Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 28 19

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2013 | , ,


தொடர் : இருபத்தி எட்டு
இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடித்தளம்- குடும்ப உறவுகள்.

யானையின் பலம் எதிலே ? தும்பிக்கையிலே !

மனிதனோட பலம் எதிலே ? நம்பிக்கையிலே  - என்று கேட்டு இருக்கிறோம்.

ஒவ்வொரு இயக்கம் அல்லது அமைப்பின் பலமும் ஒரு இடத்தின் மையப் புள்ளியில் குவிந்து இருக்கும். அல்லது அதை சார்ந்து இருக்கும். இஸ்லாமியப் பொருளாதார வாழ்வுக்கு அடிப்படை, முஸ்லிம்களின் மத்தியில் நிலவும் பாசமும் பந்தமும் மரியாதையும் மிக்க  குடும்ப அமைப்பும் உறவுகளைப் பேணும் முறைகளும் ஆகும்.  ஒரு உயர்ந்த, சிறந்த, தொடர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு, அமைதியும் அடுத்தவர்க்கு உதவும் பண்பும்        கெட்டுப் போனவர்களை கைதூக்கிவிடும் நற்குணமும் அடிப்படையான விஷயங்களாகும். அந்த வகையில்  இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் குடும்ப அமைப்பு கோலோச்சும் வகையில் கொலுவீற்று  இருக்கிறது.

கட்டிய மனைவி , பெற்றெடுத்த அன்னை தந்தை உடன்பிறந்த சகோதர சகோதரிகள்  தான் பெற்ற பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை மதிப்பதும் பேணுவதும் இறைவனுக்கு உகந்த செயலாக ஆக்கப் பட்டு இருக்கிறது. சமுதாயத்தில் அண்டை அயலாரைப் பேணுவதும் அவர்களின் நலம் காப்பதற்கு இயன்றதைச் செய்யும் உயர் குணமும் இறைவன் இடத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்து என்றும் சுகமளிக்கும் மறுமை வாழ்வுக்கு வித்திடுகிறது என்று இயம்புவது இஸ்லாம். சமத்துவமிக்க  சமுதாயப் பொருளாதார உயர்வுக்கு இவை அடி கோலுகின்றன.

“ஒற்றை குடும்பம் தனிலே - பொருள்
ஓங்க  வளர்ப்பவன் தந்தை
மற்றைக் கருமங்கள்  செய்தே-மனை
வாழ்ந்திடச்செய்பவள் அன்னை “  

என்று தமிழில் தற்காலத்தில் வழங்கும் வார்த்தை வரிகள் உண்டு.

இஸ்லாமிய பொருளாதார வாழ்வில் குடும்பமே அடித்தளமாகும். வளமான தனிப்பட்ட குடும்பத்தின்  பலம், ஒட்டுமொத்த  சமூகத்தின் பலம். அதே போல் தனிப்  பட்ட குடும்பத்தின் பலவீனமே சமூகத்தின் பலவீனமாகக் கருதப் படும். இஸ்லாமியக் குடும்பம் என்பது பாரம்பரியமாக தொடர்ந்து வரும் சந்ததிகளையும் இஸ்லாமிய நெறிமுறைகளுடன் வளர்க்க எத்தனிக்கும் நிறுவனமாகும்.  இந்தவகையில் குடும்ப அமைப்பை  சட்டங்களாலும், உபதேசங்களாலும், பல்வகைப் போதனை களாலும் இறைவனின் எச்சரிக்கைகளாலும் பலப்படுத்திக் கட்டமைக்கிறது.

குடும்ப உறவுகளோடு தொடர்புடைய சமூகப் பொருளாதார சட்டங்களை இஸ்லாம் வரையறுத்து வைத்திருக்கிறது. தெளிவுபடுத்தி நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. விரிவாக நன்கு தெளிவுபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் வாழ்வை தொடங்கிவைக்கும் திருமணம் முடித்தல், விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட சட்டங்களனைத்தும் ஆணித்தரமாக விவரிக்கப் பட்டுள்ளன. குடும்பப் பிரச்னைகளை அணுகுவது போன்றவை இறை நம்பிக்கையோடு தொடர்பு படுத்துய் இறையச்சத்தோடு இணைத்துக் காட்டுவது இஸ்லாத்தின் சிறப்பியல்பாகும். குடும்பத்தின் புனிதத்தைக் காப்பது தனிமனிதக்  கடமை என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.    

முக்கியமாக பெற்றோரைப் பேணுதல் , பிள்ளைகளை கல்வி கொடுத்து உணவூட்டி வளர்த்தல், மணக்கொடை கொடுத்து மணம் புரிதல், உறவினர்களை ஆதரித்தல், அண்டை அயலார்களின் நலம் பேணுதல் , அனாதைகளை ஆதரித்தல், அநாதைகளின் சொத்துக்களை நிர்வகித்தல், அடிமைகளை நடத்துதல் , உண்ணும முறை, விருந்தோம்பும்  முறை, ஆகியவை பற்றிய மார்க்கத்தின் சட்டங்கள் எடுத்துரைக்கும் யாவும்  இஸ்லாமியப் பொருளாதார அமைப்பில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தும் செயல்களாகும்.  

இவற்றை மெய்ப்பிதற்காக சில திருமறை வசனங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

திருக்குர்ஆன்  குடும்பத்தை அல்லாஹ்வின் அத்தாட்சி என வர்ணிக்கிறது.

நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக உங்களிலிருந்து உங்களது ஜோடியைப் படைத்துள்ளமை அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும்.என்று ( ஸூரா ரூம்-21)ல்    கூறப் பட்டுள்ளது.

ஆனால் நன்மை என்னவெனில் அல்லாஹ்வை யும், இறுதி நாளையும், மலக்குகளையும், வேதத்தையும், நபிமார்களையும், ஒருவர் ஈமான் கொண்டு செல்வத்தை அதன்மீது பற்றிருந்த போதும் உறவினருக்கும், அநாதைகளுக்கும் கொடுப்பதாகும்.”  (ஸூறா அல் பகரா 177)

மறுமை நாளைப் பொய்ப்படுத்துபவரை நீர் அவதானித்தீரா? அவன்தான் அநாதையைக் கொடுமைப்படுத்துகிறான். (ஸூரா மாஊன்)

உமது இரட்சகன் அவைனையன்றி யாரையும் வணங்கக் கூடாதென்றும் பெற்றோர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் விதியாக்கினான். (இஸ்ரா-23)

இஸ்லாமியப் பொருளாதாரம் குடும்ப வாழ்வுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்கிற  நிலையில் முஸ்லிம்கள்  சிறுபான்மையாக  வாழும் சூழ்நிலைகளில்   குடும்ப அமைப்பை பேணுதலின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது. ஏனெனில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் சிந்தனை மற்றும் கலாச்சார பாதிப்புக்கு உட்படுவார்கள். . அத்தோடு இஸ்லாமிய வாழ்வமைப்பும், இஸ்லாமிய சிந்தனையை ஆழ்ந்து படிப்பதற்கான வாய்ப்பும், வசதிகளும் இந்நிலையில் மிகக் குறைவாகவே இருக்கும். பள்ளிப் படிப்புகளில் பெரும்பான்மையோரின் கடவுள் வாழ்த்துப் பாடல்களை மனப பாடம் செய்து ஒப்புவித்தால்தான் தேர்வில் தேர்வு பெற முடியும் என்கிற அழுத்தமான சூழ்நிலைக்கு ஒரு முஸ்லிம் மாணவன் தள்ளப் படுகிறான்.  இத்தகைய சூழலில் முஸ்லிம்களை ஷிர்க் போன்ற  ஆளுமை சிதைவடையாது காக்கும் முதன்மையான முதல் நிறுவனம் குடும்பம் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம்களின்  குடும்ப அமைப்பையும், அதன் கட்டமைப்பையும் வளர்ப்பதிலும்,காப்பதிலும் அவர்கள் சிறு பான்மையாக வாழும் நிலையில் மிகவும் அதிகமான கவனத்துடன்  முக்கியத்துவம் கொடுக்கப்பட  வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் நிறுவன ஒழுங்குகள் அவர்களிடம் பலம் பெற்றுக் காணப்படுவது அவசியம். சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் ஓரளவு முழுமை யான முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ளது இந்தக் குடும்ப அமைப்பு மட்டுமே என்பது கவனத்தில்  கொள்ளப்பட வேண்டியது  இன்றியமையாதது. 

அதேநேரம், எவ்வளவுதான் உலகக் கல்வி முஸ்லிம்களின் தனித்தன்மையை சிதைப்பதற்கு சிலிர்த்து நின்றாலும்  குடும்ப சூழ்நிலையில் வீட்டுப் பெரியவர்களின் மார்க்க ரீதியான போதனைகளும் அறிவுரைகளும் இனைவைப்புப் போன்ற தீய காரியங்களில் இருந்து காப்பாற்றும். நம்மிடையே உம்மம்மா, வாப்புச்சா, இரு தரப்பு அப்பாமார்களின் அறிவுரைகளும் கண்ணியம் கலந்த கண்டிப்பும் மார்க்க அறிவைத் தந்து பாதை மாறாமல் காப்பாற்றுவதில் பெரும்பணியைச் செய்வதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். 

இஸ்லாம் ஒரு பரிபூரணமான பொருளாதார வாழ்க்கைத் திட்டம் ஆகும். அது முழுக்க முழுக்க  நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் அதற்குரிய  பயனை உணமையிலேயே  காண முடியும். முஸ்லிம் அல்லாத சமூகத்தில் ஒரு பகுதியை மட்டும் நடைமுறைப்படுத்தும் போது அது போதுமான அளவுக்கு தேவையான  பயனைக் கொடுக்காது. அதாவது இஸ்லாத்தின் எல்லாப் பகுதிகளும் இன்றிணைந்து இயங்க வேண்டும். ஒன்றோ இரண்டோ இயங்க ஏனைய பகுதிகள் தொடர்பறுந்து  காணப்பட்டால் இஸ்லாம் பயன் கொடுப்பது சாத்தியமில்லை. உதாரணமாக , இஸ்லாத்தில் விதிக்கப் பட்டுள்ள திருமணச் சட்டப்படி  தனி நபர்கள் தங்களுக்கு  சாதகமாக நபி வழியில் திருமணம் முடித்துக் கொள்வது ஆனால் நபி வழி அல்லாத  வகையில் வரதட்சணை வாங்குவதும்  பெருனாள் கொண்டாட காரணமாக அமையும் நோன்பை பிடிக்க விட்டுவிட்டு புல் கட்டு கட்டிவிட்டு பெருநாள் அன்று புத்தாடை  பூண்டு வெட்கமில்லாமல் வெளியே செல்வதுமாகும். 

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தால் இஸ்லாத்தை மிகப் பூரணமாக நடைமுறைப்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன  என்பது ஒரு ஒப்புக் கொள்ளப்படவேண்டிய வேதனையான உண்மையே. எனினும் இஸ்லாத்தின் பெரும்பகுதியொன்றை நம்மால்  நினைத்தால் நடைமுறைப்படுத்த முடியும். தனியார் சட்டப்பகுதியை முழுமையாக நம்மால்  நடைமுறைப்படுத்த முடியும். இதற்கான நீதிமன்றங்களின் காவல் , இஸ்லாமிய தனி நபர்  சட்டம் ஆகியவை நமக்கு இன்னும் சாதகமாகவே இருக்கின்றன. எத்தனையோ ஊளை இடும் நரிகள இவற்றை ஒழிக்க வேண்டுமென்று ஊளையிட்டாலும் இன்று வரை இந்த சட்டங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு நமக்கு அல்லாஹ் உதவியால் கை வசம்  இருந்து கொண்டேதான்  இருக்கிறது. . அவற்றை பொருளாதார , நீதிமன்ற , அரசியல்ரீதியான செயற்பாடுகள் மூலமாக அடைந்து கொள்வது அரசியல் சட்ட ரீதியாக சாத்தியமே.

இஸ்லாமியப் பொருளாதாரத்தை பொருத்த வரை குறிப்பிட்ட இன்றியமையாத மூன்று  திட்டங்களை ஒரு ஈமானிய முஸ்லிமால் முழுமையாக நடைமுறைப் படுத்த இயலும்.  

முதலாவதாக ஒவ்வொரு ஆண் மீதும் உழைத்து செலவழித்தல் கடமையாக்கபப்ட்டு இருக்கிறது. இது ஆண்களுக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்பு மற்றும் கடமையாகும். குடும்பப் பொறுப்பு , பெண்களைப் பாதுகாத்தல் ஆணைச் சார்ந்தது.

இரண்டாவது ஸகாத் நிறுவன அமைப்பு, இது சமூகப் பொருளாதாரத்தை சமன்படுத்த உதவுகிறது. ஏற்ற தாழ்வை சரி செய்ய உதவுகிறது.

மூன்றாவது வாரிசுரிமைச் சட்டப் பகுதி. மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்தான் என்பது போலல்லாமல் சொத்துக்களைப் பங்கீடு செய்வதில் ஒரு தீர்க்கமான தெளிவான சட்டங்களை இஸ்லாம் எடுத்து இயம்புகிறது. இதனால் குடும்பத்தில் அனைவர் நலமும் பேணப்படுகிறது. தடி எடுத்தவன் தண்டல்காரனாக இஸ்லாமிய ஷரியத்தில் வலை வீசிப் பார்த்தாலும்   வழி இல்லை.

ஒரு முஸ்லிமின் வாழ்வில் குடும்ப வாழ்வு தொடக்கம் என்கிற அத்தியாயம் அவனது அல்லது அவளது திருமணம் நடைபெறத் தொடங்கும்போது தொடங்குகிறது.   திருமணத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையே நெருங்கிய உறவுண்டு. பொருளாதாரரீதியாக குடும்பம் பலம் பெறும் போது அது திருமணத்தின் முன்னே எழும் பொருளாதாரத் தடைகளை நீக்கும்.

திருமணங்களை எளிமையாக சிக்கனமாக செய்துகொள்ள வேண்டுமென்று மட்டுமல்ல திருமணத்தின் முதல் கட்டுப் பாடாக பெண்ணுக்கு ஆண் மணக்கொடை கொடுத்தே மணம்   புரிந்துகொள்ள வேண்டுமென்று விதிகளை வகுத்து இருக்கிறது. இந்த சட்டம் ஒரு மிகப் பெரும் பொருளாதாரப் புரட்சியாகும்    அது மட்டுமல்லாமல் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளைக் கட்டாயப் படுத்தி மணம் புரிந்துகொள்வதும் உடல் தொடர்பான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் தடுக்கப் பட்டு இருக்கிறது. பெருமானார் ( ஸல்) அவர்களின் வாழ்விலேயே இப்படி நடந்து இருக்கிறது.  இது ஒரு சமூகப் பொருளாதாரப் புரட்சியே. காரணம் கசக்கி நுகரப் பட்ட பெண் மனத்தால் பாதிக்கப் பட்டால் குடும்பம் நரகம்ஆகும். மனம்மொத்த சம்மதத்தில் நடைபெறும் திருமணங்கள் தொடர்ந்த வாழ்வின் வசந்தத்துக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கும்  .

எங்கே திருமணங்கள் கடுமையாக்கப் பட்டு இருக்கின்றனவோ அங்கே  விபச்சாரம் எளிமையாக்கப்பட்டுவிடும் என்பது அண்ணலாரின் பொன்மொழியாகும். விபச்சாரம் மேலோங்குவதைக் காட்டிலும் ஒரு சமுதாயத்துக்குப் பொருளாதார சீர்கேடு வேறு தேவை இல்லை. எனவே திருமணங்களை எளிமையாக செய்து கொள்வதும் ,மனக் கொடை வழங்கி, மணமகளின் இன்முகத்துடன் மணம் புரிந்து கொள்வதும் இஸ்லாமிய சமுதாயத்தின் குடும்ப  நலனுக்கான பொருளாதார அடிப்படையாகும்.

அதேபோல் ஒரு சமூகத்தின் கண்ணியமான பொருளாதார வளர்ச்சி ஆண் பெண் சமத்துவ உறவின் மூலமே ஏற்பட முடியும் என்பதால் பெண்ணுக்குரிய உரிமைகளை, சொத்துரிமை உட்பட வழங்கி வரவேற்கிறது இஸ்லாம். இன்று உலகின் பல பாகங்களில் ஆணாதிக்கம் ஒழிக! என்று கோஷம் எழுப்பபடுகிறது. இறைவனுக்குப்  பிரியமான செயலாக திருமணத்தையும் இறைவனுக்கு வெறுப்பூட்டும் செயலாக     விவாக ரத்தையும் இஸ்லாம் ஆக்கி வைத்து இருக்கிறது.

பெண்களைப் போற்றும் அமைப்பை – பெண்களை அரவணைத்துப் பாதுகாக்கும் அமைப்பை அகிலத்துக்கு அறிமுகப் படுத்தியதன் மூலம் அமைதியான பொருளாதார வாழ்வுக்கு வழி வகுத்தது இஸ்லாம்.
  • ஆணாயினும் சரி, பெண்ணாயினும்  சரி, நீங்கள் ஒருவர்  மற்றவரிலிருந்து தோன்றிய ஒரே இனத்தவரே.    3:195·
  • ஆண்களுக்கு பெண்கள் மீது இருப்பது போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீது உரிமை உண்டு 2:228.
  • பெண்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக திருமண பந்தத்தில் வைக்காதீர்கள் 2: 231
  • விவாகரத்து ஏற்பட்டபின் பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை நீங்கள் தடை செய்யாதீர்கள். 2:232
  • உங்களுடைய துணையை உங்களின் அமைதிக்கான காரணமாக ஆக்கினான். 7:189
என்கிற அத்தாட்சிகள் – இறைவனின் வாக்குகள் இஸ்லாத்தின் சட்டங்கள்.
  • ஒரு முஸ்லிம் பெண், ஒரு ஆணுக்கு இருக்கும் விவாகரத்து செய்யும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் பெற்றவள்.
  • ஒரு முஸ்லிம் பெண், வாரிசு உரிமை, குடும்ப சொத்தில் பங்கு ஆகியவை பெற தகுதிடையவள் ஆவாள். தனியாக வியாபார நிறுவனங்களை  உருவாக்கவும், நிர்வாகிக்கவும், வேலைகளுக்குச் செல்லவும் உரிமை பெற்றவள்.
  • ஒரு முஸ்லிம் பெண் ,தனது கணவனாக வரப்போகிறவனை சாட்சிகளின் முன்னாள் ஏற்றுக்கொண்டு சம்மதித்தால் மட்டுமே மணம் செய்து வைக்கப்படுகிறாள்.
  • ஒரு முஸ்லிம் பெண், வரதட்சணை பணம் கணவனுக்குக் கொடுத்து மணமுடிப்பது தடுக்கப்பட்டு இருக்கிறது. மாறாக கணவனாக வருகிறவன் பெண்ணுக்குத்தான் செல்வங்களை கொடுக்கவேண்டும்.
  • ஒரு விதவையான முஸ்லிம் பெண், மறுமணம் செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறாள். கணவனோடு அவளையும் அவளது அந்தரங்க ஆசைகளையும் கொன்றுவிட்டு செத்துவிடு என்று சொல்லவில்லை.
  • ஒரு முஸ்லிம் பெண் சமுதாயத்தில்  மேலான மரியாதைகளோடு நடத்தப்படுகிறாள். எந்த முஸ்லிம் பெண்ணும் உயிரோடு தீயில் எரிக்கப்படுவதில்லை. கணவனை இழந்த பெண்கள் நற் காரியங்களில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுவதில்லை.
மேலும் அடிப்படையில் கருத்து மாறுபாடு உடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு  காலத்துக்கும் கட்டிக் கொண்டு மாரடிப்பதை இஸ்லாம் தடை செய்து இருக்கிறது.

இணைவைப்பவர்களான பெண்களையோ, ஆண்களையோ திருமணம் முடிக்க  வேண்டாமென கூற வரும் திருமறையின்  வசனங்கள் கீழ் வருமாறு குறிப்பிடுகின்றன. .

இறை நம்பிக்கை கொண்டவர்களாக ஆகும் வரை இணைவைப் பாளர்களான பெண்களை மணக்காதீர்கள். உங்களுக்குத் கவர்ச்சியாக தெரிந்தாலும் இணைவைப்பில் ஈடுபடும் பெண்னை விட நிச்சயமாக ஒரு முஃமினான அடிமைப் பெண் சிறந்தவள்.”   என்று திருமறை கூறுகிறது.

இணைவைப்பாளனான ஆணுக்கு அவன் இறை நம்பிக்கையாள னாக ஆகும் வரை மணமுடித்துக் கொடுக்காதீர்கள். உங்களுக்கு கவர்ச்சியாக தெரிந்தாலும் இணைவைப்பாளனை விட நிச்சயமாக ஒரு முஃமினான அடிமை சிறந்தவன். அவர்கள் நரகின் பக்கம் அழைக்கிறார்கள் அல்லாஹ்வோ தன் உத்தரவின் மூலம் சுவர்க்கம் நோக்கியும் பாவமன்னிப்பு நோக்கியும் அழைக்கிறான். (ஸூரா அல்-பகரா 221)

அல் - பகராவின் 225 வசனம் முதல் விவாக முறிவு சமபந்தமாக விளக்கி வந்துவிட்டு 230 ஆம் வசனத்தை முடிக்கும் திருக்குர்-ஆன் கீழ்வருமாறு கூறுகிறது.

அவை அல்லாஹ்வின் வரையறைகள் அறிவுள்ளோருக்காக அவற்றை அல்லாஹ் விளக்கியிருக்கிறான்.

அதற்கடுத்த 231வது வசனத்தில் விவாகரத்து செய்துவிட்டு அதன் காரணமாக  மனைவிக்கு தீங்கேற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறிவிட்டுக் கீழ் வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

யார் அவ்வாறு செய்கிறாரோ அவர் தனக்குத்தானே அநியாயம் செய்துகொள்கிறார். அல்லாஹ்வின் வசனங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருளை யும், இறக்கிவைத்துள்ள வேதத்தையும், ஞானத்தையும் நினைவு கூறுங்கள். இதனை அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ் வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

குடும்ப உறவோடு சம்பந்தப்பட்ட பல சட்டங்களை ஸூரா அந் - நிஸா சொல்கிறது. அதனை ஆரம்பித்து வைக்கும் முதலாவது வசனத்தின் இறுதிப்பகுதி கீழ்வருமாறு:

நீங்கள் எந்த அல்லாஹ்வை வைத்து உங்கள் விவகாரங்களைப் பேசுகின்றீர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்த உறவுகளையும் பயந்து கொள்ளுங்கள்.

இங்கு இறை பயத்தையும், இரத்த உறவினர் தொடர்பாக பயந்து நடந்துகொள்ளவேண்டியதையும்  ஒன்றாகச் சொல்லும் திருமறையின் வசனங்கள் ஊன்றி   கவனிக்கத்தக்கது.

இதே ஸூராவின் 11,12ம் வசனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் பற்றி விளக்கமாகச் சொல்கிறது. 13, 14ம் வசனங்கள் அவை அல்லாஹ்வின் வரையரைகள் என ஆரம்பித்து அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படல் சுவர்க்கம் செல்லக் காரணமாகும் எனக் கூறிவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யார் மாறுபாடு செய்து அவனது  வரையறைகளையும் மீறுகிறாரோ அவர் நிரந்தரமாக நரகில் நுழையச் செய்யப்படுவார் என விளக்குகிறது.

இறைவனின் எச்சரிக்கைகள் இறையச்சம் உடையோரால் ஏற்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் படும்போது இஸ்லாமிய பொருளாதாரம் ஏற்றம் பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இன்னும் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்...
இபுராஹீம் அன்சாரி

19 Responses So Far:

Unknown said...


ஒரு கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பு , ஒரு சீரான பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் விஷயம் என்பதை தெளிவாக திருக்குர்ஆன் வசனத்தோடு தெளிவு படுத்தி இருக்கின்றீர்கள்.

வளமான குடும்பத்தின் பலம் ஒட்டு மொத்த சமூகத்தின் பலம் என்பதும் பொருளாதாரத்தின் பின்னணியில் குடும்ப ஒற்றுமை கோலோச்சுகின்றது
என்பதும் தெள்ளத் தெளிவு.


//இஸ்லாம் ஒரு பரிபூரணமான பொருளாதார வாழ்க்கைத் திட்டம் ஆகும். அது முழுக்க முழுக்க நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் அதற்குரிய பயனை உணமையிலேயே காண முடியும்.//

ஆம் ஒன்றை விடுத்து ஒன்ற எடுத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒன்றில் நுழையும்போது முழுமையாக நுழைந்தால் ஒழிய பலனை எதிர் பார்ப்பது மடத்தனமே . தங்கள் ஆக்கம் சிந்திக்க வைக்கின்றது.


அபு ஆசிப்.

adiraimansoor said...

///எங்கே திருமணங்கள் கடுமையாக்கப் பட்டு இருக்கின்றனவோ அங்கே விபச்சாரம் எளிமையாக்கப்பட்டுவிடும் என்பது அண்ணலாரின் பொன்மொழியாகும். விபச்சாரம் மேலோங்குவதைக் காட்டிலும் ஒரு சமுதாயத்துக்குப் பொருளாதார சீர்கேடு வேறு தேவை இல்லை. ///

என்று நபிகளாரின் போதனைகளுக்கு மாறு நடக்கின்றாதோ அங்கே அவ்ரகளின் சொல்ப்படி விபச்சாரம் ஓங்கியே நிற்கின்றது, உதாரணத்திற்கு இந்தனோசிய, அங்கு ஒரு பெண் ஹஜ்ஜை முடித்தால்தான் அவர்களுக்கு திருமனம் என்ற
எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கின்றது இப்படி ஒரு எழுதப்படாத சட்ட்ம் மக்களிடையே நிலவுவதால் அங்கு விபச்சாரம் தலைவிரித்தாடுகின்றன. இது ஒரு அத்தாட்சி,

மற்றொன்று அரப் நாடுகள், இங்கு மஹரை ரொம்ப கடுமையாக்கி அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான அணைத்து வசதிகளையும் சொந்தமாக
சேகரித்த பின்பே அந்த ஆண்களுக்கு பெண்பார்க்கும் படலமே ஆரம்பமாகும்

திருமனமாகும்போது 38,40 வயதை (ஏறக்குறையக் கிழவன்) அடையும்போதுதான் திருமனமே நடக்கின்றது

தலையெல்லாம் நல்லா சொட்டை விழுந்திருக்கும் அப்பொழுதுதான் அவரது திருமண இன்விட்டேஷன் தருவார். நாம் நினைத்திருப்போம் மூன்று, நான்கு பிள்ளையின் தகப்பனாக இருப்பார் என்று, அவர்கள் இன்விட்டேஷன் கொடுக்கும்போது அதிர்ந்துவிடுவோம்.
இவகளின் உடல் ரீதியான தேவையை துபாயிலும், பஹ்ரைனிலும் சென்று பூர்த்தி(விபச்சாரம்) செய்துவிட்டு வருகின்றனர் என்பது கண்கூடாக பார்க்கின்றோம்.

இதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளை கடைபிடிக்காததினால் வரக்கூடிய அவலங்களேயாகும். அல்லாஹ் நமதூர் மக்களை இது போன்ற ஆடம்பர வாழ்க்கையை விட்டு காப்பற்றி இருக்கின்றான்

எத்தனை லட்சங்கள் வரதட்சனையாக கொடுத்தாலும் அந்தந்த வயசில் திருமணம் நடைபெருவதற்கு காரணமே
சகோதரியின் சுமையை சகோதரன் கடுமையாக சுமந்து தனது சகோதரிகளின் வாழ்க்கையை ஒளிமையமாக்கி விடுகின்றனர். அதற்க்காக நான் வரதட்சனையை ஆதரிக்கவில்லை

adiraimansoor said...

வரட்சனையும் ஒரு வண்கொடுமை இதனாலேயே, தகப்பன், சகோதரன் மார்களின் ரத்தங்கள் உறிஞ்சப்பட்டும் அவர்களின் வாழ்க்கை அற்பனிக்கப்பட்டும் சகோதரியின் மாணம் காக்கப்படுகின்றது.
திருமணம் சம்பந்தப்பட்ட எல்லா கொடுக்கள் வாங்கள்களிலும் பூரண பரிமாற்றம் வரவேண்டும்.
அப்படிவந்தாலே இஸ்லாமிய பொருளாதர்க்கொள்கை வலுப்படும்.

பேசி பேசியே
பொழுதும் சாய்ந்தது
அம்மா....... அமம்மா............

adiraimansoor said...

அல் பரக்கா என்ற இஸ்லாமிக் பேங்க் கிளைக பற்றிய விபரம்
ஜோர்டான்தானில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1978ல் ஆரம்பம் 75 கிளைகள்
பாக்கிசஸ்த்தானில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1991ல் ஆரம்பம் 29 கிளைகள்
தற்பொழுது அதாவது 2010ல் 89 கிளைகள்
பஹ்ரைனில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1984ல் ஆரம்பம் 6 கிளைகள்
துர்க்கியில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1985ல் ஆரம்பம் 121 கிளைகள்
துனிசியாவில் இஸ்லாமிக் பேங்க் ஆப்ரேட்டர் 1983ல் ஆரம்பம் 8 கிளைகள்
அல்ஜீரியா முதல் இஸ்லாமிக் பேங்க் 1991ல் ஆரம்பம் 25 கிளைகள்
சவுத் ஆப்ரிக்காவில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1989ல் ஆரம்பம் 6 கிளைகள்
கார்பொரைட் ஆபீஸ் 4
சூடானில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1984ல் ஆரம்பம் 25 கிளைகள்
சிடரியாவில் முதல் இஸ்லாமிக் பேங்க் 2009ல் ஆரம்பம் 9 கிளைகள்
லெபனானில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1991ல் ஆரம்பம் 7 கிளைக
எகிப்தில் முதல் இஸ்லாமிக் பேங்க் 1990ல் ஆரம்பம் 22 கிளைகள்
ஒவ்வொரு நாட்டின் உள்ள பேங்க் மேலாலர் மற்றும் தலைமை அலுவலக விபரங்கள் தேவைப்படுவோர் என்னிடம் வாங்கிக் கொள்ளலாம்.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில் இஸ்லாமிக் பேங்க் அமைப்பதற்கு
முதல் முதலாக ரிசர்வு பேங்க் ஆப் இந்தியா (ஆர்.பி.அய்) அங்கீகாரம் கொடுத்துள்ளது. டாக்டர் இப்ராஹீம் அன்சாரி.காக்கா போன்றோரின் நல் எண்ணங்களியனால் இந்தியாவிலும் உறுவாகிவிட்டது இஸ்லாமிக் பேங்க்
அது சம்பந்தமான செய்திகள் ஆங்கில நாளேடுகளில் வெளிவந்துள்ளன.
அதனுடைய லிங்கை கீழே தருகின்றேன் படம் பார்த்து கதை சொல்லுங்கள்
Kerala government gets Reserve Bank of India nod for Islamic banking
http://economictimes.indiatimes.com/news/economy/finance/kerala-government-gets-reserve-bank-of-india-nod-for-islamic-banking/articleshow/21890211.cms

http://halalinindia.com/kerala.php

Kerala govt gets RBI nod for Islamic banking
http://timesofindia.indiatimes.com/business/india-business/Kerala-govt-gets-RBI-nod-for-Islamic-banking/articleshow/21887855.cms
http://timesofindia.indiatimes.com/topic/Islamic-banking

business-standard
http://www.business-standard.com/article/finance/first-sharia-based-nbfc-to-open-in-kerala-after-rbi-nod-113081800575_1.html

About the Islamic Banking Systems & Suppliers Guide
http://www.ibsintelligence.com/islamic-banking-systems-guide?gclid=CKf3gOOxlbkCFUhP3godMm0AIQ&eprivacy=1

இனி ரிசர்வு பேங்கின் கவலையில்லை. நமதூருக்கு இது போன்ற பேங்க் அமைக்க ஆரம்பமாக வெரும் 100 கோடி இருந்தால் போதும். இது சாத்தியமே முயற்ச்சி செய்வோர் முயற்ச்சி செய்தால்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொருளாதார வாழ்வு, குடும்ப உறவு இணைந்த இஸ்லாமியம் பற்றிய தெளிவான விரிவாக்கம்.

போன வாரம் ரமலானுக்குப் பின் கதிரவன் உதிக்குமுன் உங்கள் எழுத்தையும் வரவேற்று நன்றி சொல்ல எதிர்பார்த்து இருந்தேன். அப்பறம் பின்னாடி உங்கள் பின்னூட்டம் சொல்ல காரணம் அறிய முடிந்தது.

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

sabeer.abushahruk said...

வாழ்வாதாரக் காரணிகளில் மிகவும் முக்கியமானவை பொருளாதாரமும் மணமுடித்த தாரமும் என்பதையும்; இவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் கொடுக்கல் வாங்கல்களும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ நடப்பு பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதையும் எடுத்தியம்புகிறது இவ்வார இ.பொ.சி.

நேர்த்தியான, ஆசிரியர் அவர்களுக்கே உரித்தான பிரத்யேக எழுதும் தோரணையில் ஜொலிக்கிறது தொடர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

இதற்கு முந்திய பதிவில் ஹமீது பரத்திய சகனிலும் லாஸ்ட்டா வந்த நெய்னா சொல்ற அயிட்டங்களும் சாப்பிடற நம்ம உணவுப்பழக்க வழக்கங்கள் மாறாதவரை இஸ்லாமியப் பொருளாதாரம் மருத்துவத்திற்காகப் பெருமளவு வீணடிக்கப் படுவத்கைத் தடுக்கவே முடியாது.

அதோடு, நாம சாப்பிடுவதையெல்லாம் விலையைக் கூட்டிவைத்து அவா சாப்பிடற அயிட்டங்களுக்கெல்லாம் விலையைக் குறைத்து ஒரு மறைவான சதி இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அம்மாகூட மலிவுவிலைல இட்லிதான் தராங்க, தாலிச்சா அல்ல.

Ebrahim Ansari said...

பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை எதிர்த்து எல்லா மதங்களில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பும் நேரத்தில் ஆண்களிடமிருந்து மகர் வாங்குவதற்கு அரபு நாட்டுப் பெண்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அண்மையில் இந்நேரம் . காம் தளத்தில் படித்த செய்தியை நண்பர்களுடன் பகிர்கிறேன்.

======================================================================

இந்த அதிக வரதட்சணை என்கிற வழக்கத்தை மாற்றி,மிகமிகக் குறைந்த அளவு மணக்கொடை பெற்று இரண்டு துபாய் பெண்கள் புரட்சி செய்துள்ளனர். துபாய் பெண்ணொருவர் ஒரே ஒரு திர்ஹம் (சுமார் 15 ரூபாய்) மட்டுமே மஹர் எனப்படும் மணக்கொடையாகப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். மற்றொரு துபாய்பெண் தனது மணாளரிடமிருந்து அதைக் கூட கேட்டுப் பெறாமல், 'இரண்டு அனாதைச் சிறுவர்களை ஆதரிக்க வேண்டும்' என்ற நிபந்தனை மட்டுமே விதித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மணக்கொடை வழக்கத்தில் புரட்சி செய்த இவ்விரு பெண்களையும் துபாய் நீதிமன்ற சங்கம் நேற்று கவுரவித்துள்ளது.

அல் அனூத் என்ற பெயருடைய பெண் அய்மன் என்னும் தன் மணாளரை 'இரண்டு அனாதைச் சிறுவர்களை ஆதரிக்கும் நிபந்தனையின் பேரில் வேறு எவ்வித கோரிக்கையும் வைக்காமல் மணம் செய்து கொண்டுள்ளார். மற்றொரு ஏ.ஏ என்ற சுருக்கப் பெயரால் விளிக்கப்படும் பெண் தனது மணாளர் எம். ஏ என்பவரை வெறும் 1 திர்ஹம் மணக்கொடைக்கு மணம் செய்துகொண்டுள்ளார்.

துபாயில் பெண்கள் எளிய மணக்கொடை பெற விழிப்புணர்வு பிரசாரங்களை துபாய் நீதிமன்ற சங்கம் முன்னெடுத்து வருகிறது. அச்சங்கம் நேற்று நடாத்திய விழாவொன்றில் இவ்விரு பெண்களும் தத்தம் மணாளர்களுடன் '2011 ஆம் ஆண்டின் மிக எளிய நல்ல தம்பதிகள்' என்று கவுரவிக்கப்பட்டனர்.

"பணம் வரும் போகும்; அதுவல்ல முக்கியம் " என்று கூறிய மணப்பெண் அனூத் "எனது திருமண வாழ்வை நல்லதொரு ஆன்மிகக் காரியத்துடன் தொடங்க நினைத்தேன். ஆகவே தான் எனக்குரிய மணக்கொடையாக 'இரண்டு அனாதைகளை ஆதரிக்கும் படி என் கணவரிடம் கோரினேன்' என்றார். " என் முடிவை என் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தவர்களும் ஏற்றுக்கொண்டனர்" என்றார் அவர்.

இன்னொரு பெண்ணான ஏ ஏ கூறுகையில் 'திருமணத்தை நடத்தி வைக்கும் மதகுருவிடம் மணக்கொடைத் தொகை 1 திர்ஹம் தான் என்று கூறிய போது அவரால் நம்ப முடியவில்லை' முதலில் இத்திருமணத்தை நடத்திவைக்கவே மறுத்தார், பிறகு , இது நகைப்பதற்கல்ல என்பதை அவரிடம் விளக்கிச் சொல்ல வேண்டியதாயிற்று" என்றார்.

துபாய் நீதிமன்றத் துறையின் அப்துர் ரஹ்மான் கூறும்போது, இத்தகைய ஆன்மிக உணர்வுடன் வாழ பெண்கள் முன்வர வேண்டும்" என்றார்.

செய்தி at www.web-archive.inneram.com

Unknown said...

சபீர் போட்டோவுலே ரொம்ப எளச்சு போய்ட்டே ஏன் ?

சாப்பிடுவது இல்லையா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை எதிர்த்து எல்லா மதங்களில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பும் நேரத்தில் ஆண்களிடமிருந்து மகர் வாங்குவதற்கு அரபு நாட்டுப் பெண்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். //

காக்கா : இதுமாதிரி எனக்குத் தெரிந்த எமராத்திகள் இருவர் "வட போச்சேன்னு" இன்னும் புலம்பிகிட்டு இருக்காங்க !

நம்மூரு மாதிரி வீட்டோடவா இங்கே கிடைக்கும் ! :)

Shameed said...

//பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை எதிர்த்து எல்லா மதங்களில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பும் நேரத்தில் ஆண்களிடமிருந்து மகர் வாங்குவதற்கு அரபு நாட்டுப் பெண்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். //

இந்த டிஸ்கவுண்ட் என்ற சொல் அதிகமதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது அரபு நாடுகளாகத்தான் இருக்கணும்

Ebrahim Ansari said...

நமது ஊர்களில் சொல்வார்கள்

ஆன் குமாரும் குமருதான் பெண் குமரும் குமருதான் என்று.

எல்லாம் காலா காலத்தில் கரையேற வேண்டும். அரபு நாடுகளில் பணி செய்து வரும் சகோதரர்கள் - அரபு இளைஞர்களுடன் வேலைச் சூழ்நிலையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்கள் ஒரு அம்சத்தை கவனித்து இருக்க முடியும்.

முதிர் கன்னிகள் நமது பகுதிகளில் சில குடும்பங்களில் இருப்பதைப் போல் வயது முதிர்ந்த ஆண்கள் பலர் இன்றும் அரபு நாடுகளில் இருப்பதை நாம் அறியலாம். காரணம் பெரும் தொகை மகராகக் கொடுக்க வேண்டி இருக்கிறது. வீடு கொடுக்க வேண்டி இருக்கிறது. ஓரளவு நகையும், காரும கூட கொடுக்க வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் பெண் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்று புலம்புகின்ற அரபு இளைஞர்களை பொதுவாக அரபு நாடுகளில் குறிப்பாக ஓமன் நாட்டில் நீண்ட வருடங்கள் இருந்தவன் என்கிற முறையில் நான் அன்றாடம் சந்தித்து கதை கேட்டு இருக்கிறேன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவும் சூழ்நிலை - பணம் இல்லாமல் பெண் குமர்கள் தேங்கிப் போய் இருக்கிறார்கள். அரபு தேசங்களில் பணம் இல்லாமல் ஆண் பிள்ளைகள் தேங்கிப் போய் இருக்கிறார்கள்.

தம்பி மன்சூர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி இருப்பது போல் தங்களின் உணர்வுகளின் வடிகாலுக்காக ஒழுக்கத்தை மீறிய செயல்களில் இத்தகைய இளைஞர்கள் ஈடுபடுவது உண்மை. அது மட்டுமல்ல மதுப் பழக்க வழக்கத்துக்கும் இவர்கள் ஆளாவதும் பரவலாகக் காணப படும் ஒரு சமூக அவலம். பல நேரங்களில் மதுவிலக்குக் காரணமாக மது கிடைக்காமல் ஷேவிங்க் செய்யப் பயன்படும் சில லோஷன்களைக் குடிக்கும் அராபிய இளஞர்களும் காணக் கிடைப்பார்கள். இதனால் திருட்டு முதலிய இதர சமூக பிரச்னைகளும் எழுந்து இருப்பதை மறுக்க இயலாது.

அமீரகம் போன்ற பொருளாதார வலிமை படைத்த நாடுகள் தனது நாட்டு மக்களுக்கு திருமண உதவி, வீட்டுக் கடன் போன்றவைகளை வழங்கி சமுதாய ஒழுக்கம் கேட்டுப் போகாமல் காப்பாற்ற ஓரளவு உதவி செய்கிறது. ஆனால் இந்நிலை மற்ற எல்லா அரபு தேசங்களிலும் இருக்கின்றனவா
என்பது கேள்விக்குறியே.

கருத்து மழை பொழிந்த அனைத்து சகோதரர்களுக்கும் படித்துவிட்டு அழைத்துப் பாராட்டிய அன்பர்களுக்கும் ஜசக் அல்லாஹ் ஹைரன்.

இன்ஷா அல்லாஹ் இன்னொரு தலைப்புடன் வழக்கம் போல சந்திக்கலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் காக்கா,
கேரளாவில் ஷரிஅ வங்கி என்ற இஸ்லாமிய வங்கிக்கு ரிசர்வ்பேங்க் அனுமதிக் கிட்டியுள்ளதாமே? உண்மையான தகவலா?

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

//ஒரு சமூகத்தின் கண்ணியமான பொருளாதார வளர்ச்சி ஆண் பெண் சமத்துவ உறவின் மூலமே ஏற்பட முடியும் //

இதை இன்னும் விவரமாக எழுதுங்கள். இதை உங்களைப்போல் அனுபவமிக்க / படித்தவர்களால் மட்டுமே நம் சமூகத்திற்கு எடுத்துச்செல்ல முடியும். அத்துடன் நம் பகுதிகளில் பெண்களை சின்ன வயதில் கல்யாணம் செய்துவைக்க அவர்களின் படிப்பை வலுக்கட்டாயமாக நிறுத்தி, ஆண்களை சார்ந்திருந்து அவர்களை சம்பாதிக்க விடாமல் கொண்டுசெல்லும் சமூக அவலத்தைப்பற்றியும் எழுதுங்கள்.

Ebrahim Ansari said...

அன்புள்ள கவியன்பன் அபுல் கலாம் அவர்களுக்குரிய பதில் : ஆமாம். தொடக்கம்.

தம்பி ஜாகிர்! இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Anonymous said...

///இஸ்லாமிய பொருளாதார வாழ்வுக்கு அடிப்படை// குடும்ப ஒற்றுமை, ஒத்துழைப்பு. உறவு பேணல் ஆகிய கருவை மையமாகக் கொண்டு சுழன்ற இக்கட்டுரையை பலமுறை படித்து படித்து பார்த்த போது கடந்த 27 கட்டுரைகளின் முக்கியத்வத்தையும் விட குடும்பங்களின், ஒற்றுமை, உறவுபேணல். பொருளாதார உதவி ஆகியவற்றை மையமாக கொண்டே
இக்காட்டுரை சுழன்றது. நம்பிக்கை, ஒற்றுமை, உதவி இதுவே இஸ்லாத்தின் 'நதிமூலம்'! தர்மம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது.

!நல்ல குடும்பம் ஒரு பல்கலை கழகம்..நல்ல மனிதர்கள் கொண்டது நல்ல குடும்பம் - நல்ல குடும்பம்கள் கொண்டது நல்லதெரு .நல்ல தெரு கொண்டது நல்ல ஊர். நல்ல ஊர் கொண்டது நல்ல நாடு. நல்ல நாடு கொண்டது நல்ல உலகம் நல்லதோர் இஸ்லாமிய உலகம் செய்வோம்.
ஆனால் ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றிப் பிடித்தாலே இது சாத்தியம் வெறும் கோஷம்மெல்லாம் எட்டுச் சுரைக்காயே!

S.முஹம்மது பாரூக். அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு