அதிரைப் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடந்து முடிந்து ஓய்வான நேரமிது. அதிரை வரலாற்றில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு சேர்மன் தேர்தல் நடந்தது. அதில் இருவர் மட்டுமே போட்டியிட்டனர். ஒருவர் பழைய சேர்மன் அபுல்ஹசன் மரைக்காயர். அவரை எதிர்த்து, அவருடைய பங்காளியான ‘சாவன்னா’ என்ற சாகுல் ஹமீது மரைக்காயர்.
ஊர் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் போலும். அதனால், வெற்றிக் கனி ‘சாவன்னா’ வீட்டுத் தோட்டத்தில் விழுந்தது!
அபுல்ஹசன் மரைக்காயர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவருடைய அந்தரங்கச் செயலர் சாமிநாதையர் தலையைச் சொறிந்துகொண்டு பவ்யமாக அவருக்கருகில் வந்து நின்றார்.
“என்னா ஐயரே இப்ப என்ன செய்யலாம்?” என்று கேட்டார் அபுல்ஹசன் மரைக்காயர்.
“கவலைப் படாதீங்க; அடுத்த காரியத்தை நான் பார்த்துக்கிறேன்” என்றார் ஐயர். தனது இடத்திற்குத் திரும்பிச் சென்ற ஐயர், சில நிமிடங்களில் கையில் டிம்மி பேப்பர் ஒன்றை வைத்துக்கொண்டு மரைக்காயர் முன் வந்து நின்றார். பேப்பர் கை மாறிற்று.
அதில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்தவுடன், அபுல்ஹசன் மரைக்காயரின் புருவங்கள் உயர்ந்தன! “என்னங்காணும்...?” என்று இழுத்தார் மரைக்காயர்.
“அதெ என்னட்டே விடுங்க. டிரைவரை என்னோடு வரச் சொல்லுங்க” என்றார் ஐயர்.
ஐயரைச் சுமந்துகொண்டு அபுல்ஹசன் மரைக்காயரின் கார் விரைந்தது, தஞ்சையை நோக்கி. தஞ்சைக் கலெக்டரிடம் விஷயத்தை எடுத்துரைத்தார் ஐயர். அவரும் அதற்கிசைந்து தன் கையெழுத்தையும் முத்திரையையும் வைத்து, வந்தவரைத் திருப்பி அனுப்பினார்.
வெற்றிக் களிப்புடன் வாடிக்கு வந்து சேர்ந்தவரை மரைக்காயர் வினாக்குரியுடன் வரவேற்றார். “முடிஞ்சுடுத்து” என்றார் ஐயர். அடுத்து என்ன என்பது போல் ஐயரைப் பார்த்த அபுல்ஹசன் மரைக்காயரிடம், “அதையும் நானே பார்த்துக்கறேன்” என்று கூறிய ஐயர், சாவன்னா வாடியை நோக்கி விரைந்தார்.
“என்ன சாமிநாதையர் இந்தப் பக்கம்?” என்று கேட்ட சாவன்னா மரைக்காரிடம், “எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுத்து. நீங்க கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி” என்று கூறிய ஐயர், பேப்பரை அவரிடம் நீட்டினார். அதற்காகவே காத்திருந்தவர் போல் அவரும் தன் ‘கையொப்பத்தை’ப் போட்டார்.
‘வணக்கம்’ போட்டுவிட்டுப் புறப்பட்ட ஐயர், அபுல்ஹசன் மரைக்காயரின் முன் வந்து நின்று, அடுத்த வெற்றிக் களிப்பைக் காட்டினார்.
அப்படி என்ன அந்தப் பேப்பரில் எழுதியிருந்தது?
“மதிப்புக்குரிய கலெக்டர் ஐயா அவர்களுக்கு, அதிராம்பட்டினம் பஞ்சாயத்து போர்டின் சேர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற சாகுல் ஹமீத் எழுதிக்கொள்வது. மக்கள் என்னை ஏக மனதாகத் தேர்ந்தெடுத்திருந்தாலும், நான் சேர்மன் பொறுப்பை வகிக்கத் தகுதில்லாதவன் என்று கருதுகிறேன். ஆதலால், பழைய சேர்மன் அபுல்ஹசன் மரைக்காயரையே அந்தப் பொறுப்பில் தொடரும்படி தாங்கள் உத்தரவு இடும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நான் இதை மனப்பூர்வமாகத்தான் எழுதியுள்ளேன்.”
படிப்பறிவில்லாத சாவன்னா ஏமாறிப் போனார்! கொஞ்சம் படித்த அபுல்ஹசன் மரைக்காயர் தந்திரமாகப் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்!!
தந்திரமாகச் சேர்மன் பதவியைத் தட்டிப் பறித்த அபுல்ஹசன் மரைக்காயர் நல்லது செய்யாமலும் இல்லை. தனக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தை அழகிய பூங்காவாக்கி, அதற்கு ‘ஹசன் வானொலிப் பூங்கா’ என்று பெயரும் கொடுத்து, பஞ்சாயத்து போர்டிடம் ஒப்படைத்தார். பல்லாண்டுகள் அது அழகிய பூங்காவாகவும் பொது வானொலி நிலையமாகவும் அரசுப் பொது நூலகத்தின் இடமாகவும் திகழ்ந்தது.
பல்லாண்டுகள் கழிந்த பின், அப்பூங்கா சமூக விரோதிகள் சிலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, குடியும் விபச்சாரமும் இரவு நேரத்தில் நடக்கும் இடமாக ஆகிப் போயிற்று! இதைக் கண்டு கவலை கொண்ட இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் தத்தெடுத்துப் பள்ளிக்கூடத்தை அங்கு நிலைப் படுத்திற்று. அதற்காக இன்றுவரை அதிரைப் பஞ்சாயத்து போர்டுக்கு வரியும் வாடகையும் செலுத்தி வருகின்றது இமாம் ஷாஃபிப் பள்ளி நிர்வாகம்.
இந்த இடத்தைத்தான், உள்ளூர் பாசிச அமைப்பான பி ஜே பி தன் தேர்தல் வாக்குறுதியாக, “பூங்காவை மீட்டெடுப்போம்” என்று சூளுரைத்தது. நல்ல வேலை, அவர்கள் வெற்றி பெறவில்லை!
- அதிரை அஹ்மது
8 Responses So Far:
உண்மைகள் சுல்லென்று கிள்ளியும் விடும் !
அல்லாஹ்வின் உதவியால், இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியின் நிர்வாம் அந்த இடத்தை பாதுகாத்து பயனுள்ளதாக பயன்படுத்தியது அல்ஹம்துலில்லாஹ் !
//நல்ல வேலை, அவர்கள் வெற்றி பெறவில்லை! //
அவர்களின் வெற்றி மறைமுகமாக இருந்தாலும், அதிரையில் ஏதும் அவர்களால் சாதிக்க முடியாது ! அதற்கு நாம்மவர்களும் விடப்போவதாக இல்லை இது தின்னம்.
நல்லதொரு நம்மூரு வரலாற்று செய்திகள்.ஜஸாக்கல்லாஹ்.
இந்த BJP(காவி) நம்மர்களுக்கு கிடைத்ததை பறிப்பதும் சேரவேண்டிய விகிதாச்சாரத்தை தடுப்பதுமே குறியாக இருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நம்மிடையே தேவை ஒற்றுவை ஒன்று மட்டுமே.
அஸ்ஸலாமு அழைக்கும்
பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் பதவி ஏற்கும் போதை சுகாதாரத்தை பற்றி தான் பேசினார்கள். அது போல் அவர்கள் அதிரையை சுகாதாரமாக ஆக்கி காட்ட வேண்டும் என்று அவர்களுடைய குறிக்கோள். பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் வாடைகைக்கு வண்டி எடுத்து சுகாதார பணியை நிறைவேற்றுகிறார். அவருடைய பணி சிறக்க இறைவனிடம் துஆ செய்யவும் யாரும் வந்தாலும் அதிரை நகருக்கு நல்லது செய்தால் சரிதான்.
நல்ல வரலாற்று செய்தி; என்றாலும் அப்போவே நம்ம ஆளுக சேர்மன் ஆவதற்கு நிறைய உள்குத்து வேலை பார்த்தாக என்பதையும் சொன்னது ஹைலைட்
politics...uph!!!
Eid Mubarak
அதிரை செய்தி
http://adiraiseithi.blogspot.com/2011/11/blog-post_06.html
இது எப்போ புது செய்தியா இருக்கு, பகிர்வுக்கு நன்றி
Excellent....it is very memorable story and most of them knows in our community who passed above 50 years.
Post a Comment