Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 8 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அகிலத்தின் அருட்கொடை, உலகத் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரி, நம் அருமை நபி(ஸல்) அவர்களின் பாசமிகுந்த மகள், சொர்க்கத்து பெண்களின் தலைவி ஃபாத்திமா(ரலி) அவர்கள் வாழ்வின் முக்கிய சம்பவங்கள் மற்றும் அதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் பார்க்கலாம்.

அகிலத்தின் இறைத்தூதர், முஹம்மது(ஸல்) அவர்களின் அருமை மகளார் இவ்வுலகில் செல்வச் செழிப்போடு வாழ நூறு சதவீதம் தகுதியானவர்கள் என்பதை இதுவரை வாழ்ந்த இன்னும் வாழ்ந்து வரும் இன்றைய அதிகார வர்க்கத்தினரோடு சிறிதளவு ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால் சொர்கத்து பெண்களின் தலைவி, அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்களின் அன்பு மகள் இப்பூவுலகில் பிறந்தபோது தன் தாயோடு செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா அம்மையார் எப்போது தூய இஸ்லாத்தை ஏற்றார்களோ அன்று முதல் மரணிக்கும் வரை ஒரு சராசரி பெண்ணாக வாழ்ந்து கஷ்டங்களையும் துன்பங்களையும் தான் வாழ்ந்த சொற்பமான காலத்திலேயே சுமந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உண்மையில் கண்கள் கலங்குகிறது.

நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள், வரிசைப்படி சொல்வதாக இருந்தால் 1.ஜைனப்(ரலி), 2.ருகைய்யா(ரலி) 3.ஃபாத்திமா(ரலி) 4.உம்மு குல்தும்(ரலி). ஃபாத்திமா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் பிறந்துள்ளார்கள். கிட்டத்தட்ட 20 ஹதீஸ்கள் வரை ஃபாத்திமா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு 3 அல்லது 6 மாதம் கழித்து ஃபாத்திமா(ரலி) அவர்கள் மரணித்ததால் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் மிகவும் குறைவு.

நபி(ஸல்) அவர்களின் மகள் என்பதால் செல்வ செழிப்புள்ள ஒருசில நபித்தோழர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களை மணமுடிக்க நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய வளர்ப்புடன் ஒன்றாக வாழ்ந்த சொந்தம், நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க கல்வி கற்ற மாணவர், நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு துளிகூட மாறு செய்யாத அருமைத் தோழர் அலீய்(ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலீய்(ரலி) அவர்கள் பணக்காரரோ, அன்றைய மக்கா பிரதேசத்தில் வாழ்ந்த திடகாத்திர தோற்றமுடைய ஆண் அழகரோ அல்ல, ஒரு சாதாரண கருப்பு நிறத் தோற்றமுடைய ஆண் மகன்.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் தன் தந்தை நபி(ஸல்) அவர்கள் தனக்கு பொருத்தமான தகுதியானவரைத் தான் மனமுடித்துத் தந்துள்ளார்கள் என்று நூறு சதவீதம் நம்பிக்கை நிச்சயம் ஃபாத்திமா(ரலி) அவர்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்ததால் தான், மரணிக்கும் வரை பாசம் நேசம் காட்டி தன் கணவர் அலீய்(ரலி) அவர்களோடு சந்தோசமாக வாழ்ந்துள்ளார்கள.

அலீய்(ரலி) மற்றும் ஃபாத்திமா(ரலி) அவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் ஐந்து. 1.ஹஸன், 2. ஹுசைன், 3. முஹ்சீன், 4, ஜைனப், 5. உம்மு குல்தும். தன் உடன் பிறந்த சகோதரிகள் இருவரான ஜைனப்(ரலி) உம்மு குல்தும்(ரலி) மரணித்த பின்பு தன் பிள்ளைகளுக்கு அவ்விருவரின் பெயரை வைத்துள்ளார்கள் என்பதை நாம் அவதானிக்கும் போது, ஃபாத்திமா(ரலி) தன் சகோதரிகளின் மேல் எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தார்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்கள் மறைந்த தம் இரு மகள்கள் (ஜைனப்(ரலி) உம்மு குல்தும்(ரலி)) மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இறுதி காலகட்டத்தில் அவர்களுடைய மகள்களில் ஃபாத்திமா(ரலி) அவர்கள் மட்டும்தான் உயிரோடு இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உயிருக்கு நிகரான பாசம் நிறைந்தவராக ஃபாத்திமா(ரலி) அவர்கள் இருந்துள்ளார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களைப் பற்றி “என்னுடைய ஓர் சதை தூண்டு” என்று நபி(ஸல்) சிலாகித்துக் கூறியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு என்று தான் ஒரு இறைத்தூதர், இஸ்லாமிய ஆட்சித் தலைவர் என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட சலுகைகள் எதுவும் கொடுக்கவில்லை. கடந்த வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் எந்த ஒரு ஆட்சித் தலைவரும் இப்படி தனக்கு பிறந்த மகளை ஒரு சராசரி மக்களோடு மக்களாக வாழ வைத்ததாக காண இயலாது.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் என்னதான் இறைத்தூதரின் மகளாக இருந்தாலும், வீட்டு வேலைகளை தானே முன்னின்று செய்யும் சராசரி பெண்ணாக வாழ்ந்தார்கள் என்பதற்கு பின் வரும் வரலாற்று சம்பவமே சாட்சி. சொர்கத்து வாசியான பெண் வீட்டின் உணவுக்காக மாவு அரைத்து அரைத்து அவர்களின் கைகளில் அச்சு ஏற்பட்டு ஒரு கடினமான தோற்றமாக மாறிவிட்டது. இதனை கண்ட அலீய்(ரலி) அவர்கள், உங்கள் தந்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போர் கைதிகளை அடிமைகளாக மக்களுக்கு கொடுக்கிறார்களே, ஏன் இப்படி உடலை வருத்தி கஷ்டப்படுகிறீர்கள், உங்கள் தந்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு அடிமையை பெற்று வீட்டு வேலை செய்ய வைக்கலாமே, சென்று கேட்டுப் பாருங்களேன் என்று ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் கூற, ஃபாத்திமா(ரலி) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் இல்லத்திற்கு சென்றார்கள். ஆனால் அங்கு நபி(ஸல்) அவர்கள் இல்லை. தான் வந்துவிட்டு போன செய்தியை தன் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்குமாறு அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டார்கள்.

பாசம் நிறைந்த மகள் தன் வீட்டிற்கு ஏன் வந்துள்ளார் என்பதை அறிந்த அருமை தந்தையான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடும் குளிரான அந்த இரவு நேரத்தில் ஃபாத்திமா(ரலி) அவர்கள் இல்லத்திற்கு வந்து நலம் விசாரித்து விட்டு, ஃபாத்திமா(ரலி) அவர்களின் தேவையை அறிந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள், “நீங்கள் என்னிடம் ஒரு வேலைக்காக ஒரு அடிமை வேண்டும் என்று கேட்டீர்களே, உங்கள் இருவருக்கும் அதைவிட சிறந்தது ஒன்று சொல்லித் தரவா?” என்று கூறிவிட்டு சொன்னார்கள் மருத்துவ குணம் நிறைந்த அண்ணலார் அவர்கள் “நீங்கள் தூங்குவதற்கு முன்னால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடை ஓதிவிட்டு உறங்குங்கள், நீங்கள் ஒரு வேலைக்காரனை வீட்டில் வைத்திருப்பதைவிட இது சிறந்தது” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.

கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ஃபாத்திமா(ரலி) அவர்கள் கேட்டது என்ன? நபி(ஸல்) அவர்கள் கொடுத்தது என்ன?. இருப்பினும் தன் தந்தை இறைத்தூதர் எது செய்தாலும் அதில் நன்மை உள்ளது என்பதை உளப்பூர்வமாக உணர்ந்த ஃபாத்திமா(ரலி) அவர்கள் வாழ்நாளில் தன் தந்தை வழிகாட்டிய அந்த சிறந்த துஆவை ஓதி  வந்தார்கள், மேலும் அலீய்(ரலி) அவர்களும் ஒவ்வொரு நாளும் ஜமல், சிப்பீன் போன்ற கஷ்டமான யுத்த நாட்களிலும் ஒவ்வொரு இரவிலும் தூங்கும் போது ஓதிவந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் வாசிக்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.

ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர் அவர்களின் மகளுடைய வாழ்வு இவ்வளவு எளிமையாக இருந்துள்ளதே, ஆனால் நம்முடைய வாழ்வு ஃபத்திமா(ரலி) அவர்களின் வாழ்வு போல் எளிமையாக உள்ளதா? என்பதை நாம் சீர்த்தூக்கி பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் இறைத்தூதராகிய நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் மார்க்க கல்வி பயின்ற, தன்னுடைய சொந்தம் அவர் ஏழையாக இருந்தாலும், உழைத்து சம்பாதிக்கும் அருமைச் சொந்தம் அலீய்(ரலி) அவர்கள்தான் தன் மகள் ஃபாத்திமாவுக்கு பொருத்தம் என்று ஒரு பொறுப்பான தந்தையாக பெருந்தன்மையுடன் திருமணம் செய்து வைத்தார்களே, அது போல் என்னதான் பணம் செல்வங்கள் நம்மை சுற்றி இருந்தாலும், நம் மகளுக்கு வரவேண்டிய மாப்பிள்ளை வச்தியானவனாக, கட்டழகு ஆண் மகனாக கல்வியறிவு மிகுந்தவனாக இருப்பதை விட உழைத்து சம்பாதிக்கும் மார்க்க பற்றுள்ள எளிமைக்கு சொந்தக்காரராக, சுயமரியாதையுடன் இருந்தாலே போதும் என்று பொருந்திக் கொள்ளும் தந்தையரை இன்று காணமுடியுமா?

ஒரு மார்க்க பற்றுள்ள உழைப்பாளியை தனக்கு பொருத்தமானவராகத் தான் தேர்ந்தெடுத்திருப்பார் என்று பரிபூரண நம்பிக்கைக் கொண்ட சொர்கத்துவாசியான கண்மணி ஃபாத்திமா(ரலி) அவர்கள் மரணிக்கும் வரை மிகவும் சந்தோசமாகவும், ஒழுக்க நெறியோடும் அலீய்(ரலி) அவர்களுடன் வாழ்ந்தார்களே, அதுபோல் பெற்றோரால் மணமுடித்து தந்த கணவனைப் பொருந்திக் கொண்டு, ஒழுக்க நெறியோடு சந்தோசமாக வாழ்க்கை நடத்தும் பெண்கள் எத்தனை பேர் உள்ளார்கள்? இதில் நிறையபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவும் முடியாது அவர்களையும் நாம் கண்கூடாக கண்டும் வருகிறோம்.

சுவர்க்கத்து பெண்களின் தலைவி ஈமானில் உயர்ந்து நின்ற ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டு வேலைக்கு என்று தனியாக வேலையாட்கள்  இல்லாமல் வாழ்ந்துள்ளார்கள் என்றால் அநேக முஸ்லீம் வீடுகளில், தம் சொந்த துணி துவைக்க, சாப்பிட்ட பாத்திரம் கழுவ, வசிக்கும் வீடு சுத்தம் செய்து கழுவ, தன்னை பெற்ற தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேலைக்காரர்களை வைத்திருக்கிறோமே, இதுதான் முன்மாதிரி சமுதாயத்திற்கு அடையாளமா? சுவர்கத்துவாசியான ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து ஏன் இன்னும் படிப்பினை பெறாமல் உள்ளோம்?

ஒரு தந்தை தன்னுடைய அதிகாரம், சக்திக்கு உட்பட்டு தன் பிள்ளைகளுக்கு சேரவேண்டியவைகளை சேர்த்து வைத்திருந்தும், அது தனக்கு போதவில்லை என்று திருமணத்திற்கு முன்பும் பின்பும் தன் தந்தை தாயிடம் இன்னும் சட்டம் பேசி பிடுங்கித் தீர்க்கும் பிள்ளைகளுக்கு நபி(ஸல்) அவர்களின் செல்வப் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்வில் கிடைக்கும் நம் மறுமை வெற்றிக்கு ஒரு நல்ல வழிகாட்டி உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளும் நிலயில் நாம் எத்தனை பேர் உள்ளோம்?

நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !

சுவர்கத்துவாசியான ஃபாத்திமா(ரலி) அவர்கள் பற்றி இன்னும் அறியப்படாத செய்திகள் அடுத்த பதிவில் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

13 Responses So Far:

Unknown said...

அண்ணல் நபி (ஸல்) அருமை மகளார் பாத்திமாவின் எளிய வாழ்வு , ஆன்மீகத்திற்கும், அரசியலுக்கும் தலைவராக இருந்த பெருமானாரின் மகள் என்ற கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் எந்த வித அதிகார துஷ்பிரயோகம் இன்றி அனைத்து கஷ்டங்களையும் பொருந்திக்கொண்ட வாழ்வு ஒவ்வொரு அதிகார வாரிசுகளுக்கும் ஒரு பாடம்.

மேலும் நபியின் மகள் என்பதற்காக அல்லாஹ் ஒன்றும் மஹ்ஷரில் சலுகை ஏதும் கொடுத்து விடப்போவதும் இல்லை. மேலும் பெருமானார் (ஸல்) தன அருமை மகள் பாத்திமாவிடம் ஒருமுறை சொன்னார்கள் " பாத்திமாவே !இவ்வுலகில் என்னிடம் இருக்கும் எதை வேண்டுமானாலும் பெற்றுக்கொள். ஆனால் நரகிலிருந்து உன்னை நீதான் பாதுகாத்துக்கொள்ளவேனும்" என்று எச்சரிக்கை செய்தார்கள்.

இப்படி எச்சரிக்கப்பட்ட வாழ்வில், அண்ணல் நபி மூலம் அழகிய , எளிய முறையில் வழி நடத்தப்பட்டு , சொர்க்கத்து பெண்களின் தலைவி என்ற ஒரு பேரோடு இவ்வுலகிற்கு விடை கொடுத்தார்கள்.அந்த எளிமை வாழ்வு இன்ஷா அல்லாஹ் நம் குடும்பத்துப் பெண்களையும் ஈர்க்கட்டும்.

அபு ஆசிப்.

Unknown said...

சகோதரர் தாஜுதீன் அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற இந்த தொடர் ஒவ்வரு புதன் கிழமையும் ஒவ்வரு அறிய தகவலை அறியத்தருகின்றது.
ஒவ்வரு வாரமும் பொறுமை, எளிமை, மற்றும் தியாகங்களை சொல்லி அழகிய பாடம் நடத்துகின்றது.

இதை படிக்கும் ஒவ்வருவருக்கும் நிச்சயம் ஒவ்வரு புதன்கிழமையும் மனதின் ஒரு ஓரத்தில் கண்டிப்பாக ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்ப்படுத்தி விட்டுத்தான் போகவேணும். குறிப்பாக நம் பெண் சமுதாயத்திற்கு இது ஒரு மனமாற்றத்தை ஏற்ப்படுத்த வல்லது என்பது என் கருத்து.

அபு ஆசிப்.

adiraimansoor said...

///அநேக முஸ்லீம் வீடுகளில், தம் சொந்த துணி துவைக்க, சாப்பிட்ட பாத்திரம் கழுவ, வசிக்கும் வீடு சுத்தம் செய்து கழுவ, தன்னை பெற்ற தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேலைக்காரர்களை வைத்திருக்கிறோமே,///

தாஜுதீன் மிக அருமையான பதிவு இன்றைய முஸ்லிம் பெண்களிடம் மட்டுமே பரவலாக காணப்படும். குறைபாடு உண்மையாக சொல்லப்போனால் இந்த பதிவை ஒவ்வொரு முஸ்லிம் பெண்களிடத்திலும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டியவை

நமதூர் மட்டுமல்ல காயல்பட்டினம், கீழக்கரை போன்ற ஊர்களில் வாழும் நமது சமுதாயத்துப் பெண்களிடம்தான் இந்த குறைபாடு மாற்ற சமுதாயத்தவர்களிடம் காண முடியாத காட்சிகள் இவை.
இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வீடுகளில் பகுதி நேர வேலையாட்களே ஆனால் பாத்திம (ரலி) பிறந்த மண்ணிலோ முழு நேர ஊழியப் பெண்கள் (ஹவுஸ் மேட்) இன்னும் வலுவாக சொல்லப் போனால் முழு நேர அடிமைகளாகத்தான் வைத்துள்ளார்கள். மிகவும் வருந்ததக்க செய்திதான் இது.

எல்லாவற்றையும் வேலைக்கரிடம் ஒப்படைத்துவிட்டு அப்படி என்னாதான் செய்கின்றனர் நமது பெண்கள். சிந்திக்க வேண்டிய விஷயம்

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களே!

சிறப்பான வரலாற்றுத் தொகுப்பு அத்துடன் குத்தூசி கொண்டு இன்றைய பெண்களுக்கு ஒரு குத்தும் குத்தி இருக்கிறீர்கள்.

தம்பி மன்சூர் அவர்கள்

//எல்லாவற்றையும் வேலைக்கரிடம் ஒப்படைத்துவிட்டு அப்படி என்னாதான் செய்கின்றனர் நமது பெண்கள். சிந்திக்க வேண்டிய விஷயம்// என்று கேட்டு இருக்கிறார்கள்.

இதில் "எல்லாவற்றையும்" என்கிற வார்த்தையை நான் கேள்விப்படும் சில சம்பவங்களை வைத்து மிகவும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை மன வேதனையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

நமது பெண்கள் டி வி சீரியல் களில் மிகவும் சீரியஸாக கண்ணீர் சிந்தி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தான சொந்த உறவுகளுக்கு ஏற்படும் நல்ல கெட்ட சம்பவங்களைவிட டிவி சீரியலில் வரும் பிறப்பு இறப்பைப் பற்றிக் கேட்டால் சரியாகச் சொல்வார்கள். வேதனை வேதனை வெட்கம் கலந்த வேதனை.

தம்பி தாஜுதீன் தன் இயல்பில் ஒரு மிதவாதியாக இதை எழுதுகிறார். எழுத்தில் கொஞ்சம் சாட்டையடி தேவை என்று எண்ணுகிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரிய அழகு தொகுப்பு
ஜஸாக்கல்லாஹ் ஹைர்

நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !

sabeer.abushahruk said...

நேர்வழி காட்டும் நேர்த்தியான தொடர். படித்துவிட்டு விலகிச்செல்லாமல் பழகிப்பழகி மேம்படச் சொல்லும் பாடங்கள்.

வாழ்த்துகள் தாஜுதீன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பதிவின் தன்மையைப் போன்றே... வாசிப்பவர்களையும் அமைதி படுத்துகிறது இந்தப் பதிவு !

Anonymous said...

//சொந்த துணி கழுவ/, சாப்பிட்ட பாத்திரம் கழுவ/ தாய் தந்தையரை கவனித்து கொள்ள /வேலை ஆட்களை வைத்து இருக்கிறோம்// இது மட்டுமா? தான் பெற்ற பிள்ளையே தூக்கி வளர்க்க', சமையல் செய்யவும், வெல்லாட்டி வைத்து கொண்டு பூபோன்ற பொன்மேனி ஆடாமல், அசையாமல், கூடாமல் குறையாமல், குலுங்காமல் அலுங்காமல் வாழும்
பெண்குலத்து கண்மணிகள் - பேறு பெற்ற பெண்மணிகள்-, மாதர்குல மாணிக்கங்கள் நிறையவே உண்டு. இப்பொழுது அவர்கள் கவலை'பத்து மாதம் தன் பிள்ளையை வயற்றில் சுமக்க ஒரு மனித சுமை தாங்கி கிடைக்குமா? என்பதேயாகும். இவர்களுக்கும் பெயர்'' பாத்திமா'' என்கிறார்கள்
நபிகள் நாயகம் ரசூலுல்லாஹ் அவர்களின் மகளின் பெயராம்!'. சர்க்கோஸ்' காட்டுகிறார்கள்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

Shameed said...

//நீங்கள் தூங்குவதற்கு முன்னால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடை ஓதிவிட்டு உறங்குங்கள், நீங்கள் ஒரு வேலைக்காரனை வீட்டில் வைத்திருப்பதைவிட இது சிறந்தது”//

இதை ஓதியவர்கள் தொடர்ந்து ஓதவும் இதை இத்தனை நாள் அறியாமல் ஓதாமல் இருந்தவர்கள் இன்றையில் இருந்து ஓதவும் இந்த கட்டுரை வழி வகுத்து கொடுத்துவிட்டது

Adirai pasanga😎 said...

அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் மீது வைத்துள்ள வைத்துள்ள அவரிகளின் அளவற்ற ஈமானின் ( நம்பிக்கையின் ) காரணமாக அவர்களின் இம்மை வாழ்வின் கடினங்கள் அவர்களை அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் எவ்விதத்திலும் தடுக்கவில்லை.

மாறாக நம் ஈமானின் பலஹீனத்தின் விளைவினால் இவ்வுலக ஆசையின் காரணமாக அல்லாஹ்வை வணங்குவதை நமக்கு பலவகையிலும் கடினமாகவே தெரிகிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும், வாசித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கலாஹ் ஹைரா..

வேலை பளுவின் காரணமாக நம் சகோதரர்களின் பதிவுகளுக்கு கருத்திட முடியவில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ebrahim Ansari சொன்னது… தம்பி தாஜுதீன் தன் இயல்பில் ஒரு மிதவாதியாக இதை எழுதுகிறார். எழுத்தில் கொஞ்சம் சாட்டையடி தேவை என்று எண்ணுகிறேன். //

முயற்சி செய்கிறேன் காக்கா... இன்ஷா அல்லாஹ்..

Anonymous said...

//நீங்கள் தூங்குவதற்கு முன் சுபுஹானல்லாஹ் 33 தடவை....///

இதை ஒவ்வொரு இரவும் வீட்டிற்கு வந்து ஓதி ஊதுவதற்கு, பெண்கள் ஒரு ஒஸ்தாதை நியமித்து சம்பளம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு