Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2012 | , ,


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்!

அல்லாஹ்வின் அடியார்களே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் கபுருக்குச் சந்தனம் பூசுவதற்காகக் கடந்த 23.12.2012 பகல் 2.45 மணியளவில் மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து லெப்பை அலாவுத்தீன் இறந்து விட்டார்!  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).  இந்த இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஒரு வீட்டிலுள்ள குளியலறைக்குள் குளிப்பதற்காகச் சென்ற ஒருவர் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் வெளிவராவிட்டால், அந்த வீட்டார் என்ன செய்வார்கள்அதுவும், குளிக்கச் சென்றவர் இரத்த அழுத்த நோயாளியாகவும் சர்க்கரை நோயாளியாகவும் இருப்பாராயின், எவ்வளவு கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள்? வழக்கமாகப் பதினைந்து நிமிடத்தில் தம் குளியலை முடித்துக்கொண்டு வெளிவரவேண்டியவர், அரைமணி நேரமாகியும் வெளிவராவிட்டால்?

ஒரு மணி நேரம் தாண்டிய பின்னரும் உள்ளே சென்றவர் என்னவானார் எனும் கவலையற்று இருந்துவிட்டு, கடைசியில் அவரை உயிரிழந்தவராகத் தூக்கிவந்து போட்டு, அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டு, எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல், தம் குற்றங்களை அல்லாஹ்வின்மீது திசை திருப்புவது அறிவற்றவர்களின் செயலாகும்.  அப்படிப்பட்ட ஓர் அறிவீனம்தான் மர்ஹூம் அலாவுத்தீன் விஷயத்தில் அரங்கேறியது.  வழக்கமாக, ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்று மணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து அல்லது உடைத்துப் பார்ப்பதற்கு தர்ஹாவில் குழுமியிருந்தவர்களைத் தடுத்து நிறுத்திய அறிவீனம் எதுஅல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மௌட்டீகக் கொள்கையான தர்ஹா வழிபாட்டு நம்பிக்கை நிகழ்த்திய அநியாம்தான் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான்:
"மனிதர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்." (அல் குர்ஆன் 10:44).

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக நம்மை ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துவிட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, அல்லாஹ்வுடைய மௌத்து’ என்று கூர் மழுங்கிப்போய் கூறுதல் முறையல்ல.

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் (4:78) எச்சரிப்பது, மௌத்துக்கு அஞ்சி ஓடி எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்ற பொருளிள்தானே அன்றி, நம்முடைய மடமையினால் ஓர் உயிரை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவல்ல.

என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும், அந்தக் கபுருக்குச் சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை இன்னும் ஏற்க மறுப்பது மடமையின் உச்ச கட்டமாகும்.

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரால் ஆண்டு தோறும் கந்தூரி எடுப்பதும், அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றனஅல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளக்கும் இதோ சில நபிமொழிகள்:

 وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا 

"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கிவிடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்." அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746 .

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ

"... இறைவா, எனது சமாதியை வழிபடும் இடமாக ஆக்கிவிடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்." அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ 

"சமாதிகளை தரிசிக்கச் செல்லும் பெண்களையும், அவற்றில் வழிபாடு செய்யும் பெண்களையும், (சமாதிகளில்) விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்." இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

 لَعْنَ اللَّه الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றியும் எச்சரித்தார்கள்" - அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவங்கள் என்பதை நம் ஊர் மக்களுக்குத் தெளிவாக - உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும்ஏனெனில், மறுமையில் அவர்களுக்கு இது பற்றிக் கூடுதல் கேள்வியுண்டு!  ஜமாஅத்தின் பொறுப்பாளர்களுக்கும் அவ்வாறே கூடுதல் கேள்விகள் மறுமையில் காத்திருக்கின்றன!

தம் மூதாதையரின் மட நம்பிக்கையை ‘இபாதத்’ என்று நம்பிப் பின்பற்றி, உயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர், அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டியினரும், அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்து ஆதரவளித்த ஜமாஅத் பொறுப்பாளர்களும், கந்தூரி ஆதரவாளர்கள் அனைவரும் அவ்லியாவின்  பெயரால் கந்தூரி எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெற்றே ஆகவேண்டும்!

வெளியீடு 3/2012 - நாள்: 28.12.2012
அறிவுறுத்தும், 
அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East) Street, P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email : salaam.adt@gmail.com

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'மரணம்' அறிவிப்பின்றி வரும் அதனைத் தொடர்ந்த பிறர் செய்வதோ "மரண அறிவிப்பு" !

அதிரையில் அந்த சம்பவம் அந்தச் சூழலில் உழன்றவர்களுக்கும், அதன் பின்னால் செல்லும் கூட்டாத்தாருக்கும் அது அதிர்ச்சியான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால், இறை நம்பிக்கையாளர்களுக்கு அது ஒரு எதேச்சையான இறைவனின் நாட்டமே என்று அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

சில ஐயங்களை அந்தச் சிக்கலில் இருப்பர்வகளிடம் கேட்கத் தோனுது ஆனால், ஷிர்க்கே அவர்களுக்கு ஷோக்காக செய்துவரும் அந்தச் சகோதரர்களின் பார்வைக்கு இந்த வினாக்கள் படுகிறதோ இல்லையோ அவர்களை உலுப்பி எடுக்கவாவது செய்யும்.

விழிப்புணர்வுகென்று வெளியிடப்பட்ட பிரசுரத்தை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியில் விநியோகிக்க அனுமதி மறுத்தது வேதனைக்குரியதே!

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

//விழிப்புணர்வுகென்று வெளியிடப்பட்ட பிரசுரத்தை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியில் விநியோகிக்க அனுமதி மறுத்தது வேதனைக்குரியதே! //

அது எப்படிங்கோ அந்த நோட்டிசை வெளி இட அனுமதி கொடுப்பாங்க அவங்க பல்ல குத்தி அவங்கள மோந்து பாக்க சொல்றது எந்த விதத்திலே நியாயம்

Shameed said...

மூலஸ்தானத்துக்கு வெளியோ இருந்தவர்களுக்கு சுயாஅறிவோடு பொது அறிவும் இல்லாமல் போனதே உயிர் பலிக்கு காரணம்

U.ABOOBACKER (MK) said...

அல்லாஹ்வின் நாட்டப்படி மரணம் ஏற்பட்டாலும், அதற்குரிய பல காரணங்களில் இந்த சகோதரருக்கு பித் அத்தும் மடமையும் காரணமாகிவிட்டது.கப்ரு வழிபாட்டை கண்டித்து குர் ஆன்,ஹதீஸ் விளக்கங்கள் கிடைக்கும் இக்காலத்திலும் இதுபோன்று வழிகேட்டில் ஈடுபடுவது வேதனையாக இருக்கிறது.சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும்,கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவங்கள் என்று உள்ளூர் ஆலிம்கள் கண்டிக்காமல் மெளனமாக இருக்கிறார்களே! உடனடியாக அதிரை ஜமாத்துல் உலமாவை கூட்டி கந்தூரியும் கப்ரு வழிபாடும் ஹராம் என்று அறிவிக்க தயாரா? ரஹ்மானியா மதரஸாவிலிருந்து பத்வா வெளியிடுவார்களா? அல்லது கந்தூரி கூடும் என்று ஒரு குர் ஆன் ஆயத்தையோ ஹதீஸோ உங்கள் மத்ஹப் இமாம்களின் சொல்லையோ காட்டுங்கள். வழிகேட்டை தடுக்காத உலமாக்களே நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! நீங்கள்தான் பொறுப்பளர்கள்.

Adirai pasanga😎 said...

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்!


தம் மூதாதையரின் மட நம்பிக்கையை ‘இபாதத்’ என்று நம்பிப் பின்பற்றி, உயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர், அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டியினரும், அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்து ஆதரவளித்த ஜமாஅத் பொறுப்பாளர்களும், கந்தூரி ஆதரவாளர்கள் அனைவரும் அவ்லியாவின் பெயரால் கந்தூரி எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெற்றே ஆகவேண்டும்!

ஏகத்துவம் மீண்டும் முழுவீச்சில் எடுத்துரைக்கப்படவேண்டும். அதற்கு பிரசுரம், பொதுக்கூட்டம், முதலானவைகள் நடத்தப்படவேண்டும். இதற்கெல்லாம் முன்பாக ஏகத்துவ சகோதரர்கள் ஈகோ பாராமல் ஒரு தலைமயில் ஒன்றுபட்டால் நமது ஊரில் மட்டுமல்ல இதுபோல உள்ள அனைத்து ஊரிலும் நல்ல மாற்றம் ஏற்படும் - இன்ஸா அல்லாஹ்

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)

கப்ருகள் மீது மஸ்ஜித்கள் கட்டுவது அல்லது மஸ்ஜித்களை அங்கு நிர்மானிப்பது அது சில வேளை மஸ்ஜிதின் கிப்லா பக்கம், அல்லது பின்னால், அல்லது ஒரு பகுதியில், அல்லது மையவாடியில் அமைந்திருக்கும் படி நிர்மாணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கப்ருகள் இருக்கின்ற பள்ளிவாயல்களில் எக்காரணம் கொண்டும் நாம் தொழுதுவிடக் கூடாது. நாம் அலட்சியம் செய்து தொழுகைகளை பாழ்படுத்திவிடவும் கூடாது. இன்னும் அலட்சியமாக கருதி தொழுதுவிடுவோமாயின் அல்லாஹ்வின் சாபத்தை பெற்றவராக ஆகிவிடுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. கப்ருஸ்தலங்களில் தொழுகை நடத்தவோ அல்லது அந்த இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதோ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. கப்ருகள் இருக்கும் இடங்களில் பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் அங்கே இருக்கும் கப்ருகள் தோண்டியெடுக்கப்பட்டு அந்த கப்ரில் மீதமிருப்பவைகளை பொது மையவாடிகளுக்கு எடுத்துச் சென்று அங்கே இருக்கும் மற்ற கப்ருகளோடு தனித்தனியாக புதைக்க வேண்டும்.

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு முறை அபுல் ஹய்யாஜ் என்பவருக்கு இப்படிச் சொல்கிறார்கள், 'அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்னை அனுப்பிய ஒரு காரியத்திற்காக இப்பொழுது நான் உன்னை அனுப்புகிறேன். எந்த ஒரு சிலையையும் உடைக்காமல் விட்டு விடாதே ! பூமி மட்டத்தை விட உயர்ந்திருக்கக்கூடிய எந்த ஒரு கப்ரையும் பூமியோடு சமப்படுத்தாமல் விட்டு விடாதே'. என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: முஸ்லிம்)

கப்று ஸ்தானங்களில் பள்ளிவாயில்கள்
http://adiraisalafi.blogspot.com/2011/11/blog-post_07.html

தாஜுதீன் (THAJUDEEN ) said...

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோத்த அதிரை தாருத் தவ்ஹீதின் செயலுக்கு அல்லாஹ் நற்கிருபை செய்வானாக..

அதிரையில் ஏகத்துவம் மீண்டும் முழுவீச்சில் எடுத்துரைக்கப்படவேண்டும். அதற்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிப்பது, அன்றாடம் மார்க்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போன்றவைகள் தொடர்ந்து நடப்பட வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக அதிரையின் ஏகத்துவ சகோதரர்கள் ஈகோ பாராமல் அதிரை தாருத் தவ்ஹீத் மூலம் போன்ற குர்ஆன் சுன்னா கொள்கையுடைய இயக்க சாயமில்லா அமைப்பின் மூலம் ஒன்றுபட்டால் நமது ஊரில் மட்டுமல்ல இதுபோல உள்ள அனைத்து ஊரிலும் நல்ல மாற்றம் ஏற்படும் - இன்ஷா அல்லாஹ்..

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்! இன்ஷா அல்லாஹ்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சமாதியில் மரணத்தின் மூலம் இனி இங்கு அனைத்து வைபவங்களும் மரணிக்கட்டும்!

// உயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர், அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டி//

அது போல ரதம், தெரு வலத்தன்று நசீம் என்ற சிறுவன் டிராக்டர் விபத்தில் பலியான சோகம் நடந்த அதே மாலை அதே தெரு பகுதியில் ஆடல் பாடல் களை நிகழ்த்திய ஈவிரக்கமற்ற கந்தூரிக் கமிட்டி.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஏகத்துவம் மீண்டும் முழுவீச்சில் எடுத்துரைக்கப்படவேண்டும். அதற்கு பிரசுரம், பொதுக்கூட்டம், முதலானவைகள் நடத்தப்படவேண்டும். இதற்கெல்லாம் முன்பாக ஏகத்துவ சகோதரர்கள் ஈகோ பாராமல் ஒரு தலைமயில் ஒன்றுபட்டால் நமது ஊரில் மட்டுமல்ல இதுபோல உள்ள அனைத்து ஊரிலும் நல்ல மாற்றம் ஏற்படும் - இன்ஸா அல்லாஹ்

ZAKIR HUSSAIN said...

//விழிப்புணர்வுகென்று வெளியிடப்பட்ட பிரசுரத்தை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியில் விநியோகிக்க அனுமதி மறுத்தது வேதனைக்குரியதே! //

//அது எப்படிங்கோ அந்த நோட்டிசை வெளி இட அனுமதி கொடுப்பாங்க அவங்க பல்ல குத்தி அவங்கள மோந்து பாக்க சொல்றது எந்த விதத்திலே நியாயம் //


1500 வருடங்கள் முடிந்தும் இன்னும் முழுமையான இஸ்லாத்தை எடுத்துரைக்க இன்னும் தடைக்கற்கள்.உண்மையில் நாம் முன்னேறி இருக்கிறோமா?



Ebrahim Ansari said...

ஊரும் சமுதாயமும் கேட்டுப்போகக் காரணம் செயல் படும் கெட்டவர்கள் மட்டுமல்ல செயல்படாத நல்லவர்களும்தான்.

நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கும் பலரால்தான் இப்படிப்பட்ட அநாகரிகம் அதிரையில் தொடர்ந்து அரங்க்கேறிக்கொண்டு இருக்கிறது. சகோதரர் எம் .கே அவர்கள் கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது.

//உள்ளூர் ஆலிம்கள் கண்டிக்காமல் மெளனமாக இருக்கிறார்களே! உடனடியாக அதிரை ஜமாத்துல் உலமாவை கூட்டி கந்தூரியும் கப்ரு வழிபாடும் ஹராம் என்று அறிவிக்க தயாரா? ரஹ்மானியா மதரஸாவிலிருந்து பத்வா வெளியிடுவார்களா?//

// வழிகேட்டை தடுக்காத உலமாக்களே நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! நீங்கள்தான் பொறுப்பளர்கள்.//

என்ற் கருத்துக்கள் சம்பந்தப்பட்டோர்கள் சிந்திக்க வேண்டியவை.

இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளை பலி கொடுத்துவிட்டு இந்த ஊரில் இயக்கங்கள் தேவையா? தெருவெங்கும் பள்ளிகள் கட்டிமுடித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? குடும்பத்தில் சிலபேர்கள் மதறாசாவில் ஓதினால் மட்டும் போதுமா? வருடா வருடம் ஒரு சில்லா இரு சில்லா என்று ஜமாத்தில் போனால் மட்டும் போதுமா? ஊரின் ஆரம்பத்திலும் நடுவிலும் வேரிலேயே வெட்டி வீசவேண்டிய பழக்கங்களுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கும் சமுதாயத்தோரைத் திருத்த மார்க்கம் கற்றோர் செய்வது என்ன?

அலாவுதீன் அவர்களின் மவுத்து அல்லாஹ் விட்டிருக்கும் எச்சரிக்கை.

ஆனால் அந்த மவுத்துக்கு அடுத்த நாளும் வழக்கம் போல் கூட்டு இரவும் கூத்தும் பாட்டும் நடந்திருக்கிறதே. இது அந்த மவுத்தைவிடக் கொடுமையல்லவா?

அதிரையில் அறிவுப் புரட்சி ஏற்படுத்தாதவரை இவை அழிந்து ஒழிய வாய்ப்பு இல்லை.

ZAEISA said...

ஒரு வெள்ளிக்கிழமை மாலை கொடியூர்வலம் எடுப்பதாக விளம்பரம்
செய்திருந்தார்கள்.அப்போது ஒரே ஜும் ஆ மட்டும்தான் வழக்கமாக
தொழுகை முடிந்தவுடன் எல்லோரும் இருங்கள் ஊர் விஷயமாக பேச
வேண்டியிருக்கிறது என்று அறிவிப்பு செய்திருந்தார்கள்.அப்போது
அந்தத்தெரு கமிட்டி தலைவரிடம் ஆலிம்சாமார்கள் கந்தூரி,மற்றும்
ஆடல்,பாடல்கள் எல்லாம் முஸ்லிமான நம்மளுக்கு நல்லதல்ல ,அதை
நாம் தவிர்த்துக்கொள்வது நல்லதுதானே என்று எடுத்துக்கூறியதும்,
அந்தக் கமிட்டித்தலைவர்,சரி ஆலிம்ஸா"நாமெல்லாம் ஒரே முஸ்லிம்தானே,உங்கத்தெருவுக்கும்,எங்கதெருவுக்கும் ஏன் சம்மந்தம் செய்து கொள்வதில்லை "என்று எதிர்த்துக் கேட்டார்.
அத்துடன் கூட்டம் கலைந்துபோனது........

U.ABOOBACKER (MK) said...

அஸ்ஸலாமு அலைக்கும்
இத்தளத்தில் கருத்திட்ட சகோதரர்கள், நமதூரில் ஏகத்துவப் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற வேண்டும்.ஒன்றுபட்டு செயல்பட்டு இஸ்லாத்தில் பெயரால் நடைபெறும் மடமைகள் களையப்படவேண்டும் என்ற தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்கள். அதிரை தாருத் தவ்ஹீத், குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் சட்டதிட்டங்கள்,செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக, மூத்த சகோதரர்கள் அதிரை அஹமது அவர்களை அமீராகவும்,ஜமீல் முஹம்மது சாலிஹ் அவர்களை செயலாளராகவும் கொண்டு இளைஞர்களுக்கு பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.பல இயக்கங்களில் உள்ள ஏகத்துவ கொள்கை சகோதரர்கள் இதில் பங்கெடுத்து செயல்படுகிறார்கள்.
கடற்கரைத் தெருவில் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியும் பிலால் நகரில் தாருத் தர்பியா என்ற பெயரில் தர்பியா, மற்றும் சிறார்களுக்கு குர் ஆன் ஓத கற்றுக்கொடுக்கப்படும் மதரஸாவும் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)மூலம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிலால் நகர் மர்கஸில் பெண்களுக்கான வாராந்திர சிறப்புச் சொற்பொழிவுகள் நமது அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் முதல்வர்,சகோதரி அஃப்ழலுல் உலமா ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கிய்யா அவர்களால் பல நல்ல தலைப்புகளில் நடைபெற்று வருகின்றது.

இது போன்ற நற்காரியங்கள் செய்ய பெரும் நிதி தேவை என்பதை சகோதரர்கள் அறிவீர்கள்.சென்னை மற்றும் அமீரகத்தில் ADT கிளைகள் அமைக்கப்பட்டு அவர்களின் பங்களிப்பை முடிந்த அளவு அளிக்கிறார்கள். கல்லூரி,மற்றும் தர்பியா சென்டருக்கு தங்கள் இடங்களை அல்லாஹ்வுக்காக தந்து உதவிய சகோதரர்கள் மறக்க முடியாதவர்கள்.

இம்மை மறுமையில் பலன் கிடைக்கும் இக் காரியங்களை மேலும் சிறப்பாக செய்ய சகோதரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டாமா?
சமூக அக்கரை கொண்ட என் அன்பு தம்பிகள் அப்துல் லத்தீப் (அர அல), M.H.J. சாதிக் போன்றவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ADT கிளைகள் அமைத்து, நம் மக்களை ஒருங்கிணைத்து நமதூரில் ADT மூலம் நடந்து வரும் நற்காரியங்களில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்,
ADT மின் அஞ்சல் குழுமத்தில் இணைந்து அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்வதுடன் உங்கள் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
மேலும் தகவலுக்கும் உங்களின் பங்களிப்புக்கும் கீழ்க்கண்ட மினஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
adiraiahmad@gmail.com
jameelms@gmail.com
mkaboobacker@hotmail.com

தகவலுக்காக ஒரு செய்தி:தர்ஹாவின் கபுருக்குச் சந்தனம் பூச சென்று மரணித்த பட்டத்து லெப்பை அலாவுத்தீன் அவர்களின் சகோதரிதான் நமது அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் முதல்வர் என்பது குறிப்பிடதக்கது. மார்க்கத்திற்கு புறம்பான கந்தூரி கப்ரு வழிபாடு போன்ற வழிகேட்டினை தன் குடும்பத்திற்கு சகோதரி தன்னால் முடிந்த அளவு சொல்லியிருக்கிறார்.

Meerashah Rafia said...

ஹ்ம்ம்.. ஹசன் ஹுசைன் (ரலி) அவர்களின் பெயரை சொல்லி வருடா வருடம் ஷிஆக்கால் மற்றும் சில அறிவாளிகளால் எடுக்கப்படும் பஞ்சா'விற்கும் நமதூர் கந்தூரி உரூசிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை..

ஷிஆக்கலாவது எதற்காக அந்த நாள் என்று ஓரளவு தெரிந்து செய்கின்றார்கள்.ஆனால் நம்மவர்கள் இறந்த அந்த பெரியவருக்காக எடுப்பதன்மூலம் என்னதான் சொல்லவருகின்றார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது.

ஒரு வேலை பக்தி முத்திபோய் "இசுலாத்தை எங்களுக்கு முழுமையாக எத்தி வைத்த வள்ளலே' என்ற பூரிப்பில் செய்கிறார்கள் என்றால்
"கந்தூரி முடிந்த இரவு அது என்ன அது அபிநயா க்ரூப்ஸ் என்ற பெயரில் "ரஜினிகாந்த், ரோஜா, விஜயகாந்த் என்ற பெயரில் கூத்து ஆட்டம் போடுறது.. இசுலாத்தை சொல்லிக்கொடுத்தவர்கள்தான் இதையின் சொல்லிக்கொடுத்தார் என்றால் காஃபிர் கூட கூட நம்பமாட்டார்கள்..

தூங்குபவனை எழுப்பலாம்..தூங்குபவன் போல் நடிப்பவனை ஒன்னும் செய்ய இயலாது.. இதை இன்னும் பல நூறாண்டிற்கு தொடரவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான இளைஞர்களாய் வலைத்துப்போட்டிருக்கின்றார்கள் போல.

உலமாக்களும் இது நடக்கவிருக்கும் சமயத்தில் இதை பற்றிய விழிப்புணர்வு பயான் குத்பா நேரத்தில் பண்ணவேண்டும்..சிலர் இதை செய்வதாகவும் கேள்விப்பட்டு சந்தோசம்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பானவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

"மடமையிலிருந்து விடுதலை பெறமாட்டோம்" என்ற எண்ணத்தில் இருப்போருக்காக நாம் எதுவும் செய்யவியலாது - அவர்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர.

ஆனால், "மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்" எனும் உறுதிகொண்டவர்களை இனங்காண்பதும் வாழ்த்தி வரவேற்பதும் நமது கடமையாகும்.

நமதூர் பிலால் நகரில் அமைந்துள்ள 'இஸ்லாமியப் பயிற்சி மைய'த்தில் கடந்த ஒருமாதகாலமாக நடைபெறும் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுள் 50 பேர் "இனிமேல் ஹந்தூரிக்குப் போகமாட்டோம்" என்று உறுதியாகப் புறக்கணித்துவிட்டனர், அல்ஹம்து லில்லாஹ்! இவர்கள் அனைவரும் வழக்கமாக இரு ஹந்தூரிகளுக்கும் சென்று வந்தவர்களாவர். இவர்களின் புறக்கணிப்பால் நடந்து முடிந்த கடற்கரைத் தெரு ஹந்தூரி 50 வருகையாளர்களை இழந்துவிட்டது.

இது அல்லாஹ்வின் பேரருளின் நேர்வழிக்கான முதற்கோடு எனலாம்.

மேற்சொன்ன மாணவ-மாணவியரைப் பாராட்டி, அவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்று இன்று அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் பிலால் நகர் மர்கஸில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஜமீல் எம் ஸாலிஹ்
செயலர், அதிரை தாருத் தவ்ஹீத்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு