Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 7 2

அதிரைநிருபர் | November 13, 2011 | , , ,

பூர்வீகத்திற்குத் திரும்பிய புனிதவதி !

"மனித உருவில் இருந்தவர்களைக் கடவுளாக வணங்கக் கூறும் மதங்களுக்கு இடையில், கண்ணுக்குப் புலப்படாத, வல்லமையும் கருணையும் நிரம்பிய அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூறும் இஸ்லாம் என் மனதுக்குப் பிடித்திருந்தது" எனக் கூறுகின்றார் கஸ்ஸானாவாக இருந்து, ஆயிஷாவாக மாறிய இப்புனிதவதி.

சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 'மாணவர் மாற்றுத் திட்டம்' (students exchange program) அடிப்படையில், சவுதி மாணவி ஒருவர் அமெரிக்காவிலும், அமெரிக்க மாணவி சவுதியிலும் மேற்கல்வி கற்கும் வாய்ப்பில் வந்தவர் இந்த அமெரிக்க மாணவி. பல்லாண்டுகளாகப் பார்க்கக் கிடைக்காதிருந்த புனித இறையில்லமாம் கஅபாவைக் கண்ணாரக் கண்டு களிப்புற்ற இவர், தான் வந்த 1977 ஆம் ஆண்டிலேயே தன் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார்!

ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகத் தனது மேல் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் அப்துல்லாஹ் உமர் நஸீஃப் அவர்கள். இவர் பின்னாட்களில் மக்காவின் 'ராபிதத்துல் ஆலமில் இஸ்லாம்; என்ற அனைத்துலக இஸ்லாமியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், அதன் பின்னர் சவுதி அரசாங்க ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மன்னர் பல்கலைக்கழகத்தில் ஆயிஷாவுக்கு நிலை கொள்ளவில்லை ஏன் தெரியுமா?

ஜித்தாவுக்கு மிக அண்மையில் இருக்கும் மக்காவில் உள்ள 'ஊம்முல் க்ரா' பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இஸ்லாமிய சரீஅத்தைக் கற்று, அதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற பேரவா இவருக்கு!

டாக்டர் நஸீஃபின் தங்கையான டாக்டர் ஃபாத்திமா நஸீஃப் அவர்களின் அன்பு அரவணைப்பில் ஆயிஷாவின் இஸ்லாமியக் கல்வி இனிதே தொடடங்கிற்று. அங்குப் பயின்று கொண்டிருந்தபோதே, பகுதி நேரத்தில் தனது தாய் மொழியான ஆங்கிலத்தை மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்து வந்தார் ஆயிஷா.

அமெரிக்காவிலிருந்து சவுதிக்கு வருமுன்னரே அரபு மொழியின் அழகிஅழனால் கவரப் பெற்று, இரண்டாண்டுகள் முயன்று அமெரிக்காவிலேயே அரபி மொழியைக் கற்றார் ஆயிஷா. அதற்குப் பிறகுதான் சவுதிக்கு வந்து, அரபியை ஆழமாகவும் மார்க்கக் கல்வியைச் சிறப்பாகவும் கற்கத் தொடங்கினார்.

அமெரிக்காவில் இருந்த போது, 'ப்ன்னாட்டுக் கல்வி வளர்ச்சி' என்ற பிரிவைத் தேர்ந்து, முதுகலை (எம்.ஏ) பட்டம் பெற்றுப் பின்னர் கடற்படைப் பயிற்சியும் பெற்றார். இவற்றுக்கு இடையில், பிரெஞ்சு, இத்தாலி, ரஷ்யன் ஆகிய மொழிகளையும் கற்றுக் கொண்டார்.

இத்தனைக்கும் பிறகு அவருக்கு கிடைத்த வேலை என்ன தெரியுமா ? அமெரிக்கத் தொலைகாட்சியில் ஓர் அடிமட்டப் பணி! காரணம்? இவர் கறுப்பி இனத்தவர்! அப்போதான் அமெரிக்காவின் நைஜீரியத் தூதராக அதிரகாரி ஒருவரை இரண்டாம் கணவராக மணந்து கொண்டார்.

ஆயிஷா இஸ்லாத்தை தழுவியது, அமெரிக்காவிலோ சவுதியிலோ அன்று! நைஜீரியாக் கணவரை மணமுடித்த பிறகு, 1969 இல அந்நாட்டு மருமகளாக முதன் முதலாக நைஜீரியாவுக்குச் சென்றபோது, அங்கே இருக்கும் 'ஹவ்ஸா' இனத்தின் கிராமப்புறத்து மக்களின் கள்ளம் கபடமற்ற தன்மையாலும், அவர்களின் பாரம்பரியப் பழக்க வழக்கங்களாலும், அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது இருக்கும் பற்றுதலாலும் கவரப் பெற்று, முஸ்லிமாக மாறினார்!

அமெரிக்கக் கறுப்பர்களின் முன்னோர் ஆப்பிரிக்க முஸ்லிம்கள்தாம் என்று கேட்டறிந்தபோது, ஏற்கனவே இஸ்லாத்தைப் பற்றிய சிறியதோர் அறிமுகமும், இவர் கற்ற அரபி மொழி, கிராமப்புறத்து முஸ்லிம்களின் அரவணைப்பு எல்லாம் சேர்த்து, இவரை இன்ப புரிக்கே இட்டுச் சென்றது அதுதான் இஸ்லாம் எனும் இணையற்ற நேர்வழி!

இஸ்லாத்தைப் பற்றிய சிறியதோர் அறிமுகம் இவருக்கு அமெரிக்காவிலேயே கிடைத்திருக்கிறது. கறுப்பினத்தைச் சேர்ந்த எலிஜா முஹம்மத் என்பவர் தன்னை 'நபி' என்று கூறிக் கொண்டு, ஒரு வித்தியாசமான இஸ்லாத்தை அமெரிக்காவில் பரப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் தான், சவுதி அரேபியாவிலிருந்து ஃபஹத் முஹம்மத் என்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் குர்ஆன் - நபிவழி அடிப்படையிலான தூய்மையான இஸ்லாத்தை அமெரிக்காவில் பிரச்சாரம் செய்ய வந்தார். அந்த நேரத்தில் கஸ்ஸானாவக இருந்த ஆயிஷா, அல்குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை வாங்கிப்படித்தார். தூதரக அதிகாரியைத் துணைவராகக் கொண்டிருந்ததால், கஸ்ஸானாவுக்குப் பன்னாட்டு முஸ்லிம்களைப் பற்றியும் அங்குள்ள இஸ்லாத்தைப் பற்றியும் அறியும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு அனுபவங்களும், பின்னர் நைஜீரியாவில் இவர் இஸ்லாத்தைத் தழுவுதவதற்கான பின்புலமாக அமைந்தது.

இந்தியா, இந்தோனேசியா, பாக்கிஸ்தான், சவுதி அரேபியா முதலிய நாடுகளில் தூதரக அதிகாரி (Diplomat) கணவரோடு சுற்றுப்பயணம் செய்த ஆயிஷா, பல அனுபவங்களைச் சுமந்த அற்புதப் பெண்ணாக இருக்கிறார்.

இநியாவில் இருந்தபோது, இங்குள்ள இஸ்லாமிய அறிஞர்களுடனும், இந்துமத அறிஞர்களுடனும் தான் செய்த கருத்துப் பரிமாற்றங்கள் பற்றியும், குறிப்பாகச் சென்னை மவுண்ட் ரோட்டில் இருக்கும் ;ஹிக்கிங்க்பாதம்ஸ்' புத்தகக் கடையில் இஸ்லாமிய நூல்கள் வாங்கியாதையும் மறக்காமல் நினைவு கூறுகின்றார் ஆயிஷா!

"நானும் என் கணவரும் மீண்டும் 1982 - 83 இல் சவுதி அரேபியாவுக்குச் சென்றோம். அப்போது, நான் முன்பு மாணவியாகக் கல்வி பயின்ற மக்காவின் 'உம்முல் குரா; பல்கலைக்கழகம் எனக்கு மதிப்பளித்துப் பேருரை ஒன்றை ஆற்றப் பணித்தது. இதனை என் வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேராகக் கருதுகின்றேன்" என்று மகிழ்ந்து கூறுகின்றார் ஆயிஷா.

சவுதியிலிருந்து லிபியாவுக்குச் சென்ற ஆயிஷா, அங்கிருக்கும் திருப்போலி பல்கலைக் கழகத்திலும் பென்காஸி பல்கலைக்கழகத்திலும் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அங்கிருந்து அமெரிக்கா திரும்பியவர், தனது பிறப்பிடமான நியூயார்க்கில் நிரந்தரக் குடியிருப்பை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார்.

இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு, இவருக்கு குறிப்பிட்ட எந்த மதமும் பற்றுடையதாக இருக்கவில்லை. என்றாலும், அரபி மொழியின் மீது இவருக்கு ஓர் ஈர்ப்பு இருந்து வந்தது. அதனைப் படிப்பதற்கு முன் இத்தாலி, பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய மொழிகளைக் கற்றார்.

1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய மொழி கற்கத் தொடங்கியிருந்த நேரம் அது. அப்போது உள்ளத்தில் ஓர் உந்துதல் உணர்வு ஏற்பட்டது: 'நீயோ உண்மையான இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறாய். இந்நிலையில், நீ ஏன் ரஷ்ய மொழியைப் படிக்கிறாய்? இஸ்லாமிய மார்க்கத்தின் வேத மொழியான அரபியைக் கற்கத் தொடங்கினால் என்ன?'

உடனே, தனக்கு ரஷ்ய மொழி கற்பித்த ஆசிரியையிடம் சென்று, "அந்நிய மொழிகளுள், எனக்கு அரபி மொழியின் மீது ஆர்வம் வந்துள்ளது. எனவே, நான் அதற்கு மாறிக் கொள்கிறேன்" என்று பணிவாகக் கூறி, அன்றிலிருந்து அரபியைக் கற்கத் தொடங்கி, 'அரபியால் கவரப் பெற்று அருமையான வழியைத் தேடிக் கொண்டவர்' ஆனார்!

தற்போது, கணவரை இழந்து விதவையாக, மூன்று மகன்களின் தாயாக நியூயார்க் நகரில் வசித்து வருகின்றார் ஆயிஷா, ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவ மாணவியர்க்கு எளிதாக இஸ்லாத்தை விளக்கும் பாடநூல்களை இயற்றி வருகிறார், ஆயிஷா கஸ்ஸானா மட்டோஸ் நாப்லிசி.


தொடரும்.. 
- அதிரை அஹ்மது


இந்த அருமையான புத்தகத்தை நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக பதிந்திட அனுமதி தந்த IFT நிறுவனத்தாருக்கு எங்கள் உளமார்ந்த நன்றியும் துஆவும் என்றும் நிலைத்திடும் இன்ஷா அல்லாஹ்...

2 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஆயிஷா இஸ்லாத்தை தழுவியது, அமெரிக்காவிலோ சவுதியிலோ அன்று! நைஜீரியாக் கணவரை மணமுடித்த பிறகு, 1969 இல அந்நாட்டு மருமகளாக முதன் முதலாக நைஜீரியாவுக்குச் சென்றபோது, அங்கே இருக்கும் 'ஹவ்ஸா' இனத்தின் கிராமப்புறத்து மக்களின் கள்ளம் கபடமற்ற தன்மையாலும், அவர்களின் பாரம்பரியப் பழக்க வழக்கங்களாலும், அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது இருக்கும் பற்றுதலாலும் கவரப் பெற்று, முஸ்லிமாக மாறினார்!//


அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாம் வளர்வதற்கு மிகப் பெரிய பிரச்சாரமேல்லாம் பயன் தருவதற்கு மேல் நம் நன்னடத்தையே இஸ்லாத்தை தானாக வளரும் என்பதற்கு 'ஹவ்ஸா' இன மக்களின் இஸ்லாமிய உணர்வு ஒரு எடுத்துக்காட்டு.

சகோதரரி ஆயிசா கஸ்ஸானி அவர்களை பற்றிய தகவல் மிக அருமை. புதிய தகவல்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோதரி ஆய்சா அவர்கள் பற்றிய நல்ல பல தகவல் தொகுப்பு.
அவர்களின் சமுதாயச் சேவை சிறக்க துஆசெய்வோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு