Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகை மாற்ற வேண்டும் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2012 | , ,

பேறு பெற்ற பெண்மணிகள் - 10

டெப்பீ ரோஜர்ஸ் (Debbie Rogers). அதுதான் அச்சிறுமியின் பெயர், ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்! அந்தப் பத்து வயதே நிரம்பிய ஸ்காட்லாந்துச் சிறுமி, தன் வீட்டுக்கு அருகிலிருந்த பாக்கிஸ்தானியின் கடையில் பொருட்கள் வாங்கச் செல்வாள். அவளுடைய ஊர், ஸ்காட்லாந்தின் கிளாக்கோ நகருக்கு அருகிலுள்ள 'கவ்கேடன்ஸ்' என்ற சிற்றூர்.

வழக்கமான பொருட்களை எடுத்துக் கொடுக்கும் கடைக்காரரின் மகன் முஹம்மதை அன்று காணவில்லை. "உங்கள் மகன் எங்கே?" என்று கேட்டு வைத்தாள் டெப்பீ. கடையின் மறைவான ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினார் முஹம்மதின் தந்தை.

"அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்?" புரியாமல் கேட்டாள் சிறுமி. தானும் தன் மகனும் முஸ்லிம்கள் என்றும், தமது மாrக்கக் கடமையான தொழுகையை அவன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான் என்றும் கடைக்காரர் விளக்கினார்.

"முஸ்லிம்.. ? தொழுகை...? அப்படியென்றால்...?" வெள்ளைக்காரச் சிறுமிக்கு விளங்கவில்லை.

அதற்குள், தான் தொழுது கொண்டிருந்த தொழுகை விரிப்பை மடித்துக் கொண்டு அங்குவந்து சேர்ந்தாr இளைஞர் முஹம்மது. தனக்குரிய தொழுகைக் கடமையை நிறைவேற்ற தந்தை உள்ளே சென்றார். தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டு, முஹம்மது டெப்பியிடம் பேசத் தொடங்கினார்.

டெப்பிக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டு, அவன் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்குச் சுருக்கமான தகவல்களைக் கூறினார் இளைஞர் முஹம்மது.

அதன் பின்னர், முஹம்மதை அடிக்கடி சந்திக்க விரும்பி இஸ்லாம், குர்ஆன், தொழுகை, மற்றுமுண்டான கடமைகளையும் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டாள் டெப்பி. அவளுடைய ஆர்வத்தைக் கண்ட முஹமம்து, தானே இன்னும் ஆழமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்கத் தொடங்கினார்.

"முஹமம்து எங்கே?" என்று ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டு டெப்பி தன் கடைக்கு வருவதை முஹம்மதின் தந்தை ஐயக் கண் கொண்டு நோக்கினார்! சில் வேளைகளில், முஹம்மதும், டெப்பியும் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

கடைக்காரரின் கழுகுக்கண் பார்வைக்கிடையே, அந்த 'இளசு"களின் தூய நட்பு தொடர்ந்தது. அவர்களின் பேச்சின் பெரும் பகுதி, இஸ்லாத்தையும் அதன் வேதமான குர்ஆனையும் பற்றியதாகவே இருக்கும். கொதிக்கும் பாலையிலிருந்து வந்தவர்கள் குளிர் நிழலைக் கண்டால் எப்படியிருக்கும்?! அன்று பதின் பருவத்தை (டீனேஜ்) எட்டியிருந்த டெப்பியும் அப்படித்தான் உணர்ந்தாள்.

எண்ணிப் பார்க்க வியக்கும் அளவுக்கு, ஏழாண்டுகள் கழிந்துவிட்டன! அந்த ஏழாண்டுகளில் டெப்பி கற்றவையோ ஏராளம்! அரபி மொழி மூலத்தில் அவள் குர்ஆனை ஓதக் கற்றிருந்தாள்! பாக்கிஸ்தானின் பஞ்சாபி மொழியையும் ஓரளவு பேசக் கற்றிருந்தாள்! இஸ்லாமியக் கொள்கைகளுள் ஏராளம் அவளுக்கு அத்துப்படி!.

தனது 16வது வயதில் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியிருந்தாள். ஆம்; மானுட வசந்தமான இஸ்லாம் மனத்தில் பதிந்தது!

1983 ஆம் ஆண்டில் டெப்பி ரோஜர்ஸ் 'ஆயிஷா'வானார்! தன்னை அன்று பிறந்த குழந்தையாக உணர்ந்தார்! இளைஞர் முஹம்மது புட்டா இன்பக் கடலில் நீந்தத் தொடங்கினார்! இந்நிலையில் ஒராண்டு கழிந்தது.

இளம்தளிர்க்கொடி டெப்பி, தான் பற்றிப் படரத் தனக்கொரு கொம்பு வேண்டுமென்பதை உணர்ந்தார். 'அருகிலேயே பசுமையான கொம்பொன்று இருக்கின்றதே! ஏன் அதைப் பற்றக் கூடாது?' சிந்தனை வயப்பட்ட ஆயிஷா, தன் நண்பர் முஹம்மதிடம் தன் விருப்பத்தை வெளியிட்டார்.

அதற்காகவே காத்திருந்தவர் போல், ஆயிஷாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார் முஹம்மது. ஆனால், அவர் தந்தை தடைக்கல்லாக நின்றார்! "இந்த வெள்ளைக்காரி நம் பிள்ளையைக் கெடுத்து விடுவாள்" என்று அடம் பிடித்தார்.

இதற்கிடையில், பாக்கிஸ்தானில் இருந்த முஹம்மதின் பாட்டி, தன் பேரன் வெள்ளைக்காரி ஒருத்தியை மணக்கப் போவது பற்றி கேள்விப்பட்டு, பாக்கிஸ்தானிலிருந்து பறந்து வந்தார். வந்தவுடன், ஆயிஷாவைப் பார்க்க விரும்பினார். ஆயிஷாவுக்கு குர்ஆன் ஓதத் தெரியும் என்பதையும், ஓரளவு பஞ்சாபி மொழியையும் பேசுவாள் என்பதையும் அறிந்து மகிழ்ந்தார். பிறகென்ன? பச்சைக் கொடி காட்டிவிட்டார் அந்த மூதாட்டி! அவரே முஹம்மதின் தாயையும் தங்கையையும் சம்மதிக்கச் செய்து, இரகசியமாகத் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

1984 ஆம் ஆண்டு, அந்த ஊரின் தொழுகைப் பள்ளியில் வைத்து, முஹம்மது - ஆயிஷா திருமண ஒப்பந்தம் நிறைவேறிற்று. ஆயிஷா தன் மருமகளாகப் போகிறாள் என்ற மகிழ்ச்சியால் உந்தப் பெற்ற முஹம்மதின் தாய், தன் கைப்படப் பாக்கிஸ்தானி சல்வார் - கமீஸ் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் புதுப்பெண்ணுக்கு. அதனை அணிந்து கொண்டே மணவிழாவுக்கு வந்திருந்தார் மணப்பெண் ஆயிஷா.

முஹம்மதின் தந்தை அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை! அவருக்குத் தெரியாமல், முஹமம்தின் தாயும் தங்கையும் மறைந்து நின்று மணவிழாவைக் கண்டு களித்தனர்.

இதற்கிடையே சில அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த 'ட்ரூடி' என்ற கிளாஸ் கோப் பல்கலைக்கழகப் பேராசிரியை ஒரு கருத்தாய்வு செய்வதற்காக ஆயிஷாவின் இஸ்லாமியப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தார். அந்தப் பெண் கல்வியாளரை ஆயிஷாவின் அழகிய அனுகுமுகுறை கவர்ந்தது. ஆறுமாதங்கள் தொடர்ந்து அந்த 'தஅவா' வகுப்பில் பங்கெடுத்தார் அப்பெண். அவரையும் இஸ்லாம் ஆட்கொண்டது! தனது ஆய்வின் முடிவில் 'கிறிஸ்தவ மதம் தர்க்கவியலால் நிரூபணம் செய்ய முடியாத கொள்கைகளால் புனையப்பட்டுள்ளது'  (Christianity is riddled with logical inconsistencies) என்பதை உணர்ந்தார்.

முஹம்மது - ஆயிஷா இணியருக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடை, ஐந்து பிள்ளைகள்! இப்போது சஃபியாவின் வயது 23. அம்மா ஆயிஷாவின் 'தஅவா'ப் பணியில் சஃபியாவின் பங்களிப்பும் உண்டு.

அவள் 14 வயது பெண்ணாக இருந்தபோது, அவள் வீட்டுக்கருகில் வயதான பெண்ணொருத்தி ஒரு பையைத் தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள். அதைக் கண்டு பரிதாபப்பட்ட சஃபிய்யா, அப்பெண்ணிடமிருந்து பையை வாங்கித் தானே முன்வந்து சுமந்து கொண்டு போய் அவளுடைய வீடு வரை விட்டு வந்தாள்! வழியில் இருவருக்கும் நடந்தது என்ன தெரியுமா? இஸ்லாம் பற்றிய அறிமுகம்!.

சஃபிய்யாவின் அருங்குணத்தால் கவரப் பெற்ற அந்த ஸ்காடிஷ் பெண்மணி, நாளடைவில் ஆயிஷாவின் வகுப்புக்கு வரத் தொடங்கினார். இப்போது அப்பெண்ணும் முஸ்லிம் பட்டியலில் சேர்ந்துவிட்டார்!

ஆயிஷாவுக்கு சத்தியத்தை எடுத்துரைத்து, அவளை அருட்பேறு பெறச் செய்த கணவர் முஹம்மது புரட்டா, அவள் மூலம் கிடைத்த அருட்செல்வங்கள் ஐந்தையும் தூய்மையான முஸ்லிம்களாக வளார்ப்பதில் தன் முழுக் கவனத்தையும் செலுத்துகின்றனர். ஆயிஷாவோ, எல்லோரையும் - முழு உலகையும் - முஸ்லிமாக மாற்றிட வேண்டும் என்ற குறிக்கோளை உடையவராக இருக்கின்றார்.

ஆயிஷாவின் வீடு, அகிலத்தின் சுகந்தங்கள் அனைத்தும் கமழும் ஓர் ஒளியில்லமாகத் திகழ்கின்றது. ஸ்காட்லாந்துக் குளுமையுடன், வீட்டுச் சுவர் முழுவதும் அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆன் வசனங்களின் வண்ண எழுத்துக்களால் அலங்கரிக்கப் பெற்றுள்ளது. அமைதியான புன்முறுவலுடன், முழு ஹிஜாபுடன் தன்னைக் காண வருவோரை வரவேற்கிறார் ஆயிஷா. இவருவைய வீட்டுச் சுவர்க் கடிகாரம், ஐவேளைத் தொழுகைகளின் நேரத்தைச் சரியாக அறிவிக்கும் விதத்தில் உருவாக்கப்படு, 'டிக் டிக்' செய்து கொண்டிருக்கிறது.

தன்னைச் சந்திக்க வருவோர்கெல்லாம், இப்பேறு பெற்ற பெண்மணி கூறுவது இதுதான் : "உலகம் முழுமைக்கும் உண்மை மார்க்கமாகிய இஸ்லாத்தின் ஒளியை எடுத்துச் செல்ல வேண்டும்! இதுவே என் கடமை! இன்ஷா அல்லாஹ், இது சாத்தியமே!" வித்தியாசமான இந்த வெள்ளகைக்காரப் பெண்ணைப் பற்றி வியந்துரைக்காமல் இருக்க முடியவில்லை!

ஆயிஷாவின் முத நோக்கம், தன் தாயையும் தந்தையும் இஸ்லாத்தில் இணைத்துவிடுவதாக இருந்தது.

தாயோடும் தந்தையோடும் பேசக் கிடைத்த வாய்ப்புகளிளெல்லாம், ஆயிஷா இஸ்லாம் பற்றியே பேசுவார். தந்தை கொஞ்சம் 'விடாக்கண்டனாக' இருந்தார். தாய் நோயால் தள்ர்ந்து போயிருந்தாள், மகளின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என்றெண்ணி, இஸ்லாத்தில் இணைந்தார்.

"ஒரு நாள் என் பெற்றோருடன் அடுக்களையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன், அப்பாவை நானும் அம்மாவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படிக் கூறிக் கொண்டிருந்தோம். சில சிமிடங்கள் எங்களிடையே மவுனம் நிலவிற்று. அந்த மவுனத்தை கலைத்துக் கொண்டு அப்பாவின் குரல் ஒலித்தது; 'ஒக்கே! ஓக்கே! முஸ்லிமாவதற்கு நான் சொல்ல வேண்டிய சொற்கள் யாவை?'

"அம்மாவும் நானும் ஆனந்த அதிர்ச்சியால் துள்ளிக் குதித்து, அப்பாவை ஆரத் தழுவினோம்! அழகாக நான் அரபி மொழியில் 'ஷாஹாதா'வை மொழிய, அப்பாவின் வாயிலிருந்து அது மழலை மொழியாக வெளிவந்தது. அந்த இன்ப நிகழ்ச்சியின் சில நாட்களுக்குப் பின், புற்று நோயால் பாதிக்கப்படிருந்த என் தாய் 'முஸ்லிமாக'த் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்!" என்று நெகிழ்ச்சியோடு பழைய நிகழ்வை விவரிக்கிறார் சகோதரி ஆயிஷா ரோஜர்ஸ்.

அதற்கு மூன்றாண்டுகளின் பின் தன் அண்ணனிடம் ஆயிஷா எடுத்த 'தஅவா' முயற்சியால், வேற்றூரில் பணி புரிந்து கொண்டிருந்த அந்தச் சகோதரர் தொலைபேசி மூலம் 'ஷஹாதா' மொழிந்து இஸ்லாத்தை தழுவினாr. அந்த நற்செய்தியைத் தன் வரைக் கொண்டு வந்து சேர்த்த எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, 'பிரிட்டீஸ் தொலைப் பேசித் துறை'க்குத் தன் மானசீகமான நன்றியை தெரிவித்தார் ஆயிஷா.

இன்னும் சில நாட்களில், அண்ணியும் அவருடைய பிள்ளைகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அவ்வரிசையில் அடுத்து வந்தவர், ஆயிஷாவின் சகோதரி மகன். ஆயிஷாவின் முயற்சி அத்துடன் நிற்கவில்லை. தனது ஊரான கவ்க் கேடன்ஸ் மக்களிடம் வீடு வீடாகச் சென்று, இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்யத் தொடங்கினார். கடந்த 22 ஆண்டுகளாக அவருடைய பணி தொடர்கின்றது.


தொடரும் இன்ஷா அல்லாஹ்...
-அதிரை அஹ்மது


இந்த அருமையான புத்தகத்தை நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக பதிந்திட அனுமதி தந்த IFT நிறுவனத்தாருக்கு எங்கள் உளமார்ந்த நன்றியும் துஆவும் என்றும் நிலைத்திடும் இன்ஷா அல்லாஹ்...

13 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆயிசா போல அகிலம் முழுக்க உருவாக வேண்டும்.
அவர் எண்ணம் போல அகிலமே ஒரே மார்க்கத்தில் வர வேண்டும்.
நாம் வெறும் முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளாமல் முழு இஸ்லாமிய வழிகாட்டுதலை ஒவ்வொரு செயலிலும் செய்தாலே பல ஆயிசாக்களை உருவாக்கவும் முடியும். இன்சா அல்லாஹ்!

அதிரை சித்திக் said...

அஹமது காக்கா..,அவர்களின் ..எழுத்து

பணி தொடர வேண்டும் எத்தனையோ

விசயங்கள் நம் கவனத்திற்கு வராமலே

போய் விடுகிறது இந்த அவசர கால உலகில்

இது போன்ற நிகழ்வுகளை மணி மணியாய்

எடுத்துரைக்கும் காக்காவின் பணி சிறக்க எல்லாம்

வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ..,

நீண்ட ஆயுளையும் ஆரோகியத்தையும் அல்லாஹ்

தந்தருள்வானாக ஆமீன் ..

அதிரை சித்திக் said...

முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்

பேரு பெற்ற பெண்மணிகள் புத்தகம் நமதூரில் எங்கு

கிடைக்கும் தங்களின் எழுத்திற்கு மரியாதை அளிக்கும்

விதமாக ஒரு புத்தகம் வாங்க வேண்டும் ..,மேடை பேச்சாலனுக்கு

கரவோசை ஊட்டம்..,எழுத்தாளனுக்கு நல்விமர்சனம் மற்றும்

பதிப்பகத்தாரின் புத்தக விற்பனை மூலம் எழுத்தாளரை அங்கீகரிப்பது

நல் விமர்சனம் பின்னூட்டம் மூலம் கிடைத்து விடும் பதிப்பகத்தாரின்

அங்கீகாரம் நாம் புத்தகம் வாங்குவதன் மூலம் கிடைக்கும் ...,

அஹமது காக்காவின் அணைத்து படைப்புகளும் அ.நி . மூலம்

நம்மவர்களுக்கும் சென்றடைய வேண்டும் ..,

Yasir said...

அல்லாஹூ அக்பர்....

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தான் பெற்ற இன்பத்தை யாவரும் சுவைக்க வேண்டும் என்பதில் அளவில்லா ஆவலுடன் அழைப்பு பணியில் ஆர்வம் கொண்டிருக்கும் ஆய்ஷாவை போல் நாமளும் ஆக.இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன் படி செயலாற்ற அல்லாஹ் உதவி செய்வானாக.

Anonymous said...

எத்தனை ஆயிசா வந்தாலும் அந்த புகழ் பெற்ற பெண்மணி போல் வருவதில்லை. நாம் பெயரில் தான் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமே தவிர செயல்களில் யாரும் இருப்பதில்லை.

அப்படி புகழ் பெற்ற பெண்மணியாக ஆகவேண்டும் என்றால் நாம் நம் மார்க்கத்தில் அச்சம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

sabeer.abushahruk said...

காக்கா,

இந்தச் சிறப்பான தொடரில் இடம் பெற்றிருக்கும் பேறுபெற்ற பெண்மணிகள் பலர் தமக்கு மார்க்கம் கற்பித்தவரையே விரும்பி மணமுடிப்பதை எந்த கண்ணோட்டத்தில் காண்பது?

இஸ்லாம் கவர்ந்ததைவிட நல்ல முஸ்லீமாக வாழும் மனிதர்களின் பண்புகளே மாற்று மதத்தவரைக் கவரும் என்று கொள்ளலாமா?

ஏடுகளைவிட எடுத்துக்காட்டுகள்தானே இறை மறுப்பாளர்களிளின் தேடலுக்கு விடைகாண வழிவகுக்கும்? அவ்வகையில், தங்களின் எடுத்துக்காட்டுகள் அடங்கிய இந்த எத்திவைப்பு அஸருக்குப் பிறகு வாசிக்கும் "அமல்களின் சிறப்பு" தஹல்லிமைவிட உயர்வான் தாவா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Unknown said...

"கொள்ளலாமா?"
கொள்ளலாம்.

"உயர்வான தஅவா."
ஆமாம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பேரு பெற்ற பெண்மணி,அந்தக் கண்மணி
இன்ஷா அல்லாஹ்,சுவர்க்கப் பேற்றையும் பெற
ஏகனை இறைஞ்சுவோம்.

Yasir said...

//நல்ல முஸ்லீமாக வாழும் மனிதர்களின் பண்புகளே மாற்று மதத்தவரைக் கவரும்/// -------- exactly but we are in short of these kind of people

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

அல்லாஹ் நாடினால் ஆய்ஷா போல் உலகம் முழுக்க உருவாக்கமுடியும் நாமும் துவா செய்வோம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.