இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடித்தளம்- குடும்ப உறவுகள்.(மனைவி).
மனைவியை BETTER HALF என்று சொல்வார்கள். ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்பும் ஒரு பெண் இருக்கிறார்’ என்றும் சொல்வார்கள். ஒரு நல்ல மனைவி ஒரு குடும்பப்பொருளாதாரத்தின் அடிப்படை என்பதை யாரும் மறுக்க இயலாது. இன்னும் சொல்லப் போனால் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட மற்றக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச்செய்பவள் அன்னை என்கிற கருத்து ஒரு சாதாரணமான கவிதை வரியில்ல. மனைவியாக வருபவள் நல்லவளாக சிறந்த நிர்வாகியாக பாசமுள்ளவளாக பண்பாடு மிக்கவளாக உள்ளதைக் கொண்டு நல்லது செய்பவளாக அமைந்துவிட்டால் அது எத்தனை பெரும் பேறு என்பதையும் அப்படி அமையாத இல்லாத குடும்பங்களின் பொருளாதாரம் எவ்வளவுதான் பெரும் பணம் படைத்த குடும்பமாக இருந்தாலும் சீர்கேட்டுக் கிடப்பதையும் நாம் கண்ணால் காண முடியும்.
நான் குறிப்பிடப்போவது நான் அறிந்த இரு குடும்பங்களின் கதை. எனக்குப் பல குடும்பங்களின் கதைகள் தெரியும். காரணம் குறைந்தது ஒரு பத்து குடும்பங்களுக்கு நான்தான் எழுத்தர். அறுபதுகளில் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உழைத்துக் கொண்டிருந்த குடும்பத்தலைவர்களுக்கு- கடிதங்கள் எழுதுவதும் வரும் கடிதங்களை படித்துச் சொல்வதும் எனது முக்கியப் பணியாக இருந்தது. இதற்காக ஒரு கடிதத்துக்கு இரண்டணா முதல் நாலணாவரை கிடைக்கும் பல மனிதர்களின் . வாழ்க்கைப் பாடங்களைப் படித்துக் கொள்ளவும் மனிதர்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் இவை எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. இப்படி நான் அறிந்த இரு குடும்பெண்களின் மாறுபட்ட குணமுடைய இரு மனைவிகளைப் பற்றி இங்கே சுருக்கமாக சொல்லப் போகிறேன். அந்த இரு குடும்பத்தலைவிகளும் இன்று உயிருடன் இல்லை. (இன்னாளில்லாஹி) அவர்கள் என்னை மன்னிபபார்களாக. எனது நோக்கம் மனைவிகள் எப்படி குடும்ப பொருளாதாரத்தை உருவாக்க கருவியாக இருக்கிறார்கள் என்பதை சுட்டுவதே.
நான் சொல்லப் போகும் ஒரு குடும்பத்தின் தலைவர் மலேசியாவில் இருந்து மாதாமாதம் ஐந்து தேதிக்குள் கிடக்கும்படி இருநூற்று ஐம்பது ரூபாய் பணம் அனுப்புவார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை. சொந்த வீடு. இந்தப் பணத்தைத் தவிர தம்பிடி காசுகூட இடையில் அனுப்ப மாட்டார். ஊருக்கு வரும்போது ஒரு பவுன கூட கொண்டு வர மாட்டார் என்று அவர் மனைவி புலம்புவார். . ஊருக்கு வந்துவிட்டு திரும்பி மலேசியா போகும்போது கப்பல் பயணச்சீட்டுக்கு அவரிடம் பணம் இருக்காது. அவர் யாரிடமாவது கடன் வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்பார். மனைவியும் கடன் வாங்கி வந்து கொடுப்பார்கள். அந்தக் கடனை முதல் மாதம் செலவுப் பணத்தோடு சேர்த்து அனுப்பிவிடுவார். நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்படி வெளியில் கடன் வாங்கியதாக அந்தக் குடும்பத்தலைவி கொண்டுவந்து கணவரிடம் கொடுத்த பணம் உண்மையில் கடன் வாங்கியது அல்ல. கணவருக்குத்தெரியாமல் அந்த அன்புத்தாயே சிறு சேமிப்பாக சேர்த்த பணம். அது மட்டுமல்ல பிள்ளைகளுக்கு பசி இல்லாமல் வயிறார உணவு, நியாயமான உடை, சமூக / குடும்ப காரியங்களில் உறவினர்களின் விஷயங்களில் கவுரவத்தொடு நடப்பது தர்மம் முதலிய அத்தனை காரியத்திலும் கச்சிதமாக செய்து கணவர் அனுப்பியதிலேயே மிச்சம் பிடித்து தன் மகளுக்காக கிட்டத்தட்ட எண்பது பவுன வரை நகைகளும் சேர்த்து வைத்து சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார். இந்த எண்பது பவுன்களும் மலேசியக் கணவரால் அனுப்பப்பட்டதோ அல்லது அதற்காக தனியாக பணம் அனுப்பி வாங்கப் பட்டதோ அல்ல! அல்ல! அல்ல!. இன்று பிள்ளைகளும் தலை எடுத்து அல்லாஹ் உதவியால் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மாத வருமானம் இரு நூற்று ஐம்பது ரூபாயில் மரியாதையாக குடும்பம் நடத்திக் காட்டிய பெருமை நிறைந்த பெருமகள் அவர். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக்! ( எனது தபால் எழுதும் கூலியுடன் கூடவே தன் கையால் செய்த பொரிவிலங்காய் உருண்டை, அறிப்புப் பணியாரம் எல்லாம் தருவார்.)
இதற்கு நேர்மாறான இன்னொரு குடும்பத்தலைவியையும் நான் சுட்டிக் காட்டவேண்டும். இவரது கணவர் சிங்கப் பூரில் ஒரு தேநீர் விடுதி நடத்தி வந்தார். நல்ல சாம்பாத்தியம். நிறையப் பணம் தொடர்ந்து அனுப்புவார். இரண்டே பிள்ளைகள். ஊர் வரும்போதெல்லாம் நிறைய நகைகள் கொண்டு வருவார். ஆனால் இவர் மனைவி ஒரு “தீங்கலி”. ஊதாரித்தனமாக செலவு செய்வார். மீன்கடைகளில் விலை பேசாமல் மீனை வாங்கி வந்து சமைப்பார். மளிகைக் கடைகளில் கடன்வைத்து சாமான்களை வாங்குவார். கையில் பணம் இல்லாவிட்டால் எதையும் தள்ளி வைக்க மாட்டார். வாங்கக் கூடாத இடங்களில் வாங்கக் கூடாத தெருக்களில் ஆண்களிடமும் கூட அதிக வட்டிக்கு வட்டிக்கு வாங்கியாவது அனாவசிய ஆடம்பர செலவுகளைச் செய்வார். பால்காரருக்குப் பணம் தர மாட்டார். பட்டுக் கோட்டைக்கு அடிக்கடி போய் இனிப்பு காரம் என்று பொட்டலம் பொட்டலமாக வாங்கி வருவார். கணவர் அடிக்கடி சிங்கப் பூரில் இருந்து அனுப்பும் துணிமணிகள் பற்றாமல் அடிக்கடி ஜவுளி எடுப்பார். ஆயிரக் கணக்கில் கணவரிடமிருந்து பணம் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தாலும் கணவருக்கு எப்போதும் பணம் கேட்டே கடிதம் எழுதுவார். கணவர் ஊர் வரும்போதெல்லாம் கடன்காரர்கள் படையெடுத்து வருவார்கள். இடையில் சிங்கப் பூரில் சாலை ஓரத்தில் கணவர் வைத்திருந்த கடைக்குரிய இடத்தை அந்த நாட்டு அரசு எடுத்துக் கொண்டது. கணவர் ஊரோடு வரும்போது நானூறு இனிப்பு நீரையும் கொண்டுவதார். சேமிப்பு இல்லாததால் இன்னும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது." தேவை இல்லாததை வாங்குபவர்கள் தேவையானதை விற்க நேரிடும்" என்கிற ஆங்கிலப் பழமொழி இவர்கள் விஷயத்தில் உணமையானது. குடி இருந்த வீட்டை முதலில் அடகு வைத்து பிறகு அதை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டனர்.
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு குடும்பம் வாழ்வதிலும் தாழ்வதிலும் மனைவி ஆற்றும் பணி அளப்பரியது. மனைவி என்பவள் குடும்பப் பொருளாதாரத்தை வளர்க்கும் மரம போன்றவள். தகுதி வாய்ந்த ஒரு இல்லத் தலைவியுடைய இல்லமே நல்ல இல்லமாக அமைய முடியுமென்று திருவள்ளுவரும் கூறுகிறார். ஒருவனின் மனைவியிடம் இல்லறத்தை சிறப்புடன் நடத்தும் இயல்பு இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய நலன்கள் நிரம்பப் பெற்று இருந்தாலும் அதனால் பயனே இல்லை. மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் எல்லாம் உள்ளது போல ஆகுமென்று வள்ளுவர் கூறுகிறார்.
மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனை மாட்சித் தாயினும் இல் – என்கிற குறள் இதை வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் அருட் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் :முஸ்லிம் 2911
மேலும்,
“உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே” என்றும் கண்மணி நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத் 7095
மனைவிமார்களை கண்ணியப் படுத்துவது அவர்களை தட்டிக் கொடுத்து அரவணைத்து செல்வது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வழிகோலும் என்பதால்தான் இஸ்லாம் மனைவிமார்களை கண்ணியப் படுத்துகிறது. வேறு எந்த மதமும் மனைவிகளை இப்படி கண்ணியப் படுத்தியதாக தெரியவில்லை.. பெண்ணுரிமை விசயத்தில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் நவீன வாதிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குடும்ப வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி சிந்திக்கும் போது பெண்ணின் பங்கு பற்றி விவாதித்தல் அடிப்படையானது. ஒரு சிறந்த தாயும், தந்தையுமே நல்ல சிறந்த சந்ததியினரை உருவாக்க இயலும். . ஆனால் அந்த சிறந்த தாயும் தந்தையும் உருவாதல் நல்ல கணவன், மனைவியின் உறவின் வழியாகவே சாத்தியமாகும். இந்தப் பின்னணியில் குடும்பத்தில் பெண் வகிக்கும் பங்கு அடிப்படையானது. முதன்மையானது.
இஸ்லாமிய கோட்பாடுகள் புகட்டுவதன் இலக்கு, ஒர் உண்மையான முஃமினை, முதிர்ச்சிமிக்க பூமியின் பிரதிநிதியை பொறுப்புக்களை ஏற்று நடக்கும் நாணயமிக்க பலமான மனிதனை உருவாக்குவதாகும்.
நம்பிக்கைதான் ஈமானின் பெரும் பலம், நான் பூமியின் பிரதிநிதி என்ற பொறுப் புணர்வு, நாணயம், வேலைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் ஆற்றல், திறன் என்ற பண்புகளை மனித இனத்தினின் மீது புகட்டி உருவாக்கிவிடுவதன் வழியாகவே இது சாத்தியமாகும். இப்பண்புகள் இளமையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். மனிதனுக்கு கருத்து அரும்புவிடத் தொடங்கும்போதே இவை பயிற்றுவிக்கப் பட வேண்டும்.
இப்படி ஒரு நிலை நடைமுறைப் படுத்தப் பட வேண்டுமானால் ஒரு சீரான குடும்பத்தில் பிரச்சினைகள் அற்ற அழகான குடும்ப அமைப்பிலேயே சாத்தியமாகும். குழந்தைகளின் முதல் பள்ளிக் கூடம் தான் வளரும் குடும்பமே. தாயையும் தந்தையையும் பார்த்தே குழந்தைகள் பழகி வளருகின்றன. ஒரு குழந்தை தானாகவே தன்னை பண்புள்ளதாக வளர்த்துக் கொள்ள இயலவே இயலாது. “ தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” எண்பது நம்மிடையே வழங்கப் படும் ஒரு பழமொழி. ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டாம் “ என்றும் கூறுவார்கள். எனவே நமது குழந்தைகள் நம்மால் கவனிக்கப் பட்டும் , நம்மால் வளர்க்கப் படவும் வேண்டும். இதற்கு நம் குழந்தைகள் நம்மைக் காணும் போது தாயும் தந்தையும் மனமொப்பி இணைந்த குடும்ப அமைப்பு சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப் பட்டுள்ள சிறுவர்கள் அந்நிலை அடையக் காரணம் அவர்களின் தாய் தந்தையரின் குடும்ப வாழ்வு இக்குழந்தைகளின் கண் முன்னே சிதைக்கப் பட்டதே என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு தந்தை தனது வீட்டில் குழந்தைகளின் முன்னே மதுவருந்தி விட்டு வைக்கும் மிச்சத்தை மகன் எடுத்துக் தெரியாமல் குடிப்பது நாம் கேள்விப்படும் ஒன்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!
குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தினர்கள் கணவன், மனைவி எனப்படும் ஆணும், பெண்ணுமே, குடும்பம் எனபது ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புகாட்டல் மற்றும் , இரக்க மனப்பாங்கின் மீது அமைகிறது. உணர்வுகளின் பரிமாற்றமே அன்பு. பொறுப்புக்களை சுமத்தும் போது இரக்கம் அடிப்படையாகிறது. நிறைவேற்ற இயலாத பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் சாட்டுவது இருவருக்கிடையில் அன்பை வளர்க்காது. ஒருவர் மீது ஒருவர் பொறுப்பைசுமத்தும் போது இந்த இரக்க உணர்வு மேலோங்க வேண்டும். இவ்விரு உணர்வுகள் மீதும் எழாத குடும்பம் அர்த்தமற்றதாகிறது. அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் சீரான வளர்ச்சியைப் பெறமாட்டார்கள். வெறுப் புணர்வோடும், எப்போதும் முரண்பாட்டோடும், சண்டை சச்சரவோடும் வாழும் ஒரு கணவன் மனைவியருக்கிடையே வாழும் பிள்ளைகள் எவ்வாறு சீராக ஒழுக்க சீலர்களாக அமைய முடியும்.?
இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் அமைப்பில் அதன் பொருளாதார வளர்ச்சியில் பெண்ணின் பங்கு மிக அடிப்படையானது. மனைவியே குடும்பத்தின் அஸ்திவாரம். இதனால்தான் வீட்டை மனை என்கிறார்கள். இதை ஆள்பவளே மனைவி. தலைமை தாங்குவது ஆணின் பொறுப்பில் இருந்தாலும் பெண்ணே குடும்பத்தில் பிரதான பாத்திரமாக அதனை இயக்குகிறாள்.
தித்திக்கும் திருமறை ஆண், பெண் படைப்பின் நோக்கமாகவே இக் கருத்தை விளக்குகிறது. திருமறையில் கூறப்படுகிறது.
“உங்களிலிருந்து உங்களுக்கான ஜோடியைப் படைத்து அதனிடம் நீங்கள் அமைதி காணுமாறு அமைந்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கி யுள்ளான்” (ஸூரா-ரூம் 21)
ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட மனித ஆண்-பெண் இனக்கவர்ச்சி மிகுந்த வீரியம் கொண்டது. ஆண் காம உணர்வு வகையில் பலவீனமானவன். பெண்ணின் தோற்றம், வெறுமனே அவளைக் கற்பனை செய்வதுவே அவனில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பலவீனமே அவனைப் பெண்ணின் பின்னால் ஓட வைக்கிறது. பெண்ணின் மென்மை. அவளது பேச்சு, உறவாடல் அனைத்தும் அவனுக்கு மன அமைதியையும், ஆறுதலையும் கொடுக்கிறது. பெண்ணின் சிறப்புத் தன்மை மனோதத்துவ ரீதியாக ஆரம்பிக்கிறது.
ஆண் அவனது இயற்கையான உடல் அமைப்பு, தோற்றம், பலம், வன்மை என்பவற்றால் உழைக்கவும், போராடவும் சுமைகளை சுமக்கும் சுமைதாங்கியாகவே படைக்கப்பட்டுள்ளான். உழைத்து, களைத்து, முட்டி, மோதி மனமும், உடலுமே தாக்குண்டு வீடு நோக்கி வரும் ஆணுக்கு பெண்ணின் குளிர்ச்சியான பார்வையும், மென்மையான பேச்சும், ஸ்பரிசமும் அமைதியையும் ஆறுதலையும் கொடுக்கும். வாழ்வின் வெயிலுக்கான நிழலே பெண். ஆணுக்கு இந்த இடம் தவறும் போதுதான் அவன் மன உளைச்சல் கொண்டவனாகவும், வெறுப்பும், விரக்தியும் கொண்டவனாகவும், சில போது வெறி பிடித்தவனாகவும் மாறிப்போகிறான். இதனால்தான் பல வீடுகளில் தட்டைப் பீங்கான்கள் உடைகின்றன.
பெர்னாட்ஷா நொந்து போய்ச் சொன்னார் “ பெண்களைப் போல ஆண்களுக்கு ஆறுதல் தர ஆள் இல்லை. ஆனால் பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு இந்த ஆறுதல் தேவையும் இல்லை “ எனறு.
இவ்வாறு ஓர் ஆணைச் ஆணாகச் செய்பவளே பெண்தான். அவனை மன நலம் கொண்டவனாக வைத்து, சமூகப் பொருளாதாரத்தின் சிறந்த நற்பயன் தரும் சக்தியாக வைத்திருப்பது அவளது கையிலேயே உள்ளது. இக் கருத்தை இறைதூதர் (ஸல்) கீழ்வருமாறு மிகவும் அழகாகச் சொல்கிறார்கள்.
“யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (தபரானி, பைஹகி, ஹாகிம்)
இவ்வாறு பெண் இருக்கவேண்டுமானால் அவள் தன்னில் உருவாக்கிக் கொள்ள வேண்டிய அம்சங்கள் யாவை?
கணவன் மனைவி இருவரும் சில மணிநேரங்களில் நிறைவு பெற்று முடியும் பிரயாணத் தோழர்களல்ல, ஓரிரு நாட்கள் மட்டும் உறவாடக் கூடியவர்களல்ல. வாழ்நாள் முழுக்க வாழப்போகும் வாழ்க்கைத் தோழர்கள். இங்கு எந்த நிர்ப்பந்தமும் ஆணோ, பெண்ணோ எந்தத் தரப்ப்பார் மீதும் பிரயோகிக்கப்படக் கூடாது. இருவரது மனமொத்த ஒருமைப்பாடு மற்றும் உடன்பாடு மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பொருளியல் மற்றும் சமூகத்தரமும் பேணப் பட வேண்டும்.
இறைதூதர் (ஸல்) அவர்கள் இந்தக் காரணத்தால்தான் கணவன் மனைவியாகப் போகும் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணத்துக்கு முன்னரே பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். நமது பகுதிகளில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இல்லை.
ஒரு நபித்தோழர் தான் திருமணம் பேசி இருப்பதாகக் கூறியபோது “நீ அவளைப் பார்த்தாயா?, அவளைப் பார், அப்போது உங்களிடையே ஓர் இணக்கத்தை உருவாக்க அது மிகப் பொருத்தமாக அமையும்.” எனக் கூறினார்கள்.
கட்டிடத்துக்கு மனைப் பொருத்தம் எப்படி அவசியமோ திருமணத்துக்கும் மனப் பொருத்தம் மற்றும் உடல் பொருத்தம் ஆகியன அவசியமாகும். தான் விரும்பாத ஓர் ஆணுடன் எப்படி ஒரு பெண் வாழ முடியும்? எவ்வாறு அவள் அவனுக்கு மன அமைதியைக் கொடுக்க முடியும்? அப்படி அமைதில்லாதவன் எப்படி பொருளாதார ரீதியில் உயர முடியும்? இந்நிலையில் இருவருமே மன அமைதியை இழந்து தவிப்பர். உறவாடலின் முதல் அடிப்படையே இங்கு இல்லாமல் போகின்றது. பொருத்தமில்லா மனைவி பொருத்தமில்லாக் கணவனுக்கு மணமுடிக்கப் பட்டால் வாழ்வின் அடிப்படையிலேயே வெடிகுண்டு வைக்கப் படுகிறது என்றே பொருள்.
அடுத்த அம்சம் மனதத்துவத்தைப் புரிந்திருத்தலாகும். திருமணத்தின் ஆரம்பத்தில் இனக்கவர்ச்சியின் வேகத்தால் இருவரும் மிகவும் சுமுகமாக உறவாட முடியும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அக் கவர்ச்சி குறையத்துவங்கும். இப்போது ஆணின் மனத்தத்துவம் புரியாத ஒரு பெண் பல தவறுகளை அப்பகுதியில் இழைத்து முரண் பாடுகளை உருவாக்கி விடுவாள்.
கணவனுக்குக் கட்டுப்படல், அவனுக்கு நன்றி செலுத்தல், போன்ற பல விடயங்களை இப்பகுதியில் இறைதூதர் (ஸல்) அவர்கள் திரும் பத்திரும்ப வலியுறுத்தியதன் காரணம் இதுவேயாகும். கீழே சில ஹதீஸ்களை இக்கருத்தை விளங்குவதற்காகத் தரவிரும்புகிறேன்.
“தனது கணவனுக்கு நன்றி செலுத்தாத ஒரு பெண்ணை அல்லாஹ் பார்ப்பதில்லை. அவனது தேவை இன்றி அவள் இருக்கவும் முடியாது. “ (அல் ஹாகிம் -அல் முஸ்தத்ரக்)
“எப்பெண்ணாவது மரணிக்கும் போது கணவன் திருப்திப்பட்ட நிலையில் மரணித்தால் சுவர்க்கத்தில் நுழைவாள்” (இப்னுமாஜா, அல்ஹாகிம்)
ஒரு பெண் இறைதூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு விளக்கத்துக்காக வந்தாள். தான் வந்த நோக்கம் நிறைவேறியதும் இறைதூதர் (ஸல்) அவளைப் பார்த்து உனக்கு கணவன் இருக்கிறானா? எனக் கேட்டார் ஆம் என அப்பெண் கூறிய போது அவனைப் பொருத்த வரையில் உனது நிலை என்ன? என இறைதூதர் (ஸல்) வின வினார்கள். சிலவேளை இயலாமல் போவது தவிர என்னால் முடிந்தளவு நான் அவனது கடமைகளை நிறைவேற்றுகிறேன் என அப்பெண் கூறினாள். அப்போது இறைதூதர் (ஸல்)
“அவனைப் பொறுத்தவரையில் நீ எங்கே இருக்கிறாய் எனப் பார்த்துக் கொள். ஏனெனில் அவனே உனது சுவர்க்கமும், நரகமும்” என்றார்கள்.(முஸ்னத் அஹமத், ஸூன் நஸாயி, முஸ்தரக் அல்-ஹாகிம்)
செலவழிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவன் கணவன். என்றாலும் மனைவிதான் வீட்டுச் செலவினங்களை நெறிப்படுத்துகிறாள். அந்த வகையில் வீட்டின் செலவினங்களை கணவனின் வருமானத்திற்கேற்ப நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவது மனைவியரின் பொறுப்பாகும். செல்வம் அதிகம் இருந்தால் ஆடம்பர மோகமின்றி கவனமாகப் பணத்தைக் கையாளும் போக்கும் வறுமை நிலையாயின் பொறுமை யுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழும் திறனும் ஒரு நல்ல மனைவிக்கு இருக்க வேண்டும். இவ்வாறு கணவனின் செல்வத்தை மிகவும் கவனமாக பாதுகாக்கும் திறன் அவளுக்கு இருக்க வேண்டும்.
அத்தோடு கணவன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் செலவழிக்க கடமைப்படுகிறானே தவிர அவனது சொத்து விவகாரங்களில் தலையிடவோ, அவனது உறவினர்களுக்காக செலவிடுவதில் தலையிடவோ மனைவிக்கு உரிமை இல்லை. என்பதை அவள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று நமது குடும்பங்களில் நடைபெறும் முக்கியமான பிளவுகள் இஸ்லாமியப் பொருளாதாரம் வரையறுக்கும் இந்த அமசத்தை உணராமல் இருப்பதால்தான் என்பதை இங்கு வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.
இஸ்லாமியப் பொருளாதார சந்ட்டங்களின்படி , மனைவியின் சொத்தில் கணவனுக்கு தலையிட எந்தவிதமான உரிமையுமில்லை என்பதும் இங்கு கவனிக் கத்தக்கது.
கணவனின் சொத்தைப் பாதுகாப்பதும் ஒரு மனைவியின் பொறுப்பு என்பதையும் இறைதூதர் (ஸல்) விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
“நான்கு விடயங்கள் யாருக்குக் கிடைக்கப்பெறுகிறதோ அவர் உலக, மறுமையின் நன்மையைப் பெற்றவராகின்றார். நன்றி செலுத்தும் உள்ளம், இறை நினைவு கூறும் நாவு, சோதனைகளின் போது பொறுமையாக உள்ள உடம்பு, தன்னிலோ, கணவனின் சொத்திலோ பாவகாரியங்களை நாடாத மனைவி. (தபரானி - அல்கபீர், அல்-அவ்ஸத்)
மூன்று விஷயங்கள் மனிதனின் சந்தோஷ வாழ்வுக்கு காரணமாகும் எனக் கூறிய இறை தூதர் (ஸல்) அவற்றில் முதலாவதைக் கீழ்க்கண்டபடி கூறினார்கள்.
“நீ பார்த்தால் உன்னைக் கவரக் கூடிய, நீ இல்லாத போது தன்னையும், தனது செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய மனைவி “ (அல்-ஹாகிம் - முஸ்தத்ரக்)
எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் இப்படிப்பட்ட நற்குணமுள்ள மனைவிகளைத் தந்து அனைவரின் பொருளாதார வாழ்வும் சமூக ஒழுக்கமும் மேம்பட உதவுவானாக !
மீண்டும் சந்திக்கலாம் இன்ஷா
அல்லாஹ்.
இபுராஹீம் அன்சாரி
39 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
//பொருத்தமில்லா மனைவி பொருத்தமில்லாக் கணவனுக்கு மணமுடிக்கப் பட்டால் வாழ்வின் அடிப்படையிலேயே வெடிகுண்டு வைக்கப் படுகிறது என்றே பொருள்.//
டாக்டர் இப்ராஹீம் அன்சாரி காக்கா
வலுக்கட்டாய திருமணத்தையும், பொருத்தமில்லா
ஜோடி அமைப்பையும் இரண்டு வரியில் நச்சென்று மிகவும் அற்புதமகவும் மிக தெளிவாகவும் சொல்லி இருக்கின்றீர்கள்
இலாமிய இல்லறவியலையும் இஸ்லாமிய பொருளாதாரத்தையும் பின்னி பினைந்து மிக அருமையான ஒரு பதிவை தந்திருக்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ். கடும் உழைப்பு
உள்ளும் புறத்திலும் உங்களின் தேவைக்கேற்ப்ப நீங்கள் நல் வாழ்வுவாழ அல்லாஹ் உதவி செய்வானாக
சிக்கனமாக குடும்பம் நடத்தும் பெண்மனியை பற்றியும்
ஊதாரித்தனமாக குடும்பம் நடத்தும் பெண்மனியை பற்றியும் உங்கள் இளைமைக்கால அனுபவத்தின் வாயிலாக இஸ்லாமிய பொருளாதார்த்தை படம்போட்டு காட்டிருப்பதும் மிகவு பொருத்தமாகவும், நீங்கள் பயணிக்கும் இஸ்லாமிய பொருளாதாரம் என்ற போட்டுக்கு சரியான துடுப்பாக அமைந்துள்ளது தங்களின் அனுபவ ரீதியான இந்த எடுத்துக்காட்டு
இதைத்தான் சுருக்கமாக ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்லிவைத்தார்களோ
மிக ஆழ்ந்த விளக்கங்களை அள்ளி தெளித்து , கணவனின் சொத்தை பராமரிப்பதிலும், அவன் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அவனை கோபுரத்தின் உச்சாணிக்கு கொண்டு செல்வதும் , அடிமட்டத்திற்கு கொண்டு வருவதிலும் மனைவியின் பங்கு அதிகம் என்று பல விஷயங்களின் எடுத்துக்காட்டுகளோடு நிரூபித்து இருக்கின்றீர்கள்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். இப்பல்கலைக்கழகம் சிறப்போடு செயல்பட நல்ல மனைவி என்னும் பேராசிரியை இல்லையென்றால் , நடைபெறும் பாடங்கள் அனைத்தும் வீணே.
தாங்கள் சுட்டிக்காட்டிய இரண்டு குடும்பங்களைப்போல நம் ஊர் அதிராம்பட்டினத்தில் எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. மனைவின் போக்கைப்பொருத்து வாழ்ந்த, கணவன் மார்கள், கொடி கட்டி பறந்த குடும்பங்கள் எல்லாம் இன்று வாடகை வீட்டில் தங்கக்கூடிய அவல நிலையில் நம் ஊரில் பல குடும்பங்கள் இருக்கின்றன.
வீட்டுப்பொருலாதாரத்தை தாங்கி நிற்கும் தூண் மனைவி என்பதை அவள் புரிந்து வைத்திருக்கின்றாலோ இல்லையோ அவளை அறியாமலேயே, இப்பொருலாதாரம் நிமிரவும், முடங்கவும் அவள்தான் காரணமாகின்றால்
என்பது தங்கள் கட்டுரையின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு ஒரு அழகிய வீட்டுபொருளாதார பாடமே நடத்தப்பட்டு இருக்கின்றது.
அபு ஆசிப்.
To Brother Ebrahim Ansari,
நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு குடும்பத்தலைவிகளைப்பற்றிய விவரம் எல்லா பெண்களின் மனதிலும் பதிய வேண்டிய விசயம். இதை பெண்களுக்கு ஹதீஸ் சொல்லும் போது மறுஒலிபரப்பு செய்ய வேண்டிய விசயம்.
அவன் (சார்ந்தவர்கள்) வாழ்வதும்/வீழ்வதும் அவளாலே என்பதற்கும்,
வாரிசுகளின் வல்லளவும் அவங்க வாழ்வின் செயலிலே என்பதற்கும்
அடுத்தவங்களின் அனுபவத்தில் கண்டதை அழகாய் தந்தமைக்கு நன்றி.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
மாஷா அல்லாஹ்!
இ.பொ.சி. இந்த வாரம் குடும்ப உறவு, குறிப்பாக கணவன் மனைவி உறவு அந்தந்த குடும்பங்களில் எந்தவிதமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை விலாவாரியாக உதாரணங்களோடு விளக்கியிருக்கிறது.
பள்ளிக்காலங்களில் சபுராளிகளுக்குக் கடுதாசிகள் எழுதிக் கொடுத்த அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பணம் கேட்டே இருக்கும்.
எனக்கு பொட்டிக்கிழங்கும் போலீஸ் பனியானும் கிடைக்கும்.
அருமையான தொடர் நிரப்பமாகத் தொடர வாழ்த்துகள்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
அன்பிற்கினிய மூத்த சகோதரர் இபுறாஹிம் அன்சாரி காக்காவின் இந்த அற்புதமான தலைப்பின் கீழ் வரும் இன்றைய பாடத்தை "மனைவியியல்" என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
இந்த வாழ்க்கையின் (தக்தீர்) எதார்த்தத்தில் சில நல்லவனுக்கு மோசமானவளும், மோசமானவனுக்கு நல்ல தங்கமானவளும் வாழ்க்கைத்துணையாக அமைந்து விடுவது தவிக்க முடியாததாகி விடுகிறது. இரண்டுமே தங்கமென்றிருந்தால் அதுவே இறைவன் அவர்களுக்கு உலகிலேயே அனுபவிக்க வாய்ப்பளித்த சுவர்க்கம் என்றே சொல்லலாம்.
வெறும் பளிங்கு விளையாடுவது, பம்பரம் சுற்றுவது, பட்டம் உடுவதை கொஞ்சம் நம்மூர் சடப்படத்துடன் அனுபவத்தில் எழுதிப்பழகிய எமக்கு உங்களின் இந்த பாடம் இன்னொரு முறை பள்ளிக்கூடம்/கல்லூரி சென்று நேர்த்தியான வாத்தியாரிடம் தொலைதூர (பாலைவன) கல்வி மூலம் கற்பது போல் இருக்கிறது.
ஆத்திக்குல் ஆஃபியா காக்கா.....
68 இந்திய ரூபாய்களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் இன்றைய சந்தை மதிப்பு வெறும் 1 டாலர் தான் என்று தன் கையாலாகாத தனத்தை கூட வியாக்கியாணத்தில் பேசும் உலகப்பொருளாதார மாமேதைகள் நிறைந்த நாடு இது. கேட்டால் "மாத்தி யோசி" என்கிறார்கள் என்னக்கருமமோ???
//எனக்கு பொட்டிக்கிழங்கும் போலீஸ் பனியானும் கிடைக்கும்.//
சபீர்,
எங்கள் குடும்ப உறுப்பினர் மு.செ.மு. நைனா முஹம்மது அவர்களின் உம்மாவின் வாப்பா ( எங்கள் அபுல்ஹசன் காக்கா ) அவர்களுக்கும், அவர்களின் காக்கா ( அசனா லெப்பை தம்பி மரைக்காயர்) அவர்களுக்கும் கடிதம் கணிசமான முறையில் எழுதிக்கொடுத்து, அவர்கள் அதற்க்கு முன்தினம், ஜாவியாவில் வாங்கிய நார்சாவை ( பெரும்பாலும், சமூசா, அல்லது ஏதாவது இனிப்பு வகை ) எனக்கு தருவார்கள்.
இன்றும் எனக்கு நினைவில் இருந்து மீளவில்லை. நான் பெருமைக்காக சொல்லவில்லை என்னை ஏன் கூப்பிடுவார்கள் என்றால் என் கையெழுத்து
அருமையாக இருக்கும் அதனால்தான்.
அபு ஆசிப்
அன்பான தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,
//பள்ளிக்காலங்களில் சபுராளிகளுக்குக் கடுதாசிகள் எழுதிக் கொடுத்த அனுபவங்கள் நிறைய இருக்கின்றன.//
ஒருவேளை இந்த அனுபவங்களே உங்களை ஒரு சிறந்த கவிஞராகவும் என்னை ஒரு கட்டுரை எழுதுபவனாகவும் ஆக்கி இருக்கிறதோ. ?!?!?
இது பற்றி அனைவரின் வாழ்க்கைப் பிரச்னைகள், இன்ப துன்பங்கள் பற்றி கலப்பாக கலகலப்பாக ஒரு தனிப பதிவு எழுதவேண்டுமென்று ஒரு ஆசை உள்ளது. இ. பொ. சி. தொடர் நிறைவுறட்டும். இன்ஷா அல்லாஹ். நீங்கள் எழுதினால் இன்னும் களைகட்டும் தளம் கலகலப்பாகும்.
அன்பான தம்பி ஜாகீர்!
//இதை பெண்களுக்கு ஹதீஸ் சொல்லும் போது மறுஒலிபரப்பு செய்ய வேண்டிய விசயம்.//
சிறந்த யோசனை.
//இந்த வாழ்க்கையின் (தக்தீர்) எதார்த்தத்தில் சில நல்லவனுக்கு மோசமானவளும், மோசமானவனுக்கு நல்ல தங்கமானவளும் வாழ்க்கைத்துணையாக அமைந்து விடுவது தவிக்க முடியாததாகி விடுகிறது. இரண்டுமே தங்கமென்றிருந்தால் அதுவே இறைவன் அவர்களுக்கு உலகிலேயே அனுபவிக்க வாய்ப்பளித்த சுவர்க்கம் என்றே சொல்லலாம்.//
இதைத்தான் அல்லாஹ் குரானிலே சொல்லுகின்றான்.:
" நல்லொழுக்கமுள்ள ஆண்கள், நல்லழுக்கமுள்ள பெண்களுக்கும்,
நல்லொழுக்கமுள்ள பெண்கள், நல்லொழுக்கமுள்ள ஆண்களுக்கும்,
உரியவர்கள்.
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள் பெண்களுக்கும்
உரியவர்கள்" - அல்-குரான்
இப்படி குரானின் கூற்றுப்படி வாழ்க்கை அமையும்போதுதான், அங்கே ஒரு அழகிய குடும்பமெனும் பல்கலைக் கழகமும் , அமைதியான குடும்பமெனும்
புரிந்துணர்வும் அங்கே நிலை நிறுத்தப்படுகின்றது.
அதுவே மாறாக அமையும்போது,
குடும்பமே நரகமாகின்றது.
அபு ஆசிப்.
தம்பி அப்துல் காதர் எனது இடது கை எழுத்தும் நன்றாகவே இருக்கும்.
அது சரி நடுத்தெருவில் ஒரு ஜோக் சொல்வார்கள்.
ஒரு சிறுவனை அழைத்து ஒரு தாயார் கடிதம் எழுதச் சொன்னார்களாம்.
அந்தச் சிறுவன் ஆண்டவன் துணை செய்வானாகவும் என்று எழுதுவதற்கு பதிலாக ஆண்டவன் தூணை செய்வானாகவும் என்று எழுதிவிட்டானாம்.
அந்த வழியாகப் போன கொஞ்சம் கூடுதலாகப் படித்த ஒருவரிடம் கடிதத்தைக் கொடுத்து சிறுவன் சரியாக எழுதி இருக்கிறானா என்று பார்த்தபோது துணை செய்வானாகவும் என்பதற்கு பதிலாக தூணை செய்வானகவும் என்று எழுதியது தெரிந்த அந்த அம்மா
" இந்தா வாப்பா காரூவா.ஆண்டவன் வந்து தூணை செய்யட்டும் மற்றவர்கள் வந்து நிலைப்படி , உத்திரம், ஜன்னல் எல்லாம் செய்யட்டும் "
என்று சொன்னார்களாமே.
உங்களுக்குத் தெரியுமா?
காக்கா,
கடுதாசி எழுதித்தர்ரேன்னு அந்த அம்மணியையே கரெக்ட் பண்ணி கடத்திட்டுப்போன, மண்டைல மூளைக்குப் பதிலாக வேறெதுவோ உள்ளவங்க கதைலாம் இ.பொ.சி. பதிவுக்கு தொடர்பில்லாததால் சொல்லபில்லை.
//" இந்தா வாப்பா காரூவா.ஆண்டவன் வந்து தூணை செய்யட்டும் மற்றவர்கள் வந்து நிலைப்படி , உத்திரம், ஜன்னல் எல்லாம் செய்யட்டும் "
என்று சொன்னார்களாமே.
உங்களுக்குத் தெரியுமா?//
தாங்கள் ஒரு தேர்ந்த படைப்பாளி மட்டும்தான் என்று நினைத்தேன் .
ஆனால் அவ்வப்பொழுது,
எனக்கு நகைச்சுவையும் கை வந்த கலை என்று பாரூக் காக்கா அவர்களின் ஜாடையையும் (நகைச்சுவையை சொன்னேன் ) பதிவின் பின்னூட்டத்தில் கொண்டுவந்து எங்களை மகிழ்ச்சியில் அவ்வப்பொழுது ஆழ்த்துகின்றீர்கள்.
ஜஜாக்கல்லாஹு ஹைர்.
அபு ஆசிப்.
மைத்துனர் இப்ராஹிம் அன்சாரி எழுதிய நீண்ட குடும்ப பொருளாதார கட்டுரையில் அவர் மலேயா, சிங்கபூர்ருக்கு கடிதம் எழுதிக் கொடுத்து அதற்க்கு சீப்பு பணியானும் அறிப்பு பணியாயான் பெற்ற செய்தி படித்ததும் அது என் நினைவுகளை ஒரே ஒரு நொடியில் சங்க காலத்துக்கே இழுத்து சென்றது.
கம்பன் பொன்னுக்கு பாடினான்:
அவ்வை கூழுக்கு பாடினாள்;
இ.அன்சாரி அறிப்பு பணியாரத்துக்கு [எழுதினார்] பாடினார்' என்று தமிழ் இலக்கிய உலகம் பாராட்டும் என்று நம்புகிறேன்.
நல்வாழ்த்துகளுடன்.........
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
இந்த வார பொருளாதார சிந்தனைகள் -
மனை(வி)யியல் பொருளாதரம்
மலேசிய மலரும் நினைவுகளுடன்
மார்க்கம் தோய்ந்த தொணியில்
படிப்பதற்கும் படிப்பினைக்கும்
இனிமையும் அருமையுமாய்
//கம்பன் பொன்னுக்கு பாடினான்:
அவ்வை கூழுக்கு பாடினாள்;
இ.அன்சாரி அறிப்பு பணியாரத்துக்கு [எழுதினார்] பாடினார்' என்று தமிழ் இலக்கிய உலகம் பாராட்டும் என்று நம்புகிறேன்.//
இதைவிட நகைச்சுவையாக யாராலும் சொல்ல முடியாது.
பொருளாதாரம் நிலைக்க மனையாளின் ஆதாரம் வேண்டும் என்று இரு வேறு நிகழ்வுகளின் ஆதாரங்களுடன் விளக்கியது ஒரு பேராசிரியரின் பாடம் நடத்தும் திறனைக் காட்டி நிற்கின்றது.
தாங்கள் கண்கூடாக அன்று கண்ட இரு வேறு குடும்பங்களின் நிலைகள்/ அவர்களைப் போன்ற பெண்கள் இன்னும் அதிரையில் இருக்கின்றார்கள்; எல்லாக் குடும்பங்களிலும்;சிக்கனமாய் இருந்து சீராய் வாழ்வர்களும் உளர்; ஆடம்பரமாய்ச் செலவழித்துச் சீரழிந்தவர்களும் உளர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்; மற்றும், பெண்கள் திருமணம் ஆகும் முன்பாக, இப்படிப்பட்ட குடும்ப நிர்வாகத்தை- பொருளாதாரத்தில் சிக்கனமாகச் செலவழித்துச் சீராய்க் குடும்பம் நடத்துவதை- தாய்மார்கள் தான் திருமணமாகப் போகும் தன் பெண் பிள்ளைகட்குச் சொல்லியும் முன்மாதிரியாக நடந்தும் காட்ட வேண்டும்; இளமையில் தன் தாயைப் பார்த்துப் பழகும் அப்பெண் பிள்ளை இன்ஷா அல்லாஹ் திருமணம் ஆனதும், தாயைப் போலவே சிக்கனமாக வாழும் என்பதே உண்மை.
இ.அ.காக்கா அவர்கள் ஊரின் எல்லா நடப்புகளையும் நன்றாக ஊன்றி- உன்னிப்பாகக் கவனிக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்; இதனால் அவர்களும் மிகவும் ஆதாரத்துடன் ஆக்கங்களில் அவர்கள் கண்டு, கேட்டு, உண்டு ரசித்ததையும் எழுத முடிகின்றது.
// ( எனது தபால் எழுதும் கூலியுடன் கூடவே தன் கையால் செய்த பொரிவிலங்காய் உருண்டை, அறிப்புப் பணியாரம் எல்லாம் தருவார்.)//
மாமா நீங்க அப்போவே பொருளாதாரத்துளே ரொம்ப உஷார்பார்ட்டி இதை படிக்கவும் புரிகின்றது
அன்புள்ள மச்சான் முதலிய அனைவருக்கும்,
கையால் செய்த பொரிவிலங்காய் உருண்டை, அரிப்புப் பணியாரம் என்று நான் குறிப்பிட்டதன் உண்மை நோக்கம் நான் குறிப்பிட்ட அந்த சிக்கனத்தின் இலக்கணமான தாய் கடைகளில் தெருக்களில் விற்கும் பண்டங்களை வாங்கித் தனது குழந்தைகளுக்குக் கொடுக்காமல் தானே வீட்டில் எல்லாம் தயார் செய்து டப்பிகளில் அடைத்து வைத்து ரேஷன் முறையில் தருவார்கள் என்பதையும் சுட்டிக் காட்டவே. இன்னும் அவர்களைப் பற்றி நிறைய சொல்லலாம். வீட்டில் கோழி வளர்ப்பார்கள். தனது பிள்ளைகள் கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட வேண்டுமென்றால் காசுக்கு பதில் கோழி முட்டையைக் கொடுப்பார்கள். அந்தக் கோழி முட்டை அப்போதெல்லாம் இரண்டணா விற்கும். பிள்ளைகள் அந்த முட்டையை ஹோட்டலில் கொடுத்துவிட்டு பதிலாக சுளியன், போண்டா, உளுந்துவடை , மசால்வடை வாங்கி சாப்பிடுவார்கள்.
வாரத்தில் வெள்ளி கிழமை கால்கிலோ கறி வாங்கி தாளிச்சாப் போடுவார்கள். அதற்கு வாங்கும் காய்கறிகளில் ஒவ்வொன்று எடுத்து வைத்து அவை அனைத்தையும் போட்டு ஒரு நாளைக்கு சாம்பார் வைத்துவிடுவார்கள். குடும்ப நிர்வாகம அவ்வளவு துல்லியமாகப் பார்த்த அவரை இன்றும் மறக்க முடியவில்லை. இன்று உள்ள பெண்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உள்ளம கலங்குகிறது.
ப்ணியாரத்துக்குப் பாடினார் என்று பாரூக் மச்சான் அவர்கள் என்னை பிசைந்து தட்டி போட்டு சுட்டு இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும் அன்று நான் ஒரு அமுல் பேபி . பலரும் பாசத்துடன் தரும் கண்டதைத் தின்றே குண்டனும் ஆனேன். இன்று அதற்கெல்லாம் வரி கட்டிக் கொண்டு இருக்கிறேன்.
தம்பி அபூ ஆசிப்: நவரச உணர்வு கலந்தவனே முழு மனிதன். அதுவும் மச்சான், தம்பி ஜாகிர், தம்பி சபீர் , மருமகன் சாவன்னா ஆகியோர் உலவும் இங்கு நமது தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அவ்வப போது நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தம்பி மன்சூர் : தங்களின் ஆர்வத்துடன் படித்து இடும் அன்பான கருத்துக்ககளுக்கு மிக்க நன்றி.
அல்கோபர் வசந்தம் இம்முறை வீசி இருக்கிறது. ஜசாக் அலாஹ் ஹைரன்.
மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.
தம்பி அப்துல் காதர் மற்றும் சகோதரர்களுக்கு இன்னொரு வேடிக்கையான விஷயத்தைப் பகிர நினைக்கிறேன்.
அதாவது நான் வாடிக்கையாகக் கடிதம் எழுதிக் கொடுக்கும் ஒரு வீட்டில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தை அவர்களின் உறவினர் அரை குறைப படிப்பாளி முன் நின்று நடத்தினார். திருமண செலவுகளுக்காக மொத்தமாக அவரிடம் ஒரு தொகை தரப் பட்டது. அந்ததொகைக்கான செலவுக் கணக்கை அவர் திருமண வீட்டாரிடம் எழுதி ஒப்படைத்தார்.
அவர் எழுதிய கணக்கை மலேசியாவில் இருக்கும் குடும்பத்தலைவருக்கு கடிதத்தில் எழுத வேண்டும். இங்குதான் எனக்குத் தலைவலி ஆரம்பம் ஆனது. அவர் தமிழில் எழுதிய செலவு ஆயிட்டங்களைப் பார்க்க எனக்குத் தலை சுற்றியது.
உதாரணமாக அவர் எழுதிய கணக்கின் ஐட்டங்களை அப்படியே தருகிறேன். அவை என்ன என்று கண்டு பிடித்து சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.
பாந்தளில் வழை மரம் கட்டியது
சாஹான் வடகை
சட்டி வடகை
லேவைக்கு கெடுத்தது
பத்திஹா ஒத
காட்டில் வாங்கியது
முத்துப் பொட்டை பேய் வர
காளர்ர் குருசு முனுக்கு
மலை கட்டியது
பத்தாருக்கு கெடுத்தது
மொசதிரிக்கு
காறிக கடைக்கு
காய்காரி வங்கியது
விடு சுத்தம் செய்தது
தொங்காய் குலை
வாழாமை செய்தோர் காநாக்கு
குலி ஆள் முனுக்கு
= இவை எல்லாவற்றையும் நான் இவைதான் என்று சரியாகக் கண்டு பிடித்து கடிதத்தில் சரியாக எழுதிவிட்டேன். ஆனால் அந்த "காளார்ர் குருசு முனுக்கு " என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இறுதியில் அந்த மகாத்மாவிட்மே கேட்டபோது அவர் சொன்னார் " மூணு குரோஸ் கலர் பாட்டில் வாங்கிநோமுல்ல அதுதான்" .
அப்பாடா இது மறக்க முடியாத அனுபவம். இவற்றை எங்கள் நண்பர்கள் குழு அடிக்கடிப் பேசி சிரி சிரியென்று சிரித்து மகிழ்வோம்- இன்றும் கூட.
அரைகுறை படிப்பாளி அல்ல,
காக்கா இந்த லிஸ்ட்டை எழுதிய ஆளு மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது போல் தெரியவில்லையே ?
தமிழில் வேறு எந்த மொழியிலும் இல்லாதபடி 247 எழுத்துக்கள் இருந்தால் பாவம் அவரும் என்னதான் செய்வார்.
கக்கா,
இந்த பாட்டியலை ஏழுதியவர் சுப்பர் பார்ட்டி. இந்தா கலா வடிவெலு, சாந்தனம் வீவெக்கெல்லாரையும் துக்கி சப்ட்டுட்டாரு. சேம காமேடீ.
சிரிச்சி சிரீச்சி வாயிரு வழிக்கிது.
இந்திய மொத்த இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 5 சதவீதமே உள்ளது .அப்படி இருந்தபோதிலும் டாலருக்கு நிகரான மதிப்பு ஏன் சரிகிறது என்ற கேள்வி எழும்புகிறது .சர்வதேச அளவில் பெரும்பாலான வர்த்தகம் டாலரில் மேற்கொள்ள படுவதும் இதற்கு காரணம் அமெரிக்க ரிசர்வ் வங்கி அந்நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்த மாதந்தோறும் 8500 கோடி டாலர் மதிப்பில் கடன் பத்திரங்களை வாங்கு கின்றன இதனால் அங்கு பணபுழக்கம் அதிகமாக உள்ளது .இதனை அடுத்து அந்நிய முதலீடுகள் நமது நாட்டில் பெருமளவில் விளக்க தொடங்கி உள்ளன இதுவும் ஒரு காரணம் .
//அந்த முட்டையை ஹோட்டலில் கொடுத்துவிட்டு பதிலாக சுளியன், போண்டா, உளுந்துவடை , மசால்வடை வாங்கி சாப்பிடுவார்கள்.//
காக்கா,
இதைத்தானே அந்தக் காலப் பொருளாதாரத்தில் பண்டமாற்று என்று அழைத்தனர்?
(எங்கே சுத்தினாலும் கடைசியில் இந்தப் பதிவுக்குத் தொடர்பாக கேள்வி கேட்டு வைப்போம்ல?)
அன்புச் சகோ அபுபக்கர்,
//அந்நிய முதலீடுகள் நமது நாட்டில் பெருமளவில் விளக்க தொடங்கி உள்ளன இதுவும் ஒரு காரணம் .//
//பெருமளவில் விளக்க//
'பெருமளவில் விலக்க' என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொருட்குற்றம் ஏற்படாதவரை எழுத்துப் பிழைகள் பெருங்குற்றமன்று.
கக்கா,
இந்த பாட்டியலை ஏழுதியவர் சுப்பர் பார்ட்டி. இந்தா கலா வடிவெலு, சாந்தனம் வீவெக்கெல்லாரையும் துக்கி சப்ட்டுட்டாரு. சேம காமேடீ.
சிரிச்சி சிரீச்சி வாயிரு வழிக்கிது.
காக்கா,
இப்பொழுது இந்திய வங்கிகளில் தங்கத்தைக் கொடுத்து காசாக்கலாம் என்றும்; அப்படி வாங்கப்படும் தங்கத்திற்கு வணிகர்கள் தரும் தொகையை விட அதிகமாகவே தரவும் வங்கிகட்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றனவே; இஃது உண்மையா? அப்படி வங்கிகளால் பெறப்படும் தங்கம் இருப்பில் இருந்தால் இந்தப் பணவீழ்ச்சியிலிருந்து இந்திய ரூபாய் எழுமா?
//எழுத்து கூலியுடன் சீப்புபணியான், அறிப்பு பணியான், பொறி விளாங்காய்/
/இதில் சீப்பு பணியானும், பொறி விளாங்கயும் தெரியும். திண்டு இருக்கேன்.
ஆனா இந்த அறிப்பு பணியானை நான் கண்டதுமில்லை; திண்டதுமில்லை;
பணியான் பேரை கேட்டதும் மசக்கைகாரி மனசு பட்டது போல நானும் அது
மேலே மனசு பட்டுட்டேன். ஒரு அம்பது அறுவது அறிப்பு பணியான் சுட்டு
மச்சானுக்கு கொண்டாந்து கொடுத்துட்டா என்ன கொறஞ்சாபோவும்.
இது என்ன மச்சானுக்கிண்டு ஊருலே ஒலகத்துலே நடக்காத புதுனமா?
ஆமா! சொல்லுற சேதியே எழுதுறதுக்கே சம்பந்திவூட்டுக்கு சீர்கொடுக்குற மாதிரி பணியாமும் பொறி விளாங்கயும் கொடுத்தாங்களே!
கட்டுரை எழுத அனா.நினா. காரங்க எத்தனை கிலோ 'அல்வா' கொடுத்தாங்க?
Sமுஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
செமெ காமெடி
காசா பணமா எத்தனை தொனைக்காள் போட்டா என்ன என்று கஞ்சத்தனம் இல்லாமல் தொனைக்காள் போட்டு இருக்கின்றார்.
// முத்துப் பொட்டை பேய் வர//
இ.அ.காக்கா பார்ட்டி இந்த வரியை மட்டும் சரியாத்தான் எழுதி இருக்கு
அதான் சிலருக்கு முத்துப்பேட்டை (தர்காவில்) பேய் வந்துகிட்டுதானே இருக்கு
//காலார் குலுசு// இந்த காலார் குளுசு விகாரத்தை தஞ்சை தமில் பல்கழை கலைக் கேடுக்கே நுபஈறந்த தமிளுக்கே ஒரு முளுகு கேட்ஷுருக்கும் பிரோம்.
S.மமூதுபாஅஆராக்கு.அதுஓராமுபெடேமுஓ.
//இ.அ.காக்கா பார்ட்டி இந்த வரியை மட்டும் சரியாத்தான் எழுதி இருக்கு
அதான் சிலருக்கு முத்துப்பேட்டை (தர்காவில்) பேய் வந்துகிட்டுதானே இருக்கு//
மன்சூர் கக்கா ஆரம் பிச்சுட்டியாலா?
லேவை மார்ருக்கு தேர்ஞ்சா நிங்க மட்டிக்கிடுவிய
சகமனிதர்கள் மீதான அன்பும், அக்கறையும், சமூகம் சார்ந்த நற்சிந்தனைகளும் விலகிச் சுயநலமும் பொருளியியல் வேட்கையும் முன்னிற்கும் போது ஒவ்வொரு மனித மனமும் இறுகி உறைந்து போகிறது. வாழ்க்கை என்பது “பொருள் வேட்டை” என்று தவறாய் கருதி இயங்கினால் ஏமாற்றம், பயம், எரிச்சல், அவமானம், நிராகரிப்பு, பேரிழப்பு போன்ற விதவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
லேட்டாக வந்தாலும் அப்டேட்டாக இருக்கிறேன் !
மாசக் கடைசி, அதுமட்டுமல்ல நேற்று என்னோட முதலாளியின் தங்கையின் திடீர் மரணம், உடணடி கஃபன் இப்படி தொடர்ந்து பிஸியாகிவிட்டேன் !
நல்ல வேளை இ.அ.காக்கா அவர்கள் கல்யாண கணக்கை தனி மின்னன்சலில் அனுப்பி பதியுங்கள்னு சொல்லவில்லை... அப்படியிருந்திருந்தால் கால்மேல் போட்டிருப்பதை வெட்டியும், கால் போட வேண்டிய இடத்தில் கால் போட்டும் இருக்கப்படும் !:)
பதிவின் சுவையும், அதன் தொடர் பரிமாற்றத்தில் நிகழும் கருத்தாடல்களும் சுவையோ சுவை !
//அந்த முட்டையே ஹோட்டலில் கொடுத்து// கோழி போட்ட முட்டைக்கு ஹோட்டலில் வடே, சுழியன், [செழியன் அல்ல] கொடுத்தான். இது ஒத்துக்க வேண்டிய உண்மைதான்!.
இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகணும்! பள்ளிகொடத்துலே வாத்தியார் செலேட்டுலே கொடுத்த முட்டைக்கு ஹோட்டலிலே என்ன கொடுத்தான்?
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
அன்பின் சகோதரர் கவியன்பன் அவர்களுக்கு,
ஏற்கனவே இரு முறை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி பற்றி எழுதியுள்ளேன். இப்போது நிலலைமை இன்னும் மோசம இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும்.
இன்றைய நிலைமைகளைப் பற்றிய மறு ஆய்வுக் கட்டுரை ஒன்று நெறியாளர் அவர்களின் விருப்பத்துக்கிணங்க தயார் செய்து வருகிறேன். இடையில் அரசு பல தீர்வுகளை பரிசீலித்து வருகிறது.
அனைத்தையும் தழுவிய ஒரு கட்டுரை விரைவில் உங்களின் பார்வைக்கு வரும் இன்ஷா அல்லாஹ்.
2.5% 'ஜகாத்' மூலம் 25% பலன் : 7 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ். ஆனார்கள்!
'ஜகாத் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் நிதியுதவியின் மூலம் படித்த, 7 நபர்கள் உட்பட மொத்தம் 30 முஸ்லிம்கள், இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்வேறு பொறுப்புக்களில் அமர்ந்துள்ளனர்.
முன்னாள் அரசு ஊழியரான 'டாக்டர் செய்யத் ஜஃபர் மஹ்மூத்' என்பவரது தலைமையில், கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, வசதி படைத்த முஸ்லிம்களிடம் 'ஜகாத்' பெற்று கல்விப் பணிகள் உள்ளிட்ட பல சமுதாயப் பணிகளை செவ்வனே செய்து வருகிறது.
இவ்வாண்டு தேர்வான 30 முஸ்லிம் மாணவர்களில், 2.5% ஜகாத் பண உதவியுடன் பயின்ற 7 நபர்கள் பெற்ற வெற்றி என்பது, 25% ஆகும்.
டெல்லியில் உள்ள இஸ்லாமிக் கல்சுரல் சென்டரில் நேற்று முன்தினம் (29/08/13) நடந்த விழாவில்,
முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் கலந்துக் கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு
http://www.zakatindia.org/
https://www.facebook.com/pages/Zakat-Foundation-of-India/119532074808409
நன்றி: முகநூல் வழியாக நண்பர் புதுசுரபி ரஃபீக்
Post a Comment