Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - தொடர் - 10 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 04, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

அத்தியாயம் 7, 8 மற்றும் 9ல் இஸ்லாமியத் திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். மேலும் திருமணம் சம்பந்தமாக இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து பார்ப்போம்.

திருமணப் பத்திரிகை:

ஒரு சகோதரருக்கு வந்த திருமணப் பத்திரிகையைப் பார்த்தேன், அசந்து விட்டேன். ஏ4 சைஸ் அளவு, எட்டு பக்கங்கள் கொண்டது (ஒரு சிறிய புத்தகத்தின் எடை). பார்த்ததும், புரிந்தது அவர்களின் பணத்தின் எடையும். பத்திரிகையிலும், பிரமாண்டமான செலவுகளிலும் பணத்தை வெளிப்படுத்திக் காட்டுவது, பணம் படைத்தவர்களுக்கு கௌரவப் பிரச்சனையாக இருக்கிறது.

பத்திரிகையை நாம் கொண்டு போய் கொடுக்கும் இடங்களில் அவர்கள் கேட்கும் கேள்வி:

பெண் எந்த ஊர்?
அல்லது மாப்பிள்ளை எந்த ஊர்?
எந்த தேதியில் திருமணம்?
எந்த இடத்தில் திருமணம்?
மாப்பிள்ளை என்ன படித்திருக்கிறார்?

இப்படிப்பட்டக் கேள்விகளைக் கேட்கிறார்கள். நாமும் பதில் சொல்கிறோம். பத்திரிகையும் கொடுத்து, பின் பத்திரிகையில் உள்ளவற்றை வாய்மொழியாகவும் ஒவ்வோர் இடத்திலும் கூறிவருகிறோம். இப்படி வாய்மொழியாக நாம் சொல்லிவிடுவதால் பத்திரிகைத் தேவையா? என்ற கேள்வியும் எழுகிறது.

எளிமையான திருமணத்தில் பரக்கத்:

'குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள் நூல்: அஹ்மத் 23388)

மேற்கண்ட நபிமொழி மூலம் குறைந்த செலவில் மிக எளிமையாக நடத்தப்படும் திருமணத்தில்தான் 'பரக்கத்' இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் பரக்கத் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நமது தலைவர் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதை நமது குடும்பத்து திருமணங்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

எதில் போட்டி போட வேண்டும். நீ ஒரு லட்சம் செலவு செய்தாயா? நான் 50 ஆயிரத்தில் திருமணத்தை நடத்திக் காட்டுகிறேன் என்று போட்டி போட வேண்டும். நம் சமுதாயம், அதிக செலவு செய்வதில் போட்டி போடுகிறது. அவர்கள் நடத்திய திருமணத்தை விட நம் வீட்டு திருமணத்தை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கடனிலும், வட்டியிலும் விழுந்து விடுகிறார்கள். வசதியுள்ளவர்கள் செய்யும் காரியத்தை பார்க்கும் 'ஏழைகளும்' தங்களுக்குத் தாங்களே சிரமங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

திருமணத்தில் குத்பா ஓத ஆலிம்கள் தேவையா?

...நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்களின் மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து,) 'என்ன இது, அப்துர் ரஹ்மான்!" என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நான் அன்சாரிப் பெண்ணொருவரை மணம் புரிந்து கொண்டேன்" என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)   (புகாரி : 3937).

இந்த நபிமொழி என்ன சொல்கிறது என்று புரிகிறதா? இறைவனின் தூதராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கும்   நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் திருமணத்தில் அழைக்கப்படவில்லை. வாசனை திரவியத்தின் கரையைக் கண்டு வியந்து நபி(ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். ''ஏன் என்னை அழைக்கவில்லை என்ற கோபம் வரவில்லை''. எப்படி இயல்பாக இருப்பதற்கு (இந்தக்காலத்தில் நடக்கும் திருமணத்தில் நடக்கும் வீண் ஆடம்பரம், வீண் பந்தா எதுவும் இல்லாமல்) நபித்தோழர்களை, இறுதி நபி(ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள், என்பதை படிக்கும் பொழுது ஆச்சர்யத்தின் உச்சிக்கே  போய் இப்படி ஒரு இயல்பான தலைவரா?, தோழர்களா? என்று நம்மை வியக்க வைக்கிறது. (இப்படி ஒரு தலைவரை இன்றுவரை உலகம் கண்டதில்லை. வேறு எந்த சமுதாயத்திற்கும் கிடைக்காத அருமை தலைவர் நமக்கு கிடைத்திருப்பதற்கு நாம் அதிகளவு வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்).

நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது:

நான் எவ்வளவு பெரிய ஆலிம், நான் சமுதாயத் தலைவன், நான் ஜமாத் தலைவன், நாங்கள் ஊர் பிரமுகர்கள், ''எங்களை மதிப்புக் கொடுத்து அழைத்தார்களா?'' என்று குறைக் கூறி விரோதம் பாராட்டுகிறார்கள்.

இறைத்தூதரின் உண்மை வாழ்வை அறிந்திருந்தால், இவர்கள் கூறும் மதிப்பு என்ற பேச்சே அடிபட்டுப் போகும். மேலும் திருமண வீட்டுக்காரர்களின் மேல் குறை கூறவும் மாட்டார்கள்.

வலீமா விருந்து

திருமணத்தில் 'விருந்து' என்பது முக்கியமாக இருப்பதால் இது சம்பந்தமாக வரும் நபிமொழிகளைப் பார்ப்போம் :

...நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்களின் மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து,) 'என்ன இது, அப்துர் ரஹ்மான்!" என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நான் அன்சாரிப் பெண்ணொருவரை மணம் புரிந்து கொண்டேன்"என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?' என்று கேட்க, 'ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்" என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பதிலளித்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'ஓர் ஆட்டை அறுத்தாவது வலீமா மணவிருந்து கொடு" என்று கூறினார்கள்.       (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)   (புகாரி : 3937).

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒரு சிலவற்றிற்கு இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாக கொடுத்தார்கள். (1 முத்து '750' கிராம் ஆகும்) (அறிவிப்பவர்: ஸஃபிய்யா பின்து ஷைபா (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. (அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம்).

மேற்கண்ட நபிமொழிகள் மூலம்,  ''மணமகன்தான் 'வலீமா' விருந்து கொடுக்க வேண்டும்'' என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. 'கடன்' வாங்கி பெருமைக்காக  வலீமா விருந்து கொடுக்க வேண்டியதில்லை, அவரவர் வசதிக்குத் தக்கவாறு விருந்து அளிக்கலாம். ''கடன் என்பது அடுத்தவர்களின் உரிமை என்பதை மனதில் வைப்பது நலம் அளிக்கும்''.  இத்தனைப் பேருக்கு சாப்பாடு வேண்டும் என்று ''பெண் வீட்டில் 'யாசகம்' கேட்டு வாங்கி சாப்பிடுவது, மார்க்கம் அனுமதித்த வழிமுறை கிடையாது''.

விருந்திற்கு செல்வந்தர்களை மட்டும் அழைப்பது:

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மணவிருந்து உணவே, உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அனஸ்(ரலி)   (புகாரி : 5177).

சில இடங்களில் செல்வந்தர்கள் மட்டும் சிறப்பாக கவனிக்கப்படுகிறார்கள். ஏழைகள் அழைக்கப்பட்டிருந்தால், அவர்களின் உள்ளத்தில் குழப்பம் ஏற்படுகிறது. நாம் அங்கு சென்றால் நம்மை கவனிப்பார்களா? அலட்சியப்படுத்தி விடுவார்களா? என்ற தயக்கத்தோடு செல்கிறார்கள். சில பேர், போய் மன உளைச்சலுக்கு ஆளாவதை விட போகாமல் இருப்பதே நல்லது என்று இருந்து விடுகிறார்கள்.

திருமணத்திற்கு வருபவர்களை 'ஏழை, பணக்காரர்கள்' என்ற வித்தியாசம் பார்க்காமல் இருவரையும் ஒரே மாதிரி கவனிப்பதில்தான் 'நன்மை' இருக்கிறது.

வாசகர்களுக்கு கேள்விகள்:

ஆடம்பரமாக, அதிக செலவில் பத்திரிகை அடிக்கலாமா?

எளிமையான திருமணம் எப்படி நடத்தப்பட வேண்டும்?

திருமணத்தில் குத்பா ஓத ஆலிம்கள் தேவையா?

இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
அலாவுதீன்.S

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர்... காக்கா,

திருந்தி வரும் அதிரையில் இன்னும் மாற்றங்கள் நிகழ்ந்து மகிழ்வைத் தரும் இன்ஷா அல்லாஹ் !

Unknown said...

Assalamu Alaikkum,

The trend is changing in our place. But, still just for keeping the 'prestige' some people are going in wrong path(in marriage) which is not desirable practices in Islam. The reason is that we have been influenced by other non islamic cultures and their customs in marriage and parties and almost all(invitation, parties, dowry). I hope all are reverting nowadays to right path with more awareness of islamic knowledge.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர்... காக்கா,

திருந்தி வரும் அதிரையில் இன்னும் மாற்றங்கள் நிகழ்ந்து மகிழ்வைத் தரும் இன்ஷா அல்லாஹ் !

Shameed said...

//ஆடம்பரமாக, அதிக செலவில் பத்திரிகை அடிக்கலாமா?//
பத்திரிகை ஆடம்பரமா அடித்தால் பத்திரிகை அடித்து (பிரிண்டர்ஸ்)கொடுப்பவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கைதான்!!

//எளிமையான திருமணம் எப்படி நடத்தப்பட வேண்டும்?//
ஊரில் இறைச்சி விலை குறைந்திருக்கும்போது பெரும்பாலான வலிமா விருந்து திருமணங்களை நடத்திவிட வேண்டும்

//திருமணத்தில் குத்பா ஓத ஆலிம்கள் தேவையா?//

அங்கு திருமண வீட்டாரில் யாருக்காவது குத்பா ஓத தெரிந்தால் அங்கு ஆலிம்கள் தேவையில்லை .ஆனால் ஆலிம்கள் தான் குத்பாஓத வேண்டும் என்று பஞ்சாயத்துக்கள் அடம்பிடிக்கின்றது முதலில் இது போன்ற அட்டு பஞ்சாயத்துக்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பா சொல்லி இவர்களை திருத்தணும்.

Unknown said...

Generally Aalims are scholars specialized in reading Al Quran, deep knowledge in Sharia because they have studied in Madrasa for certain period, they know better than normal guys. Its recommended to invite them for Nikah, and no objection should be there for Quthba for Nikah by Aalim.

Please note that we had not been arabic traditional people who grasp all in Sharia, we know about our ancesters's way of living and practicing Islam in Tamil Nadu, India. There has been customs of inviting Aalims to Marriage. It could be due to the lack of knowledge in the initial days(at the dawn of Islam in our place).

Nowadays after our brothers/sisters reaching various parts of Islamic world gain knowledge and understanding about Sharia more. So, it makes contradicts with the whatever have been going in our community already.

We have to admit and accept the knowledge revolution in our brothers,sisters in Sharia. But its highly recommended the changes should be gradual by various awareness making discussions, healthy debates if necessary, but not radical changes, making conflicts breaking peace in the community.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மார்க்கத்தில் மணம் பற்றிய நல்ல விளக்கங்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

வலையுகம் said...

பயனுள்ள பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர

Yasir said...

இதனை படிக்கும் நம் அனைவரும் முடிந்த அளவிற்க்கு இதன் படி நடக்க முயற்ச்சிக்க அல்லாஹ் துணை செய்யவேண்டும்...ஆனால் ஒரு ஆடு வெட்டிகலரி கொடுத்தால் காரி துப்பியேஅந்த எச்சினால நம்மை சாகடுச்சுடுவாங்க...மக்கள் மனநிலை மாற வேண்டும்...தொடருங்கள் காக்கா

//பெரிய ஆலிம், நான் சமுதாயத் தலைவன், நான் ஜமாத் தலைவன், நாங்கள் ஊர் பிரமுகர்கள், ''எங்களை மதிப்புக் கொடுத்து அழைத்தார்களா?'' என்று குறைக் கூறி விரோதம் // வெளியூர் கல்யாணமா இருந்தா ஊர்ஓலை(இந்த பெயரை மாற்ற மாட்டாங்களா ) வேற கொடுக்க மாட்டாங்க

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நமதூரின் ஒரு மூத்த ஆலிம் அவர்கள் தன் மூன்று மகன்களுக்கும் ஈத் பெருநாள் அன்று மரைக்காப்பள்ளியில் ஊரே புத்தாடை அணிந்து, நறுமணங்கள் பூசி, ஒவ்வொரு வீட்டிலும் கறியும், கடல்பாசியும், வட்லப்பமும் தயார் நிலையில் இருக்கும் அந்த உன்னதமான நேரத்தில் பெருநாள் தொழுகை முடிந்த கையோடு தொழ வந்த எல்லோரையும் சிறுது நேரம் அமரச்செய்து குத்பா ஓதி பின் முறையே நிக்காஹ் செய்து வைத்து வந்தவர்களுக்கு பேரித்தம் பழமும், கல்கண்டும், தேநீரும் என கொடுத்து உபசரித்து வெறும் ஆயிரம் ரூபாய்க்குள் சிறப்புடன் திருமணத்தை நடத்திக்காட்டி இருக்கிறார்கள்.

இது போல் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு திருமணங்களை நடத்த ஒரு தீர்க்கமான முடிவெடுத்துக்கொண்டால் தேவையில்லாமல் நம்மவர்களின் வருடங்கள் பல வெளிநாடுகளில் திறந்து வைத்த பெட்ரோல் காற்றில் கரைந்து நாசமாவது போல் ஆகாமல் பாதுகாக்கப்படும் அல்லவா?

ந‌ம்மூர்க்கார‌ர்க‌ள் ம‌ட்டும் அந்த‌க்கால‌ம் முத‌ல் இந்த‌க்கால‌ம் வ‌ரை அவ‌ர‌வ‌ர் வீட்டுத்திரும‌ண‌ங்க‌ளுக்கு செல‌வு செய்த‌ ப‌ண‌ங்காசுக‌ளை க‌ண‌க்கிட்டால் அதில் எத்த‌னையோ பொறியிய‌ல் க‌ல்லூரிக‌ளையும், ம‌ருத்துவ‌க்க‌ல்லூரிக‌ளையும், மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளை உருவாக்கும் அர‌பிக்க‌ல்லூரிக‌ளையும், எல்லா வ‌ச‌திவாய்ப்புக‌ளுட‌ன் கூடி 24 மணி நேரமும் இயங்கும் ந‌வீன‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும், ப‌ல‌ருக்கு வேலைவாய்ப்ப‌ளிக்கும் தொழிற்சாலைக‌ளையும், மீன் பிடி விசைப்ப‌ட‌குக‌ள் உற்ப‌த்தி செய்யும் தொழிற்சாலைக‌ளையும், தேங்காய் மூல‌ம் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டும் எத்த‌னையோ பொருட்க‌ளின் உற்ப‌த்தி தொழிற்சாலைக‌ளையும், தரமான‌ விளையாட்டு ஸ்டேடிய‌ங்க‌ளையும், அர‌சை எதிர்பார்க்காம‌ல் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்ட‌ ந‌வீன‌ பேருந்து நிலைய‌த்தையும், மின்சார‌ம் உற்ப‌த்தி செய்யும் துணை மின் நிலைய‌ங்க‌ளையும் என‌ இன்னும் இங்கு ப‌ட்டிய‌லிட்டு வ‌ரிசைப்ப‌டுத்த‌ முடியாத‌ எத்த‌னையோ ந‌ல்ல‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ளை நம் ம‌க்க‌ளுக்காக‌, அக்க‌ம் ப‌க்க‌த்து கிராம‌, ஊர்ம‌க்க‌ளின் ப‌ய‌ன்பாட்டிற்காக‌ நிச்ச‌ய‌ம் ஏற்ப‌டுத்தி இருக்க‌ முடியும்?

(ஆமாங்க‌. ஒரு பொம்புள‌ப்புள்ளைய மட்டும் வ‌ள‌ர்த்து அதுக்கு க‌லியாண‌ம் முடிக்க‌ ந‌கை, வீடு, ம‌னை என‌ செட்டில் ப‌ண்ண‌ இப்பொழுதுள்ள‌ கால‌த்தில் குறைந்த‌து 30, 40 ல‌ட்ச‌ங்க‌ளாவ‌து தேவைப்ப‌டுகிற‌த‌ல்ல‌வா? அது மாதிரி ஊர்லெ உள்ள‌ எல்லாப்பொம்புள‌ப்புளைக‌ளுக்காக‌ அவ‌ர‌வ‌ர் பெற்றோர், உட‌ன் பிற‌ந்தோர் செல‌வு செய்த‌தை உங்க‌ளால் துல்லிய‌மாக‌ க‌ண‌க்கிட்டு கூற‌ முடியுமா? அது 2ஜி ஸ்பெக்ட்ராம் அலைக்க‌ற்றை ஏல‌ம் போல் எங்கோ போய் நிற்கும‌ல்லவா?)

என்னாப்ப‌ண்ற‌து ந‌ம்மூர் ந‌ட‌ப்புக‌ளைப்ப‌ற்றி எழுத ஆரம்பித்தால் பின்னூட்ட‌ க‌ருத்துக்க‌ளெல்லாம் ஒரு பெரும் க‌ட்டுரையாக‌ ஆகி விடுகிற‌து........

அலாவுதீன் காக்காவின் அற்புத‌மான‌ இந்த‌ தொட‌ர் இனிதே தொட‌ர‌ட்டுமாக‌.........

Ebrahim Ansari said...

சகோதரர் அலாவுதீன் அவர்களின் உள்ளார்ந்த கருத்துக்களின் தொடர்ச்சி.

ஏற்றமிகு எண்ணங்கள்.

எல்லோரும் கடைப்பிடிக்க எளிய திருமணம் என்கிற எண்ண விதை விதைத்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து தம்பி நெய்னா அவர்களின் சுட்டிக்காட்டும் உதாரண நிகழ்வு. அனைத்துமே ஒரு எண்ணத்தை இந்த மண்ணில் வாழ்பவர்களின் நெஞ்சில் விதைத்து இருக்கின்றன. இனி சிறுக சிறுக மாற்றங்கள் வரவேண்டுமென து ஆச செய்வோம்.

ZAKIR HUSSAIN said...

//ஆடம்பரமாக, அதிக செலவில் பத்திரிகை அடிக்கலாமா?//

விருந்து இருக்கா என்று தேட உதவும் ஸ்டேசனரிதானே..ஏன் அதிக செலவு???
- என் உறவினரின் கமென்ட்

sabeer.abushahruk said...

மார்க்க வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும் எளிமையானத் திருமணங்களே இஸ்லாமிய நெறி என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறாய்.

பல வாழ்வியல் நடைமுறைகளை இஸ்லாமிய அடிப்படையில் விளக்கி வரும் இத்தொடர் எங்களுக்குக் கிடைத்தப் பெரும் பரிசு, நீ செய்யும் பேருபகாரம் சகோதரனே!

அல்லாஹ் ஆதிக் ஆஃபியா, அலாவுதீன்.

sabeer.abushahruk said...

கேள்விகளுக்கான என் பதில்கள்:

அதிக செலவில் அழைப்பிதழ்கள் அவசியமில்லைதான். மற்றொரு கோணத்தில், நாம் விரும்பும் அழைப்பிதழ் அதிக விலையுடையதாகவும் நம்மால் வாங்கமுடியும் என்கிற பொருளாதாரத் தகுதியில் நாம் இருப்பின்...ஏன் கூடாது?

அதிக விலையின் அளவுகோல் என்ன? 1000 ரூபாய் வருமானக்காரனுக்கு 10 ரூபாய் அழைப்பிதழ் விலை உயர்ந்தது என்றால் 1,00,000 ரூபாய் வருமானத்தில் உள்ளவனுக்குமா?

sabeer.abushahruk said...

எளிமையை, திருமணத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும்தான் மார்க்கம் வலியுறுத்துகிறது. அதோடு சேர்த்துத் திருமணத்திலும் என்றுதான் கொள்ள வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆயினும் எது எளிமை என்று தீர்மானிப்பதில்தான் சூட்சுமமே இருக்கிறது. ஏறியும் இறங்கியும் நிலையில்லாதிருக்கும் ஈமானோடுதான் என்னையும் சேர்த்து ஏராளமானோர் இருக்கின்றனர்.

செல்வம் படைத்தவருள் செலவத்தைச் செலவு செய்ய மருகும் பலரும்கூட "மார்க்கம்" "எளிமை" என்று மேற்கோல் காட்டி கஞ்சத்தனத்துக்குள் முடங்கி விடுகின்றனர்.

வலிமா விருந்தை மார்க்கம் அனுமதித்திருக்கும்போது கொடுக்கும் வசதியிருந்தால் உற்றார் உறவினர் தோழர்கள் ஏழை எளியோருக்கு ஏன் பிரியாணி போடக்கூடாது?  ஏன்?

அப்படி சாப்பாடு போடுவதை மார்க்கம் தடுக்காதபோது "ட்டீ பன்னோடு முடிச்சுக்கோங்க" என்று சொல்ல நாம் யார்?

sabeer.abushahruk said...

Dear bro. Ahmad Ameen,

aSSalaamu alaikkum varah...

Waiting for changes to happen is not at all a problem  on those conflicts whichever is not crystal clear. 

But, tolerating the wrong preachings of some Alims on those concepts which are well understood by even illiterates, is not necessary.

For example, when we allow such kind of Aalims whose motive is to make some money in weddings, the socalled dhuaa they ask is not acceptable at all.

I don't think it is obvious to compromise in our Faith!

KALAM SHAICK ABDUL KADER said...

வினா:ஆடம்பரமாக, அதிகச் செலவில் பத்திரிகை அடிக்கலாமா?

விடை:
நேரில் சென்று அழைப்பதால் கண்ணியம் கொடுப்பதாக நம் அழைப்பை மதித்து வருவார்கள்; அப்பொழுது நினைவூட்டலுக்காக அழைப்பிதழ் அவசியாமாகின்றது; தகுதித் தக்கவாறு அழைப்பிதழ் அச்சடிக்கலாம்.

வினா:எளிமையான திருமணம் எப்படி நடத்தப்பட வேண்டும்?

விடை: வலிமா விருந்தில் மட்டும் தான் இப்பொழுது அதிகச் செலவு உண்டாகும்; இதனைத் தவிர்க்கச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் ,”களரி” வைத்து அனுபவப்பட்ட மூத்தோர்ச் சொல்லைக் கேட்டு நடந்தால் வீண் விரயத்தைத் தவிர்க்கலாம்.


வினா:திருமணத்தில் குத்பா ஓத ஆலிம்கள் தேவையா?

விடை:
இந்த விடயத்தில் ஒரு திருமணம் நிக்காஹ் சபையிலேயே நின்று விட்டப் பரிதாபமான நிகழ்ச்சி இன்றும் என்னை வாட்டி எடுக்கும் நெகிழ்ச்சி. மார்க்கத்தில் எல்லா விடயங்களிலும் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் பெருகுவதால், குழப்பம் தான் வளர்கின்றன. நண்பர் அமீன் அவர்களின் கருத்தும் ஏற்புடையதே; கவிவேந்தரின் கருத்தும் ஏற்புடையதே; ஆனால், நடைமுறை சிக்கலால், ஒரு திருமணம் அன்று நிறுத்தப்பட்டும், மீண்டும் “மன்னிப்புக் கேட்கப்பட்டு” நடத்தப்பட்டதும் இன்றும் எல்லாரும் அறிந்து வைத்திருப்பதால் இப்பொழுதெல்லாம் இந்த விடயத்தில் “பிறைக் கணக்கு போல” ஒத்துப் போக வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). விரிவாகவும், சுருக்கமாகவும் கருத்திட்ட அன்புச்சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
ஏற்புரை விரிவாக தரவேண்டும் என்று விரும்பினாலும், பணிச்சுமை இடம் கொடுக்கவில்லை (வருந்துகிறேன்). இன்ஷாஅல்லாஹ்! அடுத்த தொடரில் மேலதிக விளக்கத்தைப் பார்க்கலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு