Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2011 | , , ,

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.

அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!
அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.


6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஹேப்பி நியூ இயர் '1433'

மாதத்திற்கேற்ற மகத்தான பதிவு.ஜஸாக்கல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறப்பான 4 மாதங்களில் முஹர்ரமும் ஒன்று.

இதே முஹர்ரம் மாதத்தின் முதல் வாரத்தை ஷியாக்கள் துக்க நாட்களாக கருதி ஒப்பாரி வைப்பதும், தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்வது போன்ற பித் அத்துக்கள் இன்னும் ஒழிந்த பாடில்லை.

முஹர்ரம் மாதத்தில் நடந்தேரும் பித் அத்களிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக.

தெளிவான விளக்கம் கொண்ட பதிவை வெளியிட்ட சுவனத்தென்றல் இணையத்தளத்திற்கு மிக்க நன்றி.

Shameed said...

சரியான நேரத்தில் பதியப்பட்ட நல்ல விளக்கங்கள்

Anonymous said...

//முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!//

ஒன்று இக்லாஸ் என்னும் மனத்தூய்மையுடன் செய்தல் அவசியம்.
மற்றொன்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எடுத்து இயம்பிய வழிமுறையில் செய்தல்.

அப்துல்மாலிக் said...

இந்த மாதத்தின் மகத்துவம் பற்றி நிறைய தெரிந்துக்கொண்டேன், நன்றி

அனைவருக்கும் ஹிஜ்ரி புதுவருட நல் வாழ்த்துக்கள்...!

எம்மை படைத்த இறைவா, இனி வரும் காலங்களில் எம் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், செல்வ செழிப்பையும் கொடுத்து, மேலும் ஒத்த கருத்துடைய சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு வறுமையில்லா சமுதாயமாக மாற்ற அருள்புரிவானாகவும், ஆமீன்

தலைத்தனையன் said...

ஷியாக்கள் முஹர்ரம் மாதத்தில் தங்களை தாங்களே வெட்டிக்கொ(ல்)ள்வதும் கொத்திக்கொ(ல்)ள்வதும் மட்டுமல்ல பித்-அத். ஷியா இசம் மே பித்-அத் தான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு