Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் தொடர் - 26 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2013 | , , , ,

தொடர் : இருபத்தி ஆறு
இஸ்லாமியப் பொருளாதாரத்தைத்  தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

வாழு ! வாழவிடு ! ‘’ என்பது கூட ஒரு கவர்ச்சியான கோஷம்தான். ஆங்கிலத்தில் இதை Live ! Let to Live” என்றும் முழங்குவார்கள். ஆனால் இந்தகோஷத்தை ஆராய்ந்து பார்த்தால் ‘நீ வாழ்ந்துகொள் மற்றவரையும் தொல்லை பண்ணாமல்   வாழவிடு’ என்ற பொருளையே தருகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் நீ வாழ்ந்துகொள் என்பது சுயனலத்தின்பால் பட்டது. அவரவர் தாங்கள் வாழவே முதலில் வழிவகுத்துக் கொள்வார்கள். அதேபோல் மற்றவரை வாழவிடு என்பதும் பிறரை துன்புறுத்தாதே தொல்லை செய்யாதே என்கிற அறவழியை மட்டும் போதித்து ஒதுங்கிவிடுகிறது;  உணர்த்துகிறது. ஆனால் இஸ்லாம் கூறும் ஜகாத் , “வாழு! வாழவிடு! வாழ வை! “ என்று மிகப் பரந்து விரிந்த கருத்தைப் பறை சாற்றுகிறது.  நீ மட்டும் வாழ்ந்தால் போதாது- மற்றவர்களை வாழவிட்டு ஒதுங்கி இருத்தலும் பற்றாது- இல்லாதோர் வாழ நீ உதவி செய்து அவர்களும் வாழ வழி செய்ய வேண்டுமென்ற சமுதாய பொருளாதார ஏற்றத்துக்கு கால்கோள் கல்லிடுகிறது.  

ஒரு கையில் இறைவேதமும் மறு கையில் நபி போதமும் தாங்கி நிற்கும் ஒரு இஸ்லாமியனுக்கு , ஏழைக்கு உதவும் ஈகைத்தன்மையையும் தடம் புரண்டு போனோரைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவத்தையும் வறியோர்க்கும் வக்கற்றோர்க்கும் வகையற்றோ ருக்கும் வாழ்வளிக்கும் வழிகாட்டுதல்களையும் வழங்கி இருப்பது இஸ்லாம். அந்த வகையில்  இறைவனின் ஜகாத் பற்றிய அறிவுறுத்தல்களையும் பெருமானார் ( ஸல்) அவர்களின்  மணிமொழிகளையும் தொகுத்துத் தரும் முன்பு ஜகாத் பற்றிய இன்னும் தீர்க்கமான திடமான தெளிவான சிந்தனைகளை உள்ளத்தில் இருத்த வேண்டி ஜகாத் மற்றும் சதகா ஆகிய இரண்டு அறச்செயல்களுக்கும் இடையே இருக்கும் சில வேறுபாடுகளை இங்கு முதலில் பட்டியலிடுவது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.  

ஜகாத்
சதகா
ஜகாத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறைவணக்கமாகும்.
சதகா என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும்.
ஜகாத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார பொருட்கள், ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக ஷரீஅத் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி கொடுக்கப்படுவதாகும்.
சதகா என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் என்றில்லாமல் ஒருவர் எந்தப் பொருளையும் இறைவழியில் செலவழிப்பதாகும். இதற்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்பது வரையறை இல்லை.
ஜகாத் என்பது ஒருவரின் செல்வம் ஒரு குறிப்பிட்ட அளவை (நிஸாப்) அடைந்து ஒரு ஹிஜ்ரி ஆண்டு பூர்த்தியாகிவிட்டால் அவர் மீது கடமையாகும்.
சதகா என்பதற்கு ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் கிடையாது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். 
ஜகாத் என்பது இறைவன் வரையறுத்துள்ள (அத்.9:60) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுப்பதாகும். இந்தப் பிரிவினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஜக்காத்தைக் கொடுப்பதற்கு அனுமதியில்லை.
சதகா என்பது இறைவன் ஜக்காத்துக்காக வரையறுத்துள்ள பிரிவுகள் மட்டுமின்றி பிறருக்கும் கொடுக்கலாம்.
ஜக்காத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கு மற்றும் அவரது மரண சாசனத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரே கடமையான ஜக்காத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்ற வேண்டும். 
சதகா என்பதில் அவ்வாறான கடமை எதுவும் இல்லை.
ஜக்காத் கொடுக்காவிட்டால் மறுமையில் தண்டணைகள் உண்டு.
சதகா கொடுத்தால் நன்மைகளைப் பெற்றுத் தருமேயல்லாது கொடுக்காவிட்டால் குற்றமாகாது.

இவையே ஜகத்துக்கும் சதக்காவுக்கும் உள்ள பொதுவான வேறுபாடுகள். ஆனாலும் 

எல்லா நற்செயலும் தர்மமே என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி). அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

திருமறையின் ஒன்பதாவது அத்தியாயமாகிய அத்தவ்பா வின் அறுபதாவது வசனத்தில்  ஜகாத்தை பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள் யார் யார் என்று இறைவன் பட்டியலிட்டுக் காட்டுகிறான்.
  • வறுமையின் கொடுமையில் சிக்கிக் கொண்ட ஏழை முஸ்லிம்கள்.
  • தங்களது வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்வதற்கான வழிவகையில்லாத வசதியற்ற முஸ்லிம்கள்.
  • புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்கள்.
  • எதிரிகளிடம் கைதிகளாகச் சிக்கிக்கொண்ட இஸ்லாமியப் போர்க்கைதிகள். (விடுவிக்கப்பட)
  • அவசரத் தேவைகளின்போது பட்ட கடன்களிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் முஸ்லிம்கள்.
  • இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஜகாத்தை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பணியாளர்கள் அவர்களுடைய  ஊதியம்.
  • இறைப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள், இஸ்லாமிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாத்தைக் கற்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாமியப் பிரச்சாரப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.
  • பயணத்தின்போது அந்நிய நாட்டில் அகப்பட்டுக்கொண்டு உதவிகோரும் முஸ்லிம் பயணிகள்.

ஜகாத்துக்கு இறைவன் வழங்கி இருக்கிற தன்மை செல்வத்தை தூய்மைப் படுத்தும் தன்மையாகும். ஜகாத் என்கிற அரபு வார்த்தை,   தூய்மை, வளர்த்தல் என்ற பொருள்களைத் தரும்.

“அவர்களின் செல்வங்களிலிருந்து, தானத்தை வசூல் செய்து (ஜகாத்தை நீர் எடுத்துப் பெற்று ) அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக! அவர்களை முன்னேரச்செய்வீராக! மேலும் அவர்களுக்காக நல்லருள் வேண்டி பிராத்திப்பீராக! “என்று இறைவன் , பெருமானருக்குக் கட்டளை இடுகிறான். (அத். 9:103)

ஜகாத் கொடுப்பதை தங்களின் வாழ்வின் வழக்கத்தில் கொண்டுவருபவர்களின் வாழ்வு பலவகைகளில் தூய்மைப் படுத்தப் படுகிறது;  பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. முதலாவதாக இறைவன் பெரிதும் வெறுக்கக் கூடிய கருமித்தனத்தில் இருந்து அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். இறைவனின் எச்சரிக்கை இப்படி இருக்கிறது .

“மேலும் உறவினர்கள், அனாதைகள், வறியவர்கள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் . மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப் போக்கர், அடிமைகள் ஆகியோருடன் நயமுடன் நடந்து கொள்ளுங்கள் . திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள் ! வீண் பெருமையிலும் கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அவர்கள்தான்  கருமித்தனம்  செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கருமித்தனம்  செய்யும் படி தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் தயார் செய்து  வைத்துள்ளோம் ‘ (4:37).

நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்களும்  பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்’ (புகாரி).

இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கருமித்தனத்தை  நீக்கும் மருந்தாக ஜகாத் அமைந்துள்ளது.

அடுத்து ஜகாத் செல்வத்தை வளர்க்கும் அருளாதாரம் அடங்கிய பொருளாதாரத் தன்மை கொண்டதென்று இறைவன் குறிப்பிடுகிறான்.  இதனை



“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அத். 2:276)

என்ற வசனம் உணர்த்துகின்றது.


இறைவன் மனிதர்களுக்குத் திறந்து கொடுத்திருக்கிற நனமைகளுக்கான சேமிப்புக் கணக்கில் ஜகாத் ஒரு மறுமைக்கான மங்காத சேமிப்பு என்பதை 

“இன்னும், தொழுகையை முறையாகக் கடைபிடித்தும் ஜகாத்தைக் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில், உங்களின் மறுமை நலனுக்காக நற்செயல் எதையும் நீங்கள் சம்பாதித்து முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கி யவனாகவே இருக்கிறான்’ (அத். 2:110).  என்று திருமறை சுட்டிக் காட்டுகிறது.

மேலும் பெருமானார் ( ஸல்) அவர்களிடம்  ஒரு முறை  ஒரு முழு ஆடு சமைத்த  நிலையில் தரப்பட்டது. அதை ஆயிஷா ( ரலி) அவர்களிடம் கொடுத்த பெருமானார் ( ஸல்) அவர்கள் இதனை வரியோர்க்கு வழங்குங்கள் என்று சொல்லி வெளியே சென்று விட்டார்கள். சற்று நேரம் கழித்து வந்த பெருமானார் ( ஸல்) அவர்கள் ஆயிஷா ( ரலி) அவர்களை நோக்கி தான் கொடுத்துச்சென்ற ஆட்டுக் கறியில் மிச்சம் இருக்கிறதா என்று கேட்டபோது ஒரு தொடைக் கறி மிச்சம் இருப்பதாக பதில் உரைத்தார்கள். அப்போது பெருமானார் ( ஸல் ) அவர்கள், “ நான் உங்களிடம் தந்து சென்றதில் எவ்வளவை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்தீர்களோ அதுதான் நம்முடையது. நம் வீட்டில் மிச்சம் இருப்பது மற்றவர்களுக்கு உரியது “ என்று கூறினார்களாம். அதாவது வெளியே தர்மமாக கொடுக்கப் பட்டது நம்முடைய நன்மைக் கணக்கில் சேரும் என்பது இதன் பொருள். ஆகவே பிறருக்குக் கொடுப்பது    நம்முடைய கணக்கில் இறைவனின் பேரேட்டில் வரவு வைக்கப் படும்.

மேலும் ஜகாத் கொடுப்பவர்கள் தங்களுடைய மறுமை வாழ்வு என்ன ஆகுமோ என்கிற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்பதை இறைவன் இவ்வாறு உறுதியளிக்கிறான்.

“எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு, நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலை நாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு . அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப் படவும் மாட்டார்கள்.”   (அத் . 2:277).

அடுத்து தர்மம் தலை காக்கும் என்கிற அடிப்படையில் இறைவன் வழங்கும் தண்டனையிலிருந்து பாதுகாப்புத் தரும் கவசமாக ஜகாத் திகழும் என்பதை

“நான் நாடுகிறவர்களுக்கு தண்டனை அளிப்பேன் . ஆயினும் என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்து இருக்கிறது . எனவே எவர்கள்  இறைவனுக்கு அஞ்சுகிறார்களோ மேலும் ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும் என்னுடைய  வசனங்களையும்  நம்புகிறார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன் என்று (அல்லாஹ்) மூஸா நபி ( ஸல்) அவர்களுக்கு பதிலுரைத்தான்.  (7:156).

என்ற வசனம் இதனை உணர்த்து கின்றது. மேலும் நபி  மொழியோ

“செல்வந்தர்கள் தமது செல்வங்களுக்குரிய  ஜகாத்தை வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள்”  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : இப்னு மாஜா

இறைவனின் கட்டளைப்படி ஜகாத் தொடர்ந்து கொடுத்து வருபவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் கிடைத்துக் கொண்டிருக்குமென்பதையும், அல்லாஹ்வின் அருளைப் பெற்றவரால் தான் சுவனம் செல்ல முடியும். அல்லாஹ்வின் அருளைப் பெற ஜகாத் ஒரு சிறந்த வழியாகும் என்பதையும் .

இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர்  உற்ற துணைவர்களாக  இருக்கின்றனர். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள். தீமையிலிருந்து தடுக்கிறார்கள்.  தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்.  ஜகாத்தை முறையாகக் கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படுகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டு இருக்கும்.  நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  நிலையான சுவனங்களில் தூயமையான இல்லங்களை அல்லாஹ்    வாக்களித்துள்ளான்  (அத். 9:71).

உலகில் யாரிடத்தில் கிடைக்கும் உதவிகளிலும் உயர்ந்த உதவி படைத்த அல்லாஹ் வாக் களிக்கின்ற  உதவியாகும். இதனை ஜகாத்தை பேணுவோர்க்கு அல்லாஹ் வாக்களிக்கின்றான். கீழ்க்காணும் இறைவேதத்தின் மொழிகள் , தொழுகையும் ஜகாத்தும் இருந்தால் அல்லாஹ்வின் அண்மை  கிட்டும் என்பதை உணர்த்துகின்றன.

“நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்”  (அத். 5:12)

அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக  அல்லாஹ்வும் உதவி செய்வான்’ (அத். 22:40).

அடுத்து சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும் ஒருவருக்கொருவர் அன்பையும் அரவணைப்பையும்  வளர்ப்பதில் ஜகாத் முன்னிற்கும் சக்தியாகும் . இதை இந்த இறைமறையின்  வரிகள் பறைசாற்றுகின்றன.

“ஆயினும், அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து           வருவார்களா னால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்” (அத். 9:11).

இவ்வசனம், ஜகாத்தை வழங்க மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்  என்ற கருத்தைத் தருகின்றது.

“அவர்கள்தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள். மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!” (அத். 41:7).

என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றது.

இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து மறுமையை நம்பி, இறைத்தூதர்களை விசுவாசித்து, தொழுகையை கடைப் பிடித்து, ஜகாத்தை நிறைவேற்றி வருபவர்களே இவ்வுலக வாழ்வில் வெற்றியாளர்கள் அவர்களுக்கே மறுமைவாழ்வும் இறைவனிடத்தில் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது என்பதற்கு இறைவன் தரும் உத்திரவாத வரிகள்

“இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றியாளர்கள்” (அத். 2:5).

ஆகவே ஜகாத் பற்றிய மேற்கண்ட தொகுக்கப் பட்ட இறை மொழிகளின் பிரகாரம் ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது; செல்வத்தை வளர்க்கிறது;  கருமித்தனத்தில் இருந்து காப்பாற்றுகிறது ;  சகோதரத்துவத்தை வளர்க்கிறது ;  மறுமை வாழ்வின் நல்ல இடத்தை உறுதி செய்கிறது; நிராகரிப்பிலிருந்து விடுவிக்கிறது ;  இறைவனின் அருள் மழையையும் பெரும் கருணையையும் நம் மீது      பொழியச்செய்கிறது என  உணரலாம்.

ஜகாத்தை இறைப் பொருத்தத்திற்கேற்ப எப்படிப் பங்கீடு செய்வது? என்று ஒரு கேள்வி வந்திருக்கிறது. இதற்குள் பல கருத்துக்கள் விவாதிக்க வேண்டியுள்ளன. எனவே
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

27 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜகாத், ஸதகா அழகான விளக்கங்கள்!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
குறிப்பாக “வாழு! வாழவிடு! வாழ வை!“ என்ற தெளிவான விளக்கம் ஜகாத் பற்றிய பொன்னெழுத்துக்கள்!
ஆதாரங்களுடன் அழகாக தந்த தங்களுக்கு அல்லாஹ் நற்கூலியை தந்து, மேலும் நல்லதை எங்களுக்கு தொடர்ந்து அள்ளித்தர ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவானாக!

Ebrahim Ansari said...

தம்பி ஜாபர் சாதிக்! அஸ்ஸலாமு அலைக்கும்.

மீண்டும் லண்டனின் உதித்ததா முதல் சூரியன்? ஜசக் அல்லாஹ் ஹைரன் .

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்!

எல்லாப் பகுதிகளையும் விவரித்துவந்தத் தொடர் ரமளானுக்குப் பொருத்தமாக ஜகாத் மற்றும் சதக்கா பற்றிய விளக்கங்களைச் சொல்கிறது. இதைத்தான் 'ட்டைமிங்' என்பார்கள்.

வரி என்னும் குறிப்பிட்ட சதவிகிதத்தைச் செலுத்தி இருப்பைக் கருப்பிலிருந்து சுத்தமாக்கி சிறையிலிருந்துக் காப்பாற்றிக்கொள் என்கிறது இம்மை அரசாங்கம்.

ஜகாத் என்னும் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஏழைகளுக்குக் கொடுப்பதன்மூலம் செல்வத்தைச் சுத்திகரித்து நரக நெருப்பிலிருந்துத் தற்காத்துக்கொள் என்கிறது இம்மை மறுமை இரண்டிற்குமான ஆண்டவனின் சட்டம்.

ஆயிரத்தெட்டு பரிசோதனை முறைகள் அரசால் கையாளப்பட்டும் வரிசெலுத்த அரசாங்கத்தை ஏய்க்கும் மனிதன், ஆண்டவனுக்குப் பயந்து முறைப்படி ஜகாத் செலுத்துகிறானே இதுதான் தக்வா என்னும் இறையச்சம்.

இதை வலுப்படுத்த சேர்த்திருக்கும் இறைவசனங்களுக்கும் நபிமொழிகளுக்கும் நன்றி!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ அலைக்குமுஸ்ஸலாம் மரியாதைக்குரிய காக்கா!

உதிக்குமுன் உண்ண விழிக்க கிடைத்த வாய்ப்பு முதல் கருத்து.
அடுத்த வாரம் இந்த வாய்ப்பு கவிச் சூரியனுக்கே கிடைக்கலாம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

காக்கா, தங்களின் சென்ற வாரப் பதிவும், இந்தப் பதிவும் நேற்றைய ஜும்மா மேடையை அலங்கரித்து இருப்பதை எண்ணி மகிழ்கிறோம் !

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !

இடைவிடாத ஆய்வு, தொய்வில்லாத உழைப்பு அதற்கான பலன்களையும் அறுவடை செய்து கொண்டும் வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ் !

மடிக்கணினி திரைமேல் விழி வைத்து காத்திருக்க வைத்து வரும் வலுவான தொடர் !

نتائج الاعداية بسوريا said...

தக்க நேரத்தில் பாராட்டும்படியாக வந்த பதிவு.

ஜக்காத், சதக்கா, வேருபடுத்திக்காட்டியமைக்கு 100/100 மார்க் தருகின்றேன்.

தங்கள் இந்த சிந்தனை , எங்கள் அறிவு மேம்படவும், உங்களின் சிந்தனை பல்கிப் பெருகவும் இத்தொடர் உதவியாய் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

அபு ஆசிப்.

ZAKIR HUSSAIN said...

சரியான நேரத்தில் வந்த பதிவு. காரணம் எவ்வளவுதான் நம் பகுதிகளில் மார்க்கம் பேசினாலும் , சதக்காவுக்கும் ஜக்காத்துக்கும் வேறுபாடு இல்லாமல் சிலர் செயல்படத்தான் செய்கிறார்கள். இந்த ஆக்கத்தின் செய்தி அவர்கள்களை அடைந்தாலே போதும்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அபூ இப்ராஹீம்,

புதிதாக பிரம்மாண்டமாகக் கட்டப் பட்டுள்ள முத்துப் பேட்டை ஆசாத் நகர் ஜூம் ஆ பள்ளியில் நேற்று ஜூம் ஆ பயான் செய்வதற்குரிய வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் வழங்கினான். மாஷா அல்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

ஜகாத் பற்றிய இந்த இரண்டு வாரத்தொடர்களை பயன்படுத்திக் கொண்டேன். எழுதிய நானே பேசியதால் சரளமாக உரையாற்ற இயன்றது. நம்மால் முடிந்தது ஜகாத் பற்றிய இந்தக் கருத்துக்களை ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட ஜூம் ஆவில் எத்தி வைக்க இயன்றது பெரும் பாக்கியம்.

இதில் எழுதாத ஒரு கருத்து பெண்களுக்காக பேசியது. பகிர விரும்புகிறேன்.

கெட்டியான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி "இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை" என்று அப்பெண்மணி பதிலளித்தார். "மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா?" என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி.

30 பவுனுக்கு மேல் கனம் கொண்ட கவர்னர் மாலை வைத்திருக்கும் பெண்கள் அச்சமுற்றுப் பேசிக் கொண்டதாக நேற்று மாலை செய்தி வந்தது.

மேலும் பெண்களும் ஜகாத் கொடுப்பதில் முன்நிற்க வேண்டும். காரணம் நமது பகுதிகளில் பெண்களிடம்தான் வீடு, சொத்து, நகை என்று பெரும் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன .

ஆண்கள் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு தங்களுக்காக நான்கு அரைக்கை சட்டை மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்று கூறினேன்.( நான்கு அரைக்கை சட்டையும் மூன்று முண்டா பணியனும்தான் வைத்து இருக்கிறார்கள் என்று கூற நினைத்தேன். ஆனால் முண்டா பனியனை குறிப்பிடவில்லை.)


M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜூம்'ஆ பயானில் தாங்கள் பயான் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

sabeer.abushahruk said...

ஜூம்'ஆ பயானில் தாங்கள் பயான் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

Unknown said...

சவுதி என்னும் கம்பி இல்லா சிறையில் இருப்பதால்,

ஒரு அருமையான புள்ளி விவர இஸ்லாமிய பொருளாதார சிந்தனை சிர்ப்பியின் பயான் கேட்க கொடுத்து வைக்கவில்ல என்னும் குறை உண்மையிலேயே இருக்கின்றது.

அக்குறையை ஒவ்வரு சனிக்கிழமையும் இப்பதிவின் மூலம் தாங்கள் தீர்த்து வைப்பது என்னைப்போன்றவர்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

அல்லாஹ் உங்கள் சிந்தனை அறிவை மேலோங்கச் செய்வானாக !

அபு ஆசிப்.

Unknown said...

அழுக்கான ஆடைகளை தூய்மைப்படுத்த எப்படி வித வித மான பொவ்டர்கள்
சோப்புகள் மற்றும் எத்தனையோ விஷயங்களை பயன்படுத்தி அழுக்கை நீக்குகின்றோமோ அதுபோலவே, செல்வம் என்னும் ஆடை அது ஜக்காத் என்னும் சோப்பு போடாத அழுக்கானது.

செல்வம் என்னும் ஆடை தூய்மை பெற ஜக்காத் என்னும் சோப்பு மிக அவசியம்.

தூய்மை பெற்ற செல்வமே இறைவனின் முன் தண்டனையிலிருந்து காப்பாற்றும். ஏழைகளின் உரிமை என்னும் இவ்விஷயம் நம் செல்வங்களிலிருந்து கொடுக்கப்பட்டு அந்த வல்ல ரஹ்மானின் அருள் நிழலில்
அனைவரும் இளைப்பாற ஒரு காரணமாக அமையட்டும்.

நம் அனைவரின் ஜக்காத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு தூய்மை பெற்ற அடியார்களின் கூட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றினைய்ய காரணமாக அமையட்டும்.

ஆமீன். !

அபு ஆசிப்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
இ.அ.காக்கா தங்களின் பதிவுகள் அணைத்தும் ஒவ்வொரு இஸ்லாமியனுடைய கண்களுக்கு சென்றடைய வேண்டிய பொக்கிஷங்கள்
அல்லாஹ் உங்களுக்கு சதுர சுகத்தை (பெண்கள் சொல்வது போன்று) தந்து நீண்ட ஆயுளையும் தரவேண்டும்

எங்களைபோன்றவர்ளுக்கும் அதிரை நிருபருக்கும் நீங்கள் ஒரு வரப்பிரசாதம்

கியாமுல் லைல் காரணமாக அதிகமாக சிஸ்ட்டத்தில் அமருவதில்லை இருந்தாலும் உங்களுடைய படிவை பார்த்துவிட்டு சும்மா போகமுடியவில்லை
அருமையான பதிவு சரியான நேரத்தில் மக்களை அச்ச மூட்டி எச்சரிக்கும் இறைவசனக்களுடன் அருமையாக இருக்கின்றது

இராண்டுவகையான அவுட்புட் (Pen & Mouth) வரவேற்கத்தக்க மகிழ்ச்சிமிக்க செய்தி கடின உழைப்புக்கு நிச்சயம் உண்டு நற்கூலி

வாழ்த்துக்கள்

adiraimansoor said...

/// ஆண்கள் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு தங்களுக்காக நான்கு அரைக்கை சட்டை மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்று கூறினேன்.( நான்கு அரைக்கை சட்டையும் மூன்று முண்டா பணியனும்தான் வைத்து இருக்கிறார்கள்///

தோலுரிக்கப்பட்ட நிதர்சனம்

adiraimansoor said...

/// இஸ்லாம் கூறும் ஜகாத் , “வாழு! வாழவிடு! வாழ வை! “ என்று மிகப் பரந்து விரிந்த கருத்தைப் பறை சாற்றுகிறது. நீ மட்டும் வாழ்ந்தால் போதாது- மற்றவர்களை வாழவிட்டு ஒதுங்கி இருத்தலும் பற்றாது- இல்லாதோர் வாழ நீ உதவி செய்து அவர்களும் வாழ வழி செய்ய வேண்டுமென்ற சமுதாய பொருளாதார ஏற்றத்துக்கு கால்கோள் கல்லிடுகிறது. ///

பொன்னெழுத்துக்களால் பதியப்பட்டு. கல் வெட்டாக அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் வைக்க வேண்டிய வாசகம் ரொம்ப பிடித்திருக்கின்ற

Ebrahim Ansari said...

புனித மண்ணிலிருந்து புனித மாதத்தில் உற்சாகப் படுத்திக் கொண்டு இருக்கும் தம்பி அபூ ஆசிப் மற்றும் அதிரை மன்சூர் ஆகியோருக்கு அலைக்குமுஸ் ஸலாம். ஜசக் அல்லாஹ் ஹைரன். துஆ செய்யுங்கள்.

தம்பி ஜாகிர்! கவித் தம்பி சபீர் !தம்பி MHJ ஜசக் அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்கள் இந்த அத்தியாயத்தில் இன்னும் கேள்வி கேட்கவில்லை என்பதை நினைவூட்டுகிறேன் யுவர் ஆனர் .

அப்துல்மாலிக் said...

ஜகாத், சதக்கா, தர்மம், ஃபித்ரா இவையனைத்தையும் இன்னும் மக்கள் போட்டு குழப்பிக்கிட்டிருக்காங்க, இதிலிருந்து இந்த பதிவு நிச்சயம் தெளிவுபெர செய்யும். மேலும் ஜக்காத்தின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக சொல்லப்பட்ட ஆயுகள் அருமை, நன்றி காக்கா

Shameed said...

தங்களின் இந்த பதிவு சரியான நேரத்தில் மக்களை அச்ச மூட்டி எச்சரிக்கும் இறைவசனக்களுடன் அருமையாக இருக்கின்றது

Yasir said...

ஜூம்'ஆ பயானில் தாங்கள் பயான் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

Iqbal M. Salih said...

ஜூம்'ஆ பயானில் தாங்கள் பயான் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

இன்னும் நிறைய மார்க்கப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கு, வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜூம்'ஆ பயானில் தாங்கள் பயான் செய்தது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் காக்கா... அல்ஹம்துலில்லாஹ்!

ஜக்காத், சதக்கா, வேருபடுத்திக்காட்டியமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா..

தங்கள் இந்த சிந்தனை , எங்கள் அறிவு மேம்படவும், உங்களின் சிந்தனை பல்கிப் பெருகவும் இத்தொடர் உதவியாய் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

வல்ல ரஹ்மான் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக.

பணிச்சுமை அதான் உடன் கருத்திட முடியவில்லை.

Anonymous said...

நான் என்ன comment போட வேண்டும் என்று நினைத்தேனோ அதே commentடை அப்படியே அச்சுக் குழையாமல் தம்பி M.H.ஜஹபர்சாதிக் [மு.செ.மு] எனக்கு முன்னே போட்டிருப்பது கண்டு அசந்து போனேன். அவர்எழுதியது போல் நான் எழுத நினைத்த எப்படி என்று எனக்கே தெரியவில்லை! [இதுதான் Telepathy சிஸ்டமோ?] அதில் என்னுடைய ஒரே ஒரு வாக்கியம் மட்டும் விட்டுப் போய்விட்டது. அதை இங்கே நான் பதிவு செய்கிறேன். [வாழு-வாழவிடு-வாழவை] அத்துடன் பின்வரும் என் commentடையும் சேர்த்து கொள்ளவும் 'பிறர் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டு அவர்களை நாசம்செய்யாதே!'

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

sheikdawoodmohamedfarook said...

//'' ஆண்கள் சம்பாதித்து கொடுத்து விட்டு தங்களுக்காக நாலு அரை கை
சட்டைதான் வைத்து இருகிறார்கள்''என்று கூறினேன்//இது ஒருமேம்
போக்கான தகவல்!ஜூம்மாவில் பேசும்போது ஆப்ரூப்பா ஆதாரத்தோடுபேசனும்.


'அந்தநாலு சட்டையில் ஒருசட்டைக்கு ரெண்டு கையும் கிழிஞ்சு போச்சாம்.அதுதான்
முண்டாபனியன்வகையில்l வருமே ஒழிய சட்டப்படியும்மனிதாபிமானமுறையிலும்
சட்டையாக எடுத்துக் கொள்ள முடியாது.மீதமுள்ள மூன்றில் ஒன்றுக்கு'ஜோப்'கிழிந்துபோச்சு
இன்னும்இரண்டில் ஒருசட்டைக்குகாலரும்இல்லை; பட்டனும்இல்லை. ஆகாகூடி''சட்டை'
'என்பதற்கு தொல்காப்பியர்கூறும்இலக்கணத்துக்குஒப்பகைவாசம் இருப்பது ஓன்னே ஒன்னு
கண்னேகண்ணுன்னுஒரே ஒரு சட்டேதானாம்.
1964லேயோ1965ஆரம்பத்திலேயோகல்யாணத்துக்குவரும்போதுவாங்கி வந்த பச்சை
கலர்'தேங்கா பூ'டவலை திரும்பபினாங்குக்குபோகும்போதுஅதைஎடுத்கிட்டுபோகாமே
'' இங்கேயே கிடக்கட்டும்!நாளேபின்னேஒதவும்''ன்னுபோட்டுட்டுப்போன டவலைஎங்கேயோ
கிடந்தை தேடிகண்டுபுடிச்சு எடுத்து நாள் பூரா போத்திக்கிட்டு வீட்டுக்குள்ளேயேஇருக்காராம்.
வெள்ளிகிழைமை ஜும்மாக்கு மட்டும் தான் அந்தசட்டை!அதுவும் ஒரே ஜும்மா.பள்ளிக்குபோறதில்லை
.ஒருஜும்மாவுக்குஇந்தப்பள்ளி அடுத்தஜும்மாவுக்குவேறபள்ளி.வாரவாரம்வேறவேறபள்ளி
.எங்கேபோய்தொழுதாலும்ஒரேஅல்லாதானே.
.தொழுவதும்ஒரேஅல்லா;. அணிவதும்ஒரேசட்டை!

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும் முனைவர் இ.அ..காக்கா அவர்களே!
என் அவாவும் துஆவும் நிறைவறியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்; அல்ஹம்துலில்ல்லாஹ். முன்னர் ஒரு பின்னூட்டத்தில் இதே ஆக்கத்தின் தொடரில் தமியேனின் விருப்பமாக “முனைவர் இ.அ.. காக்கா அவர்கள் இன்ஷா அல்லாஹ் நமதூரில் நடைபெறும் திரு குர் ஆன் மாநாட்டில் “பொருளாதாரமும் இஸ்லாமும் “ என்ற தலைப்பில் உரையாற்ற வைக்க வேண்டும்” என்று எழுதியிருந்தேன். அல்ஹம்துலில்லாஹ், இப்பொழுது ஜூம் ஆ மேடையை அலங்கரிக்க அல்லாஹ் உங்கட்கு அங்கீகாரம் தந்தது போலவே இன் ஷா அல்லாஹ் திரு குர் ஆன் மாநாட்டிலும் உரையாற்ற வாய்ப்பை அளிப்பானாக (ஆமீன்)

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்! அலைக்குமுஸ் ஸலாம். ஜசாக் அல்லாஹ்

கவிதீபம் கலாம் ! தங்களின் நல்ல எண்ணங்களுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

தம்பி இக்பால் மற்றும் மருமகனார் யாசிர் அவர்கள் , தம்பி அப்துல் மாலிக் மற்றும் மருமகன் சாகுல் ஆகிய அனைவருக்கும் நன்றி. வஸ்ஸலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு