Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குறிக்கோள் + நம்பிக்கை + முயற்சி = வெற்றி 13

அதிரைநிருபர் | February 23, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

அன்பான அதிரைநிருபர் வாசகர்களே…

வாழ்க்கையில் முயற்சி, நம்பிக்கை, குறிக்கோள் இந்த மூன்று வார்த்தைகளில் உள்ள முக்கியத்துவத்தை பற்றி கொஞ்சம் அலசிப்பார்போம். நாம் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வார்த்தைகளை நம் வாத்தியார் / பெற்றோர் / உற்றார் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் எத்தனை பேர் கடைபிடித்தோம்? எத்தனை பேர் இவர்களுக்கு வேற எந்த வேலையும் கிடையாது என்று ஏளனம் பேசியிருப்போம் என்று நம் மனசாட்சியை கேட்டால் புரியும். ஆனாலும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இதை நிச்சயம் உணர்ந்து இருப்போம்.

குறிக்கோள்

இது ரொம்ப கஷ்டம், ஆனால் முதல் தடைவை மட்டும்தான். கூகிள் குதிரையில் ஒரு வார்த்தையை தட்டிவிட்டால் அது வேறு எதையும் தேடாது அந்த வார்த்தைகள் உள்ள இடங்களை மட்டும் அள்ளி கொண்டு வந்து தரும் அதுதான் கூகிளின் வெற்றி. அது மாதிரிதான் நம் குறிக்கோளும் இருக்க வேண்டும். நம் அடைய முடிய குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொண்டு (புர்ஜ் கலிஃபாவில் ஃபளாட் வாங்குவது என்பது நல்ல குறிகோள்தான். ஆனால் நிறைவேற்றுவது சிரமம்) அதை நோக்கி பயணிப்பது. வெற்றி என்ற பறவைக்கு வலை விரித்து விட்டோம் என்றுதான் பொருள்.

நம்மவர்கள் சில பேர் குறிக்கோள் இல்லாமல் மெயின் ரோட்டில் போய் சாமான் வாங்கலாம் என்று கிளம்பி, கடைத்தெருவுக்கு சென்று பின்னர் பட்டுக்கோட்டைக்கே சென்று பஸ் செலவை தெண்டத்துக்கு செலவு செய்துவிட்டு வருவார்கள் + போனஸாக உடம்பு வலியையும் அலைச்சலையும் சேர்த்து வாங்கி வருவார்கள். அந்த சாமான் நம்மூரில் கிடைக்கும் அதே விலைக்கு என்பது வேறு விசயம், இவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள் ஆனால் குறிக்கோள் இல்லா முயற்சி.

நம்பிக்கை

நம்பிக்கை என்பது தும்பிக்கை போல் வலுவாக இருக்க வேண்டும். நான் யாருக்கும் சளைத்தவனல்ல, அடுத்தவர் செய்யக்கூடியதை உருவாக்க கூடியதை நாமும் செய்ய முடியும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கை என்றவுடன் எதோ குருட்டுதனமாக வைப்பது அல்ல. நம்மூரில் ”பூனை நபுசு” என்பார்கள் அந்த மாதிரி எண்ணங்களெல்லாம் வெற்றிக்கு உதவாது, அது வாழ்வை வெறுமையாக்கி விடும். சில பேர் கழிவறைக்கு போய்விட்டு வந்து அந்த கையை விரல் ரேகைகலெல்லாம் போகும் அளவிற்கு தேய்த்து தேய்த்து கழுவி கடைசிலேயும் அது இன்னு சுத்தமாகல என்ற அவ நம்பிக்கையுடன் போய்விடுவார்கள். இவர்களை “ஒசுவாசு” என்றும் அழைப்பதுண்டு, இந்த மாதிரி நம்பிகையற்ற ஆள்கள் ஜொலித்தாக எந்த நாட்டுல உள்ள டேட்டா பேஸ்லையும் இல்லை, கூகில் தேடலில் பார்த்தாலும் கிடைப்பது இல்லை.

வீட்டை பூட்டிவிட்டு “பூட்டிடுச்சா பூட்டிடுச்சா “ என்று தன்மேல் இல்லாவிட்டாலும் பூட்டு மேலயாவது நம்பிக்கை வைக்காமல் போன எத்தனையோ பூட்டான்களை (அதாங்க பூட்டை இழுத்து இழுத்து உடைத்த ஆட்கள்) நாம் பார்த்திருக்கிறோம்.

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கை என்ற இயக்கியை (processor) கொண்டே ஒடிகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு செயலையும் செய்யும் போது தூய எண்ணத்துடன், முடிந்த அளவு நேர்த்தியாக செய்து விட்டு “ நம்பிக்கையுடன் அமருங்கள் வெற்றி உங்களை எட்டி பார்க்கும். நமது மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான்.

முயற்சி

ஒரு முயற்சி செய்து அதன் மேல் நம்பிக்கை வைத்து (இறை நம்பிக்கையுடன் தான், அவனின்றி அணுவும் அசையாது), அடையக்கூடிய குறிக்கோளுடன் (அனில் அம்பானி போல வர வேண்டும் என்பது டூ மச் ) உழைத்தால் “வெற்றி” படுக்கை விரித்து போட்டு நாம் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளும்.

ஒரு மார்க்க சிறப்பு மிக்க ஊரில் ஒரு நல்ல முஸ்லிம் இருந்தார். அவர் எப்பொழுதும் இறைவன் தருவான்.. இறைவன் தருவான்… என்று சொல்லி கொண்டே இருப்பார். அவரிடம் சிலர் வந்து முயற்சி செய்யாமல் இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கீங்களே… இதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டனர், ஒத்துக்கொண்ட அவரும் “நாளை நமதூர் பள்ளியில் ஒரு விசேசத்திற்காக சோறு ஆக்கி அனைவருக்கும் குடுப்பாங்க, நான் பள்ளிக்கு எதிரில் சும்மா உட்கார்ந்து இருப்பேன், அவர்கள் என் அருகில் வந்து உணவை தருவார்கள்“ என்றார். அந்த சிலரும் அதை ஏற்றுக்கொண்டு இடத்தை விட்டு அகன்றார்கள்…

மறுநாள் உணவு சமைக்கப்பட்டு அங்கு குவிந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் வந்து வாங்கி சென்றனர். இவரை கவனித்தார்கள் ஆனால் கொடுக்கவில்லை, உணவெல்லாம் முடிந்து விட்டது.

அப்போது அந்த நல்ல முஸ்லீம், அருகில் சென்ற உணவு பரிமாறிய ஒருவரிடம் கேட்டார். “நான் பள்ளிக்கு எதிரில்தானே அமர்ந்து இருந்தேன் ஏன் எனக்கு உணவு தரவில்லை “ என்று

அதற்கு உணவு பரிமாரியவர் “ஓ !!! அப்படியா நீங்க மற்றவர்கள் போல வந்து உணவை வாங்கவில்லையே, நீங்க நோன்பு வச்சிருக்கீங்கலோ என்று எண்ணி எதுக்கு இந்த உணவை கொடுத்து பாவத்தை விலைக்கு வாங்கணும் என்று இருந்தோம்“ என்று பதில் அளித்தார்.

நம்பிக்கை வைத்திருந்த அந்த மனுசன் முயற்சி செய்யவில்லை. முயற்சி செய்வதற்கு முயலாவிட்டால் என்றும் எதுவும் கிடைக்காது, இறைவனும் உதவ மாட்டான். நமக்கு உறுப்புக்களை இறைவன் கொடுத்ததே முயற்சி எடுத்து முன்னேறத்தானே.

கண்டுப்பிடிப்பாளர்கள் முயற்சி செய்திருக்காவிட்டால் இன்று நாம் பயன்படுத்தும் எந்த பொருளும் நம்மிடம் வந்து இருக்காது. நம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு முயற்சியிலேயும் நாம் வெற்றி பெற்று இருக்க முடியாது. குறிக்கோளுடன் நம்பிக்கைவைத்து, முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்தேறி இருக்காது.

ஏன் நம் தாய்மொழி தமிழை எளிதில் தட்டச்சு செய்வதற்கும், இணையத்தில் தமிழ் வெகுவாக வளர்வதற்கும், நம்மைப் போன்றவர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தி பேருதவி செய்ததில் முதன்மையானவர்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் நம்மூரில் பிறந்தவர், தேனீ ஒருங்குறி எழுத்துரு தந்தவர் மர்ஹூம் உமர்தம்பி அவர்கள். அவர்களிடம் குறிக்கோள், நம்பிக்கை, முயற்சி இருந்ததால், அன்று தேனீ, வைகை என்ற தானியங்கி எழுத்துருக்களை (dynamic fonts) உருவாக்கி தமிழ் இணைய உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்ததால்தான், அன்று அவர்கள் போட்ட விதையால் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக தாய்மொழி தமிழ் இணையத்தில் அளவிட முடியாத வளர்ச்சியடைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழை இணையத்தில் பார்த்து, படித்து, ரசித்து, நல்லவற்றின் மூலம் பயனடைந்து வருகிறோம். மர்ஹூம் உமர்தம்பி அவர்கள் மற்ற தமிழார்வளர்களுடன் சேர்ந்து முதன் முதலில் உருவாக்கிய தமிழா ஏகலப்பை (Ekalappai) மென்பொருள்கள் (software) மூலம் இன்று நாம் தாய்மொழி தமிழை தட்டச்சில் தட்டித் தட்டி இணையத்தில் உலகெங்கும் பரவசெய்துக் கொண்டிருக்கிறோம்.

கூகில் தேடலில் “உமர்தம்பி” என்று தமிழில் தேடிப்பாருங்கள் அவர் குறிக்கோள்யுள்ளவர் + நம்பிக்கையுள்ளவர் + கடின முயற்சி செய்தவர் = வெற்றிப்பெற்றவர் என்று எல்லோருக்கும் புரியும். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என்று ஓர் அரங்கம் அமைத்து மற்றும் "தமிழ் இணைய அறிஞர்" என்ற விருதினையும் அளித்து நம் அதிரை உமர்தம்பி அவர்களின் வெற்றிக்கு அங்கீகாரம் தந்தார்கள் இணையத்தமிழ் ஆர்வலர்கள் என்பது உலகறிந்ததே.

ஆகையால் வாழ்க்கையில் முடிந்தவரை குறிக்கோள்,முயற்சி, நம்பிக்கை இந்த மூன்றையும் பேணுவோம். வெற்றிபெருவோம் நம் குழந்தைகளுக்கும் புகட்டுவோம். இன்ஷா அல்லாஹ்.

இக்கட்டுரையில் இன்னும் நிறைய எழுதலாம் நேரம் இல்லாததால் புள்ளி வைத்து நகர்கிறேன். யாரவது கண்டினிவ் பண்ணுங்களேன்… தொடரட்டும்…

-- முகமது யாசிர்

சகோதரர் யாசிர் எழுதிய மற்றுமொரு கட்டுரை நம் அதிரைநிருரில் ஏற்கனவே June 22, 2010 பதிவாகியுள்ளது, சென்றுப்பாருங்கள் "வாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும்".

13 Responses So Far:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நீண்ட நாட்கள் ஆனாலும் எப்படியும் ஒரு நல்ல ஆக்கத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தது

அந்த நம்பிக்கை வீண் போகவில்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதலில் இதனை ஒரே மூச்சில் வாசிக்கனும்னு குறிக்கோளுடன் உட்கார்ந்தேன்...

இரண்டாவதாக நல்லதையே எழுதியிருக்கீங்கன்னு நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்...

மூன்றாவதாக முயற்சியுடயோர் இகழ்ச்சியடையார் என்ற தாரக மந்திரத்தை சுழற்றி சுழற்றி அடித்துச் சொல்லும் லாவகமும் அதற்கு தாங்கள் எடுத்து வைத்த காட்டும் அருமை !

நல்ல ஆக்கம்.. நீங்களெல்லாம் வேலைகளில் target வைத்து ஹிட்டு அடிப்பவர்கள் உங்களின் அனுவபங்களை இங்கே ஆக்கங்களாக வாய்ப்புகள் வசப்படும் போது பதியலாமே (தம்பி) யாசிரே !

sabeer.abushahruk said...

தம்பி யாசிர்,
மிக மிக அருமையானதொரு ஆக்கம்! இடையிடையே நீங்கள் சிரிப்புக் காட்ட முயன்றாலும் உங்கள் எழுத்தின் தாக்கம் ஒரு தீவிரமான மனநிலையை தந்து விடுகிறது!

கல்லூரி காலங்களில் இதைப்போல் எழுதும் உதயமூர்த்தி அப்துல் ரஹீம் போன்றோரின் வாழ்வியல் தத்துவங்களை விரும்பி வாசிப்பதுண்டு. அந்நேரத்து மனநிலையை உங்கள் கட்டுரை எனக்குத் தந்தது.

படிக்கும் காலத்தில் நல்லா சம்பாதிக்கனும் என்ற குறிக்கோள், அதற்காக விழிந்து விழுந்து படித்த முயற்சி, அதனால் முதல் வகுப்பில் பாசாகிவிடுவோம் என்கிற நம்பிக்கையும்தானே உங்களை பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற வைத்தது!

ஆனால், இக்கால இளசுகள் ஏதோ ஒரு நடிகை சாயலில் மனைவி வேண்டும் என்ற குறிக்கோளும் (நமக்கும் அப்போ இருந்ததோ?), அதற்கான எஸ் எம் எஸ் முயற்சியும், ஃபிகர் படிஞ்சிடும் என்கிற நம்பிக்கையும் கொண்டல்லவா அலைகிறார்கள்...அந்தோ!

நல்லா வகுப்பு எடுக்குரீங்க வாத்யாரே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்போது (உதயமூர்த்தி அப்துல் ரஹீம் காலத்தில்) சுல்லென்ற CELL இல்லையே ஆதலால்... (மூக்குக்)கண்ணாடி போடாத கணவுகள் காணப்பட்டதோ !

ஒருக்கால் இப்படி : CELL அமைவதெல்லாம் செல்லமான(வள்)ங்க கொடுத்த வரம்(னு) மாற்றிப் படிப்பாய்ங்களோ இன்றைய இளசுங்க !?

sabeer.abushahruk said...

கிரவுன்,
இபுறாஹீம் வாப்பாவின் மொழி விளையாட்டில் போட்டியிட உம்மைத்தவிர வேறு யாராலும் முடியாது. சீக்கிரம் வாரும்; வந்து வாறும்! அட்டகாசம் தாங்க முடியல!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா இப்புடி யாராவது மாற்றிச் சொல்லுவங்கன்னுதான் முதலில் மாத்தி பதிந்தேன்... முறையாக இப்படித்தான் இருக்கனும் அந்த மொபைல் மொழி..

"செல்லமான(வள்)ங்க அமைவதெல்லாம் CELL கொடுத்த வரம்"னு !!!

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது… //"செல்லமான(வள்)ங்க அமைவதெல்லாம் CELL கொடுத்த வரம்"னு !!!//

அஸ்ஸலாமு அழைக்கும்

"சொல்" வளங்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"சொல்" வளங்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்//

இப்படி "சொல்"லெடுத்து சொல்பவர்களின் நேசத்தில் உழலுவதும் இறைவனின் வரமே ! :)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) குறிக்கோள் + நம்பிக்கை +முயற்சி = வெற்றி - இதன்படி முயன்று பார்த்தவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

என்ன செய்யப்போகிறோம் என்ற குறிக்கோள்!
நம்மால் செயல் படுத்த முடியும் என்ற தன்நம்பிக்கை!
எடுத்த காரியத்தில் கவனமான கடினமான முயற்சி!
காரியம் வெற்றி பெற தினமும்
அல்லாஹ்விடம் உதவி தேடுவது!
இதன் காரணமாக வெற்றியை அடைவது
இதுதான் வாழ்க்கை!

இளைஞர்களே வெற்றிக்கு தோல்விதான் முதல்படி!
எடுத்த காரியத்தில் தோல்வியா? (நல்ல காரியம்
எதுவாக இருந்தாலும்)
துவண்டு விடாதீர்கள் மீண்டும் முயற்சி
செய்யுங்கள் - தோல்வியா?
மீண்டும் முயற்சி செய்யுங்கள்! - இப்படியே வெற்றி கிடைக்கும்வரை போராடுங்கள். (தோல்வியில் நிறைய பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்). உடனடியாக வெற்றி கிடைத்தவர்களுக்கு அனுபவம் கிடைக்காது. (அதற்காக பரீட்சையில் தோற்றால் அனுபவம் கிடைக்கும் என்று கோட்டை விடாதீர்கள். முதல் தடவையே பாஸ் பண்ணுவதற்கு முயற்சி செய்யுங்கள்).

உதாரணத்திற்கு எனக்கு நடந்த நிகழ்வை கூறுகிறேன்:

முதல் நிகழ்வு :

மனைவி, பிள்ளைக்கு பாஸ்போர்ட் (டிராவல்ஸ் மூலம்)அப்ளை செய்தேன். திருச்சியிலிருந்து ரிசிப்ட் போஸ்டில் வரும் வீடு பூட்டி கிடந்ததால் போஸ்டமேன் திருப்பி அனுப்பி விட்டான். 1997ல் அப்ளை செய்ததது. மீண்டும் வேறு டிராவல்ஸ் மூலம் இதை பாலோ செய்யச் சொல்லும்பொழுது அவன் ஏகப்பட்ட குளறுபடி செய்த காரணத்தால் 5 வருடம் இதற்காக டிராவல்ஸ்க்கும் திருச்சிக்கும் (இதைப்பற்றி எழுத வேண்டும் என்றால் 10 பக்கத்திற்கு எழுதலாம்) அலைந்தேன் - இதற்கிடையில் என் நண்பனின் மனைவிக்கும் அவர் பிள்ளைக்கும் காலையில் அப்ளை செய்து மாலையில் கையோடு திருச்சியில் பாஸ்போர்ட் வாங்கி விட்டோம் என்று என்னிடம் சொல்லி உங்களுக்காக ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் தனியாக திறப்போம் என்றெல்லாம் கேலி செய்தார்கள். அல்லாஹ்விடம் துஆச் செய்துக்கொண்டே முயற்சியும் செய்தேன். (நிறைய அலைச்சல், பணச்செலவும் அதிகம்) வல்ல அல்லாஹ்வின் உதவியால் 5வருடம் (நானே நேரில் சென்று முதன்மை அலுவலரை பார்த்தேன்)கழித்து பாஸ்போர்ட்ட கிடைத்தது.

தற்பொழுது 2010ல் ரினீவல் செய்வதற்கு தஞ்சாவூர் சென்றேன். அவர்கள் புதிதாக அப்ளை செய்வதற்கு உள்ள அத்தனை பேப்பர்களையும் கேட்கிறார்கள். மேலும் ரேஷன் கார்டில் பிள்ளைகள் பெயர் வார்த்தை தப்பாக இருக்கிறதாம். சரிசெய்து வாருங்கள் என்று திருப்பி விட்டார்கள். லீவு முடிந்து விட்டதால் முயற்சி செய்ய முடியவில்லை. இன்ஷாஅல்லாஹ் இந்த லீவில் சென்றால் ரினீவல் செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். மனத்தளர்ச்சி அடைந்து விட்டால் காரியம் நடக்காது.

இரண்டாவது நிகழ்வு:

1994ல் ட்ரைவிங் லைசென்ஸிற்கு(அந்தக்காலத்தில் 6மாதத்திற்கு ஒரு தடவை தேதி கிடைக்கும்) அப்ளை செய்தேன். தொடர்ந்து தோல்விதான் எனக்கு பிறகு அப்ளை செய்தவர்கள் 1, 2 வருட இடைவெளியில் லைசென்ஸ் பெற்றுக்கொண்டிருக்க, நண்பர்களும் உனக்கு கிடைக்காது என்று கேலி பேச நான் தொடர்ந்து முயற்சியுடன் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்து கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் உதவியால் 2004 நீண்ட இடைவெளி 10வது வருடத்தில் லைசென்ஸ் கிடைத்தது. (இப்பொழுது ஒரு மாதம் இரண்டு மாதத்திற்குள் லைசென்ஸ் கிடைத்து விடுகிறது). எந்தக்காரியத்தின் தோல்வியிலும் மனம் தளர்ந்து மூலையில் அமர்ந்து விட்டால் வெற்வி பெற முடியாது.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் : குறிக்கோள் + நம்பிக்கை +முயற்சி = வெற்றி --- இதைத்தான்!

சகோதரர் முகமதுயாசிருக்கு வாழ்த்துக்கள்! விளக்கமாக விளக்கியதற்கு.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
தம்பி யாசிர் தமது கட்டுரயின் உதாரணங்கள் மிக அருமை காரணம் நம்மை சுற்றி இருப்பதை உதாரணம் காட்டிய விதம் அருமை

தாம் படிக்கும் காலத்தில் ஸ்கூல் பஸ்ட் வந்தாலும் கடைசி பென்ச் காரனுக்கும் புரியும் படி எழுதியது அருமை

எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் புரியும் படி எழுதுவது என்பதே ஒரு தனி சிறப்புதான்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

முதலில் சகோதரர் யாசிர் அவர்களுக்கு மிக்க நன்றி.

பள்ளியிலும், கல்லூரிகளிலும் போரடித்துப்போன ஒரு டாப்பிக்கை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி நல்ல சுவாரஸ்யமாக இங்கு எங்கள் அனைவரின் பார்வைக்கும் தந்துள்ளீர்கள்.

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பேராசிரியர் பரகத் அவர்கள் ஆதங்கப்பட்டது நம் மாணவர்களிடம் குறிக்கோள் இல்லை என்பதை, மீண்டும் அவர்களின் ஆதங்கத்தை நீங்கள் இந்த கட்டுரையின் மூலம் வழியுறுத்தியுள்ளீர்கள்.

நம் சுற்றத்தில் உள்ள நிகழ்வுகளையே உதரணமாக சொல்லியது எல்லோருக்கும் எளிதில் புரியும்படி உள்ளது.

வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் இதுபோல் ஒரு மணிநேரம் இலவசமாக கிடைக்கும் போது

ZAKIR HUSSAIN said...

சகோதரர் யாசிர்...இப்படி நல்லா எழுதற நீங்க ஏன் அடிக்கடி எழுதுவதில்லை?

Yasir said...

வாழ்துவதற்க்குதான் வயது வேண்டும்...வாழ்த்துக்களை ஏற்று கொள்வதற்க்கு வயது தடையில்லை.....இச்சிறிய கத்துக்குட்டிக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற உற்சாகத்தை பின்னூட்ட டானிக்காக தந்த...சாவன்னா காக்கா/எண்ணத்திலும் எழுத்திலும் உற்சாகம் பொங்க வாழ்த்திய என் அருமை காக்கா அபு இபுராஹிம் / அ.நி.ஆஸ்தான கவி எங்கள் கவிக்காக்கா / என் வாழ்வில் தன் எழுத்துக்கள் மூலம் பல மாற்றங்களை அல்லாஹ்வின் உதவியால் உண்டாக்கிய அலாவுதீன் காக்கா /தன்னை பற்றி குறைவாக சிந்தித்து,சமுதாயத்தை பற்றி அதிகம் சிந்தித்து கொண்டு இருக்கும் இருக்கும் என் நண்பர் சகோ.தாஜீதின்/தன் அசாத்திய எழுத்து திறமையால் எங்களை திணற அடித்து கொண்டு இருக்கும் அசத்தல் காக்கா மற்றும் முயற்ச்சி செய்து பின்னூட்டம் இட தவறிய அன்பான அதிரை நிருபர் வாசகர்களுக்கும் என்னுடைய நன்றி....இன்னும் நேர்த்தியாக எழுத முயற்ச்சிக்கிறேன்..நேரம் அனுமதி தந்தால்....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு