மனித நேயத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியது சிலியில் நடந்த சுரங்க விபத்து. ஆகஸ்ட் 5-ஆம் தேதி,2010. 700 மீட்டர் ஆழமுள்ள தாமிரக் கனிமச் சுரங்கத்தில் மும்முரமான பணியில் 33 பேர். திடீரென்று முழுவதுமாக மூடிக் கொண்டது சுரங்கம். அனைவரும் இக்கட்டான சூழலில். அவர்களை மீட்கப் போராடியது சிலி அரசாங்கம். ஒன்றல்ல, இரண்டல்ல. 68 நாட்கள் நீடித்தது அந்தப் போராட்டம்.
சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. சிறுதுளை வழியாக சுரங்கத்துள் இருந்தவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்தது. மறுபுறம் முடுக்கி விடப்பட்டன மீட்புப்பணிகள். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போடப்பட்டன. அவற்றின் வழியே இவர்களை வெளியே கொண்டுவரத் தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு சாதித்தது சிலி அரசு. தொழிலாளர்கள் மீது கரிசனம் கொண்டு சிலி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மெய் சிலிர்க்க வைத்தன.
*****
நியூசிலாந்தில் நடந்த சுரங்க வெடிவிபத்தில் 29 தொழிலாளர்கள் பலியாகினர். கிரேமவுத் எனுமிடத்தில் உள்ள பைக் ஆற்றின் அருகே நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. அங்கு தான் அந்த விபத்து நடந்தது. உதவிக் குழுவினர் விரைந்து சென்றும் எவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.
விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது அரசாங்கம். விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்தின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.பாடசாலைகள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.
*****
ஐஸ்லந்தில் உள்ளது எயா-ஃபியட்லா-யோக்குட் பனிமலை. திடீரென்று வெடித்துச் சிதறியது அதன் அடியில் உள்ள எரிமலை. அனல் தெறிக்கும் தீப்பிழம்பு எரிமலையிலிருந்து வெளி வந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை மற்றும் சாம்பல் காற்று மண்டலத்தை அடைத்தது. வானத்தில் 6 ஆயிரம் மீட்டர் முதல் 11 ஆயிரம் மீட்டர் உயரத்திற்குப் பரவியது சாம்பல். எரிமலை வெடிப்பால் கிளம்பிய 'லாவா' எரிமலைக் குழம்பு பனிமலையின் கட்டிகளை தண்ணீராக உருகி ஓடச் செய்தது.
சாம்பல் புகை காரணமாக ஐரோப்பாவிலிருந்து புறப்படும், அந்த வட்டாரத்துக்குச் செல்லும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஐரோப்பாவில் மட்டுமல்ல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்துக்குக் கடும் பாதிப்பு. ஏராளமான பயணிகள் விமான நிலையங்களிலேயே தங்க நேரிட்டது. இயல்பு நிலை திரும்ப ஒரு வாரமாகியது. இருப்பினும் விமான நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர் இழப்பு.
*****
இந்தோனேசியாவுக்கு இவ்வாண்டு சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். வேதனையின் பிடியில் தவித்துப் போயினர் இந்தோனேசிய மக்கள். அக்டோபரில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. அதிர்வின் அளவு ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு. தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக போராடியது இந்தோனேசிய அரசாங்கம். பட்டகாலிலேயே படுவது போல வந்தது இன்னொரு சோதனை.
ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின.
எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
*****
ஹைத்தியில் நிகழ்ந்த பூகம்பம் உலகத்தை உலுக்கியது. ஹைத்தியில் அடுத்தது சோம்பல் முறித்து பூமி. ரிக்டர் அளவுகோலில் ஆறு முதல் எட்டு புள்ளிகள் வரை பதிவாகின அதிர்வுகள்.
போர்டா பிரின்ஸ் நகரம் மயான பூமியாகக் காட்சியளித்தது. 200 ஆயிரத்துக்கும் அதிமானோரைப் பலி கொண்டது நிலநடுக்கம். காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையின் வெளியே காத்துக் கிடந்தனர். போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் தவித்துப் போயினர். ஆக மோசமான பேரழிவு என்று வரையறுத்தது உலக நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளும் ஹைத்திக்கு உதவிக்கரம் நீட்டின.
*****
கம்போடியாவின் பாரம்பர்ய தண்ணீர்த் திருவிழா சோகமயமானது இவ்வாண்டு. தலைநகர் புநோம்பென்னில் நடந்தது அந்தத் திருவிழா. மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் மக்கள். திடீரென்று கிளம்பியது ஒரு பீதி. விழா நடந்த இடத்திலுள்ள ஆற்றுப் பாலத்தில் மின்கசிவு என்பது செய்தி. அலறியடித்துக் கொண்டு ஓடியது கூட்டம். ஒவ்வொருவரும் முந்திச் செல்லும் முனைப்பில் கடும் நெருக்கடி. விளைவு 45 உயிர்கள் பலி. திருவிழா நடந்த ஆற்றுப் படுகை மயானக் கரையானது. கம்போடிய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய சோக நிகழ்வாக இதைப் பதிந்து கொண்டது காலம்.
*****
எப்போதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது பயணம். ஆனால் மங்களூர் விமானத்தில் வந்தவர்களுக்கு அதுவே இறுதிப் பயணம். துபாயில் இருந்து வந்தது அந்த ஏர் இந்தியா விமானம். மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து. ஓடுபாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது விமானம். பலியானவர்களின் எண்ணிக்கை 158. எட்டுப் பேர் உயிர் தப்பினர்.
விமான நிலையத்தில் இருந்தும், மங்களூரில் இருந்தும் மீட்புப் படையினர் வருவதற்குள்ளாகவே பலர் உயிரிழந்தனர். பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிவிட்டன. விமானி தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் அவருக்குப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. மங்களூரில் விமானம் தரையிறங்கிய போது அவர் ஓடுபாதையைக் கவனிக்கத் தவறி விட்டார். கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருந்த தகவல்களைக் கொண்டு அந்த விவரம் சேகரிக்கப்பட்டது.
*****
விக்கி லீக்ஸ் - இந்த ஒற்றைச் சொல் உலக நாடுகளை பதைபதைக்க வைத்துள்ளது. விக்கி லீக்ஸ் வெளியிடும் ஒரு செய்தி சரியா? பிழையா? என்று ஆராய்வதற்குள் அடுத்த சய்தி வந்து விழுகிறது. வல்லரசுகள் மட்டுமல்ல... மிகச் சிறிய நாடுகள் கூட கலங்கிப் போயிருக்கின்றன. ஆதாரப் பூர்வமான ரகசியச் செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பது இமாலயக் கேள்வி.
முதலில் அமெரிக்க அரசின் பல ரகசிய ஆவணங்களை இணையம் வழியே கசியவிட்டது விக்கி லீக்ஸ். அதைத் தொடர்ந்து படிப்படியாக பல நாடுகளில் இரகசியத் தகவல் பரிமாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. இதனால் உலக நாடுகளுக்கிடையிலான உறவில் சலசலப்பு.
‘விக்கி லீக்ஸ்’ லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம். முக்கியமான செய்திகளையும், தகவல்களையும் சாதாரண மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கில் அவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அனைத்துலக நாடுகள் கம்பி வழிச் சேவை மூலம் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அப்படி ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் பல படிப்படியாக இணையத்தில் வெளியிடப்படுகின்றன. அதில் முக்கிய அம்சம், தகவல்களும், செய்திகளும் ஆதாரத்துக்குரிய மூல ஆவணத்துடன் வெளியிடப்பட்டள்ளன.
ஜுலியன் அஸாஞ்ச் - விக்கி லீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர். அவரே அந்தத் தளத்தின் முதன்மை ஆசிரியர். சுவீடனில் தொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஜுலியன் அஸான்ஞ்ச் அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் கடுமையான நிபந்தனைகளுடன் 312 ஆயிரம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜுலியன் அஸான்ஜ் ஆவணங்களை வெளியிடும் தம் பணி தொடரும் என்றார்.
விக்கி லீக்ஸ் இணையத் தளத்தை முடக்குவதில் கடும் முனைப்புக் காட்டியது அமெரிக்கா. தம் மீது குற்றம்சாட்ட அத்தனை ஆயத்தங்களையும் அமெரிக்கா செய்து வருவதாகச் சொன்னார் ஜுலியன் அஸான்ஜ். பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரை தன்னிடம் ஒப்படைக்கக் கோருகிறது ஸ்வீடன். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வரவில்லை. விக்கி லீக்ஸ் எந்த நிமிடத்தில் யாரைப் பற்றிய செய்தியை வெளியிடும் என்பது புரியாத புதிராகத் தொடர்கிறது.
****
அமைதிக்காகப் பாடுபடும் நபர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் நோபெல் அமைதி பரிசு வழங்கப்படுகிறது. இவ்வாண்டு சீனாவச் சேர்ந்த கலை, இலக்கிய விமர்சகர் திரு. லியூ சியாவ் போவுக்கு (Liu Xiaobo) அந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசுக்காக 237 நியமனங்கள் குவிந்தன. அதில் திரு. லியூ சியாவ் போவின் பெயரும் இருந்தது. அந்தத் தகவல் வெளியானவுடனேயே அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படக் கூடாது என்று நார்வேயிடம் கேட்டுக் கொண்டது சீனா. இருப்பினும் திரு.லியூ சியாவ் போவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டிருப்பதால் சீற்றமடைந்தது சீனா.
மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நேர்மையான தேர்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய உரிமை ஆவணத்தை, (சார்ட்டர் 08) சாசனம் என்ற பெயரில் சக ஆதரவாளர்களுடன் இணைந்து உருவாக்கினார் திரு. லியூ.
சீன அரசியல், மக்களாட்சி முறைக்கு மாறுவதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பது சாசனத்தின் முக்கியச் சாராம்சம். அந்த உரிமைப் பிரகடனத்தில் ஆயிரக்கணக்கான சீனர்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். இந்தச் செய்கையை நேரடி மோதலாக எடுத்துக்கொண்டது சீன அரசாங்கம்.
2008 டிசம்பரில் அந்தப் பிரகடனம் வெளியிடப்பட இருந்த நிலையில் திரு. லியூ கைது செய்யப்பட்டார். இந்த சாசனத்தையும் (சார்ட்டரையும்) வேறு புரட்சிகர அரசியல் கட்டுரைகளையும் எழுதி, ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது திரு.லியூ மீதான முக்கியக் குற்றச்சாட்டு. 2009 டிசம்பர் 25ல் பெய்ஜிங் நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. அமைதிக்காக வழங்கப்படும் நோபெல் பரிசு சர்ச்சை அலைகளைக் கிளப்பியது வேடிக்கையான வினோதம்.
****
மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நேர்மையான தேர்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய உரிமை ஆவணத்தை, (சார்ட்டர் 08) சாசனம் என்ற பெயரில் சக ஆதரவாளர்களுடன் இணைந்து உருவாக்கினார் திரு. லியூ.
சீன அரசியல், மக்களாட்சி முறைக்கு மாறுவதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பது சாசனத்தின் முக்கியச் சாராம்சம். அந்த உரிமைப் பிரகடனத்தில் ஆயிரக்கணக்கான சீனர்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். இந்தச் செய்கையை நேரடி மோதலாக எடுத்துக்கொண்டது சீன அரசாங்கம்.
2008 டிசம்பரில் அந்தப் பிரகடனம் வெளியிடப்பட இருந்த நிலையில் திரு. லியூ கைது செய்யப்பட்டார். இந்த சாசனத்தையும் (சார்ட்டரையும்) வேறு புரட்சிகர அரசியல் கட்டுரைகளையும் எழுதி, ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது திரு.லியூ மீதான முக்கியக் குற்றச்சாட்டு. 2009 டிசம்பர் 25ல் பெய்ஜிங் நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. அமைதிக்காக வழங்கப்படும் நோபெல் பரிசு சர்ச்சை அலைகளைக் கிளப்பியது வேடிக்கையான வினோதம்.
****
Currency War என்னும் நாணயப் போர் பற்றி இவ்வாண்டு அதிக விவாதம். உலகின் மற்ற நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். மற்ற நாடுகளில் அப்படியல்ல. நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் சீனாவின் போக்கு தங்களுக்குப் பாதகம் என்றது அமெரிக்கா. அதை ஒப்புக் கொள்ள மறுத்தது சீனா. உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் நடந்தது. நாணயப் போர் பற்றிய பீதியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.
****
தொடரும்...
-- ஸதக்கதுல்லாஹ்
6 Responses So Far:
EXCELLENT ! Please continue...
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல இன்ரஸ்டிங்க போய்கிட்டு இருக்கு
தொடருங்கள்
செய்தி சொல்லும் லாவகம் மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. சகோதரரின் கிரகிக்கும் திறனும் வாக்கிய கோர்வையும் பிரமிக்க வைக்கின்றன. பத்திரிக்கைத் துறையில் தொடர்புள்ளவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்.
illustrated photographs amazing too!
அஸ்ஸலாமு அலைக்கும்,
சபீர் காக்கா, நண்பர் ஸதக்கத்துல்லாஹ் ஊடகத்துறையில் தான் உள்ளார். சிங்கப்பூரில் தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலைப்பார்த்துவருகிறார்.
அட ! நம்ம ஸதக்கத்துல்லாஹ் ! தேனீ உமர் பற்றி சிங்கை வானொளியில் ஆவனத் தகவல் நிகழ்ச்சி ஒலிபரப்புவதற்கும் அதற்காக தன்னுடைய குரலால் எங்கள் யாவரின் உள்ளங்களை சுண்டியிழுத்தவரும் இவரே !
அஹா...அருமை. எளிதில் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகள்,தேவையான புகைப்படங்கள் ஊடகவியாளாலர் என்று அடையாளம் காட்டும் தொகுப்பு. உங்களின் சுண்டியிலுக்கும் குரலை சுவாசித்தோம்; இப்போது வாசிக்கிறோம்.
ஸதக்கத்துல்லாஹ் காக்கா,ஊடகத்துறை உடைக்கமுடியாட இரும்புக்கோட்டை என்று நினைக்கிறார் நம்மவர். உங்கள் ஊடக அனுபவங்களை அதிரைநிருபரில் தொடர் எழுதுங்களேன்.கடப்பாறையை முழுங்கிவிட்டு கசாயத்தை குடிக்காமலேயே செறிக்கவைக்கும் ஆற்றல் நம்மிடமுண்டு என புரியவையுங்கள்.ப்ளீஸ்!
Post a Comment