அரசு என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டும். கட்சியின் கொள்கையை அரசின் செயல்பாடுகளோடு கலந்து குழப்பக்கூடாது. ஒரு அரசில் அனைத்துக் கட்சியினரும் அங்கம் வகிப்பதால், அது சார்பற்றதாக செயல்பட வேண்டும். குறிப்பாக மதம் சார்ந்த விசயங்களில் அரசு மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.
நமது அரசியல் சாசணம் அரசும் ஆட்சியாளர்களும் குறிப்பிட்ட சமயச் சார்புள்ளவராக செயல்படக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அதேபோல், அரசு நிறுவனங்களில் சமயக் குறியீடுகளை முன்னிருத்துவதையும் தடைசெய்து நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன. அரசு சமயச் சார்பற்றதாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் தனி வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதை சட்டம் தடுக்கவில்லை. மத நம்பிக்கைகள் தனி மனிதர் சார்ந்தவை என்பதால் நாமும் அதை குறை கூற முடியாது.
செய்திகளை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது "அரசினர் தோட்டத்தில் உள்ள விநாயகர் கோயில் இடமாற்றம் இல்லை: அரசு அறிவிப்பு!"என்ற செய்தி கவனத்தைக் ஈர்த்தது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்த விநாயகர் கோயிலை இடமாற்றம் செய்ய முந்தைய அரசு முடிவு செய்திருந்ததாகவும் தற்போது அரசு அந்த முடிவை மாற்றிக் கொண்டு விட்டதாகவும் அங்கு குடமுழுக்கு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதன் மூலம் தமிழக அரசின் சமயச் சார்பின்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அரசு ஊழியர்களிலும் சட்டமன்ற உறுப்பினர்களிலும் தெய்வபக்தி உள்ளவர்கள் இருக்கவே செய்கின்றனர். இது தவறும் இல்லை. ஆனால் அரசு இடம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டுத்தலம் மட்டும் செயல்பட அனுமதிப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மட்டுமின்றி, பெரும்பாலான அரசு அலுவலகங்கள், சில காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் போன்றவற்றில் இந்து மதத்தினர் கடவுள் என்று கருதுபவர்களின் படங்களை மாட்டி வைத்துள்ளனர். பல அரசு அலுவலகங்களில் இந்துக்களின் வழிபாடான ஆயுதபூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆங்காங்கே சாலைகளை ஆக்கிரமித்து திடீர் கோயில்கள் முளைக்கின்றன. உயர் நீதிமன்ற வாசல், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் எனப் பொது இடங்கள் பலவற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் குறிப்பிட்ட மதத்தின் சின்னங்கள் உருவாக்கப்படுகின்றன.
இவற்றைத் தடுக்க வேண்டிய சமயச் சார்பற்ற கட்சிகள் எனக் கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தேமுதிக, பாமக என எந்தவொரு கட்சியும் இதனைப் பிரச்சனை ஆக்குவதில்லை. மனிதநேய மக்கள் கட்சி இதுபோன்ற பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்பி சமயச் சின்னங்கள் அரசு அலுவலகங்களில் இடம் பெறுவதையும் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதையும் நீக்கப் பாடுபட வேண்டும்.
அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் இத்தகைய சமயச் சார்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுநல அமைப்புகளும் சமுதாய இயக்கங்களும் தடையாணை கோரி நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட மதத்தின் சின்னங்கள் அரசு அலுவலகங்களில் இடம் பெறுவதைக் களைய முயல வேண்டும்.
வாழ்க இந்தியா! வளர்க சமய நல்லிணக்கம்!
இதுதொடர்பான பதிவுகள்:
1. விடுதலை... http://viduthalaidaily.blogspot.com/2011/07/blog-post_12.html
2. சிந்திக்க உண்மைகள்: http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_15.html
2. சிந்திக்க உண்மைகள்: http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_15.html
--அபூசுஹைமா
18 Responses So Far:
மதச் சார்பின்மையை இறையான்மையாக கொண்ட இந்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் இந்த மீரல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது !
மாற்று மதச் சகோதரர்களின் வழிபாட்டு முறைகளையோ அல்லது வழிபடும் இடங்களையோ நாம் குறை சொன்னதில்லை... ஆனால் அத்துமீறல்களையும் முண்டாசு கட்டிக் கொண்டு மல்லுகட்டவே இம்மாதிரியான வேலைகளை செய்பவர்களுக்குத்தான் நம் எதிர்ப்பையும் மதச் சார்பின்மையை நினைவு படுத்துகிறோம்.
கண்டிப்பாக நம் அதிருப்தியை தெரிவித்தே ஆக வேண்டும் !
நல்ல விழி கொண்டு வழிசொல்லும் ஆக்கம் !
மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------------
//தமிழக அரசின் சமயச் சார்பின்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது//
சந்தேகமே வேண்டாம் அபு சுஹைமா. தெள்ளத் தெள்ளிவாகவே காட்டியவர்களல்லவா இவர்கள்?
- Sabeer Abu Sharhuk
அஸ்ஸலாமு அலைக்கும்,
அபூ சுஹைமா காக்கா,
இங்கு குறிப்பிட்டுள்ள ஆதங்கம் நியாமானதே.
பார்ப்பன திராவிட கட்சிகளிடம் நாம் மதசார்பின்மையை எதிர்ப்பார்ப்பது கஸ்டமே. மாற்று அரசியல் என்று சொல்லும் மமக இரண்டு உறுப்பினர்களுடன் ஆளும் கட்சி கூட்டனியில் உள்ளனர். சட்டசபையிலோ அல்லது வெளியிலோ குரல் கொடுக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே.. அப்படி முன் வந்தால் நிச்சயம் மாற்று அரசியல் என்ற அவர்களின் நிலை நியாயமானதாக இருக்கும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி
மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ அபூ சுஹைமா உங்களுடைய கோரிக்கை ரொம்ப அவசியமானவை.
// நமது அரசியல் சாசணம் அரசும் ஆட்சியாளர்களும் குறிப்பிட்ட சமயச் சார்புள்ளவராக செயல்படக்கூடாது என்று வலியுறுத்துகிறது //
நூலை அறுத்துவிட்ட பட்டம் ஆடி அசைந்து பறப்பது போல் நம் நாட்டின் சட்டமும் அப்படிதானே!
-லெ.மு.செ.அபுபக்கர்
பலகாலமாக நான் சிந்தித்து கொண்டிருந்த விசயம் அபூசுஹைமா அவர்கள் மிக பக்குவமாக அதனை எடுத்துரைத்துள்ளார்கள்...மத சின்னங்களை அரசு அலுவகலங்களில் எடுத்தாக வேண்டும்.....
அரசு அலுவலகங்களில் உள்ள மத சின்னங்களை இவர்கள் எடுக்க மாட்டார்கள். பார்ப்பன ஆக்டோபஸ் எல்லா இடங்களிலும் தனது கைகளைப் பரப்பி ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிறது.
எத்தனை சட்டங்கள் போட்டாலும் நிறைவேற்றும் மனநிலையில் எந்த அதிகாரிகளும் இல்லை.
தண்ணீர் டேம் திறந்து விடுகிறார்கள். இதற்கு போய் பூசாரி வைத்து, கற்பூரம் கொளுத்தி, பூ போட்டு திறக்கிறார்கள்.
அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் ---- : என்பதை இவர்கள் காதில் பெரிய சங்கெடுத்து ஊதி வைக்க வேண்டும்.
எல்லோருக்கும் பொதுவாக பணிசெய்வேன் என்று அவர்கள் எடுத்த உறுதிமொழியை அவர்கள் சட்டையில் அச்சடித்து மாட்டிவிட வேண்டும்.
//அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் ---- : என்பதை இவர்கள் காதில் பெரிய சங்கெடுத்து ஊதி வைக்க வேண்டும்.
எல்லோருக்கும் பொதுவாக பணிசெய்வேன் என்று அவர்கள் எடுத்த உறுதிமொழியை அவர்கள் சட்டையில் அச்சடித்து மாட்டிவிட வேண்டும். //
சரியாக சொன்னீர்கள் அலாவுதீன் காக்கா.
அரசு LOGOவையும் மாத்தியாகனும்.
திராவிட இயக்கத்தின் பெயரில் மத சார்பற்ற அரசு என்ற பெயரில் இயங்கும் இந்த அரசு..,
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை காட்டுகிறது.
இது யாரை திருப்தி படுத்த என்று தெரியாதா என்ன..
பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி.
முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அரசியலில் ஆர்வம் காட்டாததே இத்தகைய செயல்கள் தொடரக் காரணம் என நான் நினைக்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள சமநீதி மறுக்கப்படும் போது, அதனை சட்ட ரீதியாகப் போராடிப் பெற வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் நீதிமன்றங்களை நாட வேண்டும். இனியேனும் செய்வார்கள் என நம்புவோம்.
சகோ.அபூசுஹைமா நல்ல வேண்டுகோள்.
ஊழல் சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிந்தும் நடைமுறையில் பகிரங்கமாக இருப்பது போல மதசார்பின்மையும் சட்டத்தில்மட்டும் தான் உள்ளது.நடைமுறையில் ஒருதலைப்பட்சம் தான்.இதற்கெல்லாம் முழுமுற்றுப்புள்ளி வைக்க நம்மவர்கள் அதிகமான அரசுப்பணிகளில் ஈடுபடவேண்டும். நம் பாதகங்களை அரசு சார்ந்த அரசியல்வாதிகளும் வாயில்போட்டு சப்பிக்கொண்டிருக்காமல் தட்டிகேட்கவேண்டும்.
அரசியல் வாதிகள் பதவிப்பிரமாணம் எடுக்கும்போது மதங்களுக்கு அப்பார்பட்டு என்று சொல்லுகின்றனர், இது வெறும் வார்த்தைக்கு மட்டுமே, மேலும் அந்த படங்களை எடுக்க சொன்னால் எம்ம்மதமும் சம்மதம் என்று ஏசு படம், மக்காமதீனா படம் மாட்டிடுவாங்க...
மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------
ஹலோ,
"மதச் சின்னங்களும் அரசு அலுவலகங்களும்" என்ற தலைப்பிட்ட இந்த கட்டுரையைப் படித்ததும் சில சந்தேகங்கள் எழுகிறது அதனை இங்குள்ள நண்பர்களிடம் கேட்க விரும்புகிறேன் !
1. மதங்களை / சமயங்களை வழிபடுவது தனிமனித உரிமை இதில் யாருக்கும் இரண்டாம் கருத்துக்கு வழியில்லை. ஒவ்வொருவரும் கடவுள் பக்தியுடையவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது, கடவுள் பக்தியும் அவரின் மேல் அச்சமும் உள்ளவர்கள் சந்தர்பங்கள் கிடைக்கும்போது அல்லது காரியங்களை துவங்கும்போது கும்பிட்டுக் கொள்வார்கள் அதற்கு வணங்குமிடம் எதுவாக இருந்தால் என்ன ?
2. அரசு அலுவலங்களில் ஒரு குறிப்பிட்ட வர்கம் தான் அதனைச் செய்கிறது என்று ஒட்டுமொத்தமாக அந்த சமுதாயத்தை குறை சொல்லாதீர்கள், நானும் அதனைச் சார்த்தவள்தான். இங்கே பங்களிப்பில் இருக்கும் நண்பர்களும் என்னோடும் பழகுகிறார்கள் பள்ளி நாட்களிலிருந்தே அவர்களின் வணக்க வழிபாடுகள் எனக்கும் தெரியும் எத்தனை முறைகள் வணக்கங்கள் உண்டு என்று.
3. அவர்கள் வணங்கிக் கொள்ள தேவைப் படுபவைகளை அவர்கள் அருகாமையில் வைத்துக் கொண்டால் என்ன தவறு ? சிலர் வணங்குவதற்காக தனி இடம் தேடி ஒதுங்கு புறமாக வேலை நேரங்களில் இரண்டு அல்லது மூன்று முறை தனித்து வணங்குகிறார்களே அதனை யாரும் தடுத்து பேசுவதில்லையே இதனை மட்டும் ஏன் சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதிக்கிறீர்கள்.
4. சகிப்புத் தன்மையை போதிக்கும் எல்லா மதமும் ஏன் இப்படியான விஷயங்களில் சகிப்புத் தன்மையை கடைபிடிக்க முடியவில்லை ?
5.இன்றளவும் எனது தனிப்பட்ட நண்பர்களும் குடும்ப நண்பர்கள் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களோடு இப்படியான வாதம் ஒருபோதும் வந்ததில்லை.
தயவு செய்து இதனை வேறு எந்தவிதமான மாற்று அல்லது எதிர்ப்பு கண்ணோட்டத்திலும் பார்க்காமல் நண்பர்களோடு பேசுவதாக எடுத்துக் கொண்டு உங்களின் கருத்தை எனக்குத் தாருங்கள்.
சமநீதி மீறப்படும்போது மறுக்கப்படும்போது புறக்கனிக்கப்படும்போது ஒவ்வொரு இந்தியனும் அதற்கு எதிராக குரல் கொடுத்தான் வேண்டும் சட்டபூர்வமாக சந்திக்கத்தான் வேண்டும்.
இந்த பிளாக்ஐ தொடர்ந்து நான் பார்த்து வருகிறேன் அதன் நல்ல தரமான பதிவுகளும் அர்த்தங்கள் கொண்ட கருத்துகளும் எனக்கும் பிடிக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்தை எனது நண்பர்களோடு மட்டும்தான் பகிர்ந்து கொள்வேன்.
நன்றியுடன்,
ஆஷா
கோயம்புத்தூர்
மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------
மிகவும் சென்சிட்டிவ்வான இப்பதிவை இத்தனை சிறப்பாகவும் சுமுகமாகவும் கருத்திட்டு விவாதிக்க முடியுமா என்ன? அருமை சகோதரி.
ஆயினும் சகோ.வின் புரிதலில் சற்று முரண்பாடு இருப்பதுபோல் படுகிறது. தனி மனித சமய வழிபாடுகளை சாடவல்ல இக்காட்டுரை. மாறாக, ‘மதச்சர்பற்ற’ என்று சொல்லிக்கொண்டு ஒரு அரசாங்கமே நடந்துகொள்ளும் விதத்தைச் சாடவே என்று புரிந்தால் ‘எல்லாம் சுபம்’.
நன்றி.
அப்படித்தானே அபூ சுஹைமா ?
- Sabeer Abu Sharhuk
சகோதரி ஆஷா,
நானும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் சேர்ந்துதான் பள்ளி, கல்லூரிகளில் பயின்றேன். என் ஆசிரியப் பெருமக்களில் பெரும்பாலோர் முஸ்லிம் அல்லாதவர்களே. அவர்கள் மீது இன்றளவும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சென்னையில் படிக்கும்போது அதிரைக்கு வரும்போதெல்லாம் என் பள்ளித்தோழன் ராஜ்குமாரைச் சந்திக்க ராஜாமடத்தையும் தாண்டிச் செல்வதுண்டு. தற்போது என் பணி இடத்திலும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் இணைந்தே பணியாற்றி வருகிறேன். நான் சுட்டிய பிரச்சனை அதுவன்று.
ஜனநாயக இந்தியாவின் அரசு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்களின் அடையாளங்கள் அரசு அலுவலகங்களுக்குள் இருக்கக்கூடாது என்பது விதி. இவ்வாறு ஒரு சட்டம் இருக்கும் நிலையில், அந்தச் சட்டத்தை மீறும் அரசுகளை / அரசு அதிகாரிகளை என்னவென்று சொல்வது?
நான் சுட்டிக்காட்டியது, சட்டம் இங்கு மீறப்படுகிறது என்பதைத்தான். புதிதாக இப்படிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை.
//அவர்கள் வணங்கிக் கொள்ள தேவைப் படுபவைகளை அவர்கள் அருகாமையில் வைத்துக் கொண்டால் என்ன தவறு ?//
இடம் நமது இடமாக இருக்கும் பட்டசத்தில் இதில் தவறு இல்லை. ஆனால் பொது இடத்தில் அவ்வாறு செய்ய சட்டத்தில் இடம் இல்லை.
மக்களுக்காகத்தானே சட்டம். எனவே, சட்டத்தில் மாறுதல் கொண்டுவரலாம் என்று நாம் வாதிட்டால், அது தற்போதைய சிக்கல்களைவிட மேலும் பல சிக்கல்களை உருவாக்கும்.
விநாயகருக்கென கோயில் இருக்கும் போது, தமிழ்க் கடவுள் முருகனுக்கும் கோயில் வேண்டும் எனச் சிலரும் முஸ்லிம்கள் தாங்கள் தொழ பள்ளி வேண்டும் எனச் சிலரும் முஸ்லிம்களிலேயே சிலர் இவங்க தொழுவது சரியில்லை; நாங்க தனி பள்ளி கட்ட வேண்டும் என்றும்; இன்னும் சிலர் தர்கா கட்ட வேண்டும் என்றும்; இன்னும் சிலரின் கோரிக்கையை ஏற்று சர்ச்சும் அமைக்க வேண்டியிருக்கும்; அய்யாவழியினருக்கும் சுடலைமாடனுக்கும் இன்னும் இதுபோன்று ஆளாளுக்குப் புறப்பட்டுவிடுவர்.
பணி இடம் பணி இடமாகத்தான் இருக்க வேண்டும். வழிபாட்டுத்தலமாக அல்ல. தனியாருக்குச் சொந்தமான பணி இடமாக இருந்தால், இந்தக் கட்டுரைக்கே அவசியம் இல்லை.
நன்றி, சபீர் காக்கா.
சகோதரி ஆஷா,
கட்டுரையாளரின் கருத்து,இந்துமத கடவுளையோ வழிபாட்டுத் தளத்தையோ சாடவில்லை.மாறாக,மதசார்பற்று இயங்கவேண்டிய அரசின் செயல்பாட்டில் 'மதசார்பு' வெளிப்படையாக இருப்பதையே சுட்டியுள்ளார்.
நமது அரசியலமைப்பும் அரசுகள் மதசார்பற்று செயல்பட வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. ஆட்சிப்பொறுப்பேற்கும்போதும் அவ்வாறே உறுதிமொழி எடுக்கிறார்கள். சட்டத்தைச் செயல்படுத்தவேண்டிய ஆட்சியாளர்கள் தமது மதநம்பிக்கை விசயத்தில்,காற்றில் பறக்கவிடுவதை தேசப்பற்றுள்ளவர்கள் எதிர்க்கத்தானே வேண்டும்!
தாடி மற்றும் தொப்பியுடன் ஓர் முஸ்லிம்,நமது ராணுவத்தில் பணியாற்ற முடியாது.ஆனால் சீக்கியர்களுக்கு இதில் விதிவிலக்கு!பொழுதுபோக்கிற்காக காசுகொடுத்து திரைப்படம் பார்க்கச் சென்றாலும் இந்து மதக்கடவுளர்களை தரிசிக்காமல் திரைப்படம் தொடங்காது!
ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கம்தான் பிறமத தெய்வங்களைத் ஏசக்கூடாதென்று கட்டளையிடுகிறது (குர்ஆன் அத்தியாயம் 6,வசனம் 108). என்பதையும் அறியவும்.
சகோதரி ஆஷா.. தங்களின் கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதில்.
//1. மதங்களை / சமயங்களை வழிபடுவது தனிமனித உரிமை இதில் யாருக்கும் இரண்டாம் கருத்துக்கு வழியில்லை. ஒவ்வொருவரும் கடவுள் பக்தியுடையவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது, கடவுள் பக்தியும் அவரின் மேல் அச்சமும் உள்ளவர்கள் சந்தர்பங்கள் கிடைக்கும்போது அல்லது காரியங்களை துவங்கும்போது கும்பிட்டுக் கொள்வார்கள் அதற்கு வணங்குமிடம் எதுவாக இருந்தால் என்ன ?//
கடவுள் பக்தியுள்ள எல்லோரும் தவறே செய்ய மாட்டார்கள் என்ற நிலை வருமானால் நீங்கள் கேட்கு கேள்வி நியாயம். இன்று அரசு அலுவலகங்கள் பொது இடங்களில் லஞ்சத்திலேயே பெரும்பாலான அரசு அதிகாரிகள் உள்ளார்கள். இதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு. கடவுள் பக்தி (இறையச்சம்) ஒவ்வொரு வினாடியும் நம் மனதில் இருக்க வேண்டும். காரியங்கள் துவங்கும்போது மட்டுமல்ல எந்நேரமும் தான்.
//2. அரசு அலுவலங்களில் ஒரு குறிப்பிட்ட வர்கம் தான் அதனைச் செய்கிறது என்று ஒட்டுமொத்தமாக அந்த சமுதாயத்தை குறை சொல்லாதீர்கள், நானும் அதனைச் சார்த்தவள்தான். இங்கே பங்களிப்பில் இருக்கும் நண்பர்களும் என்னோடும் பழகுகிறார்கள் பள்ளி நாட்களிலிருந்தே அவர்களின் வணக்க வழிபாடுகள் எனக்கும் தெரியும் எத்தனை முறைகள் வணக்கங்கள் உண்டு என்று.//
இங்கு யாருமே ஒரு குறிப்பிட்ட வர்கத்தை குறை சொல்லவில்லை. மதசார்பின்மை பேசும் இந்திய நாட்டில், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று மட்டுமே நம் சகோதரர்கள் அனைவரும் பின்ன்னூட்ட மிட்டிருக்கிறார்கள். உங்கள் நண்பர்களின் வழிபாட்டு வணக்கங்களின் பழக்க வழக்கங்கள அறிந்த நீங்கள் அவர்களின் நன்னடத்தையால் அதனையே உங்களின் நடைமுறையாக தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்று ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சிந்தித்து இருப்பீர்கள் தானே சகோதரியே.
//3. அவர்கள் வணங்கிக் கொள்ள தேவைப் படுபவைகளை அவர்கள் அருகாமையில் வைத்துக் கொண்டால் என்ன தவறு? சிலர் வணங்குவதற்காக தனி இடம் தேடி ஒதுங்கு புறமாக வேலை நேரங்களில் இரண்டு அல்லது மூன்று முறை தனித்து வணங்குகிறார்களே அதனை யாரும் தடுத்து பேசுவதில்லையே இதனை மட்டும் ஏன் சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதிக்கிறீர்கள்.//
நீங்கள் சொல்லுவது நியாயமே என்றாலும் இங்கு 99% அரசு அலுவலங்களில் ஒரு குறிப்பிட்ட மத சார்புடைய வணக்க சின்னங்களே உள்ளது. விதிவிளக்காக்கூட ஒரு அரசு அலுவலங்களை காண்பது அறிது.
குறிப்பிட்டுள்ள மதத்தினர் 2 அல்லது 3 முறை தனித்து வணங்குகிறார்கள் என்று சொல்லியுள்ளீர்கள், இது போன்று தணித்து வணங்குவதற்கு (இறைவனை தொழுவதற்கு) அநேக அரசு அலுவலகங்களில் சாத்தியமில்லை. மேலும் இதற்கு அரசு பணம் ஏதும் செலவாவதில்லை. ஒரு சில பெரிய அரசு அலுவலங்கள் இதில் விலக்காக உள்ளன.
//4. சகிப்புத் தன்மையை போதிக்கும் எல்லா மதமும் ஏன் இப்படியான விஷயங்களில் சகிப்புத் தன்மையை கடைபிடிக்க முடியவில்லை ?//
சகோதரியே, சகிப்புத்தன்மையால் அன்றும் (சுதந்திரப்போராட்டம்), இன்றும் (மதத்தீவிரவாதம் என்ற பெயரில் proxy war இன்னல்) சகிப்புத்தன்மை மூலம் எவ்வளவோ தியாகம் செய்துவரும் சமுதாயம் நீங்கள் குறிப்பிட்டுள்ள சமுதாயம். நகரீகமான முறையில் எண்ணங்கள் பரிமாறப்பட்டுள்ளதை சகிப்புத் தன்மையோடுதான் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோன்.
அடுத்த பின்னூட்டத்தையும் வாசித்துவிடுங்கள்..
சகோதரி ஆஷா அவர்களின் சந்தேகங்களுக்கான பதில் தொடர்ச்சி
//5. இன்றளவும் எனது தனிப்பட்ட நண்பர்களும் குடும்ப நண்பர்கள் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களோடு இப்படியான வாதம் ஒருபோதும் வந்ததில்லை.//
உண்மை தான், ஏங்கள் நாங்களும் பள்ளியில் படிக்கும் போது இது போன்ற பேச்சுக்கள் இல்லவே இல்லை. ஆனால் சில வருடங்கலாக ஒரு குறிப்பிட்ட மதரீதியான விசமத்தனமான கருத்துக்களை மீடியாக்கள் மூலமாக பரப்பபட்டு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வேலை அன்றாடம் நடைப்பெற்று வருகிறது என்பதை காண்கிறோம் இல்லையா?. மதசார்ப்பற்ற நாடு என்று ஏட்டளவில் செல்லிக் கொள்ளும் நம் நாட்டில் பொது இடங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களின் சின்னமே மேலோங்கி காட்சி தருகிறது என்பதை எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மைதானே.
சகோதரியே, மேலே சொல்லப்பட்டவைகள் நட்பு ரீதியான விளக்கமே. உண்மையை விளங்கவே கூறப்பட்டுள்ளது. இதில் புரிந்துணர்வில் தவறு ஏதும் இருப்பின் சுட்டிக் காட்டிடுங்கள். தங்களின் சில ஐயங்களுக்கு இங்கே சகோதரர்கள் பதிந்த பின்னுட்டங்களில் தெளிவு கிடைத்திருந்தால் மகிழ்ச்சியே.
ஆவேசத்தை, அநீதியை சகிப்புத்தன்மையால் வெல்வதே அறிவுடமை என்பது வரலாறு காட்டிடும் பாடம். இதைத் தான் நீங்கள் நட்புடன் இருக்கும் சமுதாயமும் நடைமுறைப் படுத்தி வருகிறது.
பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் நன்மையை தேடிக்கொள்ளுங்கள் என்கிறது அல்குர்ஆனில் சொல்லப்பட்ட ஒரு இறைவசனம்.
தங்களின் அருமையான நட்புகள் இன்றும் பசுமையாக இருப்பது போல் உங்களின் மீதும் இறைவன் நல்லருள் புரிவானாக. அந்த நாள் “இறைவன் ஒருவனே அவனுக்கு இணையாக யாருமில்லை. முஹம்மது நபியே இறுதித் தூதர்” என்று உளமார உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்திலும் இல்லை இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) !.
பொறுமையாக வாசித்தமைக்கு மிக்க நன்றி
மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------
நண்பர்கள் அனைவருக்கும்,
எனது சந்தேகங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், தெளிவாக கருத்துக்களை தந்தீர்கள்.
என்னுடைய ஆதங்கம் ஒன்றே "ஒரு குறிப்பிட்ட வர்கம்தான்" எல்லாமே செய்கிறது என்பதுதான் உறுத்துகிறது எல்லா மதங்களிலும் extremist இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக ஒட்டுமொத்த மதத்தையோ சமூகத்தையோ குறை காண வேண்டாம்.
"ஒவ்வொருவரின் செயல்கள் அவர்களின் எண்ணங்களைப் பொறுத்தே அமைந்திடும்" என்று முகம்மது நபி சொன்னதாக கேள்வி பட்டிருக்கிறேன் இதனை சரிதான் என்று நம்பும் நீங்களும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று நானும் எண்ணத்தால் ஒன்று பட்டவர்கள்தான் கடவுள் வழிபாடுதான் வேறே.
நன்றி,
ஆஷா
கோயம்புத்தூர்
Post a Comment