கவிஞன் - ஒரு கோணல் பார்வை!

எனக்குக்
கவிதை யென்று
எதுவும் எழுதத் தெரியாது

ஏதோ வொன்று
என்னை வைத்துத்
தன்னை எழுதிக் கொள்கின்றது

மனம்
ஏனோ யின்று
மண்ணை விடுத்து
விண்ணை ஏவிச் செல்கின்றது

பறக்கும்போது
படபடப்பவைகளைப்
பதிவு செய்யச் சொல்கின்றது

அவற்றை
கவிதை என்னும்
தலைப்பின்கீழ்
குறித்து வைக்க மறுக்கின்றது

பிறகொரு சமயம்
பதிவு செய்தவைகளைப்
படிக்கும்போதேப் பிடிக்கின்றது

கனக்கும் உணர்வை
எனக்குள் விதைத்து
கவிதையொன்று வசப்படுகின்றது

எழுதும்போதல்ல
வாசிக்கும்போதே
யாரும்
கவிஞராகிறார்

புன்னகை
பூக்கும்போதைவிட
புரிந்து கொள்ளப்படும்போதே
பிரயோஜனப்படுகிறது

பார்க்க
பல வர்ணங்களிலும்
படிக்க
பளபளக்கும் காகிதத்திலும்
அலங்கரிக்கப்பட்ட எழுத்துகளாலும்
படங்களின் ஒப்பேற்றலுடனும்
உணரப்படுவதல்ல கவிதை

கவிதை
எண்ணங்களா எழுத்துகளா

வார்த்தைகளால் நிரப்ப
கவிதை
படிவம் அல்ல
எண்ணங்களின் ஒரு வடிவம்

காகிதங்களில் மட்டும்
கண்டெடுக்கப்படுவதல்ல கவிதை

கற்கண்டு மழலையிலும்
கண்களால் சிரிப்பதிலும்
புற்பூண்டின் பச்சையிலும்
புலர்கின்ற விடியலிலும்

புன்னகைக்கும் முகத்தினிலும்
புரிகின்ற மொழியினிலும்
சொற்காத்த வாக்கினிலும்
சோலையின் பூக்களிலும்

கார்மேகம் கரைந்து
கொட்டுகின்ற  மழையினிலும்
சொற்கொண்டு பேசுகையில்
சுரீரென்ற தீண்டலிலும்

ஏழையின் சிரிப்பினிலும்
ஏழுவர்ண பிம்பத்திலும்
எழுதப்படா இன்பத்திலும்
எஞ்சியிருக்கிறது கவிதை

கள்ளமில்லா உள்ளத்தில்
கருவாகும் எண்ணத்திலும்
ஆரவாரம் வேரறுக்கும்
அமைதியின் ஆளுமையிலும்

தெள்ளத் தெளிந்த
ஓடையிலே
நீர்கிழித்து நீந்துகின்ற
மீன்களின் கூட்டத்திலும்

உதிரி மல்லிகையைச்
சரம்சரமாய்த்
தொடுக்கின்ற விரல்களிலும்
துடிப்புடனிருக்கிறது கவிதை

கட்டுரைகளிலும் கதைகளிலும்கூட
கண்டெடுத்ததுண்டு
கனிச்சுவைதரும்
கவிதைகளை

கட்டுபவனல்ல
காசு கொடுப்பவனே
கட்டடத்திற்குச் சொந்தக்காரன்

எழுதுபவனல்ல
புரிந்து
எற்றுக்கொள்பவனே கவிஞன்?!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

38 கருத்துகள்

Unknown சொன்னது…

வர்ணிக்க தகுதி உண்டா என்று அறியவில்லை.. ஆயினும், ரசித்ததை கூறுகின்றேன். கிளைமாக்ஸ் ல எதிர்பாக்காத ஒரு ட்விஸ்ட் குடுத்திங்க பாருங்க.. சூப்பர் காகா!!!

Shameed சொன்னது…

ஆகா கோணல் பார்வையிலும் ஒரு நேர்"மை" பார்வை தெரிகின்றது

Iqbal M. Salih சொன்னது…


//கற்கண்டு மழலையிலும்
கண்களால் சிரிப்பதிலும்
புற்பூண்டின் பச்சையிலும்
புலர்கின்ற விடியலிலும்//

அருமையான கவிதை!
அதைவிட அழகாக அந்தக் குருவிப் படம்!!

Yasir சொன்னது…

கவிதை என்றால் என்ன என்று விளங்கிக்கொள்ள கோனார் உரையை நாட தேவையில்லை...இக்கவிதையை படித்து நன்கு புரிந்துகொண்டாலே போதும்

//வார்த்தைகளால் நிரப்ப
கவிதை
படிவம் அல்ல
எண்ணங்களின் ஒரு வடிவம்//

கைத்தட்ட வைக்கும் அதே வேளையில் கவிதைக்கு ஒரு கைடே(guide) கொடுக்கின்றது இவ்வரிகள்....

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

கவிதைக்கு மகுடம் சூட்டிய கவிதை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிதை எப்படியிருக்கனும்னு ரூட்டு போட்டு கொடுத்ததை வாசித்து ஒரு ஒரு சமையல் காரர் என்னிடம் கேட்டது இப்படி !?

நானும் கவிஞன் தானே !? - அப்படீன்னா !
நானும் எழுதலாம் தானே !?

சமையல் குறிப்பைச் சொறிந்து கொடுப்பதுபோல் என்னிடம் கேட்டுட்டாரே காக்கா !!

ZAKIR HUSSAIN சொன்னது…

நீ எழுதிய நீந்துகின்ற மீன், பூ தொடுக்கும் கை, புன்னகைக்கும் முகம் அனைத்தையும் ஒரு விஷுவல் ஆக பார்த்த அனுபவம். இன்னேரம் ஊரில் இருந்தால் அனைத்தையும் வீடியோ செய்து அப்லோட் செய்திருப்பேன்.

sabeer.abushahruk சொன்னது…

ஆக்கமிடு அடுமடையா!

சமைப்பது போல்தான்
கவிதை
அமைப்பது வும்.

இதயமெனும் பாத்திரத்தில்
இயல்பெனும் எண்ணெயில்
தேக்கிவைத்த எண்ணங்களைத்
தங்க குணத்தில்
வதக்கி எடுப்பதுபோல்
செதுக்கி எடுக்கவும்

நாற்பது வரிகளில்
நான்கைந்தைத் தேர்ந்தெடுத்து
நறுக்கி வைத்துக் கொள்ளவும்

நல்லதாய்
நெஞ்சிற் தூண்டிய நினைவை
இஞ்சி பூண்டினைப் போல்
நசுக்கிப் போடவும்

மறவாமல் முதலிலேயே
ஞாபகமாக
கயமையறக்
கழுவி வைத்திருத்தல் அவசியம்

நவரசமாம்
ஒன்பது உணர்வுகளில்
ஒன்றிலாவது
ஒரு மணிநேரமேனும்
ஊறவைக்கவும்

தேவையான அளவு
தேன்மொழி கலந்து
இரண்டு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
இப்புவி தன்னின்
இயல்பு சேர்க்கவும்

உள்ளுணர்வுத் தணலில்
ஊர் மனம் நோகாமல்
வேக வைக்கவும்

நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
எழுமிச்சை பிழிந்தூற்றி
தேங்காய்ப் பாலூற்றல்
தீங்கைப் போலுணர்ந்தால்
ஒரு கொதிப்பில் உடன் அணைத்து

அறுசுவைக் கொழிக்க
சமைத்த உணவைப் போல
அவனியும் செழிக்க
அமைத்த வடிவமே
கவிதை.

வாணலியிலிருந்து இறக்கி
வானொலியிலோ - அதிரைநிருபர்
வலைத் தளத்திலோ
வாசிக்கத் தந்தால் - கை
வசப்படும் கவிதை!

உண்பவர் ரசனைக்கேற்ப
வர்ண வர்ண ஏட்டில்
கால்புள்ளி அரைப்புள்ளி கலந்து
கேள்விக்குறி ஆச்சரியக்குறி
கிள்ளியெடுத்துத் தூவி
தொட்டுக்கக் கொஞ்சம்
துணைப் படமிட்டுப்
பரிமாறுவர் பதிவிடுபவர்!

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அஃதெப்படிக் கவிவேந்தரே என்னுள்ளத்தில் புகுந்தீர் ஒரு நொடியில்...?!
“அழகுக்குறிப்பு. அன்புக் குறிப்பு அடுத்து சமையற்குறிப்பு? என்று வினவலாம் அல்லது நான் அச்சமையற்குறிப்பைக் கவிதையாய்ச் சமைக்கலாம் ”என்றெண்ணி அயர்வதற்குள் அப்படியே எழுதி விட்டீர்?!

Unknown சொன்னது…

wow!!!

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

\\ஏழையின் சிரிப்பினிலும்
ஏழுவர்ண பிம்பத்திலும்
எழுதப்படா இன்பத்திலும்
எஞ்சியிருக்கிறது கவிதை/

அசத்தல் கவி காக்காவின் கலக்கல் வரி

கவியன்பன் (காக்கா) அவர் பங்கிற்கு இன்னும் கவி அலை அடிக்க/வர காணோமே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிதைச் சமையல் பேஷ் பேஷ் ! :)

அனைத்து கவிஞர்களின் இல்லங்களில் இந்த சமையல் குறிப்பு அவசியம் அலங்கரிக்க வேண்டும் !

உள் வாங்கி
ரசிப்பவனும்
கவிஞன்(னு)..

இலக்கணம் சொல்லிடுச்சு !

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

//கவியன்பன் (காக்கா) அவர் பங்கிற்கு இன்னும் கவி அலை அடிக்க/வர காணோமே?//

அன்புத் தம்பி -அதிரைத் தென்றல் இர்ஃபான் அவர்களின் அன்புக் கட்டளையை மறுக்க இயலாமல்- என் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எழுதிய கவிதை இதோ நீங்கள் சுவைப்பதற்காக:


கவிதைச் சமையற்குறிப்பு:

சாடல் நெருப்பைச்
சட்டென மூட்டி
பாடல் பதியும்
பாத்திரம் வைப்பாய்

அறிவால் அறிந்த
அனைத்துப் பொருட்களும்
நிறைவாய்ப் பகிர்ந்து
நிறைநெய்த் தமிழிடு

கருவிளம் என்னும்
கறிவேப்பிலையும்
தரு(ம்)மணம் என்றும்
தனியாய்ச் சுவைக்கும்

எதுகை மோனை
ஏலம் கிராம்புமாய்
விதிகள் பாவில்
வீசும் நறுமணம்

கருவாய் அமையும்
கருத்தை அழகாய்த்
தருவாய்ச் சமையல்
தகிக்கும் தருவாய்

புளிமா கொஞ்சம்
பதமுடன் கலந்தால்
புளிபோல் மிஞ்சும்
புதுசுவை உணர்வாய்

தேமாங்காய் போன்ற
தேங்காய்ப் பாலுடன்
மாமாங்காய்க் கீற்றும்
மாற்றும் பாவினம்

“அசலாய்” சேர்த்த
அறிவுப் பெட்டக
”மசலா” கொஞ்சம்
மணக்கச் சேர்த்திடு

சுண்டி இழுக்கும்
சுவைமிகு உவமை
கிண்டிக் கிளறும்
”கரண்டியின்” பெருமை

ஒற்றுப் பிழைபோல்
உப்பின் குறைதான்
கற்றுத் தருவர்
கல்வி நிறைந்தோர்

ஆவி அடங்க
ஆறப் போட்டிடு
கூவி அழைத்து
கூடிச் சாப்பிடு


பாலும் பருப்பும் பசுநெய்யும் சேர்ந்தது
போலுன்றன் பாடலைப் போடு

(இக்குறட்பா போலிருக்கும் அப்”பா”யாசம்)

sabeer.abushahruk சொன்னது…

கவியன்பன்,

சக்களத்திச் சமையலா?
முதலைவிட சுவையாயிருக்கிறதே :)

மேலும்,
மசக்கைக் காரவகள்
மனம் குளிரவா
புளி கொஞ்சம் கூடுதலாயிருக்கே!

விருந்தாடி வந்தது
அதிரைத் தென்றல்
விருந்து வாய்த்ததோ
அதிரை நிருபருக்கு

நாம் இருவருமே தேவையான பொருட்களின் பட்டியல் தர மறந்து போனோம். கோடிட்ட இடங்களை நிரப்ப கிரவுன் வருவாரா? எம் ஹெச் ஜே வருவாரா? அல்லது அபு இபுறாகீமே....

தேவையானப் பொருட்களில் சில:

சீரகம் ஒரு தேக்கரண்டி (சீரான அகம்)
சோம்பு குறைவாக (சோம்பாதிருத்தல் நலம்)KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அதிரைத் தென்றல்
அபுல்கலாமின் மொட்டுடைத்ததால்
சமையல் வாசம் பூவாசமாய்-இதில்
சக்களத்திப் பூசல் இல்லை
வாசத்துக்கேது சிறைவாசம்-அதனால்
வலிய வந்தேன் சிறிய அவகாசம் நீங்கி
நேசத்துக்குரிய உங்களுடன்
நேருக்கு நேர் மோதல் முறையா?

நிற்க.

\\அறிவால் அறிந்த
அனைத்துப் பொருட்களும்
நிறைவாய்ப் பகிர்ந்து
நிறைநெய்த் தமிழிடு//

இவ்வரிகளில் அனைத்துப் பொருட்களும் அடக்கம் என்றேன்; ஆதலால், பட்டியலைச் சுருக்கினேன்; இது பின்னூட்டக் கவிதை என்பதால்.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

\\மசக்கைக் காரவகள்
மனம் குளிரவா
புளி கொஞ்சம் கூடுதலாயிருக்கே!\\

செட்டிநாட்டுச் சமையற்குறிப்பு உபயம்; அதனால் வேண்டாமிந்த பயம்; சாப்பிட்டல் தெரியும் தனிச்சுவை நயம்!

sabeer.abushahruk சொன்னது…

//நேருக்கு நேர் மோதல் முறையா?//

நேருக்கு நேரும்
நிறைக்கு நிறையும்
நிறைநேருக்கு நிறைநேரும்

மோதல் முறைதானே
இலக்கணத் துரையே?

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

விடுபட்டவைகள் சேர்க்கப்பட்டன:

சீரசை பிரித்தல்
சீரகம் தரும்குணம்
நேரசை புரிதல்
நேசமாய் நறுமணம்

சாம்பலைப் பிரித்தல்
சோம்பலைத் துறத்தல்
சோம்புடன் மிளகும்
சேர்த்திடச் சுவைக்கும்


KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

\\நிறைக்கு நிறையும்
நிறைநேருக்கு நிறைநேரும்\\

நிரைநிரை = கருவிளம்
நிரைநேர் = புளிமா

நிறைக்குநிறை என்றால், உங்களின் நிறைந்த குணத்துடன் ததும்பாமல் இருக்கும் தன்னடக்கத்திற்கு முன்னால், நேருக்குநேராக நிற்க முடியாது என்னால்!

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.இங்கே அவரவர் பாத்திரம் "பளிச்"சிடுகிறது

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A சொன்னது…

வார்த்தைகளால் நிரப்ப
கவிதை
படிவம் அல்ல
எண்ணங்களின் ஒரு வடிவம்

காகிதங்களில் மட்டும்
கண்டெடுக்கப்படுவதல்ல கவிதை

சமைப்பது போல்தான்
கவிதை
அமைப்பது வும்.
உள்ளம் கவர்ந்த அருமையான வரிகள்

Unknown சொன்னது…

ஆஹா!!!
அவர் அவர் பாத்திரம் பளிச்சிட
என் கோத்திரத்தாரின் திறன் மின்னிட,
பாரில் என் குல கவிகட்கு
இல்லையாம் ஈடு இணை.

நாம் ஆட்டை கழுதை ஆக்குவோர் மட்டுமல்ல.
கழுதையையும் கவிதையாக்கி
கவிதையையும் சமயலாகுவோர்!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//எனக்குக்
கவிதை யென்று
.......புரிந்து
ஏற்றுக்கொள்பவனே கவிஞன்?!//

கவிஞன் வாழ்க!

கவிஞர்களின் கைவண்ணச் சமையல் ரொம்ப "டேஸ்ட்"

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் .
கள்ளமில்லா நெஞ்சத்திலிருந்து செதுக்கபட்ட சிற்பம் இந்த கவிதை"கள். நான் கவிஞன் இல்லை நல்ல ரசிகன் என்பதால் கவிஞனாகிறேன் உங்கள் கவிதை மூலம்.ஒரு கல்லைப்போன்று ஜடமாகி போன என்னையும் முடமாக்காமல் இயக்கியது உங்கள் கவிதை. இது ஒரு கிரியா ஊக்கி என்னை தூக்கி ஏதோ எழுதுகிறான் என உச்சத்தில் வைத்தது உங்கள் கவிதை!வாழ்துக்கள் கவியரசே!

crown சொன்னது…

நவரசமாம்
ஒன்பது உணர்வுகளில்
ஒன்றிலாவது
ஒரு மணிநேரமேனும்
ஊறவைக்கவும்

தேவையான அளவு
தேன்மொழி கலந்து
இரண்டு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
இப்புவி தன்னின்
இயல்பு சேர்க்கவும்
-------------------------------------------
மேலே எழுதப்பட்ட கவிதையை இந்த கவிதை "தூக்கி சாப்பிட்டுவிடுகிறது"இந்த செவிக்குணவாகிபோன கவிதை!

crown சொன்னது…

தேவையான அளவு
தேன்மொழி கலந்து
இரண்டு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
இப்புவி தன்னின்
இயல்பு சேர்க்கவும்

உள்ளுணர்வுத் தணலில்
ஊர் மனம் நோகாமல்
வேக வைக்கவும்.
---------------------------------------
சாகித்திய அகாடமியே இவரின் கையில் அகப்படாமல் நீ சாதித்தது என்ன? அதுவும் இயங்குவது சாதிஅடிப்பையிலும், அரசியல் அடிப்படையிலும் எனவே சாதிப்பவர்களுக்கு சாகித்திய அகாடமி குதிரைக்கொம்பே! இலக்கியம் என்பது நாவல் இயற்றுவதுதான் என்பது மடமை, இலக்கியம் என்பது நல்ல எழுத்து வடிவம் அது கதை, கவிதை , கட்டுரை என எப்படியும் இருக்கலாம் என்பது என் கருத்து.

crown சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
---------------------------------------------------
நாம் இருவருமே தேவையான பொருட்களின் பட்டியல் தர மறந்து போனோம். கோடிட்ட இடங்களை நிரப்ப கிரவுன் வருவாரா? எம் ஹெச் ஜே வருவாரா? அல்லது அபு இபுறாகீமே....
--------------------------------------------------------
இந்த கடல்களுடன் கடுகான என்னை கடுகாய்காயாமல்(எண்ணெய்யில்)ஒப்பிடலே பெரும் விசயம்.
இதில் கருவேப்பிலைபோல் தூக்கியெரியாமல், சமையலில் சேர்த்துகொண்டதுடன் சபையிலும் சேர்த்து பந்தியில் பரிமாற அழைத்த பெருந்தன்மை கவிஞருக்கு நன்றி!

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

சாடல் நெருப்பைச்
சட்டென மூட்டி
பாடல் பதியும்
பாத்திரம் வைப்பாய்
---------------------------------
இந்த பாய் புனையும் கவிதையெல்லாம் நைமணம்!இப்படி போகையில் கூடல் வந்தாலும் கூட வரும் உம் கவிதை பொழுது போக்காய்! கூடல் வந்த பின் கூட வரும் சோக்கா(ய்)!கவிஅன்பனே! நீவீர் கூறும் நல் கவிதையெல்லாம் நல் இதயம் சென்றடையும் போதில் நன்மை பல வந்து சேரும் வாழ்வில். கவியரசர்கள் அதிரையில் ஆட்சிபீடம் அமீரகத்தில்.

crown சொன்னது…


எதுகை மோனை
ஏலம் கிராம்புமாய்
விதிகள் பாவில்
வீசும் நறுமணம்
----------------------------------------
பாட்டுவிதியில் மட்டுமல்ல கடந்து போகும் வீதியிலும் வீசும் சுகமணம் அது!

crown சொன்னது…

கருவாய் அமையும்
கருத்தை அழகாய்த்
தருவாய்ச் சமையல்
தகிக்கும் தருவாய்
-----------------------------------------
ஒருவாய் கவலம் கவிதை கேட்டால் ஊர்வாய்க்கெல்லாம் கவிதை சமைத்தீர் கவிசக்கரவர்த்திகள். தரு(மரம்)தரும் தகிக்காத குளிர் நிழல் கவிதை! ஆஹா !தென்றல்.

crown சொன்னது…

புளிமா கொஞ்சம்
பதமுடன் கலந்தால்
புளிபோல் மிஞ்சும்
புதுசுவை உணர்வாய்

தேமாங்காய் போன்ற
தேங்காய்ப் பாலுடன்
மாமாங்காய்க் கீற்றும்
மாற்றும் பாவினம்

“அசலாய்” சேர்த்த
அறிவுப் பெட்டக
”மசலா” கொஞ்சம்
மணக்கச் சேர்த்திடு
----------------------------------
மாசாலா"வின் "கால் ஒடிந்து போனாலும் மாஷாஅல்லாஹ் "கைமணம்' "மூக்கை துளைக்க " நாவில் நீர் ஊறுது!கண்ணீர் வருகிறது ஆனத்தினாலே அது கொஞ்சம் காரம் ஆனதினாலே! ஆகாரம் காரம் என்றாலும் சும்மா அலங்காரமல்ல! இனிய மதிய உணவாய் நிம்மதியான உணவாய் ஆனதிங்கே!

Iqbal M. Salih சொன்னது…

//மோதல் முறைதானே
இலக்கணத் துரையே? //

பாராட்டுவதில் கவியன்பன் வள்ளல் என்றால்,
பெயர் வைப்பதில் நீ கொடை வள்ளல்!

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தப் பதிவை வாசித்துப் புரிந்துகொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

குறிப்பாக, கவியன்பன் அவர்களும் கிரவுனும் இந்தப் பதிவிற்கு ஒரு விழாவுக்கான அந்தஸ்தை வடிவமைத்துத் தந்துவிட்டார்கள்.

இன்னும் இரண்டு அல்லது மூன்றுபேர் வாய்த்திருந்தால் இதை ஒரு கவியரங்கமாக வார்த்தெடுத்திருக்கலாம்.

பெட்டெர் லக் நெக்ஸ்ட் ட்டைம்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா, ஜஸாக்கல்லாஹ் ஹைர்... நல்லதொரு வழித்தடம் போட்டு அனைவரையும் கவிஞர்களாக்கியதற்கு ! :)

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

வெற்றுத் திரையில் விதவித மாகவே
சொற்றொடர் கோத்தநான் சோர்ந்துக் கிடந்ததால்
சிந்தை கசக்கிச் செதுக்கிய யாவுமே
மந்தைப் பதங்கள்; மலட்டு வரிகள்!
அசைகளின் கூட்டம் அளவடி நாட்டம்
இசையுளச் சொற்போர் இலக்கிய வேட்டையில்
தோற்றதன் காரணம்; தோய்ந்துக் கிடந்தனன்;
நீற்று விலகுமோ நெஞ்சத் துணர்ச்சி?
ஒருகண மேனும் உளத்தினை ஆட்டும்
கருதனைப் பாடும் கவிமனம் வேண்டினேன்
நால்வருக் குள்ளதொரு நற்றமிழ்ப் பாவுமென்
பால்வந் துளத்துள் படியவரம் வேண்டினேன்
கம்பன் அடைந்திடாக் கற்பனை காணவே
அம்முறை நெஞ்சில் அரைநொடிப் போதும்
திருப்புகழ்ப் பெற்றவர் சீர்மிகுச் சந்தம்
ஒருமுறை என்னுள் ஒலித்திட வேண்டினேன்
பாரதிப் பாடலில் பார்க்கும் புதுமையின்
சாரல் துளியெனைச் சார்ந்திடல் வேண்டினேன்
சுற்றிப் புலமைகள் சூழுமந் நேரமதில்
ஒற்றைக் கவியென ஓதலை வேண்டினேன்
பண்ணில் எழுதப் படைத்தோன் அருளவே
எண்ணம் சிறக்க எழுது.


குறிப்பு:

அதிரை நிருபர் என்னும் அரண்மணைக்குள், ஆஸ்தானக் கவிஞர் முன்னே ஓர் ஏழைப்புலவனின் ஏக்கத்தை வெளியிட்டேன். என் பாடலின் குற்றம் காணாமல் ஏற்றம் கண்டு பாராட்டிய வார்த்தைகளின் வசீகரன் - சொற்களின் சுந்தரன் - அடுக்கு மொழி அலைவீசும் அதிரைத் தென்றல்- மகுடக்கவிஞர் அவர்கட்கு நன்றி; ஆஸ்தானக் கவிஞர்க்கு அருகில் நிற்கும் பேறு கிட்டியமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி. பாராட்டிய நல்லுள்ளங்கட்கு என்றென்றும் நன்றி.

அல்ஹம்துலில்லாஹ்
ஜஸாக்கல்லாஹ்

Ebrahim Ansari சொன்னது…

இந்தக் கவிதைக் கடலில் மூழ்கி முத்தெடுக்க காலதாமதமாக வந்துவிட்டேன். நான் அவையில் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த நேரத்தில் இப்படி ஒரு அற்புத விருந்து படைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் சூடும் சுவையும் இன்னும் மாறாமல் இருந்தததால் மிகுந்து இருந்த அத்தனையையும் அள்ளிச் சுவைத்துவிட்டேன்.

ஒன்று எனக்கு உடனே தோன்றுகிறது . அறைக்குள்ளேயே ஆடும் இந்தக் கவிக்கூட்டம் அரங்கேற வேண்டுமென்பதே அது.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அன்புச் சகோதரர் டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும், தங்களின் உடல்நிலையின் முன்னேற்றம் கண்டு எங்களைக் காண இத்தளம் பற்றி வந்து இங்குப் பின்னூட்டமிட்டது கண்டு அளவற்ற மகிழ்ச்சி; அல்ஹம்துலில்லாஹ்!

// அறைக்குள்ளேயே ஆடும் இந்தக் கவிக்கூட்டம் அரங்கேற வேண்டுமென்பதே அது.\\

அல்லாஹ்வின் அளவற்ற அருளால் அடியேனுக்கு, கவியரங்கம் - அரங்கேற்றம் என்பது புதிதல்ல (எப்படித் தங்கட்கு மேடைப் பேச்சு எளிதானதோ அப்படியே); இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி: என் நீண்ட நாள் விருப்பமான, “கவிவேந்தர் சபீர் அவர்கள் மேடையேறிக் கவிதை பாட வேண்டும்” என்ற அப்பேரவா நிறைவேற ஓர் உந்துதலைத் தங்களின் எண்ணத்தின் வெளிப்பாட்டால் நடந்தேறும் என்றே எண்ணி மகிழ்கிறேன்!

எனக்கும் தங்கட்கு உண்டானது போன்றதொரு பிணியின் தொடக்கம் காரணமாக, சுமார் இருவாரங்களாக மருத்துவரிடம் சென்று வருவதால் ஆக்கங்கள் எழுதுவதை நிறுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டதால் “சும்மா” இருந்தேன். அதிரைத் தென்றல்(இர்ஃபான்)தட்டி எழுப்பி விட்டார்; அதனால் என் பங்கைத் தட்டிக் கழிக்காமல் தட்டி விட்டேன் இப்பாடலை! இதனால், அதிரை நிருபர் என்னும் அரண்மனைக்குள் ஆஸ்தானக் கவிஞரின் அண்மையில் அமரும் வாய்ப்பும் கிட்டி விட்டது! அல்ஹம்துலில்லாஹ்!