அல்லாஹ்வின் திருப்பெயரால்…
வீரமிக்க சஹாபியப் பெண்ணான உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அறிவும் விவேகமும் நிறைந்த பெண்ணாக வாழ்ந்து தன்னுடைய பிள்ளைகளை இஸ்லாமிய வளர்ப்பில் வார்த்தெடுத்தார்கள் என்ற படிப்பினையைப் பெற்றோம். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகளில் நிறைந்திருக்கும் படிப்பினைகள் இந்த அத்தியாயத்திலும் தொடர்கிறது.
நபி(ஸல்) அவர்களுக்கு சேவை செய்த அனஸ்(ரலி) அவர்களின் அருமைத் தாயாரான உம்மூ சுலைம்(ரலி) கண்ணியமான வாழ்வு வாழ்ந்து வந்த அவர்களின் முதல் கணவர் மரணித்த பின், அவரை மணக்க அன்றைய சூழலில் இஸ்லாத்தை ஏற்காத அபூதல்ஹா முன்வந்தார், அபூதல்ஹா ஒரு செல்வந்தராகவும், மதிப்பு மிக்க மதினாவாசியாகவும் வாழ்ந்து வந்தவர். தன்னை திருமணம் செய்ய அந்த கண்ணியமானவரின் வாழ்க்கைத் துணை கிடைத்தால் போதும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தால் என்ன என்று ஈமானிய விதவைப் பெண்ணான உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எண்ணவில்லை. தன்னை திருமணம் செய்ய விரும்பிய ஒரு நல்ல மனிதரிடம் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவருக்கு இறை அழைப்புப் பணி (தாவா) செய்தார்கள்.
தன்னை மணமுடிக்க விருப்பம் கேட்டு வந்த அபூதல்ஹா அவர்களை நோக்கி உம்மு சுலைம்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். “உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற சிலைகளை நீங்கள் வணங்குகிறீர்களே இது சரிதானா? உங்களுக்கு ஒரு தச்சன் மரப்பலகையால் ஒரு சிலையைப் படைத்து தருகிறான், அதனை நீங்கள் வழிபாடு செய்வது அறிவுக்குப் பொருத்தமானதா?” என்று தொடர் கேள்விகளைத் தொடுத்தார்கள். இந்த கேள்விக் கனைகளால் திக்குமுக்காடிய அபூதல்ஹா அவர்கள் உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை உளத்தூய்மையுடன் ஏற்க சம்மதித்தார்கள்.
இந்த நிகழ்வில் சாஹாபியப் பெண் ஈமானில் உறுதிமிக்க உம்மு சுலைம்(ரலி) அவர்கள் “நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததையே எனக்கு மகராக ஏற்றுக் கொள்கிறேன்” எனக் கூறி இஸ்லாமிய வரலாற்றில் யாரும் மறுக்க முடியாத உன்னத இடத்தை பிடித்து முன் மாதிரி பெண்மணியாக நம் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். தனக்குக் கிடைத்த அந்தஸ்து போன்று தன்னுடைய கணவனையும் கண்ணியமான நபித் தோழராக உருவாக்கிய பெருமை இஸ்லாமிய வரலாற்றின் வீரமிக்க சாஹபியப் பெண்மணி உம்மு சுலைம்(ரலி) அவர்களையே சாரும். பிற மதத்துக்காரர்களுடன் அற்ப காம இச்சைக்காக ஓடிப்போகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, அன்று இதே போன்ற வாலிப வயதுடைய சஹாபியப் பெண்மணி உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அபூதல்ஹா(ரலி) அவர்களை திருமணம் செய்த நிகழ்வு ஒரு அற்புதமான பாடம் மட்டுமல்ல சாட்டை அடியும் என்று சொல்லலாம்.
ஈமானிய பெண் தாஃயி (மார்க்க அழைப்பாளர்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அபூதல்ஹா(ரலி) அவர்களை மணந்து, அதன் மூலம் அபூஉமைர் என்றொரு ஆண்மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த குழந்தை ஒரு முறை நோயுற்றிருந்தது, அபூதல்ஹா(ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அந்தக் குழந்தைக்கு மரணம் சம்பவித்து விட்டது. இந்த துக்கச் செய்தியை “நான் கூறும் வரை நீங்கள் யாரும் அபூதல்ஹா(ரலி)விடம் கூறாதீர்கள்” என தன் குடும்பத்தாருக்கு அறிவித்திருந்தார்கள் உறுதிமிக்க சஹாபியப் பெண்மனி அவர்கள். அபூதல்ஹா(ரலி) அவர்கள் அன்று இரவு வீடு திரும்பியிருந்தார்கள், தன் மகனுடைய நலன் விசாரித்தார், அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “மகன் முன்பிருந்ததைவிட அமைதியாகவுள்ளார்” என்று கூறினார்கள், பின்பு இரவு உணவு காரியங்களை நிறைவு செய்து கொண்டு, இருவரும் அன்று இரவு இல்லற தாம்பத்ய உறவிலும் ஈடுபட்டனர்.
மறுநாள் அதிகாலை தங்களின் மகன் மரணித்த செய்தியை தனது கணவருக்கு அறிவிக்கிறார்கள். “அபூதல்ஹாவே ஒரு மனிதர் நமக்கு கொடுத்த அமானிதத்தை அவர் திருப்பி கேட்டால் கொடுப்பீர்களா, மாட்டீர்களா?” என்று உம்மு சுலைம்(ரலி) அவர்கள் கேட்க, “ஆம் அதை திருப்பி கொடுப்பது தானே சரி” என்று அபூதல்ஹா(ரலி) கூற, பின்னர் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் “அல்லாஹ் நமக்கு குழந்தையை அமானிதமாக கொடுத்தான், அந்த அமானிதத்தை அவன் திருப்பி எடுத்துக் கொண்டான்” என்று தன் குழந்தையின் மரணத்தை அமைதியாக தெரிவித்தார்கள்.
தங்களது குழந்தையின் இழைப்பை நினைத்து, ஒப்பாரி ஒலமின்றி இப்படி எளிமையாக எடுத்துக்கூறிய உம்மு சுலைம்(ரலி) அவர்கள் போன்ற ஈமானில் உறுதிமிக்க இன்னொரு பெண்ணை இன்றைய உலக வரலாற்றில் தேடிப் பிடிக்க வேண்டும். எப்படிப்பட்ட பொறுமையுள்ளம் கொண்டவர்களாக சொர்கத்துவாசியான சஹாபியப் பெண்மணி அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள் என்று எண்ணிப் பார்க்கும்போது நமது உள்ளம் சிலிர்க்கிறது.. உம்மு சுலைம்(ரலி) அவர்கள் தங்களது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை கௌரவிப்பதிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்து காட்டினார்கள் மூஃமீன்கள் மேல் பாசம் நிறைந்த அந்த ஈமானியப் பெண் அவர்கள்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்களின் சமூகத்துக்கு ஒரு புதிய விருந்தாளி வந்தார். நபி(ஸல்) அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அந்த விருந்தாளியை அபூதல்ஹா(ரலி) அவர்கள் தனது வீட்டுக்கு விருந்தளிக்க அழைத்து வந்தார்கள். மனைவி உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம் “ஏதேனும் உணவு உண்டா” எனக் கேட்க, “குழந்தைகளுக்கு மட்டும்தான் உணவுள்ளது, இருந்தாலும் விருந்தாளியை கெளரவிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் குழந்தைகளை எப்படியேனும் சமாளித்து தூங்க வைத்து விடுகிறேன்”, விருந்தாளி மட்டும் உண்டு பசியாறட்டும் என்று ஆலோசனை கூறினார்கள். பெற்ற குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு உம்மு சுலைம்(ரலி) அவர்களும் அபூதல்ஹா(ரலி) அவர்களும் தமக்குள் செய்த அந்த இரகசிய ஆலோசனையின் பேரில் வந்த விருந்தாளியை வயிறாற சாப்பிட வைத்த தியாகம் பற்றி நபி(ஸல்) அவர்கள் சிலாகித்து சொன்னதோடு அல்லாமல் அல்குர்ஆன் வசனமொன்று அருளப்பட்டது என்று ஹதீஸ்கள் படிக்கும் போது கண் கலங்காதவர்கள் இருக்க முடியாது.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் மதினாவில் சஹாபாக்களுடன் தொழுதுவிட்டு அமர்ந்திருக்கிறார்கள், அந்த நேரத்தில் சிறுவயதுடைய அனஸ் (ரலி) அவர்கள் அந்த இடத்துக்கு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய கற்களை எடுத்து ஒரு துணியில் போட்டு கட்டி தன்னுடைய வயிற்றில் கட்டிக்கொண்டு தன்னுடைய மேனியில் ஒரு துணியைப் போட்டு மூடுகிறார்கள். இதனை அனஸ்(ரலி) அவர்கள் கவனித்து விடுகிறார்கள்.
உடனே அனஸ்(ரலி) அவர்கள் பிற சஹாபாக்களிடம் “ ரஸூல்லுல்லாஹ் வயிற்றில் ஏதோ கட்டி வைத்துள்ளார்களே அது என்ன?” என்று கேட்கிறார்கள். அதற்கு அங்கிருந்த சஹாபாக்கள் சொன்னார்கள், நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்கள் ரொம்ப நாட்களாக உணவின்றி சாப்பிடாமல் பசியில் இருக்கிறார்கள், தன்னுடைய பசியின் துயரத்தைத் தாங்கிக் கொள்ள துணியில் கல்லை கட்டி தன் வயிற்றில் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். இதனை கேட்ட அனஸ்(ரலி) சத்தம் போட்டு “அந்த கஷ்டத்திற்கு நாசமுண்டாகட்டும், நாசமுண்டாகட்டும்” என்று அழுதவர்களாக தன்னுடைய தாய் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்கள் பசியினால் தன் வயிற்றில் கல்லைக் கட்டி வைத்திருப்பதைச் சொன்னார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் சாப்பாடில்லாமல் கஷ்டப்படுகிறார்களா என்று கலங்கியவர்களாக உம்மு சுலைம்(ரலி) அவர்கள் உடனே நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்தனுப்புகிறார்கள். நபி(ஸல்) அந்த உணவை உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கே கொண்டு செல்லுமாறு அனஸ்(ரலி) அவர்களிடம் சொல்லி விட்டு, அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) மற்றும் சஹாபாக்களும் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புதம் நிகழ்த்திக் காட்டப்பட்டு அத்தனை சஹபாக்களும் வயிறார உணவருந்தினார்கள் என்பதை புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம். பசியோடு இருந்த நபி(ஸல்) அவர்களுக்கும் சஹாபாக்களுக்கும் விருந்தளிக்க பாக்கியம் பெற்ற சஹாபிய்ய பெண்மணிகளில் முன்னனியில் இருப்பவர்களில் கண்ணியமிக்க ஈமானியப் பெண்மணி உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவர் என்று சொன்னால் மிகையில்லை.
தமக்கு தேவையிருந்த போதிலும் அவர்கள் தங்களைவிட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள் (அல்குர்ஆன் 59:9) இதுபோன்ற அழுத்தமான அறிவுரைகளுக்கேற்ப உம்மு சுலைம்(ரலி) அவர்கள் போன்ற சஹாபியர்கள் அனைவரும் எளியோர்க்கும் வலியோர்க்கும் விருந்திட்டு உபசரித்தார்கள். இருப்பினும் கணவன் மனைவியான அபூதல்ஹா(ரலி), உம்மு சுலைம்(ரலி) இருவரின் வாழ்வு விருந்து உபசரிப்புப் பண்பாட்டில் சிறந்த வியக்கத்தக்கதொரு முன்மாதிரியாய் திகழ்கிறது என்பதற்கு பல ஹதீஸ் தொகுப்புகளில் உண்மை வரலாறுகள் சாட்சியாக மின்னிக் கொண்டிருக்கிறது.
உம்மு சுலைம்(ரலி) அவர்களின் சிறப்பை சிகரத்தில் ஏற்றும் நபியவர்களின் முன்னறிவிப்பொன்று உள்ளது, “நான் சுவனத்துக்கு சென்றேன். அங்கே ஒரு காலடி ஓசை கேட்டது பார்த்தபோது உம்மு சுலைம்(ரலி) அங்கே இருந்தார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
அழகிய வாழ்க்கை வாழ்ந்து மரணித்த உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் நிறைய படிப்பினைகள் பெற வேண்டும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் தனக்கு வர வேண்டிய கணவன் அழகானவனாக, உழைப்பவனாக, இருக்க வேண்டும் என்று எண்ணுவது போன்று ஐவேளை தொழுது, ஹலால் ஹராம் பேணி அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி ரஸூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழும் ஈமானுல்லவனாக இருக்க வேண்டும் என்று என்றைக்காவது எண்ணியதுண்டா?
திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண் தனக்கு வர வேண்டிய மனைவி அழகானவளாக, அறிவானவளாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது போன்று ஐவேளை தொழுது, ஹலால் ஹராம் பேணி அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி ரஸூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழும் ஈமானுள்ளவளாக இருக்க வேண்டும் என்று என்றைக்காவது எண்ணியதுண்டா?
பள்ளிக்கு லுஹர் தொழுகைகுப்போன கணவன் திடீர் என்று ஒரு வெளியூர் விருந்தாளியை அழைத்து வந்துள்ளார், அவருக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைத்துள்ள உணவில் முஹப்பத்துடன் பங்கிட்டு அந்த திடீர் விருந்தாளிக்கு வயிறு நிறைய உணவு கொடுக்க எத்தனை இல்லத்தரசிகளுக்கு மனம் வரும்? விதிவிலக்காக நம்மில் சிலர் உள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது அல்லாஹ் அவர்களின் அமல்களையும் நற்காரியங்களயும் பொருந்திக் கொள்வானாக.
நம்மில் எத்தனை பேர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களிடமும் வசதியற்ற அண்டை வீட்டாரிடமும் “ நீங்கள் வயிறாற சாப்பிட்டீர்களா?” என்று என்றாவது கேட்டிருக்கிறோம்?
நம்மில் எத்தனை பேர் பள்ளிவாசல்களில் வெளியூர்களிலிருந்து உதவிக்காக கையேந்தி உதவி தேடி வருபவர்களை நாம் உண்ணும் உணவை உண்ண நம் வீடுகளுக்கு அழைத்து சென்றிருப்போம்?
பள்ளிக்கு தொழப்போகும் ஆண்களிடம் “பள்ளிவாசலில் வெளியூர் விருந்தாளி யாரும் இருந்தால் அழைத்து வாருங்கள் உணவளிக்கலாம்” என்று வீட்டில் உள்ள எத்தனை பெண்கள் மனமுவந்து சொல்லியனுப்பி இருப்பார்கள்?
அந்த சத்திய சஹாபாக்களின் வாழ்வோடு நம்முடைய வாழ்வை ஒப்பிட்டு எண்ணிலடங்கா கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.
இவ்வுலக வாழ்வில் எண்ணற்ற தியாகங்கள் செய்து, ஒழுக்கமான குடும்ப வாழ்வு வாழ்ந்து, பிள்ளைகளை ஈமானிய பற்றுள்ள பிள்ளைகளாக வளர்த்து, போர்க்களங்களில் கலந்துகொண்ட வீரப்பெண்மணியாக வாழ்ந்து, பசியோடு உள்ளவர்களுக்கு உணவளித்து, இஸ்லாத்தைப் பிறருக்கு எத்தி வைத்து வாழ்ந்த உயர்ந்த உள்ளம் கொண்ட சஹாபியப் பெண் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் மரணிப்பதற்கு முன்பு சொர்கத்தில் அவரின் காலடி ஓசை கேட்பதாக நபி(ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்டது உம்மு சுலைம்(ரலி) அவர்கள் போல் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும், இஸ்லாமிய நெறிமுறையோடு வாழும் ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணுக்கும் ஆணுக்கும் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம் என்று சொன்னால் மிகையில்லை.
தொடரும்..
M தாஜுதீன்
8 Responses So Far:
இந்த சொர்க்கத்து வாரிசு சஹாபிப் பெண்களின் வரலாறுகளை நாம் படிப்பதுடன் நிறுத்திவிடாமல் நம் குடும்பத்து பெண்மணிகள் காட்டாயம் படித்து உணரும் ஒரு வாய்ப்பை ஒவ்வருவரும் ஏற்ப்படுத்தி கொடுக்க வேணும்.
இவர்களின் தியாகங்கள் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை நம் குடும்பத்து பெண்களிடம் ஏற்ப்படுத்த வல்லது. ஒரு உள்ளச்சத்தை, ஒரு மாற்றத்தை கொண்டு வரும் சக்தி பெற்றது.
அபு ஆசிப்.
இந்த நவீன யுகத்தில், அநாச்சாரங்களெல்லாம் நாகரிகம் என்று கொண்டாடும் கூட்டத்தினரினூடே, ஈமானை எல்லா வகையிலும் 24 மணிநேரமும் சோதனைக்குட்படுத்தும் உலக நடைமுறை வாழ்க்கையில் நம் வாழ்வு ஈடேற்றம் பெற கடினமான கட்டுப்பாடுகள் அவசியம்.
அக்கால ஈமானியப் பெண்டிர் மற்றும் சஹாபாக்களாக நாம் ஒருபோதும் ஆக முடியாது எனினும் அவர்கள் வாழ்வைப் போல் நாம் வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று வ்லியுறுத்தும் தாஜுதீன், அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
படிப்பினை தரும் நல்வாழ்வு தந்த சகோதரர் தாஜுதீனுக்கு நன்றி.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
இன்ஷா அல்லாஹ் !
நிச்சயம் செய்ய வேண்டும் !
அதற்கான அனைத்து உதவியையும் உறுதியையும் வல்லமை நிறைந்த அல்லாஹ் நமக்கு வழங்குவானாக !
//தமக்கு தேவையிருந்த போதிலும் அவர்கள் தங்களைவிட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள்//
இது ஒரு சரியான முன்னுதாரணம்
பெண்கள் கூடும் கூட்டங்களில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப் பட வேண்டிய வரலாறு.
ஜசாக் அல்லாஹ் ஹைர் தம்பி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகளுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா...
உம்மு சுலைம்(ரலி) அவர்கள் போல் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும், இஸ்லாமிய நெறிமுறையோடு வாழும் ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணுக்கும் ஆணுக்கும் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம் என்று சொன்னால் மிகையில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]...
தன் அருமை மகன் அபூஉமைர் மரணித்த போது வெளியூர் சென்று திரும்பிய தன் கணவரும் அபூஉமைர் தந்தையுமான அபூதல்ஹா[ரலி]யிடம் தங்கள் மகன் அபூஉமைர் மரணித்த செய்தியை உம்மு சுலைம்[ரலி] தெரிவித்த பாங்கு அல்லாஹ்விடம் அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் எதிரொலி.
//அல்லாஹ் நமக்கு கொடுத்ததெல்லாம் நமக்கு சொந்தமல்ல, கொடுக்கும் போது கொடுப்பான்! எடுக்கும் போது எடுப்பான்! அவன் நமக்கு கொடுத்ததெல்லாம் அவனிடமே திருப்பி கொடுக்க வேண்டிய அமானிதமே அன்றிவேறல்ல..//
இன்றைய தினம் பெரும்பாலான மனிதர்கள் இதை உணராமல் ஆட்டம் போட்டு காட்டுகிறார்கள்.. அவன் கொடுத்ததை திரும்ப எடுத்தபோது
ஆடியவார்கள் ஆடியே போய் விடுகிறார்கள். இது அல்லாஹ் கற்பிக்கும் பாடம்!
இதுபோன்ற நிகழ்வுகளை நினைவு படுத்தும் தம்பி தாஜூதீனுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அன்பையும் கருணையையும் பொழிவானாக! ஆமீன்.
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
Post a Comment