Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 18 38

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2013 | ,


தொடர் : பதினெட்டு

இஸ்லாமிய பொருளாதாரத்தைத்  தாங்கி நிற்கும் தூண்கள். (வணிகத்தில் நேர்மை) !

ஒரு கதை அதைப்  பகிரலாம். 

வணிகன் ஒருவன் இறந்து போனான்.  எமதூதர்கள் வந்து அவனை வானுலகம் அழைத்து சென்றனர். வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது. வணிகன் கேட்டான், 

''இது எந்த இடம்? என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?''

எமதூதர் சொன்னார், 

''இங்கிருக்கும் மூன்று வழிகளில் ஒன்று பூமியிலிருந்து நாம் வந்த பாதை.  அடுத்தது,   சொர்க்கத்திற்குப் போவது. மூன்றாவது நரகத்திற்குப் போகும் வழி. நீ பூமியில் வாழ்ந்தபோது  சில நல்ல காரியங்களும்செய்திருக்கிறாய். சில கெட்ட காரியங்களும் செய்திருக்கிறாய். எனவே நீ கொஞ்ச காலம் சொர்க்கத்திலும், கொஞ்ச காலம் நரகத்திலும் இருக்க வேண்டும். முதலில் எங்கு செல்லவேண்டும்  என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும் அதன்படி உன்னை அங்கு விட எங்களுக்கு உத்தரவு “ என்றார்.

வணிகன் உடனே சொன்னான், 

''என்னிடம் கேட்டால், நான் இந்த இடத்திலேயே இருந்து விடுகிறேன். எவ்வளவு அருமையான முக்கூட்டுச்சாலைகளின் சந்திப்பு! இங்கு மட்டும் ஒரு பெட்டிக்  கடை வைத்து விட்டால் வியாபாரம் எப்படி இருக்கும்! எனக்கு சொர்க்கமும் வேண்டாம். நரகமும் வேண்டாம்.''

இதுபோல் வியாபாரம் செய்து பழகியவர்கள் எந்த நிலையிலும் அதையே விரும்புவார்கள். எனக்குத்தெரிந்த ஒரு நண்பர் எம். ஏ. பட்டம் பெற்ற உடனே மரியாதைக்காக, தனது ஊரின்  ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப்போனார். அந்தப் பெரிய மனிதர் வியாபாரத்தில் பல நிறுவனங்களை நடத்தி வெற்றிக் கொடி நாட்டியவர். முதுகலை படித்த என் நண்பரைப் பார்த்து அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் என்று  கேட்டார். எனது நண்பரோ எனது படிப்புக்கு ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் பதவி கிடைக்கும். அதையே தேடிப்  போக நினைக்கிறேன் என்று சொன்னார். பெரியமனிதர் சொன்னது  “தம்பி நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்  யானை,  மாடு , குதிரை போன்ற மிருகங்களின் முதுகில் ஒரு புண் ஏற்பட்டு அதில் ஈக்கள் மொய்த்தால் அவைகள் விரட்ட அந்த மிருகங்கள் தனது வாலை பயன்படுத்தி தூக்கி அடிக்கும். அந்த வால் இருக்கும் நீளம் வரைதான் இந்த மிருகங்களால் தாங்கள் மீது உட்காரும்  ஈக்களை விரட்ட முடியும் அதற்கு மேல் எவ்வளவு ஈ மொய்த்தாலும் தலை தலையை ஆட்டி சிரமப்படுவதைவிட வேறு ஒன்றும் செய்ய முடியாது. உத்தியோகம் என்பது இந்தமாதிரி மிருகங்களின் வாளின் நீளம் அளவுதான். நாம் நினைத்தாலும் ஒரு அளவுக்கு மேல்   நம்மால் எதுவும் செய்ய முடியாது- பிறருக்கு உதவ முடியாது- நமது காரியங்களை நிறைவேற்றவே சிரமப்பட நேரிடும்- தான தர்மங்கள் தாராளமாக செய்ய இயலாது. அதேநேரம் வியாபாரத்தில் இருந்தால்  இந்த எல்லா பரக்கத்துகளும் உண்டாகும்.  பலபேருக்கு நம்மால் வேலை கொடுக்க முடியும் . நினைத்ததை வாங்க முடியும் கொடுக்க முடியும். ஆகவே ஏதாவது வியாபாரத்தில் ஈடுபடுவதைப் பற்றி யோசனை பண்ணுங்கள் அப்படி ஒரு முடிவு இருந்தால் என்னிடம் வாருங்கள். நான் ஒரு வழி சொல்கிறேன்”  என்றார்.  நண்பர் அந்தப் பெரிய மனிதரிடம்  போகவில்லை. பின்னாளில் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றார். இருந்தாலும் தான் ஒரு வணிகராகப் போய் இருக்கலாமோ என்று ஏங்குகிறார். 

இஸ்லாமிய சமூகம் அடிப்படையில் ஒரு வணிக சமூகம். படித்து இருந்தாலும் படித்து இருக்காவிட்டாலும் ஒரு வணிகம் அல்லது வணிக நிறுவனத்தில் கொஞ்ச காலம் பணியாற்றி விட்டு  சொந்தமாக தொழில் தொடங்குவது என்கிற ரீதியில்தான் நம்மவர்களில் பலர் சிந்திக்கிறோம்; செயல்படுகிறோம். ஆனால் எந்த அளவுக்கு எல்லோரும் இஸ்லாம் சொல்லும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தொழில் செய்கிறோம் என்பது        சிந்தனைக்குரியது. இன்றைய நவீன அமைப்புகளில் சிக்கி அவைகளைக் கடைப்பிடிப் போர்தான் அதிகம். குறிப்பாக வங்கிகள் விஷயத்தில் வட்டி முதலிய பாவமான காரியங்கள் பாவம் என்று அறிந்து செய்யும் அமைப்புகள்.  (வட்டி பற்றி தனியாக நிறைய விவாதிக்க இருக்கிறோம்.) 

ஒவ்வொரு முஸ்லிமும் எந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபடலாம்? எதில் ஈடுபடக்கூடாது? என்பதைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எதில் வியாபாரம் செய்யலாம்? எந்த வியாபாரம் கூடாது? என்பது பற்றி மார்க்கம் அறிந்தவர்களிடம் ஆலோசனை செய்து வணிகம் தொடங்க வேண்டும். 

இன்று உலகியல் சார்ந்த ஒவ்வொரு துறைக்கும் உலகக் கல்வியை  பல வருடங்கள் படிக்கிறார்கள். வியாபாரத்  தொடர்பான கல்வியை  மட்டுமே பல வருடங்கள் செலவு செய்து வெளிநாடுகளில் கூட  சென்று படிக்கிறார்கள். ஆனால் வியாபாரம் குறித்த மார்க்க சட்டங்களைப்  பற்றி படிப்பதற்கு எவ்வளவு காலம் ஒதுக்கப்படுகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்? சந்தைக்கு வருவதற்கு முன் மார்க்கத்தின் பொருளாதார  சட்டங்களை அறிந்திருக்கிறோமா என்பதை எண்ணிப் பார்க்க   வேண்டும். 

கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் எந்த ஒப்பந்தம் கூடும்? எது கூடாது? என்பது பற்றி படித்திருக்க வேண்டும்.

“மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர் மட்டுமே நம்முடைய கடைவீதிகளில் விற்றல் வாங்கலில் ஈடுபடவேண்டும்,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: கன்ஜுல் உம்மால் - 9865) .

முற்காலத்தில் வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்திற்காக நீண்ட பயணம் செய்வார்கள். பாலைவனங்களில் பாலைவனக் கப்பல்களில் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய வணிகர்கள் நெடுந்தூர தேசங்களுக்குச் சென்று வணிகம் புரிந்த வரலாறுகள் உள்ளன. அவ்விதம் தொலை தூரங்களுக்குப் போகும்போது  அவர்களில் அனைவருக்கும் இஸ்லாமிய வியாபார சட்டங்கள்  சரிவரத் தெரியாது. எனவே, வியாபாரத்தின் போது மார்க்கச் சட்ட ஆலோசனை பெறுவதற்காக பிரயாணத்தில் தங்களுடன் ஃபகீஹ் - மார்க்கச் சட்ட வல்லுணர்களையும் உடன் அழைத்துச் செல்வார்கள் என்று சில இஸ்லாமியப் பொருளாதார நூல்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  ஹலாலை - ஆகுமானதைச் சாப்பிடுவதும் குடிப்பதும் ஷரீஅத்தின் அடிப்படைச் சட்டமாக இருப்பதால் பேணுதல் மிக்க  வியாபாரிகள் இப்படி உலமாக்களையும்  பயணத்தில் அழைத்துச் செல்லும் வழக்கம்  வரலாற்றின் ஏடுகளிலும்  காணப்படுகிறது 

இறுதி  நாள் வருவதற்கு முன் (உலகில்) வியாபாரம் பரவலாகி விடும். ஒரு பெண் கணவனுக்கு வியாபாரத்தில் உதவியாக இருப்பாள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னது அஹ்மது)

வியாபாரச் சந்தைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகாத வரை கியாமத் நிகழாது, என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்).

இன்று வியாபார நடவடிக்கைகள் உலக அளவில்  மிகப் பெரிய அளவில் முன்னேறியுள்ளன. எந்த அளவுக்கு வியாபார நடவடிக்கைகள் மிகுந்துவிட்டனவோ அவற்றிற்கு ஏற்றபடி வியாபார ஒழுங்கீனங்களும் மிகுந்துவிட்டன. இலாபம் ஒன்றே குறிக்கோள் என்கிற நோக்கில் நீதி நியாயங்கள் மறைந்து வருகின்றன. நேர்மையைக் கடைப்பிடித்தால் பிழைக்க முடியாது என்கிற கோட்பாடு வலுத்துவருகிறது. 

அபூஹுரைரா ( ரலி) அவர்கள் கீழ்க்காணும் ஹதீஸை அறிவிக்கிறார்கள். உள்ளம்  நடுங்குகிறது.

"தாம் சம்பாதித்தது ஹராமா ஹலாலா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் இனி வரும்" ( புகாரி 2059). 

இப்போது கலப்படம், அளவை நிறுவையில் தில்லு முல்லு, பொருள்களை அவை இல்லாமலேயே கற்பனையாக விற்று வாங்கி கொள்ளை இலாபம் அடிப்பது போன்ற வணிக நடைமுறைகளைப் பற்றி சற்று விவாதிக்கலாம். இவை பற்றி இஸ்லாமிய பொருளாதாரத்தில் விடப்பட்டுள்ள எச்சரிக்கைகளை நினைவு படுத்திக் கொள்ளலாம். 

இன்றைய வணிக உலகில் கலப்படம் என்பது ஒரு கலையாக இருக்கிறது. எதோடு எதைக் கலந்தால் காண்போர் அறியா வண்ணம்  காசு திரட்ட முடியும் என்று மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த அத்தியாயம் நீண்டு விடும் என்றாலும் ஒரு விழிப்புணர்வுக்காக கீழ்க்கண்ட  உலகப் புகழ்பெற்ற கலப்படங்களை இங்கு பட்டியலிட விரும்புகிறேன். 

பால் - யூரியா, ஜவ்வரிசி மாவு, டிடர்ஜென்ட் பவுடர்கள், போதாக்குறைக்கு மாடுகளுக்குப் போடப்படும் ஆக்சிடோசின் போன்ற மருந்துகளும் பாலில்  கலந்து விடுகிறதாம்!

மஞ்சள் தூள் - நிறத்துக்காக லெட் குரோமேட் என்ற ஆபத்தான வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.

டீத்தூள் - புளியங்கொட்டை, முந்திரித்தோல், ரசாயன வண்ணப்பொடி, இலவம்பஞ்சு, மஞ்சனத்தி இலை, பயன்படுத்திய டீத்தூள்...

சமையல் எண்ணெய் - ஆர்ஜிமோன், பெட்ரோல் தயாரிக்கும் கச்சா எண்ணெயில் கடைசியில் எஞ்சும் மினரல் ஆயில், ஆமணக்கு எண்ணெய், கடுகு  எண்ணெய்...

மிளகாய்த்தூள் - செங்கல் பொடி, ரசாயன வண்ணப்பொடி...

மல்லி(தனியா)த்தூள் - மரத்தூள், குதிரைச்சாணத் தூள், ரசாயன வண்ணப்பொடி...

மிளகு - பப்பாளிவிதை. 

சர்க்கரை - ரவை.

கடலைப்பருப்பு - கேசரிபருப்பு.

நெய் - வனஸ்பதி.

அரிசி - கல்,தரம்குறைந்தஅரிசி.

காபி - சிக்கரி, பேரீச்சைப் பொடி, முந்திரிக்கொட்டைத் தூள்.

பெருங்காயம் - மண்,பிசின்

கடுகு - ஆர்ஜிமோன் விதைகள்.

பச்சைப்பட்டாணி - ரசாயனவண்ணப்பொடி.

சீரகம் - புல்விதை, நிலக்கரித்தூள்.

வெல்லம் - மெட்டானில் என்ற ரசாயன நிறமி, சலவைசோடா, சாக்கட்டித் தூள்.

பாக்குத்தூள்- மரத்தூள்,ரசாயனவண்ணப்பொடி.

குங்குமப்பூ- உலர்ந்தசோள நார்கள்.

லவங்கப்பட்டை - ரசாயன வண்ணப்பொடி கலந்த தரம் குறைந்த கருவாய்ப்பட்டை.

உப்பு - சுண்ணாம்பு, தூள்கற்கள்.

தேன்- சர்க்கரைப்பாகுகடலை எண்ணெய் - பருத்திக்கொட்டை எண்ணெய்.

ரவை - இரும்புத்தூள்.

தானியங்கள் - நச்சுத்தன்மை உடைய காளான் விதைகள்.

மேலும் வாழைக்காயை மூட்டம் போட்டு பழுக்க வைப்பது, மாம்பழத்தில் கார்பைடு கற்களை போட்டு பழுக்க வைப்பது , ஆப்பிள் பழங்களின் மேல் ஒருவகை மெழுகைத் தடவி பளபளப்பாக்கி வைப்பது என்பதெல்லாம் கலப்பட உலகின் காவியங்கள். உணவகங்களில் மிச்சப்பட வடையைத் தயிரில்  போட்டு தயிர்வடை ஆக்குவது, மிச்சப் பட்ட இட்லிகளைப் போட்டு வடைகறி என்று தயாரிப்பது என்றெல்லாம் இந்தப் படலம் நீளும்.  

அண்மைக் காலங்களில் பல ஊர்களில் கலப்படத் தொழிற்சாலைகள் நடத்தப் படுவது கண்டுபிடிக்கப் பட்டு செய்தித்தாள்களில் படித்தோம். அவற்றில் விருது வாங்கத் தலை சிறந்தது விருது நகர்  அருகே நடத்தப் பட்ட ஒரு தொழிற்கூடம் பயங்கரமான உண்மைகளை வெளிச்சத்துக்குக்  கொண்டுவந்திருக்கிறது. அந்தத் தொழிற்சாலையில் மூட்டை மூட்டையாக பச்சைப் பயறு, முழு உளுந்து, வெள்ளை உளுந்து , அரிசியில் பல ரகம் என்றெல்லாம் முழுக்க முழுக்க கற்களால் தயாரிக்கப் பட்டு அவற்றுக்கு ஏற்றபடி வர்ணம் தீட்டப்பட்டு கடைகளில் உள்ள அசல் தானிய உணவுப் பொருள்களுடன் சேர்த்து  கலப்படம் செய்வதற்காக அனுப்பப் படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தேநீர் விடுதிகளில் பயன்படுத்தப் பட்ட பின்  கொட்டப்படும் தேயிலைகளின் கழிவுகளை சொற்ப விலைக்கு வாங்கி அதை ஒன்று சேர்த்து உலர்த்தி பின் அவற்றில் வாசனைகளை ஏற்றி அத்துடன் தேயிலையின் நிறத்தை ஒத்த வர்ணத்தை சேர்த்து போலியாக தேயிலை விற்கும் பல நிறுவனங்கள் பிடிபட்டு இருக்கின்றன. அத்தகைய தேயிலைகளில் சேர்க்கப் பட்டு இருக்கும் ஏலக்காய், நன்னாரி  முதலிய வாசனைகளை ஆஹா ! பேஷ் !பேஷ் ! ரெம்ப நன்னா இருக்கு   என்று ருசித்துக் குடிப்போர் ஏராளம். இத்தகைய போலித் தேயிலை வகைகள்  கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது.  

இதேபோல் உயிர் காக்கும் புகழ்பெற்ற மருந்துகளின் பெயரில் போலி  மருந்துகள் தயாரிக்கப் பட்டு பல மருந்துக் கடைகளில் மூட்டை மூட்டையாய் கைப்பற்றப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். நாள் கடந்து தூக்கி எறியப்பட வேண்டிய மருந்துகள் அடங்கிய பெட்டிகளின் மேல்  போலியாக தேதியை மாற்றி லேபிள்கள் ஒட்டப்பட்ட மோசடியும் வெளிச்சத்துக்கு வந்ததை நாமறிவோம்.       

அண்மையில் கலப்படம் பற்றி ஒரு கவிதை படித்தேன். இதை ஒரு கவிதையாக அல்ல ஒரு கதையாகப் படிக்கலாம். 

கேடு கெட்ட உலக வாழ்க்ககை வெறுத்ததால்
சாகவேண்டி தற்கொலை செய்ய முயற்சித்தான் முனுசாமி...

கடைக்கு சென்று தாம்புக் கயிறு வாங்கி
கதவடைத்து நாற்காலியின் மீதேறி....
உத்திரத்தில் சுருக்கிட்டு, தலையை உள்நுழைத்து
காலால் உதைத்தான் நாற்காலியை.....

அந்தோ... பரிதாபம் கயிறு அறுந்துவிட
முனுசாமி தரையில்விழுந்தான்.......
காரணம் கயிற்றில் கலப்படமாம்...!

மூட்டைப்பூச்சி மருந்து குடித்தால் சாகலாம் -என்ற
ஒரு முதியவரின் அறிவுரை புத்தியில் மின்ன,
கடைக்குச் சென்று வாங்கி வந்து,
குளிர்பானம்போல் குடித்தான்...!

சிறு நேரம் வாந்தி, சிறிது நேரம் தலைச்சுற்றல்
ஆனால் அவன் சாகவில்லை....!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!

மற்றொரு முயற்சியாய் மண்ணெண்ணெய்
ஊற்றி முயற்சித்தான் முடிவு வழக்கம் போல்....

உடலில் தீக்காயம்.... மருந்திட 
மருத்துவமனைக்கு வந்தான்....!

முதலுதவியின் போதே மூர்ச்சையானான்...
சீரிய சிகிச்சையில் செத்தே விட்டான்...!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!

- நன்றி:ஜெயஸ்தா 

உலக வாழ்வில் (-வியாபாரங்களும் அவற்றில் ஒன்று-) நேர்மையற்றவர்களை  இறைவன் எச்சரிக்கிறான் 

“யார் நம்பிக்கை கொண்டு நற்பணியாற்றுவார்களோ, முறையோடு செயல்படும் அத்தகையோரின் பலனை நாம் வீணாக்குவதில்லை” (18:30 ) 

என்றும் 

“உங்களுடைய செல்வங்களோ மக்களோ உங்களை நமக்கு மிக             நெருங்கியவர்களாக்குவதில்லை. நம்பிக்கை கொண்டு நற்பணிகள் புரிபவர்கள் தவிர. இத்தகையோருக்கே அவர்கள் புரிந்த நற்பணியின் காரணமாக இரட்டிப்பான பலன் உண்டு. மேலும் அவர்கள் (சொர்க்கத்தின்) மேல மாடிகளில் நிம்மதியாக வசிப்பார்கள். “ (34:37)

என்றும் கூறுகிறான்.  

நேர்மையுடன் தொழில் செய்கிறவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் தனி மதிப்பு ஏற்படுகிறது. டாடா காரையும் பாடா செருப்பையும் கோத்ரேஜ் பூட்டையும்  கேட்டு வாங்குகிறோம். விலை கூடுதலாக இருந்தாலும் தரமான பொருட்களை மனிதன் நாடுகிறான். தரத்தின்  உயர்வு வணிகத்தில் உயர்வைத் தருகிறது.  

"அந்தக் கம்பெனிப்  பொருளா?  கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாமே" என்பது போன்ற இத்தகைய தன்மைகள் வணிகத்தில் மேலோங்குவது QA/QC ( QUALITY ASSURANCE/ QUALITY CONTROL) என்று சொல்லப்படுகிற தரத்தின் உறுதி /தரக்கட்டுப்பாடு ஆகியவைகளை நிலைநிறுத்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் GOODWILL  என்று சொல்லப்படுகிற நன்னம்பிக்கையை ஏற்படுத்தி அந்நிறுவனத்தை உயர்த்திவிடுவதுடன் இறைவனின் பொருத்தத்தையும்  ஏற்படுத்திவிடுகிறது . அல்லாஹ்வின் அருட்கொடை கொண்டு பரக்கத்தாக நிறுவனம் செழித்து வளருகிறது. 

இஸ்லாமியப் பொருளாதாரம் ஒரு வணிகனின் சமூகப் பொறுப்பையும் பண்பாட்டையும் மற்றவர் நலனிலும் அக்கரைகொள்வதையும் வரவேற்கிறது. ஈருலக நன்மைகளை இதைவைத்துப் பெற்றுக்கொள் என்கிறது. நவீன காலத்தில் தோன்றியுள்ள நல்ல அம்சங்கள் ஒவ்வொன்றையும் இஸ்லாம் ஆதரிக்கிறது. ஆனால் அவை எல்லை கடந்து தீமையாக மாறக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறது. 

அப்படி எல்லை கடந்து இன்று ஆட்டம் போடும் ஒரு தீமையான நவீன அரக்க     பொருளாதார நடவடிக்கை பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் காணலாம். 
தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

38 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொருளாதார பாடத்தில் இன்று முக்கியமான தொகுப்பு! ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

// உலகக் கல்வியை பல வருடங்கள் படிக்கிறார்கள். வியாபாரத் தொடர்பான கல்வியை மட்டுமே பல வருடங்கள் செலவு செய்து வெளிநாடுகளில் கூட சென்று படிக்கிறார்கள். ஆனால் வியாபாரம் குறித்த மார்க்க சட்டங்களைப் பற்றி படிப்பதற்கு எவ்வளவு காலம் ஒதுக்கப்படுகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்//

அவசியம் சிந்திக்க செயல்படுத்த வேண்டிய பொன்மொழி.

Anonymous said...

இன்றைய ஊர் நாடு உலக போக்கில் சட்டம் ஒழுங்கு மனசாட்சிகளை மதித்து நடப்பவன் 'ஆடையில்லா ஊரில் கோவனம் கட்டியவன் பைத்தியகாரன்' என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் நிற்கிறான்.

பங்காளிக்கு பச்சை துரோகம் செய்தவன் பள்ளிவாசலில் பயான் செய்கிறான். தப்லிக்கில் நாற்பது நாள் நான்குமாதம் போ'யிருந்தேன் என்று தம்பட்டம் அடிக்கிறான். அவர்களை சமுகம் ஏற்பதும் இஸ்லாமிய நெறிமுறை களுக்கு எதிரானதே. வட்டி மட்டும் பாவம் அல்ல; மேல் சொன்னதும் பாவமே..

S.முஹமதுபாரூக். அதிராம்பட்டினம்

Shameed said...

// யானை, மாடு , குதிரை போன்ற மிருகங்களின் முதுகில் ஒரு புண் ஏற்பட்டு அதில் ஈக்கள் மொய்த்தால் அவைகள் விரட்ட அந்த மிருகங்கள் தனது வாலை பயன்படுத்தி தூக்கி அடிக்கும். அந்த வால் இருக்கும் நீளம் வரைதான் இந்த மிருகங்களால் தாங்கள் மீது உட்காரும் ஈக்களை விரட்ட முடியும் அதற்கு மேல் எவ்வளவு ஈ மொய்த்தாலும் தலை தலையை ஆட்டி சிரமப்படுவதைவிட வேறு ஒன்றும் செய்ய முடியாது. //

உங்களின் இந்த குட்டிக்கதை சொந்தமா வியாபரம் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு மாட்டு வால் சூப் குடித்த தெம்பை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!
பொருளாதாரக் கட்டுரை என்னும் அடையாளம் மாறி “பொருளாதாரத்தைப் பற்றிய உரத்த சிந்தனை” என்னும் அடைமொழி சேர்க்க வேண்டும் போல இருக்கிறது இவ்வார அத்தியாயம்.  காரணம், இந்தப் பேசுபொருளில் இத்துணை ஆழமாக அலசப்பட்ட கட்டுரை நான் இதற்கு முன் படித்ததே இல்லை.  அதிலும் குறிப்பாக, கண்ணியத்தில் சிறிதும் கலப்படமின்றி கையாளப்பட்டிருக்கும் மொழி, விவரிக்க விவரிக்க காட்சிகளாகவே விரிகிறது நம் அகக்கண்முன்.
 
அதிகம் அறியப்படாத நபிமொழி மற்றும் வேத வசனங்கள் கட்டுரையின் கருவுக்கு வலு சேர்க்கின்றன.
 
ஒரு பெரிய திடலில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்க மேடையில் காக்கா விளக்கவுரை நடத்துவதுபோன்ற பிரம்மையையும் பிரமிப்பையும் தோற்றுவிக்கிறது எழுத்து நடை. மாஷா அல்லாஹ்.
 
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
 

Shameed said...

கலப்படத்தைப்பற்றி ஒரு கலக்கு கலக்கிவிட்டீர்கள்

sabeer.abushahruk said...

//பங்காளிக்கு பச்சை துரோகம் செய்தவன் பள்ளிவாசலில் பயான் செய்கிறான். தப்லிக்கில் நாற்பது நாள் நான்குமாதம் போ'யிருந்தேன் என்று தம்பட்டம் அடிக்கிறான்.//

ஃபாரூக் மாமாவின் ஆதங்கம் அறியத் தருவது, மார்க்க சட்டதிட்டங்களைத் தெரிந்திருந்தும் ஊருக்கு உபதேசமும் உள்ளுக்குள் தமக்கு லாபமெனில் மார்க்கத்தைக் கடாசிவிட்டு காசுக் காரியத்தில் கண் வைக்கும் தாண்டவக்கோன்கள் நமக்குள் நிகழ்ந்துவிட்ட கலப்படம் அன்றோ?

இவர்கள் சொல்லித்தரும் மார்க்க சட்டதிட்டங்களின்படி வணிகம் செய்தல் சரியாகுமா எங்கிற அச்சமேற்படுகிறதே காக்கா.

Ebrahim Ansari said...

// பின்னாளில் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றார். இருந்தாலும் தான் ஒரு வணிகராகப் போய் இருக்கலாமோ என்று ஏங்குகிறார்.//

என்று குறிப்பிட்டு இருக்கிறேன். இதைப் படித்தவர்களுக்கு அது யார் என்று விளங்கி இருக்கும்.

இந்தக் கட்டுரையில் இன்னும் இருவரைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டேன். அதில் ஒருவர் கல்லூரிப் பேராசிரியர் ஆக குறைந்தகாலம் பணியாற்றிவிட்டு வெளியே தெரியாமல் தன்னம்பிக்கையுடன் அந்த வேலையை உதறிவிட்டு சொந்தமாக வணிகம் புரிந்து இன்று நல்ல நிலையில் இருக்கும் முதுகலை பட்டதாரியான எனது மற்றொரு நண்பர்.

இவரையும் யாரென்று கண்டுபிடித்துவிடலாம். யார் கண்டு பிடிக்காவிட்டாலும் தம்பி அபு இபுராஹீம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு உண்டு.

இன்னொரு விடுபட்டவர் யார்?

தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் இரண்டாவது குரூப் தேர்வு எழுதி- தைரியமாக நேர்காணல் சென்று - தமிழக கூட்டுறவுத்துறையில் பத்து காசு செலவு இல்லாமல் சீனியர் இன்ஸ்பெக்டர் ஆக நியமிக்கப்பட்டு - ஏழுமாதம் ஆடிட்டர் ட்ரைனியாக வேலையும் பார்த்துவிட்டு- பல்வேறு வணிக ஆசைகள் காரணமாக கிடைத்த அரசு வேலையை இராஜினாமா செய்துவிட்டு வாழ்க்கைப் பிரச்னைகளில் சிக்கி சிரமப்பட்டு சுற்றாத இடம் எல்லாம் சுற்றி கடைசியில் வளைகுடாவில் வாழ்வை நிலைநிறுத்திக் கொண்ட ஒருவர்.
வேறு யாருமல்ல நான்தான்.

இதனால்தான் நான் அடிக்கடி எழுதுவது/ சொல்வது மூன்று விஷயங்கள் நம்மை விட்டுப் போனால் வராது. ஒன்று இளமை, இரண்டு ஆரோக்கியம் , மூன்று வாய்பப்புக்கள்.

Anonymous said...

இப்ராஹீம் அன்சாரி காக்கா சொல்வது போல் எல்லா வற்றியிலும் கலப்படம் வந்து விட்டது. இப்போழுதெல்லாம் கலப்பட இல்லாத பொருளே கிடையாது எந்த பொருளை பார்த்தாலும் கலப்படம் தான் வருகிறது. வியாபாரத்தில் நீதி,ஞாயம் நேர்மை,உண்மை என்பது எல்லாம் இப்பொழுது மறைந்து விடுகிறது. இதற்கு மாறாக பொய்,கலப்படம்,மோசடி என்றல்லாம் நடக்கிறது. நம் இஸ்லாம் மார்க்கம் பிரகாரம் யார் வியாபாரம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் அவர்கள் செய்யும் வியாபாரத்தில் பரக்கத்தும்,செல்வங்களும் வளரும் என்று குர் ஆன் கூறி உள்ளது.

பெரும்பாலான கடைகளில் கலப்படம் இல்லாத பொருளே இல்லாமல் இருப்பதில்லை. பெரும்பாலும் அந்த பொருட்களில் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது இருந்தாலும் அந்த பொருள்களை விற்பதற்கு பபயப்படுவதில்லை. அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய ரசூல் நபி (ஸல்) அவர்கள் கூறிய பிரகாரம் தான் நாம் வியாபாரம் செய்கிறோமா என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். வியாபாரம் செய்வது ஹலாக்கப்பட்டுள்ளது அதை தவறாக பயன் படுத்திக்கொள்ளக்கூடாது. அப்படி மார்க்கத்திற்கு மாறாக யார் வியாபாரம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய தொழிலில் பரக்கத்தும்,செல்வங்களும் எடுபட்டு விடும். தொழில் செய்பவர்கள் ஹலலான முறையில் சம்பாதியுங்கள். குறுகிய வழியில் சம்பாதிக்கலாம் என்று யாரும் என்ன வேண்டாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

//தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் இரண்டாவது குரூப் தேர்வு எழுதி- தைரியமாக நேர்காணல் சென்று - தமிழக கூட்டுறவுத்துறையில் பத்து காசு செலவு இல்லாமல் சீனியர் இன்ஸ்பெக்டர் ஆக நியமிக்கப்பட்டு - ஏழுமாதம் ஆடிட்டர் ட்ரைனியாக வேலையும் பார்த்துவிட்டு- பல்வேறு வணிக ஆசைகள் காரணமாக கிடைத்த அரசு வேலையை இராஜினாமா செய்துவிட்டு வாழ்க்கைப் பிரச்னைகளில் சிக்கி சிரமப்பட்டு சுற்றாத இடம் எல்லாம் சுற்றி கடைசியில் வளைகுடாவில் வாழ்வை நிலைநிறுத்திக் கொண்ட ஒருவர்.
வேறு யாருமல்ல நான்தான்.

இதனால்தான் நான் அடிக்கடி எழுதுவது/ சொல்வது மூன்று விஷயங்கள் நம்மை விட்டுப் போனால் வராது. ஒன்று இளமை, இரண்டு ஆரோக்கியம் , மூன்று வாய்பப்புக்கள். \\

தங்களிடம் பொருளாதாரப் பாடமும் படித்துக் கொண்டேன்; அனுபவம் என்னும் அரியதொரு பாடமும் படித்துக் கொண்டேன்.

உளம் திறந்து எழுதியதால், என் உளம் திற்ந்து விட்டது. இனி, நாமும் அவசரத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தீர்மானிக்க வைத்து விட்டது, தங்களின் இவ்விளக்கம், அன்பின் காக்கா முனைவர் அவர்களே!

“ஆசையில் கொடுக்கும் வாக்குறுதியும்;
கோபத்தில் எடுக்கும் முடிவும் ஆபத்தானவைகள்”

sabeer.abushahruk said...

//// பின்னாளில் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றார். இருந்தாலும் தான் ஒரு வணிகராகப் போய் இருக்கலாமோ என்று ஏங்குகிறார்.//

என்று குறிப்பிட்டு இருக்கிறேன். இதைப் படித்தவர்களுக்கு அது யார் என்று விளங்கி இருக்கும்.//

பேராசிரியராக மட்டுமா? "தி ஃபிட்டஸ்ட் பிரின்ஸிப்பல்" என்று விசுவால் பாராட்டப்பட்ட நம்ம காக்காதானே அவர்கள்?

Ebrahim Ansari said...

சபீர் கண்ணா சமத்து ( விசுவின் மொழியில்)

sabeer.abushahruk said...

காக்கா,
(என்னடா பம்முறானேன்னு பார்க்காதீர்கள்) ஒரு டவுட்டு.
கட்டுரையில் தொழில் செய்வதேச் சிறந்ததென அறிவுறுத்தியதை வரவேற்கும் தொனியில் விளக்கிய தாங்கள், தங்களின் பின்னூட்டக் கருத்தில் வேலை வாய்ப்பை நழுவ விட்டதை வருத்தம் தரும் தொனியில் சொல்லியிருக்கிறீர்களே. நான் இப்படி விளங்கிக் கொள்ளவா?
 
“அரசு வேலை என்றால் அது சுய தொழிலை விடச் சிறந்தது?”
 

Anonymous said...

கலப்படத்தை கலர் படமா போட்டு காட்டியாச்சுல? கலப்படம் செய்ய தெரியாமே இருந்த ஒன்னு ரெண்டு பயகளும் இனிமே ஆரம்புச்சுடுவான்!

S.முஹம்மது பாரூக். அதிராம்பட்டினம்.

Anonymous said...

/// ஆசையில்கொடுக்கும் வாக்குறுதியும் கோபத்தில் எடுக்கும் முடிவும்
ஆபத்தானவை/// காக்கா அப்துல் காலம் பின் ஷேக்அப்துல் காதர் அவர்கள் சொன்ன வாக்கியம் ஒரு ஆலமரத்தின் விதை. மீன் சினையினும் விதை சிறிதானாலும் அதற்குள்ளே பெரிய விருட்சம் இருப்பதை கண்டேன்...

// கோபத்தில் எடுக்கும் முடிவு.///

S.முகம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,

ஹஹஹஹாஹ். பம்முறீர்கள் என்று பார்க்கவில்லை. என்ன இன்னும் பம்மவில்லையே என்றுதான் பார்த்திருந்தேன்.

நான் சொல்ல வந்தது நல்ல வாய்ப்பு இலகுவாக கிடைத்தும் இருப்பதைவிட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு கஷ்டங்களை அனுபவித்த சொந்த அனுபவங்களை. திருப்புமுனைகளில் சிலர் எடுக்கும் முடிவுகள் வெற்றி அளிக்கின்றன. சிலரின் முடிவுகள் சிரமப்படவைக்கின்றன. கையில் வரும் வாய்ப்புகளை விட்டுவிட்டு மீண்டும் ஒரு ப்ரேக் கிடைக்க எவ்வளவு கஷ்டம் என்பதை குறிப்பிடவே. இதைப் பொதுவாகவே குறிப்பிட்டேன். வாய்ப்புகளை விட்டுவிடக்கூடாது வாழ்க்கை சிக்கலாகிவிடும் என்பதே இதைக் குறிப்பிட்டதன் குறிக்கோள்.

ஒருவர் வணிகம் செய்ய தூண்டப்பட்டார் ஆனால் உத்தியோகத்தை தேர்ந்தெடுத்தார். அதில் வெற்றியும் கண்டார். புகழ் பெற்றார். இருந்தும் வணிகம் செய்து இருக்கலாமோ என்று கேள்வியுடன் இருந்து வருகிறார்.

மற்றொருவர் உத்தியோகத்துக்குப் போனார். அதை தன்னம்பிக்கையுடன் உதறினார். உலகின் பல பாகங்கள் சுற்றி வணிகம் செய்தார். செய்து வருகிறார். வெற்றி பெற்றார்.

இன்னொரு பேதைக்கு உத்தியோகம் தேடி வந்தது. ஏதோ அசட்டு தைரியத்தில் அதை உதறினார். வணிகம் செய்கிறேன் என்று கல்கத்தா போனார்- காசிக்குப் போனார்- கங்கையில் குளித்தார்- டில்லியில் வாழ்ந்தார்- இளமையில் வறுமையே மிஞ்சியது. பல மனிதர்களை அறிந்தார் என்பதைவிட புரிந்தார்.

புண்ணியம் இல்லை. வாழ்க்கையின் ஒரத்துக்கே ஓடினார். இறுதியில் நண்பர்கள் அரவணைத்தனர். உயிர் காப்பான் தோழன் என்பதற்கு இலக்கியமாயினர். மறுவாழ்வு பெற்றார். இவ்வளவு கஷ்டமும் வலிய வந்த வாய்ப்பை விட்டதால் .

ஆனால் இங்கே எனது சொந்தக் கருத்து என்னவென்றால் நம்மில் மிகப் பலர் வெளிநாட்டு வாழ்வையும் வணிகத்தையும் தேர்வு செய்கின்றனர். இக்கரைக்கு அக்கறை என்றுமே பச்சை. நம்மில் பலர் அரசுப் பதவிகளுக்கு வரவேண்டும். அதிரை இன்னும் கூட ஒரு ஐ. ஏ. எஸ் அல்லது இரு ஐ. பி. எஸ் போன்ற பெரும் பதவிகளில் அமர்வோரைப் பெறவில்லை என்பது நமது ஊரை இன்னும் மலடாக வைத்திருப்பதாகவே நான் உணர்கிறேன்.

நான் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டார் அதன்பிறகும் கூட அவரைப்போல இன்னொருவர் ஏன் இன்னும் நமதூரில் வர முடியவில்லை?

இப்போது ஒருவர் தலைமை ஆசிரியராகி இருக்கிறார். இவர் ஒய்வு பெறும்போது அவரிடமிருந்து பொறுப்புகளை ஏற்க நமதூரில் ஏன் இன்னொருவர் இன்னும் தயாராகவில்லை?

நாம்தான் சிந்திக்க வேண்டும். இதை தனியாக விவாதிப்போம். ஜசக் அல்லாஹ்.

Ebrahim Ansari said...

பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் சொன்னது

//காக்கா அப்துல் காலம் பின் ஷேக்அப்துல் காதர்//

மச்சான்! அவர் காக்கா ஆகமாட்டார். அவர் எனக்குத்தம்பி. இந்த அரங்கில் நீங்களே எல்லோருக்கும் சீனியர். அடுத்தது அஹமது காக்கா . மூன்றாவது பரிசு எனக்கு .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா: கட்டுரையும் சரி கருத்துரையும் சரி நல்ல திரி !

நிதானமாக கருத்துக்களைப் பதியனும் இருந்தாலும் (பொதுவான) வேலைப்பளுன்னு சொன்னா ஏதோ இரவோடு இரவாக அல்லது அதிகாலையில் கர்ச்சல் கட்டிகிட்டு நிற்கிறியலான்னு கேட்டுடாதியா..

அப்புறம் வூட்டுல சேர் மானம் சரியில்லைன்னு சொல்லிடுவாங்க !

sabeer.abushahruk said...

// நம்மில் மிகப் பலர் வெளிநாட்டு வாழ்வையும் வணிகத்தையும் தேர்வு செய்கின்றனர். இக்கரைக்கு அக்கறை என்றுமே பச்சை. நம்மில் பலர் அரசுப் பதவிகளுக்கு வரவேண்டும். அதிரை இன்னும் கூட ஒரு ஐ. ஏ. எஸ் அல்லது இரு ஐ. பி. எஸ் போன்ற பெரும் பதவிகளில் அமர்வோரைப் பெறவில்லை என்பது நமது ஊரை இன்னும் மலடாக வைத்திருப்பதாகவே நான் உணர்கிறேன்.//

//நமது ஊரை இன்னும் மலடாக வைத்திருப்பதாகவே//

I acknowledge, kaakkaa!

Unknown said...

இப்ராஹிம் அன்சாரி அவர்கள் ஒரு அழகிய வணிகவியல் பாடம் நடத்தி
நேர்மையான வியாபாரத்தின் முக்கியத்துவத்தையும், போலி பொருட்களின் நடமாட்டம் குறித்த எச்சரிக்கைகளையும் அழகுரத்தந்து , இனி மேல் வியாபாரம் செய்ய எண்ணம் கொண்டு இருப்பவர்களுக்கு கூட நல்ல யோசனைகளையும் வியாபார நுணுக்கங்களையும் அள்ளித்தெளித்து வியாபாரத்தில் நேர்மை ,நாணயம் எவ்வளவு முக்கியம் என்பதையும், ஒரு கல்லூரி பேராசிரியர் போல அழகியமுறையில் உரை நிகழ்த்தி உள்ளார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒரு கடை வீதியில் பொருள் வாங்கச்சென்றபோது ஒரு வியாபாரியின் தானியத்தின் குவியலில் அடியில் கைவிட்டு சோதனை செய்தபோது அண்டத வியாபாரி அடியில் ஈரமான தானியத்தையும், மேலே காய்ந்த தானியத்தையும் வைத்து வியாபாரம் செய்ததை பார்த்த மாத்திரத்திலேயே சொன்னார்கள் " எவன் மோசடி செய்கின்றானோ அவன் நம்மை சேர்ந்தவனல்ல " என்ற ஒரு எச்சரிக்கையை சொல்லிவிட்டு சென்றார்கள் என்று வருகின்றது.

ஆதலால் வியாபாரத்தில் உள்ள பரகத் எதிலும் இல்லை என்றாலும் , அதை செய்யும்போது , வாங்கும் பொது மக்கள் எந்த விதத்திலும் மனதாலும், பொருளாலும் சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் வியாபாரிகள் கடும் அக்கறை செலுத்த வேண்டும்.

வாங்கும் நுகர்வோர், பொருள் வாங்கிய பிறகு,ஏன் இந்தப்பொருளை வாங்கினோம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கிவிட்டோமே , இதை வாங்காமல் இருந்திருக்கலாமே என்ற ஏக்கத்திற்கு ஆளாகிவிடக்கூடாது.
அதில் ரொம்ப கவனமாக வியாபாரம் செய்வோர் இருக்க வேண்டும். வார்த்தையில் மட்டும் பொது மக்களை திருப்தி படுத்தக்கூடாது. வாங்கிய பொருளிலும், நுகர்வோர் திருப்தியோடு செல்லவேண்டும்.

அல்லாஹ் நேர்மையான மக்களாக எல்லாவிதத்திலும்
கொடுக்கல், வாங்கல், விற்றல், பேச்சில், நடையில், பார்வையில்,
எதிலுமே போலித்தனம் இல்லாத , அசலான வாழ்க்கை வாழ அல்லாஹ்
நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக!

ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அபு ஆசிப்.

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தொழில் நேர்மையை - இஸ்லாம் கூறிய - அழகிய வழிகளை விளக்கி கூறியதற்கு வாழ்த்துக்கள்! (நேரமின்மையால் அதிகம் கருத்திட முடியவில்லை)

Shameed said...

இங்கு சவூதியில் ஒரு நண்பர் சுய தொழில் செய்வதா அல்லது ஏதாவது நிறுவனத்தில் வேலையில் சேர்வதா என்ற குழப்பத்தில் (இங்கு உள்ள குழப்பபத்தில் )முடிவு தெரியாமல் இருந்த அவருக்கு "உங்களின் கட்டுரை ஒரு தெம்பை" கொடுத்துள்ளதாக சொன்னார்,சுயமாக தொழில் செய்யும் ஆயத்த வேலைகளை ஆரம்பித்து விட்டார்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

சமூக பொறுப்புள்ள வணிக சமூகத்தை உருவாக்கும் நல்ல வழிகாட்டி இந்த பதிவு.

ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி அபூ ஆசிப். எங்கே இன்னும் காணோம் என்று தேடிக்கொண்டு இருந்தேன்.

தாங்கள் குறிப்பிட்டு இருக்கும் ஹதீஸில் வரும் சம்பவம் இன்னொரு அத்தியாயத்தில் எழுதுவதற்காக சேமித்து வைத்து இருந்தேன்.

அதிரை நிருபரில் பதிவுகள் தரும் அனைத்து நண்பர்களையும் பாராட்டி உடனே பதிவு தரும் தங்களிடமிருந்து ஒரு தனிப் பதிவை எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்த தங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சியும் தங்களுக்காக து ஆவும்.

Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

நாங்கள் ஏதோ மார்க்கம் சார்ந்து எழுதுகிறோம் என்றால் அதற்கு நீங்கள் வாராவாரம் தரும் மருந்தும் ஒரு காரணம். ஜசக் அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி ஜகபர் சாதிக்! எனக்கென்னவோ நீங்கள் நீண்ட தொலைவில் இருந்தாலும் எங்களுக்கு அடுத்த வீட்டில் இருப்பதாகவே ஒரு உணர்வு. உடனுக்குடன் கருத்தை வெளியிடும் உங்களின் அன்பு அதிரை நிருபரின் எல்லாப் பதிவாளர்களுக்கும் டானிக்.

தம்பி சபீர் அவர்களுடன் நானும் கேட்கிறேன் " டீ இன்னும் வரலே".

Ebrahim Ansari said...

கருத்துப் பெட்டியில் கவியன்பன் அவர்களின் மறு வருகை மகிழ்வானது. இந்த வருகைக்கு என் எழுத்துக் காரணமென்றால் இன்னும் உவகை மேலிடுகிறது.

மரியாதைக்குரிய மச்சான் எஸ். மு. பா. அவர்களின் கருத்துக்கள் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு அனுபவப் பேழை. என் எழுத்தின் ஒவ்வொரு அட்சரமும் உங்களுக்கே நன்றி சொல்லும். விலைக்காரத் தெருவில் மணலெடுத்து வந்து நடுக்கூடத்தில் கொட்டி அதில் என் விரலைப் பிடித்து ஆனா ஆவன்னா எழுதச் சொல்லித்தந்தவர் நீங்கள். உங்களின் கருத்து அடிகள் என் மனதில் நிற்கின்றனவோ இல்லையோ ஆனால் உங்களின் கம்பு அடிகள் என்றும் மனதில் நிற்கும்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களின் கேள்விகள் அவர்கள் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார்கள் என்பதற்கு என்றுமே உதாரணம்.
தம்பி! உங்களின் கேள்விகள் எழுதும் என்னை மட்டுமல்ல படிப்பவர்களையும் புடம் போடுகின்றன.

தம்பி தாஜுதீன்! நேற்று இரண்டு முறை பேசினோம். உங்களின் புதிய பொறுப்புக்களின் இடையில் அதிரை நிருபருக்கான புதிய பல முயற்சிகளைப் பற்றி திட்டங்கள் தீட்டுவது வரவேற்புக்கும் மதிப்புக்கும் உரியன.

தம்பி அமோஜான் அபூபக்கர் அவர்களுடைய கருத்துக்கும் ஜசாக் அல்லாஹ்.

மருமகன் சாகுல் ஹமீது ! கலப்படம் பற்றிய இந்தக் கட்டுரையில் போலிகள் கலப்பதைப் பற்றி கண்டு இருக்கிறோம். அதிரை நிருபரில் வரும் அனைவரின் கட்டுரைகளிலும் உன் கருத்தைக் கலக்காவிட்டால் அவற்றில் ருசி இல்லை என்றே அனைவரும் உணர்கிறோம். உன் கருத்துக்கள் உப்புப் போல கலக்கின்றன. கலகலக்கின்றன.

தம்பி ! அபூ இப்ராஹீம். நான் அறியாததா உங்களின் நேரமின்மை ? பரவாயில்லை. விடுமுறையை அன்பு மகனுடனும் குடும்பத்தினருடனும் அழகாக அனுபவியுங்கள். ஏற்கனவே தம்பி சபீர் எப்போ வருகிறீர்கள் என்று கேட்டுவிட்டார்கள். சொன்னபடி வந்து சந்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

சகோதரர் அலாவுதீன் மற்றும் தாஜுதீன் வ அலைக்குமுஸ்ஸலாம்.

அப்துல்மாலிக் said...

அருமை காக்கா, கலப்படத்தை நினைத்தாலே வயித்துலே ஒரே கலேபரமா இருக்கு

// நம்மில் மிகப் பலர் வெளிநாட்டு வாழ்வையும் வணிகத்தையும் தேர்வு செய்கின்றனர். இக்கரைக்கு அக்கறை என்றுமே பச்சை. நம்மில் பலர் அரசுப் பதவிகளுக்கு வரவேண்டும். அதிரை இன்னும் கூட ஒரு ஐ. ஏ. எஸ் அல்லது இரு ஐ. பி. எஸ் போன்ற பெரும் பதவிகளில் அமர்வோரைப் பெறவில்லை என்பது நமது ஊரை இன்னும் மலடாக வைத்திருப்பதாகவே நான் உணர்கிறேன்.//

நம் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டல் இருக்கு, வெளிநாட்டின் மோகம் இன்னும் குறைந்தபாடில்லை. எத்தனையோ என் நண்பர்கள் என்னையும் சேர்த்தே ஐ.ஏ.எஸ் ஆகிடனும் என்ற கனவு கனவாகவே கலைந்துக்கிட்டிருக்கு. இன்னும் ஒருவர் கூட வராதது வேதனையே... அல்லாஹ் நாடுவான் இன்ஷா அல்லாஹ்

Yasir said...

மாஷா அல்லாஹ்...இவ்வளவு சிரத்தை எடுத்து நீங்கள் நடத்தும் இந்த “பொருளாதாரப்பாடம்” சம்பவம்,அறிவுரை,எச்சரிக்கை என அனைத்தும் கலந்து படிப்பவர்களை சரியான பாதையை நோக்கி நடைபோட வைக்கின்றது...இவ்வளவு விலைமதிப்பில்லா விசயங்களை இலவசமாக அள்ளித்தரும் உங்களுக்கும் அல்லாஹ் சிறந்த உடல் நலத்தை தரட்டும்..ஆமீன்

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி அப்துல் மாலிக் ! நன்றி. பார்த்தீர்களா கவனித்தீர்களா? இப்போது கூட பத்தாம் வகுப்பில் வென்ற மாணவர்களை டாக்டர் இஞ்சினீயர் என்றுதான் ஆக்குவோம் என்று சொல்கிரார்களே தவிர மற்றபடி எந்தப் பெரிய குறிக்கோளும் இல்லை. நமது அருகிலுள்ள சிறிய ஜமாஅத் முத்துப் பேட்டையில் கூட இரு ஐ ஏ எஸ் வந்துவிட்டார்.

மருமகனார் யாசிர் அவர்கள் தொடர்ந்து காட்டும் அன்புக்கு என்றென்றும் கடமைபப்ட்டுள்ளேன். தங்களின் கருத்துக்கும் து ஆவுக்கும் மிக்க நன்றி.

Ebrahim Ansari said...

இந்த தளத்தின் மூலம் நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு ஐ ஏ எஸ் படிக்க விரும்பும் நமதூரைச் சேர்ந்த எந்த முஹல்லாவிளிருந்தாவது ஒரு மாணவரை அடையாளம் காட்டுங்கள். வேண்டிய உதவிகள் மற்றும் வழிகாட்ட இன்ஷா அல்லாஹ் தயாராக இருக்கிறோம்.

Anonymous said...

//காக்கா அப்துல்காலம் பின்ஷேக்அப்துல்காதர் //

மைத்துனர் இபுராகிம் அன்சாரி அவர்களே ! அ..நி.யில் நான் சீனியர் என்ற தகவலுக்கு நன்றி. இன்னொரு தகவல் நான் தருகிறேன். நான் இப்போ இரட்டை சீனியர் பாட்டம் வைத்து இருக்கிறேன். ஒன்று வயதில். மற்று ஒன்று வயது காரணமாக வந்த சர்க்கரை நோய். சர்க்கரைக்கு சீனி என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆதலால் சீனிவியாதி கொண்டவர்களும் .சீனியரே! .இப்போ நான் இரட்டை சீனியர்.சொன்னது சரிதானா சொல் சொல்.........!

s.முஹம்மது பாரூக். அதிராம்பட்டினம்

Ebrahim Ansari said...

//சீனியரே! .இப்போ நான் இரட்டை சீனியர்.சொன்னது சரிதானா சொல் சொல்.........!//

சீனியருக்கு சீனியை அளவுகோலாக வைத்தால் இங்கு பல சீனியர்கள் உருவாக்கிவிடுவார்கள் மச்சான்.

ஒரு நண்பர் சவூதியில் முப்பது வருடங்கள் பணியாற்றிவிட்டு அப்பமாக ஊருக்கு வந்தார். நான் சந்திக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. என்ன மாப்ளே எப்படி இருக்கே என நலம் விசாரிப்புக்குப் பின் இவ்வளவு நாள் சம்ப்பதித்து என்ன வைத்திருக்கிறே என்று கேட்டேன்.

"தஞ்சாவூரில் ஒரு மனைக்கட்டு வைத்து இருக்கிறேன்.
கனரா பேங்கில் ஒரு பத்து ரூவா வைத்து இருக்கிறேன்.
இரண்டு குமரையும் வீடுகொடுத்து கட்டிக் கொடுத்து இருக்கிறேன்.
ஒரு பையனை திருச்சி ஜமாலில் படிக்க வைத்து இருக்கிறேன்.
முன்னூத்தி முப்பது சுகர் வைத்து இருக்கிறேன்" என்றாரே பார்க்கலாம்.


sabeer.abushahruk said...

ஆஹா ஆஹா…
இங்கே என்ன நடக்கிறது?  கமுக்கமா ஒரு மச்சான்ஸ் அரங்கம் நடக்கிறது.  மச்சான்களுக்கிடையேயான உரையாடல்கள் எப்போதுமே மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.  அதுவும் அதிரைகார மச்சான்ஸுக்கு சொல்லவே வேணாம்.  இங்கெ சீனியருக்கான விளக்கமும் சௌவுதி ரிட்டர்னினி சொத்துப் பட்டியலில் சுகரும் ரொம்ப சுவாரஸ்யமான தகவல் பரிமாற்றங்கள்.
 
அப்படியே எனக்கும் நியுயார்க்கில் இருக்கும் என் மச்சான் ஜலாலுக்கும் நடந்த உரையாடல் ஸ்கைப்பியில்.
 
“மச்சான் நீ அமெரிக்கா போய் மெத்தச் செவப்பாகிப் போயிட்டே. நீ மட்டும் பொம்பளயாப் பொறந்திருந்தா நான் ஒன்னையத்தான் கட்டியிருப்பேன்”
அவஞ்சொன்னான், “ஒன்னயத்தான் கட்டனும்னா நான் பாஸ்ப்போர்ட்டைத் தொலச்சிட்டு இங்கேயே இருந்திடுவேன்

Ebrahim Ansari said...

//“மச்சான் நீ அமெரிக்கா போய் மெத்தச் செவப்பாகிப் போயிட்டே. நீ மட்டும் பொம்பளயாப் பொறந்திருந்தா நான் ஒன்னையத்தான் கட்டியிருப்பேன்”
அவஞ்சொன்னான், “ஒன்னயத்தான் கட்டனும்னா நான் பாஸ்ப்போர்ட்டைத் தொலச்சிட்டு இங்கேயே இருந்திடுவேன்//

வின்ஸ்டன் சர்சில் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.

எதிர்க் கட்சி உறுப்பினர் ( பெண்): நான் மட்டும் சர்சிலி ன் மனைவியாக இருந்தால் அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்று இருப்பேன்.

சர்சில்: நீங்கள் மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால் நீங்கள் தரும் விஷத்தை சந்தோஷமாக வாங்கிக் குடித்திருப்பேன்.

Anonymous said...

/// மச்சான் நீ அமெரிக்கா போய்ரெம்ப செவப்பா///

அப்படினாஆறுதல் முறைக்கு முன்னே போன ஆபிரிக்கா காரங்க இன்னும் கறுப்பாவே இருக்காங்களே?

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

Anonymous said...

/// மச்சான் நீஅமெரிக்கா போய்ரெம்பசெவப்பா//

என்ற என்னைய comnt'''டில்''' ஆறுதல் முறை'' என்பது டைப்பில் உண்டான தவறு அது ''ஆறு தலை முறை'' 'எ'ன்று இருக்க வேண்டும் தயவு செய்து திருத்தவும்..''ஆறு தலை முறைக்கு முன்னாலே போன ஆப்பிரிக்காகாரங்க இன்னும் கருப்பாவே இருக்காங்களே?'' என்பதே சரி.

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு