பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 5

இதற்குப் பெயர்தான் தீவிரவாதமா ?

"பெண்கள் ஓர் ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் அடித்தளம். ஆனால் அந்தோ! குர்ஆனால் நமக்குக் கொடுக்கப்பட்ட இத்தகைய உரிமையினைச் செயல்படுத்துவதில் பாரா முகமாக இருக்கிறோம் நாம்!"

மேற்கண்ட கூற்றுக்குச் சொந்தக்காரப் பெண்மணி, ஒரு முன்னால் 'புரட்டஸ்டாண்டு லூதரன் எவாஞ்சலிஸ்ட்' என்றறியும்போது, நாம் வியந்து நிற்கின்றோம்!

இந்தப் பெண் 19 வயதுடையவராக இருந்தபோது, ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். அத்துடன், தன் ஓய்வு நேரங்களைச் சமூகத் தொண்டில் ஈடுபடுத்தி வந்தார்.

அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது! என்ன அது !?

அப்போது, ஹேம்பர்க் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் நாடோ, யூதர்களால் சுரண்டப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு, அநீதியிழைக்கப்பட்ட நாடு, அம்மாணவர்கள் அத்தகைய ஏழ்மை நிலையிலும், தம்க்கு கொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு உதவிகளைப் பெற்று, அவற்றைத் தமக்குள் ஒற்றுமையாகப் பகிர்ந்து கொண்டு, அவர்களின் மார்க்க அடையாளம் மாறாமல் அருங்கலைகளைக் கற்று வந்தனர். ஹேம்பர்க் நகரவாசிகள் அவர்களை வியப்புடன் நோக்கினர்.

சமூக சேவகியான இந்தக் கிறிஸ்தவப் பெண்ணும் அம்மாணவர்களை அணுகியதில் வியப்பில்லை. அவர்கள் பின்பற்றிய மார்க்கம் இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாம் என்று அறிந்தபோது, அதனைப் பற்றி அறிய முற்பட்டார்; அம்மார்க்கத்தின் அருமையான கொள்கைகளால் கவரப் பெற்றார்! தான் சேவையாற்றி வந்த பணிக்கு இயைபான சமுகப் பண்பாட்டு வாழ்வை ஒழுங்குற எடுத்துரைக்கும் ஒப்பற்ற மார்க்கமாக இஸ்லாத்தைக் கண்டார்.

இந்த எழை இளைஞர்கள் தமக்கு கிடைத்த சொற்பமான உணவைத் தமக்குள் பங்கிட்டு, எப்படிச் சகோதர வாஞ்சையுடன் உண்கிறார்கள்! இதுவன்றோ உண்மையான சகோதரத்துவம்! இதுவன்றோ சமூக ஒற்றுமையின் அடித்தளம்! சிந்திக்கத் தொடங்கிய இந்த 'டீன் ஏஜ்' பெண் அவ்விளைஞர்களின் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தினார். அடிக்கடி அவர்களைச் சந்திப்பது கொண்டு, இஸ்லாம் பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்தது இவருக்கு. பிறகு என்ன? 'கைருன்னிஸா'வாகி விட்டார் பெயருக்குப் பொருத்தமாக 'பெண்களுள் சிறந்தவர்' ஆகிவிட்டார்!

இன்றிலிருந்து நாற்பதாண்டுகளுக்கு முன் (1980களில்) அந்த அற்புதம் நிகழ்ந்தது! இஸ்லாத்தைத் தழுவிய பின்னர், தனது வாழ்க்கைத் துணைவராகத் தென்னாப்ரிக்காவின் ஓர்செஸ்டரைச் சேர்ந்த அப்பாஸ் ஜேக்கப் (அவரும் புதிய முஸ்லிம் தான்) என்பவரைத் தேர்ந்து, இஸ்லாமிய வாழ்வை இல்லறத்துடன் தொடர்ந்தார்.

இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனிலும் நபி வழியிலும் இதய அமைதி கிடைப்பதைக் கண்கூடாகக் கண்டார். தற்போது, கணவரும் மனைவியும் இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தம் முழு நேரப் பணியாக ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர்.

கணவர் அப்பாஸ் கூறுகின்றார்: "நாங்கள் வசிக்கும் ஊரில் தொழுகைப் பள்ளிவாசல் கிடையாது. அதனால், 1980 முதல் எங்களுடைய வீட்டின் ஒரு பகுதியைக் கூட்டுத் தொழுகைக்கு நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம்.

வெள்ளிக் கிழமை ஜும்ஆ குத்பாவை அப்பாஸே நிகழ்த்துகின்றார். முதலில் ஜெர்மன் மொழியிலும், பின்னர் அரபியிலும் போஸ்னிய மொழியிலும் அவரே அதனை மொழிபெயர்த்துக் கூறுகின்றார்.

கடந்த 35 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை ஜெர்மனியில் பெருகியுள்ளது. மேற்கத்திய நாடுகள் இவ்வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த, அல்லது இல்லாமலாக்க முயல்கின்றன! அந்த அளவுக்கு அவை இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றன!

ஆண்களைவிட பெண்களே அதிகமாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்! அதனால்தான் மேற்கத்தியத் தாக்குதல், இஸ்லாத்தில் பெண்கள் நிலை பற்றிய ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கியுள்ளது! ஆனால், மகிழ்ச்சிக்குரிய செய்தியும், அந்த மாயத் தோற்றத்தை மடியச் செய்யும் செய்தியும் என்ன தெரியுமா ? இஸ்லாத்தைத் தழுவும் 100 ஜெர்மானியர்களுLல் 70 பேர் பெண்களாவர்!

சகோதரி கைருன்னிஸா கூறுவதைக் கேட்போம் : "மேலை நாடுகள் முஸ்லிம் பெண்களைக் காமாலைக் கண் கொண்டு நோக்குகின்றனர், அதனால்தான், நம் பெண்கள் உடல் முழுவதும் மறைத்து 'ஹிஜாபு'டன் உடையணிந்திருக்கும்போது, நம்மை ஒடுக்கப்பட்டவர்களாக, பின் தங்கியவர்களாகப் பார்க்கின்றனர்; ஆதரவற்றவர்கள் என்று கருதி, 'அய்யோ பாவம்!' என்கின்றனர். மேலை நாட்டுச் செய்தி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்த மாயை இது!

"மேலை நாடுகளிலும் இன்னொரு வகையான வழக்கமான் தாக்குதல் என்ன தெரியுமா? செல்வம் மிகுந்துள்ள இஸ்லாமிய நாட்டுப் பெண்கள் ஆடம்பரமாகவும், காமப் பசி மிக்க அலங்காரப் பொருள்களாகவும், மறைவிடங்களில் பதுங்கி மணங்கமழ வாழும் "ஆயிரதோர் இரவு அழகு மங்கை' களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்! இதற்குக் காரணம், அவர்களுக்கு நமது மார்க்கத்தைப் பற்றிய அறிவின்மையே!.

"இஸ்லாமியப் புத்தாக்கம் (Re-Islamisation)" எனும் பெயரில் நடந்து வரும் மாற்றங்களை மேற்குலகம் 'அடிப்படைவாதம்' அல்லது 'தீவிரவாதம்' என்ற கோணத்தில் நோக்குகின்றது. இஸ்லாமிய விழிப்புணர்ச்சியானது, பொருளாதார முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அந்த நாடுகள் வன்மையாகக் கண்டிக்கின்றன. இது மட்டுமா? 'மனித உரிமை மீறல்' என்றுகூடக் கண்டிக்கின்றன!

"இஸ்லாமிய இயக்கம் என்பது பிற்போக்கானது என்றும், அதில் ஈடுபட்டு உழைப்போர் - அவர்களின் ஏழ்மை அல்லது அறியாமையின் காரணத்தால் மூளைச் சலவை செய்து, பிற்போக்கான நிலைக்குத் தள்ளுகின்றது என்றும் மேற்குலகு கருதுகின்றது!"

"சமூகத்தில் பெண்கள் தம்து பங்களிப்பைச் செய்வதற்கு 'ஹிஜாப்' முறை தடைக்கல்லாக நிற்பதாக மற்றொரு குற்றச் சாட்டும் நிலவுகின்றது. அதனால், 'ஹிஜாப்' என்பது ஆணாதிக்கத்தின் ஓர் அடையாளமாக இருப்பதாகவும் மேலைநாடுகள் கருதுகின்றன".

"இந்த 'ஹிஜாப்' எங்களை இதர பாகங்களிலிருந்து துண்டிக்கும் பிற்போக்குச் சாதனமா? அல்லது நமது ஊடகங்கள் கூறுவது போன்று, பெண்களின் சுதந்திரத்தைத் தட்டிப் பறிப்பதுவா? அல்லது பெண்ணினத்தின் பலவீனமா? இல்லையில்லை! ஆண் - பெண் சமூகத் தொடர்புக்கு ஓர் ஒழுங்குமுறையினை நிலைநாட்டும் அருமையான அடையாளம் இந்த 'ஹிஜாப்'

"நான் என்னைப் படைத்தாளும் அல்லாஹ்வுக்காகவே - அவனை அஞ்சியே - இந்த 'ஹிஜாப்' அணிகிறேன். இது  என்னை இஸ்லாத்தின் உறுதியாக நிலைத்திருக்கச் செய்கிறது. நான் பெண்தான் - ஆணில்லை என்ற உணர்வை எனக்கு எடுத்துரைக்கின்றது. நான் பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். அதனை விட மேலாக, நான் ஒரு 'தாய்' என்பதில் எனக்கு கூடுதல் பெருமையுண்டு இப்பெருமைக்குக் காரணம் இந்த 'ஹிஜாப்'தான்!"

ஜெர்மனியின் முஸ்லிம்கள் - குறிப்பாக பெண்கள் - ஐரோப்பிய நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூக்குரல் எழுப்பப்படுகின்றது. சட்டப்படி ஜெர்மன் குடியுரிமை இவர்களுக்கு உண்டு என்ற உறுதிப் பிரமாணம் இருப்பினும் கூட, அதுவும் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கவைக்கு உதவாத கதையாகத்தான் இருக்கிறது!

"ஐரோப்பிய நாகரிகத்தைப் பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற மேலை நாட்டுத் தத்துவம், கேட்பதற்குக் கவர்ச்சியாக இருக்கலாம்; ஆனால், அது நடைமுறைக்கு ஒவ்வாததாகும்" என்று கூறுகின்றார் இந்த ஜெர்மன் பெண்மணி!

அப்பாஸ் - கைருன்னிஸா தம்பதியரின் தற்போதைய தலையாய பணி, 'தஅவா' (இஸ்லாமியப் பிரச்சாரம்) ஆகும். ஏறத்தாழ, ஜெமனியின் எல்லா ஊர்களுக்கும் இப்பணிக்காகப் பயணம் செய்துள்ளனர் இவ்விருவரும்!

"இன்று ஜெர்மனியில் இஸ்லாம் பெருகி வருகின்றது. ஏராளமான தொழுகை 'முஸல்லாக்கள்' (தொழுமிடங்கள்) - சுமார் 500 உள்ளன. எனினும், 4 மில்லியன் (40 லட்சம்) முஸ்லிம் மக்கள் தொகைக்கு இது போதாது. அண்மையில் 50,000 ஜெர்மனியர்கள் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்! அவர்களுள் பெரும்பான்மையினர் பெண்கள்தாம் என்று கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன்" என்கிறார் கைருன்னிஸா.

ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையான 80 மில்லியனில், 2.5 மில்லியன் பேர் ஜெர்மன் முஸ்லிம்களாம். அதாவது, மொத்த முஸ்லிம் மக்கள் தொகையான 40 லட்சத்தில் ஜெர்மன் முஸ்லிம்கள் மட்டும் 60 சதவிகிதத்தினர்! மற்றவர்கள் துருக்கி, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், போஸ்னியா போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள்.

ஜெர்மன் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம், இதுவரை இல்லையென்றாலும், உள்ளாட்சித் துறைகளில் முஸ்லிம்கள் நிறையப் பேர் பணியாற்றுகின்றனராம்!

தனது வெளிநாட்டுப் பயணம் பற்றிக் குறிப்பிடும் போது, தென்னாப்பிரிகாவின் கேப்டவுனில் நடந்த முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி நினைவு கூர்கின்றார் கைருன்னிஸா.

அந்நாட்டில் ஆறு வாரச் சுற்றுப் பயணம் செய்து, பள்ளி வாசல்கள், கல்விக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள், ஆகிய இடங்களில் இஸ்லாமியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியது பற்றி ஆர்வத்துடன் குறிப்பிடுகின்றார் இப்பெண்மணி.

கைருன்னிஸாவின் அன்புக் கணவர் அப்பாஸ் கூறுகின்றார்" "எங்களுக்குப் பொருளாதாரக் குறைவு என்பதில்லை, அல்ஹம்துலில்லாஹ்! எமது பிரச்சாரத்திற்குத் தேவையான வசதி எங்களிடம் உண்டு. ஆனால், அருள்மறை குர்ஆன், ஹதீஸ், மற்றும் மார்க்க கடமைகள் பற்றிய நூல்களின் ஜெர்மனி மொழியாக்கம்தான் எமது தேவைகளுள் முதன்மையானது.


தொடரும்.. 
- அதிரை அஹ்மது


இந்த அருமையான புத்தகத்தை நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக பதிந்திட அனுமதி தந்த IFT நிறுவனத்தாருக்கு எங்கள் உளமார்ந்த நன்றியும் துஆவும் என்றும் நிலைத்திடும் இன்ஷா அல்லாஹ்...

6 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//சகோதரி கைருன்னிஸா கூறுவதைக் கேட்போம் : "மேலை நாடுகள் முஸ்லிம் பெண்களைக் காமாலைக் கண் கொண்டு நோக்குகின்றனர், அதனால்தான், நம் பெண்கள் உடல் முழுவதும் மறைத்து 'ஹிஜாபு'டன் உடையணிந்திருக்கும்போது, நம்மை ஒடுக்கப்பட்டவர்களாக, பின் தங்கியவர்களாகப் பார்க்கின்றனர்; ஆதரவற்றவர்கள் என்று கருதி, 'அய்யோ பாவம்!' என்கின்றனர். மேலை நாட்டுச் செய்தி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்த மாயை இது!//

மேலைநாடுகள் இன்றைய கால கட்டங்களில் பாடம் கற்றுக் கொண்டு திருந்தி வருகிறார்கள், ஆனால் வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டில் அவர்களால் இப்படிச் சுதந்திரமாக சுற்றிட முடியாத நிலையில் இங்கு வந்து சுற்றிட இடம் கொடுத்திருக்கும் அரபு நாடுகளென்று பெயர்தாங்கி நாடுகளை என்ன சொல்வது !?

பேறு பெற்ற பெண்மணிகளின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நமக்கும் மாற்று மதச் சகோதரர்களுக்கும் நிறைய காட்டுடன் கூடிய படிப்பினைனகள் இருக்கிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அறிய வேண்டிய நற்தகவல்கள்!
ஹைருன்னிசா படிப்பின்னை தரும் உயர்பெண்மணி!

இஸ்லாத்தை எத்திவைக்க திராணி இல்லாத நாம் குறைந்த பட்சம் நம் வாழ்வில் முழுமையான நெறிகளைப் பின்பற்றினாலே அது மாற்றாருக்கு(பெரியார் அப்துல்லாஹ் சொல்வதுபோல் உலகில் இரண்டில் ஒரு பிரிவாகிய இஸ்லாத்தை ஏற்க இருப்பவர்கள்)படிப்பினையாய் அமையும்.நாடியவர்களுக்கு அல்லாஹ்வின் ஹிதாயத் கிடைக்கும்.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
.
அல்லாஹ் யாருக்கு ஹிதாயத்தை கொடுக்க நாடிவிட்டானோ அவர்களை கொண்டுதான் இந்த மார்க்கத்தை அழகு பெற செய்கின்றான்.அப்படி பட்டவர்களில் நம்மையும் ஆக்கியருள்வானாக .

சகோதரி ஹைருநிஷா சொல்வது போல் காமவெறிபிடித்த ஓநாய்கள் பெண்களை போக பொருளாகவே பர்ர்க்கின்றன.அவர்களின் பார்வையை குருடாக்கும் வகையில் நாங்கள் போக பொருள்கள் அல்ல இஸ்லாத்தின் போதகர்கள் என்பதை பேரு பெற்ற பெண் மணிகள் வெற்றி கொடி ஏற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

sabeer.abushahruk சொன்னது…

படிப்பினைக்கு நிறைய இருக்கிறது இத்தொடரில்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

இது போன்று இஸ்லாத்தை தழுவியவர்களிடமிருந்து நமக்கு நிறைய படிப்பினை உள்ளது.

தாஃவா பணியில் அவர்களின் ஈடுபாடு நம்முடைய தாஃவா பணி ஒரு துளிகூட இல்லை என்பது வேதனையே. இது போன்ற மார்க்க பெண்மணிகளின் வரலாறுகளை படித்தாவது நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் போதுமானவன்.

அப்துல்மாலிக் சொன்னது…

அல்லாஹ் அந்த தம்பதியருக்கு உடல் வலிமையைக்கொடுத்து தஅவா வெற்றியடைய செய்வானாகவும்

மேலும் பரம்பரை முஸ்லிமான நமக்கு நிறைய படிப்பினை இருக்கு..