எனது ‘அழுதது போதும் சமுதாயமே ஆர்த்தெழு’ என்ற கட்டுரையினைப் படித்து விட்டு தோஹாவினைச் சார்ந்த ஹாஜி முகம்மது, நாகர்கோவிலைச் சார்ந்த அப்துல் ராசிக் மற்றும் பல சகோதர்கள் சமுதாயத்தினை தட்டி எழுப்ப நீங்கள் என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள். அந்த நண்பர்களுக்கு உலக சமுதாய தீங்கினைப் சுகமாக்க அருமருந்தாக இருக்கவே இருக்கிறது அல் குர்ஆனும், இன்று 150 கோடி மக்கள் வரை இஸ்லாத்திற்கு இழுத்துள்ள எம்பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்க்கை நெறியிலும் அவர்கள் போதித்த ஹதீசுகளும் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஹஸ்ரத் பிலால் தீன்யாத் சபை: நானிலம் போற்றும் நபியவர்களுக்கு ஜிப்ரேயில் (அலை) மூலம் குர்ஆனை இறக்கி வைத்து முதல் கடமையாக அகம்-புறம் அழுக்கினைப் போக்கி மனிதனை புனிதனாக்குவதிற்கு ஐவேளை தொழுகை கட்டாயமாக்கினார்கள். சிலருக்கு ஐவேளை தொழுகை மிகவும் சிரமமாக இருக்கும். ஏனென்றால் நவீன உலகில் நாலு காசு சம்பாதிக்க சுழன்று உழைத்தால் மட்டுமே குடும்பத்தினைக் காப்பாற்ற முடியும் என்ற காலத்தின் கட்டாயம். செக்கு மரமாக உடலை வருத்தி உழைத்துவிட்டு தன் மனதினை பல்வேறு திசையில் அலையவிட்டு நோயாலும் மன அமைதியின்மையாலும் அவதிப்பட்டு ‘யோகா’ என்ற புது பயிற்சியினை போதிக்கும் சாமியார்கள்
தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பரிதாபமாகவில்லையா? அந்தக் குறையினைப் போக்கத்தான் ஐவேளை தொழுகையினை நமக்கு முறையாக கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால் அதனை முறையாக கடைப்பிடிக்காததால் பல்வேறு உடல்-உள்ளப் பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. பேன்சில்வேனியா பல்கலைக்கழக சமூக ஆய்வாளர் கிறிஸ்டோபர் கெய்டில் ஓர் ஆய்வு 1972 முதல் 2006 வரை மேற்கொண்டதின் பலனாக இறை வழிப்பாட்டில் ஈடுபட்டவர்கள் சமூக நலம், உடல் நலம் மற்றும் நன்னடத்தையில் சிறந்து விளங்குவதாக கண்டு பிடித்துள்ளார். ஆகவே நாம் நம் சமுதாயத்தினரிடையே முதலில் முறையான ஐவேளை தொழுகையினை வலியுறுத்த ‘பஜ்ரங்தளம்’ போல ஹஸரத் பிலால் தீன்யாத் சபையினை ஆரம்பித்து மார்க்க பிரசங்கத்தில் சமூக அமைப்புகள் ஈடுபட்டு முதலில் ஈமான் மீது முஸ்லிம்களுக்கு பிடிப்பு ஏற்பட வழிவகை செய்ய பாடுபடவேண்டும்.
மௌலான ஆசாத் கல்வியாளர் குழு: கல்வியாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் பி.ஜே.பியில் அகில பாரதிய வித்யாபாரத் சபை இயங்கிக் கொண்டுள்ளது. ஆனால் நமது சமுதாயத்தில் அதற்கு இணையான ஒரு அமைப்பு இல்லை. ஆகவே சமுதாய மாணவர்கள், மாணவிகள், ஆசிரிய பெருமக்கள், மற்றும் அறிவு ஜீவிகள் பல்வேறு இயக்கங்களிலும், அரசியல் கட்சிகளுக்கு உதவி செய்பவர்களாக மாறி வருகின்றனர். ஆகவே அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பினை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். நமது மாணவர்களுக்கு மேல்பட்ட படிப்பு தொடரவும், வேலை வாய்ப்பில் வழிகாட்டவும், வேலை வாய்ப்பு முகாம்களை சமூக தொழில் முனைவர்கள் ஆதரவோடு நடத்தவும், சமுதாய படித்த இளைஞர்களிடையே புதைந்து கிடக்கும் திறமையினை வெளிக் கொணரவும் ஒரு அமைப்பு நமக்குத் தேவை. இந்திய நாட்டின் விடுதலை வீரரும், சுதந்திர இந்தியாவில் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல் கலாம்ஆசாத் அவர்கள் நினைவாக ஒரு கல்வியாளர் குழு எற்படுத்தி கல்வியாளர்கள், மாணவர்களை வழி நடத்தலாம். டாக்டர்கள் மருத்துவப் பணியாற்ற அவர்களையும் ஒரு குழுவாக இணைத்து செயலாற்றலாம்.
பிறைமேடை பிரச்சார சபை: சமுதாயத்தினைப் பாதிக்கக் கூடிய பல்வேறு விசயங்களில் நமது கருத்துக்களை சமுதாய மக்களுக்கும், மற்றவர்களுக்கு விரைவாக எடுத்துச்சொல்ல ஒரு தரமான பத்திரிக்கையோ அல்லது தொலைகாட்சி நிறுவனமோ இல்லாதது பெரிய குறையாக இருந்து வருகிறது. நோன்பு நேர பிரச்சாரத்திற்குக் கூட தனியார் வர்த்தக விளம்பர்ங்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டும், மற்றும் மகளிர் பிரசங்கங்களில் இஸ்லாமிய சமுதாயத்தினை ஆணாதிக்க சமூகம் என்று வசைபாடிய பெண்களைக் கொண்டு மார்க்க பிரசங்கம் செய்யச்சொல்லியும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வயதானர்கள், ஊனமுற்றோர் போன்றோர் பயன் படும் வகையில் மிகவும் குறைந்தளவே பிரச்சாரமும் செய்யடுவதினை சிலர் ‘இ’ மீடியாக்களிலும் சமுதாய பத்திரிக்கையிலும் குறைகூறியுள்ளனர் என்பதினை அனைவரும் அறிந்ததே. எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு ஆங்கிலத்தில் ‘அல்மைட்டி’ அல்லாஹ் என்று சொல்வோம்.
ஆனால் அந்த ‘அல்மைட்டி டாட் காம்’ என்ற பெயரில் ஒரு சமுதாய கல்யாண கவுன்சிலிங் இணையதள அமைப்பு பெயரிலும் சகர்நேரத்தில் விளம்பரம் வருகிறதினை பலரும் பார்த்திருப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் பெயரில் திருமண கவுன்சிலிங் அமைத்திருப்பது சரியா? என யோசிக்க வேண்டும். ஒரு நாள் சகர் நேர குடும்பவியல் பிரசங்கத்தில் ஒரு சமுதாய அறிஞர் சொன்னதினை உங்களுக்கு எடுத்துச் சொல்வது தவறில்லை என நினைக்கிறேன். ரஸுலுல்லாஹ்வும் அவர்களுடைய துணைவியார் ஆயிசா(ரலி) அவர்களும் எவ்வாறு பாசத்தினை பரிமாரிக்கொண்டார்கள் என்பதினை விளக்கும்போது, ஒரு தடவை ரஸுலுல்லாஹ் தான் குடித்த தேநீர் கோப்பையினை ஆயிசா அவர்களுக்கு வழங்கியதாகவும் அதில் மீதியுள்ள தேநீரை நபி அவர்கள் எந்த இடத்தில் உதடுகளை வைத்து குடித்தார்களோ அந்த இடத்தில் ஆயிசா அவர்களும் தன் உதடுகளை வைத்து குடித்தார்களாம்., அதே போன்று ஒரு பெருநாளன்று மதினாவிலுள்ள மஜ்தியே நக்வி உள்ள மைதானத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் நபி அவர்கள் கன்னத்தில் ஆயிசா தன் கன்னத்தினை வைத்து நபியவர்கள் தோள் மீது சாய்ந்திருந்ததாகவும் அதனை அந்த விளையாட்டுத் திடலில் இருந்த அத்தனை பேர்களும் பார்த்ததாகவும் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அந்தரத்தில் நடந்ததினை எல்லாம் அரங்கத்தில் யாரும் செய்வார்களா அதனை அதுபோன்ற பிரசங்கத்தில் ஈடுபட்டவர் போய் பார்த்தாரா? அல்லது சகர் நேரத்தில் ஐம்புலன்களை அடக்க வேண்டிய நேரத்தில் இதுபோன்ற சொற்பொழிவு தேவைதானா என்று ஆராய வேண்டும். ஒரு ஹதீசில் ஒரு பார்வை தெரியாதவர் ரஸுலுல்லாஹ்வினைக் காண அவர்கள் வீட்டுக்கு வருவதாகவும் அப்போது அவர் பார்வையிழந்தவர் தானே என்று மனைவிமார்கள் நின்றதாகவும். அப்போது நபியவர்கள் தன் மனைவி மார்களை அடுத்த ஆண் மக்களிடம் மறைந்து வாழுங்கள் என்று கூறியதாக கதீசுகள் படித்தது ஞாபகம். ஆனால் அந்த சமுதாய தலைவர் சொன்னது போல தேநீர் கிண்ணத்தில் ஆயிசா அவர்கள் உதடு வைத்ததினையும், பலர் முன்னிலையில் கன்னத்தோடு கன்னம் வைத்தினையும் நான் யாரும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை ஆகவே சமுதாயத்தில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முறையான ஊடகங்களும், தொலைகாட்சி நிறுவனமும் அவசியம் தேவை. அது தனிப்பட்டவர் கையில் இருந்தால் அவருடைய கைப்பாவையாகி வுpடும். ஆகவே இந்து அமைப்புகளுக்கென்று இருக்கின்ற ‘துர்கா வாகினி’ போன்ற ஒரு பிறைமேடை பிரசார சபை நமது சமுதாயத்திலும் துவங்க வேண்டும்.
அன்னை பாத்திமா மகளிரணி: பெண்கள் ஒரு சமுதாயத்தின் கண்கள். ஒவ்வொரு ஆணின் முன்னேற்றத்தின் பின்னணியில் ஒரு பெண்ணிருப்பாள் என்று பொது கருத்தாகும். ஆனால் பெருமானார் வாழ்வில் அன்னை கதிஜாவும் அவருடைய அருமை மகளார் பாத்திமா அவர்கள் வீரர் அலியின் அரணாக விளங்கினர். அவர்களைப் போன்று பெண்களை வழி நடத்திச் செல்ல ஒரு நல்ல பெண்கள் அமைப்பு சமுதாயத்தில் உருவாக்க வேண்டும். மணமகள் வீட்டாரிடம் பெண்களே அதிக சீதனம் பேசி அவ்வாறு கொண்டு வராத பெண்களை கொடுமைக்கு ஆளாக்குவதினைப் பார்க்கிறோம். பெண்கள் கல்விக்கு முக்கியம் கொடுத்தால் தான் நவீன சமுதாயத்தில் எதிர் நீச்சல் போட முடியும் என்ற நிலை இருக்கும் போது நாம் மட்டும் பின் தங்கி இருக்கலாகுமா? வேளி நாட்டில் மண முடித்துச் செல்லும் நமது சமுதாய பெண்கள் கல்வி கற்றிருப்பதின் மூலம் எவ்வாறெல்லாம் குடும்ப செலவினை ஈடு செய்ய தாங்களும் வேலைக்குச் சென்று வீட்டின் செலவு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதினை அங்கு சென்று பார்த்தவர்களுக்கு தெரியும். தன் கணவன் வருமானத்துடன் தன் வருமானமும் சேர்த்து வீடு வசதியோடு வாழ்கிறார்கள். அத்துடன் இந்தியாவிலுள்ள உற்றார் உறவினருக்கும் உதவுகிறார்கள் என்று புரியும். அவர்கள் தங்கள் குழந்தைகளின் உயர்படிப்பில் மிகவும் கவனமும் செலுத்துகிறார்கள். ஆகவே சலுகையுடன் கூடிய கல்வி நமக்கு கிடைக்கும் போது பெண் கல்வி பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் அரசிலில் பெண்களுக்கு ஒதுக்கீடு என்ற காலக் கட்டத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். மற்ற சமுதாயம் பெண்கள் அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் போது நாம் மட்டும் பின்தங்கி நிற்க வேண்டுமா? ஆகவே தான் அரசியல் கல்வி பெண்களுக்கு போதிக்க வேண்டும். அத்துடன் சுகாதாரத்துடன் குழந்தைகளை வளர்க்கவும் பெரியோர்கள் நோயுற்று இருக்கும் போதோ அல்லது அசாராண சமயங்களில் மருத்துவ உதவிகள் எப்படி பெண்கள் செய்ய வேண்டும் என்ற மருத்துவ கல்வியும் ஊட்ட வேண்டும்.
ஜின்னா இலவச சட்ட உதவி மையம்: அப்பாவி முஸ்லிம்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறைக் கோட்டத்தில் வாடும் நிலை இன்றுள்ளது. இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிக்காக வாதாடும் தமிழ் தலைவர்களுடன் நம் சமுதாயத்தினைச் சார்ந்தவர்கள் உள்ளனர். ஆனால் அநியாயமாக வழக்கினை சந்திக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கு உதவி செய்யவும், முஸ்லிம் சமுதாயம் மக்களை பல்வேறு பொய் வழக்குகளில் தள்ளி நசுக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வாதிடவும், சமுதாய உரிமைகளை சட்டப்பூர்வமாக வாதாடிப் பெறவும், வக்ப் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களிடமிருந்து நிலங்களை சட்டத்திற்குட்பட்டு கைப்பற்றவும், அநியாயமாக மணவிலக்கு அளிக்கப்படும் அபலைப் பெண்களுக்கு உதவவும், அரசு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு அரசிடமிருந்து பெற்றுத் தரவும் சட்ட உதவிமையம் சிறப்பாக பயன்படவேண்டும். மற்ற ஜாதி சட்ட வல்லுநர்கள் ஒரு அமைப்பு தங்களுக்குள் வைத்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் போது நமது சமுதாய வக்கீல்கள் மத்தியில் அது போன்ற ஒரு அமைப்பு இல்லை. ஆகவே சட்டம் படித்த சமுதாய தொண்டாற்ற விருப்பம் தெரிவிக்கும் வழக்கறிஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அந்த அமைப்பிற்கு சுதந்திரப் போராட்ட வீரரும், லண்டன் வட்டமேஜை மாநாட்டில் இந்திய மக்கள் கருத்தினை ஆனித்தரமாக எடுத்துச் சொனன ஜின்னா பெயரில் ஒரு இலவச சட்ட உதவி மையம் ஏற்படுத்தலாம்.
அலி சீரணிப் படை: பெருமானார் பெரிய தகப்பனார் மகனாகவும், பெருமானார் அருமை மகளார் பாத்திமா அவர்களின் வாழ்க்கைத் துணைவராகவும், பெருமானார் படைகளை வெற்றி வாகையுடன் நடத்திச் சென்றவருமான அலி(ரலி) அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பிட முடியாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான் சீருடை அணிந்து அணிவகுப்பினனை நடத்த முடியும் என்பதினை முறியடித்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் சுதந்திர விழாக்கள் நேரத்தில் மிகவும் சிறப்பான அமைதியுடன் கூடிய அணி வகுப்பினை கோவை, மதுரை போன்ற பகுதிகளில் நடத்திக்காட்டியுள்ளனர். அவர்கள் செயல் கட்டுப்பாடுடன் இருந்தால் நமது சமுதாயத்தாலும் மற்ற அமைப்பு போல சாதித்துக் காட்ட முடீயுமென்பதை உணர்த்தவில்லையா? இது போன்ற அமைப்புகள் ஒவ்வொரு சமுதாய அணியிலும் இருக்கின்றன நமது சமுதாயத்திலும் தொண்டர்களுக்கு உடற்பயிற்சி கொடுக்கவும், சமுதாயம் கூடும் இடங்களில் சீருடையில் ஒழுங்கு படுத்தவும், அவசர காலங்களில் சமுதாயத்தினை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும், தேவைப்படுவர்களுக்கு ரத்ததானம் அளக்கவும், இயற்கை சிற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுனாமியில் நாகூர், பரங்கிப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் உதவி செய்தது போல உதவிகள் அளிக்க முடியுமல்லவா?
உமர் அரசியல் விழிப்புணர்பு கழகம்: இன்றை ஜனநாயக மதசார்பற்ற நாட்டில் அரசியலில் நமது சமுதாயம் ஒரு அங்கீகாரம் கிடைக்க வழியில்லை. ஆனால் சுதந்திர இந்தியாவில் கண்ணியமிக்க காயிதே மில்லத் காலத்தில் அது போன்ற ஒரு அங்கீகாரம் இருந்தது. இன்று சமுதாய அமைப்புகள் பிரதான அரசியல் கட்சிகளுக்கு வழியச் சென்று சேவை செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டு அங்கீகாரமற்ற நிலையில் நமது சமுதாயம் உள்ளது.. மகாத்மா காந்தி கூட இந்தியாவில் ஒரு சிறந்த அரசு அமைக்க வேண்டுமென்றால் அது கலிபா உமர்(ரலி) அவர்களுடைய ஆட்சிபோன்று அமைய வேண்டுமென்றார். அப்படிப்பட்ட சமுதாய அரசியல் வழிகாட்டுபவர்கள் வழியில் வந்த நாம் நமது உரிமையினை அடைய முடியாத நிலையில் உள்ளோம் என நினைக்கும் போது பரிதாபமாகவில்லையா? தலித் மக்களுக்கு இன்று ஒரு தனி இடம் அரசியலில் தொல்.திருமாவளவன் போன்று இருக்கும்போது நமது சமுதாயத்தில் தலைவர் ஒருவரே உள்ள கட்சி, நாலுபேருக்கு நன்றி சொல்லும் கட்சி, காரில் கொடி பறப்பதிற்காக உள்ள கட்சி, சமுதாய பெயர்சொல்லி பணம், பதவி பெற ஒரு இலக்கிய அமைப்பு, அரசியல் துதி பாடும் அடிவருடிகள் போன்ற அரசியல் அமைப்புகள் தான் ஏராளமாக உள்ளன. ஆனால் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்பு, கல்வியில் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, மாநில மைனாரிட்டி கமிஷனில் சேர்மன் அந்தஸ்து, நலிந்த சமுதாய மக்கள் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த தொழில் உதவி, தனி தொழில் பேட்டை தொடங்குதல், மகளிர் ஒதுக்கீட்டில் சமுதாய மகளிருக்கு உள் ஓதுக்கீடு போன்ற தனிக் கொள்கைகளை முன் வைத்து அரசியல் கூட்டணிக்கு ஆதரவு என்ற ஒரு நிலைப்பாடு எந்த சமுதாய அரசியலமைப்பிற்குமில்லை. ஆனால் சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக, தாளிக்க உதவும் கருவேப்பிள்ளையாக, நோன்பு திறக்கும் நேரத்தில் கஞ்சி குடிக்க தொப்பி போட பயன்படும் சமுதாயமாக நமது சமுதாயத்தினை பல அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். ஆகவே நமது உரிமைகளுக்கு குரல் கொடுக்கவும், நல்உறவிற்கு கைகொடுக்கவும், அரசியலில் தனித்தன்மை பெறவும் ஒரு அரசியல் கூட்டு விழிப்புணர்வு கழகம் அவசியம் தேவை.தானே!
பல்வேறு சமுதாய அமைப்புகளில் உள்ளவர்களும், அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும் எப்படி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தாலும் அவர்களுடைய பயிற்சியின் போது வாஜ்பாய் போன்ற வயதான தலைவர்களிலிருந்து, ராம் மாதவ் போன்ற இளைஞர்வரை காக்கி அரைக்கால் சட்டையும், வெள்ளை நிறச் சட்டையும், கருப்பு தொப்புயுடன் காட்சியளிக்கின்றார்களோ அதேபோன்று சமுதாய விழிப்புணர்வு கழக தொண்டர்கள் கைலி அல்லது பேன்டும் முழுக்கை வெள்ளைச்சட்டையும் அனிந்து, வலது கையில் முனங்கைக்கு மேல் பச்சைக் கலர் உரையும் அணிந்து தனித்தன்மையுடன் செயலாற்ற வேண்டும். தொண்டர்கள் பயிற்சிக்கு சமுதாய கல்வி நிலையங்களை தேர்ந்தெடுக்கலாம்.
நான் குறிப்பிட்டவை அனைத்தும் நமது சமுதாயம் மற்ற சமுதாயத்தினை விட பின்தங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் சொல்லப்பட்டுள்ளன.. என்னுடைய யோசனையை விட மிகவும் சிறப்பான செயல் வடிவம் கொடுக்கக் கூடிய, யோசனை சொல்ல வல்ல பல சமுதாய படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதினை அவர்கள் அனுப்பும் மின் அஞ்சலிலிருந்து தெரிந்து கொண்டேன். ஆகவே ஒரு கூட்டு நடவடிக்கை ஏற்பட உங்களது ஆக்கப் பூர்வமான கருத்துக்களினாலும் முடியும். அவ்வாறு சமுதாய எழுச்சி அணி ஏற்பட்டால் நமது சமுதாயம் முன்னாள் மறைந்த வயதான எம்.பி. ஜாப்ரே மனைவி அழுதது போன்று அழாது ஆர்த்தெழ பேருதவியாக இருக்குமென்றால் அது பொய்யாகுமா?
-- டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
4 Responses So Far:
மிகவும் ஆக்கபூர்வமான வழிகாட்டல்களை உள்ளடக்கிய இந்த கட்டுரை வாசிக்கும்போதே உள்ளூர ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. திட்டங்களை விளக்கி அதற்குப் பொருத்தமான பெயர்களை முன்மொழிந்த விதம் மிக நேர்த்தியானது.
திட்டங்கள் விரைவில் செயல் வடிவம் பெற என் துஆ.
வரிகளோடு ஊடுருவ ஆரம்பித்தேன் ஆழ்ந்த (மிகவும்) அக்கரையுடன் எழுதப்பட்ட ஆக்கபூர்வமான வழிகாட்டியாக அமைகிறது இந்தக் கட்டுரை...
// மகாத்மா காந்தி கூட இந்தியாவில் ஒரு சிறந்த அரசு அமைக்க வேண்டுமென்றால் அது கலிபா உமர்(ரலி) அவர்களுடைய ஆட்சிபோன்று அமைய வேண்டுமென்றார். அப்படிப்பட்ட சமுதாய அரசியல் வழிகாட்டுபவர்கள் வழியில் வந்த நாம் நமது உரிமையினை அடைய முடியாத நிலையில் உள்ளோம் என நினைக்கும் போது பரிதாபமாகவில்லையா? //
திக்கற்று ஆளுக்கு ஒரு திசையாகவும் குழுவாகவும் இருக்கிறோம் - வேதனையாக இருக்கிறது !
அருமையன பதிவு சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக, தாளிக்க உதவும் கருவேப்பிள்ளையாக, நோன்பு திறக்கும் நேரத்தில் கஞ்சி குடிக்க தொப்பி போட பயன்படும் சமுதாயமாக நமது சமுதாயத்தினை பல அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். ஆகவே நமது உரிமைகளுக்கு குரல் கொடுக்கவும், நல்உறவிற்கு கைகொடுக்கவும், அரசியலில் தனித்தன்மை பெறவும் ஒரு அரசியல் கூட்டு விழிப்புணர்வு கழகம் அவசியம் தேவை.தானே!
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த கட்டுரைக்கு கருத்திடும் அளவிற்கு நான் விசயம் தெரிந்தவனா என்பதை ஒருமுறை சிந்தித்துவிட்டு எழுதுகிறேன். இருந்தாலும் என்னுடைய அறிவு எனக்குப்போதாது.அனாலும் என் மனதில் எண்ணத்தில் உதித்த சில கேள்விகள் எப்பொழுது இதுபோல் சிந்தித்து செயல்படுத்தப்போகிறோம்? ஏன் படித்த மிகவும் திறமை வாய்ந்த சகோ.முஹம்து அலி அவர்களே பயிற்சிகளம் ஆரம்பித்தால் நலம் தானே? சமுதாயந்தின் மேல் கொண்ட அக்கரையில் அவர்கள் இது போல் விழிப்புணர்வு ஏற்பட எழுதுகிறார்கள் அவர்களுக்கே இதனை ஏற்று நடத்தக்கூடிய தகுதியும்,திறமையும் உள்ளது.அதுபோல் நீதித்துறை சம்மந்தமாக அப்துற்றஜ்ஜாக் காக்கா போன்றவர்கள் பயிற்சி களம் நடத்தலாம்.
இது போல் அந்தந்த துறை அறிஞர்கள் உதவ வரலாமே? அதற்கு நம்மால் இயன்ற அளவு பக்க பலமாக இருக்கலாம் .இன்ஷாஅல்லாஹ்.இந்த கட்டுரை ஒவ்வொரு தகவலும்,தலைப்பும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு செயல் பட தூண்டுகோளாக அமையக்கூடிய அளவில் மிகச்சிறப்பாக வந்துள்ளது.
Post a Comment