Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்! 9

அதிரைநிருபர் | February 20, 2011 | , , ,


எத்தனை சீட் முஸ்லிம்களுக்கு?.


அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர். முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

எந்த ஒரு கட்சியும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கிட எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதே உண்மை!. ஏனெனில் இருக்கும் சீட்டுக்களையும், பதவிகளையும் அக்கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கு ஒதுக்கினாலே தமிழகத்திற்கு இன்னும் 234 தொகுதிக்குமேல் தேவைப்படும். எப்படி முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கான ஜக்காத்தினை சரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்காமல், 5,10 ரூபாய்கள் என்று தர்மத்தினை, ஜக்காத் என்று வழாங்குகின்றார்களோ, அதே பார்முலாவைத்தான் இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இடம் அளிக்காமல், பிச்சை போடுவதுபோல் ஒன்று இரண்டு என்று வழங்குகின்றார்கள்!. இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம்!.

காரைக்குடியில் செட்டியார்கள் தொகுதியில் தேவரை நிறுத்த முடியவில்லை!. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை!. தேவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தினால் கலவரம் வெடிக்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வன்னியர், தேவர், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பிராமணர் என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம்!. எந்த அரசியல் கட்சியாவது அக்ரஹாரத்தில் அப்துல்காதரை நிறுத்தி ஜெயித்து காட்ட முடியுமா?. ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும்!. தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் கூட ரிசர்வ் தொகுதிகளாக்கி அங்கும் வஞ்சிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை, பெண்களுக்கான தொகுதியாக்கப்பட்டு அங்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்க முடியாமல் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என்ற வார்த்தைகளை கூறி ஒட்டுக் கேட்டுவிட்டால் போதும்!. அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன்!. காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி!. மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம்! என்ற டயலாக் வந்தாலும் போதும்!. உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது!) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்!. யார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை?. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள்!.

முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒன்று இரண்டு தொகுதிகள் வழங்கப்படுகின்றது. அது இரண்டாக பிளவு பட்டால் ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வழங்கப்படுகின்றது. தற்போது ம.ம.க என்ற கட்சி உருவாகி அதற்கும் இரண்டு என்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அயோக்கிய அரசியல் கட்சிகள், நீங்கள் சிதறுண்டு வாருங்கள் ஆளுக்கு இரண்டு என்று உங்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றார்கள்.அதுமட்டுமில்லை!. இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்!.

இதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். ஒரே தொகுதியில் போட்டியிட சம்மதித்தால் அதைவிட துரோகம் வேறு இல்லை!. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது?.

தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள், பிற அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. இதை அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. இங்கு முஸ்லிம்களை தவிர வேறு இனத்தவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற நிலையில் உள்ள தொகுதிகளேயாகும். இதே நிலையைத்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்ற எல்லா தொகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையைதான் முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிமை நிறுத்தினால் ஓட்டு!. இல்லை என்றால் சுயேட்சையாக ஒரு முஸ்லிமை நிறுத்தி, மொத்த ஜமாத்தும் இயக்கங்களும் அவருக்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிருபித்து, அடுத்த தேர்தலில் இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை புரியவைக்க வேண்டும், இனி இந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்தினால் மட்டுமே இங்கு வெற்றி பெறமுடியும் என்று பாடம் கற்பிக்க வேண்டும். இதை தவிர இனி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்யவே முடியாது!.

ஏனெனில் எல்லா அரசியல் கட்சியும் இரண்டு சீட் என்ற கோட்பாட்டில் இருந்து வெளிவர மாட்டார்கள். எனவே இனி அவர்கள் கட்சியில் முஸ்லிம்களின் சட்டமன்ற உறுப்பினரை அதிகரித்து அதன் மூலம் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே தவிர, நீங்கள் சிதறுண்டு கிடப்பதால், இனி இன்னும் பத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் முஸ்லிம் இயக்கங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப்பெரும் வலிமை வர வாய்ப்பேயில்லை!.

முஸ்லிம் விரோத கட்சியை தவிர்த்து, மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கின்ற காரணத்தால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை உள்ளதையும் நாம் மறுக்க முடியாது!. சமுதாய பிரச்சனைகளை அவைகளில் பேசாத, பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே என்றும் நாம் வாதிடலாம். இப்படியே வாதிட்டு வாதிட்டு இருந்ததை நாம் இழந்தோமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் நாம் செய்யவில்லை!.

சமீபத்தில் கூட த.த.ஜ இட ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரசின் ஹாரூன் எம்.பி யை பிரதமர், மற்றும் சோனியா வரை சந்திக்க பயன்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் மற்ற உறுப்பினர்களையும் இதுபோன்று பயன்படுத்திக் கொண்டோமேயானால் ஓரளவிற்கு நம் பிரச்சனைகளை உயர்மட்ட அளவில் கொண்டு செல்லமுடியும். சமுதாய நலனை எடுத்து செல்லும் உறுப்பினர்களை மட்டும், தாங்கள் சார்ந்த கட்சியில் சீட்டு மறுக்கப்படும் போது அவரை தனியாகவே நிறுத்தி முஸ்லிம்கள் அவரை வெற்றிபெற செய்ய வைக்கவேண்டும். கட்சி கைவிட்டாலும் சமுதாயம் கைவிடாது என்ற எண்ணத்தினை அவர்கள் பெற வேண்டும்.

முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிச்சயம் வெற்றிபெற முடியும் போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது? கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகதான் இருக்கும். அல்லது ஓரளவிற்கே அது பலனை தரும். ஆனால் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்து அவர்கள் மூலம் நம் கோரிக்கையை இந்த மன்றங்கள் மூலம் தீர்மானமாக கொண்டுவரும்போது மட்டுமே வலிமை மிக அதிகம் என்பதையும் நாம் மறக்ககூடாது.

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழி காட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

பழைய மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது, மொத்த தமிழக மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 6.5 கோடி மக்கள் தொகையில் 6% முஸ்லிம்களின் எண்ணிக்கை 39 இலட்சம். இதில் ஓட்டுரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே 40% சட்டசபை இடங்களை வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமெனில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.

1965ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அதிரை மீண்டும் தனி சட்டமன்ற தொகுதியாக்கபடவில்லை. 1967ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே 60 ஆயிரம்பேர்களை முஸ்லிம்களாக கொண்ட அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு முஸ்லிம் இங்கே சட்டமன்ற உறுப்பினராகவில்லை.

1967,1971 வெற்றி பெற்றவர்: ஏ.ஆர்.மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி சார்பில்) 1977 ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ் சார்பில்)

1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க) 1984 பி.என்.இராமச்சந்திரன் (அ.தி.மு.க)

1989 கா.அண்ணாதுரை (தி.மு.க.) 1991 கே.பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க)

1996 பி.பாலசுப்ரமணியன் (தி.மு.க)

2001 என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.க சார்பில்) 2006 என்.ஆர்ரெங்கராஜன் (காங்கிரஸ் சார்பில்)

அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?. இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்ற நிலையை தற்போது ஏற்படுத்தினால் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க முடியும். பின் இந்த முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சமுதாய இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலைக்கு தீர்வாகலாம்.

-- அதிரை முஜீப்

9 Responses So Far:

Unknown said...

யார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை?. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள்

முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது?.

சகோதரர் அதிரை முஜிப் அவர்களின் நியாயமான‌ கேள்விக்கு, பதிலை இந்த கட்சிகள் சொல்லவேண்டும். இதனை செயல் படுத்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும்.

ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டிருந்தால் ஒற்றுமை வராது. ஓட்டிட்டு இன்னுமொரு ஐந்து வருடம் காத்திருக்கும் முட்டாள் தனத்தை விட்டுவிட்டு இப்போது அமர்ந்து பேசினால் நல்ல பலன் கிடைக்கும்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று சொல்லும் பாமக, விடுதலை சிறுத்தைகள் இதுவரை முஸ்லிம்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை; இது முரன் நகையாக தெரியவில்லையா?

வன்னியர் சங்கமாக இருந்த பாமகவை சிராஜுல் மில்லத் அப்துல் சமது அவர்கள்தான் அரசியல் கட்சியாக மாற்ற ஆலோசனை சொன்னவர். ஷஹீத் பழனி பாபா அவர்கள் பாமகவை முஸ்லிம்களிடம் அறிமுகம் செய்ததுமட்டுமில்லாமல் அதற்கான அரசியல் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
இப்படி முஸ்லிம் தலைவர்களால் ஊட்டம் பெற்ற பாமக, ஒரு கஜ்ஜாலி அண்ணனுக்கு கூட சீட் வழங்கவில்லை (கஜ்ஜாலி அண்ணன் பாமக துணை தலைவர்) இந்த முறையாவது சீட்டை தரவேண்டும்.குறைந்தது 4 சீட்டுகளையாவது முஸ்லிம்களுக்கு தரவேண்டும்.

சகோதரர் முஜிப் அவர்களின் அரசியல் கட்டுரைகள் முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளையும் அபிலாஷைகளையும் சொல்லிவருகிறது.அவரின் பேனா முனை குனியும் போது சமுதாயத்தில் தலைநிமிரும் இன்ஷாஅல்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் முஜீபும் : //அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?. இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.///

என் தம்பி ஹிதாயத்தும் : //சகோதரர் முஜிப் அவர்களின் அரசியல் கட்டுரைகள் முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளையும் அபிலாஷைகளையும் சொல்லிவருகிறது.அவரின் பேனா முனை குனியும் போது சமுதாயத்தில் தலைநிமிரும் இன்ஷாஅல்லாஹ் //

எங்கள் உள்ளக்கிடக்கையில் கிடக்கு ஆதங்கத்தை எழுத்தில் வீரியத்தை காட்டியிருக்கிறார்கள்... விழித்துக் கொள்ளத்தான் வேண்டும் நாம் யாவரும் !

sabeer.abushahruk said...

முஜீப்,

இந்த அலசலும், இதில் சொல்லப்பட்ட ஆதங்கங்களும் கணக்கீடுகளும் தீர்வுகளும் மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன!

நக்கீர கோபம் உங்கள் எழுத்தில் தொணிப்பதும் நியாயமானதே!

எண்ணங்கள் ஈடேறும் இன்ஷா அல்லாஹ்!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரர் குணங்குடி ஹனீபாவையே மறந்தவர்கள் தான்
இந்த பாட்டாளி மக்கள் கட்சி.திருச்சி ஹாஜஹான் போன்றவர்களின் வேர்வையில்
வேர்விட்ட கட்சி நம் சகோதர்களை கைவிட்டது.இப்படி எத்தனையோ துரோகிகள்
பார்த்துவிட்டும் இன்னும் திருந்தாத அடி மாடுகள் நம்மவர்கள்.இவர்கள் கழுத்தில்
அரசியல் வண்டி பூட்டி ஒவ்வொருவனும் அதில் ஏறி வலம் வருவானுங்க.
இப்ப சென்னை 1 எடுத்துகிட்டாளே நம்மவர் ஓட்டில்லாமல் எவனாலும் வெற்றிபெற
முடியாது இப்படி எத்தனை தொகுதிகள்,என்னற்ற தகுதிகள் இருந்தும் நாம்
அரசியல் அகதிகள்.என்று மாரும் நம் புத்தி சோறுதானே திண்ணுகிறோம்?????

crown said...

தேவையை பூர்த்திசெய்ய தேர்தலை புறக்கணிபோம்னு ஏதாவது பூச்சாண்டி காட்ட
வாவது அணிதிரல்வோமா????ஹூம் சொரனை கெட்ட ஜென்மங்கள் நாம்.

Yasir said...

நியாமான ஆதங்கம்...நாம் அனைவரின் மனதிலும் இருக்கும் ஆத்திரத்தை ஆற்றாமையை அள்ளி கொட்டி உள்ளீர்கள்..எப்படி இந்த அறிவிலிகள்..இதைப்பற்றி நினைப்போ சமுதாய சிந்தனையோ இல்லாமல் இருக்கிறார்கள்....சந்தேகமாக இருக்கிறது..இவர்கள் முஸ்லிம்கள் தானா இல்லை யாருடைய பினாமிகளா.....நல்ல சிந்தனை...பரப்புவோம் இந்த செய்தியை அனைவருக்கும்...எதிர்கால தலைமுறையாவது...வளருட்டும் வளப்புறட்டும்...அருமையான அலசல் முஜிப் காக்கா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான அலசல்,

//...இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்!.


இதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும்.//

சரியாக சொன்னீர்கள் சகோதரர் முஜீப்,

இது பழைய சமுதாய காவலர்களும், புதிய சமுதாய காலவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் இன்னும் புரிய மாட்டேங்குதே.

Mohamed Rafeeq said...

//அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?//

கரி வாங்ககூட ஒரு உட்டுக்கு ஆண்பிள்ளை இல்லாத நிலமையல இருக்குற நம்ம அதிரைவாசிகள் சீட்டுக்கு எப்படி ஆசைபடுவது...உண்மையா சொல்லணுமுன அரசியல அனா , ஆவனா கூட நமக்கு தெரியாது ...... அரசியல கத்துக்கணும் , அரசியல படிக்கணும் ..... அக அரசியல் விழிப்புணர்வு நமக்கு தேவைன்னு சொல்ல வாரேன்

ஜாகிர் உசேன் said...

உங்களுடைய கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்......இதையேதான் பழனிபாபா அவர்கள் பல வருடங்களுக்கு முன்னாள் ஒரு கூட்டத்தில் சொன்னார்...தமிழக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு தலைமயின் கீழ் வரவேண்டும்.....ஆனால் நடப்பது வேறு, நயவஞ்சக அரசியல்,பிரித்தாலும் சூழ்ச்சியில் நம் மக்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள்....தெளிவு பெற்றால் நம் சமுதாயம் ஏற்றம் பெறும்...இன்ஸா அல்லாஹ்....#முத்துப்பேட்டை ஜாஹிர் உசேன், சிங்கப்பூர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு