இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடித்தளம்- குடும்ப உறவுகள்.(மனைவி).
மனைவியை BETTER HALF என்று சொல்வார்கள். ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்பும் ஒரு பெண் இருக்கிறார்’ என்றும் சொல்வார்கள். ஒரு நல்ல மனைவி ஒரு குடும்பப்பொருளாதாரத்தின் அடிப்படை என்பதை யாரும் மறுக்க இயலாது. இன்னும் சொல்லப் போனால் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட மற்றக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச்செய்பவள் அன்னை என்கிற கருத்து ஒரு சாதாரணமான கவிதை வரியில்ல. மனைவியாக வருபவள் நல்லவளாக சிறந்த நிர்வாகியாக பாசமுள்ளவளாக பண்பாடு மிக்கவளாக உள்ளதைக் கொண்டு நல்லது செய்பவளாக அமைந்துவிட்டால் அது எத்தனை பெரும் பேறு என்பதையும் அப்படி அமையாத இல்லாத குடும்பங்களின் பொருளாதாரம் எவ்வளவுதான் பெரும் பணம் படைத்த குடும்பமாக இருந்தாலும் சீர்கேட்டுக் கிடப்பதையும் நாம் கண்ணால் காண முடியும்.
நான் குறிப்பிடப்போவது நான் அறிந்த இரு குடும்பங்களின் கதை. எனக்குப் பல குடும்பங்களின் கதைகள் தெரியும். காரணம் குறைந்தது ஒரு பத்து குடும்பங்களுக்கு நான்தான் எழுத்தர். அறுபதுகளில் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உழைத்துக் கொண்டிருந்த குடும்பத்தலைவர்களுக்கு- கடிதங்கள் எழுதுவதும் வரும் கடிதங்களை படித்துச் சொல்வதும் எனது முக்கியப் பணியாக இருந்தது. இதற்காக ஒரு கடிதத்துக்கு இரண்டணா முதல் நாலணாவரை கிடைக்கும் பல மனிதர்களின் . வாழ்க்கைப் பாடங்களைப் படித்துக் கொள்ளவும் மனிதர்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் இவை எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. இப்படி நான் அறிந்த இரு குடும்பெண்களின் மாறுபட்ட குணமுடைய இரு மனைவிகளைப் பற்றி இங்கே சுருக்கமாக சொல்லப் போகிறேன். அந்த இரு குடும்பத்தலைவிகளும் இன்று உயிருடன் இல்லை. (இன்னாளில்லாஹி) அவர்கள் என்னை மன்னிபபார்களாக. எனது நோக்கம் மனைவிகள் எப்படி குடும்ப பொருளாதாரத்தை உருவாக்க கருவியாக இருக்கிறார்கள் என்பதை சுட்டுவதே.
நான் சொல்லப் போகும் ஒரு குடும்பத்தின் தலைவர் மலேசியாவில் இருந்து மாதாமாதம் ஐந்து தேதிக்குள் கிடக்கும்படி இருநூற்று ஐம்பது ரூபாய் பணம் அனுப்புவார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை. சொந்த வீடு. இந்தப் பணத்தைத் தவிர தம்பிடி காசுகூட இடையில் அனுப்ப மாட்டார். ஊருக்கு வரும்போது ஒரு பவுன கூட கொண்டு வர மாட்டார் என்று அவர் மனைவி புலம்புவார். . ஊருக்கு வந்துவிட்டு திரும்பி மலேசியா போகும்போது கப்பல் பயணச்சீட்டுக்கு அவரிடம் பணம் இருக்காது. அவர் யாரிடமாவது கடன் வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்பார். மனைவியும் கடன் வாங்கி வந்து கொடுப்பார்கள். அந்தக் கடனை முதல் மாதம் செலவுப் பணத்தோடு சேர்த்து அனுப்பிவிடுவார். நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்படி வெளியில் கடன் வாங்கியதாக அந்தக் குடும்பத்தலைவி கொண்டுவந்து கணவரிடம் கொடுத்த பணம் உண்மையில் கடன் வாங்கியது அல்ல. கணவருக்குத்தெரியாமல் அந்த அன்புத்தாயே சிறு சேமிப்பாக சேர்த்த பணம். அது மட்டுமல்ல பிள்ளைகளுக்கு பசி இல்லாமல் வயிறார உணவு, நியாயமான உடை, சமூக / குடும்ப காரியங்களில் உறவினர்களின் விஷயங்களில் கவுரவத்தொடு நடப்பது தர்மம் முதலிய அத்தனை காரியத்திலும் கச்சிதமாக செய்து கணவர் அனுப்பியதிலேயே மிச்சம் பிடித்து தன் மகளுக்காக கிட்டத்தட்ட எண்பது பவுன வரை நகைகளும் சேர்த்து வைத்து சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார். இந்த எண்பது பவுன்களும் மலேசியக் கணவரால் அனுப்பப்பட்டதோ அல்லது அதற்காக தனியாக பணம் அனுப்பி வாங்கப் பட்டதோ அல்ல! அல்ல! அல்ல!. இன்று பிள்ளைகளும் தலை எடுத்து அல்லாஹ் உதவியால் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மாத வருமானம் இரு நூற்று ஐம்பது ரூபாயில் மரியாதையாக குடும்பம் நடத்திக் காட்டிய பெருமை நிறைந்த பெருமகள் அவர். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக்! ( எனது தபால் எழுதும் கூலியுடன் கூடவே தன் கையால் செய்த பொரிவிலங்காய் உருண்டை, அறிப்புப் பணியாரம் எல்லாம் தருவார்.)
இதற்கு நேர்மாறான இன்னொரு குடும்பத்தலைவியையும் நான் சுட்டிக் காட்டவேண்டும். இவரது கணவர் சிங்கப் பூரில் ஒரு தேநீர் விடுதி நடத்தி வந்தார். நல்ல சாம்பாத்தியம். நிறையப் பணம் தொடர்ந்து அனுப்புவார். இரண்டே பிள்ளைகள். ஊர் வரும்போதெல்லாம் நிறைய நகைகள் கொண்டு வருவார். ஆனால் இவர் மனைவி ஒரு “தீங்கலி”. ஊதாரித்தனமாக செலவு செய்வார். மீன்கடைகளில் விலை பேசாமல் மீனை வாங்கி வந்து சமைப்பார். மளிகைக் கடைகளில் கடன்வைத்து சாமான்களை வாங்குவார். கையில் பணம் இல்லாவிட்டால் எதையும் தள்ளி வைக்க மாட்டார். வாங்கக் கூடாத இடங்களில் வாங்கக் கூடாத தெருக்களில் ஆண்களிடமும் கூட அதிக வட்டிக்கு வட்டிக்கு வாங்கியாவது அனாவசிய ஆடம்பர செலவுகளைச் செய்வார். பால்காரருக்குப் பணம் தர மாட்டார். பட்டுக் கோட்டைக்கு அடிக்கடி போய் இனிப்பு காரம் என்று பொட்டலம் பொட்டலமாக வாங்கி வருவார். கணவர் அடிக்கடி சிங்கப் பூரில் இருந்து அனுப்பும் துணிமணிகள் பற்றாமல் அடிக்கடி ஜவுளி எடுப்பார். ஆயிரக் கணக்கில் கணவரிடமிருந்து பணம் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தாலும் கணவருக்கு எப்போதும் பணம் கேட்டே கடிதம் எழுதுவார். கணவர் ஊர் வரும்போதெல்லாம் கடன்காரர்கள் படையெடுத்து வருவார்கள். இடையில் சிங்கப் பூரில் சாலை ஓரத்தில் கணவர் வைத்திருந்த கடைக்குரிய இடத்தை அந்த நாட்டு அரசு எடுத்துக் கொண்டது. கணவர் ஊரோடு வரும்போது நானூறு இனிப்பு நீரையும் கொண்டுவதார். சேமிப்பு இல்லாததால் இன்னும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது." தேவை இல்லாததை வாங்குபவர்கள் தேவையானதை விற்க நேரிடும்" என்கிற ஆங்கிலப் பழமொழி இவர்கள் விஷயத்தில் உணமையானது. குடி இருந்த வீட்டை முதலில் அடகு வைத்து பிறகு அதை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டனர்.
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு குடும்பம் வாழ்வதிலும் தாழ்வதிலும் மனைவி ஆற்றும் பணி அளப்பரியது. மனைவி என்பவள் குடும்பப் பொருளாதாரத்தை வளர்க்கும் மரம போன்றவள். தகுதி வாய்ந்த ஒரு இல்லத் தலைவியுடைய இல்லமே நல்ல இல்லமாக அமைய முடியுமென்று திருவள்ளுவரும் கூறுகிறார். ஒருவனின் மனைவியிடம் இல்லறத்தை சிறப்புடன் நடத்தும் இயல்பு இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய நலன்கள் நிரம்பப் பெற்று இருந்தாலும் அதனால் பயனே இல்லை. மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் எல்லாம் உள்ளது போல ஆகுமென்று வள்ளுவர் கூறுகிறார்.
மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனை மாட்சித் தாயினும் இல் – என்கிற குறள் இதை வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் அருட் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் :முஸ்லிம் 2911
மேலும்,
“உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே” என்றும் கண்மணி நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத் 7095
மனைவிமார்களை கண்ணியப் படுத்துவது அவர்களை தட்டிக் கொடுத்து அரவணைத்து செல்வது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வழிகோலும் என்பதால்தான் இஸ்லாம் மனைவிமார்களை கண்ணியப் படுத்துகிறது. வேறு எந்த மதமும் மனைவிகளை இப்படி கண்ணியப் படுத்தியதாக தெரியவில்லை.. பெண்ணுரிமை விசயத்தில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் நவீன வாதிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குடும்ப வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி சிந்திக்கும் போது பெண்ணின் பங்கு பற்றி விவாதித்தல் அடிப்படையானது. ஒரு சிறந்த தாயும், தந்தையுமே நல்ல சிறந்த சந்ததியினரை உருவாக்க இயலும். . ஆனால் அந்த சிறந்த தாயும் தந்தையும் உருவாதல் நல்ல கணவன், மனைவியின் உறவின் வழியாகவே சாத்தியமாகும். இந்தப் பின்னணியில் குடும்பத்தில் பெண் வகிக்கும் பங்கு அடிப்படையானது. முதன்மையானது.
இஸ்லாமிய கோட்பாடுகள் புகட்டுவதன் இலக்கு, ஒர் உண்மையான முஃமினை, முதிர்ச்சிமிக்க பூமியின் பிரதிநிதியை பொறுப்புக்களை ஏற்று நடக்கும் நாணயமிக்க பலமான மனிதனை உருவாக்குவதாகும்.
நம்பிக்கைதான் ஈமானின் பெரும் பலம், நான் பூமியின் பிரதிநிதி என்ற பொறுப் புணர்வு, நாணயம், வேலைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் ஆற்றல், திறன் என்ற பண்புகளை மனித இனத்தினின் மீது புகட்டி உருவாக்கிவிடுவதன் வழியாகவே இது சாத்தியமாகும். இப்பண்புகள் இளமையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். மனிதனுக்கு கருத்து அரும்புவிடத் தொடங்கும்போதே இவை பயிற்றுவிக்கப் பட வேண்டும்.
இப்படி ஒரு நிலை நடைமுறைப் படுத்தப் பட வேண்டுமானால் ஒரு சீரான குடும்பத்தில் பிரச்சினைகள் அற்ற அழகான குடும்ப அமைப்பிலேயே சாத்தியமாகும். குழந்தைகளின் முதல் பள்ளிக் கூடம் தான் வளரும் குடும்பமே. தாயையும் தந்தையையும் பார்த்தே குழந்தைகள் பழகி வளருகின்றன. ஒரு குழந்தை தானாகவே தன்னை பண்புள்ளதாக வளர்த்துக் கொள்ள இயலவே இயலாது. “ தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” எண்பது நம்மிடையே வழங்கப் படும் ஒரு பழமொழி. ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டாம் “ என்றும் கூறுவார்கள். எனவே நமது குழந்தைகள் நம்மால் கவனிக்கப் பட்டும் , நம்மால் வளர்க்கப் படவும் வேண்டும். இதற்கு நம் குழந்தைகள் நம்மைக் காணும் போது தாயும் தந்தையும் மனமொப்பி இணைந்த குடும்ப அமைப்பு சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப் பட்டுள்ள சிறுவர்கள் அந்நிலை அடையக் காரணம் அவர்களின் தாய் தந்தையரின் குடும்ப வாழ்வு இக்குழந்தைகளின் கண் முன்னே சிதைக்கப் பட்டதே என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு தந்தை தனது வீட்டில் குழந்தைகளின் முன்னே மதுவருந்தி விட்டு வைக்கும் மிச்சத்தை மகன் எடுத்துக் தெரியாமல் குடிப்பது நாம் கேள்விப்படும் ஒன்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!
குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தினர்கள் கணவன், மனைவி எனப்படும் ஆணும், பெண்ணுமே, குடும்பம் எனபது ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புகாட்டல் மற்றும் , இரக்க மனப்பாங்கின் மீது அமைகிறது. உணர்வுகளின் பரிமாற்றமே அன்பு. பொறுப்புக்களை சுமத்தும் போது இரக்கம் அடிப்படையாகிறது. நிறைவேற்ற இயலாத பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் சாட்டுவது இருவருக்கிடையில் அன்பை வளர்க்காது. ஒருவர் மீது ஒருவர் பொறுப்பைசுமத்தும் போது இந்த இரக்க உணர்வு மேலோங்க வேண்டும். இவ்விரு உணர்வுகள் மீதும் எழாத குடும்பம் அர்த்தமற்றதாகிறது. அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் சீரான வளர்ச்சியைப் பெறமாட்டார்கள். வெறுப் புணர்வோடும், எப்போதும் முரண்பாட்டோடும், சண்டை சச்சரவோடும் வாழும் ஒரு கணவன் மனைவியருக்கிடையே வாழும் பிள்ளைகள் எவ்வாறு சீராக ஒழுக்க சீலர்களாக அமைய முடியும்.?
இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் அமைப்பில் அதன் பொருளாதார வளர்ச்சியில் பெண்ணின் பங்கு மிக அடிப்படையானது. மனைவியே குடும்பத்தின் அஸ்திவாரம். இதனால்தான் வீட்டை மனை என்கிறார்கள். இதை ஆள்பவளே மனைவி. தலைமை தாங்குவது ஆணின் பொறுப்பில் இருந்தாலும் பெண்ணே குடும்பத்தில் பிரதான பாத்திரமாக அதனை இயக்குகிறாள்.
தித்திக்கும் திருமறை ஆண், பெண் படைப்பின் நோக்கமாகவே இக் கருத்தை விளக்குகிறது. திருமறையில் கூறப்படுகிறது.
“உங்களிலிருந்து உங்களுக்கான ஜோடியைப் படைத்து அதனிடம் நீங்கள் அமைதி காணுமாறு அமைந்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கி யுள்ளான்” (ஸூரா-ரூம் 21)
ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட மனித ஆண்-பெண் இனக்கவர்ச்சி மிகுந்த வீரியம் கொண்டது. ஆண் காம உணர்வு வகையில் பலவீனமானவன். பெண்ணின் தோற்றம், வெறுமனே அவளைக் கற்பனை செய்வதுவே அவனில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பலவீனமே அவனைப் பெண்ணின் பின்னால் ஓட வைக்கிறது. பெண்ணின் மென்மை. அவளது பேச்சு, உறவாடல் அனைத்தும் அவனுக்கு மன அமைதியையும், ஆறுதலையும் கொடுக்கிறது. பெண்ணின் சிறப்புத் தன்மை மனோதத்துவ ரீதியாக ஆரம்பிக்கிறது.
ஆண் அவனது இயற்கையான உடல் அமைப்பு, தோற்றம், பலம், வன்மை என்பவற்றால் உழைக்கவும், போராடவும் சுமைகளை சுமக்கும் சுமைதாங்கியாகவே படைக்கப்பட்டுள்ளான். உழைத்து, களைத்து, முட்டி, மோதி மனமும், உடலுமே தாக்குண்டு வீடு நோக்கி வரும் ஆணுக்கு பெண்ணின் குளிர்ச்சியான பார்வையும், மென்மையான பேச்சும், ஸ்பரிசமும் அமைதியையும் ஆறுதலையும் கொடுக்கும். வாழ்வின் வெயிலுக்கான நிழலே பெண். ஆணுக்கு இந்த இடம் தவறும் போதுதான் அவன் மன உளைச்சல் கொண்டவனாகவும், வெறுப்பும், விரக்தியும் கொண்டவனாகவும், சில போது வெறி பிடித்தவனாகவும் மாறிப்போகிறான். இதனால்தான் பல வீடுகளில் தட்டைப் பீங்கான்கள் உடைகின்றன.
பெர்னாட்ஷா நொந்து போய்ச் சொன்னார் “ பெண்களைப் போல ஆண்களுக்கு ஆறுதல் தர ஆள் இல்லை. ஆனால் பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு இந்த ஆறுதல் தேவையும் இல்லை “ எனறு.
இவ்வாறு ஓர் ஆணைச் ஆணாகச் செய்பவளே பெண்தான். அவனை மன நலம் கொண்டவனாக வைத்து, சமூகப் பொருளாதாரத்தின் சிறந்த நற்பயன் தரும் சக்தியாக வைத்திருப்பது அவளது கையிலேயே உள்ளது. இக் கருத்தை இறைதூதர் (ஸல்) கீழ்வருமாறு மிகவும் அழகாகச் சொல்கிறார்கள்.
“யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (தபரானி, பைஹகி, ஹாகிம்)
இவ்வாறு பெண் இருக்கவேண்டுமானால் அவள் தன்னில் உருவாக்கிக் கொள்ள வேண்டிய அம்சங்கள் யாவை?
கணவன் மனைவி இருவரும் சில மணிநேரங்களில் நிறைவு பெற்று முடியும் பிரயாணத் தோழர்களல்ல, ஓரிரு நாட்கள் மட்டும் உறவாடக் கூடியவர்களல்ல. வாழ்நாள் முழுக்க வாழப்போகும் வாழ்க்கைத் தோழர்கள். இங்கு எந்த நிர்ப்பந்தமும் ஆணோ, பெண்ணோ எந்தத் தரப்ப்பார் மீதும் பிரயோகிக்கப்படக் கூடாது. இருவரது மனமொத்த ஒருமைப்பாடு மற்றும் உடன்பாடு மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பொருளியல் மற்றும் சமூகத்தரமும் பேணப் பட வேண்டும்.
இறைதூதர் (ஸல்) அவர்கள் இந்தக் காரணத்தால்தான் கணவன் மனைவியாகப் போகும் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணத்துக்கு முன்னரே பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். நமது பகுதிகளில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இல்லை.
ஒரு நபித்தோழர் தான் திருமணம் பேசி இருப்பதாகக் கூறியபோது “நீ அவளைப் பார்த்தாயா?, அவளைப் பார், அப்போது உங்களிடையே ஓர் இணக்கத்தை உருவாக்க அது மிகப் பொருத்தமாக அமையும்.” எனக் கூறினார்கள்.
கட்டிடத்துக்கு மனைப் பொருத்தம் எப்படி அவசியமோ திருமணத்துக்கும் மனப் பொருத்தம் மற்றும் உடல் பொருத்தம் ஆகியன அவசியமாகும். தான் விரும்பாத ஓர் ஆணுடன் எப்படி ஒரு பெண் வாழ முடியும்? எவ்வாறு அவள் அவனுக்கு மன அமைதியைக் கொடுக்க முடியும்? அப்படி அமைதில்லாதவன் எப்படி பொருளாதார ரீதியில் உயர முடியும்? இந்நிலையில் இருவருமே மன அமைதியை இழந்து தவிப்பர். உறவாடலின் முதல் அடிப்படையே இங்கு இல்லாமல் போகின்றது. பொருத்தமில்லா மனைவி பொருத்தமில்லாக் கணவனுக்கு மணமுடிக்கப் பட்டால் வாழ்வின் அடிப்படையிலேயே வெடிகுண்டு வைக்கப் படுகிறது என்றே பொருள்.
அடுத்த அம்சம் மனதத்துவத்தைப் புரிந்திருத்தலாகும். திருமணத்தின் ஆரம்பத்தில் இனக்கவர்ச்சியின் வேகத்தால் இருவரும் மிகவும் சுமுகமாக உறவாட முடியும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அக் கவர்ச்சி குறையத்துவங்கும். இப்போது ஆணின் மனத்தத்துவம் புரியாத ஒரு பெண் பல தவறுகளை அப்பகுதியில் இழைத்து முரண் பாடுகளை உருவாக்கி விடுவாள்.
கணவனுக்குக் கட்டுப்படல், அவனுக்கு நன்றி செலுத்தல், போன்ற பல விடயங்களை இப்பகுதியில் இறைதூதர் (ஸல்) அவர்கள் திரும் பத்திரும்ப வலியுறுத்தியதன் காரணம் இதுவேயாகும். கீழே சில ஹதீஸ்களை இக்கருத்தை விளங்குவதற்காகத் தரவிரும்புகிறேன்.
“தனது கணவனுக்கு நன்றி செலுத்தாத ஒரு பெண்ணை அல்லாஹ் பார்ப்பதில்லை. அவனது தேவை இன்றி அவள் இருக்கவும் முடியாது. “ (அல் ஹாகிம் -அல் முஸ்தத்ரக்)
“எப்பெண்ணாவது மரணிக்கும் போது கணவன் திருப்திப்பட்ட நிலையில் மரணித்தால் சுவர்க்கத்தில் நுழைவாள்” (இப்னுமாஜா, அல்ஹாகிம்)
ஒரு பெண் இறைதூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு விளக்கத்துக்காக வந்தாள். தான் வந்த நோக்கம் நிறைவேறியதும் இறைதூதர் (ஸல்) அவளைப் பார்த்து உனக்கு கணவன் இருக்கிறானா? எனக் கேட்டார் ஆம் என அப்பெண் கூறிய போது அவனைப் பொருத்த வரையில் உனது நிலை என்ன? என இறைதூதர் (ஸல்) வின வினார்கள். சிலவேளை இயலாமல் போவது தவிர என்னால் முடிந்தளவு நான் அவனது கடமைகளை நிறைவேற்றுகிறேன் என அப்பெண் கூறினாள். அப்போது இறைதூதர் (ஸல்)
“அவனைப் பொறுத்தவரையில் நீ எங்கே இருக்கிறாய் எனப் பார்த்துக் கொள். ஏனெனில் அவனே உனது சுவர்க்கமும், நரகமும்” என்றார்கள்.(முஸ்னத் அஹமத், ஸூன் நஸாயி, முஸ்தரக் அல்-ஹாகிம்)
செலவழிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவன் கணவன். என்றாலும் மனைவிதான் வீட்டுச் செலவினங்களை நெறிப்படுத்துகிறாள். அந்த வகையில் வீட்டின் செலவினங்களை கணவனின் வருமானத்திற்கேற்ப நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவது மனைவியரின் பொறுப்பாகும். செல்வம் அதிகம் இருந்தால் ஆடம்பர மோகமின்றி கவனமாகப் பணத்தைக் கையாளும் போக்கும் வறுமை நிலையாயின் பொறுமை யுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழும் திறனும் ஒரு நல்ல மனைவிக்கு இருக்க வேண்டும். இவ்வாறு கணவனின் செல்வத்தை மிகவும் கவனமாக பாதுகாக்கும் திறன் அவளுக்கு இருக்க வேண்டும்.
அத்தோடு கணவன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் செலவழிக்க கடமைப்படுகிறானே தவிர அவனது சொத்து விவகாரங்களில் தலையிடவோ, அவனது உறவினர்களுக்காக செலவிடுவதில் தலையிடவோ மனைவிக்கு உரிமை இல்லை. என்பதை அவள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று நமது குடும்பங்களில் நடைபெறும் முக்கியமான பிளவுகள் இஸ்லாமியப் பொருளாதாரம் வரையறுக்கும் இந்த அமசத்தை உணராமல் இருப்பதால்தான் என்பதை இங்கு வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.
இஸ்லாமியப் பொருளாதார சந்ட்டங்களின்படி , மனைவியின் சொத்தில் கணவனுக்கு தலையிட எந்தவிதமான உரிமையுமில்லை என்பதும் இங்கு கவனிக் கத்தக்கது.
கணவனின் சொத்தைப் பாதுகாப்பதும் ஒரு மனைவியின் பொறுப்பு என்பதையும் இறைதூதர் (ஸல்) விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
“நான்கு விடயங்கள் யாருக்குக் கிடைக்கப்பெறுகிறதோ அவர் உலக, மறுமையின் நன்மையைப் பெற்றவராகின்றார். நன்றி செலுத்தும் உள்ளம், இறை நினைவு கூறும் நாவு, சோதனைகளின் போது பொறுமையாக உள்ள உடம்பு, தன்னிலோ, கணவனின் சொத்திலோ பாவகாரியங்களை நாடாத மனைவி. (தபரானி - அல்கபீர், அல்-அவ்ஸத்)
மூன்று விஷயங்கள் மனிதனின் சந்தோஷ வாழ்வுக்கு காரணமாகும் எனக் கூறிய இறை தூதர் (ஸல்) அவற்றில் முதலாவதைக் கீழ்க்கண்டபடி கூறினார்கள்.
“நீ பார்த்தால் உன்னைக் கவரக் கூடிய, நீ இல்லாத போது தன்னையும், தனது செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய மனைவி “ (அல்-ஹாகிம் - முஸ்தத்ரக்)
எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் இப்படிப்பட்ட நற்குணமுள்ள மனைவிகளைத் தந்து அனைவரின் பொருளாதார வாழ்வும் சமூக ஒழுக்கமும் மேம்பட உதவுவானாக !
மீண்டும் சந்திக்கலாம் இன்ஷா
அல்லாஹ்.
இபுராஹீம் அன்சாரி