அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்..
அன்மையில் நடந்து முடிந்த அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் தீர்மானங்கள் உங்களை அனைவரின் பார்வைக்காக மீண்டும் தருகிறோம்.
-- அதிரைநிருபர் குழு
தீர்மானங்கள்
• பொதுவாகக் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரிக்காமல், சமூகத்திற்குப் பயன்படும் எந்தக் கல்வியையும் கல்வியாகவே கருதி, அதன் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் தேவையான முயற்சிகளில் 'அதிரை எஜுகேஷனல் மிஷன்' (AEM) பாடுபடும்.
• அதிரையின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் தாம் செய்யும் ஜுமுஆ பிரசங்கங்களில் கல்வியின் இன்றியமையாத் தன்மையையும் தேவையையும் பற்றி விரிவாகப் பேசவேண்டும் என்று மார்க்க அறிஞர்களையும் வெள்ளி மேடையின் பள்ளிப் போதகர்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
• அதிரை மாணவ மாணவியரிடம் கல்வியின் பரிணாமங்கள் பலவற்றை அறிமுகம் செய்தும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களின் கவனத்தைத் திருப்பச் செய்தும், கல்வியின் நோக்கமே ஒழுக்கம்தான் எனும் அடிப்படையில், அவர்களிடம் ஒழுக்க மாண்புகளை ஓங்கச் செய்தும் 'அதிரை கல்விச் சேவையகம்' (AEM) பாடுபடும்.
• மாணவர்களின் வீணான வேகத்தைக் குறைத்து, விவேகத்தைக் கூட்டி, மார்க்கம், சமுதாயம், மொழி, நாடு ஆகியவற்றின் மீது அவர்களுக்குள்ள கடமைகளை உணரச் செய்து, அவர்களைத் தூய்மை என்னும் அச்சில் வார்த்தெடுக்கும் வகையில், சமூக நல்லிணக்கமும் புரிந்துணர்வும் கொண்ட விவேகமுள்ளவர்களாக மாணவ மாணவியரை உருவாக்க, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் எல்லா விதமான வழிகளிலும் AEM துணை செய்யும்.
• சமூகம் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களை அறியச் செய்து, மாணவ மாணவியர்களின் உரிமைகளையும் கடமைகளையும் அறியச் செய்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நமது இந்த அமைப்பு பாடுபடும்.
• கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மாணவ மணிகளுக்கு முறையான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
• ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற மாநாடுகளையும், கோடைக்காலப் பயிற்சி முகாம்களையும் நடத்தி, மாணவ மாணவியரைப் பக்குவப் படுத்தும்.
• தேர்வுகளில் தோல்வியுற்ற (dropout) மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, கல்வி விற்பன்னர்களைக்கொண்டு அவர்களுக்கு ஊக்கப் பயிற்சிகளையும் பாடப் பயிற்சிகளையும் அளித்துக் கைதூக்கி விடும். இதற்காகவும், இன்னும் இது போன்ற கல்விச் சேவைகளுக்காகவும், Institute of Adirai Educational Mission எனும் பெயரில் கல்விப் பயிற்சியகம் ஒன்றை நிறுவ, இந்த எழுச்சி மாநாட்டைக் காரணமாக்கிச் சேவை புரியத் தொடங்கும்.
• தொலைதூரக் கல்வி நிலையங்களில், வீட்டில் இருந்துகொண்டே படிக்கும் வசதியை, குறிப்பாகப் பெண்களுக்கு, இவ்வமைப்பு நமதூரில் ஏற்படுத்திக் கொடுக்கும்.
• உடற்குறையுற்ற மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசு மற்றும் தனியார் உதவிகள் தொடர்பான ஏற்பாடுகளில் உதவியாக இருந்து, அவர்களின் எதிர்கால வளவாழ்வுக்குத் துணை நிற்கும்.
• படிப்பு நிறைவுற்ற மாணவர்களுக்கு, அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்குத் தம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ளும் வகையில், நுழைவுத் தேர்வுக்கும் நேர்காணலுக்குமான பயிற்சிகளை அளிக்கும்.
• தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளில் தொடர ஆர்வமூட்டி, அதற்கான முன்னேற்பாடுகளில் முனைப்போடு செயல்படும்.
• UPSC, (Union Public Service Commission) TNPSC (Tamil Nadu Public Service Commission) ஆகிய அரசுத் தேர்வுகளை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தி, அதற்கான பயிற்சிகளையும் அளிக்கும்.
• அதிரையின் எல்லாக் கல்வி நிலையங்களிலும் தொடக்க வகுப்புகளில் கணினியுடன் தொடர்புடைய பயிற்சியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
• மாணவ மாணவியரின் ஆங்கில அறிவை விரிவாக்கும் விதத்தில் தனிப் பயிற்சிகளுக்கான வாய்ப்பு வசதிகளை நமது பயிற்சியகம் அமைத்துக் கொடுக்கும்.
• ஊரின் ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ள அரசு நூலகத்தை ஊரின் மையப் பகுதிக்கு மாற்ற நூலகத் துறையை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது; அல்லது, புதிதாக ஒரு கிளை நூலகத்தை ஊரின் மையப் பகுதியில் ஏற்படுத்தித் தர அரசின் நூலகத் துறையைக் கேட்டுக்கொள்கின்றது.
• தற்போது மாணவர்களிடமிருந்து பெறும் கருத்துக் கணிப்புப் படிவங்களைக் கோப்புகளில் பாதுகாத்து, அவைகளை ஆராய்ந்து அவர்களின் படிப்பு முடிந்தவுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அவ்வத்துறைகளை நமது அமைப்பு வலியுறுத்திப் பாடுபடும்.
இன்ஷா அல்லாஹ்!
-- AEM - ADIRAI EDUCATIONAL MISSION