Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இனி என்ன செய்யப் போகிறாய்? 19

அதிரைநிருபர் | February 26, 2011 | , ,

என் அருமை சகோதரர்களே!. நம் இணையத்தில், முஸ்லிம்களின் நமக்கு நாமே எதிரி திட்டம் (தமிழக தேர்தல்களும் கழகங்களும், ஜமாத்களும் ஓர் பார்வை) என்ற தலைப்பிலும், இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள் (முஸ்லிம்களுக்கு எத்தனை இடம்) என்ற இரு கட்டுரைகள், தமிழக முஸ்லிம் சகோதரர்களின் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அறிவீர்கள். இந்த கட்டுரைகள் 25 க்கும் மேற்பட்ட நம் சகோதர இணையதளங்களில் வெளிவந்தும், சுமார் 8 க்கும் மேற்பட்ட குழுமங்களில் (Group) இது பதியப்பட்டு சகோதரர்களால் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலானவர்களுக்கு மின் அஞ்சல்கள் மூலமும் இச்செய்தி அனுப்பப்பட்டும் வருகின்றது. ஏன், எனக்கே இது மின்னஞ்சலில் வந்தது!. அல்ஹம்து லில்லாஹ்!. 

இதன் மூலம் நான் பெற்ற செய்தி, நீ எழுது, மற்றதை நாங்கள் பார்த்து கொள்கின்றோம், என்று என் சகோதரர்கள் உற்சாகம் தரும் அதேவேளை, நான் அறிந்த மற்றொரு செய்தி, இந்த சமுதாய இயக்கங்கள் இன்னும் நம்மை கூறுபோட முயலுவதால், விரக்தியின் விழிம்பில் நம் சமுதாயம் இருப்பதையும் எண்ணி வேதனைதான் மிஞ்சியது. ஏனெனில் பல தரப்பட்ட இயக்கங்களிலும், ஜமாத்களிலும், இன்ன பிற கொள்கையில் இருந்தும் பாடுபட்டு, பின் அதில் இருந்து வெறுத்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்!. இயக்கங்களை நாம் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள வேண்டும். அதையே நாம் உணவாக உட்கொண்டால் இதுபோன்ற அஜீரனக்கோளாருகள் வருவது தவிர்க்க முடியாதது!.



தற்போது தொகுதி ஒதுக்கீட்டு பங்கீடுகள் நடந்தேறி வருகின்றது. அதில் முதற்கட்டமாக வீரியமிக்க(!) ம.ம.க விற்கு அ.தி.மு.க கூட்டணியில் மூன்று தொகுதிகள் (அடேங்கப்பா! எம்மாம் பெரிய மனசு ஜெயலலிதாவிற்கு!.) வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மூன்று தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு விட்டு, இனி என் இஸ்லாமிய சகோதரர்கள், மீதமுள்ள 231 தொகுதியில் உள்ள மற்ற முஸ்லிம்களின் ஓட்டைபெற்று, இந்த கூட்டணிக்கு தாரைவார்த்து கொடுக்கவேண்டும்!. மற்றவர்களுக்காக நாயாய், பேயாய் இரவு பகல் பாராமல் அலைய வேண்டும்!. பிரச்சாரத்தின் போது அடி உதைகள் வாங்கவேண்டும். வழக்குகளை சந்திக்க வேண்டும். ஏன் சில சமயங்களில் தங்களின் இன்னுயிரையே மாய்க்கவேண்டும்!. இவைகள் அத்தனையும் எதற்கு தெரியுமா?. மூன்றே மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் எப்படிபட்டாவது அதிகரிக்க வேண்டி!.

ஆனால் அதையும் கூட, தனது பார்ப்பன புத்தியின் வெளிப்பாடாக, பி.ஜே.பி யை இவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தி அவர்களுக்கு மறைமுக ஆதரவை அதிமுக தெரிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!. (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா...!) ஏனெனில் ஜெயலலிதாவின் பார்ப்பன புத்தி அப்படித்தான் செயல்படும். அதைவிட மிக கொடுமை ம.ம.க.வை பழிதீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க இருக்கும் பலனை கிடைக்கவிடாமல் செய்ய நினைப்பது, த.த.ஜ தமிழக முஸ்லிம்களுக்கு செய்யும் பெரிய துரோக முடிவாகும். ம.ம.க வை எதிர்த்து இவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல!. இதை இவர்கள் உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும். 

ம.ம.க மட்டுமல்ல, இவர்கள் எந்த அரசியல் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுக்கின்றார்களோ, அக்கூட்டணிக்கு எதிர்தரப்பில் நிறுத்தப்படும் எந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது!. இவர்களுக்குப்பின் ஒரு கூட்டம் இருப்பது உண்மை என்றாலும், இவர்கள் எடுத்த இந்த தவறான முடிவை இம்மக்கள் நிராகரிக்கவேண்டும். வேறு முடிவுகளை நீங்கள் ஆதரித்தாலும் இதுபோன்ற தவறான முடிவிற்கு ஆதரவளிக்காமல் இருப்பதே நலம்.

மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப்பாட்டு கோட்பாட்டின் தாரகமந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம். 

இதில் ஜெயித்து வருவது எத்தனைபேர்?. இதில் 50% வெற்றி வாய்ப்பென்றால், முஸ்லிம் இயக்கங்களின் சார்பில், இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் என்ற அவல நிலை ஏற்படும்!. இது இந்த சமுதாயத்திற்கு போதுமா? என்பதே தற்போதைய கேள்வி?

அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுக, மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் தற்போது அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எனவே இவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்த தலா பத்து முஸ்லிம்களுக்கு தேர்தலில் நிற்க தொகுதிகளை ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். ப.ம.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தலா ஐந்து தொகுதிகளை அவர்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தலா இரண்டு தொகுதிகளை அவர்களின் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
 

ஏனெனில் இந்த கட்சிகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் எந்த விதமான அதிகாரமிக்க பதவிகளை பெறுவதே கிடையாது!. குறிப்பாக ப.ம.க, மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட்கள் சார்பில் இதுவரை ஓரு முஸ்லிம்கூட சட்டமன்ற உறுப்பினரானது கிடையாது!. ஆனால் நம் ஓட்டுக்கள் மட்டும்தான் தேவை!.

திமுக 10
அதிமுக 10
காங்கிரஸ் 7
ப.ம.க 5
தே.மு.தி.க 5
ம.தி.மு.க 2
இரு கம்யூனிஸ்ட்கள் 4
விடுதலை சிறுத்தைகள் 2

இவ்வாறு இவர்கள் ஒதுக்கீடு செய்தால், ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் சார்பில் 45 முஸ்லிம் வேட்பாளர்களும், இஸ்லாமிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் 6 வேட்பாளர்களையும் சேர்த்து, இத்தேர்தலில் 51 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். இறக்கப்பட்ட வேண்டும்!. இந்த 51 வேட்பாளர்களில் மிகவும் கீழ்த்தரமாக வெறும் 50 % முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றார்களே யானால் வரும் சட்டமன்றத்தில் நீங்கள் 25 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை காணமுடியும். 

அதாவது இது நியாயமான மற்றும் அடிமட்ட கோரிக்கையின் கணக்கீடேயாகும். இதை தவிர முஸ்லிம்களின் எண்ணிக்கையை சட்டமன்றத்தில் நாம் அதிகரிக்கச் செய்யவே முடியாது. ஊராட்சி, பஞ்சாயத்து போர்டு, நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய அத்தனை தேர்தலிலும் இதே போன்று கிடைக்க செய்யவேண்டும்.

இந்த சமுதாயத்திற்கு இதுபோன்ற இடங்களில் சீட் கிடைக்கின்றதோ இல்லையோ!, தவறாமல் கடவுசீட்டை (பாஸ்போர்ட்) மட்டும் எளிமையாக கிடைக்க வழிவகை செய்து வைத்து விடுகின்றார்கள். ஏனெனில் இதை உங்களுக்கு எளிமை படுத்தி வைத்ததற்கு காரணமே, இதை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுங்கள் என்பதற்காகவே!. நீங்கள் இதுபோல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு இந்த அரசியல் கட்சிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காவே!. அட சனியன் பிடித்த அயோக்கியர்களே!. முதலில் கடவுச்சீட்டை எங்களுக்கு கிடைப்பதை கஷ்டமாக்குங்கள்!. அப்போதுதான் என் சமுதாயம் ஊரிலே இருந்து, இது போன்று தேர்தலை சந்திக்க சிந்திக்கும். ஆட்சி அதிகாரத்தினை அடைய முற்படும்!. அதிகார படிப்பினை படிக்கும்!.

எனவே இனி நாம் என்ன செய்யவேண்டும்?.

அரசியல் கட்சிகளின் சார்பில் அவர்கள் கட்சியை சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த தேர்தலில் அதிக சீட் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுவாக்கப்பட வேண்டும்!. இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் உள்ள ஜமாத்திலும், தேர்தலில் ஆதரவு என்ற நிலைபாட்டை மட்டுமே எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை கோரிக்கையாக, இந்த செவிட்டு அரசியல் கட்சிகளின் தலைமைக்கு புரியும் வண்ணம் போஸ்டர்களாகவும், நோட்டீசாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நம் கோரிக்கையை பிரபலப்படுத்தி வலுசேர்க்க வேண்டும். இந்த தேர்தலிலேயே கிடைக்க பெரும்முயற்சி செய்யவேண்டும். 

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் ஊரில் உள்ளவர்கள் மூலம் போஸ்டர்கள் அடித்து ஓட்ட ஆவன செய்யுங்கள். இந்த தேர்தலில்  அரசியல் கட்சிகள் தங்களின் நிலைபாட்டை மாற்ற நீங்களும் காரணமாக இருங்கள். இது தொடக்கமாக இருக்கட்டும்!. அடுத்த அடுத்த தேர்தல்களில் இவர்களுக்கு வேறு வழியில்லாமல் போகும்!. தந்தே தீருவார்கள்!. “இத்தனை முஸ்லிம்களை நிறுத்தினால் மட்டுமே ஓட்டு” என்ற கோரிக்கையை, இக்கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை பரிசீலிக்கும் முன்பே, வலுசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதையும் நினைவில் வையுங்கள்.

எப்படி என் முந்தைய இரண்டு கட்டுரைகளையும் மக்கள் மத்தியில் நீங்கள் எடுத்து செண்றீர்களோ, அதை விட பல மடங்கு இதை மக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்பட வேண்டும். இந்த கட்டுரையில் உங்களின் பெயர்களையோ அல்லது உங்களின் இணைய தளங்களின் முகவரியையோ போட்டுக்கொள்ளுங்கள். நன்றி என்று என் பெயரையோ அல்லது என் இனையத்தின் பெயரையோ போடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது என் கோரிக்கை அல்ல!. இந்த சமுதாயத்தின் கோரிக்கை!!.
 
-- அதிரை முஜீப்
 

19 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த கட்டுரையில் உங்களின் பெயர்களையோ அல்லது உங்களின் இணைய தளங்களின் முகவரியையோ போட்டுக்கொள்ளுங்கள். நன்றி என்று என் பெயரையோ அல்லது என் இனையத்தின் பெயரையோ போடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது என் கோரிக்கை அல்ல!. இந்த சமுதாயத்தின் கோரிக்கை!!.//

நன்றி : சகோ.அதிரை முஜீப்

sabeer.abushahruk said...

அன்பு முஜீப்:
உங்களின் முந்தைய கட்டுரைகளுக்கு உடனடி பலன் கிடைக்காத சூழலில் உங்கள் முயற்சிகளில் தொய்வு ஏற்படுமோ என்கிற அச்சாம் எனக்கு இருந்தது. ஆனால், உங்கள் கட்டுரைகள் மிகப் பெரிய விழிப்புணர்வையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன என்பது உணமை.

நம் தேவைகளின் புள்ளி விவரங்கள் மிக கச்சிதமாக நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன!

தலைவா என்று உம்மை கூப்பிடத் தொன்றுகிறது முஜீப்!

வாழ்க நீங்கள்! தொடர்க உங்கள் தொண்டு!

அபு ஆதில் said...

"பல தரப்பட்ட இயக்கங்களிலும், ஜமாத்களிலும், இன்ன பிற கொள்கையில் இருந்தும் பாடுபட்டு, பின் அதில் இருந்து வெறுத்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்!. இயக்கங்களை நாம் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள வேண்டும். அதையே நாம் உணவாக உட்கொண்டால் இதுபோன்ற அஜீரனக்கோளாருகள் வருவது தவிர்க்க முடியாதது!".

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் அபு ஆதில் அவர்களின் கருத்தோடு ஒத்துபோகும் உணர்வுகள் நிறைய இருக்கிறார்கள் அவர்களின் சார்பாக உங்களின் கருத்து முத்தாய்பே !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் முஜீப், இது போன்ற முஸ்லீமகளின் நிலையை முன்னிறுத்தி பொதுவான அரசியல் விமர்சனக் கட்டுரை இதுவரை எந்த ஒரு இஸ்லாமிய தளங்களிலோ அல்லது வாரப் பத்திரிக்கைகளிலோ நான் படித்தது இல்லை. அப்படியே இருந்தாலும் ஏதாவது ஒரு இயக்கத்தை சார்ந்ததாகவே இருக்கும். நடைமுறை எதார்த்தத்தை மிகத் தெளிவாக சுட்டிக்காடியுள்ளீர்கள்.

சுய வெறுப்புக்களை காட்டி பழி தீர்க்கும் நேரமில்லை இது. இந்த நாட்டில் நம் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ ஒன்றுபட இதுவே சரியான தருணம், இது புரியுமா நம் சமுதாயக்காவலர்களுக்கு(?), இனி என்ன செய்யப்போகிறோம்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பல தரப்பட்ட இயக்கங்களிலும், ஜமாத்களிலும், இன்ன பிற கொள்கையில் இருந்தும் பாடுபட்டு, பின் அதில் இருந்து வெறுத்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்!. //

உண்மை அபு ஆதில் காக்கா..

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இனி என்ன செய்யப் போகிறாய்?

சிந்தனையை தூண்டி விட்டார் முஜிப் டாட் வைக்காமல் இனி சிந்திக்க வேண்டிய நேரம் இது

Mohamed Rafeeq said...

அன்புச் சகோதரர் முஜிபு அவர்களே புதிய சிந்தனை உள்ள இக்கட்டுரைக்கு எமது வாழ்த்துக்கள் ! அரசியல் கட்டுரைக்கும் இடம் அளித்த அதிரை நிருபர் வலைப்பூவுக்கும் எமது நன்றிகள் பல !!!

முஸ்லிம்கள் சட்ட மன்றத்துக்கு அதிகமாக செல்ல வேண்டும் என்ற தங்களுடைய சிந்தனையில் இருந்து சற்றே வேறுபடுகிறேன் .. அதாவது முஸ்லிம்கள் முஸ்லிம்களாக சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து,ஒரு காலத்தில் சட்டமன்றத்தில் எதிர் கட்சியாக இருந்த முஸ்லிம் லீக் இன்று முன்று தொகுதிகளை மட்டுமே பெற அவ நிலைக்கு காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது , ஒரு வழியாக முன்று தொகுதி கிடைத்தும் தன் சொந்த சின்னத்தில் நிற்பதற்கு தடை விதிக்கப்பட காரணம் என்ன என்று சிந்தித்தால் எனது கருத்தின் சாராம்சத்தை உள்வாங்குவதற்கு மிக எளிதாக இருக்கும்.

உதாரணமாக உங்கள் கருத்து படி பத்து முஸ்லிம்களுடன் அ தி மு க வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மிண்டும் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரபட்டால் அ தி மு க முஸ்லிம் எம் எல் ஏக்களால் என்ன செய்ய முடியும்???. அல்லது தி மு க அரசு அமைத்து முஸ்லிம்களுக்கு எதிராக சட்டமோ அல்லது சட்ட விரோத நடவடிக்கையோ எடுத்தால் தி மு க முஸ்லிம் எம் எல் ஏக்களால் என்ன செய்ய முடியும் ??? ஒரு வரி கண்டனத்தை கூட அவர்கள் சார்ந்த கட்சியை எதிர்த்து சொல்ல முடியாது அப்படியே ஆண்மையுள்ள ஒருவர் சொன்னாலும் கட்சி தாவல் சட்டப்படி அவரின் பதவி பறிக்கப்படும் இதைதான் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுகிறேன்

முஸ்லிம்கள் தன் சுய சின்னத்துடன் தன் சுய கட்சிக்காக நிறுத்தப்பட வேண்டும் அவர்களின் வெற்றியின் முலமாகத்தான் முஸ்லிம்களுக்கு அரசியலில் அங்கிகாரம் கிடைக்கபெறும், அது ம ம கவாக.., இருந்தாலும் சரி எஸ் டி பி ஐ யாக இருந்தாலும் சரி இவர்களை போன்ற இஸ்லாமிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்பதே எமது கருத்து

Nothing Is better then Something என்ற வாதத்தின் அடிப்படையில் உங்களுடைய கருத்தை ஏற்று கொல்லாம், ஆனால் அது ஒரு உருப்படியான கருத்தாக என்றுமே அமைய பெறாது

Mohamed Rafeeq

அதிரை முஜீப் said...

வ அலைக்கும் வஸ்ஸலாம்! சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி!. தங்களின் நிலைபாட்டின்படி தான் நானும் இதுநாள் வரை இருந்தேன். ம.ம.க என்ற முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி மிக்க கட்சி ஒன்று உருவானபின் நாம் எல்லோரும் துள்ளிக்குதித்தோம்!. ஆனால் இன்றைய நிலையைக்கண்டீர்களா?.

அதாவது தற்கால அரசியல் சூழ்நிலையில் நாம் பெரும் படிப்பினை,

*முஸ்லிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள இயக்கப்பிரிவுகள்
*முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு தனித்து நின்று வெற்றிபெற முடியாத நிலை!.
*முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்ற அரசியல் கட்சிகளை எப்போதுமே சார்ந்திருக்க வேண்டிய தமிழக அரசியல் நிலை
*முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு, அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசும் தன்மை குறைந்தது
*முஸ்லிம்கள் தாங்கள் பின்பற்றும் மத நம்பிக்கைபடி, அரசியல் சூழ்நிலைக்கு ஒத்துவராது என்று ஒதுங்கியதால் இதுவரையில் நமக்கு ஏற்பட்ட இழப்புகள்
*முஸ்லிம்கள் முஸ்லிம்களாக சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்ற கருத்து

இன்னும் காரனங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் மற்ற எல்லா விசயங்களிலும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்களா? என்ற கேள்விக்கு யாராலும் பதில் தர முடியாது!. ஆனால் அரசியலில் மட்டும் தான் இந்த சமுதாயம் இதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றது. அதனால் நாம் இழந்தது ஒன்றா ? இரண்டா?.

ஆனால் அரசியல் கட்சிகள் ஜாதி கோட்பாட்டின்படி செட்டியாருக்கு,நாடாருக்கு,தலித்களுக்கு, கோணருக்கு, அகமுடையாருக்கு, முக்குலதோருக்கு....... (அப்பாப்பா!) என தேர்தலில் தங்களின் ஜாதிக்கு ஏற்றவாறு இடம் ஒதுக்கிவிட்டு (பாருங்கள் மேற்கண்ட அத்துணை ஜாதிகளும் இந்துக்கள்தான்) முஸ்லிம்களுக்கு மட்டும் அதே எண்ணிக்கையில் தருவதில்லை!.

நாமும் நின்று வெற்றிபெற முடியவில்லை! அரசியல் கட்சிகளின் சார்பாகவும் நம் சமுதாயதினரின் எண்ணிக்கையை உயர்த முடியவில்லை?. பின் என்னதான் தீர்வு?. ஒரே தீர்வுதான். முதலில் முஸ்லிம்களுக்கும் அவர்களின் எண்ணிக்கைப்படி முதலில் சீட்டைப் பெற முயற்சி செய்து, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப்பிடிப்பது போல், நல்ல முஸ்லிமோ கெட்ட முஸ்லிமோ முதலில் இவர்கள் உள்ளே செல்லட்டும்!. இன்ஷா அல்லாஹ், இவர்களுக்கு இறைவன் சமுதாய சிந்தனையை தர நீங்களும் நானும் துவா செய்வோம். அவ்வாறு சென்றவர்களின் மூலம் (ஏற்கனவே நான் கூறியதுபோல் ஹாரூன் எம்பியை த.த.ஜ. பிரதமர் வரை சந்திக்க பயன்படுத்தியது) நம் சமுதாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கலாம்!.

என் சிற்றரிவுக்கு இதற்க்கு மேல் சிந்திக்க முடியவில்லை!.

என் பதிலில் குறைகள் இருந்தால் மன்னிக்கவும். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து இந்த சமுதாயம், மற்றவர்கள் அடையும் அரசியல், அதிகார பதவிகளைப்போல் நம் சமுதாயம் அடைய உதவி செய்ய வேண்டும். அதை நாம், நம் வாழ்நாளிலே காண வேண்டும். இதைத்தவிர எனக்கு பேராசை வேறு எதிலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!.

Unknown said...

நமது சமுதாயத்திடம் சூடு,சுரனை இருக்கிறதா?அப்படி இருப்பதாக தெரியவில்லை.தேர்தல் நிலைபாடுகளும் இதர நடவடிக்கைகளும்.ஏட்டிக்கு போட்டியாகவே காலம் தள்ளுகிறது.

சகோதரர் முஜிப் அவர்களின் சட்டை தொடரவேண்டும்.அல்லாஹ் அவரின் பாதங்களை உறுதிப்படுத்துவானாக.

முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!
http://adiraipost.blogspot.com/2009/04/blog-post_05.html

என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்ட பதிவு.

sabeer.abushahruk said...

சகோதரர் முஹம்மது ரஃபீக்கின் வாதமும் முஜீபின் பதிலும் என்னைப்போன்ற அரசியல் அறிவு குறைந்தவர்களுக்கு நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இத்தனை தெளிவாக சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் தெரிந்த என் சமூகம் வீழ்ந்து கிடப்பது வேதனை.

சகோதரர்களே தொடருங்கள் உங்கள் அறிவுபூர்வமான வழக்காடலை...நாங்களும் சற்று விளங்கிக்கொள்ள!

Mohamed Rafeeq said...

அன்புச் சகோதரர் முஜிபு அவர்களே.... அரசியலை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும், பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.. தற்கால முஸ்லிம்களின் அரசியல் நிலமையையின் உங்களுடைய கருத்தை மறுக்க இயலாது, இதனில் இருந்து நாம் எப்படி மீள வேண்டும் என்ற வழிகளை ஆராய வேண்டும் ...

பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு தாங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.. எப்படி ஒரு சிறிய சமுதாயம் அரசியல் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதற்கு சரியான எடுத்து காட்டாக இருக்கிறது அக்கட்சி , நீங்கள் சொல்லுவது போல் ப ம க நாடர்கள் அதிகம் நிறைந்த தொகுதியில் தனித்து நின்றால் கூடவெற்றி பெற இயலாத நிலைமைதான் இன்றைய தமிழகத்தின் அரசியல் நிலைமை. அனால் திராவிட கட்சிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க தகுதியான கட்சி எதுஎன்றால் ப ம க தவிர வேறு எதுவும் இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்து, அதை போல நாம் இஸ்லாமிய கட்சிகளை நாம் வளர்த்து எடுக்க வேண்டும்

//முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு தனித்து நின்று வெற்றிபெற முடியாத நிலை//
கூட்டணி இல்லாமல் நிச்சயம் வெற்றி பெற இயலாது அது இந்நாட்டை ஆளும் காங்கரஸ் கட்சியாக இருந்தாலும் சரி

//முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்ற அரசியல் கட்சிகளை எப்போதுமே சார்ந்திருக்க வேண்டிய தமிழக அரசியல் நிலை//
நமக்கு அரசியல் அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்றால் இதை தவிர வேறு வழி இல்லை ( ஒரு திருத்தம் எவர் அதிக சீட்டு தருகிறார்களோ )

//முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு, அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசும் தன்மை குறைந்தது//
இப்போதான் முதன் முறையாக சொந்த கட்சி சின்னதுல நிக்கிறோம் வெற்றி பெற வையுங்க நிச்சயம் பேசலாம்

//முஸ்லிம்கள் தாங்கள் பின்பற்றும் மத நம்பிக்கைபடி, அரசியல் சூழ்நிலைக்கு ஒத்துவராது என்று ஒதுங்கியதால் இதுவரையில் நமக்கு ஏற்பட்ட இழப்புகள்//
மறுக்க இயலாது, இழப்புகளை சொல்லி மாளாது
முஸ்லிம் என்ற அடையாளத்துடன் இஸ்லாமிய கட்சிகள் வளம் வர முடியும் என்று நிருபிக்கபட்டுள்ளது

//ஆனால் மற்ற எல்லா விசயங்களிலும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்களா? என்ற கேள்விக்கு யாராலும் பதில் தர முடியாது!. ஆனால் அரசியலில் மட்டும் தான் இந்த சமுதாயம் இதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றது//
முஜிபுவின் சாட்டை அடி , சிவந்த எழுத்துக்கள்

//சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப்பிடிப்பது போல், நல்ல முஸ்லிமோ கெட்ட முஸ்லிமோ முதலில் இவர்கள் உள்ளே செல்லட்டும்!.//
சின்ன மீனாக இருந்தால் பரவ இல்லை, இஸ்லாமிய கட்சியை சேராதவர்கள் என்னை பொறுத்தவரை கருவாட்டுக்கு சமம்

அரசியலை நமதாக்குவோம் நம் சமுதயதுக்காக( சுதந்திரமான இஸ்லாமிய கட்சியின் உதவியுடன்) அரசை அமைப்போம்


***( நம் சமுதயத்தின் தலைவர்களின் உழைப்பால் உயர்ந்த ப ம க இன்று அக்கட்சியில் இஸ்லாமியர்களின் நிலைமை என்ன??? கேள்வி குறியை தவிர வேறு எதுவும் இல்லை , அது சரி ஏரிய ஏணியை உதைபதுதனே இன்றைய உலகம், உதைத்தவன் முஸ்லிமாக இருந்த கூட சரி போகட்டும் என்பதே எனது கருத்து)***

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆரோகியமான விவாதம்..

//அரசியலை நமதாக்குவோம் நம் சமுதயதுக்காக( சுதந்திரமான இஸ்லாமிய கட்சியின் உதவியுடன்) அரசை அமைப்போம் //

இஸ்லாமிய ஆட்சிமுறையப் பற்றி எங்களுக்கு பலதடவை எடுத்துவைத்தவர்கள்தான் த.மு.மு.க தலைவர் அவர்கள்... அவர்கள் ஊட்டிய உணர்வுகள் இன்றும் பசுமையே !

அதிரை முஜீப் said...

சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி!. முஸ்லிம்களின் தங்கள் அரசியல் கட்சிகளின் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்ற நிலைதான் மற்ற எல்லா முஸ்லிம்களின் மனதிலும் ஊசலாடுகின்றது. ஆனால் தற்போது அதற்கான சாத்தியம் மிக குறைவான அளவில் உள்ளதால், அதுவரையிலும் தான் நாம் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளின் சார்பில் அதிகரிக்க வேண்டும் என்று கூறுகின்றேன். எமேர்ஜென்சியில் வைத்து வைத்தியம் பார்க்க சொல்லுகின்றேன்.தங்களின் பார்வையில் (உயிருள்ள மீன் கிடைக்கும் வரை) இந்த கருவாட்டின் பின்னால் நிற்க சொல்லுகின்றேன்.

ஆனால் நீங்கள் இந்த கருவாட்டை சமைக்காமல் அதன் ஆரம்ப நிலையில் பார்பதினால்தான் அதன் நாற்றத்தில் இந்த சமுதாயம் ஒதுங்குகின்றது, என்று நான் நினைக்கின்றேன். அதை முறையாக சுத்தம் செய்து சமைத்தால் அதுவும் சிறந்த உணவே. அதை அளவான அளவிள் உட்கொள்ளலாம்.

இந்த கருவாட்டை மொச்சைகொட்டை, காய்கறியில் போட்டு சமைத்தால் அதன் ருசியே தனிதான்..

இந்த கருவாட்டை சுத்தம் செய்து பொரித்தால், சாம்பாருடன்/பாசிபயத்தானதுடன் சற்று கூடுதலாக உணவை உண்ணலாம்!.

இந்த கருவாட்டை சுட்டால், கஞ்சியுடன் கமகமக்க உண்ணலாம். (சுட்டகருவாடு ஊற வைத்த சோறு.....தான்)

மற்றபடி தாங்கள் கூறி இருக்கும் மற்ற விசயத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது என்பதே என் கருத்து....

பமக வன்னியர்களின் வளர்ச்சியும் நல்ல உதாரணம் தான். சமுதாயம் தான் பாடம் படிக்கவேண்டும்.

sabeer.abushahruk said...

Brother Rafeeq and Mujeeb,

excellent. please proceed. now we come to understand something.

Mohamed Rafeeq said...

// அதுவரையிலும் தான் நாம் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளின் சார்பில் ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றேன். //
உங்களுடைய கருத்து ஒரு நிறந்தர தீர்வு இல்லை என்று சொல்லும் பொழுது எமக்கு விவாதிக்க வேறு எதுவும் இங்கு இல்லை

கண்ணியமான முறையில் எம்மிடம் விவாதம் செய்தமைக்கு என்னுடைய நன்றிகள் பல

மேலும் அரசியலில் முஸ்லிம்களின் பங்கின் அவசியத்தை கட்டுரையாக தாங்கள் எழுத வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிரையின் புரட்சி பதிவாளர் முஜிபு அவர்களின் வாசகனாக விடை பெறுகிறேன்

***எங்கள் கருத்துடன் ஒன்றி பயணித்த சகோதரர் சபீர், அபு இபுராஹிம் மற்றும் அனைவருக்கும் எமது நன்றிகள் ***

sabeer.abushahruk said...

"புரட்சிப் பதிவர் முஜீப்"

வழி மொழிகிறேன்!

சகோ. ரஃபீக்: உங்களின் வாதம் இல்லையெனில் இத்தனை விளக்கங்கள் கிடைத்திருக்காது. எனவே, நீங்கள் தொடர்ந்து அதிரை நிருபரில் முஜீபைப் போல் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை.

(அபு இபுறாஹீம்: யாருய்யா இந்த bro.ரஃபீக்? புயல் அடித்த ஓய்ந்த மாதிரில்ல இருக்கு?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா :

//(அபு இபுறாஹீம்: யாருய்யா இந்த bro.ரஃபீக்? புயல் அடித்த ஓய்ந்த மாதிரில்ல இருக்கு?)//

Bro ரஃபீக் அவர்களே முன் வருவார்கள் நமக்குச் சொல்லித் தர யாரென்று... காத்திருப்போமே Please !

Yasir said...

புரட்ச்சி பதிவரின் எழுச்சி கட்டுரை வழங்கம் போல சமுதாய வளர்ச்சியை மட்டுமே கொண்ட ஆதங்கமான ஆக்கம்....நான் உங்கள் முதல் கட்டுரைரை என்னுடைய “ 200 “ நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்...இந்த கட்டுரையை அட்லீஸ்ட்...800 பேருக்காவது அனுப்பி வைக்க முயற்ச்சி செய்கிறேன்....சிறு பொறிதான் பெரும் நெருப்பாகும்...சமுதாய நலன் நாடுவோம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு