் சூறையாடி வரும் ஏகாதிபத்தியங்கள், உணவுதானிய வர்த்தகத்தையும் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யும் மறுகாலனியத் தாக்குதலின் ஓர் அங்கம்தான் ""ஆன்லைன் வர்த்தகம்''.

இந்தியாவில் இந்த அந்த வர்த்தக் சூதாட்டத்துக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்டு இருக்கிறது. இதனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல் விவசாயிகள் பலன் எதுவும் பெறவில்லை. வாங்கி சாப்பிடும் பொது மக்களுக்கும் பயன் இல்லை. இடைத்தரகர்கள் மற்றும் பெரும் வியாபாரிகள் கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்கின்றனர். 

இந்தியாவில் மழைவெள்ளம் காரணமாக, கடந்த ஆண்டில் பயறு விளைச்சல் குறைந்துவிட்டதால், தட்டுப்பாட்டைப் போக்க அரசாங்கம் தாராளமாக இறக்குமதி செய்யும் என்பதைத் தெரிந்து கொண்ட அன்னிய வர்த்தக நிறுவனங்கள், பயறு விலையைத் தாறுமாறாக உயர்த்திக் கொண்டு ஆதாயமடைந்தன. மக்களுக்கு விலை குறைவாகக் கிடைக்க உதவுகிறோம் என்ற போர்வையில் அரசாங்கம் சுங்க வரியைக் குறைப்பதாக அறிவித்தது. தற்போது சுங்கவரிக் குறைப்பினால் கொள்ளையர்கள் இரட்டை இலாபமடைந்தனர்  என்பதே நிதர்சனம்.  அந்நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயறை உடைத்து பருப்பாக மாற்றும் சிறு தொழில் பருப்பு ஆலை உரிமையாளர்களும் வியாபாரிகளும் இணையதள விற்பனையால் பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள். சாமானிய மக்களோ விலையேற்றத்தால் திணறுகிறார்கள்.

ஆன்லைன் வியாபாரத்தின் மூலம் இன்று அரிசி , பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தங்கம் போன்ற விலைமதிப்புள்ளவைகளும்  தாறுமாறான விலையேற்றம் கண்டிருக்கிறது. ஒரு கிலோ தங்கம் வாங்கியவர் அது தன் கையில் வராமலேயே மறு விற்பனை செய்து லாபம் பார்த்திருப்பார். உலகில் இருக்கும் தங்கத்தின் அளவை விட கூடுதலாக ஆன்லைனில் தங்க விற்பனை நடந்திருக்கும். விளையாத பொருளுக்கான விலைவாசி விண்ணுக்கே உயர்ந்து கொண்டே செல்கிறது. தோண்டாத தங்கத்தின் விலை தொடமுடியாத உச்சத்தில் தொங்குகிறது. எட்டிப் பிடிக்க ஏழைகளுக்கு  இயலவில்லை. தாலிக்கும் கருமணிக்கும் ஏழைகள் தட்டுப் பிச்சை ஏந்த வேண்டி இருக்கிறது.  

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு அடித்தளம் அமைக்கும் இணையதள விற்பனையின் கொள்ளையையும் பாதிப்பையும் உணரத் தொடங்கியுள்ள பலநாடுகளிலும்  உள்ளூர் வர்த்தகர்களும் வியாபாரிகளும் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்யக் கோரி கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.  இந்தியாவில் " சரத் பவார் அண்ணாச்சி , சாம்பார் கதி  என்னாச்சி?'' என்ற முழக்கம் நாடெங்கும் கேட்டது.   ஆன்லைன் வர்த்தகத்துக்குத் தடை செய்யக் கோரும் இப்போராட்டத்தை, நாட்டைச் சூறையாடும் மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டமாக வியாபாரிகளும் உழைக்கும் மக்களுக்கும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

உணவுப் பொருள்களில் மட்டுமல்லாமல் ஷேர் மார்க்கெட்,   கமாடிட்டி மார்க்கெட், நிஃப்டி, ஃபோரக்ஸ், ஆன்லைன் வியாபாரம் என இந்த வியாபார வலை பரவலாக விரிந்துள்ளது.  

இஸ்லாமிய ப் பொருளாதாரம்  இதைப் பற்றி என்ன சொல்கிறது ?

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம். 
இபுராஹீம் அன்சாரி

29 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

ஆன்லைனில் நடக்கும் ஸ்பெகுலேட்டிவ் இன்வஸ்ட்மென்ட் தான் அத்யாவசிய பொருள்களின் விலை ஏற்றத்திற்கு மிகப்பெரிய காரணம் என்று இதை விட தெளிவாக சொல்வது கடினம்.

விவசாயிகளின் பட்டினிச்சாவும், வறுமையும் பற்றி 1 % கூட தெரிந்து கொள்ளாமல் 1000% லாபம் சம்பாதிக்கும் இந்த வர்த்தகம் ஒழிந்தால் தான் விடிவு. இதை அரசாங்கமும் இன்டர்னெட்டை கட்டுப்படுத்தும் அமைச்சும் சேர்ந்து செய்தால்தான் உண்டு.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
காக்கா,
 
மிகத் தெளிவாகப் புரிகிறது.  இத்தனை நெளிவுசுழிவுகளா?  தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை இப்படி மக்களின் வயிற்றில் அடிக்கவா பயன்படுத்துவது?  இது எதுவுமே எங்களுக்குத் தெரியாது என்பது போலல்லவா மக்கள் நலம் காக்க அமைந்த அரசாங்கங்கள் இருக்கின்றன!
 
நெல் விளைவிப்பதுபற்றிய கலயாண சுந்தரனாரின் பாடலில் “சேர்த்த பணத்தைச் சிக்கனமா செலவு செய்ய  பக்குவமா ‘அம்மா’ கையிலே கொடுத்துபோடு”ன்னு வருதே அது இந்த ‘அம்மா’வோ.
 
இல்லாதவற்றை இருப்பாகக் காட்டி, தனக்குச் சொந்தமல்லாதவற்றிற்கு உரிமையாளராகக் காட்டி வணிகம் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த ‘ஆன்லைன் வர்த்தகம்” ஒரு பூதம்தான்.
 
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
 

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//M.B.A.அஹமது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//

ஆசிரியரால் அகற்றப்படாமல் அழகான முகத்துடன் கருத்தை எப்போது எதிர்பார்ப்பது?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்படியெல்லாம் இடைக் கொள்ளையர்களால் விலை ஏறுகிறது என்பதற்கு மிகத் தெளிவான விளக்கம்.

காக்கா டீ ஒன்னு!
ஆன்லைன் வர்த்தகத்துக்கு துணை போகும் ஆளும் வர்க்கம் என்று சொல்பவர்கள் விலைவாசிகள் குறைப்பு பற்றி பேச தகுதி உண்டா?
நாட்டின் நிலைமையை விட நமது நலனே முக்கியம் என்பது ஆள்பவர்களின் நோக்கமாக தெரிகிறது. சரியா காக்கா.

Shameed said...

உண்மை உண்மையான பெயரில் வரும்போது (தவறான பின்னுட்டம் இல்லாத பட்சத்தில்) உண்மையின் (M.B.A.அஹமது )பின்னுட்டத்தை அனுமதிகனுமதிப்பதை பற்றி எடிட்டர் ஆலோசிக்கலாம்

Shameed said...

//முன்னறிவிப்பில்லாத நடுநிசியில் நடக்கும் பெட்ரோல் டீசல் விலையேற்றம்//

மாமா எனக்கு ஒரு "டவுட்" பெட்ரோல் விலை ஏற்றம் நடுநிசியில் நடப்பதற்கும் இந்தியா நடு நிசியில் சுதந்திரம் அடைந்ததற்கும் ஏதாவது "கனக்சன்" இருக்கா ?

Ebrahim Ansari said...

அன்புத்தம்பி எம் ஹெச் ஜெ

//ஆன்லைன் வர்த்தகத்துக்கு துணை போகும் ஆளும் வர்க்கம் என்று சொல்பவர்கள் விலைவாசிகள் குறைப்பு பற்றி பேச தகுதி உண்டா?// = இல்லை இல்லவே இல்லை.

//நாட்டின் நிலைமையை விட நமது நலனே முக்கியம் என்பது ஆள்பவர்களின் நோக்கமாக தெரிகிறது. சரியா காக்கா.//= சரியே.

நினைவூட்டுகிறேன் தம்பி சபீர் அவர்கள் கேட்ட அந்த டீ இன்னும் வரலே .

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களே!

//அது இந்த ‘அம்மா’வோ.// இப்போ நாடெங்கும் அம்மா பார்த்து இருக்குது.

Ebrahim Ansari said...

மருமகன் சாகுல்!

//முன்னறிவிப்பில்லாத நடு நிசியில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்//

ஒரு முரண்பாடான கொள்கை. அடிப்படை அறிவற்றவர்கள் கூட இப்படி செய்ய மாட்டார்கள். நடைமுறையில் இதனால் எவ்வளவு சிக்கல் வருகிறது என்று கடந்த வாரம் அனுபவித்தேன்.

ஒரு லாரி தேங்காய் குஜராத்துக்கு லோடு ஏற்றி ஆகிவிட்டது. லாரி வாடகை முன்னரே ஒப்புக் கொண்டாகிவிட்டது. வாங்கும் பாரதிக்கும் சொல்லியாகிவிட்டது. லாரி பேராவூரணியில் லோடு ஏற்றி திருச்சி வழியாக பெங்களூர் சென்று அங்கிருந்து பம்பாய் போய குஜராத் போகவேண்டும். லாரி பெங்களூர் போகும்போது நள்ளிரவாகிவிட்டது.கர்நாடகத்தில் விற்பனைவரி குறைவு என்பதால் அங்கு பொய் எரிபொருள் நிரப்புவது பழக்கம். ஆனால் நள்ளிரவில் பங்க் போனபோது விலை ஏறிவிட்டது. இரவு ஒரு மணிக்கு போன் வருகிறது. மு பேசிய வாடகை கட்டுபடியாகாது. குஜராத் போக முடியாது- மேலும் கூடுதலாக வேண்டும். இல்லாவிட்டால் லாரியை எடுக்க முடியாது. அப்படி இப்படி என்று . பிறகு பார்டிக்கு குஜராத்துக்கு போன் போட்டுப் பேசி சரி செய்து வித்தியாச டீசல் உயர்வை ஒப்புக் கொண்டபிறகு லாரி புறப்பட்டுப் போனது.

இப்படி விலை ஏறும் ஒவ்வொரு முறையும் எல்லோருக்கும் சங்கடங்கள்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு அலைக்குமுஸ் ஸலாம். எப்போ பம்முவதாக உத்தேசம்? ஹஹஹஹா.

Anonymous said...

//இந்தியாவில் வர்த்தக சூதாட்டடதிற்கு இரத்தின கம்பளம்/// இரத்தின கம்பளத்தை வாங்கி கொடுத்ததே அந்த ஏகாதிபத்தியம் தானே!.. அதை அரசு பகைத்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும். ஜனநாயகமும் online சூது ஆட்டத்தின் தயவில்தான் மஞ்சளும் குங்குமத் தோடும் வாழ்ந்து வரும். பகைத்தால் நாற்காலிக்கு ஆள்மாறும்.. அதுவும் பழைய மொந்தையில் பழைய கள்தான்.Old Wine in Old Bottle.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.

Anonymous said...

ஆன்லைன்-குலே இத்தனை விவகாரம் gulmaaல் எல்லாம் நடக்குதா?

பொதுவாவே பெண்லைன் தான் நடுநிசி குசு குசு காதுல உட்டு குடும்பத்திலே ஏற்ற இறக்கம் மாற்ற தோற்றம் உண்டாக்கும்......... உம்ம்ம் ஆண்புளைங்கலும் ஆரம்பிச்சுட்டாங்களாளா ளாளாளா ? அல்லாஹ்தான் காப்பாத்தனும்!.

S..முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Abdul Razik said...

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு அடித்தளம் அமைக்கும் இணையதள விற்பனையின் கொள்ளையையும் பாதிப்பையும் உணரத் தொடங்கியுள்ள பலநாடுகளிலும் உள்ளூர் வர்த்தகர்களும் வியாபாரிகளும் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்யக் கோரி கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தியாவில் " சரத் பவார் அண்ணாச்சி , சாம்பார் கதி என்னாச்சி?'' என்ற முழக்கம் நாடெங்கும் கேட்டது. ஆன்லைன் வர்த்தகத்துக்குத் தடை செய்யக் கோரும் இப்போராட்டத்தை, நாட்டைச் சூறையாடும் மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டமாக வியாபாரிகளும் உழைக்கும் மக்களுக்கும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

உணவுப் பொருள்களில் மட்டுமல்லாமல் ஷேர் மார்க்கெட், கமாடிட்டி மார்க்கெட், நிஃப்டி, ஃபோரக்ஸ், ஆன்லைன் வியாபாரம் என இந்த வியாபார வலை பரவலாக விரிந்துள்ளது.

இஸ்லாமிய ப் பொருளாதாரம் இதைப் பற்றி என்ன சொல்கிறது ? ????????????? பதிலை விறைவில் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.

Anonymous said...

/////// வாங்கும் பாரதிக்கு சொல்லியாகிவிட்டது ///////

அன்புள்ள மைத்துனர் இப்ராகிம் அன்ஸாரி அவர்களே!

மச்சான் சொல்லும் அஸ்ஸலாமு அலைக்கும்!.

நீங்கள் பாரதியாரிடம் தேங்காய் வியாபாரம் செய்வதில் ரெம்போ சந்தோசம்!

பாரதியார் தமிழ்நாட்டை விட்டு தேங்காய் வியாபாரம் செய்ய குஜராத் போய்ட்டார?

இனி "ஆடுவோமே பள்ளுபாடுவோமே"பாட்டு பாடவே மாட்டாரா?

/////அங்குபொய் எரிபொருள் நிரப்புவது//////// பொய் எரி பொருளுக்குவிலை ஏறவில்லையா? அப்போ அது ஆன்லைன் வர்த்தகத்தில் சிக்கவில்லையோ?

கர்நாடகாவில் பொய் எரிபொருள் என்ன விலை?

ஆகையால் வேணும் துவா சலாம்.

இப்படிக்கு

s.முஹம்மதுபாரூக். அதிராம்பட்டினம்

குறிப்பு : இந்த கடுதாசிய தந்தி போல் பாவித்து பாதில் போடவும். ( நீங்கள் பாரதியாருடன் யாவாரம் செய்றதை கமுக்கமா வச்சுக்கிட்டு உங்க மருமகன் சாவனாகிட்டே மட்டும் சொன்னா எனக்கு தெரியாமே போகுமா?)

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,
இந்த அத்தியாயம் எனக்காகவே  ரொம்ப சிரத்தை எடுத்து எழுதப்பட்டதுபோல மிகவும் விரிவாகவும் தெள்ளத்தெளிவாகவும், என்போன்ற ஹைட்ராலிக்ஸ் தலையர்களுக்குக் கூட புரியும்படியும் எழுதப்பட்டிருந்ததால் கேள்வி எழுப்ப வழியின்றிப் போனது. அதற்காக, “முந்தைய அத்தியாயங்களில் கேள்விகள் கேட்டாயே அவைத் தெளிவாக எழுதப்படவில்லையா?” என்று கேட்கக்கூடாது.  வணிக மற்றும் பொருளாதாரப் பாடங்களில் பலகீனனான எனக்கு அவற்றில் எழுந்த ஐயங்கள் இயல்பானவை.  என்போன்றோர் தெளிவு பெற வேண்டியே கேட்டேன்.
 
மேலும், என் கேள்விகளுக்குத் தாங்கள் தந்த விளக்கங்கள் மிகச் சிறப்பானவை.  இந்தப் பதிவு புத்தகமாக வெளிவரும் காலத்தில் என் கேள்விகளுக்கான தங்களின் பதில்களையும் எடிட் செய்து பிரதானப் பதிவில் இழைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
சந்தேகம் இல்லை காக்கா. இருப்பினும், எம் ஹெச் ஜேயின் கேள்வி எனக்குப் பிடித்திருந்தது. ஹமீதின் இரண்டு கேள்விகளில் ஒன்றுக்குத் தாங்கள் தந்த பதில் ஏற்புடையது எனினும், எனக்கு ஒன்று தோன்றுகிறது. சரியா என்று தெரியவில்லை. அது,
நள்ளிரவில்தானே நாள் துவங்குகிறது. அதனால், கணக்குவழக்குகளின் துள்ளியம் நிலைநாட்ட வேண்டி, நாளின் முதல் நிமிடத்திலேயே, அதாவது 00:01 லேயே விலை மாற்றம் அமலாக்கப்படுகிறதோ!
 
ஹமீதின் இரண்டாவது கேள்வி: ஒரு சகோதரரின் பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டதை அனுமதித்தால் என்ன? என்னும் கேள்விக்கு, அதிரை நிருபர் சொல்லுமுன் எனக்குத் தெரிந்த பதில், “நீங்களும் நானும் உங்கள் அடையாளத்துடனும் என் அடையாளத்துடனும் உரையாடும்போது, யாவரும் தத்தம் அடையாளங்களுடன் உரையாடுதலே எல்லாவற்றிற்கும் நன்மையளிக்கும். இல்லையா? மேற்கொண்டு விவரங்களை, எடிட்டோரியலில் இருக்கும் ஹமீதுக்கு அமீர் தனி மடலில் விளக்குவார்.

M.B.A.அஹமது said...

சிறு வயதில் கோழி இறை தின்னும் போது பார்த்திருக்கிறேன்.பெரும்பாலானவர்களும் பார்திருபீர்கல். மற்றொரு கோழி வரும்போது என்ன செய்யும் என்று சகோதரர் ஜாபர் சாதிக் இதில் யார் ஆண் இதில் யார் பெண் என்று விளக்கினால் தான் தேவலாம்

Ebrahim Ansari said...

மச்சான் எஸ். முகமது பாரூக் அவர்களுக்கு,

சாச்சிப் புட்டியலே மச்சான்.

தட்டச்சுப் பிழைகளுக்கு வருந்துகிறேன்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,

ஜசாக் அல்லாஹ்.

நாள் ஆரம்பமாகும் நேரத்தில் விலையேற்றம் சரிதான். எனது ஆதங்கம் அதை ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தால் பயணிப்பவர்கள் தயாராக பயணிக்க முடியும் என்பதே. விலை நிர்ணயமும் சுலபமாகும்.


தங்களின் அன்பான கருத்து - கேள்வி பதில் பற்றியது - இன்ஷா அல்லாஹ் அதன்படியே செய்து கொள்ளலாம். எங்களில் ஒருவரான உங்களின் பங்களிப்பு இல்லாமலா இது நூலாக வரும்?

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் அவர்களும் முதல் பின்னூட்டம் இட்டு இருப்பது மலேசியாவிலும் ஆன் லைன் வர்த்தகத்தின் மேகமூட்டம் இருப்பதை பறை சாற்றுகிறது.

பழைய காலத்தில் பலரும் ரசித்துக் கேட்ட பாடல் ஒன்று உண்டு. இந்தப் பாடல் வெளிவந்து ஒரு நாற்பது வருடங்கள் கூட இருக்கலாமென்று கருதுகிறேன். அன்றே இந்த நிலையை கணித்து இருக்கிறார்கள். பாட்டு இதுதான்.

" டிங்கிரி டிங்காலே டிங்கிரி டிங்காலே!
உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே

அதிகமாக படிச்சுப் படிச்சு மூளை வறண்டு போச்சு
அனுகுண்டைத்தான் போட்டுக் கிட்டு அழிஞ்சு போகலாச்சு
அப்பன் பாட்டன் காசு எல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் கூறிடுவார் ஐ ஆம் வெரி சாரி ''

sabeer.abushahruk said...

//ஆண் தன்மையற்ற வணிகமே ஆன்லைன் வர்த்தகம். கழனிகள் உணவை உற்பத்தி செய்த காலம் போய் கணினிகள் உற்பத்தி செய்யும் காலம். கற்பனை வணிகத்தில் காசுகள் கொட்டும் காலம்.//

wonderful talent of describing the content deeply and literally. maashaa Allah.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேலான பதிலுக்கு மிக்க நன்றி. காக்கா!

//நினைவூட்டுகிறேன் தம்பி சபீர் அவர்கள் கேட்ட அந்த டீ இன்னும் வரலே //

அவங்க கொடுத்த டீformula தமிழ்காரமாய் இருந்ததால் ஈசியாக இங்லீஸ் டீformula கேட்டு மெயில் அனுப்பினேன். வந்ததும் அனுப்புறேன். சூப்பர் ட்டீயாய். இன்சா அல்லாஹ்!

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! இந்த வரிகள் உங்களுக்குப் பிடிக்குமென்று எனக்கு எழுதும்போதே தெரியும். மொத்த அத்தியாயத்தின் உட்பொருளை இந்த வரிகள் சாறு பிழிந்து கொடுக்கும்.

நான் பழகுவது கவிஞர்களுடனாக்கும். எனவே சற்று அந்தக் காற்று அடிக்கும். அதிலும் உங்களின் காற்று நிறையவே தென்றலாக வீசும்.

sabeer.abushahruk said...

//அவங்க கொடுத்த டீformula தமிழ்காரமாய் இருந்ததால் ஈசியாக இங்லீஸ் டீformula கேட்டு மெயில் அனுப்பினேன். வந்ததும் அனுப்புறேன். சூப்பர் ட்டீயாய். இன்சா அல்லாஹ்//

எம் ஹெச் ஜே: அன்னிக்கே அலுவலக் மெயிலிருந்து பதில் அனுப்பி விட்டேனே!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//எம் ஹெச் ஜே: அன்னிக்கே அலுவலக் மெயிலிருந்து பதில் அனுப்பி விட்டேனே!!!//

அப்படி ஒன்னும் வரலையே காக்கா!

M.B.A.அஹமது said...

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) இப்ராகிம் அன்சாரி காக்கா ஜாகிர் காகாவின் பின்னூட்டத்திற்கு முன்பே என்னுடைய பின்னோட்டம் உங்களை பிரதமருக்கு நிகராக பாராட்டி பின்னோட்டம் இட்டுரிந்தேன் இது ஜாகிர் காகாவும் பார்த்திருப்பார்கள் அது ஏனோ மட்டுருதபட்டிவிட்டது.

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தத் தொடரைப் படித்து தொடர்ந்து கருத்தும் ஆலோசனையும் கேள்வியும் எழுப்பும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது மகிழ்வைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே ஒரு வேண்டுகோள். இந்த அத்தியாயத்தில் படித்த செய்திகளை மறக்காமல் நினைவில் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் அடுத்த அத்தியாயம் இந்த வரிகளுடன் தொடர்புடையது.

இங்கே சுட்டிக் காட்டபப்ட்ட அவல நிலைகளை இஸ்லாம் எந்தக் கோணத்தில் நோக்குகிறது தீர்க்கிறது என்பதைப் பற்றிய கருத்துக்கள் வரும் அத்தியாயத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.

ஜசக் அல்லாஹ் ஹைரன்.

Yasir said...

”ஆன் லைன்” வர்த்தகத்தின் நெளிவு சுழிவுகளை தெளிவாக /விளக்கமாக விளக்கியதற்க்கு நன்றி....தொடரின் அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளோம்...

அப்துல்மாலிக் said...

ஆன்லைன் வர்த்தகம் என்பது தற்போது நம் உயிருடன் ஒன்றிவிட்டது என்பது மறுக்க இயலாது. வீட்டுலே உக்கந்துக்கிட்டு பீட்ஸா ஆர்டர் செய்வதுலேர்ந்து ஆன்லைலே காசு-பணம் அடுத்த அக்கவுண்ட்க்கு அனுப்புவது முதற்கொண்டு. இதுலே அதிகபட்சம் எல்லோருமே (வர்த்தகர்கள் உட்பட) ருசி கண்டுட்டாங்க. இனிமேல் இந்த வர்த்தகம்தான் மேலோங்கப்போகுதே ஒழிய எந்த ஆட்சி வந்தாலும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை

“ஆன்லைன் வர்த்தகம்” பற்றிய தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு