Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள் - உடையால் உயர்ந்தேன்! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2012 | , ,

தொடர் : 21

இருபது வயது மதிக்கத் தக்க அந்த இளம்பெண், ஜேன், அந்த Quick Mart ஆடை விற்பனைக் கடையில், வயதான தாய்மார்கள் அணியும் நீண்ட கவுன்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தாள்.

கடைச் சிப்பந்தி, சலாம் வஹ்ஹாப் என்ற லெபனானி, அவளைப் பார்த்து வினயமாகக் கேட்டான்:  “உங்கள் பாட்டிக்கு கவுன் தேடுகிறீர்களா?”

சட்டென்று திரும்பிய அவ்விளம்பெண், தனது முகத்தில் சிறு சினத்தைப் பிரதிபலித்தவளாகப் பார்த்தாள். பின்னர் அமைதியுடன், “இல்லையில்லை.  எனக்குத்தான்!” என்று பதில் கூறிய ஜேனை வியப்புடன் பார்த்தார் அந்த முஸ்லிம் சிப்பந்தி.  அவளேகூட, நீண்ட கவுன் ஒன்றைத்தான் அணிந்திருந்தாள்.

‘ஏன் அப்படிப் பார்க்கிறாய்?’ என்ற கேள்வியை முகபாவனையில் காட்டிய அவ்விளம் பெண்ணிடம் விளக்கத் தொடங்கினார் சலாம்:  “நாங்கள் முஸ்லிம்கள்.  என் தங்கை, தாய் அனைவரும் இப்படித்தான் நீண்ட கவுனை வீட்டில் அணிவார்கள்.  அது சரி, நீ முஸ்லிமா?” என்று கேட்டு வைத்தார்.

தன்னைப் பார்த்து, அன்றுவரை, யாரும் அப்படிக் கேட்டதே இல்லை.  அந்தச் சிப்பந்தியின் திகைப்பிற்குரிய காரணத்தை அறிவதற்காக இப்படிக் கேட்டாள்: “இதுவரை என்னிடம் யாரும் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டதேயில்லை!  நீ ஏன் கேட்கிறாய்?”

“இல்லை; உனது உடையானது உன் ஒழுக்கத்தின் அடையாளமாகத் தென்படுகிறது!  இன்றைய அமெரிக்கப் பெண்களின் உடைக்கும் உனது உடைக்கும் பெரிய வித்தியாசம் தென்படுகிறது!  அதனால்தான் கேட்டேன்.  அது மட்டுமன்று; எனது மார்க்கமான இஸ்லாம் இத்தகைய உடையைத்தான் பெண்கள் அணியவேண்டும் என்று வலியுறுத்துகின்றது” என்று உணர்வு பொங்கக் கூறினார் சலாம்.

“இஸ்லாம்?!”  அவ்விளம்பெண்ணின் முகத்தில் ஆர்வத்தின் ரேகைகள் படர்ந்தன!

சலாம், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு விவரிக்கத் தொடங்கினார்:  “ஆம்; நாங்கள் மார்க்கமாகப் பின்பற்றும் இஸ்லாம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, குறிப்பாக உடை விஷயத்தில்.”

“அப்படியானால், அந்த மார்க்கம் பற்றி நான் அறிவது எப்படி?” என்று கேட்ட ஜேனுக்கு, தனக்கு அறிமுகமான இஸ்லாமிய நூலகம் ஒன்றின் முகவரியைக் கூறினார் சலாம் வஹ்ஹாப்.  

“அந்தச் சகோதரனின் பரிந்துரையின்பேரில், அடுத்துள்ள நூலகத்திற்குச் சென்று, இஸ்லாம் பற்றிய சில நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.  அவற்றுள் குறிப்பாக என்னைக் கவர்ந்தவை, உலகறிந்த இஸ்லாமியப் பிரச்சாரகர் அஹ்மத் தீதாத் அவர்களின் நூல்கள்” என்று தன் சத்தியப் பயணத்தின் தொடக்கம் பற்றி விவரிக்கத் தொடங்கிய ஜேன், மிக விரைவிலேயே இஸ்லாமிய மார்க்கத்தால் கவரப்பட்டு, 1988 ஆம் ஆண்டிலிருந்து பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவரானார்!

1984 ஆம் ஆண்டு அலபாமாப் பல்கலைக் கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச் சத்துப் பிரிவில் (Food & Nutrition) இளங்கலைப் பட்டம் பெற்றவர் சகோதரி ஜேன்.  ஆண்டுக்குப் பதினெட்டாயிரம் அமெரிக்க டாலர் சம்பலத்தில் பணியமர்வு பெற்றிருந்தார்!  இயல்பாகவே, அமெரிக்கக் கிருஸ்தவ உணவு, உடைப் பழக்கங்களில் ஒரு வித வெறுப்பைக் கொண்டிருந்தார் ஜேன்.

ஜேனின் தாய் ஒரு பள்ளிக்கூடத்தில் கிருஸ்தவ மதக் கல்வியைப் பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியை!  தந்தையோ, அமெரிக்க அரசாங்கத்தின் FBI (Federal Beurau of Investigation) அதிகாரி!  அவர்களிடமிருந்து ஜேனுக்கு எதிர்ப்பு எப்படி இருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.

“ஏண்டீ ஜேன்!  உலகம் என்ற இதே இடத்தில் தோன்றியவள்தானா நீ?  அல்லது, வேறு ஒரு planet க்குப் போய் வந்துள்ளாயா?  உன்னில் ஏன் இந்த மாற்றம்?  நாங்களெல்லாம் உன் பெற்றோர் இல்லையா?  உன் வாழ்வின் மிகக் கீழ்த்தரமான போக்கில் போய்க்கொண்டிருக்கிறாய் நீ!” என்று பொரிந்து தள்ளினாள் தாய்.

“இஸ்லாம்?!  இந்த உலகத்தில் எனக்கு மிக வெறுப்பானது அதுதான்!  அதை என் மகள் தேர்ந்தெடுத்தாளா?  என்னை விட்டு என் மகள் களவாடப்பட்டுவிட்டாள்!  அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் முஸ்லிம்கள் அவளை ‘ஹைஜாக்’ பண்ணிவிட்டார்கள்!”  அதிர்ந்து போனார் அப்பா.

ஜேன் தன் பெற்றோராலும், உறவினர்களாலும், தோழியராலும்கூட வெறுத்து ஒதுக்கப்பட்டாள்!  அந்த நேரத்தில்தான், மன்சூர் அல்-நாதிர் என்ற பலஸ்தீன் முஸ்லிமின் நட்பு ஜேனுக்குக் கிடைத்தது.  மிக விரைவிலேயே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கணவன்-மனைவியாயினர்.  ஜேனின் தந்தை கொதித்தெழுந்தார்!  தன் மகள் அரபு நாட்டான் ஒருவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டாளா?!  அவரால் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை.  அந்த நேரத்தில், அவரது அரசாங்கப் பொறுப்பும் சமூக மதிப்பும் அவருடைய மகளின் முடிவை மாற்ற முடியாமலாகிவிட்டன!

ஜேனின் அண்ணன் ஜிம் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டான்.  ஏனெனில், அவனுக்கு இஸ்லாத்தைபற்றி ஓரளவு தெளிவு படுத்தி வைத்திருந்தாள் ஜேன்.  அந்த நிலைபாடுதான், அவனை மணவிழாவுக்கு இழுத்து வந்தது.  தன் தங்கையின் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி என்று கருதினான் ஜிம்.

சொத்தில் அவளுக்குப் பங்கில்லை என்று சொல்லிவிட்டார்கள் பெற்றோர்!  அவளின் குடும்பத்தில் ஏராளமானோர் சர்ச் பணிகளில் ஈடுபட்ட சேவகர்களாக இருந்தனர்.  அவர்களெல்லாம் ஒருவர் மாற்றி ஒருவராக வந்து, ஜேனிடம் ‘போதனை’ செய்து பார்த்தார்கள்.  அவளிடமிருந்த இயல்பான நடை, உடை, பாவனை, அறிவு  அனைத்தும் இஸ்லாத்தை விட்டு அவளை அசைக்க முடியாமல் செய்துவிட்டன!

“மக்கள், குறிப்பாக அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள்-முஸ்லிம் ஒருவரை மணம் புரிந்தால், மனைவியை அவர் ‘ஹிஜாப்’ அணியுமாறு வற்புறுத்துவார் என்று.  என்னைப் பொறுத்தவரையில், அதில் கொஞ்சமும் உண்மையில்லை.  பெண்ணின் இயற்கை இயல்பே அடக்கம், ஒடுக்கம், ஒதுக்கம், நாணம் அனைத்தும் உடையதாகும்.  பிறகு ஏன் அமெரிக்கப் பெண்கள் இப்படித் திரிகிறார்கள் என்கிறீர்களா? அழியும் உலகின் மீது ஆசை (Lust for life) தான் காரணம்.  என்னைச் சுற்றிக் கிருஸ்தவச் சூழலே இருந்தும்கூட, நான் ஒரு கிருஸ்தவப் பெண்ணாக, என் நினைவு தெரிந்த காலம் முதல் இருந்ததில்லை.  அதாவது, நடை, உடை, பாவனையில் நான் ஒரு முஸ்லிமாகவே இருந்துள்ளேன் என்பது இப்போது எனக்குப் பெருமகிழ்வைத் தருகின்றது” என்று துணிவுடன் விளக்குகின்றார் ஜேன் மன்சூர் அல்-நாதிர்.

“இப்போதெல்லாம், நான் வீதியில் நடந்து செல்லும்போது, என்னைப் பார்த்துச் சிரிக்கும் ஏராளமானோரைக் காண்கிறேன்.  அதனால் என்ன?  உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மறைத்துக்கொண்டு, ‘சூப்பர் மார்க்கெட்’ ஒன்றின் வரிசையில் நின்றால், என்னைக் கண்டு அலறியடித்து அகன்று போய்விடும் அறியாமை மிக்க மாது சிரோமணிகளைக் காணுகின்றேன்.  அதனால் என்ன?  I don’t care!  சங்கடப்பட்டு, சடைவடைந்துவிடவில்லை நான்.  ‘நான் இந்த உலகத்தின் தீமைகளிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டேன்’ என்ற என்னுள் இருக்கும் ஆறுதலும் அகமகிழ்வும் எனக்குப் போதும்” என்று எதிர் நீச்சல் போடும் மனப் பக்குவம் உடையவராகிவிட்டார் சகோதரி ஜேன்.

‘அமெரிக்காவில் இருந்தபோது, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டதால், நானும் என் கணவரும் துபைக்குக் குடி பெயர்ந்தோம்.  எதிர்பார்த்த முன்னேற்றம் அங்கும் இல்லை!  இருப்பினும் என்ன?  கருணையுள்ள அல்லாஹ் எங்களைக் கைவிட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கையுடன், எமது வாழ்க்கை அமைதியாகக் கழிந்துகொண்டிருக்கிறது.”  முழுமையான முஸ்லிம் பெண்ணின் அடையாளம் இதுதான்.

ஜேன் இப்போதெல்லாம் தனது பெரும்பாலான நேரத்தை ‘தஅவா’ பணியில் ஈடுபடுத்தி வருகின்றார்.  கடந்த சில ஆண்டுகளாக டாக்டர் பிலால் பிலிப்ஸ் அவர்களின் இஸ்லாமிய ஆங்கில நூல்களைப் பிழைத் திருத்தம் செய்வது, மற்றும் ஆங்கிலம் பேசுவோருக்கிடையில் அவற்றைப் பரப்புவது போன்ற பணிகளில் தனது பங்களிப்பைச் செய்வது கொண்டு அமைதியுடன் கூறுகின்றார்:  “அறிவார்ந்த ஆங்கிலம் பேசும் மக்களிடையே அமைதியான ‘தஅவா’ப் பணி செய்வது, இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  உண்மையை அறியவேண்டும் என்ற உணர்வோடு அவர்களுள் பலர் உள்ளனர்.  அவர்களுக்கெல்லாம் உதவி புரிவது கடமைதானே!” 

அதிரை அஹ்மது

10 Responses So Far:

Unknown said...

மாஷா அல்லாஹ்,,,, பேறு பெற்ற பெண்மணிகள் பதிப்பு,, சத்தியத்தின் பிரதிபலிப்பு. இறைவனின் சத்திய மார்க்கத்தில் பிறந்து நாகரிகம் என்ற பெயரில் எத்தனை ஈனசெயலில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மனிதனுக்கு ஆயிரம் பாடம் கற்பிக்கின்றன.அஹமது காக்காவின் ஆக்கம் தொடர வல்ல ரஹ்மான் அருள் புரியட்டும்,,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஸாக்க்கல்லாஹ் ஹைர்

பெண்மணியின் தாவாப் பணி சிறப்புற அமைந்து வாழ்க்கையும் இனிதே நகரட்டும்! ஆமீன்.

sabeer.abushahruk said...

பாருபோற்றும் கண்மணிகளாம்
பேறுபெற்றப் பெண்மணிகள்

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஜேன் இப்போதெல்லாம் தனது பெரும்பாலான நேரத்தை ‘தஅவா’ பணியில் ஈடுபடுத்தி வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக டாக்டர் பிலால் பிலிப்ஸ் அவர்களின் இஸ்லாமிய ஆங்கில நூல்களைப் பிழைத் திருத்தம் செய்வது, மற்றும் ஆங்கிலம் பேசுவோருக்கிடையில் அவற்றைப் பரப்புவது போன்ற பணிகளில் தனது பங்களிப்பைச் செய்வது கொண்டு அமைதியுடன் கூறுகின்றார்: “அறிவார்ந்த ஆங்கிலம் பேசும் மக்களிடையே அமைதியான ‘தஅவா’ப் பணி செய்வது, இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையை அறியவேண்டும் என்ற உணர்வோடு அவர்களுள் பலர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் உதவி புரிவது கடமைதானே!” //

ஜஸாக்க்கல்லாஹ் ஹைர்

பேறுபெற்றப் பெண்மணியின் தாவாப் பணி சிறப்புற அமைந்து வாழ்க்கையும் இனிதே நகரட்டும்!

Abdul Razik said...

மாஷா அல்லாஹ்,,அனைவரும் தொடர்ச்சியாக படிக்க வேண்டிய தொடர்.

Abdul Razik
Dubai

Shameed said...

மாஷா அல்லாஹ் தொடரவேண்டிய தொடர்

Yasir said...

//‘நான் இந்த உலகத்தின் தீமைகளிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டேன்’ // சத்திய வார்த்தைகள்
//அவர்களுக்கெல்லாம் உதவி புரிவது கடமைதானே!”// நம் கடமையும் கூட..விரைவில் தொடங்கவேண்டும்...
உற்சாகமூட்டும் தொடர் தொடர்ந்து எழுதுங்கள் காக்கா

Ebrahim Ansari said...

//உண்மையை அறியவேண்டும் என்ற உணர்வோடு அவர்களுள் பலர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் உதவி புரிவது கடமைதானே!” //

இது நமக்குச்சொல்வது போல் இருக்கிறதாக நான் உணர்கிறேன். புத்துணர்வுத் தொடர்.

Yasir said...

A FOR ALLAH , B FOR BISMILLAH...MODEL ISLAMIC SCHOOL IN MUMBAI MASHA ALLAH

http://www.youtube.com/watch?v=9zPrjVqQyQE

KALAM SHAICK ABDUL KADER said...

\\ ‘நான் இந்த உலகத்தின் தீமைகளிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டேன்’ என்ற என்னுள் இருக்கும் ஆறுதலும் அகமகிழ்வும் எனக்குப் போதும்” என்று எதிர் நீச்சல் போடும் மனப் பக்குவம் உடையவராகிவிட்டார் சகோதரி ஜேன்.\\

உண்மையான வாக்குமூலம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு