Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வளைகுடாவில் ஒரு 'வாப்பா' கனவு... 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2011 | , , , ,

என்ன நிகழ்கிறது
என்
எண்ணங்கள் நெகிழ்கிறது...

சொன்ன தகவலொன்று
சிந்தையில்
சுற்றிச் சுழல்கிறது!

உனக்குள் நெளிகிறதா
என்
உயிரின் உதிரியொன்று...
வயிற்றில் வளர்கிறதா
என்
வாழ்க்கையின் கனவொன்று!

உணவு விடுதிகளில்
அன்பே
உணவுண்ண நேருகயில்
செவிக்குணவாய் வாய்ப்பதில்லை
சினுங்கும்
உன்
கண்ணாடி வளையோசை...
வாய்க்குள் உணவோ
விழுங்க
வழியின்றி சிக்குதடி!

தங்கும் அறையினிலும்
வேலை
செய்யும் துறையினிலும்
தவமே யிருந்தாலும்
தனிமை வாய்க்காது

இமைகள் திரையிட்டு
என்னைத்
தனிமைச் சிறையிட்டு
நம்
ஆசைக் கனவுகளை
அசைபோட்டுப் பார்க்கின்றேன்!

சீதனமாய் வேண்டாமென்ற
சொந்தவீடு கட்ட வேண்டும்
வாசற் படிகளின் வலமும் இடமும்
வாசச் செடிகளை வளமாய் இடனும்

உன்னை உடனிறுத்தி
என்னை உயிர்ப்பிக்க
சின்னதாய் வாய்த்தாலும்
வாகனம் வாங்க வேண்டும்

உன்
அசைவுகளை அறிவிக்க!

அழகான தொங்கட்டான்
கழுத்துக்கொரு மாலை
கைகளில் தங்க வளை
வருகையை பறைசாற்ற
வெள்ளியில் கொலுசுகள்
என
வாங்கப் பொருள் சேர்க்க
வங்கக் கடல் கடந்தேன்

மூன்றாம் கனவின்று
முதலில் கனிகிறதா
முல்லைப் பூம்பாதம் நம்
முற்றம் வருகிறதா

இனி,
நம் கனவுகளைச்
சற்று
களைத்துப் போட வேண்டும்
மொத்த கவனமுன்
நம்
மகவுக்குத் தர வேண்டும்o

பெற்று எடுக்கு முன்
பெயரொன்று தேட வேண்டும்
கற்றுக் கொடுக்கவும் நற்
காரியங்க ளறிய வேண்டும்

நம் பிள்ளை...
ரகசிய மொழிகளின்
திடமான மொழிபெயர்ப்பு!
வாசிக்க அலுக்காத
வசீகரப் பதிப்பு!

'வாப்பா' கனவை நீ
பிரசவிக்கும் காலம்வரை
வளைகுடா வாழ்க்கையில்
விடியட்டும் பொழுதுகள்!

- சபீர்
Sabeer abuShahruk,

25 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பர் நெருடல் கவிதை காக்கா,(மல்லிகை வாசம் மட்டும் மிஸ்ஸிங்) எப்பொ இனிய மகவுக்குரிய காலம்,இனிதாய் அமைய அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்.

பிடித்த முக்கிய அறிவுரை வரிகள்.
///சீதனமாய் வேண்டாமென்ற
சொந்தவீடு கட்ட வேண்டும்
வாசற் படிகளின் வலமும் இடமும்
வாசச் செடிகளை வளமாய் இடனும்///

இனி வள்ளுவர் வருவார் விளக்கவுரைக்கு!

Unknown said...

An Epic with Authenticity.......Teach us Sabir Kaaka to use such a
nice and soothing words:)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜஹபர் சாதிக்குக்கு ரொம்ப நாளா மல்லிகைப்பூ மேல் ஒரு கண்ணாக இருக்கிறதே...? இப்பொ மல்லிகைப்பூ விற்கும் விலைக்கு ஒரு நல்ல மல்லிகைப்பூ செண்ட் வாங்கி வச்சிக்கிட்டமுண்டா நெனப்பு வரும் பொழுது அடிச்சிக்கிடலாம்....லண்டனில் மல்லிகைப்பூவெல்லாம் கெடக்குமா? பூக்காரியலுவோ எல்லாம் வெள்ளக்காரியலுவொலா? பாத்து...ம்மா...மல்லிகைப்பூ செண்ட் அடிச்சிக்கிட்டு ஒத்தியா எங்கேயும் போஹாதியெ....ஆங்கிலப்பேய் புடுச்சிக்கிடப்போவுது???அப்புறம் இங்கிலீஸ்ல தான் ஓதிப்பாக்கனும்.....

க‌வ‌ன‌மா ஈந்துக்கோ.....

க‌விக்கா உங்க‌ள் க‌விதையில் க‌ரைந்து போனேன் ம‌ல்லிகைப்பூ வாச‌ம் போல்....இது போன்ற‌ க‌விதைக்கும் க‌ரையாத‌ ம‌ன‌முண்டோ? பிற‌கு விள‌க்க‌மாக‌ பின்னூட‌மிடுகிறேன்...


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உணர்வுகளுக்கு உயிருட்டும் வரிகளின் வசியம் உங்களிடம் மட்டுமே இருக்கிறது !

உறங்கும் உணர்வுகளை தட்டி எழுப்பும் வலையோசைகளும் கவிதையின் வரிகளில் வருடுகின்றன !

சொல்லியா தரனும் கவிக் காக்காவுக்கு ! அள்ளித் தரும் அழகே ஆர்பரிக்கும் வரிகளில் கண்டோமே !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
வாப்பாவின் ஏக்க கனவை அழகிய கவிதையாய் வடித்த அதிரை கவி சபீருக்கு வாழ்த்துக்கள்!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------

"இவ்வ்ளோ ஆசைகளை வைத்துக் கொண்டு யாந்தான் இந்த புள்ளைவோ கப்பலேறி போவுதுவொலோ தெரியலமா !!"

வீட்டில் இந்தக் கவிதையை வாசித்துக் காட்டும்போது ஒரு பெரிய மனுசி சொன்னதுதான் மேலே.

- உம்முஹாஸிம்

Yasir said...

வாப்பாவின் கனவுகளைபற்றி ஒரு அப்பப்பா கவிதை....என்ன வார்த்தைகள்...உருகவைத்துவிட்டது கவிகாக்கா....
//உணவு விடுதிகளில்
அன்பே
உணவுண்ண நேருகயில்
செவிக்குணவாய் வாய்ப்பதில்லை
சினுங்கும்
உன்
கண்ணாடி வளையோசை...
வாய்க்குள் உணவோ
விழுங்க
வழியின்றி சிக்குதடி!// கல்யாணமான புதில் “வல்லரசு”வை பிரிந்து வந்து இந்த கொடுமையை அனுபவித்தேன்..

அப்துல்மாலிக் said...

கனவை நனவாக்க
கடல்தாண்டிய படும்
அவஸ்தையை ஒவ்வொரு வரிகளு
மனதை உருகச்செய்தது

இங்கே மல்லிப்பூ வாசம்
காணுவதும் நுகர்வது nightmare என்பதால்
அதுபற்றி யோசிக்க முடியவில்லை

sabeer.abushahruk said...

MHJ: 
மல்லிகைப்பூ 
மணத்து முடிந்துதான்
மகவுக்கான வரவேற்பு!

வளைகுடா வாப்பாமார்களுக்கான கனவு...எனக்கானதல்ல. எனக்கெனில், இன்னும் நாலு துணைக்கால்கள் சேர்த்து "வாஆஆப்பா" கனவென்று இருக்க வேண்டும். எனிவே, வாழ்த்துக்கு நன்றி.

அதி(ரை)காலைக்கு அந்தி(ரை) மாலை
வளைகுடா வாப்பாவுக்கு ஐரோப்ப வாப்பாவா?
அடுத்ததென்ன போட்டிக் கவிஞரே?

Harmys:
"golden fish is asking to teach how to swim" thanks அ. ர.

எம் எஸ் எம்:
என்ன மாமன் மச்சான் எல்லாம் கூடி மல்லியப்பூவுலேயே குறியா இருக்கிய? பேச்சக் குறைங்கப்பு, அப்புறம் பேயடிக்கும் முன்பு உங்க புள்ளைகளோட தாயடிக்கப்போவுது.

அபு இபுறாஹீம்:
உணர்வுகளுக்கு உயிரூட்ட நான் முனைய அதற்கு உரமூட்டுவது நீங்கள் என்பதை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

சகோதரி உம்முஹாசிம்:
கப்பலேரிப் போகலேனா
காசுபணம் காண்பதெங்கே
காசுபணம் காணலேன்னா
கல்ச்சல்ல போகச்சொல்றாங்கலே

கல்ச்சல்ல போவதைவிட
கப்பலில் போவதே மேலல்லவா?

நன்றிம்மா.

அலாவுதீன்:
"அப்பா கனவு காணவேண்டிய நேரத்தில வாப்பா கனவாம்" என்று சிம்ப்பிளா முடிச்சுக்கிட்டியோ? ஷுக்ரன்.

கிரவுன்: 
வாசிச்சாச்சா? நேரம் இல்லேன்னாலும் 'நல்லாருக்கு நல்லால்லே'ன்னு ஒரு வார்த்தை சொல்லிப்போடுங்க. இல்லேனா எனக்கு தூக்கம் வராது தெரியும்ல?

ஹமீது: நீங்க என்ன நெய்க்காரப்பட்டிக்கா போயிருக்கிய நெட்டே இல்லையென. அதிரையில் இருக்கே!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்புறம் பேயடிக்கும் முன்பு உங்க புள்ளைகளோட தாயடிக்கப்போவுது.//

வாவ்வ்வ்வ் ! அ(வா)ப்பா வாகனுங்கிற நெனப்புளையும் தூள் கமெண்ட்(டூஸ்)!

sabeer.abushahruk said...

யாசிர்:
வெளங்குது வெளங்குது. டெஸெ(ர்)ட் சஃபாரி போனப்ப, தேத்தண்ணிய கைல வச்சிக்கிட்டு கொடுப்பதற்காக பவ்யமா வல்லரசுவைத் தேடியதை நோட் பண்ணப்பவே பார்ட்டி நம்மளமாதிரிதேன்னு முடிவு பண்ணியாச்சு. தேங்க்ஸ் யாசிர்.

அ.மாலிக்: மல்லீப்பு கிடைக்குதுப்பா. ஆனா, ஒரு பூ ஒரு திர்ஹம் விக்கிறாய்ங்க மலையாள சூப்பர்மார்க்கெட்ல (ச்சோய்த்ரம், ஷார்ஜா) டோர் டெலிவரி உண்டானு விசாரிக்கவா. நீங்க கிஸைசா? கருத்திற்கு நன்றி

Ahamed irshad said...

Good Sabeer Kakka.. :) Touching lines..

Yasir said...

//அப்துல்மாலிக் சொன்னது…இங்கே மல்லிப்பூ வாசம் காணுவதும் நுகர்வது nightmare// எத்தனை முழம் வேணும்காக்கா...பர்துபாய் டெம்பிள் வாசலில் பந்து பந்தா மதுரைமல்லி ஃப்ரெஸ்ஸா விக்குது...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

ஒவ்வொரு வாப்பாமார்கள் கனவை அப்படியே ஒவ்வொருவரிகளிலும் பிரதிபளிக்கிறது.

அனைத்துவரிகளும் மனதை உருக வைத்துவிட்டது.

//இமைகள் திரையிட்டு
என்னைத்
தனிமைச் சிறையிட்டு
நம்
ஆசைக் கனவுகளை
அசைபோட்டுப் பார்க்கின்றேன்!//

இப்படித்தான் எல்லா வாப்பாமார்களும் கனவு காண்கிறார்களா...

சூப்பர் காக்கா

sabeer.abushahruk said...

திருச்சி விமான நிலையத்தில்
திரும்பி வரும்போது கண்டது
திண்ணையில்(www.thinnai.com) போட்டிருக்காங்க:

வளைகுடா வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதால் இங்கும் பதிகிறேன்:

பிரியாவிடை:

பிரியா விடைகளும்
பிள்ளைகளுக்கு
முத்தங்களும்
என
வாழ்ந்து கொண்டிருந்தது
விமான நிலையம்

எட்டிய உயரத்தில்
கிட்டிய நெஞ்சில்
மகனை முகர்ந்தது
மூதாட்டி உம்மா

கடவுச் சீட்டு
அடங்கிய கைப்பை
முழங்கையில் தொங்க
கடைக்குட்டியை
கைகளில் ஏந்தி
வாப்பா
பயணம் சொல்ல
குழந்தை 
தானும் வருவதாகச்
சொன்னது.

எல்லாச் 
சொந்தங்களிடமும்
ஸ்பரிஷமோ 
பாஷையோ
விடைதர...

புன்னகை போர்த்திய
முகச் சோகமும்
புர்கா மூடிய
அகச் சோகமும்
கலாச்சார நாகரிக
கட்டுக்குள் நிற்க
மனைவியின்
கண்கள் மட்டுமே
முழுப்
பெண்ணாகிப் போக...

எல்லா வினாக்களுக்கும்
ஒரே விடையாய்
மெல்லத் தோன்றி
துடைப்பதற்குள்
சிந்தியது
உள்நாட்டுக்
கண்ணீர்த் துளியொன்று.

பிரியமானவளைப்
பிரிய மனமின்றி
பொதிவண்டி தள்ளி
விதி எண்ணிப் போக
தானியங்கிப் படிகளில்
தடுமாறி 
சுதாரிக்கும்போது
சிதறி விழுந்தது
வெளிநாட்டில் பிழைக்கும்
சபுராளி வாழ்க்கை!

-Sabeer abuShahruk,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்காவிடம் என்றுமே சலுகைகள் என்பது தேர்தல் முடிந்தாலும் கிடைக்குமே ! ஓர் கவிதை உணர்வுக்கு என்றால் மறொன்றோ பயனக் காசு ! ஆஹா !

அப்போதே சொல்லிட்டேன் வசியம் என்னதான் இருக்கோ !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

///மல்லிகைப்பூ
மணத்து முடிந்துதான்
மகவுக்கான வரவேற்பு!///
அப்பொ பூவுக்கு இடைகால தடையா!OK.

///அதி(ரை)காலைக்கு அந்தி(ரை) மாலை
வளைகுடா வாப்பாவுக்கு ஐரோப்ப வாப்பாவா?
அடுத்த போட்டி///
இன்சா அல்லாஹ்

///கல்ச்சல்ல போவதைவிட
கப்பலில் போவதே மேலல்லவா?///
சூப்பர் உரமிட்ட வீரிய சிந்தனை காக்கா.

///மல்லிகைப்பூவெல்லாம் கெடைக்குமா?///
யான்கெடைக்காது! வளைகுடாவில் கிடைக்காத அத்தனையும் கிடைக்கும். நெல்லிக்கா நொங்கு முதற்கொண்டு அத்தனையும் அல்ஹம்துலில்லாஹ்.

///ஆங்கிலப்பேய் புடுச்சிக்கிடப்போவுது///
நீ கெளப்பிவிட்டதை, நெ.த. காக்கா வீராப்பு உரமிட்டு, அலாவுதீன் காக்கா விளக்கமிட்டு, சபீர் காக்கா வக்காலத்து வாங்கி கடந்த வெள்ளியோடு பேய் என்னும் பொய் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டது. இனி அந்த பேச்சுக்கே இடமில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// பேய் என்னும் பொய் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டது. இனி அந்த பேச்சுக்கே இடமில்லை. //

Classic !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------------

ஊரில் ஒரு "உம்மா" கனவு...

என்ன நிகழ்ந்தாலும்
என்
பிள்ளைகள் என்று நெகிழும்...

காட்டிய அன்பு
இன்று
கடல் கடந்தும் ஆர்ப்பரிக்கும்

எனக்குள் ஒளிந்திருக்கும்
என்
உயிரின் மேலான உம்மாவே
என்
வாழ்வின் வ‌ச‌ந்த‌ காலம்

ஒய்யார‌ உண‌வு விடுதியில்
என்ன தான் உண‌வு
உட்கொண்டாலும் என்
வ‌யிற்றை நிர‌ப்ப‌
நீ செய்த போராட்ட‌ம்
என்னை ஆயுட் கைதியாய்
அடைத்திடும் அன்பில்

த‌ங்கும் அறையினில்
த‌லைவ‌லி வ‌ந்தாலும்
செய்யும் துறையினில்
தொல்லை ப‌ல‌ வ‌ந்தாலும்
உன்
"த‌ம்பி" என்ற‌ பாச‌க் குர‌லே
உய‌ர் சிகிச்சைய‌ளித்து
என்னை உற‌ங்க‌ வைக்கும்

ஆசையாய் நீ கேட்ட
ஓடிக்குல‌ம்
ஓடி வ‌ந்து உன‌க்கு த‌ர‌
எட்டிய‌ தூர‌த்தில் இல்லை
நான்
ஏன‌ம்மா என்னை அனுப்பி வைத்தாய்?
ப‌ணிவிடை செய்ய‌ ஏங்க‌ச் செய்தாய்?

சிறுவ‌னாய் என்னை சீராட்டி,பாராட்டினாய்!
திரும‌ண‌ம் செய்து வைத்து என்னை
எங்கோ அனுப்பி வைத்து
திருதிருவென‌ முழிக்க வைத்தாய்!
அன்பிற்கு ஏங்க‌ வைத்தாய்!
அடைக்கும் தாழின்றி திறந்து வைத்தாய்!
ஆசைக்கு வ‌லை விரித்தாய்!

சும்மா இருந்தாலும் உம்மாவின்
நினைப்பு வ‌ந்து சிம்மாச‌ன‌ம் இடும்
சீர்தூக்கி பார்த்து உன்னை
அன்பின் அன்னையாய் போற்றிப் புக‌ழ்ந்திடும்
க‌விக்காக்காவின் க‌விதையில் ஊஞ்ச‌லாடும்
எண்ண‌ ஓட்ட‌த்தில் என்னையும் சேர்ந்திடுங்க‌ள்

உம்மா நினைப்பில் சும்மா ஒரு க‌விதை மாதிரி....

மு.செ.மு.நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) "உம்மஅ நினைப்பில் சும்மா ஒரு கவிதை மாதிரி... அல்ல ! இது ஒரு வருடல் !

//தொல்லை ப‌ல‌ வ‌ந்தாலும்
உன்
"த‌ம்பி" என்ற‌ பாச‌க் குர‌லே
உய‌ர் சிகிச்சைய‌ளித்து//

நிஜமே ! உம்மாவின் "மா" வில் நிறையும் அழைப்பும், வருடலுக்கும் ஈடாகுமா ? (பெரும்பாலும் உம்மாவுகே வாப்பாக நாம் இருந்திருக்கிறோம் அவர்களின் அழகிய அழைப்பில்)

sabeer.abushahruk said...

//சும்மா இருந்தாலும்
உம்மா நினைப்பு வ‌ந்து
சிம்மா ச‌ன‌ம் இடும்//

smashing MSM!

crown said...

என்ன நிகழ்கிறது
என்
எண்ணங்கள் நெகிழ்கிறது...

சொன்ன தகவலொன்று
சிந்தையில்
சுற்றிச் சுழல்கிறது!

உனக்குள் நெளிகிறதா
என்
உயிரின் உதிரியொன்று...
வயிற்றில் வளர்கிறதா
என்
வாழ்க்கையின் கனவொன்று!
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பே! உன் ,என் உயிரின் நகல் அசலாய் அசைகிறதா?உன் வயிற்றுனுள்? அது அசையும் சொத்தோ, அசையா சொத்தோ அல்ல! நம் ஆசை மொத்தத்துக்கும் சொத்தே அதுதான். நம் குல முத்தே அதுதான்.கேட்கும் பொழுதினில் நான் தாயாய் மாறிவிடுகிறேன் உன் தயவில் . இப்பத்தான் வாழ்கை எனக்கு தந்தை எனும் பட்டம் தரப்போகிறது.அதற்கு தொப்புள் கொடியால் நூல் கோர்த்தவள் நீயல்லவா என் சகியே! நான் உன் அருகில் வரும் வரை கொஞ்சம் சகியேன்.

crown said...

உணவு விடுதிகளில்
அன்பே
உணவுண்ண நேருகயில்
செவிக்குணவாய் வாய்ப்பதில்லை
சினுங்கும்
உன்
கண்ணாடி வளையோசை...
வாய்க்குள் உணவோ
விழுங்க
வழியின்றி சிக்குதடி!
------------------------------------------------
வலைகரம் சமைக்காத அந்த உணவும் உன் அருகாமை கிடைக்காத பொழுதில் எழுதில் விழுங்க முடியாதவாறு நோய் வந்தவன் வாய் கசந்து போவதுபோல் கசந்து போகிறது. மருந்து,இருந்தும் நோய் தீர்கும் மாத்திரை வில்லை ஒரு வாய் முழுங்க முடிய வில்லையடி.பெரும் தொல்லையடி.

crown said...

தங்கும் அறையினிலும்
வேலை.............
இனி,
நம் கனவுகளைச்
சற்று
களைத்துப் போட வேண்டும்
மொத்த கவனமுன்
நம்
மகவுக்குத் தர வேண்டும்o
---------------------------------------------------------
காணும் பொருள் யாவும் கண்களுக்குச்சொந்தமில்லை. காணும் கணவுகளும் நினைவாக்கிபார்க வழியும் இல்லை. கிடைக்கின்ற சிறு ஓய்வு நேரத்தில் நமக்கான கணவுகளை பகல் கணவாய் நான் காணுகின்றேன். உன் கணவன் நான் காணும் கணவையும் களைத்து போட்டுவிட்டு வரும் மகவுக்குகான கணவுகளை நிசமாக்க துடிக்கின்றேன். சீர் எனும் சீர் கெட்ட நோய் நம் சமுதாயத்தை ஆட்டும் சீதனமாய் வேண்டாமென்ற சொந்தவீடு கட்ட வேண்டும்.இப்படி நூதன முறை கொள்ளையர் வருவார் நாளை நம் தங்கத்தின் மேலான மகளையும் கொடுத்து தங்கம் ,வெள்ளி இன்னும் பிற கொடுக்க வேண்டும் பாவி ஏன் இந்த அவலம் கண்டோம் . பகுதறிவு இஸ்லாத்தில் பக்குவமில்லா நிலை மனிதர் கண்டோம் . இதனால்தான் நல் எண்ணம் கொண்ட மாற்று மதத்தோழியும் கேள்வி கேட்டார் பதில் தான் நம்மிடம் உண்டா? முழுமை அடைந்த மார்கம் என்று சொல்லி மார்கம் சொல்லாதை மார்தட்டி , வீரனைபோல் நிசக்கோழை பறிக்க. நம்மை பார்த்து மாற்று மத நல் இதயங்கள் கூட நகைக்க இப்படியே காலம் செல்லும், முதுமை வந்து உயிரை அள்ளும் வரை தொடர்ந்திடுமோ இதுபோல வாப்பாக்களின் சாப வாழ்கை???????

sabeer.abushahruk said...

கிரவுன்,

டூ லேட்! இப்ப இந்த கனவுகளை தம்பி ஷஃபாத் தம் தங்கக்குரலில் தத்தெடுத்து வாசித்துவிட்டதால் இதன் இந்த எழுத்து வடிவம் வலுவிழந்துபோய் விட்டது.

உங்கள் ஈமெயிலுக்கு அனுப்பியுள்ளேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள் நான் சொல்வது சரியா தவறாவென்று.

//அது அசையும் சொத்தோ, அசையா சொத்தோ அல்ல! நம் ஆசை மொத்தத்துக்கும்...// ஆயினும் உங்கள் விமரிசனம் வாசிப்பது தனி சுகம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு