Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 5 3

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2011 | , ,


ஹஜ் பயணம்


உமர் அல் ஃபுத்தைமில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சக பாக்கிஸ்தானியர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியர் கார் மூலமாகவோ பஸ் மூலமாகவோ ஹஜ்ஜுக்குப் போய் வருவதை அறிந்திருந்தார். இவருடன் பணி புரிந்த நண்பர்கள் உமர் ஹஜ் செய்வதை ஆர்வப்படுத்தினர். துபாயிலிருந்து கார், பஸ், விமானம் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்வது எளிது. அந்தக்கடமையை செய்துவிடுமாறு அடிக்கடி கூறுவர்.

உமர் என்னை ஹஜ் செய்துவரும்படி வற்புறுத்தினார். பொருள் ஈட்ட வந்த இடத்தில் ஹஜ் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியவர் உமர்தான். அந்த நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு. நான் விமானம் மூலம் சென்று வந்தேன். ஆனால் உமர் தேர்ந்தெடுத்ததோ பஸ் பயணம்!


ஹஜ் சீசனில் ஹஜ்ஜுக்கு பஸ் மூலமாக அழைத்துச் செல்வதை சிலர் தொழிலாகவே துபாயில் நடத்தி வந்தனர். செலவு குறைவு; மிகவும் துன்பத்துக்குள்ளாக நேரிடும். இது உமருக்கு நன்கு தெரியும். மனைவியுடன் பஸ் மூலமாகப் போய் வர முடிவெடுத்தார். பஸ் பயணம் ஒத்து வருமா என்பது எங்கள் கவலை. உமர்தம்பி இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார். துன்பங்களை எதிர் நோக்க முன்பே ஆயத்தமாகிவிட்டதால் அவற்றைத் தாங்கிக்கொண்டார்.

சாலை எங்கும் போக்கு வரத்து நெரிசல். இடையிடையே சோதனைச் சாவடிகள் பொறுமையைச் சாகடித்தன. வாகனங்கள் ஊர்ந்துதான் செல்லும். தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் தேவை; தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் வேலை செய்யாது! நினைத்தால் இறங்கி அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. பஸ் நிறுத்தப்படும் இடங்களில் மட்டும்தான் இறங்க முடியும். அதுவும் தொழுகை, உணவு நேரங்களில் மட்டும்தான்.

துபாயிலிருந்து பஸ் புறப்படுவதற்கு முன் பயணிகள் அவர்களது உடைமைகளுடன் சரியாக இருக்கின்றார்களா என்று பார்க்கும்போது ஒருவருடைய பாஸ்போர்ட் காணவில்லை. இதற்காக மணிக் கணக்கில் காக்க வைத்துவிட்டார்கள். இறுதி செய்யப்பட்ட குழுவில் ஒருவர் வராமல் இருந்தால்கூட பயணம் ரத்தாகிவிடும். புதிய நடைமுறைகள் மேற்கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒருவாறாக தவறவிட்டதாக சொல்லப்பட்ட பாஸ்போர்ட் கிடைத்த பின்னர்தான் பயணத்தைத் துவக்கினார்கள்.

வியாபார நோக்கத்தோடு ஏஜெண்டுகள் செய்கிற தில்லுமுல்லுகளை சொல்லி முடியாது. துபாயில் சொல்லி அழைத்துவந்த மாதிரி நடந்து கொள்ளமாட்டார்கள். உமர்தம்பி சவூதியை அடைந்ததும் அவரவர், ஹோட்டலில் ஒதுக்கப்பட்டிருந்த இடங்ககளைப் பிடித்துக்கொண்டனர். உமர்தம்பிக்கும் அவர் மனைவிக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை. இரவு தங்க இடமில்லை. ஒரு நல்ல மனிதர் தன் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே உமர் கண்ட காட்சி அவரது கோபத்தைச் சீண்டியது. ஏஜென்ட் அங்கே வசதியாகத் தங்கியிருக்கிறார். அவர் உமரைப் பார்த்ததும், “மன்னித்துக் கொள்ளுங்கள். இரண்டு பேர் இடம் கேட்டுக் கெஞ்சினார்கள். உங்கள் இடத்தைக் கொடுத்துவிட்டேன். துபாயில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்” என்றார். பிறகு இடம் ஒதுக்கித்தந்தார்.

உமர்தம்பி ஹஜ் செய்யச் சென்றிருந்த ஆண்டு (ஏப்ரல் 1997) , இதற்கு முன்னரும் பின்னரும் நடந்திராத ஒரு நிகழ்ச்சி ஹஜ்ஜில் ஏற்பட்டது. மினாவில் ஹாஜிகள் தங்கயிருந்த கூடாரங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. கூடாரத்துக்குள் கேஸ் அடுப்புகளை வைத்து சமைத்துக் கொண்டிருக்கும்போது கவனக்குறைவால் தீப்பிடித்துவிட்டது. இத்தீ எல்லாக் கூடாரங்களிலும் பற்றிக்கொண்டது. சில கூடாரங்களை விட்டுவிட்டு சற்று தள்ளியிருந்த கூடாரங்களும் எரிந்தன. நல்ல வேளை; அந்த நேரத்தில் பலர் வெளியில் நின்றனர். தீப்பிடித்தவுடன் உள்ளே இருந்தவர்களும் ஓடி வந்துவிட்டார்கள்! வெளியே வர முடியாதவர்களில் காயமடைந்தவர்களை ஹாஜிகள் வெளியில் தூக்கி வந்தார்கள். அவர்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. சிலர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர் இவர்களில் சுமார் 150 பேர் இந்தியர்கள். இவர்கள் இந்த நெருப்பினால் நிச்சயமான நெருப்பிலிருந்து தப்பியவர்கள்! என்றும் வற்றாத ஜீவ நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத்தைச் சுவைக்கப் போகிரவர்கள்! இன்ஷா அல்லாஹ்.


மினாவுக்குச் செல்லும்போது ஹாஜிகள் பெரும்பாலான உடைமைகளை தாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலில்தான் வைத்துவிட்டுப் போவார்கள். மினாவுக்கு, தேவையான உடைகள் மற்றும் பணம் இவற்றைத்தான் எடுத்துச் செல்வார்கள். ஹாஜிகள் கூடாரத்தில் வைத்துவிட்டுச் சென்ற பொருள்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. தீயில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக சவூதி அரசும் இந்திய அரசும் முயற்சிகள் எடுத்துக்கொண்டன.

தொலைக் காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு மனம் பதைத்தது. பலர் அங்குமிங்கும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள் என்று கேள்விப்பட்டோம். தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு, “அல்லாஹ் உதவியால் பெற்றோருக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று சொல்லி துணிவு ஊட்டினோம். துபாயிலிருந்து சவூதிக்குத் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டோம். “விவரம் சரியாகத் தெரியவில்லை; தெரிந்ததும் சொல்கிறோம்” என்றார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு உமரிடமிருந்தே போன் வந்தது. “நலமாக இருக்கிறோம். பொருள்கள் ஓட்டலில் இருக்கின்றன; கூடாரத்தில் இருந்த சில பொருள்கள் மட்டும் எரிந்துவிட்டன” என்றார்.

தீ விபத்தின் போது மக்கள் இங்குமங்கும் சிதறி ஓடியதால் ஹஜ் கடமையை பலரால் சரியாகச் செய்ய முடியவில்லை. சிலர் திருப்தியின்றி அடுத்த வருடங்களில் மீண்டும் ஹஜ் செய்ததாகக் கேள்வி! மினா விபத்திலிருந்து தப்பித்த உமர் தம்பதியர் அரபாத், முஜ்தலிபா கடமைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மினா திரும்பினர். இரண்டு நாட்கள் அங்கு தங்கி ஷைத்தானுக்குக் கல் எறிந்துவிட்டு, குர்பானி கொடுத்துவிட்டு, இறுதியாக தவாபைப் பூர்த்தி செய்துவிட்டு தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மதீனா சென்றனர். அங்கே ஒருவாரம் தங்கி, பள்ளியில் தொழுது, ஜியாரத்தும் செய்தனர். மீண்டும் பஸ் மூலமாகப் புறப்பட்டு துபை தேரா வந்து சேர்ந்தனர் ஹாஜிகள். அல்ஹம்துலில்லாஹ்!


தொடரும்....
- உமர்தம்பி அண்ணன்

முள்மகுடம் - புதுசுரபி‏ 8

அதிரைநிருபர் | July 30, 2011 | , , , ,

அன்று திங்கள் மாலை.....

அண்ணாசாலையில் உள்ள நூலகத்தின் அரங்கில், வட்டியின் கொடுமையினை விளக்கி அதற்கான தீர்வையும் விளக்கும் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.

சிறப்பான ஏற்பாடுகளுடன் சீரிய கருத்துக்களைக் கூற பிரமுகர்கள் மேடையில் வீற்றிருக்க விழா தொடங்கியது.

ஒவ்வொருவராகப் பேசும் போது, இக்குறும்படத்தைப் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை எனவும், ஓரளவு பார்த்ததாக சிலரும், கடைசி நேர அழைப்பினால் பார்க்க இயலவில்லை என வேறு சிலரும் தப்பித்தாலும் -தலைப்பை ஒட்டி மிகச் சிறப்பாகவே உரையாற்றினார்கள்.

அடுத்ததாக அழைக்கப்பட்ட பிரமுகர், பிரபல பெண் கவிஞர் -அவரும் இக்குறும்படத்தைப் பார்க்க இயலவில்லை எனக் கூறியதோடு, “எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியையே மூட்டை கட்டி வைத்துவிட்டோம், அதனால் பார்க்க முடியவில்லை” என்று சொன்ன மாத்திரத்தில் என்னுள் பல கேள்விகள் மின்னல் வேகத்தில். ‘ஒரு பிரபலத்தின் வீட்டில் அதுவும் அரசின் முக்கிய  பதவியில் உள்ளவரின் வீட்டில் தொலைக்காட்சி இல்லையா?’ என வினாக்கள் விரிந்துகொண்டே போனதற்கு தடை போட்டன அவரின் அடுத்த வார்த்தைகள். “என் பிள்ளைகள் பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வை எதிர்நோக்கியுள்ளதால், தொலைக்காட்சிக்கு மூடுவிழா” என்று சொல்லி உரையினைத் தொடர்ந்தார் அந்தப் பொறுபுள்ள தாய்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வு முடிவு வரும் நாட்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் பேட்டி செய்தித்தாள்களில் வெளிவருவது வழக்கம். அப்பொழுது சொல்லிவைத்ததுபோல எல்லா மாணவர்களும் அல்லது அவர்களின் பெற்றோர்களும் தொலைக்காட்சியின் தொல்லையினை உணர்ந்து முற்றிலும் தவிர்த்ததாகத் தவறாது கூறுவார்கள்.

இவர்களெல்லாம்,

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.

எனும் குறள் புரிந்து இருப்பார்களோ?! அதன் விஷ(ய)மறிந்து.

சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவராக இருந்தவர் ஒரு பெண் அதிகாரி. அவர் ஒருமுறை கூறினார், “நான் ஒரு தாயாகவும் அதே வேளையில் ஊடகத்திலும் பணிபுரிகிறேன். ஒரு தாயாக நான் சிறந்த நிகழ்ச்சிகளை அதாவது வன்முறைகள் இல்லாத, குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலான, தகவல்கள் நிறைந்தவற்றை மட்டுமே விரும்புகிறேன். ஆனால் ஒரு வர்த்தக அதிகாரியாக, அவற்றையெல்லாம் விட தொலைக்காட்சியின் அதாவது நிறுவனத்தின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்றார் வெறுப்புடன் பொறுப்பாக (!?)

’விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்பதுபோல நிச்சயமாக இவர்களைப் போன்று சமூகத்தில் உயர்ந்தவர்கள், பொறுப்புகளில் உள்ளவர்கள், தம் குழந்தைகளின் மீதும் அவர்களின் கல்வியின் மீதும் அக்கறை கொண்டவர்களாக, நிகழ்ச்சிகளைத் தரம் பிரித்துத் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுபவர்களாக, தேவைப்படின் முற்றிலும் தவிர்க்கும் அளவிற்கு மனதளவிலும் தயார்படுத்தியும் விடுகிறார்கள்.

வாய்ப்புக் கேடாக, இன்று ஊடகங்களில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பெண்களையும், குழந்தைகளையும், நடுத்தரவயதுடையோரையும் குறிவைத்து குறிப்பாக நடுத்தர, அதற்கு கீழே உள்ள குடும்ப மக்களை பலி கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

அதிகமான நேரத்தினை அதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் நிஜவாழ்விற்கும் திரைவாழ்விற்கும் இடையிலான வேறுபாட்டினை பகுத்து, பிரித்து வித்தியாசம் அறிய இயலாத மனநிலையைப் பெறுகின்றனர் என்கின்றனர் குழந்தை உளவியலாளர்கள். அதே மனநிலையில் வளரும் குழந்தைகள் வளர்ந்த பின்பு கூட பெரிதாய் ஏதும் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் அண்மையில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியொன்றைப் படித்திருப்போம். ‘சாப்பாட்டிற்கே வழியில்லாத ஏழை வீட்டுச் சிறுவன் (இலவச தொலைக்காட்சியில்) சாகச நிகழ்ச்சியைப் பார்த்து அது போல செய்ய முயன்று தீக்கிரையானான்” என்றும் “கணவன் தொலக்காட்சித் தொடரைப் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து கோரினார்”, “நகைச்சுவை நடிகரின் வசனம் தூண்டியதால் பாட்டியை கொலை செய்த வாலிபர்” எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இத்தகையக் கொடுமையான, தீமை வழிந்தோடும் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிப் போன நாம் அவற்றிலிருந்து வெளிவந்து நம்மை நாமே மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

“மானக்கேடான, வெறுக்கத்தக்க அக்கிரமான செயல்களை விட்டும் விலகி இருக்குமாறு இறைவன் தன்மறையிலே கட்டளையிடுகிறான் ( திருக்குர்ஆன் 16:90)

இறைவன் எவற்றிலிருந்தெல்லாம் விலகி இருக்கச் சொல்கிறானோ, அத்தகைய செயல்களை எல்லாம் முழுமையாக கொண்டதாகவே இருக்கிறது இன்று நம் வீட்டின் நடுவே அமர்ந்து விருந்து படைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

பரிகாசமும், பண்பற்ற பேச்சும், விரசமும் ஏன் கொலை போன்ற கொடும்பாவச் செயல்களைச் செய்யத்தூண்டும் காட்சிகளை அமைத்து நகைச்சுவை(!) எனப் பெயரிட்டு அவற்றை விருதுகளாலும், பாராட்டுகளாலும் அரசே ஊக்குவிக்கும் அவலத்தைப் பார்க்கிறோம்.

இறைவன் திருமறையில், “இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும், பெண்களும் மற்றெந்த ஆண்களையும் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட வழியாகும். எவர்கள் இந்தப் பழக்கத்தினை கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்” (திருக்குர்ஆன் 49:11) என்று எச்சரிக்கும் அதேவேளையில் இறைத்தூதர், “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கெடுதான், அவனுக்கு கேடுதான், அவனுக்கு கேடுதான்” என்றும் எச்சரிக்கின்றார்கள்.

மேலும் இறைத்தூதர் அவர்கள், ஓர் இறைநம்பிக்கையாளன் எத்தகைய குணங்களை பெற்றிருக்க கூடாது எனபதை மிகத் துல்லியமாக விவரித்திருக்கின்றார்கள்.


இறைநம்பிக்கையாளன், குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பதில்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், தீய வார்த்தைகளைப் பேசுபவனாகவும் இருப்பதில்லை.” - திர்மிதி

இவை அனைத்தும் இன்று பாவமில்லாத செயல்போல பிஞ்சுகளின் மனதிலும் பழக்கமாகிவிட்டது.

தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், வழிபிறழ்ந்து போகலாமோ? பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் திகழவேண்டிய நாமே அவர்களின் தலையில் முள் மகுடம் சூட்டலாமோ??

முற்றிலும் கீழ்படிந்தவர்களாய் மாறி, நம் இளைய செல்வங்களுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உயர்த்தி - நமக்காக பிரார்த்திக்கக் கூடியவர்களாய் உருவாக்குவோம்!!!!!



-- ரஃபீக்


பயணிகள் கவனத்திற்கு... ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | , , ,


மண்ணறை விமானப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம் !

நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல இருக்கும் அடுத்த இடம் மண்ணறை. அதற்கான பயண ஏற்பாடுகளையும் அங்கே செல்லும் வழிமுறைகளையும் வேறு எங்கும் உங்களால் கண்டிருக்க முடியாது. ஆனால்,  அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணலாம். நம் மண்ணறை விமானம், இதர விமானங்களான, இந்தியன் ஏர்லைன், கல்ஃப் ஏர், எமிரேட்ஸ் போல் இருக்காது.

இவைகளின் கட்டுப்பாடான 30 கிலோ அனுமதி என்ற வரையறைகள் இல்லை. மண்ணறை விமானம் எவ்வித கட்டுபாடுகளின்றி அதிக எடை, குறைந்த எடை என்ற பாகுபாடுகள் இன்றி அதற்கான கட்டணங்கள் ஏதும் செலுத்தாமல் செல்ல வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடை.

இவ்விமானத்தில் செல்ல, விரும்பிய ஆடைகள் அணியவேண்டியதில்லை. வாழும்போது உடுத்திய ஆடைகளுக்கு அவசியமில்லை. உங்களுக்காக பிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் வெள்ளை நிறத்தினாலான ஆடை. அதையும் உடுத்தி விடப்படும்; அதற்கான சிரத்தை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. விலையுயர்ந்த நறுமனங்களான சேனல், பெகொ, ரபானெ இருக்காது. ஆனால், அருமையான மனம் வீசும் சந்தனம் கரைத்துத் தெளிக்கப்படும்.

பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இந்தியாவுக்கோ, பிரிட்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ, இலங்கைக்கோ உரியதாக இருக்காது. ஆனால், அது நிச்சயம் இஸ்லாம் என்பதாக இருக்கும். பயணிப்பவரின் விசாவுக்கு கால அவகாசமெல்லாம் கிடையாது, அவைகள் ஆறு மாதத்தில் முடிவடைவதுமில்லை. அங்கே "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை". 

விமானத்தினுள் அழகிய பணிப்பெண்கள் இருப்பதில்லை. விமானத்தின் தலைமை இஸ்ராயில் (அலை) மட்டுமே இருப்பார். பயணிப்பவருக்கு முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் இருக்காது,

விமானம் தரையிறங்குமிடம் லண்டன் விமான நிலையமோ ஜித்தா விமான நிலையமோ அல்ல, நேராக மையவாடி என்று அழகுற பெயரிடப்பட்ட தனித்தளம். அங்கே குளிரூட்டப்பட்ட தனி தங்குமிடமோ அல்லது பஞ்சு பொருத்திய நடை மேடையோ இருக்காது. அனால் ஆறு அடி நீளம் கொண்ட புதைகுழி (கப்ருஸ்தான்) தான் உங்களின் இருப்பிடம்.

அங்கே குடியுரிமை அதிகாரிகள் இருக்கமாட்டாகள். ஆனால், முன்கர் நக்கீர் என்ற அல்லாஹ்வால் நியமிக்கப்பட மலக்கு இருப்பார்கள். அவர்களின் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலைக் கொண்டே எவ்விடம் உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரை செய்வார்கள். அங்கே சுங்க இலாகா அதிகாரிகளோ, உளவு கண்டெடுப்பானோ (டிடெக்டர்) இருந்திடாது. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து உங்களை இறுதியான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கே தோட்டங்களின் கீழே ஆறுகள் ஓடும் அந்த சுவர்கத்தில் அல்லது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பும் இருக்கும்.

இந்த பயனத்திற்காக செலவுகளிருக்காது, மொத்தமாக இலவசப் பயணம். உங்களுக்கு சேமிப்பு என்பது கையில் வருவதுமில்லை. இந்த விமானம் தீவிரவாத விஷமிகளால் கட்த்தப்படமாட்டாது, சாப்பாடுகள் என்று ஏதும் பரிமாறப் படமாட்டாது ஆதலால் ஹலாலா / ஹராமா, வேறு ஜீரனக் கோளாறு அல்லது அலர்ஜி என்ற பாதிப்புகள் பற்றிய கவலை வேண்டாம். காத்திருப்பு அறைகள் அங்கில்லை. ஆதலால் காலதாமதம் என்பது கடந்து விட்டதாகவே இருந்திடும். கவலை வேண்டாம்.

இந்த விமானம் குறித்த நேரத்தில் கிளம்பக் கூடியது; அதேபோல் சென்று சேரும் நேரம் குறித்தபடி இருக்கும். விமானத்தின் அகத்தினுள் பொழுதுபோக்குகள் பற்றி கவலை வேண்டாம். காரணம் அங்கே உங்களுடைய கேட்கும் மற்றும் உணரும் திறன் மறைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பயணத்திற்கான முன்பதிவு பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது ஏற்கனவே முன்பதிவு செய்திட்ட திரும்பிச் செல்லும் பயணம்தான். அதுவும் தாயின் கருவில் உருவாகும்போதே நிச்சயிக்கப்பட்ட பயணமே.

ஆஹா ! ஒரு நல்ல செய்தி ! உங்களின் அருகில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற கவலையே வேண்டாம். நீங்கள் மட்டும்தான் அதில் பயணம் செய்வீர்கள். அந்தப் பயணத்தின் சுகமான அனுபவத்தைப் பெறுவீர்கள். அதுவும் நீங்கள் மட்டுமே. அதில் ஒரு சின்ன தூக்கம் தான், பயணம் முழுவதும் உங்களை எழுப்பும் எவ்வித எச்சரிக்கையின்றி தூங்கலாம்.  

அப்படின்னா ! நீங்க தயாராக இருங்கள். தயவு செய்து உண்மையின்பால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருங்கள். முஸ்லீம் சகோதர சகோதரிகள் நிச்சயம் மார்க்க கடமைகளையும் அதன் வழிகாட்டல்களையும் உறுதியோடு கடைபிடியுங்கள்.

எனவே, அன்புச் சகோதர சகோதரிகளே, நல்லமல்கள் கொண்டு உங்களின் பயணப் பொதிகளின் (நன்மைகளின்) எடைகளை அதிகமாக்கி, ட்ரான்ஸிட்டில் சொர்க்கம் செல்ல தயாராகுங்கள். அவற்றை சலுகையாகவும் போனஸாகவும் பெற உகந்த புனித மிக்க மாதம் (ரமளான்) உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது... 

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் !!!

மூலாக்கம் : Tausif Rahmathullah (ஆங்கிலம்)
தகவல் : அப்துர்ரஹ்மான் - harmys

இந்த ஆக்கம் ஆங்கிலத்திலிருந்து தழுவி நமது வழக்குச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழில் மொழியாக்கம் செய்து இங்கே தந்திருக்கிறோம்...

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - நிறைவு 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | ,

மனனம் செய்தல்:

தேர்வுக்காகப் படிக்கும் போது மனப்பாடம் செய்வது நல்லதா ? பல்வேறு பாடங்களிலுள்ள நூற்றுக் கணக்கான செய்திகள் அத்தனையும் மனப்பாடம் செய்வது எளிதான செயலன்று. அவற்றை மனனம் செய்வதற்கு அதிகமான நேரம் தேவைப்படலாம். இதனால் பல செய்திகள் மனனம் செய்ய முடியாமல் விட்டுப் போகலாம். அப்படியே எல்லாவற்றையும் மனனம் செய்திருந்தாலும் எந்த அளவு அவை நினைவில் நிற்கும் என்பது உறுதியல்ல. எனவே எல்லாவற்றையும் மனனம் செய்வது என்பது ஏற்கத்தக்கதல்ல. முக்கியமான சிலவற்றை மட்டும் மனனம் செய்வது தவறல்ல. குறிப்பாக கனிதம், அறிவியல், பாடங்களைல் உள்ள வரையறைகள் (diffiniations) சூத்திரங்கள் (formulas)வரலாற்றுப் பாடத்தில் வரும் வரலாற்று நிகழ்வுகள் நடந்த ஆண்டுகள், இடங்கள், மொழிப் பாடங்களில் இடம் பெறும் செய்யுள் வரிகள்,இதரப் பாடங்களில் இடம் பெற்றுள்ள பாட வல்லுநர்களின் மேற்கோள்கள் (Quotations) போன்றவற்றை மனனம் செய்து கொள்வது நல்லது. மற்ற பாடச் செய்திகளைப் படித்துப் புரிந்து மனதில் உள்வாங்கிக் கொண்டு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் விடை எழுதுவதே சாலச் சிறந்தது.

நினைவாற்றல்

பொதுவாகக் கல்விக்கு - குறிப்பகத் தேர்வுக்கு நினைவாற்றல் என்பது மிக இன்றியமையா அம்சமாகும். படித்தவை நினைவில் நில்லாது போனால் தேர்வைச் செம்மையாகச் செய்ய முடியாது போய்விடும். நினைவாற்றலை வளர்க்க சில நடைமுறைகள், பயிற்சிகள் மிக உதவும். ஆண்டுத் தொடக்க முதலே தேர்வைக் கருத்தில் கொண்டுப் படிக்கத் தொடங்க வேண்டும். இவ்வாறின்றித் தேர்வுக் காலத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாகப் படிப்பது பாடத்தை மனதில் திணிப்பது போலாகிவிடும். இவ்வாறு திணிக்கப்படுபவை நிச்சயமாக நினைவில் நிற்காது அடுத்ததாக, படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்துதல் (concentrations) அவசியம். தேவையற்ற விஷயங்களில் மனதை அலையவிடக்கூடாது. மனம் ஒரு பதிவு செய்யும் கருவி அது சிதைவடையும் போது பதிவு செய்ய இயலாது. மனம் சிதைவடையாது அதை ஒருமுகப்படுத்துவதற்கு தொழுகை அதாவது இறைவணக்கம் நல்ல பயிற்சியாக அமையும். எனவே தினமும் மாணவர்கள் படிக்கத் தொடங்கும் போதே இறைச் சிந்தனையோடும் பிரார்த்தனையோடும் தொடங்குவது நல்லது. அடுத்ததாக, படித்தவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். படித்தவற்றை பல முறை எழுதிப் பார்ப்பது மிகுந்த பலனைத் தரும்.

செயல் முறை ஈடுபாடு:

சீனநாட்டுக் கல்வியாளர் ஒருவரின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. "பாடச் செய்திகளைச் சொல்லக் கேட்டேன்; உடன் மறந்து விட்டது;அச்செய்திகளைப் படித்தேன்; கொஞ்ச நேரம் நினைவில் நின்றது. அது பற்றிய செயல் முறையை (Experiment) உற்று நோக்கினேன்; இன்னும் கொஞ்ச நேரம் நினைவில் நின்று மறைந்தது; நானே அச்செயல் முறையில் ஈடுபட்டேன்; என்றும் மறக்காது நினைவில் நின்று விட்டது". கணிதப்பாடத்தை சுமையாகக் கருதும் மாணவர்களே இன்று அதிகம். அத்தகையோர் இச்சீனக் கல்வியாளரின் கூற்றை நினைவில் கொள்ள வேண்டும். வகுப்பில் ஆசிரியர் செய்து காட்டும் கணக்குகளைக் கவனித்தால் மட்டும் போதாது. அக்கணக்கையும் அதையொட்டிப் பயிற்சிக்ககத் தரப்பட்டுள்ள மற்றக் கணக்குகளையும் போட்டுப் போட்டுப் பார்க்க வேண்டும். அதமிழ்ல் இப்படி ஒரு பழமொழி உண்டு. 'மூட மூட ரோகம்; பாட பாட ராகம்; போட போட கணிதம்.

வேகமும் நுட்பமும்:

தேர்வு அறையில் அமர்ந்துத் தேர்வு எழுதுகின்ற நாம் மிக்க கவனத்துக்குரிய தருனமாகும். அத்தருனத்தில் தேர்வர்களிடம், வேகம், திட்பம் (speed and accuracy) இரு திறமைகளும் ஒருங்கே வெளிப்பட வேண்டும். தேர்வுக்காக அனுமதிக்கப்படும் 2 1/2 அல்லது 3 மணிநேரத்திற்குள் வேகமாகச் செயல்பட்டுக் கேட்கப்படும் எல்லா வினாக்களும் விடை எழுத வேண்டும். அதே நேரத்தில் விடைகள் பிழையின்றிச் சரியாக அமையுமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புற ஆற்றல்:

படிப்பைப் பூரித்தி செய்து விட்டுக் கல்விக் கூடத்தை விட்டு வெள்யேறும் நம்மை சமுதாயம் பல்கலை அறிந்த ஓர் அறிஞனாக அங்கீகரிக்க வேண்டும் என ஆசைப்படுவது தவறல்ல. அதற்காகப் படிக்கின்ற காலத்திலேயே பாடம் தவிர்த்த பல்வேறு கலைகளிலும் (exta-curricular activities) தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். அவ்வகையில் எழுத்தாற்றல், பேச்சற்றல், பொது அறிவுத்திறன் முக்கியமானவை. கல்விக் கூடங்களில் அமையப் பெற்றுள்ள மாணவர் மன்றங்களை முழுமையாகப் பயண்படுத்திக் கொண்டு இத்தகைய திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இவை பிற்காலத்தில் சமுதாயத்தில் மிகச் சிறந்த அந்தஸ்த்தை பெற்றுத்தர வல்லவை.


ஆரோக்கியமான உடல் படைத்தோரே அறிவார்ந்த ஆற்றல்களை வெளிக் கொணர முடியும். ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி அவசியம். கல்விக் கூடங்களிலுள்ள உடற்கல்விக் கழகம் மூலம் உடற்பயிற்சிலும்,, விளையாட்டுக்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். "சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும்" என்ற தமிழ் பொன் மொழியையும் "Saound mind in Sound Body" என்ற ஆங்கிலப் பொன் மொழியையும் மறந்து விட வேண்டாம்.

ஒழுக்கம்:

ஒழுக்கமே கல்வியின் உயர் நோக்கம் என்பதால் கல்வி கற்போர் ஒழுக்கத்தை உயிர் எனப் போற்ற வேண்டும். "ஒழுக்கத்தை ஊட்டாத கல்வி வேண்டாத ஒன்று" என்பது மாநபி(ஸல்) அவர்களின் மணிமொழி. கூர்மையான அறிவு படைத்தவனாயினும் சரி அவனிடம் மனிதப் பண்பு அறவே இல்லையெனில் அவன் ஓங்கி வளர்ந்த ஒரு மரத்துக்குத் தான் ஒப்பாவான் என்பதை

"அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்"

என்ற குறட்பா குறிக்கிறது. பெற்றோர்களுக்குப் பணிந்துப் பணிவிடை செய்தல், ஆசிரியர்களுக்குக் கீழ்படிதல், மூத்தோரர மதித்தல்,இளையோரிடம் அன்பு காட்டுதல், எளியோரிடம் இரக்கம் காட்டுதல், சம வயதினரிடம் நட்பு பாராட்டுதல், பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் போன்றவை மாணவர்களை மாண்புறச் செய்யும் ஒழுக்க நெறிகளாகும்.

இறையச்சம்:

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கல்வியாளரிடம் இறையச்சமும், இறைபக்தியும் அவசியம் இருத்தல் வேண்டும். தான் நாடியவர்களுக்கே இறைவன் கல்விச் செல்வத்தை வழங்குகிறான் என்பதால் அவனுடைய அருளின்றி அச்செல்வத்தை முழுமையாக அடைய முடியாது. கற்றதன் பயன் இறைவனைத் தொழுதலே என்பதை

"கற்றதனா லாய பயனென்கொல் வாளறிவன்
நாற்றாள் தொழார் எனில்"

என்ற திருக்குறள் தெளிவுபடுத்துகிறது, அதுவே இறைவன் அவனுடைய திருமறையில் கூறுவதற்கிணங்க "எனக்குக் கல்வி அறிவை அதிகப்படுத்தித் தருவாயாக" என தினமும் அவனைத் தொழுது வணங்கி பிரார்த்தித்து நம்முடைய கல்வியறிவைப் பெருக்கிக் கொள்வோமாக.


SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.
 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)

எது கவிதை…? 48

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2011 | ,


மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!

உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!

பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!

சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!

நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துனுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!

உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!

அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!

கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.

கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.

கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.

கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்

கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்

வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!

தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை

மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை

வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை

வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.

எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால்
மரம்
கருவிதை விதைத்தால்
கவிதை!!!

- சபீர்
Sabeer abuShahruk,

இனிக்கிறது இஸ்லாம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2011 | , , ,

தலைப்பே இனிக்கிறது
காரியம் ஆற்றும் செயல்பாட்டில்...
சிலர் நடத்தை கசக்கிறது
வெல்லம் இனிப்பு பொய்யாகாது
அதுபோலவே
இஸ்லாம் என்றும் இனிமைதான்.

நித்தம் நித்தம்
உலகம் மாறும்
மாறாத கொள்கை கோட்பாடு
அதுவே இஸ்லாம்!

இஸ்லாம் மார்க்கம்
இது
சுவர்க்கம் செல்ல வழி சொல்லும்.
நரகம் கொடுமை
அதை
நாடாதிருக்க வழி சொல்லும்..

மண்ணிற்கு ஏற்ற நல் மார்க்கம்
இஸ்லாம் என
மாற்றார் கூட ஏற்கின்றார்.
ஆனால்
சில கயவர்தாம் நம் கடமையதை
செய்ய விடாமல் தடுக்கின்றார்.

எதிரியையும் அன்பாய் பார்த்த நபியவர்கள்
அழகாய் போதித்தது நம் மார்க்கம்!
இதில் அடித்து கொள்வது
நம் சகோதர்தாம்
ஏன்தான் இந்த மூடத்தனம்?

ஒற்றுமை என்னும் கயிறு பிடிக்க
ஓங்கிச் சொன்னது நம் இஸ்லாம்
ஓர் இறைக் கொள்கை
இதுவே
இஸ்லாத்தின் இதயம், நம்பிக்கை.

ஒன்றே குலம் , ஒருவனே இறைவன்
இதுதான்
இனிய
இஸ்லாம்.

ஆண்டி ஆனாலும்
அரசன் ஆனாலும்
எல்லோரும் சகோதர்களே

உயர் குடி
தாழ் குடி இல்லாத
இனிய குடில் இஸ்லாமே!

இஸ்லாமியனாய் இருப்பது
நமக்கு கிடைத்த பொக்கிஷம்!
இதை உணராமல் வீனாய் போவது
நம் நேசம், பாசம் நிறைந்த சுற்றமே!

- CROWN

இன்று ஒரு தகவல்... ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2011 | , ,


எலக்ரிக் ஈல் - Electric eel (Electrophorus electricus)
தொகுத்து வழங்குபவர் நம்ம "அதிரைப்பட்டினத்தார்"

சும்மா பேர பார்த்ததும் என்ன இது எலெக்ரிக் ஹார்ட்வேர் ஐட்டம் என்று நினைத்து பல்லை ஈண்டு கண்டு பிடித்துவிட்டேன் என்று காட்டுபவர்கள் தலைல ஒரு குட்டு போட்டு கொள்ளலாம். இது என்ன தெரியுமாங்க? நம்ம ஆட்கள் ஆனத்துல புளி ஊத்தி இருந்தாலும் புளியானமும் (புளி உடம்புக்கு நல்லது அல்ல என்பது நம்மூர் ஆட்களுக்கு புளிப்பான விசயம் ) வீட்ல வைக்க சொல்லி இரண்டையும் குழைத்து சாப்பிடும் மீன் (ஆன) வகையில் உள்ள ஒரு வகை மீன்தாங்க. கொஞ்சம் நில்லுங்க!!! ஒமல தூக்கிட்டு எங்கடா கிடைக்கும் என்று கிளம்பிடாதிங்க இது சாப்பிட கூடிய மீன் அல்ல மாறாக ஷாக் கொடுக்க கூடிய மீனுங்கோ.


சிலபேர் நாம எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்பானுங்க…. ஒரு வார்த்தை சொன்ன அதை ரெண்டா பிரிச்சு அதலேருந்து ஒரு கேள்வி கேட்பானுங்க…. அவங்க அறிவாளிகள் அல்ல அறிவு இருப்பது போல் பாம்மாத்து காட்டுறவனுங்க.. சரி வாங்க விசயத்துக்கு வருவோம் அதேபோல இந்த மீனே எங்கே ,எப்படி தொட்டாலும் ஷாக் அடிக்கும்ங்க.

இது அல்லாஹ் அதுக்கு கொடுத்த சுயபாதுகாப்பு அம்சம்ங்க எப்படி நம்மை ஒருவர் பொரடில தட்டின கெட்ட கோபம் வருமோ (கோபமே கெட்டதுதானே) அதப்போல இந்த மீனுக்கும் வந்து ஒரு மின்சாரத்தை தன்னை தாக்கவரும் எதிரிக்கு கொடுக்குமாம்.

இது சுவாசிப்பது கூட நாமெல்லாம் முக்குளி தாரா பிடிக்க மூச்சே தம் கட்டிக்கிட்டு தண்ணிக்குல போய் முக்குளி தாரா பிடிக்கிறேண்டு பலபேர் மூக்கையும் ஒடச்சிருப்போம், ஆனா இந்த மீன் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணிக்கு மேல வந்து வெளிக் காற்றை (ஆக்சிஜனை) ஒரு தம் பிடித்துவிட்டு மீண்டும் கடலுக்கடியில் சென்று விடுமாங்க. தண்ணில உள்ள ஆக்சிஜனை மற்ற மீன்களைபோல் இதனால் சுவாசிக்க முடியாதாம் அதனால்தான் இப்படி அல்லாஹ்வின் படைப்பே ஒரு குதரத்துதாங்க.

தாக்க வரும் எதிரியை தாக்கும் தன்மையை பொருத்து இந்த மீன் எலக்ட்ரிக் ஷாக் கொடுக்குமாம். ரொம்ம நல்ல மீனா இருக்கேண்டு நினைக்காதீங்க…இதன் ஷாக் 500 வோல்ட்ஸ்ஸாம் 1 ஆம்பியரும் இருக்குமாங்க. ஒரு வயது வந்த மனிதனுக்கு 0.75 ஆம்பியர் கரெண்ட் கொடுத்தா (கவிக்காக்கா கன்ஃபார்ம் ப்லிஸ்) அம்போண்டு போயிருவான் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்)…ஆகையால் இந்த மீனின் மீது கை, கால், விரல் வைத்தவர்கள் காலியாவது நிச்சயம்.

முக்கியமான விசயத்த விட்டுட்டோமே யாரவது தமிழ்நாடு அரசியல்வாதிங்க கிட்டே இதைப்பற்றி சொல்லிடாதீங்க…அதுவேர அடுத்த தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு ஓரு எலெக்ரிக் ஈல் மீன் இலவசமாக தரப்படும் உங்கள் பவர்கட் பிரச்சனை ஒழிக்கப்படும் என்று கிளம்பிடபோறானுங்க.


நன்றி : எனக்கு சிறுது ஓய்வு கொடுத்த வேலைக்கு ; Wikipedia மாமாவுக்கு

- முகமது யாசிர்

வீடு திரும்ப விடை கிடைக்குமா? கண்ணீர் (நிஜம்)கதை 11

அதிரைநிருபர் | July 27, 2011 | , ,

அன்பு சகோதரர்களே,

1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது . ஏனென்றால்  எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் , என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன் . எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போகவேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து , பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் .


சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன் . மனம்  படபடத்தது. அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்படவேண்டாம் நாம் பம்பாய்தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன் . இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன் .ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம் . அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன் .சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது .மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார் .


காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -  பார்க்க சென்றோம் .காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன் . நாளை காலை உனக்கு பிளைட் என்றார் . நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம் . காலையும்,மதியமும் சாப்பிடவில்லை . கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற , வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன். இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும்,மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார் . என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .


மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன் . வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல் ,மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா . நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது . இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்கநேரிட்டது . காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை .இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது .பின்பு
  ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார் .


எனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார் . எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில் .இங்கு இதை பக்கால என்பார்கள்.


நான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள் .நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன் . இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது .யாரும் இல்லாத
  ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன். என்னையே  பிரமிக்க வைத்தது .அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய்வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .

இத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன் . என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன் . ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை. என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன் . அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுட்ரிதிரிவதாக  என்  மனைவி என்னிடம் கூறினாள். காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை . தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்துவிடாதீர்கள் .


இப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது . காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை.
தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக் கொள்வதை பார்த்திருக்கிறேன் , எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள் . ரிஜ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான் . முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.


அன்பான சகோதரர்களே , நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு , இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

மேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும் , செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும் , என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக ! ஆமீன்.



இப்படிக்கு

கண்ணீரோடு…!

ஒரு கடையநல்லூர்வாசி.



 தகவல்: அப்துல் ரஹ்மான்  ---harmys---


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு