அதிரைநிருபர் பதிப்பகம்
(அதிரையின் நிய்யத்து)


முதல் பிரசுரம்
தலைப் பிரசவமான
அதிரைநிருபர் பதிப்பகம்
இனி
புத்தகங்களின்
புக்ககம்

எவ்வகம் உதித்துப் பிறந்த
எண்ணங்களையும்
இனிமேல் பதிக்கும்
இவ்வகம்

கனவான்களின் கனவுகளையும்
கவிஞர்களின் சிறகுகளையும்
தத்துவங்களையும்
தனித்துவங்களையும்
காகிதங்களில் காக்கயிருக்கும்
காப்பகம்

இப் பதிப்பகம்
வெளியிடும் நூல்கள் மூலம்
சமூக அவலங்களின்மீது
உளியிடும்,
சிதிலமற்ற சமுதாயம்
செதிக்கியெடுக்கும்

ஊருலகம் வியக்கும் வண்ணம்
உறவகம் உவக்கும் படியும்
குறிக்கத்தகுந்த காரியங்களை
கோக்கயிருக்கும்
நூலகம்

நம்பகமான காரியங்களையும்
நபிமயமான போதனைகளையும்
நமக்காக சேர்த்துவைக்கும்
பெட்டகம்

நெடுந்தூரப் பயணத்திற்கு
நீர்சேர்த்து வைப்பதுபோல்
நினைவுகளைச் சேமிக்கும்
ஒட்டகம்

இந்தப் பதிப்பகம்
அதிரைக்கான இனிப்பகம்
கல்வியாளர்களின் களிப்பகம்

அச்சகம் வியக்க
இஜ்ஜகம் சிறக்க
அறிவை வளர்க்க
நிறைவாய்ப் பணிசெய்யும்
அதிரை நிருபர் பதிப்பகம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

28 கருத்துகள்

Unknown சொன்னது…

"முதல்" என்பதன் பொருளும் "தலை" என்பதன் பொருளும் ஒரே அர்த்தம் தரும் என்பதால்

முதல் பிரசுரம்
"சுக" பிரசவம்

--- என வரிகள் அமைந்தால் சரியாக இருக்கும் என நான் என்னுகிறேன்.

அச்சுப்பிழையா?
அல்லாமல் வரிகள் அவ்வாறு தான் அமையுமெனில் இக்கருத்தை புறகனிகவும்.

கவிதைத்தொகுப்பு அருமை.

நன்றி

sabeer.abushahruk சொன்னது…

சகோ. ஷஃபி அஹமது,

சிரமங்கள் ஏதுமின்றி பிரசுரிக்கப்பட்டது என்று, "சிரமங்கள் அற்று" பிரசுரித்ததைச் சொல்ல வந்தால் மட்டுமே "சுகப் பிரசவம்" என்கிற உவமைப் பொருந்தும். 

அதோடு, அடுத்தடுத்துப் பிரசுரிக்க இருக்கும் எண்ணத்தையும் " சுகப் பிரசவம்" தொக்கி நிறுத்தாது. 

ஒரு பிரசுரம், அதுவும் சுகப் பிரசவம் போல இலகுவாக பிரசுரிக்கப்பட்டது என்பதாக அர்த்தம் சொல்லி முடிந்துவிடும்.

ஆனால், பதிப்பகத்தின் நிய்யத்தோ "இந்த  முதல் பிரசுரம்... தலைப் பிரசவம்போல்தான்; அடுத்தடுத்துப் பிரசுரிக்க" என்பதாகும். 

'பிரசவம்' என்னும் உவமையைக் கையாண்டதன் காரணம்...

சிந்தையில் உருவாகி
சிறப்பான கருவாகி
சான்றோர்கள் கவனிப்பில்
சரியாக மெருகேறி
இயற்றியவர் இஷ்டம்போல்
இனிதாக ஈன்றெடுத்ததால்
பிரசுரிப்பு நடந்தது
பிரசவத்தைப் போல!

சுருக்கமாக,
பிரசுரிக்கப் "பட்ட" கஷ்டங்களையல்ல, பிரசுரிப்பின் துவக்கத்தைச் சொல்வதே நோக்கம்.

மிக்க நன்றி.

(பி.கி.: தங்களின் திருத்தம் புறக்கணிக்க தக்கதல்ல; விவாதிக்கத் தக்கது. எனவே, அதற்காக ஒரு பிரத்யேக நன்றி)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

"நன்றி" என்றொரு ஒரு வார்த்தை போதாது உங்களுக்கு !

இருப்பினும் ஒரு வினா !?

"அதிரையின் நிய்யத்" என்றது "அதிரையின் அகமென்று" சொல்வதற்கா ?

Unknown சொன்னது…

ஏற்கதகு விளக்கம்.

வார்த்தை அழகுற
சொற்றொடர் சிறப்புற
நேயர் நெகிழ

சூழ்நிலை கண்டு
ஆழ்பொருள் கொண்டு
களம் பல கண்டு
தொடரட்டும் உங்கள் கவிதொண்டு!!!

உம்மா டி, இந்த 4 வரி எழுத 2 மணி நேரம் யோசிச்சேன் காகா.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

சிறகொடிந்தப் பறவையைப்போல் இல்லாமல்
சிறகடித்துப் பறக்கின்ற சிந்தனைகள்
விறகொடித்துச் சமைத்திட்ட உணவினைப்போல்
விறுவிறுப்பை உணர்ந்தேனே உன்கவியில்

Yasir சொன்னது…

இப்பதிப்பகம் பண்புள்ள,பரந்தமனப்பான்மையுடைய,விவேகமும்,வேகமும் மிக்க,அனுபவம் நிறைந்த,ஆற்றல் மிக்க,அல்லாஹ் ஒருவனைத்தவிர மற்ற எதற்க்கும் அஞ்சாதவர்களின் அகங்களின் பிரதிலிபலிப்பு...கவிக்காக்காவின் வாழ்த்துக்கவிதை போல என்றும் மின்னும் இப்பதிப்பகம் ...சிறந்தவர்கள் உயர்ந்த விசயங்களை பிரதி பலனின்றி வாரி வழங்கிய சிறந்த தொடர்களும் ,கவிதைகளும் வெளிவர வேண்டும் அல்லாஹ் அதற்க்கு துணை நிற்ப்பான்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

பிரசுரமாய் உருவெடுத்த பதிப்பகம்
பிரசவமாய் வர்ணித்த பதிப்பகம்
பட்டினத்துக்கு கிடைத்த பதிப்பகம்
பக்குவம் பல பெற்ற பதிப்பகம்
படிக்கட்டாய் பண்படுத்தும் பதிப்பகம்
பெண்மணிகளை சிறப்பிக்கும் பதிப்பகம்
பெருமானாரின் வழி சொல்லும் பதிப்பகம்
பதினாறல்ல இன்னும் பல தரட்டும்! இப்பதிப்பகம்!

sabeer.abushahruk சொன்னது…

அபு இபுறாகீம்,

அதிரையில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் பலருக்கும் அதிரை ஓர் அறிவாளிகளின் ஊர் என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்கிற வேட்கை இருக்கும், இருக்கனும்.

இந்த வேட்கையானது, அதிரையைவிட்டு மொத்தமாக, நிரந்தர நோக்கத்தோடு குடிபெயர்ந்துவிட்ட அல்லது குடிபெயரும் எண்ணம் கொண்டவர்களிடம் இல்லாமல் போகலாம் அல்லது பச்சாதபத்தால் இருக்கவும் செய்யலாம். ஆனால், என்னைப் போன்ற, அதிரைநிருபரைப் போன்ற நிறைய பேருக்கு அதிரையில் இருந்துகொண்டே தொடர்ந்து வாழ்ந்து முடிக்கும் விருப்பம் இருக்குமல்லவா, அவர்களின் நிய்யத்களில் அகத்தின் ஆசைகளில் தலையாயது நமதூர் அறிவில் முன்னணி பெற வேண்டும் என்பதே.

அதற்காகத்தானே அதிரை நிருபரின் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' 'வினாடி வினா' 'விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்' எல்லாமே.

அந்த வேட்கையில் அடுத்த கட்டம்தான் பதிப்பகம். தொடர்ந்து அதிரை நிருபர் நூலகம், அதிரைநிருபர் வானொலி, அதிரை நிருபர் தொலைகாட்சி என்று பல கனவுகள் இருக்கின்றன. எல்லாம் எனதூருக்கான நிய்யத்து.

கலாம் காக்கா
முதலில்
கனவுதானே காணச்சொல்கிறார்.

தவறில்லையே?
முதல் கனவு பளித்ததா இல்லையா? அதிரைநிருபர் பதிப்பகம்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//என்னைப் போன்ற, அதிரைநிருபரைப் போன்ற நிறைய பேருக்கு அதிரையில் இருந்துகொண்டே தொடர்ந்து வாழ்ந்து முடிக்கும் விருப்பம் இருக்குமல்லவா, அவர்களின் நிய்யத்களில் அகத்தின் ஆசைகளில் தலையாயது நமதூர் அறிவில் முன்னணி பெற வேண்டும் என்பதே.//

நம் அனைவரின் ஆசைகளும் அதுவே இன்ஷா அல்லாஹ் !

ஆங்காங்கே தனித் தனி குழுவாக இருக்கும் அனைத்து நல்லுங்களுடனும் ஒவ்வாமை விலக்கி வெளிச்சம் கான வேண்டும்...

//தவறில்லையே?
முதல் கனவு பளித்ததா இல்லையா? அதிரைநிருபர் பதிப்பகம்?//

ஆமாம் கவிக் காக்கா !

அஸ்திவாரம் ஸ்டார்ங்க்தான்னு தெரியும், அடுத்த கட்டத்திற்கு படிகள்கட்டிட வேண்டியதுதான் இன்ஷா அல்லாஹ் !

Shameed சொன்னது…

வார்த்தைகளை
கோர்த்தேடுக்கும்
வார்த்தை
வித்தகரின்
கவி வரிகளின்
ஆழம் கூடிக்கொண்டே
போகுது

Unknown சொன்னது…

//இந்த வேட்கையானது, அதிரையைவிட்டு மொத்தமாக, நிரந்தர நோக்கத்தோடு குடிபெயர்ந்துவிட்ட அல்லது குடிபெயரும் எண்ணம் கொண்டவர்களிடம் இல்லாமல் போகலாம் அல்லது பச்சாதபத்தால் இருக்கவும் செய்யலாம். ஆனால், என்னைப் போன்ற, அதிரைநிருபரைப் போன்ற நிறைய பேருக்கு அதிரையில் இருந்துகொண்டே தொடர்ந்து வாழ்ந்து முடிக்கும் விருப்பம் இருக்குமல்லவா, அவர்களின் நிய்யத்களில் அகத்தின் ஆசைகளில் தலையாயது நமதூர் அறிவில் முன்னணி பெற வேண்டும் என்பதே.//

இக்கருத்தில் ஒத்து நானும் வழி மொழிந்து பயணிக்க விளைகின்றேன். இன்ஷால்லாஹ் படைத்தவன் துணை புரியட்டும்!!!

Unknown சொன்னது…

//இந்த வேட்கையானது, அதிரையைவிட்டு மொத்தமாக, நிரந்தர நோக்கத்தோடு குடிபெயர்ந்துவிட்ட அல்லது குடிபெயரும் எண்ணம் கொண்டவர்களிடம் இல்லாமல் போகலாம் அல்லது பச்சாதபத்தால் இருக்கவும் செய்யலாம். ஆனால், என்னைப் போன்ற, அதிரைநிருபரைப் போன்ற நிறைய பேருக்கு அதிரையில் இருந்துகொண்டே தொடர்ந்து வாழ்ந்து முடிக்கும் விருப்பம் இருக்குமல்லவா, அவர்களின் நிய்யத்களில் அகத்தின் ஆசைகளில் தலையாயது நமதூர் அறிவில் முன்னணி பெற வேண்டும் என்பதே.//

இக்கருத்தில் ஒத்து நானும் வழி மொழிந்து பயணிக்க விளைகின்றேன். இன்ஷால்லாஹ் படைத்தவன் துணை புரியட்டும்!!!

Unknown சொன்னது…

Dear brother Mr.Sabeer,

Excellent lines which relfects your passion and great intentions and expectations for our community.

There is force found in your lines that tries to bind and unit the intellects.

I too believe knowledge revolution can make huge impact on community.

May Allah accept our intentions.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

//அறிவில் முன்னணி பெற வேண்டும் என்பதே.//

அறிவில் முன்னேற்றம் கண்டு பல வருடங்களாகி விட்டன; இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன;இன்ஷா அல்லாஹ் இன்னும் எதிர்காலத்தில் முன்னேற்றம் பெற வேண்டும் (இடையில் இயக்கங்களின் மயக்கத்தில் இளைய சமுதாயம் நிரந்தரமாக வீழ்ந்திடாமல் இருக்குமானால்..)
முன்னோர்களில் எத்தனை அறிஞர்கள்/கவிஞர்கள் அதிரைக்குப் பெருமை சேர்த்தனர்! இந்நாளில் எத்தனை அறிஞர்கள்/கவிஞர்கள் அதிரைக்கு அப்பால் அக்கரையில் இருந்து கொண்டு அதிரையின்பால் அக்கறையுடன் எழுதுகின்றனர்.ஆனால், இவர்களை அடையாளம் காணுவதும்; அறிமுகப்படுத்துவதும் அதிரைப்பட்டினத்தின் வலைத்தளங்கட்குரியத் தார்மீகக் கடமையாகும். அதனாற்றான், அதிரை நிருபர் என்னும் வலைத்தளம் வழியாக - அதிரை அஹ்மத் என்னும் பெயரில் ஓர் ஆய்வாளர், ஜெமீல் என்னும் பெயரில் கணினித் தமிழறிஞர், சபீர் என்னும் பெயரில் ஒரு கவிவேந்தர்; இப்றாஹிம் அன்சாரி என்னும் பெயரில் ஓர் ஆய்வாளர்(டாக்டர்-முனைவர்), ஜாஹிர் என்னும் பெயரில் ஓர் உளவியல் மருத்துவர், அலாவுதீன் என்னும் பெயரில் ஒரு மார்க்க போதகர் ஆகியோரை நாங்கள் அறிய முடிந்தது. இவர்களின் ஆக்கங்கள் ”அதிரை நிருபர்” பதிப்பகம் வழியாக அகிலமெலாம் அறியப்பட வேண்டும் என்ற உங்களின் நிய்யத் கபூல் ஆகும் இன்ஷா அல்லாஹ்; அதற்கு எங்களின் துஆ உண்டு.

Unknown சொன்னது…

And...
As human beings and slaves of God Almighty, we(human) are the only rational beings to live in this world based on thinking and practicing based on acquired knowledge. Human development based on knowledge in every aspect(religious and wordly matters) is very critical. For other than human those creatures are having their own built in instinct, no need for such intellectual pursuance.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

எழுதுபவர்களின் ஆக்கங்கள் என்னும் குழந்தையைப் பிரசுரம் என்னும் பிரசவம் பார்க்கும் மருத்துவக் கூடம், இப்பதிப்பகம்! உண்மையில் ஆக்கங்கள் பெற்றெடுக்கும் பொழுதுப் பிரசவ வேதனை என்றாலும், அப்படிப் பெற்றெடுத்த ஆக்கம் என்னும் குழந்தையைத் திருடித் தன் குழந்தைபோல் மற்றத் தளத்தில் பதியும் ஈனர்களின் செயலை எண்ணும் பொழுது அதைவிட வேதனை உண்டாகும் என்பது எங்கட்கு மட்டும் உணரப்படும் ஓர் உண்மை. அதேபோல், எங்களின் ஆக்கங்கள் என்னும் குழந்தைகள் வெளியாகும் நிலைகண்டு “ஈன்றப் பொழுதின் தாயைப் போல்” ஈடில்லா மகிழ்ச்சிக்கும் ஆட்கொள்ளப்படுகின்றோம் என்பதும் எங்கட்கு மட்டும் உணரப்படும் ஓர் உண்மை. இதனை அழகாகச் சுருக்கமாகக் கவிதை வரிகளில் கோடிட்டுக் காட்டிய கவிவேந்தர் அவர்கட்கு , கவிதைகள் வனையப்படும் பொழுது உண்டாகும் வேதனையையும், கவிதைதகள் வெளியாகும் பொழுது உண்டாகும் மகிழ்ச்சியையும் உணர்ந்து கொண்டிருக்கும் அடியேனின் அன்பான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

வியாழன் தோறும் எங்கட்கு விடியலைக் காட்டும் அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் என்னும் பெயரில் ஓர் அற்புத மார்க்க அறிஞரை அறிமுகப்படுத்தியதும், அமெரிக்கக் கவிஞர் ஷஃபா அத் , இலண்டன் கவிஞர் ஜெஹபர் சாதிக்,ஆங்கிலக் கவிஞர்,அமீன்,வார்தைகளின் வசீகரன் கிரவுனார்,அதிரைச் சொல்லழகர் நெய்நா,சுட்டும் விழிச் சுடர் ஷா.ஹமீத் மற்றும் பலரையும் அறிமுகப்படுத்திப் பங்களிப்பாளர்களாய் வலம் வரச் செய்த அதிரை நிருபர் வலைத்தளம் இன்னும் அறிஞர்களை எங்கட்குக் காட்டுங்கள்;ஆர்வத்தை ஊட்டுங்கள்.

sabeer.abushahruk சொன்னது…

//அறிவில் முன்னேற்றம் கண்டு பல வருடங்களாகி விட்டன;//

கவியன்பன், கந்தூரிக்கு ஊருக்குப் போகலயா? :-)

sabeer.abushahruk சொன்னது…

கவியன்பன்,
தங்கள் பட்டியலில் மரபுக்கவிகளில் மனத்தை வென்ற கவியன்பனின் பெயர் விடுபட்டிருக்கிறது, சரி செய்யவும்.

அதிரை தாருத் தவ்ஹீத் சொன்னது…

நூற்கள் என்பதை நூல்கள் என்று எழுதிப் பழகவும்

sabeer.abushahruk சொன்னது…

//நூற்கள் என்பதை நூல்கள் என்று எழுதிப் பழகவும்//

சரி காக்கா, ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

அ.நி.: தயவுசெய்து காக்காவின் திருத்தத்தை இப்பதிவிலிருந்தே துவக்கவும். நன்றி.

(திருத்தத்திற்கான என் அனுமானம்:

நூல் என்பது பெயர்ச்சொல். நூல்கள் என்பது பன்மைக்கானப் பெயர்ச்சொல்.
நூற்றல் என்பது வினைச்சொல். எனவே, நூற்கள் என எழுதினால் பொருள்மயக்கம் ஏற்பட ஏதுவாகும்.)

ZAKIR HUSSAIN சொன்னது…

தமிழ்லெ விளையான்டிருக்கே...எப்படி இவ்வளவு தமிழை உனக்குள் ஒழித்து வைத்திருந்தாய்.?

Ebrahim Ansari சொன்னது…

சென்னை சென்றிருந்ததால் இந்த அற்புத கவிதையை- கனவுகளை நிஜமாக்கப் போகும் கவிதையை தாமதமாகவே படித்தேன். இன்ஷா அல்லாஹ்.

கரம் கோர்ப்போம். வெற்றி பெறலாம்.

Ebrahim Ansari சொன்னது…

கவியன்பரே! தன்னடக்கமா?
நீங்கள் தந்துள்ள பட்டியல் உங்கள் பெயர் இல்லாமல் முழுமை அடையாது.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.Impress செய்தபதிப்பகம்!
ஒவ்வொரு வரிகளும் செதுக்கியதா?இல்லை தமிழை பிறர் உபயோகிக்காமல் முன்னெச்சரிக்கையாக பதுக்கியதா?தங்க பதகத்தில் கவிதை ரத்தினங்கள். கவிஞரே தமிழை எங்களுக்கும் கொஞ்சம் விட்டுவைய்யுங்கள், உங்கள் கற்பனைத்திறனை எங்கள் மர மன்டை பாத்திரத்தில் கொஞ்சம் பிட்டு வையுங்கள்.வாழ்த்துக்கள்.

அதிரை தாருத் தவ்ஹீத் சொன்னது…

கல் + கள் = கற்கள் (விகாரம்)
கால் + கள் = கால்கள் (இயல்பு)
நூல் + கள் = நூல்கள் (இயல்பு)

oziththu = oLiththu

அதிரைநிருபர் சொன்னது…

//sabeer.abushahruk சொன்னது…
//நூற்கள் என்பதை நூல்கள் என்று எழுதிப் பழகவும்//

சரி காக்கா, ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

அ.நி.: தயவுசெய்து காக்காவின் திருத்தத்தை இப்பதிவிலிருந்தே துவக்கவும். நன்றி.//

Many Thanks for the notification.. Corrections made..

Meerashah Rafia சொன்னது…

நல்ல காரியத்திற்கு, இறுதி சடங்கில் இறுதியாக வந்து கலந்துக்கொல்வதுபோல் கடைசியாக பின்னூட்டமிட வந்தமைக்கு மன்னிக்கவும்..

நீண்டகாலமாகவே பலர் எம்மிடம் கேட்பார்கள் அதிரை நிரூபர் எத்தகையது, அதற்கும் பிற தளங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று..

அப்போது ஒரே வார்த்தையில் நான் சொல்வது "அது தினம் பூக்கும் ஒரு வாரமலர்"..காரணம் அங்கு நீங்கள் ஊர் சம்மந்தப்பட்ட செய்திகளை எதிர்பார்க்கமுடியாது. ஆனால் சுவாரஸ்யமான கவிதை,கட்டுரை போன்ற பல்சுவை பக்கங்கள் நிறைந்து அறிஞர்களும்,கவிஞர்களும் சூழ்ந்திருப்பர் என்றவாறு கூறுவதுண்டு.. ஆகையால் எம்மைப்பொறுத்தவரை நிருபர், பதிப்பகமாக மாறுவது என்னை அறியாமலே எதிர்பார்த்த ஓன்று.. வாழ்த்துக்கள்..நிறைய சாதிக்கவேண்டியுள்ளது..