அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அமீருல் முஃமினீன் என்று ஸஹாபாக்களால் கண்ணியத்தோடு அழைக்கப்பட்ட அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மதிப்புமிக்க தோழர் உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வர காரணமாக இருந்த பலரில் மிக முக்கியமான பெண்மணியான உமர்(ரலி) அவர்களின் அன்பான தங்கை ஃபாத்திமா(ரலி) அவர்களின் ஈமானிய உறுதி பற்றி வாசித்து படிப்பினை பெற்றோம்.
இஸ்லாமிய வரலாற்றில் தியாகத்திற்கும், குழந்தை வளர்ப்பில் பாசமான தாயாகவும், ஒரு பெண் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாமிய ஒழுக்கம் நிறைந்த மிகச்சிறந்த அன்சாரி பெண்ணாகவும், தன் கணவனுக்கு மதிப்பளிக்கும் அன்பான மனைவியாகவும், பசித்தவருக்கு உணவளிப்பதற்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட ஈமானிய பெண்ணாகவும், ஆதரவற்ற அனாதை குழந்தைகளின்மீது அன்பு செலுத்தும் செவிழித்தாயாகவும், வீரமும் விவேகமும் ஒருங்கே அமைந்த அறிவாற்றல் மிக்க பெண்ணாகவும் இவ்வுலகில் வாழும் பெண் சமுதாயம், இனி பிறக்கப்போகும் பெண் சமுதாயம் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு 100% தகுதியான ஈமானியப் பெண், நபி(ஸல்) அவர்களால் சொற்கத்துவாசி என்று பாராட்டி சீராட்டி சொல்லப்பட்ட சஹாபிப் பெண்மணி, அன்ஸ்(ரலி) அவர்களின் அருமை தாயார் உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வாழ்வு பற்றிய ஒரு சிறிய வரலாற்று தொகுப்பை காண்போம்.
இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மணிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், உறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற மங்கையாவர்கள், தனது பிள்ளைகளுக்கு அற்புதமான தாயாகவும், மார்க்கத்தை எத்திவைக்கும் பிரச்சாரகராகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள்.
உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இந்த சஹாபிய வீரப் பெண் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவர். போராடும் சத்திய சஹாபாக்களுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டதாக இவர்களது அருமை மகனார் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் மூஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் காண முடிகிறது.
ஹுனைன் யுத்தத்தின்போது, இவர்கள் கற்பிணியாக இருந்தார்கள். அப்போதும் இடுப்பில் கத்தியை வைத்திருந்தார்கள். அபூதல்ஹா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் கத்தியை வைத்துள்ளார்" என முறையிட்டபோது, உம்மு சுலைம்(ரலி) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிக் எவனாவது என்னை நெருங்கினால், அவனது வயிற்றைக் கிழித்து விடுவேன்" என பதிலளித்தார்கள், வீரத்துக்கு எடுத்துக்காட்டான உம்மு சுலைம்(ரலி) அவர்கள் என்ற இந்த சம்பவத்தை ஹதீஸ்களில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த சம்பவம் சிந்தனையைத் தூண்ட வைக்கும்.
சுவர்கத்துவாசியான உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வருவதற்கு முன்பு, ஒரு நாள் தனது கணவர் மாலிக் அவர்கள் ஊரில் இல்லாத நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றார்கள். கணவர் ஊருக்கு திரும்பிய போது, மனைவி உம்மு சுலைம்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் எனத் தெரிந்து கடுமையாக கோபப்பட்டார் மாலிக்.
“நீ மதம் மாறிவிட்டாயா?” எனக் கோபத்துடன் கேட்டபோது.
“இல்லை, நான் அல்லாஹ்வை விசுவாசித்திருக்கிறேன்”
என கண்ணியமான பதில் அளித்து தன்னுடைய ஈமானின் உறுதிய உலகறிய செய்தார் உம்மு சுலைம்(ரலி) அவர்கள்.
கணவனின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் தனது குழந்தையை இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுத்திட உறுதியுடன் இருந்தார் சஹாபியப் பெண்மணியான உம்மு சுலைம்(ரலி). தனது மகன் அனஸ்(ரலி) அவர்களுக்கு கலிமாவை கற்றுக் கொடுத்தார்கள். அருமை நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து எப்போது மதீனாவுக்கு வருவார்கள்? என்று மதீனா எல்லை வரை அங்குமிங்கும் வந்து சென்றவராக இருந்துள்ளார்கள் உம்மு சுலைம்(ரலி) அவர்கள்.
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்துள்ளார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் தன்னுடைய அருமை மகனின் எதிர்காலம் வளமாக அமைய வேண்டுமென்பதற்காக, அவரை அழைத்துச் சென்று நபி(ஸல்) அவர்களிடம் “யா ராசூலுல்லாஹ் இதோ உங்கள் சேவகன், என்னுடைய மகனை உங்களுக்கு பணிவிடை செய்ய வைத்துக்கொள்ளுங்கள், என் மகனுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுங்கள், என் மகனுக்காக துஆ செய்யுங்கள்” என்று சொல்லியவர்களாக, தன் அருமை மகனை நபி(ஸல்) அவர்களுக்காக விட்டுச் சென்று இவ்வுலகில் யாரும் செய்யாத மிகப்பெரிய தியாத்தை செய்த வரலாற்றுக்கு சொந்தக்காரத் தியாகியான சஹாபிப் பெண்மணி உம்மு சுலைம்(ரலி) அவர்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.
உழைத்துத்தர கணவனில்லை, எனவே தன் மகன் அனஸ்(ரலி) அவர்கள் பணிவிடை செய்து உழைத்து போட வேண்டும் என்ற எண்ணத்தில் அன்னையவர்கள் அப்படி செய்யவில்லை, நபி(ஸல்) அவர்களின் கண்காணிப்பில் தனது அன்பு மகன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே அவரை நபி(ஸல்) அவர்களின் பணியாளராக்க தூண்டியது. தாய்க்குச் சேவகனாக இல்லாமல், உயிரினும் மேலான அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அருகிலேயே 10 வருடம் பணியாளராக இருந்ததன் மூலம் 2,286 நபிமொழிகளை அறிவிக்கும் வாய்ப்பை அனஸ்(ரலி) அவர்கள் பெற்றார்கள். தனது தாய் இஸ்லாத்திற்காக செய்த இந்த நல்ல செயலை மகன் அனஸ்(ரலி) அவர்கள் அடிக்கடி நன்றியுடன் நினைவு கூறி துஆ செய்துள்ளார்கள்.
நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது என்பதை சத்திய சஹாபியப் பெண்மணி உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
கற்பிணியாக இருந்தும் ஜிஹாதுக்கு புறப்பட்டுள்ளார்கள் என்றால்? நமது நிலை என்ன? இஸ்லாத்தை வளர்ப்பதற்கும் அரணாக நின்று பாதுகாப்பதற்கும் அதன் வழியில் நிலைத்திருப்பதற்கும் முஸ்லீம்களாக இருக்கும் ஆண்கள், பெண்கள் ஆகிய நம்முடைய தியாகங்கள் என்ன? குறைந்தளவு இஸ்லாமிய உணர்வோடு தடுக்கப்பட்டதை விட்டும் விலகியிருந்து நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தன்மையுடன் உள்ளோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
ஒவ்வொருவரும் அவர்களின் உள்ளங்களைத் தொட்டுச் சொல்லட்டும் நமக்கு பிறந்த குழந்தைகளை மார்க்கம் விளங்கிய பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்லாமிய கல்வி சார்ந்த உலகக் கல்வி நிலையங்களைத் தேடிச் சென்று படிக்க வைத்திருக்கிறோமா? ஆங்கிலம் அழகாக பேசவேண்டும் என்பதை முதல் நோக்கமாக வைத்தல்லவா நம் பிள்ளையின் பள்ளிக்கூடத்தை தீர்மானிக்கிறோம். ஆனால் சஹாபியப் பெண்மணி உம்மு சுலைம்(ரலி) அவர்கள், தான் 10 மாதம் சுமந்து பெற்ற ஆண் பிள்ளையை, இஸ்லாத்திற்காக சேவை செய்ய வேண்டும் அதுவும் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடமே இருக்க வேண்டும் என்று விட்டுச் சென்ற அந்த வரலாற்றை நாம் நினைவுகூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
உம்மு சுலைம்(ரலி) அவர்கள் போல் நாம் நமது வீட்டை இஸ்லாமிய சூழலால் நிறைந்த வீடாக மாற்ற வேண்டும். நமது குழந்தைகளை பிற இன/மத கலாச்சாரத் தாக்கத்திலிருந்து தூரமாக்கி முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் வளர்த்தெடுக்க வேண்டும்.
உம்மு சுலைம் (ரலி) போல் ஈமானில் உறுதியுள்ள பெண்களாக இருந்து, அல்லாஹ்வை முதலில் நேசிக்கும் இறையச்சத்தில் தலை சிறந்தவர்களாகவும், அன்னியவர்களிடம் குழைந்து, அங்கே ஷைத்தானுடைய சூழ்சிக்கு இடம் கொடுக்காமல் தங்களது கற்பை பேணும் தைரியமிக்க பெண்மக்களாகவும் தூய ஈமானுடனும் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வரலாற்றை படிக்கும் போது ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் உம்மு சுலைம்(ரலி) போன்ற பெண்மணியாக இருக்கக் கூடாதா? என்னுடைய பிள்ளை அனஸ்(ரலி) அவர்கள் போல் நம்மை பற்றி பெருமையாக பேசவும், துஆச் செய்யும் மகனாக இருக்கக் கூடாதா என்ற ஆசை நிச்சயம் வரும், வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
அறிவால், வீரத்தால், விவேகத்தால், கண்ணியமான வாழ்வால், இஸ்லாமிய நெறிமுறைப்படி முழுக்க முழுக்க தன்னுடைய வாழ்வை அமைத்து பெண் சமுதாயத்திற்கு முன்னுதாரனமாக இருந்த அனஸ்(ரலி) அவர்களின் அருமை தாயார் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் ஆண்களுக்கும், வீரத்தாலும், ஈமானிய உறுதியினாலும், இஸ்லாமிய அறிவாற்றலாலும் முன்னுதாரனமானவர்கள் என்று சொன்னால் மிகையில்லை.
இன்ஷா அல்லாஹ் உம்மு சுலைம்(ரலி) பற்றி மேலும் பல வரலாற்று சம்பவங்களின் மூலம் நம்முடைய இளைய சமுதாயம் ஏராளமான படிப்பினைகளை பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாத்தில் பார்க்கலாம்.
தொடரும்
M தாஜுதீன்
13 Responses So Far:
அந்த பேறுபெற்ற பெண்மணி உம்மு சுலைம் போன்ற ஈமானில் வார்த்தெடுக்கப்பட்ட பெண்களின் தியாகத்தில் கொஞ்சமாவது நம் பெண்களிடம் வரவேண்டும். இத்தகைய வரலாற்று சம்பவங்களை நம் குடும்பத்து பெண்கள் படிக்கும் வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது நம் கடமை.
தான் பெற்ற குழந்தையை அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுடைய தூதருக்காக , இவ்வுலகை துச்சமாக மதித்து , இஸ்லாமிய சூழலில் வளரவேணும் , தன் கணவன் எதிர்த்தாலும் சரியே என்ற தைரியம் எந்த பெண்மைக்கு வரும் ?
உம்மு சுலைம் போன்ற பெண்களின் ஈமானை நம் குடுபத்து பெண்களும் அடைய வல்ல அல்லாஹ் வாய்ப்பை தந்து அதை பயன் படுத்தும் மனப்பக்குவத்தை நம் பெண்களுக்கும் அல்லாஹ் கொடுத்தருளட்டும்.
ஆமீன்
அபு ஆசிப்.
மாஷா அல்லாஹ் !
-------------------------------
கருத்திட வேண்டும் என்பதற்காக இதனைப் பதியவில்லை,
நிறைய செவி வழி பயான்களில் கேட்டும் இருக்கிறோம் அதில் அனைத்தையும் ஒருங்கே நினைவுபடுத்தி கேர்வையாக ஒரே நேரத்தில் கொண்டுவருவது கடினம்.
ஆனால்,
இந்த தொடரில் இடம் பெறும் வரலாற்று நிகழ்வுகளை கோர்வையாக்கி தர பொறுமையும் வேண்டும் அது நிரம்ப இருப்பதை பதிவின் எழுத்தில் அனுபவித்து எழுதியிருப்பதை நன்கு உணர முடிகிறது !
எழுததத் தொடங்கிய நாள் தொட்டு விமர்சனங்களை எதிர்க் கொண்டு அவைகளை சீர்தூக்கி தனக்கென தனித்துவமான எழுத்து நடையை வகுத்துக் கொண்டு, 'தீ'யென எழும்பினால் 'நீ'ர் கொட்டுவதும், 'புயல்' என வீசினால் 'பூ'வென தூவலும்... இப்படியாக...!
சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆகனும் எத்தனை தடவை வேண்டுமானாலும் !
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வரலாற்று சம்பவங்களின் மூலம் நம்முடைய சமுதாயம் ஏராளமான படிப்பினைகளை பெற வேண்டும். இன்சா அல்லாஹ்.
//உம்மு சுலைம்[ரலி] போன்ற தாயக நான் இருக்க கூடாத//
தம்பி தாஜூதீனின் ஆசை நல்ல எண்ணத்துடன் எழுந்த ஆசை!. இன்றைய சூழலில் எந்த தாயும் தந்தையும் அப்படி நினைக்கும் சூழலில் இல்லை தன் மகன் நன்றாக படித்து நிறையவே சம்பாதி கொட்ட வேண்டும்.
நாமும் சமுகத்தில் மேலான அந்தஸ்தை பெறவேண்டும்'' என்ற' ஆசைப் பேயின் பிடியில் அகப்பட்டு கிடக்குறார்கள்.
அடிமேல் அடி அடித்தாலும் அம்மி நகர்வதாகயில்லை. நல்ல-நல்ல
போதனைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கே!
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
அதிகமாக அறியப் படாத பல சரித்திரங்களை சபைக்குக் கொண்டுவருகிறது இந்தத் தொடர். பாராட்டுக்கள் தம்பி தாஜுதீன்.
Assalamu Alaikkum
Dear Tajudeen,
The episode about Sahhabi Umm Sulaim Raliyallahu Anha gives great lessons.
Umm Sulaim Raliyallahu Anha is one of the great Islamic women personalties. A great example of pioneer in accepting and reverting to Islam, braveness, sacrifies, role model muslim mother all can be worth emulated.
Note: There is a typo to be corrected as: கற்பிணியாக -> கர்ப்பிணியாக
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.
இறையச்சம் மட்டுமே மேலோங்கியிருந்த அந்தக் காலம் எங்கே; சுயநலம் கூடிப்போன இக்காலம் எங்கே?
பலகீனமான ஈமானுடன் காலம் கடத்தும் தற்கால மாந்தர் படிப்பினை பெற வேண்டி பதியப்பட்டு வரும் இத்தொடர் பாராட்டத் தக்கது.
அதிகமாகம் அறியப் படாத பல சரித்திரங்களை பல வேலைகளுக்கிடையோ அழகாக தொகுத்துதரும் தம்பி தாஜுதீன் அவர்களின் பனி தொடர என்றென்றும் எங்களின் துஆ
தம்பி தாஜூதீனின் ஆசை நல்ல எண்ணத்துடன் எழுந்த ஆசை!. இன்றைய சூழலில் எந்த தாயும் தந்தையும் அப்படி நினைக்கும் சூழலில் இல்லை தன் மகன் நன்றாக படித்து நிறையவே சம்பாதி கொட்ட வேண்டும்.
நாமும் சமுகத்தில் மேலான அந்தஸ்தை பெறவேண்டும்'' என்ற' ஆசைப் பேயின் பிடியில் அகப்பட்டு கிடக்குறார்கள்.
அடிமேல் அடி அடித்தாலும் அம்மி நகர்வதாகயில்லை. நல்ல-நல்ல
போதனைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கே!
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அம்மி நகர்ந்தாலும் இக்கால மம்மி(உம்மாமார்கள்)இம்பி கூட நகர்வதில்லை! நல்லதொரு வரலாற்று ஆக்கம். தொடர அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..
சகோதரரின் தொடர் நல்ல படிப்பினையை தருகிறது.
தொடரிந்து தாருங்கள்.
Post a Comment