Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒளி வீசுமுன் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | August 12, 2013 | , , , , ,

இந்த அகிலதை படைத்து பரிபக்குவப் படுத்தி, உயிரினங்கள் அனைத்திற்கும் உணவளிக்க பொறுப் பேற்றுக் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயர் போற்றி இதனை பதிவு செய்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!

"அரப்" என்ற சொல்லுக்கு , பொட்டல் பூமி , வறண்ட நிலம், மற்றும் செடி கொடிகளற்ற, பசுமைக்கு அப்பாற்பட்ட பிரதேசம் என்ற அர்த்தத்தில் இன்றளவும் அந்த வார்த்தைக்கு பொருள் தரப்படுகின்றது.  இத்தகைய பாலைவனத்துக்கு வாரிசுதாரர்களாக அன்றிலிருந்து வழிவழியாக வருவதாலேயே இவர்கள் அரேபியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 

சாட்சியாளராக, எச்சரிக்கை செய்பவராக, நற்செய்தி கூறுபவராக, அறியாமை என்னும் இருள் நீக்கும் கலங்கரை விளக்காக, இறை அச்சம் உடையோருக்கு  ஒரு முன்மாதிரியாக ஆக்கி, நாளை மஹ்ஷரில் பரிந்துரை என்னும் மிக உயர்ந்த தகுதியை , இதற்கு முன் எந்த நபிக்கோ , அல்லது ரசூல் மார்களுக்கோ கொடுக்காத அந்தஸ்த்தை பெற இருக்கும், மனிதகுல முன்மாதிரி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் உதிக்கு முன் அரபுலகின் நிலை என்ன? அவர்கள் வாழ்ந்த விதம் என்ன ? ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்வு எப்படி அமைந்திருந்தது?என்பதை நோக்கியே இந்த ஒளி வீசுமுன் உங்களிடையே வீபேச இருக்கின்றது. 

அரேபியர்களின் அரசியல் பின்னணி:

இதில் முடி சூட்டப்பட்டவர்கள் என்றும், குடும்பக்கோத்திரங்கள்  மூலம் வந்தவர்கள் என்றும் இருவகைப்பட்டவர்கள் ஆட்சி  செய்துள்ளனர்.

இதில் முடி சூட்டப்பட்டவர்கள் தனித்து இயங்கும் அதிகாரம் இல்லாமல் , ஒரு பேரரசுக்கு கட்டுப்பட்டு நடந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்.

குடும்ப பாரம்பரியத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களோ தனித்தன்மையுடனும், தனி உரிமையுடனும் விளங்கினர்.இவர்கள் பெரும்பாலும் முழு சுதந்திரத்துடன்  செயல் பட்டனர்.  அல்லது ஒரு அரசாட்சியின் பிரதிநிதியாக செயல் பட்டனர்.

தூதுத்துவத்துக்கு முன் :

அண்ணல் நபி (ஸல்) இவ்வுலகில் அவதரிக்குமுன்பு , இந்த அரபிகள் வாழ்ந்த விதம் , இறைவன் படைத்த ஆறறிவு என்ற சொல்லுக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற மிருக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாகவே வாழ்ந்து சென்றிருக்கின்றனர். 

சூரியன் ஒவ்வொரு நாளும் உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒளி வீசுவது போல் அரபுலகுக்கும் ஒளி வீசிக் கொண்டுதான் இருந்தது. ஒளி கிடைத்தது என்னவோ வறண்ட பூமிக்கு தானே ஒழிய , அரபிகளின் உள்ளத்துக்கு அல்ல. அவர்கள் உள்ளம் கடுகளவும்  ஆறறிவு என்னும் ஒளி உள்ளே புகாத வண்ணம் இருண்ட வறண்ட பாலைவன பூமியாகத்தான் இருந்து வந்தது. 

ஒரு வீட்டில் உள்ள மிருகம் மற்றுமொரு வீட்டில் போய் தண்ணீர் குடித்து விட்டால் அதன் விளைவு என்ன தெரியுமா? சந்ததி, சந்ததியினருக்கு பகைமையை ஏற்படுத்தும் அளவுக்கு மிகப்பெரிய விஷயமாக உருவகப்படுத்தி காலம் காலமாக பகைமை உணர்வோடு வாழ்ந்து சென்ற சமுதாயம். ஆண்டான் அடிமை பேதங்கள் பாலைவன பூதங்களாக உருவெடுத்து வேற்றுமை  வெறி உச்சாணிக்கொம்பில் இருந்த காலம்.

மழை பொய்த்துவிடும் நாட்களில் , இறைவனிடம் கையேந்தி பெறுவதை கேலியாக்கி மிருகத்தின் வாலில் தீயை மூட்டி, அது உஷ்ணத்தின் வேதனை தாங்க மாட்டாது கத்தும்போது, அந்த சப்தம் மழையைக் கொண்டு வரும் என்று ஒரு காட்டுமிராண்டி நம்பிக்கையின் வாரிசுதாரர்களாக வாழ்ந்து சென்ற சமுதாயம்.  

இந்த தூய அழைப்புக்கு முன்பு சத்திய சஹாபாக்களின் நிலையும்  மோசமே. ஒவ்வரு நாளும் அல்லாஹ்வுடைய தூதருக்கு ஒரு யுகமாகத்தான் கழிந்தது. தூய வழியின்பால் மீட்டெடுக்க, குழந்தை தாயை நோக்கி ஓடி வருவது போல் இந்த தூய வழின்பால் விரைந்து வர யார் யாருக்கெல்லாம் அல்லாஹ் நேர்வழியை நாடி இருந்தானோ அவர்கள் ஒவ்வொருவரையும்  ஓரிறைக் கொள்கையின் மீது நாட்டம் கொள்ள வைப்பதென்பது ஒரு சவால் நிறைந்ததாகத்தான் அல்லாஹ்வுடைய தூதருக்கு இருந்தது. அதையும் அல்லாஹ்வின் நாட்டப்படி வெற்றியோடு நடத்திக் கட்டினார்கள்.

அல்லாஹ் சொல்கின்றான் :

.... இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் -நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர் ஆன் : 3:103) என்று அவர்கள் இருந்த படு பயங்கரமான சூழலையும் அதிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டதையும் அல்லாஹ் விவரிக்கின்றான்.

சிலை வணக்கம்:

புனித காபா அது எந்த நோக்கத்திற்காக நபி இப்ராஹிம் (அலை), அவர்தம் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) இவர்களால்  நிர்மாணம் செய்யப்பட்டது என்ற அடிப்படை நோக்கத்தை அடியோடு மறந்து, அல்லது மறைத்து, நோக்கத்தின்  ஆணிவேரையே பிடுங்கி எரியக்கூடிய அளவுக்கு, சிலை வணக்கம் அங்கே நடத்தப்பட்டது. அல்லாஹ்வுக்கு இணை வைக்கப்பட்டது. 

பல வகையான சிலைகள் விசித்திரமான வடிவங்களிலும், அளவுகளிலும் அங்கே வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்து வைக்கக்கூடியது என்னும் நம்பிக்கையில் சிலை வணக்கத்திற்கு மிகப்பெரும் கௌரவமும், மரியாதைகளும், வழி வழியாக நடத்தட்டப்பட்டு வந்தது.

இங்கே ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். அதாவது, இவர்கள் தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்பதை நம்பி இருந்தார்கள். இருப்பினும் அல்லாஹ் இவர்களை ஏன் இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று கூறுகின்றான் என்றால், காபாவை அலங்கரித்த சிலைகள் அனைத்துமே, இதற்கு முன் சென்று விட்ட நபிமார்கள், மற்றும் நல்லடியார்களைத்தான் இவர்கள் சிலைகளாக வடித்து இருந்தார்கள். நாம் இறைவனிடம் நேரடியாக கேட்டால் இறைவன் நம் தேவைகளை மறுத்தாலும் மறுத்து விடக்கூடும். ஆதலால் இந்த நல்லடியார்கள் மூலம் நம் தேவைகளை முன் வைத்தால் அனைத்தும் கைகூடும் என்று, இறைவனின் கடல் போன்ற கருணையின் மீது நம்பிக்கை இழந்து, சிலைகளை இடைத்தரகர்களாக ஆக்கி, இறைவனை நெருங்கி நம் தேவைகளை கேட்டுப்பெறலாம் என்று எண்ணியதால்தான்.

மூட நம்பிக்கைகள்

அம்புகள் மூலம் குறி பார்ப்பது :

முதல் வகை: திருமணம், பயணம் மற்றும் நல்ல காரியங்கள் முடிவெடுப்பதற்காக மூன்று  வகையான அம்புகளை பயன்படுத்துவார்கள், ஒரு அம்பில் "ஆம்" என்றும்  இரண்டாவது அம்பில் "வேண்டாம்" என்றும் மூன்றாவது அம்பில் ஒன்றுமில்லாமலும் இருக்கும். ஒரு செயலை செய்ய முற்படும்போது  ஒரு அம்பை உருவுவார்கள் . அதில் ஆம் என்ற அம்பு வந்தால் அச்செயலை செய்வார்கள். வேண்டாம் என்ற அம்பு வந்தால் அச்செயலை தவிர்த்து விடுவார்கள். மூன்றாவதாக  ஒன்றுமில்லாத அம்பு வந்தால் முதல் இரண்டு அம்புகளில் ஏதாவது ஒன்று வரும் வரை  அதை உருவிக்கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது வகை :

இது குற்றப் பரிகாரம், மற்றும் நஷ்ட்ட ஈட்டுத்தொகை சம்பந்தமாக தீர்வுகள் சொல்லப்படுவதற்காக

மூன்றாவது வகை :

ஒருவருடைய இனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டால் , மூன்று அம்புகளில் ஒன்றில், நம் இனத்தை சார்ந்தவர் என்றும், மற்றொன்றில் நம் இனத்தை சார்ந்தவர் அல்லர் என்றும், பிறிதொன்றில் இணைக்கப்பட்டவர் என்றும் எழுதி அவரை ஹுபுல் என்ற சிலைக்கு அழைத்து வந்து 100 ஒட்டகை, 100 திர்கம் என்று குறி சொல்லும் பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள்.

பூசாரி அம்பெடுக்கும் போது முதல் அம்பு வந்தால் அவரை தம் இனத்தவர் என்று ஏற்றுக் கொள்வார்கள். இரண்டாவது அம்பு வந்தால் அவரை தம் நட்பு கொண்ட கோத்திரமாக ஏற்றுக் கொள்வார்கள். மூன்றாவது அம்பு வந்தால் அவர் பழைய நிலையிலேயே நீடிப்பார். அவர் எந்த இனத்துக்கும் சொந்தக்காரர் இல்லை என்று முடிவெடுப்பார்கள்.

இப்படி முடிவெடுக்க அம்பின்மீதும், பூசாரியின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டு தங்கள் காரியங்களை செய்து மன திருப்தி அடைந்தார்கள்.

சூதாட்டம் :

அம்புகள் மூலம் சூதாடும் பழக்கம் இவர்களிடையே இருந்தது. அதாவது, ஒரு ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள். அதை 10 அல்லது 28 பங்காக பிரிப்பார்கள். அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும். அதில் ஒன்றில் "ராபிஹ்" என்றும் பிறிதொன்றில் "குப்ள்" என்றும் எழுதப்பட்டிருக்கும்.

யாரவது ஒருவருடைய பெயரை சொல்லி அம்பை உருவும்போது, "ராபிஹ்" என்று வந்தால் அவர் காசு கொடுக்காமல் ஒட்டக இறைச்சியில் அவருக்குரிய பங்கை எடுத்துக் கொள்வார். "குப்ள்" என்று வந்தால், அவர் தோற்றவர் ஆவார், அவருக்கு இறைச்சியில் எந்த பங்கும் கிடைக்காது. மேலும் கடன் வாங்கி வந்த அந்த ஒட்டகத்துக் குண்டான  முழு தொகையையும் அவரே செலுத்த வேணும் என்று சூதாட்டம் புரையோடிப் போய் இருந்தது.

பெண்கள் நிலை:

பெண்களை ஒரு போகப்பொருளாக , ஒரு பெண்ணுக்கு பல கணவன்கள் என்ற ரீதியில் இயற்கைக்கு முரணான, விபச்சாரத்தை ஞாயப் படுத்தும் ஒரு மிருகத்தனமான வாழ்க்கைக்கு தங்களை வழக்கப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். மது , மாது, சூது இவ்வாறு இவர்களின் அன்றாட வாடிக்கை. கேலிப்பொருளாக, கடையில்  வாங்கும் ஒரு  உயிரற்ற பொருளைப்போல் பெண்களைப் பாவித்தார்கள். அவர்களுக்கும், உணர்வு, ஆசை, தேவை, உரிமை  அதிகாரம் உண்டு என்பதை கிஞ்சிற்றும் உணராமல் அவர்களின் அனைத்து உரிமைகளும் நசுக்கப்பட்டு, ஒரு கேலிப்பொருளாக பார்க்கப்பட்டனர்.

பெண்குழந்தை பிறந்தால் , பெற்றோர் தாங்கள் ஏதோ ஒரு அவமானப்பட்ட காரியத்தை செய்து விட்டது போல் சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழ முற்பட்டார்கள். ஒரு கேவலமான காரியத்தை செய்துவிட்டது  போல் சமூகத்தில் கூனிக்குறுகி வாழ தலைப்பட்டார்கள். ஒரு சிலரோ பெற்ற பெண்குழந்தையை , உயிரோடு புதைக்கவும் தயங்கவில்லை. நாளை மஹ்ஷரில், பெண் குழந்தைகளை பார்த்து நீங்களெல்லாம் என்ன காரணத்திற்காக புதைக்கப்பட்டீர்கள் என்று அல்லாஹ் கேட்கும்போது, யா அல்லாஹ் பெண்ணாக பிறந்ததைத் தவிர வேறெந்த பாவமும் நாங்கள் செய்யவில்லை என்று அந்த குழந்தைகள் சாட்சி சொல்லும். அப்போது அல்லாஹ் தன கோபக்கனல் தெறிக்கும் பார்வையை  பெண்ணை புதைத்தவர்கள் மீது வீசுவானே அதைப்பற்றி கவலைப்படாமல்  பெண் குழந்தையை உயிரோடு புதைத்தனர். மொத்தத்தில் மனித உருவில் மிருகங்களாக, நாம் ஏன் , எதற்காக படைக்கப்பட்டோம் என்ற கேள்விகளுக்கு வாழ்க்கையில் கொஞ்சம் கூட இடம் இல்லாமல் நரகத்தின் எரி விறகுகளாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தனர்.

அறியாமைக்கால திருமணம்:

இக்காலத்தில் திருமணம் நான்கு வகையைக் கொண்டிருந்தது

1. இக்காலத்தில் நாம் செய்வது போன்று ஒருவருடைய பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணை மஹர் என்னும் மணக்கொடை கொடுத்து. தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு அப்பெண்ணுடன் வாழ்க்கை நடத்துவது.

2. கணவன் அனுமதியுடனேயே அவன் மனைவி மாதவிடாய் தூய்மை அடைந்தவுடன் வேறு ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு அவன் மூலம் கர்ப்பமானதும் அவளை தன்னுடன் மீண்டும் சேர்த்துக்கொண்டு அவன் மூலம் பிறக்கும் குழந்தையை தன் குழந்தைபோல் பாவித்து வளர்த்து வருவது. இது ஏனெனில் திடகாத்திரமான குழந்தை வேண்டி இவ்வாறு கணவன் மனைவி இருவரின் சம்மதத்தின் பேரில் செய்து கொள்வது.

3. ஒருத்தி பலருடன் தொடர்புகொண்டு அதன் மூலம் பிறக்கும் குழந்தையை யார் யாருடன் தொடர்பு கொண்டாலோ அவர்கள் அனைவரையும் அழைத்து  அதில் ஒருவரை இவள் தேர்ந்தெடுத்து இது உனக்குச் சொந்தமானது என்று கூறி அவனிடம் ஒப்படைப்பாள் அவனும் மறுக்காமல் அனைவரின் சம்மதத்தோடு ஏற்றுக்கொள்வான் இது ஒரு வகை. 

4. இவள் விலைமாதாக இருப்பாள். தன்னிடம் வரும் யாரையும் தடுக்க மாட்டாள். இவளுக்கு பிறக்கும் குழந்தை யாருடையது என்னும் அடையாளத்துக்கு, முகக்குறி பார்த்து சொல்லும் ஒருவனை அழைத்து அவன் சொல்லும் நபரிடம் இக்குழந்தை ஒப்படைக்கப்படும். அவனும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வான்.

இப்படி கேடுகெட்ட முறையில் திருமணம் என்ற பெயரில் விபச்சாரத்திற்கு சமூகத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் சில சமயங்களில் போர்க்காலங்களில் தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றி பெற்றவர்கள் அனுபவித்து அதன்மூலம் பிறக்கும் குழந்தைகள் காலத்துக்கும் அடிமைகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம்,கட்டாயம் என்றிருந்தது. 

இப்படி பரவலாக ஒழுக்கத்தின் மேன்மையை ஆழக்குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்தது.

பண்பாடு:

இவர்களிடம் சீரிய சிந்தனையோ பகுத்தறிவோ இல்லாததின் காரணமாகத்தான் இவர்களின் காலத்தை "அய்யாமுல் ஜாகிலிய்யா" (அறியாமைக்காலம்) என்று வரலாற்றில் சொல்லப்படுகின்றது. ஏற்க இயலாத செயல்பாடுகளும், இழிவான நடைத்தைகளும் இவர்களோடு ஒட்டிப்பிறந்தவை. பண்பாடு நீதி நேர்மை தரையிலே புரண்டு தவியாய் தவித்தது.

மனித நேயம் என்றால் என்ன என்ற பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையே அவர்களின் சொந்த மாகிப்போனது. நாம் மனிதனாக பிறந்திருக்கின்றோம் ஆறறிவு கொடுக்கப்பட்டு இருக்கின்றோம் என்பதை அடியோடு மறந்து, தான் தோன்றித்தனமாக , இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு நேரிய வழிகாட்டுதல் இன்றி, எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கைக்கு தலைமுறையாக தள்ளப்பட்டு, மிருகங்களின் குணம் எப்படியோ அப்படியே இருந்தது இவர்கள் குணம். அன்றாட வாழ்க்கையில் மானமும் இல்லை ஞானமும் இல்லை. 

இந்த நிலையில்தான், தீன் ஒளி புகாத இந்த அரபுலக இருள் நிறைந்த, மனதினில் அல்லாஹ் ஓரிறைக் கொள்கை என்னும் ஒளிக் கீற்றை பரவச்செய்யும் முகமாக , மனிதகுல மாணிக்கத்தை,  அண்ணல் நபி (ஸல்) அவர்களை இப்புவிக்கு தூதாக, பரிசாக தந்தான்.

அவர்கள் இப்பிரதேசத்தில்  தூதராக வந்த தருணமோ, சிலை வணக்கம் மிகப்பெரும் கௌரவமாக மதிக்கப்பட்ட காலம், இணைவைப்பை இணை வைப்பென்று தெரியாமலேய அல்லாஹ்வுக்கு உகந்ததென்றே நினைத்து போற்றி வந்த காலம், சிலை வணக்கத்திற்கு குறைவு வந்து விட்டாலோ அல்லது அதைப்பற்றி யாரும் குறை சொன்னாலோ அவர்கள் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற நிலை உள்ள காலம்.

அல்ஹம்துலில்லாஹ் ,அனைத்து சோதனைகளையும் இறைவனின் உதவியால் தமது 23 ஆண்டுகால தூதுத்துவ வாழ்வில் இக்கொள்கையின் முகமாக இறைவன் நியதியின்படி  அவன் கொடுத்த அனைத்து சோதனைகளையும் , அவனுக்காகவே ஏற்று, உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை, ஏச்சு, கேவலப் பேச்சு, கல்லெறி, முள் பாதை, இருள் பாதை, உதிரம் சிந்திய நிலை, என்ற அனைத்து சோதனைகளையும் வெற்றியோடு கடந்து அனைத்து மூட நம்பிக்கைகள், நூதனப்பழக்க வழக்கங்கள், ஆண்டான், அடிமை, பேதங்கள், கொடும் வட்டி  இன பேதம், நிற பேதம், அனைத்திற்கும் பாலைவன மண்ணிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. 

யாருக்கும் யாரும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை. எவன் ஈமானில், , உள்ளச்சத்தில் உங்களில் மிகைத்து இருக்கின்றானோ அவனே உங்களில்  சிறந்தவன் என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

உடமைகள் ஒழுங்கு செய்யப்பட்டு , சொத்துக்களில் உரிமை பெண்களுக்கும் உண்டு என்று அறிவிக்கப்பட்டது. மனித சமூகம் மாசு படாமல் மது விலக்கு அமுல் படுத்தப்பட்டது. மக்கள் யாவரும் ஒன்றே குலம் என்னும் இஸ்லாமிய மார்க்கம் வந்து இஸ்லாம் அதன் தூய வடிவத்தை பறை சாற்றி இது ஒன்றே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றும் முழங்கப்பட்டது.

சூரிய ஒளி என்னவோ இப்பூமி பந்தின் ஒருபாகத்திற்கு ஒளியையும், மறு பாகத்திற்கு இருளையும்தான் இதுவரை தந்து கொண்டு இருக்கின்றது. இறைவன் ஏற்பாட்டின் படி. ஆனால் காருண்ய நபியின் தூதுத்துவமோ இப்புவியின் அனைத்து உலகுக்கும் இருளிலும் சரி பகலிலும் சரி ஒவ்வொரு மனித உள்ளத்திற்கும் தன் ஒளிக்கீற்றை தந்து வழி நடத்திக்கொண்டு இருக்கின்றது.

இன்று வரை இதை ஏற்க  மறுப்பவர் போக மீதமுள்ள உலகின் மக்கள் தொகையின் 1/3-ன் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து ஆளுமை செய்து கொண்டுதான் இருக்கின்றது.

அபு ஆசிப்

21 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அறியாமைக் காலத்தின் இருள்படிந்த மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறாய்.

அதுபோன்ற பழக்க வழக்கங்களை நோக்கி இக்காலத்திலும் செல்லும் மக்களை என்பவென்பது.
சிறப்பாக எழுதப்பட்ட பதிவிற்கு வாழ்த்துகள் நண்பா

Unknown said...

சபீர்

மூடப்பழக்க வழக்கம் என்பது யுக முடிவுநாள் வரை தொடரும்.
இதற்க்கு முடிவு என்பதின் எல்லை இவ்வுலகம் முடியும் வரை இல்லை.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நீங்கள் சொல்லிக் கொண்டு போவது போன்ற பிரம்மை, அப்படியே சம்மனம் கொட்டி உட்கார்ந்து கேட்பது போன்று இருக்கிறது....!

அறியாமைக் கால பழக்க வழக்கங்கள் !

//சூரிய ஒளி என்னவோ இப்பூமி பந்தின் ஒருபாகத்திற்கு ஒளியையும், மறு பாகத்திற்கு இருளையும்தான் இதுவரை தந்து கொண்டு இருக்கின்றது. இறைவன் ஏற்பாட்டின் படி. ஆனால் காருண்ய நபியின் தூதுத்துவமோ இப்புவியின் அனைத்து உலகுக்கும் இருளிலும் சரி பகலிலும் சரி ஒவ்வொரு மனித உள்ளத்திற்கும் தன் ஒளிக்கீற்றை தந்து வழி நடத்திக்கொண்டு இருக்கின்றது.// பதிவின் சாரம் !

Anonymous said...

//சூரியன் என்னவோ பூமிபந்தின் ஒரு பக்கத்துக்கு மட்டுமே//

அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்பது இஸ்லாமே!.. இந்தச் சூரியன் பூமிபந்தின் இரு பக்கத்திற்கும் ஒளி உமிழ்ந்து கொண்டே இருக்கும். இஸ்லாமிய ஒளி வீசி கொண்டிருக்குமே தவிர அஸ்தமானம் அதன் அகராதியில் இல்லாத சொல்!.தம்பி அபு ஆசிபின் ஆக்கம் பாராட்டத்தக்கஆக்கம்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Unknown said...

//இஸ்லாமிய ஒளி வீசி கொண்டிருக்குமே தவிர அஸ்தமானம் அதன் அகராதியில் இல்லாத சொல்!.//

அன்பு பாரூக் காக்கா,

தாங்கள் சொல்வதுபோல் , அஸ்தமனம் என்ற சொல் இஸ்லாத்தின் அகராதிக்கு அப்பாற்ப்பட்டது. ஏனனில் அண்ணல் நபி (ஸல்) , சொன்னார்கள் " "உங்களை வெள்ளை வெளேரென்று , பளீரென்று பிரகாசிக்கக்கூடிய பாதையிலே விட்டு செல்கின்றேன். அதில் இருள் கூட பகல் போல இருக்கும் "

ஆதலால் அஸ்தமனத்திற்கு இங்கு வேலையே இல்லை .

sabeer.abushahruk said...

//யாருக்கும் யாரும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை. எவன் ஈமானில், , உள்ளச்சத்தில் உங்களில் மிகைத்து இருக்கின்றானோ அவனே உங்களில் சிறந்தவன் என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. //

இந்த நிலை வேற்று மதங்களில் இன்றளவில்கூட இல்லை. இன்னும் இவர்கள் இருளில்தான் மூழ்கியிருக்கிறார்கள். நீ பாடுவது ஞாபகத்திற்கு வருகிறது:

ஒரு கையில் இறைவேதம்;மறுகையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன வருத்தம்

Unknown said...

//இந்த நிலை வேற்று மதங்களில் இன்றளவில்கூட இல்லை. இன்னும் இவர்கள் இருளில்தான் மூழ்கியிருக்கிறார்கள்//

சபீர்

நீ சொல்வதுபோல் சில வேற்று மதங்களில் அதை பின்பற்றும் சமுதாயத்தையே, ஒரு சிலர் சிலரைவிட மேம்பட்டவர் பிறப்பால் என்று
உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி, என்று மதமே பிரித்து வைக்கிறதென்றால், தன்னை பின்பற்றும் ஒரு பிரிவினர் மீதே காழ்புனர்ச்சியோடு அது வேத வாக்கு என்று வேதமே சொல்கிறதென்றால் இதைவிட ஒரு அயோக்கியத்தனம் ஒன்று மில்லை என்று தான் சொல்லத் தோன்றுகின்றது.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\சூரிய ஒளி என்னவோ இப்பூமி பந்தின் ஒருபாகத்திற்கு ஒளியையும், மறு பாகத்திற்கு இருளையும்தான் இதுவரை தந்து கொண்டு இருக்கின்றது. இறைவன் ஏற்பாட்டின் படி. ஆனால் காருண்ய நபியின் தூதுத்துவமோ இப்புவியின் அனைத்து உலகுக்கும் இருளிலும் சரி பகலிலும் சரி ஒவ்வொரு மனித உள்ளத்திற்கும் தன் ஒளிக்கீற்றை தந்து வழி நடத்திக்கொண்டு இருக்கின்றது.\\

இறுதியில், இப்படியொரு பகுத்தறிவைக் கொண்டு வந்து நி|றுத்தினாலும் இக்கருத்தே இக்கட்டுரையின் சாரம். எண்ணங்கள் தூய்மையானதால், எழுத்துக்களும் ஒளி வீசும்; ஏகத்துவம் பேசும். தொடர்ந்து எழுதுக, இனிய நண்பா!
வாழ்த்துகள்; பாராட்டுகள்!

Shameed said...

சிறப்பான பதிவு தொடரும் என்று போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரிய நல்ல பதிவு!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

ZAKIR HUSSAIN said...

//மழை பொய்த்துவிடும் நாட்களில் , இறைவனிடம் கையேந்தி பெறுவதை கேலியாக்கி மிருகத்தின் வாலில் தீயை மூட்டி, அது உஷ்ணத்தின் வேதனை தாங்க மாட்டாது கத்தும்போது, அந்த சப்தம் மழையைக் கொண்டு வரும் என்று ஒரு காட்டுமிராண்டி நம்பிக்கையின் வாரிசுதாரர்களாக வாழ்ந்து சென்ற சமுதாயம். //


இது போன்ற சமுதாய மக்கள் இப்போது இல்லை என்று சொல்ல முடியாது. சில மலைவாழ் சமூகங்கள் இது போன்ற பழக்க வழக்கங்களில் இன்னும் இருக்கிறார்கள். அவற்றுள் பெண்களை கேளிக்கை பொருளாக்குதலும் அடங்கும்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ ஆசிப்

அஸ்ஸலாமு அலைக்கும். சிறப்பான பதிவு , என் முதல் உங்களின் நண்பர் குழாமின் எதிர்பார்ப்பை நீங்கள் எழுத்தின் மூலம் மெய்ப்படுத்தி இருக்கிறீர்கள்.

நீங்கள் எடுத்துள்ள இந்தத் தலைப்பை தொடராக நீங்கள் எழுதவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

இதற்கான ஆய்வுக்காக மர்ஹூம் அப்துல் ரகீம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய MUHAMMAD THE PROPHET என்ற தலைப்பில் வெளியான ஒரு நூலை கிடைத்தால் படித்துப் பாருங்கள். இந்த நூலை யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் வெளியீட்டில் சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் அழகு தமிழில் மொழி பெயர்த்தும் வெளியிடப் பட்டு இருக்கிறது.

நிறையப் படியுங்கள் நிரம்ப எழுதலாம். வாழ்த்துக்கள்.

Unknown said...

//நிறையப் படியுங்கள் நிரம்ப எழுதலாம். வாழ்த்துக்கள்.//

இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கின்றேன் காக்கா

அபு ஆசிப்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சிறப்பான பதிவு தொடரும் என்று போடுவீர்கள் என்று நானும் எதிர்பார்த்தேன்! நீங்கள் எடுத்துள்ள இந்தத் தலைப்பை தொடராக நீங்கள் எழுதவேண்டுமென்று நானும் விரும்புகிறேன். அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

அப்துல்மாலிக் said...

இன்று சாராயக்கடைகளை மூட உண்ணாவிரதம் இருக்கும் மக்களை 1400 வருடங்களுக்கு முன்னரே பெருமானார் தடுத்தார்கள், அதன் பின்விளைவுகளை மக்கள் இன்றும் அனுபவிக்கிறார்கள்... சுபஹானல்லாஹ்

இவ்வளவு மூட நம்பிக்கைகளை விட்டு வெளியேற்ற நம் பெருமானார் எவ்வளவு இன்னலுக்கு ஆளாகிருப்பார்கள்.. நெனைச்சாலே நெஞ்சம் பதறுது..

அதிரை.மெய்சா said...

ஸ்கூலில் படிக்கும் காலத்தில் உனது தேன்குரலில் நீ பாடும் இஸ்லாமியப்பட்டு இன்னும் என் காதினில் ஒலிப்பேழையாய் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

பன்முக நாயகனாக ஆழமான சிந்தனையில் ஆக்கங்கள் கூட படைக்கத்தெரியும் என்பதனை இக்கட்டுரையின் மூலம் நீ நிரூபித்து விட்டாய்.

நண்பன் அப்துல் காதரின் சிறப்பான அவசியம் அனைவரும் அறிந்துகொள்ளும்படியான ஒரு ஆக்கம். வாழ்த்துக்கள்.

உன்னிடத்திலிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

//உன்னிடத்திலிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்//.

என் இனிய நண்பன் மைசா ,

இன்ஷா அல்லா உன் துஆவும், அல்லாஹ்வின் நாட்டமும் ஒருசேர
அமைந்தால் இன்னும் இதுபோல் ஆக்கங்கள் வளரும்.

எனக்காக உன் துஆவை எதிர்பார்த்து

அபு ஆசிப் ( என்ற ) அப்துல் காதர்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அழகிய ஆக்கம் மூலம் இஸ்லாம் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை எவ்வாறு பல சோதனைகளையும், கல்லெறி, சொல்லெறிகளை தாண்டி வீர நடை போட்டு வருகிறது என சாச்சா விளக்கியுள்ளார்கள். ஆத்திக்குல் ஆஃபியா சாச்சா.

crown said...

"சூரிய ஒளி என்னவோ இப்பூமி பந்தின் ஒருபாகத்திற்கு ஒளியையும், மறு பாகத்திற்கு இருளையும்தான் இதுவரை தந்து கொண்டு இருக்கின்றது. இறைவன் ஏற்பாட்டின் படி. ஆனால் காருண்ய நபியின் தூதுத்துவமோ இப்புவியின் அனைத்து உலகுக்கும் இருளிலும் சரி பகலிலும் சரி ஒவ்வொரு மனித உள்ளத்திற்கும் தன் ஒளிக்கீற்றை தந்து வழி நடத்திக்கொண்டு இருக்கின்றது".
அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான ஆக்கம். இதற்கு கருத்து எழுத இந்த ஆக்கத்தில் உள்ளதை மேற்கோள் காட்டுவதைத்தவிர என்னிடம் சிறந்த வார்தை இல்லை!மேலும் எழுத வாழ்த்துக்கள்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abu Asif,

Your article "Before the (spiritual) light" shows the relevance of ultimate solution for humanity initiated at the time of pathetic conditions of brutal human living in Arabian land.

Its mercy of Almighty Allah Rabbil Aalameen, the light has reached us too, and we are all muslims. Alhamdulillah.

Keep writing more and more. InshaAllah.

Jazakkallah khairan

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

நீங்கள் எடுத்துள்ள இந்தத் தலைப்பை தொடராக நீங்கள் எழுதவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு