Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 16 28

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2012 | , ,

இஸ்லாமிய வரலாற்றில் – குறிப்பாக, நபி வரலாற்றில் – மக்கா வெற்றி என்பது, முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றி மட்டுமன்று; மானம் காத்த வெற்றியுமாகும்! ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இஸ்லாம் புத்தமைப்புச் செய்யப்பெற்ற தொடக்க காலத்தில், அவர்களின் உண்மை மார்க்கத்தில் இணைந்த ஒரு சிலர் நுகர்ந்த துன்பங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் எழுதத் துணிந்தால் நம் கண்கள் குளமாகும்! 


யாசிர் என்ற யமன் நாட்டு அடிமையைக் கயிற்றால் பிணைத்து அடித்தார்கள்!  அதிலும் ஆறுதல் அடையாத மக்கத்துக் குறைஷிகள், இறுதியாக அவரின் இரு கால்களையும் இரண்டு ஒட்டகைகளில் கட்டி, அவற்றை எதிர் எதிர்த் திசைகளில் ஒட்டிவிட்டார்கள்!  என்னவாகும்? இரு கூறாகக் கிழிக்கப்பட்டது அவரின் உடல்!


அவருடைய மனைவியை இரக்கப்பட்டு விட்டார்களா? இல்லை! அவரையும் கட்டிப் போட்டு, அவருடைய மறைவிடத்தில் அம்பெய்து கொன்றார்கள்!  பெண்ணொருத்தியை வதை செய்வதன் உச்சகட்டமல்லவா இது?


இக்குடும்பக் கொழுந்தான அம்மார் என்ற சிறுவரையுமல்லவா கயிற்றால் பிணைத்துக் கசையடி கொடுத்தார்கள்!   குடும்பமே துன்பத்தின் எல்லையில் துவண்டு போயிற்று!  அந்த நிலையில், தமக்கு வேதனைகளிலிருந்து விடுதலை கிடைக்காதா என்றெண்ணி, நபியவர்களிடம் யாசிர் முறையீடு செய்தபோது, صبرا يا آل ياسر   (யாசிரின் குடும்பத்தவரே!  பொறுமை செய்க!) என்று மட்டுமே அந்த நபியால் ஆறுதல் சொல்ல முடிந்தது.


இப்படி, மக்கத்துக் குறைஷிக் கொடுமனத்தவர்களின் படுபாதகச் செயல்களால் வதை செய்யப்பட்டவர்களின் பட்டியல் – பிலால், கப்பாப், இப்னு மஸ்ஊத், அபூபக்ர், உஸ்மான், சுஹைப், அபூசலமா, உம்முசலமா என்று – நீண்டுகொண்டே செல்கின்றது!  இத்தகைய தொல்லைகளை எல்லாம் விட்டு விடுதலை பெறுவதற்காக, அம்மக்களுள் பலர் புலம் பெயர்ந்து, கடல் கடந்து ஆபிரிக்காவின் அபிசீனியாவுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்!  இப்படி, எட்டாண்டுகளின் போராட்டத்திற்கும் பொறுமைக்கும் பிறகு, ஒரு வெற்றி கிட்டுகின்றது என்றால்...?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினாயிரம் வீரர்களோடு, வெற்றி வீரராக மக்காவினுள் நுழைகின்றார்கள்! எனினும், உண்மையாகத் திருந்தி வந்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறார்கள்! கஅபாவினுள் நுழைந்தவர்களுக்குக் காவல் வழங்குகின்றார்கள்! இதற்கெல்லாம் பின்னரும் வழிக்கு வராத வன்மனத்தோரைத் தண்டிப்பது முஸ்லிம்களின் கடமையல்லவா? காலித் பின் வலீத், ஜுபைர் முதலான தம் தளபதிகளுக்கு மக்காவுக்குள் நுழையக் கட்டளை பிறப்பிக்கிறார்கள். அடுத்து நடந்ததோ, அருமையான தண்டனை! ‘செத்தோம், பிழைத்தோம்’ என்று தலை தெறிக்க ஓடுகின்றனர் குறைஷித் தலைவர்கள்!


அவர்களுள் சலமத் இப்னு மைலா என்பவரும் ஒருவர்.  இவர் மக்காவின் புறநகர்ப் பகுதியில் இருந்த தனது வீட்டுக்கு ஓடோடி வந்து நுழைந்து மூச்சிரைக்கத் தன் மனைவியிடம், “விரைந்து கதவை மூடு!” என்றார்.  “எங்கிருந்து இப்படித் தலை தெறிக்க ஓடி வருகின்றீர்?” என்ற மனைவியைப் பார்த்துக் கீழ்க்காணும் கவிதையடிகளைக் கூறுகின்றார்:

إنك لو شهدت يوم الخندمه ،   إذ فر صفوان و فرعكرمة
وابو يزيد قائم كالموتمه ،  واستقبلتهم بالسيوف المسلمة
يقطعن كل ساعد وجمجمة ،  ضربا فلا يسمع إلا غمغمه  
لهم نهيت خلفنا وهمهمه ،  لم تنطقي في اللوم أدنى كلمة 


இதன் தமிழ்க் கவியாக்கம்:

என்னடி பெண்ணே! அறிந்திலையோ? 
இறையின் தூதர் வருகின்றார்!
மன்னர் போலே இப்புனித
மக்கா விற்குள் நுழைகின்றார்!
உன்னருந் தலைவர் உமையாவின்
ஒருமகன் சஃப்வான் ஓடுகிறார்!
இன்னொரு வர்அபு ஜகில்மைந்தர்
இக்ரிமா ஓடி ஒளிகின்றார்!

அதிர்ச்சி யுற்று நிற்கின்றார் 
அம்ரின் மகனார் சுஹைலென்பார்!
முதிர்ச்சி யுற்ற பெருவீர
முஸ்லிம் வாட்கள் ஓங்கினவே!
விதிர்த்து நிற்கும் குறைஷிகளை 
வெட்டிச் சாய்த்து மாய்க்கின்றார்!
எதிர்த்து நிற்க முடியாமல் 
எங்கும் அச்சம் அச்சம்தான்!

இடிபோல் அங்கே ஒவ்வொருவர் 
இதயம் அடித்துக் கொள்வதனால்
தடுமாற் றத்தில் நிற்கின்றோம்! 
தடுத்து வைப்பார் யாருமிலை!
எடுத்துப் பேச எவருமிலை! 
இழித்து ரைத்தால் பழியாகும்!
உடைந்த சிலைகள் ஒவ்வொன்றும் 
ஒருசொல் கூடப் பேசவிலை!

(சான்றுகள்: சீரத்துன்நபி – இப்னு ஹிஷாம் / ஜாதுல் மஆத் – இப்னு கய்யிம்)


உயிர்ப் பிச்சை கேட்டு முஸ்லிம்களிடம் வந்தவர்கள், தலை தெறிக்க மலைகளின் மீது ஏறி ஓடியவர்கள், கஅபாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்கள், தத்தம் வீடுகளுக்குள் புகுந்து தாழிட்டுக்கொண்டவர்கள், அபூ சுஃப்யானின் வீட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் ஆகியோர் தவிர, மக்கா வெற்றிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையோ மிகமிகக் குறைவு!  வெறுமனே பண்ணிரண்டுதான்!  இந்தக் கொலை நிகழ்வும்கூட, நபியவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நிகழ்ந்தது!  அந்த நாள்வரை, மக்கத்துக் குறைஷிகள் வதை செய்ததும் கொலை செய்ததுமாக, முஸ்லிம்கள் அடைந்த இழப்போ எண்ணிக்கையில் அடங்காதது!  இதனால்தான், இத்தொடரின் தொடக்கத்தில், மக்கா வெற்றியை, ‘மாபெரும் வெற்றி’ என்றும் ‘மானம் காத்த வெற்றி’ என்றும் குறிப்பிட்டேன். 

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது

28 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

/// உடைந்த சிலைகள் ஒவ்வொன்றும் 
ஒருசொல் கூடப் பேசவிலை!///

இப்படி மக்கத்து குறைஷிகள் தங்களின் வணக்க கடவுள் சிலைகள் தோல்வியுற்றத்தை கவிதைபாடியும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

sabeer.abushahruk said...

எங்கெல்லாம் உணர்வுகள் உச்சகட்டத்தை எட்டுகின்றனவோ அங்கெல்லாம் கவிதையே கோலோச்சும். கவிதையை இஸ்லாமியப் பார்வையாக மட்டுமல்ல ஒரு மொழியின் சிறந்த வடிவமாகக் காட்டியே இவ்வாய்வு தொடர்கிறது.

அஹ்மது காக்காவுக்காக என் துஆ.

sabeer.abushahruk said...

தாஜுதீனை அதிரையில் ஃபுட்பால் கிரவுன்டில் 27ந்தேதி தேடினேன். காணோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தாஜுதீனை அதிரையில் ஃபுட்பால் கிரவுன்டில் 27ந்தேதி தேடினேன். காணோம்.//

சென்னைக்கு சென்றுவிட்டேன் காக்கா...

அன்புடன் புகாரி said...

இடிபோல் அங்கே ஒவ்வொருவர்

இதயம் அடித்துக் கொள்வதனால்

தடுமாற் றத்தில் நிற்கின்றோம்!

தடுத்து வைப்பார் யாருமிலை!


மொழியாக்கக் கவிதை தேர்ந்த கவிவிரல்களால் நெய்யப்பட்டுள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். 4 வரி அரபுக் கவிதையினை 12 அடிகளாய் ஆக்குவதற்கு எதுகை மோனை அச சீர் அமைப்பது காரணமாய் இருந்திருக்கலாம்.

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

//மொழியாக்கக் கவிதை தேர்ந்த கவிவிரல்களால் நெய்யப்பட்டுள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். 4 வரி அரபுக் கவிதையினை 12 அடிகளாய் ஆக்குவதற்கு எதுகை மோனை அச சீர் அமைப்பது காரணமாய் இருந்திருக்கலாம்.//

ஆம். கனடா கவிஞர், அன்புடன் புகாரி அவர்களே! இரு மொழிகளிலும் தேர்ந்தப் புலமையும் வேண்டும்; இரு மொழிகளின் யாப்பிலக்கணம் அறிந்திருத்தல் வேண்டும்; மற்ற மொழிகளிலிருந்துத் தமிழ்மொழிக்கு மொழியாக்கம் செய்யும் பொழுது கருத்துக்கள் சிதையா வண்ணம் இருக்க வேண்டும்; அதனையும் கவியாக்கம் செய்திடல் மிகவும் கடினம்! இதற்குரிய ஆற்றலை ஆசிரியர் அஹ்மத் காகா அவர்கட்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்; அவர்களும் அவற்றைப் பயன்படுத்தி நமக்கு “அறுசீர் விருத்தப்பா” வில்(மா+மா+காய் அரையடிக்கு எனும் வாய்பாட்டில்) அமைத்துக் கொடுத்துள்ளார்கள். ஓர் ஆலிம் புலவர் அவர்கள் அல் குர் ஆன் மொழியாக்கம் தமிழில் பாவினத்தில் (வெண்பாவில்) அமைத்துள்ளார்கள்!
அல்-குர்-ஆன் முழுவதும் உண்மை; அதன் மொழிபெயர்ப்பும் உண்மை; வெண்பாவெனும் கவிதையில் யாத்திடும் பொழுது , “கவிதை கூடாது “ என்பவர்கள் அம்மொழிபெயர்ப்பை- பாவினத்தில் உள்ளதை மறுப்பார்களா?

அன்புடன் புகாரி said...

இனிய நண்பர் அபுல்கலாம் அவர்களுக்கு,

அன்பும் அமைதியும் அளவற்று நிறைக!

ஒரு கவிஞர் குரான் முழுவதையும் வெண்பாவிலேயே அமைத்துள்ளார் என்பதை நாம் எப்படிக்காணவேண்டும்?

கவிதைகளை மறுப்பவர்களின் இறை பக்தியைவிட எத்தனை எத்தனை கோடி மடங்கு உயர்வானது குரானை அப்படியே வெண்பாவாக வடித்த கவிஞரின் மகா பக்தி?

எத்தனை ஆழமாக குரானை வாசித்திருப்பார் அந்தக் கவிஞர் அதை வெண்பாக்களாய் வடிக்க?

விமரிசகர்களைத் தூக்கி எறிவோம், உண்மைபக்தி கொண்ட ஆக்கங்களை நெகிழ்வோடு அரவணைப்போம்.

இயலும் என்பதனைக் காட்டும் ஒவ்வோர் இஸ்லாமியனும் உண்மையான இஸ்லாமியன் அல்லவா.

இவ்வேளையில் என் ஆறாவது கவிதை நூலான ’அறிதலில்லா அறிதல்’ புத்தகத்துக்கு நான் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி கீழே:

*

என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின் வழியில் செல்லப்போகிறீர்கள்?’

இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான் நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று தோன்றுகிறது.

நான் கண்டவரை பெரும்பாலான மத நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.

ஏன்?

உயர்வானவற்றை உயர்வான நடையில் எழுதுவதுதானே சிறப்பு.

உயிரின் மொழி
மொழியின் உயிர்
கவிதை

இப்படி நான் என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே எழுதிவிட்டேன். இதை உணர்ந்துகொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களின் அறியாமையின்மீது உண்மையான அக்கறைகொண்டு நான் இதை இங்கே எழுத வருகிறேன்.

மொழியின் உயர்வான நடையில் தங்களின் வேதங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மதங்கள் கவிதைகளை மறுப்பவையாக இருக்க முடியுமா? அப்படி ஏதேனும் ஒரு மதம் கவிதையை மறுத்தால், அது தன்னைத் தானே மறுப்பதாய் ஆகிவிடாதா?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

சொல்ல மறந்துவிட்டேன் நட்பே அபுல்கலாம், காக்கா என்று எழுதாமல் காகா என்று எழுதி இருக்கிறீர்கள். மகிழ்கிறேன். ஆனாலும் அண்ணா என்று தமிழாய் அது ஒரு நாள் மாறாத என்ற ஏக்கம் உண்டெனக்கு!

அன்புடன் புகாரி

Noor Mohamed said...

ஒரு நல்ல கதையோ, நல்ல கட்டுரையோ செய்யும் செயலைவிட ஒரு நல்ல கவிதை கூடுதலாக செய்யும்! சிந்திக்க வைக்கும்! கவிதைக்குள் ”விதை” இருப்பதே ஒரு ”விருட்சத்தை சுமக்கிறோம்” என்ற உண்மையை அறிவிக்கவே! ஆம்.

Unknown said...

அதிரை வருகிறார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்!
http://adiraipost.blogspot.in/2012/04/blog-post_30.html

Yasir said...

காக்கா உங்களின் ஆய்வு கவிதைக்கு விதை தூவும் அதேசமயத்தில் பல வரலாற்று நிகழ்வுகளையும் எங்களுக்கு அறியத்தருகின்றது.....அல்லாஹ் உங்கள் பரிபூரண சுகங்களை தருவானாக ஆமீன்

Yasir said...

//அதிரை வருகிறார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்!/// what is the use ??

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

மேற்கண்ட அரபுக் கவிதையின் தமிழ் ஒலிபெயர்ப்பு

இன்னகி லவ்ஷஹித்தி யவ்மல் ஃகந்தமஹ்
இஃத் ஃபர்ர ஸஃப்வானு வஇக்ரிமஹ்
வஅபூயஸீத காஇமுன் கல் முஃ-தமஹ்
வஸ்தக்பலத் ஹும்பிஸ் ஸுயூஃபில் முஸ்லிமஹ்
யக்தஃன குல்ல ஸாஇதின் வஜும்ஜுமஹ்
ழர்பன் ஃபலாயுஸ்மஉ இல்லா gகம்கமஹ்
லஹும் நஹீத்துன் ஃகல்ஃபனா வஹம்ஹமஹ்
லம் தன்திகீ ஃபில் லவ்மி அத்னாகலிமஹ்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ் அக்பர். முஸ்லிம்களின் வாளின் சுழற்ச்சியால் பொறுமைக்கு கிடைத்த சரித்திரம் காணாத வெற்றி.

சலமத் இப்னு மைலா என்பவர்.அச்சம் நிறைந்த அந்த சூழலில் கூட கச்சிதமா கவி பாடிய வார்த்தை அருமை.

KALAM SHAICK ABDUL KADER said...

”அன்புடன்” புகாரி எனும் அன்புமிகு நண்ப,
உங்களின் மீதும் இறைவனின் அன்பும் அமைதியும் அளவற்று நிறைக!
ஆறு கவிதை நூற்கள் வரை வெளியிட்டுள்ள ஆனந்த செய்தி கண்டேன்;எனது முதற் கவிதைத் தொகுப்பு சென்ற வருடம் “கோவை தகிதா” பதிப்பகம் (முகநூல் நண்பர்- முனைவர்-பேரா. மணிவண்ணன்)வெளியிட முன்வந்ததும்; தங்களின் கரங்களால் அணிந்துரைக்கு நகல் அனுப்பியும் இருந்ததும் அறிவீர்கள்; “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிஃபுத்தீன் (இலங்கை) அவர்கள் தனது வாழ்த்துரையை ஆயத்த நிலையில் வைத்திருந்தார்கள்; தங்களின் அணிந்துரை வராத கால தாமதம் மற்றும் அந்நகலில் ஏற்பட்டிருந்த அச்சுப்பிழைகள் போன்றவற்றால் குறிப்பிட்ட காலத்தில் வெளியிடாமல் விடுபட்டது. இருப்பினும், இறைவன் நாடினால், எதிர்வரும் சூன் மாதம் விடுப்பில் ஊரில் இருந்து மீண்டும் தங்கட்குப் புதிய தொகுப்பாக நகல் அனுப்பி வைப்பேன்; அதனைச் சரிகண்டுத் தங்களின் வாழ்த்துரை/ அணிந்துரை எழுதித் தர விழைகின்றேன்.

தாங்கள் குறிப்பிடும் விடயமெல்லாம் இவ்வாய்வின் துவக்கக் காலத்தில் அடியேனும் , இவ்வாய்வின் ஆசிரியர் அஹ்மத் அண்ணன் அவர்களும், “திருமறையின் வசனங்கள் கவிதை நடை- ஓசை நயத்துடன் இருக்கின்றன” என்று காட்டுகள் காட்டியும் என் மீது அபாண்டமானப் பழி போட்டார்கள், “குர் ஆன் கவிதை தான்” என்று சொன்னதாக! இறைவன் காப்பாற்றுவானாக! “நடை” என்பதை விளக்க “ஈற்றதுகை” என்று விளக்கியும் புரியவில்லை என்றனர்! இங்கு அன்புச் சகோதரர் ஆரிஃப் அவர்கள், இக்கட்டுரையில் உள்ள அரபுக் கவிதையின் ஒலி வடிவத்தை நோக்கினால் ஈற்றில் ஓசை நயம் ஒன்றி வருதல் உணரலாம்! இதுவே போல், திருமறை வசனங்கள் (காட்டு: “குல் ஹூ அல்லாஹ் அஹத்: அல்லாஹுஸ் ஸமத்; லம் யலித் வலம் யூலத்; வலம் ய குன்லஹீ குஃபுவன் அஹத்”) ஓசை நயம் - கவிதை நடையில் ஒன்றி வருகின்றன!!(அஹத், ஸமத், யலித், யூலத், அஹத் என்ற பதங்களின் ஓசை ஒன்றென வருதல் இனிமையான கவிதை நடை தானே) இஃதே என் ஆழமான குற்றமற்றக் கருத்தாகும் அன்றும் இன்றும் என்றும் பதிகின்றேன்; ஆனால், அவசரப்பட்டு, “யூகத்தின் அடிப்படையில்” மேற்சொன்னபடி என் மீது அபாண்டமானப் பழியினைச் சுமத்துவதால் இவ்விவாதத்தில் அதிகம் பங்கு கொள்வதில்லை; இன்று மீண்டும் தங்களின் ஆக்க பூர்வமான ஆதாரங்கள் என்னுள் இம்மடலை இவ்வண்ணம் எழுதத் தூண்டின!

அறிஞராகவும், “அன்புடன்” மலிக்கா மற்றும் அடியேன் போன்ற கவிநேசர்களை உருவாக்கும் முதல் இணையத் தமிழ்க் குழுமத்தின் நிறுவனராகவும் உள்ள தங்களின் நல்வரவு, அ.நி. தளத்திற்குக் கிட்டிய நல்வாய்ப்பு. குறிப்பாக, ஏங்கிக் கொண்டிருந்த என் போன்றோர்க்கு ஊட்டம் தரும் சத்துணவு!

அன்புடன் புகாரி said...

என் அன்பிற்கினிய நண்பர் அபுல் கலாம் அவர்களுக்கு,

அன்பும் அமைதியும் எங்கும் எப்போதும் நிறைக நிறைக!

>>>>>>>>>>>எனது முதற் கவிதைத் தொகுப்பு சென்ற வருடம் “கோவை தகிதா” பதிப்பகம் (முகநூல் நண்பர்- முனைவர்-பேரா. மணிவண்ணன்)வெளியிட முன்வந்ததும்; தங்களின் கரங்களால் அணிந்துரைக்கு நகல் அனுப்பியும் இருந்ததும் அறிவீர்கள்; தங்களின் அணிந்துரை வராத கால தாமதம் மற்றும் அந்நகலில் ஏற்பட்டிருந்த அச்சுப்பிழைகள் போன்றவற்றால் குறிப்பிட்ட காலத்தில் வெளியிடாமல் விடுபட்டது. இருப்பினும், இறைவன் நாடினால், எதிர்வரும் சூன் மாதம் விடுப்பில் ஊரில் இருந்து மீண்டும் தங்கட்குப் புதிய தொகுப்பாக நகல் அனுப்பி வைப்பேன்; அதனைச் சரிகண்டுத் தங்களின் வாழ்த்துரை/ அணிந்துரை எழுதித் தர விழைகின்றேன்.<<<<<<<<<<<<<<

மிகவும் வருந்துகிறேன். எனக்கு உங்களின் மடல் கிடைக்கவில்லை. என்னிடம் வந்து நின்று எதுவும் கேட்டு, நான் இல்லை என்று சொல்லும் இதயத்தை இறைவன் எனக்குத் தரவே இல்லை. என்னை மன்னியுங்கள். ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் spam mail ல் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதை இன்று தேடிப்பார்த்து சரி செய்கிறேன். மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் மன்னியுங்கள். எனக்கு என் மின்னஞ்சலுக்கு இன்று ஒரு மடல் அனுப்புங்கள் அன்புடன். buhari@gmail.com

-continued

அன்புடன் புகாரி said...

>>>>>>>>>>>>தாங்கள் குறிப்பிடும் விடயமெல்லாம் இவ்வாய்வின் துவக்கக் காலத்தில் அடியேனும் , இவ்வாய்வின் ஆசிரியர் அஹ்மத் அண்ணன் அவர்களும், “திருமறையின் வசனங்கள் கவிதை நடை- ஓசை நயத்துடன் இருக்கின்றன” என்று காட்டுகள் காட்டியும் என் மீது அபாண்டமானப் பழி போட்டார்கள், “குர் ஆன் கவிதை தான்” என்று சொன்னதாக! இறைவன் காப்பாற்றுவானாக! “நடை” என்பதை விளக்க “ஈற்றதுகை” என்று விளக்கியும் புரியவில்லை என்றனர்! இங்கு அன்புச் சகோதரர் ஆரிஃப் அவர்கள், இக்கட்டுரையில் உள்ள அரபுக் கவிதையின் ஒலி வடிவத்தை நோக்கினால் ஈற்றில் ஓசை நயம் ஒன்றி வருதல் உணரலாம்! இதுவே போல், திருமறை வசனங்கள் (காட்டு: “குல் ஹூ அல்லாஹ் அஹத்: அல்லாஹுஸ் ஸமத்; லம் யலித் வலம் யூலத்; வலம் ய குன்லஹீ குஃபுவன் அஹத்”) ஓசை நயம் - கவிதை நடையில் ஒன்றி வருகின்றன!!(அஹத், ஸமத், யலித், யூலத், அஹத் என்ற பதங்களின் ஓசை ஒன்றென வருதல் இனிமையான கவிதை நடை தானே) இஃதே என் ஆழமான குற்றமற்றக் கருத்தாகும் அன்றும் இன்றும் என்றும் பதிகின்றேன்; ஆனால், அவசரப்பட்டு, “யூகத்தின் அடிப்படையில்” மேற்சொன்னபடி என் மீது அபாண்டமானப் பழியினைச் சுமத்துவதால் இவ்விவாதத்தில் அதிகம் பங்கு கொள்வதில்லை; இன்று மீண்டும் தங்களின் ஆக்க பூர்வமான ஆதாரங்கள் என்னுள் இம்மடலை இவ்வண்ணம் எழுதத் தூண்டின!<<<<<<<<<<<

கவிதைகளைப் பற்றிய தவறான கருத்துக் கொண்டோரை நாம் தான் உரிய ஆதரங்களைத் தந்து மாற்ற வேண்டும். அறிஞர் அகமது அண்ணன் அவர்களின் ஆய்வுக் கட்டுரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்தரும் ஆதாரங்கள் என் நெற்றிப்பொட்டைத் துடிக்கச் செய்கின்றன. நான் நன்றி கூறுகிறேன் அண்ணன் அதிரை அகமது அவர்களுக்கு. அவர்முன் நான் மிகச்சிறுவனாக நிற்கிறேன். பெரிதும் மதிக்கிறேன்.

எல்லோரும் கவிதை எழுதலாம் ஆனால் எல்லாமும் கவிதை ஆகிவிடாது. கவிதைக்கான முதல் இலக்கணமே அது உண்மையை அடிப்படையாக் கொண்டதாய் இருக்கவேண்டும்.

குரான் உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதுதான் கவிதையின் முக்கியமான இலக்கணமும்கூட. குரான் உயர்வானது என்பதால் அது மொழியின் உயர்வான நடையான கவிதை நடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

குரானின் கவிதைநடை தவறென்னு எவரேனும் சொல்லமுடியுமா? எழுதப்பட்ட சில கவிதை நடையைக் கொண்ட சில பதர்கள்மாம் தவறு என்று சொல்லமுடியும்.

அன்று விரோதம் கொண்ட குறைசிகள் தவறான கவிதைகளை எழுதினார்கள். அதற்கான வசைகளை வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். கவிதை நடையில் உருவாகியிருக்கும் குரான் தவறென்று சொல்வோர் எவராவது இருக்க முடியுமா?

சொல்லப்போனால் இந்த உலகுக்கே எது கவிதை எது கவிதை இல்லை என்று சொன்னது இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான்.

உண்மையின் அடிப்படையில் உருவான சொல்நயம் கொண்டதே கவிதை. பொய்யின் அடிப்படையில் உருவான சொல்நயம் கொண்டது கவிதையே அல்ல.

அடடா எத்தனை அற்புதமான விளக்கத்தை நாயகம் அவர்கள் இந்த உலகுக்கே தெளிவாக வழங்கியுள்ளார்.

இதில் நானும் நீங்களும் கூட அடக்கம்தான். தவறானதை எழுதியிருப்பின் அவை கவிதைகளே அல்ல. அதை நாம் ஏற்கத்தான்வேண்டும்.

ஆதாமின் மக்கள் தவறு செய்பவர்களே என்ற நாயகத்தின் கூற்றை ஏற்போர் நாமென்பதால் நாம் பெருந் தவறொன்றும் இழைத்துவிடப் போவதில்லை என்றே நம்புவோமாக!

கற்றது கைமண்ணளவு கல்லாதது இவ்வுலகளவு!

குரான் அழகான கவிதை நடையில் இருப்பதால்தான் ஏழு வயது சிறுவனால்கூட உச்சரிப்பை நேசித்து அப்படியே மனனம் செய்து மாற்றுக்குறையாமல் ஒப்பிக்க ஓத முடிகிறது.

குரானின் சொற்களில் நயம் இல்லாவிட்டால் அழகிய இசை இல்லாவிட்டால் இது சாத்தியப்படுமா? விமரிசகர்கள் சற்றே இதைச் சிந்தித்தால் உண்மையை உணர்ந்துகொள்வார்கள்.

>>>>>>>>>அறிஞராகவும், “அன்புடன்” மலிக்கா மற்றும் அடியேன் போன்ற கவிநேசர்களை உருவாக்கும் முதல் இணையத் தமிழ்க் குழுமத்தின் நிறுவனராகவும் உள்ள தங்களின் நல்வரவு, அ.நி. தளத்திற்குக் கிட்டிய நல்வாய்ப்பு. குறிப்பாக, ஏங்கிக் கொண்டிருந்த என் போன்றோர்க்கு ஊட்டம் தரும் சத்துணவு!<<<<<<<<<<

உங்கள் அன்புக்கு ஆயிரம் நன்றிகள். ஆனால் புகழ்ச்சி என்னைக் கூசச்செய்கிறதே நண்பரே... நான் இத்தனை புகழ்ச்சிக்கு ஏற்புடையவன் இல்லவே இல்லை! ஆனாலும் உங்களுக்கு என் நன்றி.

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் புகாரி அவர்கட்கு, மிக்க நன்றி. என் நீண்ட மடலைப் பொறுமையாகப் படித்து விரைவாக மறுமொழியும் இட்டுள்ளது உங்களின் உயர்ந்த பண்பினைக் காட்டுவதாய் உள்ளது. தவறொன்றும் இல்லை; எல்லாம் நன்மைக்கே! “கோவை தகிதா பதிப்பக” நிறுவனர் முனைவர் பேரா. மணிவண்ணன் அவர்கள் தான் உங்கட்கும், ஜின்னா ஷரிஃபுதீன் அவர்கட்கும் ஒரே மின்னஞ்சலில் என் கவிதைத் தொகுப்பின் pdf நகல் அனுப்பி விட்டு எனக்கும் அனுப்பியிருந்தார்கள். நான் தான் அவர்கட்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தேன். இன்னும் சில மாதங்களில் மீண்டும் புதிய நகல் எடுத்து அனுப்பி வைக்கின்றேன். உங்களின் ஆதரவு எனக்கு எப்பொழுதும் உண்டு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு: என் எல்லாக் கவிதைகளும் உங்கள் “அன்புடன்” குழுமத்தில் நான் அனுப்பிய உடன் வெளியாகி என்னை மகிழ்விக்கின்றீர்கள்!

மும்பையில் ஒன்றாக இருந்த அக்காலம் இன்றும் பசுமையாக என் நினைவுகளில் உள்ளது; மீண்டும் மேலை நாட்டின் பயணம் என்றால், அது கனடாவாகவே இருக்கும் என்பதும் என் கனவு; காரணம்; உங்களருகில் இருந்தால் நான் சிகரம் எட்டி விட எளிதாகும் என்பதால்! நமது தனிப்பட்ட விடயத்திற்காக இத்தளத்தின் பின்னூட்டப் பகுதியினைப் பயன்படுத்தியமைக்கு இக்கட்டுரை ஆசிரியர் அஹ்மத் அண்ணன் அவர்களும், அ.நி. நெறியாளர் அபூஇப்ராஹிம் அவர்களும் எங்களை மன்னிப்பார்களாக! உங்களின் ஆழமான அழுத்தமான வாதங்கள் என்னுடைய மற்றும் கவிவேந்தர் சபீர் அவர்களின் எண்ண ஓட்டங்களை அப்படியே பிரதிபலிக்கின்றன; காரணம், மூவரும் கவிஞர்களாய் இருப்பதாற்றானோ? “ கவிஞன் மற்றுமொரு கவிஞனின் முகம் பார்க்கும் கண்ணாடி” என்ற என் கவிதை வரிகள் மெய்ப்படுத்தியுள்ளீர்கள்.
தாமதமாக வந்தாலும், தரமாக வந்து கொண்டிருக்கும் உங்களின் கருத்துக்கள் எங்கட்குக் கவிதைதான் மொழியின் உயர்ந்த நடை; அதில்தான் போட வேண்டுன் பீடு நடை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன!
உங்களுடன் மும்பையில், தம்மாமில் பழகிய காலத்தில் எப்படிப்பட்டப் பார்வையில் உங்களின் சிந்தனைகள் சென்றனவோ அப்பாதையிலேயே சற்றும் பிறழாமல் செல்வதும்; அவ்வண்ணமே துணிவுடன் கருத்துக்களை எடுத்து வைப்பதும் கண்டு, எனக்கு மட்டும் ஏன் இந்தத் துணிவு இல்லை என்று என்னே நானே கேட்டுக் கொண்டேன்!? நாம் கற்றவை எல்லாம் இப்படிக் கருத்தாடல் செய்யும் பொழுது, விதண்டாவாதங்கள் ஏற்படுகின்றன; அல்லது, “முத்திரை”க் குத்தி ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் உள்ளத்தில் உண்டாகும்; உங்களின் வரவு எனக்கு மிகவும் உற்சாகமும் ஊக்கமும் உண்டாக்கி விட்டன.

இப்னு அப்துல் ரஜாக் said...

“ஒருவனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட, சீழ், சலத்தால் நிரம்பியிருப்பது மேல்” என்ற நபிகள் நாயகம் ஸல் அவர்களின் எச்சரிக்கையும் ,கவிங்கர்களை வழிகேடர்களே பின்பற்றுவர் என்ற எச்சரிக்கை செய்தியையும் மனத்தில் இருத்தி,மொழி வெறியும்,கவிதை வெறியும்,நாடு,இன,நிற வெறியும் அறுத்து,இஸ்லாமிய நெறி போற்றி வாழ,அல்லாஹ் அருள் புரிவானாக.ஷைத்தானின் ஆசை வார்த்தைகள் ,அழகாக்கி,மெருகூட்டி காட்டும் அவன் வித்தைகளில் இருந்து அல்லாஹ் நம்மை காப்பானாக ஆமீன்

அன்புடன் புகாரி said...

அன்பின் அர அல,

அன்பில் சிறந்த அமைதியும்
தானத்தில் சிறந்த சமாதானமும்
அருளப்படட்டும் அவனியெங்கிலும்!

நீங்கள் அறிஞர் அதிரை அகமது அவர்களின் தொடர்கள் முழுவதையும் வாசிக்கவே இல்லையா? ஆச்சரியமாய் இருக்கிறது. அறிவு திறந்த நிலையில் இருக்கவேண்டும். அது அடைபட்டுக்கிடந்தால. உண்மைகள் எதுவுமே அதனுள் சென்று சேராது. பிறகு உங்கள் விருப்பம். நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கான முழு அதிகாரமும் உங்களிடம் இருக்கிறது.

ஆனால், நீங்கள் இட்டுவைத்திருக்கும் இதயம் படம் உங்கள் அர அல என்ற பெயர் இவையெல்லாம் கவிதை ரசனை உள்ள இதயத்திலிருந்துதான் வெளிப்பட முடியும். அதையாவது உணர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

அன்புடன் புகாரி

Unknown said...

நல்ல கவிதைகளை, கருத்துப் பிழைகளற்ற கவிதைகளைப் பாராட்டிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான கவிதைகளை – அவை தம்மைப் பற்றிய புகழ்ப் பாக்களாக இருந்தாலும்கூட, கண்டித்துத் திருத்தியுள்ளார்கள்; நிறுத்தியுள்ளார்கள்.






இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது மிகச் சரியான நபிமொழித் தொகுப்பில், ‘இறை தியானம், கல்வி, குர்ஆன் முதலியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் தாக்கம் இருப்பது வெறுக்கப்பட்டதாகும்’ எனும் தலைப்பில் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்துள்ளார்கள். அவற்றின் கருத்தாவது: ஒருவனின் வயிறு கவிதையால் நிரம்பி இருப்பது, புரையோடும் அளவுக்குச் சீழ், சலம் நிரம்பி இருப்பதைவிட மோசமானதாகும். அதாவது, ஒருவரின் உள்ளத்தில் கவிதையைத் தவிர வேறெதுவும் இல்லாதிருப்பது, அவனை இறை தியானத்தை விட்டும் கல்வியை விட்டும் குர்ஆனை விட்டும் மறக்கடித்துவிடும் என்பதாகும். ‘வயிறு கவிதையால் நிரம்பியிருப்பது’ என்பது, கவிதை ஒன்று மட்டுமே ஒருவனின் வயிற்றுப் பிழைப்பாக இருக்கும் மோசமான நிலையைக் குறிக்கும்.




அவசர கோலத்தில், அறியாமையால் முற்றிலுமாகக் கவிதையை வெறுப்போர், தமது கருத்தாடளுக்குச் சான்றாக, திருக்குர்ஆனின் 26:224 வசனத்தை மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால், அதனைத் தொடர்ந்துள்ள மூன்று வசனங்களைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்! அவ்வசனத்திற்கும் அதனையடுத்துள்ள மூன்று வசனங்களுக்கும் விளக்கமளிக்கும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தமது ‘ஃபத்ஹுல் பாரீ’ எனும் நூலில் குறிப்பிடுவதாவது:




“இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கவிஞர்கள், இணை வைப்போராக இருந்துகொண்டு, நல்லவர்களையும் அறநெறிகளையும் தாக்கிக் கவிதை பாடி வந்தவர்களாவர்.... அப்துல்லாஹ் இப்னு சப்அரீ, ஹுபைரா பின் அபீ வஹப், முஸாபிஉ பின் அப்தி மனாஃப், அம்ர் பின் அப்தில்லாஹ், உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த் ஆகியோர் இவர்களில் அடங்குவர். அதே நேரத்தில், உண்மைக்காகக் குரல் கொடுத்து, நல்லதே பேசிவந்த கவிஞர்களும் இருந்துள்ளனர். இறைவனையும் இறைத்தூதரையும் புகழ்ந்து பாடி, இறை மார்க்கத்துக்கு வலு சேர்த்து வந்தனர். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, ஹஸ்ஸான் இப்னு தாபித், கஅப் இப்னு மாலிக், கஅப் இப்னு சுஹைர் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள். ஆக, பொய்யும் போலிப் புகழ்ச்சியும் வசையும் இல்லாத, நல்ல கருத்துகளைக் கூறும் கவிதைகள் அனுமதிக்கப்பட்டவை ஆகும். இத்தகைய கவிதைகளை நபி (ஸல்) அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.”

(சஹீஹுல் புகாரீ, பாகம் ஆறு, பக்கம் 646)




“திண்ணமாக, கவிதையிலும் நுண்ணறிவு (ஹிக்மத்) உண்டு” எனும் நபிமொழிக்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் விளக்கமளிப்பதாவது: “நல்ல கவிதைகள் மூலம் ஞானம் பிறக்கும். அறியாமை அகன்று அறிவு சுரக்கும். இங்கு ‘ஞானம்’ என்பதைக் குறிக்க ‘ஹிக்மத்’ எனும் சொல் மூலத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. இதற்கு – ‘அறிவு, உண்மை, தத்துவம் ஆகிய பொருள்கள் உள. நல்ல தத்துவம் ஒன்றைக் கவிதையில் கூறும்போது, கவிதைக்கே உரிய சொற்சிக்கனம், இரத்தினச் சுருக்கம், ஒப்புமை உள்ளிட்ட கூறுகள் படிப்போரின் உள்ளங்களைக் கவர்ந்து, அதை ஆழமாகப் பதியச் செய்துவிடும்; சிந்திக்கத் தூண்டும். நபித்தோழர் ஷுரைத் பின் சுவைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கவிஞர்) உமையா இப்னு ஆபிஸ் ஸல்த்தின் கவிதைகளுள் சிலவற்றைக் கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆகவே அவற்றிலிருந்து நூறு பாடல்கள் வரை நான் அவர்களுக்குப் பாடிக் காட்டினேன்.

(இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் ‘அல் அதபுல் முஃப்ரத்’)




அக்கவிதைகளில் இருந்த பேருண்மைகளை உணர்ந்த பின்னர்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், “கவிஞர் உமய்யத் இப்னு அபிஸ் ஸல்த் (தனது கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்!” என்று வியப்புடன் கூறியிருப்பார்கள் போலும்.


- அதிரை அஹ்மது
---------------------------------------------------------------------
சலாம் சகோ அர .அல ,

நீங்கள் குறிப்பிட்டுள்ள நபி (ஸல் ) அவர்களின் பொன்மொழி உண்மையானது .அதே சமயம் அந்த பொன்மொழிகள்
வந்த பின்னணியை விளக்கி இந்த பொன்மொழிகளை நீங்கள் பதிந்தது இருந்தால் குழப்பத்திற்கே வேலை இல்லாமல்
இருந்திருக்கும் .காரணம் நபி (ஸல் ) நல்ல கவிதைகளை ஆதரித்ததாக நிறைய சான்றுகள் இந்த தொடர்களில் நாம் அனைவரும்
படித்தோம் .நான் கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை .மாறாக ,பல இடங்களில் படிக்கப்படும் இந்த தளத்தில் ,மாற்றுமத நண்பர்கள் , நபி (ஸல் ) அவர்கள் கவிதையை முற்றிலுமாக நிராகரித்தார்கள் என அவர்களின் புரிதலில் தவறு ஏற்படக்கூடும் .

அல்லாஹ் போதுமானவன் .

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள புஹாரி காக்கா,நான் நானாக இருக்கிறேன்,நீங்கள் நீங்களாக இருங்கள்.நீங்கள் கவிதை கண் கொண்டு பார்க்கிறீர்கள்.அதை விடுத்து,மார்க்கம் எந்த அளவுக்கு கவிதைக்கு இடம் கொடுத்திருக்கிறது என்று அஹமது சாச்சாவின் கட்டுரைகளை மீண்டும் படியுங்கள்.அல்லாஹ்வின் எச்சரிக்கையை மனதில் வையுங்கள்.புரியும் நமக்கு எது லிமிட் என்று.

சகோ அப்துல் ரஹ்மான்,அஹமது சாச்சாவின் குரான்,ஹதீஸ் அடிப்படையிலான ஆய்வுகளை மறுக்கவில்லை.ஒரு முஸ்லிம் குரான்,சுன்னாவை மறுக்கவும் முடியாது.அதில்லாமல் மற்றவைகளில் இருந்து சொல்லப்படும் ஆதாரங்கள்தான் வேண்டாம் என்கிறோம்.அல்லாஹ்விடம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்,கவிதைக்கும் சேர்த்து.அல்லாஹ்வின் வேதம் சொல்கிறது,கவிங்கர்களை வழிகேடர்கள்தான் பின்பற்றுவர் என்று.இன்ஷா அல்லாஹ் ஆய்வு முடியும்போது இதைப் பற்றி அலசலாம்.ALLAH KNOWS BEST.

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய அர அல,

மார்க்கம் கவிதைக்கு உயர்வான இடத்தைத்தானே தந்திருக்கிறது? அதைத்தானே இந்த ஆய்வுக் கட்டுரை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது?

எது கவிதை என்பதை முதலில் மிகச் சரியாகச் சொன்னது நபிகள் நாயகம்தான் என்று நினைக்கும்போது எனக்குப் பெருமையாகவே இருக்கிறது.

கட்டுரை முடிந்ததும் நீங்கள் கூறப்போகும் விடயங்களைக் கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

என் புரிதலை மாற்றுவதும் உங்கள் புரிதலை மாற்றுவதும் அந்த விடயங்களைப்பற்றிய அலசலாக இருக்கலாம் - இந்த ஆய்வுக் கட்டுரையை விட என்று நான் தற்காலிகமாக நம்பி இருக்கப் போகிறேன்.

அன்புடன் என்னை காக்கா என்று அழைக்காதீர்கள். என் தாய் அதிரைதான் என்றாலும் இன்னும் சில அதிரை சொல் வழக்குகள் என்னிடம் ஏனோ ஒட்டவே இல்லை. புரிதலுக்கு நன்றி.

ஈக்கும் என்பது இன்றும் புழக்கத்தில் உள்ளதா?

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள புஹாரி அண்ணாச்சி (தூய தமிழா)அவர்களுக்கு,அதிரை வழக்கில் காக்கா வேண்டாம் என்றால்,நல்லதுதான்.அதனால் அண்ணாச்சி என் அழைத்தேன்.இன்ஷா அல்லாஹ்,நாம் இந்த ஆய்வு முடிந்தவுடன்,அது பற்றி அலசலாம்.
//மார்க்கம் கவிதைக்கு உயர்வான இடத்தைத்தானே தந்திருக்கிறது? அதைத்தானே இந்த ஆய்வுக் கட்டுரை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது?//

இல்லை.இந்தப் புரிதலில்தான் தவறு இருக்கிறது.

//எது கவிதை என்பதை முதலில் மிகச் சரியாகச் சொன்னது நபிகள் நாயகம்தான் என்று நினைக்கும்போது எனக்குப் பெருமையாகவே இருக்கிறது.//

இதில் சந்தேகம் இல்லை.எல்லாவற்றுக்கும் வழிகாட்டி,நம் தலைவர் மட்டுமே அல்லவா?

//ஈக்கும் என்பது இன்றும் புழக்கத்தில் உள்ளதா?//

ஆம்,அண்ணா.இன்னும் ஈக்கிது.

அதிரை தமிழோ,மதுரை தமிழோ நமக்கு புரிந்தால் பொது என்பது என் நிலைப்பாடு.

நன்றி புகாரி ஐயா

Unknown said...

அன்பின் அர அல,

அமைதியும் அன்பும் அருளப்படட்டும்!

காக்கா.... காக்காவைவிட்டால் நேரே
தென்பாண்டிச் சீமைக்குப் போயி அண்ணாச்சியா :)

இங்கு கனடாவில் பலரும் ’பாய்.... பாய்....’ என்கிறார்கள்
நான் ஏற்பதில்லை

என்னை புகாரி என்றே அழைக்கலாம்.
வெறுமனே பெயர் சொல்லி அழைப்பது பண்பற்றதெனத் தோன்றினால்
சகோ. புகாரி அல்லது சகோதரர் புகாரி என்று அழைக்கலாம்

ஆங்கிலத்தில் அழைக்கும்போது Bro. Buhari அல்லது
Brother Buhari என்பார்கள்.

சகோ. என்றோ சகோதரர் என்றோ அழைக்கும்போது
வயது பற்றிய கவலையில்லை
உரிய மரியாதை சிறியோர் பெரியோர் இருவருக்குமே
வழங்கப்பட்டுவிடும்.

இது பிடித்திருக்கிறதா அல்லது
கோபப்படுவதுதான் பிடித்திருக்கிறதா :)

அமைதியும் அன்பும் அருளப்படட்டும்!

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய சகோதரர் புஹாரி அவர்களுக்கு,அல்லாஹ்வின் சாந்தியும்-சமாதானமும் உங்கள் மேல் நிலவட்டுமாக(காக்காவும் வாணாம்,பாயும் வாணாம்,அண்ணாச்சியும் வாணாம்,இதுக்கு எதுனா காரணம் இருக்கா?சும்மா தெரிந்து கொள்ளத்தான்,வேறு காரணமில்லை).

//இது பிடித்திருக்கிறதா அல்லது
கோபப்படுவதுதான் பிடித்திருக்கிறதா :)//

ஒரு முஸ்லிம் சகோதரனை கோபிப்பது அழகல்ல.ஆனால் - மார்க்கத்திற்காக கோபிக்கலாம்.எந்த வாதமும் தவரெண்டு தெரியும்போது,மார்க்கத்திற்கு முரண் என தெரியும்போது கோபிக்கலாம்.(பொதுவான அளவுகோல்தான்,நாம் பரிமாறும் விஷயங்களுடன் தொடர்பு படுத்திவிட வேண்டாம்).மற்றபடி - நீங்கள் பொறுமையாக,அமைதியாக,அழானாக மொழியில் எடுத்து வைக்கும் உங்கள் வாதத்தை மிக பாராட்டுகிறேன்.நான் உங்களை என் பக்கத்து வீட்டுக்காரர் என் உரிமையுடன் அழைக்க விரும்புகிறேன்,நான் உங்கள் neighbor.எனவே,நமக்கு அதிக அக்கறையும்,கூடுதல் கரிசனமும் உண்டு.(அடுத்த வீட்டுக்கு அவரவர் செய்யும் செயல்கள் குறித்து,அல்லாஹ்விடம் கேள்வி-கணக்கு உண்டென படித்த ஞாபகம்).

அதிரை சித்திக் said...

கவிதை பற்றிய கலந்துரையாடல்

நல்ல பல கருத்துக்களை வைத்துள்ள சகோ .அர .அல/சகோ .புகாரி

அன்பு மகன் அப்துல் ரஹ்மான் ..அனைவருக்கும் என் அன்பு சலாம்

..எனது ..கருத்து ஒன்றே ஒண்டுதான் ..மனதை லயிக்க வைக்கும்

தன்மை .சுண்டி இழுக்கும் தன்மை கவிதைக்கு உண்டு எனவே

கல்வி .தானதர்மம் ,நலொழுக்கம் ,அநீதியை சாடல் ,சமூக சீர்திருத்தம்

போன்ற உண்மையான நோக்கதிற்கு இஸ்லாம் அனுமதி அளித்த

உவமான உவமைகளுக்கு உள்பட்டு அமைய பெரும் கவிதைகள்

ஒன்றும் தவறில்லை ..,ஆனால் கவிஞனின் பிறவிகுணம்

இறுமாப்பு ,சாபமிடல் .,தன்கவிதை மீது எல்லை இல்லாபிரியம் வைத்தல்

சாடலை வெறுத்தல் ..,பாராட்டுதலை ஆமோதித்தல் ..,போன்றவை நீங்கி

கவிதை பாடல் வாழ்வின் முழு பகுதியாக இல்லாமல் அப்துல் ரஹ்மான்

கூறியது போல அது சிறு பகுதியாக அமைவதில் தவறில்லை ..,மனதில் பட்டதை

எழுதுகிறேன் தவரிருந்தால் சுட்டிக்காட்டவும் ..மன்னிக்கவும்

அன்புடன் புகாரி said...

அன்புச் சகோதரர் அர அல,

அன்பும் அமைதியும அருளப்படட்டும் யாவர்க்கும்!

>>>>உங்களை என் பக்கத்து வீட்டுக்காரர் என உரிமையுடன் அழைக்க விரும்புகிறேன், நான் உங்கள் neighbor. எனவே, நமக்கு அதிக அக்கறையும், கூடுதல் கரிசனமும் உண்டு<<<<

ரொம்ப நல்ல விசயமாச்சே, இதைத்தானே என் வாழ்நாளெல்லாம் எல்லோரிடமும் எதிர்பார்த்து நிற்கிறேன். மனிதனை மனிதன் நேசிப்பதைத்தானே இறைவன் நேசிக்கிறான். அயலானை நேசி என்பது அடிப்படையாச்சே!

அன்புக்குரிய சகோதரர் புகாரி என்று ஆரம்பித்திருக்கிறீர்கள், எத்தனை அழகு. அப்படியே மகிழ்ந்துபோனேன்.

ஆனால் கூடவே ஒரு கேள்வியும் அல்லவா கேட்டிருக்கிறீர்கள்?

>>>>>காக்காவும் வாணாம்,பாயும் வாணாம்,அண்ணாச்சியும் வாணாம்,இதுக்கு எதுனா காரணம் இருக்கா?சும்மா தெரிந்து கொள்ளத்தான்,வேறு காரணமில்லை<<<<<

இதெல்லாம் ஏன் எனக்கு வேண்டும், சகோதரா என்ற அருமைச் சொல் வழக்கு இருக்கும்போது என்று அன்புடன் கூறுங்கள், பிறகு உங்கள் கேள்விக்கு இதைவிட விளக்கமாக நான் பதில் சொல்கிறேன்.

சக உதிரன் என்பதே சகோதரன் என்பார்கள். ஆதாம் ஏவால் வாரிசுகள் என்றால் சக உதிரன் என்பது மிகவும் சரிதானே?

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள். அப்படித்தான் உங்களுக்கு காக்கா என்றழைப்பது என்று எனக்குத் தெரியும்.

இன்னும் காக்கா என்ற சொல்லின் ஆணிவேரை நான் கண்டுபிடிக்கவில்லை. அதை அறிந்த ஓர் அதிரைவாசியாவது இருக்கிறாரா என்பதும் எனக்குத் தெரியவில்லை. காக்கா என்று அழைப்பது தவறு காகா என்று அழைப்பதே சரி என்று மட்டும் கண்டு பிடித்திருக்கிறேன். அதுவும் மலையாளம் தந்த தகவல். சரியோ தவறோ தெரியாது.

இதயத்தில் அல்லாஹ் என்று பொரித்த கலை மற்றும் கவிநயம். அர அல என்று இசைகூட்டிய கவிதைக்கே உரிய சிக்கனச் சொல்நயம். இப்படியாய் கவிதை ரசனையிலேயே திளைக்கும் உங்களிடமிருந்து கவிதைக்கு மறுப்புச்சொல் கேட்கும்போது வலம்புரிச் சங்கிலிருந்து இடியோசை கேட்பதுபோல் முரணாக இருக்கிறது என்பதை இங்கே மீண்டும் பதிவுசெய்து இம்மடலை நிறைவு செய்கிறேன்.

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு