Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வீடு திரும்ப விடை கிடைக்குமா? கண்ணீர் (நிஜம்)கதை 11

அதிரைநிருபர் | July 27, 2011 | , ,

அன்பு சகோதரர்களே,

1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது . ஏனென்றால்  எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் , என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன் . எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போகவேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து , பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் .


சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன் . மனம்  படபடத்தது. அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்படவேண்டாம் நாம் பம்பாய்தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன் . இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன் .ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம் . அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன் .சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது .மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார் .


காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -  பார்க்க சென்றோம் .காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன் . நாளை காலை உனக்கு பிளைட் என்றார் . நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம் . காலையும்,மதியமும் சாப்பிடவில்லை . கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற , வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன். இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும்,மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார் . என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .


மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன் . வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல் ,மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா . நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது . இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்கநேரிட்டது . காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை .இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது .பின்பு
  ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார் .


எனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார் . எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில் .இங்கு இதை பக்கால என்பார்கள்.


நான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள் .நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன் . இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது .யாரும் இல்லாத
  ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன். என்னையே  பிரமிக்க வைத்தது .அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய்வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .

இத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன் . என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன் . ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை. என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன் . அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுட்ரிதிரிவதாக  என்  மனைவி என்னிடம் கூறினாள். காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை . தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்துவிடாதீர்கள் .


இப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது . காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை.
தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக் கொள்வதை பார்த்திருக்கிறேன் , எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள் . ரிஜ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான் . முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.


அன்பான சகோதரர்களே , நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு , இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

மேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும் , செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும் , என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக ! ஆமீன்.



இப்படிக்கு

கண்ணீரோடு…!

ஒரு கடையநல்லூர்வாசி.



 தகவல்: அப்துல் ரஹ்மான்  ---harmys---

11 Responses So Far:

sabeer.abushahruk said...

இப்படி பலபேர் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் விதி!

Yasir said...

மனதுக்கு கஷ்டமாகதான் உள்ளது...சேமிப்பு இல்லாவிட்டால் பாதிப்பு தான்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாம் படிப்பினை பெறுவதற்கான பலனுள்ள பகிர்வு.
அந்த முஃமினுக்கு ஆண்டவன் நல்லருள் புரியட்டும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மனதிற்குள் ஏதோ ஒன்று பிசைவது போல இருக்கு. அல்லாஹ் எல்லாரையும் காப்பாத்துவானாக ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அருமையான சொந்த கதை என்பதை விட அழுகை வரவைத்த சோகக்கதை என்று தான் சொல்ல வேண்டும்.

"ஒட்டு மொத்த குடும்பத்தின் சந்தோசத்திற்காக கடல் கடந்து தியாகம் பல செய்து வரும் அயல்நாட்டு உத்தியோக வாழ்க்கையே சிலரது வாழ்வில் அவர்கள் குடும்பத்தில் கும்மியடித்து கும்மாளமிட்டு நடுத்தெருவில் கொண்டுவந்து நிப்பாட்டி விடுகிறது"

நாம் இங்கு தனியே ஓலமிட்டு அழுவதையும், சைலண்டாய் சிரிப்பதையும் எவர் அறிவார் ஏகனைத்தவிர?

அது எந்த நாடாக இருந்தாலும் சரி அயல் நாட்டு வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அசொளகரியங்களை தாண்டி நாமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் நம்மைச்சார்ந்தவர்களுக்காக. ஆனால் அவையாவும் அறியாமல் அவர்கள் அங்கு அவல்பொறி திண்பது போல் ஆக்கிவிடுகிறார்கள் நம் அல்லல்களை.

ம‌ர‌ண‌ம் வ‌ரை புரியாம‌ல் போன‌ ம‌ர்ம‌ம் தான் "அய‌ல் நாட்டு வாழ்க்கை".

இதை விட‌ கொடுமையான‌ க‌தைக‌ளெல்லாம் ந‌ம் ஊர்க்கார‌ர்க‌ளிட‌ம் ஏராள‌ம் உண்டு த‌ன் க‌ஷ்ட‌, ந‌ஷ்ட‌ங்க‌ளை யாரும் வெளிக்கொண்டு வ‌ர‌ விரும்புவ‌தில்லை. ம‌ன‌துக்குள்ளேயே வைத்து ம‌ர‌ணித்த‌வ‌ர்க‌ள் ஏராள‌ம். இன்னும் வாழ்ந்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ஓராயிர‌ம்.


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நாம் படிப்பினை பெறுவதற்கான பலனுள்ள பகிர்வு !

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி, இது மாதிரி 100 க்கும் மேற்பட்டவர்களின் வேதனை கலந்த சரித்திரங்கள் குறிப்பாக நம் சமூகத்தினரிடையே இருக்கத்தான் செய்கிறது, எதுவாக இருந்தாலும் மீண்டும் தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் இதே குழியில் விழுகிறோம்...அல்லாஹ் காப்பானாக

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு சகோதரர்களே!

வீடு திரும்ப விடை கிடைக்குமா? கண்ணீர் (நிஜம்)

என் கண்கள் கலங்கிய நிலையிலும் அந்த சகோதரர்க்கு ஆறுதலாக

நம்மை படைக்கும் முன்னரே அல்லாஹ் நம்முடைய விதியை எழுதி முடித்துவிட்டு நம்மை சோதிப்பதற்காக இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளான்.இருந்தாலும் அந்த விதியெய் கலப்பற்ற பரிசுத்தமான து ஆவைக் கொண்டு மாற்ற முடியுமென்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

உங்களுடைய சோதனையில் பொருமை காத்து கொள்ளுங்கள்.அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னித்து உங்களை ஈடேற்றம் பெறச் செய்ய போதுமானவன்.

லெ.மு.செ.அபுபக்கர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது மாதிரி 100 க்கும் மேற்பட்டவர்களின் வேதனை கலந்த சரித்திரங்கள் குறிப்பாக நம் சமூகத்தினரிடையே இருக்கத்தான் செய்கிறது, எதுவாக இருந்தாலும் மீண்டும் தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் இதே குழியில் விழுகிறோம்...அல்லாஹ் காப்பானாக

புதுசுரபி said...

அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,

இங்கே அன்பு சகோதரர் அவர்கள் ஒரு நீண்ட அனுபத்தினை பகிர்ந்திருக்கிறார். இதில் நிறைய பாடம் அனைவருக்கும் இருக்கிறது.

1. முதலாவதாக நமது சமுதாயம் கல்வியைனைப் புறக்கணித்து, கந்துவட்டிக்கு வாங்கியாவது அரபு மண்ணை மிதித்துவிட வேண்டும் என்று நினைத்தது.. ( அல்ஹம்துலில்லாஹ், தற்சமய்ம் கல்வியில் சிறிது முன்னேற்றம் துளிர்க்கிறது) அப்படி செல்வதால் அனேகர் ஆடம்ப்ர வாழ்க்கைக்காவே தன் வாழ்நாளை அங்கு செலவழிக்கின்றனர்; இன்னும் அரபியர்களின் ஆடம்பர/சொகுசு வாழ்க்கை இவர்களுக்கு காலப்போக்கில் அனிச்சையாகவே மாறிவிடுவது துரதிர்ஷ்டம். வெகு சிலரே சேமிப்பில் கவனம் கொள்கின்றனர்.

2. நம்நாட்டில் விலைவாசி என்பது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக விண்ணைநோக்கி வளர்கிறது. ஆகையால் திட்டமிடுதலில் நம்மவர்கள் தோல்வியுறுகின்றனர். எனக்குத் தெரிய அனேகமான நண்பர்கள், ”அடுத்த முறையோடு முடித்துக் கொண்டு வந்து ஊரில் ‘செட்டில்’ ஆகலாமென்று இருக்கிறேன்” என்பார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வந்தவுடன், ”அய்யோ விலைவாசி கழுத்தை நெரிக்குது 2இலட்சம் கடனிருக்கிறது, அடுத்தமுறை பார்க்கலாம்” என்று அங்கலாய்ப்பவர்கள் தான் அதிகம். முறையாக தானும் தன் குடும்பத்தினரும் திட்டமிடாததும் தான் இதற்கு முழுமுதற்காரணம்.

3. பிள்ளைகள் படிப்பு / மேற்படிப்பு என்றொரு பொதுக்காரணமும் முன்வைக்கப்படுவதை பொதுவாக காணலாம். நான் இதுபோன்றோரைக் கேட்பதெல்லாம் ஒன்றுதான், தயவு செய்து ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்திலோ அல்லது மாவட்டதிலோ முதலாவதாக வரும் மாணவன் / மாணவியின் பேட்டியினை நாளிதழ்களில் படித்துப்பாருங்கள்; எனக்குத் தெரிந்து யாரும் என் அப்பா எனக்காக வெளிநாட்டில் உழைக்கிறார் அதனால் நான் கவனமாகப் படித்து முதலிடம் பிடித்தேன் என்று சொல்லவில்லை. மாறாக, என் தந்தை ( சில குடும்பங்களில் அம்மா) எங்களுக்காக கஷ்டப்படுவதை பார்த்தேன், இவர்களை நல்ல நிலையில் வைக்கவேண்டும் ஆகையினால் நான் நன்றாகப் படித்தேன் என்ற வரிகள் நிச்சயம் இருக்கும்; முந்தைய ஆண்டு யாஸ்மின் என்ற முஸ்லிம் மாணவி சொன்னது கூட நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும், “ என் தந்தை டி.வி.எஸ் -50 ல் வெயிலில் அலைந்து துணி வியாபாரம் செய்து எங்களைப் படிக்க வைத்தார்....” என்று அந்த மாணவியின் குரல் நம்மில் ஒலிக்கும்.
இதற்காக வெளிநாட்டில் இருக்கும் தந்தைகள் கஷ்டப்படவில்லை என்று பொருள் இல்லை, மாறாக கஷ்டத்தினை கண்முன்னே பார்க்கும் குழந்தைகளுக்கும், வெறுமனே ஃபோன் மூலம் அறியும் குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு.
வெளிநாட்டில் வாழும் தந்தைகள், வருடங்களாக பிள்ளைகளுக்காக கஷ்டப்படும் தங்களை எப்படி தன்பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திக்கொள்கிறார்களென்றால், வண்ணவிளக்குகள் ஜொலிக்க, உயரமான கட்டிடங்களுக்கு முன்னிலையில், விலையுயர்ந்த (யாருக்கோ சொந்தமான) படகு போன்ற காரின் முன் தங்களை ஃபோட்டோ எடுத்து ஊருக்கு அனுப்புகிறார்கள்.... ஊருக்கு வந்தால் கட்டுரையாளர் சொல்வது போல இலட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். சொல்லுங்கள் எந்தக் குழந்தை சார் சொல்லும் என் அப்பா கஷ்டப்படுகிறார் என்று???

விளைவு, பிள்ளைகள் குறிப்பாக ஆண்பிள்ளைகள் வெளிநாடு வாழ் அப்பாக்களை ஒரு ஏ.டி.எம் இயந்திரமாக மட்டுமே நினைக்கிறார்கள்.
வருடக்கணக்கில் பிரிந்திருந்து வரும் அப்பாக்களோ பிள்ளைகள கண்டிக்கக வேண்டும் என்றோ அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்கவேண்டுமென்றோ நினைப்பதில்லை.

கோரிக்கை என்னவெனில், குடும்பத்திற்காக உழைக்கிறேன்/கஷ்டப்படுகிறேன் என்று எண்ணி குடும்பத்தை கவனிக்காமல் இருந்திடாதீர்கள். உங்கள் குடும்பத்தின் ஒவ்வொருநாள் நிகழ்வுகளும் உங்களின் கவனத்தின் கீழ் வரவேண்டும், எதிர்காலத்தின் தேவைக்கான சேமிப்பு பற்றி குடும்ப உறுப்பினர் அனைவரின் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு வேண்டும், தேவைப்படின் குறைந்த அளவு சம்பாத்தியம் கிடைத்தாலும், குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினை வளார்த்துக்கொள்ளல் வேண்டும், நம் நிலைகளை உயர்த்திக்கொள்ள இறைவனிடத்தில் இறைஞ்சக் கற்றுக்கொள்ளவேண்டும்.

வல்ல அல்லாஹ், எல்லோரின் துயர் போக்கி வாழ்வில் அமைதியருள வேண்டுமாய் பிரார்த்திக்கும் - ரஃபீக் சுலைமான்

(எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு, சவுதியில் வேலை என்றவுடன் சமாதனம் செய்து அனுப்பிவைத்தார்கள், வேலையோ பொம்மைக்கடையில் பாதிநாள்; பேரீச்சைத் தோட்டத்தில் மீதிநாள் என்று- வருடங்களை ஓட்டிவிட்டு, “ அல்லாஹ் முப்பிர் ரப்பிஸ் ஸவூதிய, ஹுவ ரப்பில் ஆலமீன்” என்று அரபியிடம் அரபியில் சவால் விட்டு இந்தியா வந்து 15 ஆண்டுகள் ஆகிறது.
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் என்னை இன்று பல தளங்களில் உயர்த்தியிருக்கிறான்.

புதுசுரபி said...

மாணவி சாதனை--அமெரிக்காவின் நற்செயல்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா. இவர் ஒரு அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு பயில்கிறார்.

கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்" என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை, அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

அமெரிக்காவில் 10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை திரும்பியுள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது :-

மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில்தான் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன்.

அப்போதுதான் இந்த அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.


பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக்கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11-ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன்.

இச்செய்தியை வெளியிட்ட... தினமலர் இணையதளத்துக்கு மிக்க நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு