Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஷிஃபா மருத்துவமனை கலந்துரையாடல் கூட்டம் 15

அதிரைநிருபர் | November 19, 2010 | , , ,

ஏறத்தாழ, சென்ற ஒரு வாரத்திற்கு முன் அறிவிப்புச் செய்யப்பட்டு, இன்று (18/11/2010 – வியாழன்) காலை பத்தரை மணியளவில் ஷிஃபாவின் முதல் மாடியில் பொதுக்குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் நிர்வாகக் குழுத் தலைவர் M.S.T. தாஜுத்தீன் அவர்கள் தலைமையில், A.J. தாஜுத்தீன் அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் தொடங்கிற்று.

தலைவர் தமது முன்னுரையில், "இந்த மருத்துவமனையின் வரலாற்றிலேயே எனக்கு இது முதலாவது கூட்டமாகும்" என்று அறிவித்து, இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை வந்திருந்தோரின் மனங்களில் பதியச் செய்தார். நமதூரும் காயல்பட்டினமும் ஒரே பண்பாட்டைக் கொண்டிருந்தாலும், நம்மைவிட அவர்கள் மருத்துவ வசதிகளில் முன்னோடியாகத் திகழ்கின்றார்கள்; ஆனால், மருத்துவ வசதிகளைத் துவக்கியத்தில் அவர்களைவிட நாம்தான் முந்தியவர்கள் என்பதைக் குறிப்பிட்டு, நாம் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்யத் தவறிவிட்டோம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

காலாகாலத்தில் அவ்வாறு நாம் மருத்துவ வசதிகளைப் பெருக்கியிருந்தால், அல்லாஹ் உதவியால், பல அகால மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட தலைவர், தமது கூற்றுக்குச் சான்றாக, தமக்கு நெருங்கிய சிலரின் மரணத்தைப்பற்றி நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்தார். அத்தகைய நிலைகள் இனிமேல் வரக்கூடாது என்ற கவலை அண்மைக் காலத்தில் இதன் நிர்வாகிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டதனால்தான் இது போன்ற கலந்துரையாடல்களும் கருத்துக் கணிப்புகளும் அவசியமாகின்றன என்றார்.

ஷிஃபாவை அண்மைக் காலம்வரை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளால் வந்த பின்னடைவை ஒப்புக்கொண்ட தலைவர், இனிமேல் அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே, நிர்வாகம் ஷிஃபாவை வளர்ச்சிப் பாதையில் நடாத்திச் செல்லவேண்டும் என்பதில் முனைந்துள்ளதாக அறிவித்தார். மருத்துவமனையைத் தொடர்ந்து நடத்துவதில் தொய்வு ஏற்படாதிருக்க, கடந்த சில ஆண்டுகளாக இதன் நிர்வாகிகள் – குறிப்பாக இதன் பொதுச் செயலாளர் A.J. தாஜுத்தீன் அவர்கள் தமது சொந்தப் பணத்தில் கணிசமான தொகைகளைச் செலவு செய்துள்ளதை நன்றியுடன் குறிப்பிட்ட தலைவர், அச்செலவினங்களின் சுருக்கமான விவரத்தையும் வெளியிட்டார்.

இம்மருத்துவமனைக்கு உடனடித் தேவை என்று நிர்வாகிகள் கருதியவற்றைப் பட்டியலிட்ட தலைவர், மகப்பேறு மருத்துவர் (DGO) ஒருவர், குழந்தை மருத்துவர் (DCH) ஒருவர், சிறப்பு மருத்துவர் (MD) ஒருவர் என்று வகைப்படுத்தி, அவர்களுள் மகப்பேறு மருத்துவராகத் திருமதி கோமதி MBBS., DGO அவர்களை மிகச் சிரமப்பட்டு அழைத்து வந்து பணியாற்ற வைத்திருப்பதையும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றிற்கும் வசதிகள் செய்யப்படும் என்பதற்கு உறுதி கூறினார். நமதூரில் சுமார் எழுபது விழுக்காடு மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உண்மைப் படுத்துவதையும், ஆங்காங்கு 'கேன்சர்' போன்ற கொடிய நோய்கள் தலை தூக்கி வருவதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நமக்கு ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலம் உரிமையாகவும், அதில் 1.34 ஏக்கர் அளவில் மட்டுமே மருத்துவமனை அமைந்துள்ளதையும், மீதி நிலம் அரசியல் பின்னணி உடையவர்களால் முடக்கப்பட்டுள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதனை மீட்டெடுக்க முனைப்புடன் வழக்குகளைச் சந்தித்து வருவதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

தலைமையுரையைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அதில் கூறப்பட்ட கருத்துகளும், அவற்றிற்கான விளக்கங்களும் வருமாறு:

• வருமானக் குறைவைப் போக்க, ஒரு கம்பெனியைத் தொடங்கலாம். அதன் மூலம் வரும் இலாபத்தில் மருத்துவமனையை நடத்தலாம்.

(நல்ல பரிந்துரை)

• முஸ்லிம் மக்களின் ஜக்காத் பணத்தை வசூலித்து, வசதியற்றோருக்கும் ஏழைகளுக்கும் அதிலிருந்து செலவு செய்து சிகிச்சை அளிக்கலாம்.

(ஜக்காத் பணத்தைப் பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதனைச் செலவு செய்வதில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் அவசியம்.)

• Project Study ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, சாதக பாதகங்களை ஆய்ந்து, முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டும். (ஏற்கனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியையும் அடைந்துள்ளதைத் தலைவர் குறிப்பிட, இதில் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி, நல்ல கருத்துக் கணிப்பையும் அதன் ஆய்வு முடிவையும் தந்துள்ள சகோதரர் மொய்னுத்தீன் அவர்களின் சுருக்கமான விளக்கமும் இக்கூட்டத்தில் இடம்பெற்றது.)

• பொதுமக்கள் டாக்டர்களின் கைராசியைப் பார்க்கிறார்கள். அதனாலும் ஷிஃபாவுக்குக் கூட்டம் வருவதில்லை. (இது போன்ற மனோநிலையில் இருப்பவர்களை நாம் மாற்ற முடியாது.)

• "பொதுமக்களின் இன்றைய trend, மருத்துவத்திற்காகப் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குப் போகும் நிலையில் இருப்பதால், நாம் ஏன் ஷிஃபா மருத்துவமனையைப் பட்டுக்கோட்டைக்கு மாற்றக் கூடாது?" என்று ஒருவர் கேட்ட கேள்வி புதுமையாக இருந்தாலும், அதில் உள்ள சிரமங்கள் மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளுக்கு உட்பட்டு மறுக்கப்பட்டது.

• இந்த மருத்துவமனை ஊரின் மையப் பகுதியில் இருந்திருந்தால், இன்னும் மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும்; எனவே, இதன் கிளை ஒன்றை ஊரின் மையப் பகுதியில் தொடங்கலாம்; பெரிய சிகிச்சைகளுக்கு இந்தத் தலைமை இடத்திற்கு வரலாமே என்ற புதுக் கருத்தொன்று முன்மொழியப் பட்டது. இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கை உருவாகும் என்ற பின்னூட்டமும் தெரிவிக்கப்பட்டது.

• தலைவரின் சஊதிப் பயணத்தின்போது, ஜித்தாவில் அதிரை மக்கள் சுமார் அறுபது பேர் கலந்துகொண்ட கூட்டத்தில், இருபத்தைந்து பேர் பொருளுதவி செய்து, ஷிஃபாவின் பங்குதாரர்களாவதற்குச் சம்மதித்ததைத் தலைவர் இடையில் குறிப்பிட்டார். அவர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!" என்ற கூற்றிற்கு ஒப்ப, ஆர்வமும் வசதியும் உள்ள நல்ல மக்களின் பொருளுதவியையும் வேண்டினார்.

• இறுதியாக, டாக்டர் கோமதி அவர்களின் சுருக்கமான – இதயத்தை ஈர்க்கும் சிற்றுரை அமைந்தது. "நான் வளர்த்த பிள்ளை இந்த ஷிஃபா" என்று அவர் கூறியபோது, நெஞ்சங்கள் நெகிழ்ந்தன. தமது எஞ்சிய காலத்தை இந்த மருத்துவமனைக்காக அர்ப்பணிக்க இருப்பதையும் டாக்டர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மக்களின் தவறான புரிதலையும் வதந்திகள் பரப்புதலையும் களைந்து, ஒரு முன்னேற்றப் பாதையில் ஷிஃபா நடை போடவேண்டும் என்று வாழ்த்தினார்.

கூட்ட முடிவில் நன்றி கூறப்பட்டு, பகல் 12.30 மணிக்கு அமர்வு நிறைவுற்றது.

-- அதிரை அஹ்மது

15 Responses So Far:

Abu Khadijah said...

//"இந்த மருத்துவமனையின் வரலாற்றிலேயே இது முதலாவது கூட்டமாகும்"//
கேட்கவே கொஞ்சம் கவலையாக இருக்கிறது, நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நன்றாக இருக்க நம்முடைய பங்களிப்பை அளிப்போம்

ஜித்தாவில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டது, அதில் ஒன்று தான் பங்கு தாரார்கள் ஆவது, இதற்கு பெரும்பாலனோர் தாங்கள் ஆர்வமாக இருந்தனர்.
அது மட்டுமல்ல டாக்டர் அஜ்மல் அவர்கள் மருத்துவமனையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல அருமையான யோசனை சொன்னார்கள், அதன் படி கொண்டு செல்லுவோமையானால், ஷிஃபா சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

டாக்டர் அஜ்மல் அவர்கள் ஒரு மருத்துவமனை என்றால் பின்வரும் வசதிகள் இருக்குமேயானால் நன்றாக இருக்குமென கூறினார்கள், அதில் சில
1.எமெர்ஜன்சி சர்வீஸ்,
2.24 x 7 சர்வீஸ் அதற்கென தனி டாக்டர்கள்
3.24 x 7 லேப் சர்வீஸ் மற்றும் சில யோசனைகள் இருந்தன

அதேப்போல் மொத்த எஸ்டிமேட் 5கோடி, பங்கு தாரருக்கு 1 லட்சம் என்று பேசப்பட்டது.

Abu Khadijah said...

நாங்கள்(ஜித்தாவாசிகள்), நீங்கள் என்னென்ன செய்யப் போகிறீர்கள் என்று ஒரு ரிப்போர்ட்டாக தந்தால நாங்கள் இன்வெஸ்ட் செய்வதற்கு வசதியாக இருக்குமென கூறியதையடுத்து அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையின் எதிரொளியாகத்தான் இந்த கலந்தாய்வு கூட்டமாக இருக்குமோ என யூகிக்க முடிகிறது.

தலைவர் M.S.T. தாஜுத்தீன் அவர்களின் கவலையான பேச்சு, எங்கள் அனைவரையும் ஷிஃபா மேல் அதிக அக்கறை எடுக்க தூண்டியது,
அல்லாஹ் அவர்களுக்கு மேலும் இந்த பணியை சிறப்பாக செய்ய தாக்கத்தை கொடுப்பானாக

crown said...

"பொதுமக்களின் இன்றைய trend, மருத்துவத்திற்காகப் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குப் போகும் நிலையில் இருப்பதால், நாம் ஏன் ஷிஃபா மருத்துவமனையைப் பட்டுக்கோட்டைக்கு மாற்றக் கூடாது?" என்று ஒருவர் கேட்ட கேள்வி புதுமையாக இருந்தாலும், அதில் உள்ள சிரமங்கள் மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளுக்கு உட்பட்டு மறுக்கப்பட்டது.
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். செருப்பு பத்தலங்குறத்துக்காக காலை வெட்டக்கூடாது.
-------------------------------------------------------------------
இதர யோசனைகள் பரிச்சீலிக்கப்பட வேண்டியதுதான்.

ZAKIR HUSSAIN said...

ஊரில் நடந்த இந்த நிகழ்வின் விளக்கத்தை சகோதரர் அதிரை அஹ்மதுவின் எழுத்தில் கண்டு சந்தோசம். நன்றி.


ZAKIR HUSSAIN

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எழுத்தில் மட்டும் இங்கே சொல்லிவிட்டுச் செல்லாமல் களத்திலிருக்கும் உங்களுக்கு (ஃஷிபா மற்றும் ARDA) என்றும் எல்லா வகையான எங்கள் ஒத்துழைப்பும் துஆவும் நிச்சயம் உண்டு - அல்லாஹ் நன்கறிவான் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது ஒரு நல்ல தொடர் முயற்சி, இத்தகவலை நம்முடன் பகிர்ந்துக்கொண்ட அதிரை அஹ்மது அவர்களுக்கு மிக்க நன்றி.

மருத்துவமனை விசயத்தில் நீண்ட கால கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை வலு பெற்றுள்ளதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல எண்ணத்தில் இதில் ஆர்வம் செலுத்திவரும் நிர்வாகத்தை பாராட்டி ஊக்கப்படுத்துவது நம் அனைவரின் கடமை.

சேவை நோக்குடைய அனைத்து காரியங்களுக்கும் அல்லாஹ் துனையிருப்பான். நாங்கள் அனைவரும் துஆ செய்கிறோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Project Study ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, சாதக பாதகங்களை ஆய்ந்து, முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டும். (ஏற்கனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியையும் அடைந்துள்ளதைத் தலைவர் குறிப்பிட, இதில் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி, நல்ல கருத்துக் கணிப்பையும் அதன் ஆய்வு முடிவையும் தந்துள்ள சகோதரர் மொய்னுத்தீன் அவர்களின் சுருக்கமான விளக்கமும் இக்கூட்டத்தில் இடம்பெற்றது.)//

அதிரைநிருபரில் 31.08.2010 அதிரை அஹ்மது அவர்கள் எழுதியை மருத்துவமானைக்கு மறுமலர்ச்சி மருத்துவமானைக்கு மறுமலர்ச்சி என்ற முந்தைய ஆக்கத்தில், சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சிலவற்றை ஷிஃபா நிர்வாகம் செய்து மக்களின் எதிர்ப்பார்ப்பு என்னவென்பதை அறிந்துள்ளதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எதையும் முறையாக செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் தீர்வுகளும் எட்டப்படும் என்பதற்கு project study செய்திருப்பது ஓர் உதாரணம். அன்று மருத்துவமானைக்கு மறுமலர்ச்சி என்ற முந்தைய ஆக்கத்தில் நான் பதிவு செய்த பின்னூட்டத்தை இங்கு அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறேன்.

///தாஜுதீன் சொன்னது… Wednesday, September 01, 2010 12:50:00 PM
அதிரைநிருபர் மூலமும், மற்ற அதிரை வலைப்பூக்கள் மூலமும் அருமையான ஆலோசனைகளை நம் சகோதரர்கள் வழங்கிவருகிறார்கள்.

புதிதாக ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதை மக்களிடம் கொண்டு சேர்த்து நம்பிக்கை ஏற்படுத்துவது என்பது மிக மிக சுலபம். ஆனால் ஏற்கனவே நளிவடைந்துள்ள ஒரு நிறுவனத்தை தூக்கி நிறுத்துவது என்பது மிகக் கடினமான சவால்.

இச்சவால்களை எதிர்க்கொள்ளவேண்டுமானால், இதற்காக அதிரையில் உள்ளவர்களிடமும், வெளியூர்களில் இருக்கு அதிரைவாசிகளிடமும் ஒரு MARKETING RESEARCH ஒன்றை செய்ய வேண்டும். கட்டாயம் நிர்வாகம் செய்தாக வேண்டும், இதை ஒரு MARKETING RESEARCH நிறுவனத்தின் உதவியுடன் செய்ய வேண்டும். QUESTIONAIRE தயார் செய்து மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும், மருத்துவ அடிப்படையில் நம்ம ஊர் மக்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனையிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று MARKETING RESEARCH மூலம் நிச்சயம் சரியாக அறிந்துக்கொள்ள முடியும் தெரியும்.

சேகரித்த QUESTIONAIREயை வைத்து ஒரு நல்ல MARKETING RESEARCH COMPANYயில் கொடுத்தால் நமக்கு நல்ல பயனுல்ல ஆலோசனைகள் கிடைக்கும். அதை வைத்து நல்ல ஒரு சிறப்பான மருத்துவனையாக நம்ம ஷிஃபா மருத்துவமனையை மாற்றலாம்.

இன்னும் பழைய சிந்தனை, பழைய அனுகுமுறையையே பயன்படுத்தி வந்தால், ஷிஃபா மருத்துவமனை ஒரு மருத்துவமனையாக அல்லாமல் அதிரையின் வரலாற்றில் உள்ள பழையக் கட்டங்களில் ஒரு கட்டடமாகத்தான் போதும். அல்லாஹ் காப்பாத்துவானாக.
Reply Wednesday, September 01, 2010 12:50:00 PM ////

Unknown said...

எனது கட்டுரையில் இரண்டு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளேன். தலைவர் MST தமது முன்னுரையில், "இதுவே முதலாவது கூட்டம்" என்று குறிப்பிட்டது, அது தமக்கு முதலாவது கூட்டமாகும் என்ற கருத்தில்தான் என்று கூறினார்கள். அடுத்து, நண்பர் AJT அவர்களைப் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டதை அவர்கள் விரும்பவில்லை. In fact, ஷிஃபாவுக்காக அவர்கள் செய்துவரும் சேவைகள் open secret ஆகும். இப்படி, 'பெருக்கத்து வேண்டும் பணிவு' என்ற குரள் மொழிக்கு உதாரணமாக இருந்துவரும் நண்பர் ஏ.ஜே. தாஜுத்தீன், அனைவரின் துஆவுக்கும் பாராட்டிற்கும் உரியவராவார்.

அதிரைநிருபர் said...

//எனது கட்டுரையில் இரண்டு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளேன்.//

அன்பினிய அதிரை அஹ்மது அவர்களின் கோரிக்கை ஏற்று, இக்கட்டுரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

//இப்படி, 'பெருக்கத்து வேண்டும் பணிவு' என்ற குரள் மொழிக்கு உதாரணமாக இருந்துவரும் நண்பர் ஏ.ஜே. தாஜுத்தீன், அனைவரின் துஆவுக்கும் பாராட்டிற்கும் உரியவராவார். //

அதிரைநிருபர் குழு சார்பாக நாங்களும் வழிமொழிகிறோம். இன்ஷா அனைவரும் சேர்ந்து துஆ செய்கிறோம்.

nijam said...

alhamnthu lillaah, nalla muyaRssi, allah ithanai niRaiveeRRith
tharuvaanaaka. nalla maruththuvam maRRum kalvi irunthaal nammil pala peer
veeRu UrkaLukku pulam peyarvathai thadukkalaam. ippadi oru kalanthuRaiyaadal
nikazthathai aRiyaththantha athirai ahamathukku naNRi.
anpudan nijamuthiin Omaan
maSkat

nijam said...

அல்ஹம்ந்து லில்லாஹ், நல்ல முயற்ச்சி, அல்லஹ் இதனை நிறைவேற்றித்
தருவானாக. நல்ல மருத்துவம் மற்றும் கல்வி இருந்தால் நம்மில் பல பேர்
வேறு ஊர்களுக்கு புலம் பெயர்வதை தடுக்கலாம். இப்படி ஒரு கலந்துறையாடல்
நிகழ்ததை அறியத்தந்த அதிரை அஹமதுக்கு நண்றி.
அன்புடன் நிஜமுதீன் ஓமான்
மஸ்கட்

அப்துல்மாலிக் said...

ஒவ்வொரு முறையும் மருத்துவத்திற்காக ஷிஃபாவை கடந்து செல்லும்போது ஒரு தனித்திறமையான (சிறப்பான திறப்புவிழா இப்போது நினைவில்) ஒரு மருத்துவனையை கையிலே வைத்துக்கொண்டு இப்படி ஊரு விட்டு ஊரு செல்கிறோமே என்று மனது வலிக்கும். ஒரு சகோதரர் சொன்னது போல் வெளியூரில் சென்று வைத்தியம் பார்ப்பது ஒரு டிரென்டாகிவிட்டது. இப்போது நம்மூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் டயபடிஸ் க்கு சிறப்பான மருத்துவம் பார்க்கப்படுகிறது என்பது கேள்வி.

கூட்டம், ஆலோசனை என்பது ஒரு இயக்கத்திற்கும் நிர்வாகத்திற்கு முக்கியம், அதிரையில் நல்ல மருத்துவம் கிடைக்கும் என்று சுற்றுவட்டார மக்கள் அதிரையை நோக்கி படையெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த சமயத்தில் அதிரை மக்களுக்கு முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழலாம், இன்ஷா அல்லாஹ்....

mohamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் இது ஒரு நல்லமுயைர்ச்சி அல்ஹம்துரில்லஹ் என்னுடய கருத்து முதலில் மகப்பேர் மருத்தும் மற்றும் குலந்தை மருத்துவம் இந்த இரன்டுக்கு மட்டும் முக்கியதுவம் கொடுத்து பிரகு மற்ற மருத்துவர்கலை கொன்டுவந்தால் நிர்வாகதுக்கு இழகுவாக இருக்கும்

முகமது புகாரி
தமாம்

sabeer.abushahruk said...

//சேகரித்த //சேகரித்த QUESTIONAIREயை வைத்து ஒரு நல்ல MARKETING RESEARCH COMPANYயில் கொடுத்தால் நமக்கு நல்ல பயனுல்ல ஆலோசனைகள் கிடைக்கும். //

எனக்கும் இதில் உடன்பாடுண்டு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு