Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.... தொடர் - 1 28

அதிரைநிருபர் பதிப்பகம் | December 15, 2012 | , ,


தொடர் - ஒன்று.
எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்....

‘ திரை கடலோடியும் திரவியம் தேடு ‘ என்பது தொடக்கப் பள்ளிகளில் நாம் படிக்கத் தொடங்கிய பழமொழி. நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும் செல்வத்தை உண்டாக்கும் வழிகளைத்  தேடுவதும், செல்வத்தை உண்டாக்குவதும், அந்த செல்வம் கொண்டு துய்ப்பதும், அந்த செல்வத்தை சேமிப்பதும், அந்த செல்வத்தை வேண்டுவோருக்கு தானமாகவோ,கடனாகவோ கொடுப்பதும் சார்ந்த செயல்களாகவே இருக்கின்றன. ஆதி மனிதன் வாழ்வாதரங்களைத் தேடி ஆற்றுப் படுகையை நோக்கி நகரத்தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை இந்தத் தேடலுக்கு முடிவு இல்லை.

'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை'  என்று திருவள்ளுவர் சுட்டிக்காட்டினார். ‘ பணம் பந்தியிலே’ என்று  பாமரனும் பாட்டுப் பாடினான். ஒரு கவிஞர் ஒருபடி மேலே சென்று “ இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் “ என்று கூறினார். கருப்பு எது, வெள்ளை எது என்று கண்டு பிடிக்க முடியாத மன நோயாளிகள் கூட அவர்கள் கையில் பத்து ரூபாய்த் தாளைக் கொடுத்தால் பல்லிளிக்கக் கண்டு இருக்கிறோம். ‘ பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்றெல்லாம் சொலவடை உண்டு. இடைக்காட்டுச் சித்தர் என்பவர் பாடியுள்ள இந்தப் பாடல் பணத்தின் தேடலை இப்படிப் பறை சாற்றும்  ,

“ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! – காசு
காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே! – காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே!
முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே! – காசு
முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே!
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே! – பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே! – பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே! “


பொருள்தேடல் என்பது மனித இயல்பாகிவிட்டதால்தான் நாடு விட்டு நாடு கடந்து ,  மக்கள், மனை, சுற்றம் துறந்து பல ஆண்டுகள் கூட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து தங்கி இருந்து பொருள் ஈட்டுகிறோம். பகலுணவு இல்லாமல் கூட பல நேரங்களில் பசி மறந்து உழைக்கிறோம். உறக்கமின்றி விழித்து உழைக்கிறோம். நமது வாழ்வின் பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமிப்பதும் அள்ளி விழுங்குவதும்  பொருளாதாரச் சிந்தனைகளே. நமது சிந்தனைகள் அதிகம் சிதறிக் கிடப்பது பொருளை ஈட்டுவது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச்செல்வது ஆகிய காரியங்களிலேயே.

மனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்து இந்தத்  தேடல் இருந்ததால்தான் விவசாயம் முதலிய தொழில்கள் உண்டாயின. பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புதிய கண்டுபிடிப்புகள் தோன்றின; அறிவியல் வளர்ந்தது; ஆலைகள் இயங்கின; போட்டிகள் தோன்றின; வணிக எல்லைகள் வளர்ச்சி கண்டன; நாடுகள் கண்டு பிடிக்கப்பட்டன; அரசியல் சதிராட்டங்கள் முதல் அடிமை முறை வரை என்று பொருளாதார வளர்ச்சியின் வரலாற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

காலப்போக்கில் நாடுகள் உருவாகி அரசியல் எல்லையின் அமைப்பில் நாடுகள் செயல்படத் தொடங்கியபோது அந்தந்த நாடுகளுக்கேற்ப பொருளாதார சட்டங்களும் திட்டங்களும் கோட்பாடுகளும் உருவாயின. புதிது புதிதாக உருவான கோட்பாடுகளுக்குள் இருந்த  அடிப்படை வேறுபாடுகளால் கருத்து வேறுபாடுகளும் தோன்றின. எங்கள் கொள்கைகளே சிறந்தவை மற்றவை கவைக்குதவாதவை என்கிற வாதப் பிரதிவாதங்கள் , அதை முன்னிட்டு அரசியல் ஆக்கிரமிப்புகள் படையெடுப்புகள் என்று வரலாறு மிகவும் ‘பிசி’யாகப் போனது.

இந்த சிறு முன்னுரையோடு நான் இந்தத் தொடரில் எழுத வந்த  இஸ்லாமியப்  பொருளாதாரச்  சிந்தனைகள் என்கிற இந்தத் தொடரை தொடங்க நினைக்கிறேன். அவ்வளவாக மார்க்கக் கல்வி பெற்றிராத  நான்,  இந்த ஒரு சுமையைத் தூக்க நினைத்துத் தொடங்கி இருக்கிறேன். இதை நல்ல விதமாக எழுதி முடிக்க உங்கள் அனைவரின் து ஆவும் வேண்டுகிறேன். நான் எடுத்து இருக்கிற குறிப்புகள் மற்றும் சம்பவங்கள் எழுத்துரு பெறும்போது பொருளாதாரம் படிக்கிற மாணவர்களுக்குப் பயனுள்ளவைகளில் ஒன்றாகவும் பொருளாதாரம் பற்றிப் பொதுவாக தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு அறிமுகத் தகவல்கள் தரத் தகுதி படைத்ததாகவும்   அமைய வழி காட்டவேண்டுமென்று  இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.  சற்று கடினமான பாதைதான் ஆனால் இறையருளும், உங்கள் அனைவரின் துஆவும் என்றும் போல் என்னுடன்  இருக்குமென்று எண்ணித் தொடங்கிவிட்டேன். இந்தத் தொடர் நிறைவுற்று இதுவும் ஒரு நூலாக வெளியிடப்படவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதற்குரிய தகுதிகளோடு இந்தத் தொடரைத் தொடர்ந்து தர முயற்சி செய்வேன் என்று உறுதி அளிக்க விழைகிறேன். 

இனி இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளின் தனித்தன்மையை எடுத்துரைக்கும் முன்பு  சில அடிப்படைச் செய்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை சுருக்கமாகத் தருகிறேன். இவற்றைப் புரிந்து கொண்டால் தனித்தன்மை வாய்ந்த – உயர்வுடைய இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டினை நாம் விளங்குவதில் சிக்கல் இருக்காது. 

உலகின் பல்வேறு நாடுகளிலும் அவரவர் சூழ்நிலை, கலாச்சாரம், பண்பாடு, தேவை ஆகியவற்றை அனுசரித்து பல்வேறு பொருளாதாரக் கோட்பாடுகள் உருவாகின; பின்பற்றப்பட்டன. சில காலகட்டங்களில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றபடியும் பொருளாதாரக் கொள்கைகள் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ வகுக்கப்பட்டன. உதரணமாக போர்க்காலங்களில் அல்லது உபரியாக அல்லது பற்றாக்குறையாக விவசாய உற்பத்திகள் கூடக் குறைய இருக்கும்போது என்று எடுத்துக் கொள்ளலாம். சில நோக்கங்களை வைத்து கடைப்பிடிக்கப் படுகின்ற கோட்பாடுகள் அந்த நோக்கங்கள் நிறைவேறிய பிறகு அந்தக் கோட்பாடுகளும் பயனும் செயலும்  இழந்து போகும். ஒரு நாட்டிற்குப் பயனளித்த கோட்பாடு மறு நாட்டுக்கு ஒத்துவராது. பல சமயங்களில் தீங்கும் இழைத்திடக் கூடும். உதாரணமாக, இங்கிலாந்து நாட்டிற்கு வாழ்வளித்த ஆடம்ஸ்மித் என்கிற வல்லுனரின் கோட்பாடுகள் ஜெர்மன் நாட்டிற்கு பேரிழப்பாக அமைந்தது என்பது வரலாறு. மனிதர்கள் தாங்கள் வாழ்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதார திட்டத்தை சுய சிந்தனை மூலம் உருவாக்கி வாழ்கின்றபோது நாட்டிற்கு நாடு அது மாறுபடுகின்றது. அதனால் பிரிவு உண்டாகிறது சுயநலம் தோன்றி உலக மக்கள் சண்டையிட்டுக் கொள்ள நேரிடுகிறது. மனித வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

மனிதர்களால் உருவாக்கப்படுகின்ற பொருளாதார திட்டம் எந்த அளவிற்கு அகில உலக மக்களுக்கும்  வழிகாட்டியாய் இருந்திட  முடியும் என்பதும் மிக முக்கியமான நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டிய கேள்வி. அடுத்து,  மனிதர்களுடைய  சிந்திக்கும் திறனுக்கு ஓர் எல்லையுண்டு. எதிர்காலத்தில் மாறும் தேவைகளுக்கு ஏற்ப எவராலும் நீண்ட, நிலைத்த பொருளாதார கொள்கையை உருவாக்கிட இயலாது. இதனை கடந்த கால வரலாறு தெளிவாக மெய்பித்து இருக்கிறது.

ஏறத்தாழ 80 ஆண்டுகள் உலகை தனது கைப்பிடியில் வைத்திருந்த கம்யூனிசக் கொள்கை இன்று அழிந்து விட்டது. மேலும் எந்த ஒரு பொருளாதாரக் கொள்கையும் பெரும் மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்ததில்லை. இதனால் காலத்திற்கு ஏற்ப பொருளியல் தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகள், நிறைவு பெறாமலேயே இருந்து வருகின்றன. புதுப்புது கொள்கைகள் மனித சமுதாயத்தின் மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதித்துப் பார்க்கப்படுகின்றன.

உலகின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்திற்கு உள்நோக்கத்திற்கு வசதியாக பிற மக்களின் மீது தங்களின் பொருளாதாரத் கருத்துக்களைத் திணித்து வருகின்றனர் என்பதே முற்றிலும் உண்மை. புதிதாக ஒரு கருத்து உருவாகும் போது அது எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடியது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன; பாராளுமன்றம் கூச்சல் குழப்பங்களால் செயலிழந்து போகின்றது. புதிய புதிய கொள்கைகளால் மோசமான பாதிப்பு ஏற்படுகின்ற போது அக்கருத்தை உபதேசித்தவர்கள் ,  நடைமுறை படுத்தியவர்கள் ஒன்று உயிருடன் இருப்பதில்லை அல்லது அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. பாதிப்புக்கு உள்ளான மனிதர்களுக்கு ஏற்பட்ட  துன்பம் எவ்வகையிலும் துடைக்கப்படுவதும்  இல்லை. எத்தகைய இழப்பீடும் கொடுக்கப்படுவதும்  இல்லை. பல நேரங்களில் மனிதர்களால் உருவாக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் அவற்றை  உருவாக்குபவர்களின் சொந்த சுய சுரண்டல் மற்றும் இலாப நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன.  உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய நிலங்கள் வைத்திருக்கும் ஆளும் அரசியல்வாதி தனது நிலங்களுக்கு அருகில் அரசின் தொழிற் பேட்டைகளை அமைப்பது.

தனிமனிதனின் எண்ணத்தில் உதித்த பொருளாதாரக் கொள்கைகள் இவ்வாறெல்லாம் குறையுடையவைகளாக அளவிடப்படும்போது    யார்தான்  மனிதர்களின் பொருளியல் வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை அறிவிக்கக்கூடும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

எந்த வல்ல இறைவனால் இந்த உலகம் படைக்கப்பட்டதோ , யார்  இவ்வுலகில் ஓர் இயற்கைத் தன்மையை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கின்றானோ யாரின்  அறிவுரை உலகம் தழுவிய ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும்  நன்மையளிக்கக் கூடியதாக இருக்குமோ, அந்த இறைவனும் அவனது திருத்தூதர் மொழிந்த மொழிகளும்தான் பொருளாதார வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவைகளாக இருக்க முடியும்.  இக்கருத்தை இங்கிலாந்து நாட்டு பொருளியல் நிபுணர் ஆடம்ஸ்மித் தமது நூலில் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இறைவன் உருவாக்கிய இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி நாம் அறிய வேண்டியது நமது அறிவை விசாலப்படுத்த அவசியமாகிறது.

அப்படிப் பட்ட பொருளாதாரக் கோட்பாடுகள், வழிகாட்டுதல்கள் இஸ்லாமிய கொள்கைகளில் விரவிக்கிடப்பதை திரட்டி, வகுத்து,  தொகுத்து , தருவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். எல்லாம் வல்ல இறைவன் படைத்தவன் மட்டுமல்ல; பாதுகாப்பவன் மட்டுமல்ல; உபதேசிப்பவன் மட்டுமல்ல; தண்டிப்பவன் மட்டுமல்ல; உரிய முறையில்  நேர்வழி காட்டுபவனும் அவன்தான்.

இததகைய இறைவனின் வழிகாட்டுதல்களில் இறைவனும் அவனது திருத்தூதர் நவின்ற நன்மொழிகளின் அடிப்படையில் அமைவுற்ற   இஸ்லாமியப்  பொருளாதாரக்  கோட்பாடுகள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்  பல அரிய சாதனைகளை அவைகளை பின்பற்றப்பட்ட பிரதேசங்களில்  நிகழ்த்தியிருக்கின்றன; நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றன.  
  • வறுமை ஒழிப்புத்திட்டத்தை மேற்கொண்டு ஜகாத் மூலம் ஏழைகளுக்கு முறையாக விநியோகித்து அது வெற்றியும் பெற்றுள்ளது.
  • வாணிப நெறிமுறைகள் சீரிய முறையில் கையாளப்பட்டுத் தடையில்லா வர்த்தகம் நடைபெற உதவியுள்ளது.
  • வட்டியினை முழுமையாக ஒழித்துப் பொருளாதாரத் துறை தடையில்லாமல் எளிதாகச் செயல்பட ஏற்பாடு செய்தது.
  • சில சீர்திருத்தச் சட்டங்கள் செம்மையாகவும், இயற்கையாகவும் அமல் செய்ததன் மூலம் விவசாய உற்பத்தி பெருகி விவசாயிகள் தங்கள் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்தது.
  • கடன், கொடுக்கல், வாங்கல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.
  • முதன்முதலாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டதன் மூலம் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுத்தது.
  • நியாய விலை, நியாயமான கூலி, பொருளாதார நீதி போன்றவை முதன்முதலாகச் செயல் வடிவம் கொடுக்கப்பட்டன.
  • எடையில் , அளவில் நிகழ்த்தப்பட்ட மோசடிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. 

மேற்கூறிய அனைத்திலும் உலக வரலாற்றில் முதன்முதலாகச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது எதுவோ, அதுதான் இஸ்லாமிய பொருளாதாரத்  திட்டங்களாகும். இவைகளின் அடிப்படைகளாக இருந்தவைகளாக இஸ்லாமியப் பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டுவது 

1. திருமறையின் ஷரியத்
2. சுன்னாஹ் எனப்படும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள்

ஆகியவைகளாகும்.

இந்த ஆய்வில் நாம் விவாதிக்கவும் விவரிக்கவும்   இருப்பது முக்கியமாக கீழ்க்கண்ட அம்சங்களாகும். இவைகளைப் பற்றிய  நோக்கங்களை வரையறுத்துக் கொண்டால் நமது பாதைகள் எவை என்று நமக்கு விளங்கிவிடும். அவை:
  1. பொருளாதாரக் கோட்பாடுகளை பொதுவான மதங்களுடனும் – சிறப்பாக இஸ்லாத்துடனும் மாறுபட்ட கோணங்களில் ஒப்பிட்டுப் பொருத்திப் பார்ப்பதும்.
  2. இன்றைய தலைமுறையின் வாழ்வின் அம்சங்களில் இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் தாக்கம் யாவை என்பதையும்,
  3. இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகள் எவ்வாறு பொதுவான மனித சமுதாயத்துக்கும் தனி மனிதனுக்கும் தொடர்புடையதாகிறது என்பதும் சிறப்பாக இஸ்லாமிய நாடுகளிலும் சமுதாயங்களிலும் எவ்விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வதும்,
  4. இஸ்லாமிய பொருளாதாரம் என்பதன் விரிவான விளக்கத்தை அறிவதும்,
  5. இஸ்லாமியப் பொருளாதாரத்தை அரசியல் ரீதியாக நடைமுறையில் கொண்டு வருவது பற்றிய வழி முறைகளை எடுத்து இயம்புவதும்,
  6. இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகள், மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அறிவியல், வரலாறு, அறிவியல், கலைகள் தொடர்புடைய பிற கல்விகளோடு எத்தகைய  உறவு கொண்டிருக்கும் என்பதுடன் இத்தகையக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப் படாமல் அலட்சியப் படுத்தப்படும்போதோ முன்னர் அலட்சியப்படுத்தப் பட்டபோதோ  உலகம் படித்துக் கொண்ட பாடங்களையும் பட்டியலிட்டு எச்சரிப்பதும்  இந்த ஆக்கத்தின் அடிப்படை நோக்கங்களாக அமையும். இன்ஷா அல்லாஹ்.

தமிழ் மொழியில் இப்படிப்பட்ட ஆக்கங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.  இயன்றவரை சுவை கூட்டி இதைப் பரிமாற நினைக்கிறேன்.  சுவைப்பவர்களுக்கு சலிப்புத்தட்டும்போது  தொட்டுக்கொள்ள ஊறுகாய்த் துண்டுகளும் தரப்படும். கேட்டும் பெற்றுக்கொள்ளலாம். தொடரின் இடையில் படிப்பவர்கள் எழுப்பும்  கேள்விகள் மற்றும் விவாதங்களே இந்ததொடருக்கு மேலும் சுவை கூட்டுவதாக அமையும் .  அவற்றை அன்புடன் வரவேற்கிறேன்.

இவைகளைப் பற்றி இனித்  தொடர்ந்து விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ்.

இது வளரும் பொருளாதாரம்.....
இபுராஹீம் அன்சாரி

28 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்புதிய தொடருக்கும் வரவேற்பும் துஆவும்!

இன்சா அல்லாஹ் நிய்யத்தின்படியே நூலுருப் பெறவும் உங்கள் சரீர நலன் தொடர்ந்து அதற்கு ஈடு கொடுக்கவும் துஆச் செய்கிறேன்.

Abdul Razik said...

"இததகைய இறைவனின் வழிகாட்டுதல்களில் இறைவனும் அவனது திருத்தூதர் நவின்ற நன்மொழிகளின் அடிப்படையில் அமைவுற்ற இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பல அரிய சாதனைகளை அவைகளை பின்பற்றப்பட்ட பிரதேசங்களில் நிகழ்த்தியிருக்கின்றன; சரியாகச்சொன்னீர்கள்
இன்னும் சில பிரதேசங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு தந்தால் நன்றாக இருக்கும்.

Social averages derived from the Quran and Sunnah, Zakat tax as the basis of Islamic monetary policy. This kind of policy is not governing by any nation. I think a few may be follow this, Please let us an example. We are expecting lot of information about this topic through Islamic view. We hope Insha Allah this article will create consciousness among all people. Jazakallah.


Abdul Razik
Dubai

Unknown said...

பதிப்புக்கு நன்றி. இம்முயற்சி வெற்றி பெற வல்ல ரஹ்மான் துணை புரியட்டும்.இன்றைய காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடிக்கு இஸ்லாம் கூறும் வட்டில்லா வங்கி முறையே ஒரே தீர்வு என்று உலக நாடுகள் சிந்திக்க துவங்கி விட்டன.சமீபத்திய பேட்டியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பராவ் " வட்டியில்ல வங்கி முறையை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வதாக " கூறியுள்ளார். பொருளாதாரம் படிக்கும் நம் மாணவர்கள் இஸ்லாமிய வங்கி முறையையும் படிக்க வேண்டும் . அமீரகத்தில் ஷார்ஜாவில் இப்படிப்பு உள்ளது. இவ்விழிப்புணர்வு தொடர் நிச்சயமாக சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் அரும்பணி.இப்ராகிம் அன்சாரி காக்காவின் எழுத்து பயணத்தில் மற்றொரு மைல்கல்லாய் இத்தொடர் அமையும் வாழ்த்துக்கள்.
-------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்,
அமீரக சமூகநீதி அறக்கட்டளை.

Unknown said...

//எந்த வல்ல இறைவனால் இந்த உலகம் படைக்கப்பட்டதோ , யார் இவ்வுலகில் ஓர் இயற்கைத் தன்மையை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கின்றானோ யாரின் அறிவுரை உலகம் தழுவிய ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் நன்மையளிக்கக் கூடியதாக இருக்குமோ, அந்த இறைவனும் அவனது திருத்தூதர் மொழிந்த மொழிகளும்தான் பொருளாதார வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவைகளாக இருக்க முடியும். இக்கருத்தை இங்கிலாந்து நாட்டு பொருளியல் நிபுணர் ஆடம்ஸ்மித் தமது நூலில் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இறைவன் உருவாக்கிய இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி நாம் அறிய வேண்டியது நமது அறிவை விசாலப்படுத்த அவசியமாகிறது.//

Assalamu Alaikkum

A great opportunity to learn about financials and economy based on Islam. May Allah accept the author's intentions and help make our intentions in following financials and economy based on Sharia, InshaAllah.

Regards

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காக்கா,

இத் தொடர்
பொருளாதாரக் கொள்கைகளின்
இருட்டுப் பிரதேசித்தில்
பாய்ச்சட்டும் சுடர்

மனிதன் வகுத்தப்
பொருளாதார பூதத்தின்மேல்
மார்க்கக் கொள்கைகளால்
அத்தியாயங்கள்
கத்திக்காயங்க ளாகட்டும்

கொடுக்கல் வாங்கலின்
கைனெட்டிச் எனர்ஜிபற்றி 
மட்டுமறிந்த 
என்போன்ற
பெளதிக தலையர்களுக்கும்
புரியும்படி
பரிவோடு சொல்லவும்!

வாழ்க ஈனா ஆனா காக்கா!
வளர்க அவர்களின் தொண்டு!

Iqbal M. Salih said...

Masha Allah!

One of the worthful articles in A.N. is commenced as Islamic Economic theory by Doctor Ibrahim Ansari. A.N. readers now could come to know that why I named him as "Doctor" before he obtain phd.

besides, when I've taken a seminar class during at +2 and given lectured about Adam Smith from his Adavanced Economic theory. still I do remember the initial lines as "Economics is the study of how people and society end up choosing with or without the use of money, to employ scarce productive resources to produce various commodities..."

my class mate 'padikkattukal Zakir' could recall his memory about our beloved professor Abdul khader during those lectures in 12th grade.

Doctor Kakka, I am pretty sure that You will provide a highly valuable episodes to our community regarding Islamic Economics, Insha Allah!

அதிரை சித்திக் said...

இப்புதிய தொடருக்கும் வரவேற்பும் துஆவும்!

இன்சா அல்லாஹ் நிய்யத்தின்படியே நூலுருப் பெறவும் உங்கள் சரீர நலன் தொடர்ந்து அதற்கு ஈடு கொடுக்கவும் துஆச் செய்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உங்களின் கட்டுரையை வாழ்த்தி வரவேற்றும் அனைத்து நல்லுங்களுடன் நானும் இணைந்து வாழ்த்தி வரவேற்கிறேன் !

நூல் வடிவம் என்பது உறுதியான ஒன்றாகிவிட்டது இன்ஷா அல்லாஹ் !

12வது வருஷத்தின் 12வது மாதமும் நிறைவுக்கு வருதாமே... அதான் இருக்கிறதை சரிபாருன்னு போட்டு வாட்டியெடுக்கிராய்ங்கள் கம்பெனியில் ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

Al hamadulillah
Welcome our Prof.Doctor Ebrhaim Ansari Kakka, ASSALAAMU ALAIKKUM.

As I had studied "Economics"in my curriculum of P.U.C and B.com, I can recall the lectures and compare with your Islamic Economics. It will be useful for me to discuss and debate with Non-Muslims regarding this subject too. Already, By Mercy of Allah, I had argued with Non-Muslims in America (Even in Church)regarding ONE GOD theory. Now, your article will boost me to have wealth of information on ISLAMIC ECONOMICS so as to argue with my Non-Muslim Friends who are in Financial Divisions.

Surely, your this article too is to be printed and published thru AN, In Sha Allah. If it happens, I will buy and give to students who will study Economic subject. In Sha Allah, who knows one day anyone can OBTAIN PHD by analyzing your forthcoming book (ISLAMIC ECONOMICS).

I request our brother Zahir Hussain (Malaysia)to recommend this book (if published in future in English Language In Sha Allaah)to Malaysian University where ISLAMIC BANKING is taught as an MBA degree.

Jazaakkallah Khairan for you and Adirai Nirubar and supporters by writing valuable comments.

KALAM SHAICK ABDUL KADER said...

//என்போன்ற
பெளதிக தலையர்களுக்கும்
புரியும்படி
பரிவோடு சொல்லவும்!//

இன்ஷா அல்லாஹ், பாருங்கள் கவிவேந்தரே! இத்தொடரைப் படிக்கப் படிக்க உங்கள் உள்ளம் சத்யமாக உள்ளுணர்வில் சொல்லும்:” அன்புச் சகோதரர்கள் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், ஜாஹிர் பின் அபுல் ஹைர் மற்றும் அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் ஆகியோரைப் போல் நானும் பொருளாதாரத்தைப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்றிருக்கலாம்” என்று.

பரவாயில்லை. இன்று முதல் அதிரை நிருபர் என்னும் பல்கலைக்கழகத்தில் டாக்டர் இப்றாஹிம் அனசாரி காக்கா அவர்களின் இவ்வகுப்பைத் தவறாமல் கவனித்து வந்தீர்களேயானால், அவர்கள் நடத்தும் அருமையான முறையின் காரணமாக நீங்கள் இதுவரை கற்றுக் கொள்ளாதிருந்த பொருளாதாரப் பாடம் இனிப்பாய் இனிக்கும்; அவ்வினிப்பை எல்லாம் கவிதையில் வடிப்பீர்கள்!

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா:
தங்களின் உடல்நிலையும் நேரமும் ஒத்துழைத்தால், அவர்களின் உற்ற நண்பர் என் தமிழ்ப்பேராசான் அவர்களின் பரிந்துரையினால் கா.மு.கல்லூரியில் “பொருளாதாரப் பாடத் துறையில்” வாரம் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுக்கலாம் என்று எண்ணத்தில் உதித்த கருத்தை ஈண்டுப் பதிவு செய்கிறேன். எங்கட்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இத்தலைமுறைக்குக் கிடைக்கட்டும். எங்கட்குப் பாடம் நடத்தியவர்களை விட அதிகமாகத் தங்களிடம் திறமையும்- பாடம் நடத்து அருமையும் பளிச்சிடக் காண்கின்றேன்; இதனைத் தாங்கள் அ.நி.யில் தொடக்கமாக ஆக்கம் எழுதிய பொழுதிலிருந்து அடியேன் அவதானித்து வருகின்றேன்.

y.m.ansari said...

சகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்களே நமது
அதிரை இஸ்லாமிய சமுதாயத்தின் பொருளாதரத்தில் முக்கிய பங்காற்றும் பெண் குமாருக்கு வீடு கட்டியாக வேண்டிய நிர்பந்தம் பற்றி தாங்கள் குர்'ஆன் ஹதீஸ் அடிப்படயில் ஆய்வை தந்தால் நன்மையாக இருக்கும்

y.m.ansari said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

"எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ.. அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.

அந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப் பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்து கொண்டிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்தியன்.

இப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வொர் இந்தியத் தலையும் தாங்குகிறது”

-கவிப்பேரரசு வைரமுத்து, “ஆனந்த விகடன்” வார இதழில்

”உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே”

-கவிப்பேரரசு வைரமுத்து, “ஆனந்த விகடன்” வார இதழில்

குறிப்பு: டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மாணவரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் போன்றோர் பகுத்தறிவு மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் நெருங்கும் காலம் நெருங்கி வருகின்றதோ? மாஷா அல்லாஹ். அவருக்கு அல்-குர் ஆன் மொழிபெயர்ப்பை அனுப்பி வைத்தவனும், டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சொல்லி அவர்களின் மாணவராம் அற்புதக் கவிஞர்க்கு அல்-இஸ்லாத்தை எடுத்துச் சொல்லவும் வேண்டிக் கொண்டவனாகிய அடியேனின் அவா நிறைவேறும் என்ற நம்பிக்கையில்...

Ebrahim Ansari said...

ஒரு தகவலுக்காக நண்பர் கவியன்பன் அவர்களே!

கடந்த வாரம் முத்துப் பேட்டைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த
கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து மனு நீதி நூலின் இரண்டு பிரதிகளைக் கொடுத்தேன். படித்துவிட்டுக் கருத்துரை தருவதாக சொல்லி இருக்கிறார். சென்னை சென்று இருந்தபோதும் சில முக்கியமாணவர்களிடம் நூல் சென்று சேர்க்கப்பட்டு இருக்கிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

நான் அசர் தொழுது விட்டு வந்து இக்கருத்தை எழுதலாம் என்று நினைத்தேன்; மாஷா அல்லாஹ். நீங்கள் முந்திக்கொண்டீர்கள்-செயலிலும்! இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இப்படிப்பட்ட பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள். டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மூலம் இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அரசியலார்க்கும் இந்நூல் சென்றடைய முயற்சிக்கவும். தற்பொழுது டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ம.தி.மு.க வில் இருப்பதால் வைகோ போன்றவர்கட்கும் போய்ச் சேரும். இன்னும், தொல்.திருமாவளவன் அவர்களிடம் இந்நூல் போய்ச்சேர வேண்டும்; அவரிடம் நெருக்கமாக உள்ள எழுத்தாளார் ஆளூர் ஷாநவாஸ் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்லதொரு அருமையான சிந்தனையைத்தூண்டும் ஆக்கத்தை தொடங்கியமைக்கு இபுறாஹிம் அன்சாரி காக்காவுக்கு வாழ்த்துக்களும், து'ஆவும்.

இயற்கையின் மூலம் அரபு நாடுகளுக்கு இறைவன் கொடுத்த வற்றாத செல்வங்களான பெட்ரோலியக்கனிமப்பொருட்களை தன் மண்ணில் அபரிமிதமாக அவைகள் பெற்றுள்ள காரணத்தால் வேறு வழிகளில் தன் நாட்டின் வருமானங்களை பெருக்கிக்கொள்ள அவசியம் இல்லை என்பதனால் தான் நாட்டின் வங்கிகளிலும், இன்னும் பிற இதர தொழில்துறைகளில் பெரும் கேட்டை விளைவிக்கும் வட்டி வாங்குதல், கொடுத்தல் முறையை அவைகள் கடைபிடிக்கவில்லையா?

அல்லது நம் மார்க்கம் என்றோ அவற்றின் கேட்டை விளக்கி அவற்றை முற்றிலும் தடை செய்யச்சொன்னதால் தான் அவைகள் வட்டியின் பக்கம் தன் கவனத்தை செலுத்தவில்லையா?

எல்லாவற்றிலும் வட்டி விகித முறையை கடைபிடிக்கும் பெரும் வட்டிமுசாவானா நம் நாடு ஏன் இன்னும் விவசாயத்திலும், தொழில்துறைகளிலும், மின் உற்பத்தி, தண்ணீர் பங்கீடு, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானங்களில்(பர்கேப்பிட்டா), சுகாதரத்துறையில் மற்றும் இன்ன பிற முக்கியத்துறைகளிலும், மக்களுக்குண்டான அத்தியாவசிய அளிப்புகளிலும் தன்னிறைவு அடைய முடியவில்லை?

விண்ணில் செயற்கைக்கோள் விடும் அளவுக்கு இன்னும் தொழில்நுட்பத்தில் போதிய வளர்ச்சியடையாமல் இருக்கும் வளைகுடா நாடுகள் வட்டியை எதிலும் முன்னிறுத்தாமல் செயற்கைக்கோள்களை வளர்ச்சியடைந்த நாடுகளின் துணையுடன் அல்லது வாடகைக்கேனும் செலுத்தும் அளவுக்கு தன் பொருளாதார திறனை/கையிறுப்பை அவைகள் எப்படி வேறு நாடுகளிடம் கடன் ஏதும் வாங்காமல் பெற முடிகின்றது?

அப்போ, வட்டி என்பது ஒரு பெரும் கண்கட்டு வித்தையாகவல்லாவாத்தெரிகிறது?????

"வாடிய‌ ப‌யிரைக்க‌ண்டு வாடினேன்" என்ற‌ பாட்டையெல்லாம் மேற்கோள் காட்டாம‌ல் ந‌ம் நாடு உண்மையான‌ ஏழை, எளிய‌ ம‌க்க‌ளுக்கு மானிய‌ங்க‌ளையும், இல‌வ‌ச‌ங்க‌ளையும் அள்ளி,அள்ளி கொடுக்காம‌ல் அவ‌ர்க‌ள் வாழ்நாட்க‌ளில் எங்கு சென்றாலும் க‌டைசி வ‌ரை வ‌ட்டி அற‌வே இல்லாத‌ க‌ட‌ன்க‌ளை கொடுத்துத‌வ‌லாமே?

குறிப்பாக, ந‌ம் நாட்டில் வ‌ட்டித்தொழில் எங்கும் ப‌ர‌வ‌லாக வண்ணமில்லா கொடிக்க‌ட்டி பட்டொலி வீசி ப‌ற‌ந்து கொண்டு தான் இருக்கிற‌து. பணப்புழக்கங்கள் அப்ப‌டி இருந்தும் முக‌ப்புத்த‌க‌த்தில் (ஃபேஸ் புக்) 'மின்சார‌ம் இல்லாத‌ நாடு - த‌மிழ்நாடு என்றும் 'இருளும், இருள் சார்ந்த நிலம் - தமிழ்நாடு' என்ற‌ கேவ‌ல‌மான‌ க‌ருத்துக்க‌ளும், அவ‌ல‌ங்க‌ளும் இன்னும் ப‌ர‌விக்கொண்டு தான் இருக்கின்ற‌ன‌வே? கார‌ண‌ம் என்ன‌?

என்னுடைய‌ மேற்க‌ண்ட‌ கேள்விக‌ளுக்கு இபுறாஹிம் அன்சாரி காக்கா அவர்கள் ந‌ல்லதொரு ப‌திலை த‌ர‌ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் மிகவும் பயனுள்ள தொடர் படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறோம் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இத் தொடரும் புத்தகமாக வருவதற்கு துஆ உடன் வாழ்த்துக்கள்

Shameed said...

தங்களின் கட்டுரையை வாழ்த்தி வரவேற்கின்றோம் இது புஸ்தக வடிவம் பெற்று வெளியீட்டு விழாவில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்குகின்றது

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்துப் பதிந்த அத்தனை அன்பர்களுக்கும், தொடரை வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் மிகுந்த நன்றி.

தம்பி நெய்னா அவர்களுக்கு, வட்டி பற்றிய விபரங்கள் எழுதப்படும்போது தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இயன்ற அளவு பதில் தருகிறேன். This is a wide subject and requires to mention world wide experiences and examples . Please bear with me. இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் Y.M . Ansari அவர்கள் கேட்பது

//அதிரை இஸ்லாமிய சமுதாயத்தின் பொருளாதரத்தில் முக்கிய பங்காற்றும் பெண் குமாருக்கு வீடு கட்டியாக வேண்டிய நிர்பந்தம் பற்றி தாங்கள் குர்'ஆன் ஹதீஸ் அடிப்படயில் ஆய்வை தந்தால் நன்மையாக இருக்கும்//

நாம் எழுதப் போவது பொதுவான பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள். இதில் பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய செய்திகள் வரவிருக்கின்றன. பெண்களுக்குத் தான் வீடுகளைக் கொடுக்கவேண்டும் என்கிற - உங்கள் வார்த்தையிலேயே - நிர்ப்பந்தம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். - அதிரை போன்ற ஊர்களில் சமுதாயப் பழக்கமாகப் போனதாக தென்படுகிறது.

இது மார்க்கத்தின் சட்டமா என்பதை இந்தத் தளத்தில் பல மார்க்க சட்டங்களை ஆராய்ந்து தரும் சகோதரர் அலாவுதீன் போன்றவர்கள் ஆய்ந்து கூறவேண்டுகிறேன்.எண்ணை பொருத்தவரை நான் படித்து அறிந்தவரை சட்டமல்.
சட்டத்துக்கும், பழக்கங்களுக்கும் வித்தியாசம் உண்டு. நாம் சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும். நமது துரதிஷ்டம் பழக்கங்களைப் பின் பற்றுகிறோம்.

நமக்கு அடுத்து இருக்கிற முத்துப் பேட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர்,கூத்தா நல்லூர், பொதக்குடி மற்றும் மாவட்டத்தில், மாநிலத்தின் எல்லா ஊர்களிலும் பெண்களுக்கு வீடு கொடுப்பது என்பது நடை முறையில் இல்லை. அதிரை, காயல் பட்டினம், கீழக்கரை, நாகூர், காரைக்கால், பரங்கிப் பேட்டை, பாண்டிச்சேரியில் சில பகுதிகள் ஆகிய ஊர்களைத்தவைர வேறு எங்கும் இந்தப் பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

நமது ஊரிலேயே நெசவுகாரத்தெருவுக்கு இந்த வசவு இல்லை. அங்கு ஆண்களுக்கே வீடு.

நமது ஊரிலும் பெண்களுக்கே வீடு கொடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்கு பல முறை எதிர்ப்புக்குரல்கள் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனாலும் பெண்கள் தாயின் நிழலில்- பாதுகாப்பில் வளர்ந்தவர்கள் அவர்களைத் தாயை விட்டு ப் பிரித்து அனுப்புவது பல பிரச்சனைகளை உருவாக்கலாம் என்பதால் காலம் காலமாக இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.இந்த முறை பெண்களுக்கு அனுகூலமானது- பெண்களுக்கு பாதுகாப்பானது - தாய்மார்களின் ஆதரவைப் பெற்றது என்பதாலேயே வேரூன்றி வளர்ந்து இருக்கிறது. நாமும் நமது பெண்பிள்ளைகள்தானே என்பதால் அவர்களைப் போற்றிப் பாதுகாக்கவும், பேணவும் முக்கியத்துவம் கொடுத்து இதை விவகாரமாக்காமல் இருந்து வருகிறோம்.

பெண்களுக்கு சொத்துரிமை என்பதுதான் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் நாம் குறிப்பிட முடியும். அது வீடாகவும் இருக்கலாம், மற்ற சொத்துக்களாகவும் இருக்கலாம். வீடுதான் என்பது நமது சகிப்புத்தன்மைக்கும், சகோதரிகள் மீது காட்டப்படும் வாஞ்சை மற்றும் அன்பையும் சம்பந்தப்படுத்தியது மட்டுமே என்றே நான் நம்புகிறேன். இது பற்றி மேலதிக விபரங்களைத்தர மார்க்க அறிஞர்களே பொருத்தமானவர்கள்.

ஜசக்கல்லாஹ்.

Ebrahim Ansari said...

அன்புள்ள கவியன்பன் அவர்களுக்கு,

தாங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. திரு. கி. வீரமணி, கொளத்தூர் மணி, ஆளூர் ஷா நவாஸ் மூலம் திருமா போன்றவர்களுக்கு பிரதிகள் கொடுக்கப்பட்டுவிட்டன. விடுதல்லை சிறுத்தைகள் கட்சியின் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தரப்பட்டுவிட்டது. இன்று திருத்துறைப் பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உலகநாதனைக் ( இந்தியா கம்யூனிஸ்ட்)காணப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

ஈரோட்டில் நடைபெற இருக்கும் தி. க. வின் மனுநீதி எரிப்பு மாநாட்டில் பிரதிகள் , பிரதிநிதிகளுக்குக் கிடைக்கச் செய்ய கவிஞர் சபீர் அவர்களின் ஆலோசனைப்படி ஒரு விற்பனையாளர் மூலம் ஸ்டால் திறக்க ஏற்பாடாகி வருகிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு இந்தியக்குழந்தை தன் தாயின் கருவிலிருந்து வெளியாகி கண் திறந்து உலகை பார்க்கும் முன் அக்குழந்தையின் தலையில் இத்தனை ஆயிரம் ரூபாய்க்கடனை சுமத்தி கடன்காரக்குழந்தையாக ஒவ்வொரு குழந்தையும் இங்கு பிறக்க வைக்கப்படுவதேன்?

இஸ்லாமியப்பொருளாதாரத்தின் பலனை இவ்வுலகமே வியந்து புகழ்ந்து அதை நடைமுறைப்படுத்தி பூரித்து வரும் இவ்வேளையில் நம்மூரில் மட்டும் இன்னும் சிரமப்பட்டு மல்லுக்கட்டி (பெண்ணுக்கு வீடு கொடுத்தல்) வருவதேன்?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அறிஞரின் தொடர் ஆக்கம் வெற்றிபெறவும் தொடரவும் தூஆ செய்கிறேன். அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்.

Yasir said...

ஒழுங்காக சீரமைக்கப்பட்ட வாய்க்க்காலில் ஒடும் தண்ணீர்போல் உங்கள் கட்டுரை அருமையாக /நிதானமாக / பலமாக பயணிக்க ஆரம்பித்துள்ளது...இக்கட்டுரை இஸ்லாம் உலகப்பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது - ஏற்படுத்தும் என்பதைப்பற்றி புட்டுப்புட்டு வைக்கப்போகின்றது நம்பிக்கை எனக்குண்டு ஏனென்றால் கட்டுரை ஆசிரியரின் திறமை அப்படி...வாழ்த்துக்களும் துவாக்களும்

அப்துல்மாலிக் said...

பொருளாதாரம் பற்றி இஸ்லாமிய வழியில் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன், தொடருங்க காக்கா இன்ஷா அல்லாஹ்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இப்புதிய தொடருக்கும் வரவேற்பும் துஆவும்!

நல்லதொரு அருமையான சிந்தனையைத்தூண்டும் ஆக்கத்தை தொடங்கியமைக்கு இபுறாஹிம் அன்சாரி காக்காவுக்கு வாழ்த்துக்கள்

y.m.ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்களே எனதுகருத்து பதிவிற்கு பதில் தந்தமைக்கு சந்தோஷம் தங்களின் பொருளாதார கட்டுரை ஆய்விற்கு இலங்கை அக்கரைபற்று என்ற ஊரில் நடந்த ஒரு சொற்பொழிவின் வீடியோ கிளிப்பை பார்க்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன் தங்களின் இந்த நல்ல முயற்ச்சிக்கு
அல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியை தருவானாக

http://srilankamoors.com/Media-centre/Veedum-sheetham-ahumaa.html

y.m.ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் மு. செ. மு. நெய்னமுஹம்மது அவர்களே உங்களின் ஆதங்கம்


\\இஸ்லாமியப்பொருளாதாரத்தின் பலனை இவ்வுலகமே வியந்து புகழ்ந்து அதை நடைமுறைப்படுத்தி பூரித்து வரும் இவ்வேளையில் நம்மூரில் மட்டும் இன்னும் சிரமப்பட்டு மல்லுக்கட்டி (பெண்ணுக்கு வீடு கொடுத்தல்) வருவதேன்?\\ பார்த்தேன

அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான நமதூர் பழக்கதிர்கு எதிராக செயலாற்ற அணி திரள்வோம். அநீதிக்கு எதிராக நபி இப்ராஹிம் அலைஹிசலாம் தனிமனிதனாக போராடினார்கள். அதுபோல் தீமைக்கு எதிராக போராடுவோம் தாங்கள் கீழ்க்கண்ட விடியோவை பார்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://srilankamoors.com/Media-centre/Veedum-sheetham-ahumaa.html
வஸ்ஸலாம்

y.m.ansari said...

26 மார்ச், 2013 9:23 PM Reply
சகோ. y.m. ansari,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பெண்ணுக்கு வீடு கொடுப்பது சம்பந்தமான கலந்துரையாடலை இங்கே பதிந்தற்கு நன்றி. மேலே சொல்லப்பட்ட காரணங்கள் மார்க்க வழிகாட்டுதல்களுக்கு எதிரானவை என்ற போதிலும், சொல்லப்படும் காரணங்கள் சரியா என்று முதலில் பார்ப்போம்.

பெண்ணுக்கு எதற்காக வீடு கொடுக்கப்படுகிறது என்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்கள் சரியாகப்படவில்லை.

முதலாவது, பெற்றோர்களின் பாதுகாப்பில் வளர்ந்த பெண், தங்களை விட்டு பிரியக்கூடாது என்ற அடிப்படையில் வீடு கொடுக்கப்படுகிறது என்ற காரணம் சரியானது கிடையாது. தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் முடிந்த பிறகு பெண் தன் கணவணுடன் அவன் வாழும் ஊருக்கே அல்லது தேசத்திற்கே சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெண் விட்டார் வீடு கொடுத்தாலும் பெண் தனது பெற்றோருடன் இருக்கும் வாய்ப்பு மிக குறைவு. தனது மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பினால் அதற்கு வீடு தான் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. தங்கள் வசிக்கும் வீட்டில் மணமகளை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னாலே போதும். இது தான் காரணம் என்றால் ஒரு விட்டை பல பெண் பிள்ளைகளுக்கு பங்கு போட்டு கொடுக்கலாம். இது சரியான காரணம் இல்லை என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. பெற்றோரிடம் வீடு வாங்கிய பல பெண்கள் அந்த வீட்டில் கூட வசிக்காமல் கணவன் வீட்டில் தான் வசிக்கிறார்கள் அல்லது கணவன் விட்டில் அதிகமாக வசிக்கிறார்கள் என்பது வேறு செய்தி.

இரண்டாவதாக சொல்லப்படும் காரணமான சொத்துரிமை என்பது இருக்கிறது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. ஆனால், பெண்ணுக்கு என்று திருமண நேரத்தில் கொடுக்கப்படும் வீடு சொத்துரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்படவில்லை.சொத்துரிமை என்பது பெற்றோர்களுக்கு இருக்கும் சொல்வங்களை மார்க்க காட்டிய வழிமுறையில் பிரித்து அனைத்து பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும். இதை தந்தை தான் விரும்பும் நேரத்தில் செய்யலாம். மரணத்திற்கு முன்னர் செய்தால் போதுமானது. ஆனால், பெண்ணின் திருமண நேரத்தில் கொடுக்கப்படும் அல்லது கொடுப்பதாக மறைமுகமாகவே அல்லது நேரடியாகவே சொல்லப்படும் எந்த பொருளும் வரதட்சணை என்ற கொடிய பாவத்திலேயே வரும. சொத்துரிமை என்ற அடிப்படையில் வீடு கொடுக்கப்படுகிறது என்றால், ஆண் பிள்ளைகளுக்கு ஏன் வீடு கிடைப்பது இல்லை? இது பச்சை வரதட்சணை.

தனது சகோரிகளை திருமண செய்து கொடுக்க, தங்களின் வாழ்க்கையை (திருமணத்திற்கு முன்பும் பின்பும்) இழந்து வெளிநாடுகளில் அவதிப்படும் சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்கள், விரும்பிய கொடுக்கிறீர்கள் என்று? அவர்களின் கண்ணீர் உங்களுக்கு விடை தரும்.

வரதட்சணை பேயை அடித்து விரட்ட வேண்டுமானால் ஊரில் வீற்று இருக்கும் போலி இஸ்லாமிய சங்ககளை புறக்கணித்து நபிவழி திருமணங்களை மக்கள் நடத்த முன்வர வேண்டும். ஊரில் இருக்கும் சங்கங்கள் நபிவழி திருமணத்தை மட்டும் நடத்தும் என்று நம்பி இருந்தால் கியாமத் வரை இதே நிலை தான் தொடரும் என்பதில் சந்தோகம் இல்லை (தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் நிர்வாகிகளாக இருந்தாலும் சரியே!).

இது குறித்து ஒரு சிறிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது - http://www.adiraitntj.com/2013/03/blog-post_26.html


இந்த ஆக்கத்திலேயே அல்லது மேலே உள்ள ஆக்கத்திலேயே இதை பற்றி விவாதிக்க விரும்புபவர்கள் விவாதிக்கலாம்.

இறுதியாக நாம் இது குறித்து மார்க்க வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரு ஆக்கம் வெளியிட தயாராக உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு