முன்னுதாரணம் கண்டு முஸ்லிமானவர்!
எங்கெங்கோ இருக்கும் இதய்ங்களை இணைப்பதற்கு இறைவனின் அருள் இன்றியமையாதது. இந்த உண்மையினை எடுத்துரைப்பதே கீழ் வரும் வரலாறு:
"அம்மா! இப்போது என்னைத் திருமணத்திற்கு வற்புறுத்தாதீர்கள்! தம்பி, தங்கைகளின் திருமணம் முடிந்த பிறகு, நீங்கள் விரும்பும் குணமுடையவளும், நான் கனவு கண்டு கொண்டிருக்கும் Ideal Wife ஆகிய பெண் கிடைக்கும் போது, இன்ஷா அல்லாஹ், நான் திருமணம் செய்வேன்!" தாயின் விருப்பத்தைத் தட்டாமலும், தனது நோக்கிலிருந்து வழுவாமலும் மறுமொழியளித்தார், ஹைதராபாதைச் சேர்ந்த தத்துவப் பேராசிரியர் டாக்டர் முஹம்மத் முர்தஸா சித்தீக்கி.
"அண்ணா! வயது, மதம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல! எனது சிந்தனைக்கு ஒத்த சிறந்த கணவர் என்றால் அது அவர்தான்" ஒரேயடியாகத் தன் மூத்த சகோதரர் டாக்டர் B.P.டுகாலிடம் வாதித்தார் வனிதா டுகால் என்ற அந்த இந்துப் பெண்!
பஞ்சாபின் சண்டிகரைச் சார்ந்த கணிதப் பேராசிரியர் டாக்டர் டுகாலும், ஹைதாரபாதைச் சேர்ந்த தத்துவப் பேராசிரியர் சித்தீக்கியும் சூடான் தலைநகர் கார்ட்டும் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பணியாற்றிய நண்பர்கள்.
ஒருபோது, டாக்டர் டுகாலின் தங்கை வனிதா தன் அண்ணனையும், அண்ணியையும் சந்திப்பதற்காகச் சூடானுக்கு வந்திருந்தார்.
அந்த நேரம், டாக்டர் டுகாலும் அவருடைய பிரிட்டிஷ் மனைவியும் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்குப் புறப்பட ஆயத்தமாயிருந்தனர், அத்தருணத்தில்தான் வனிதா டுகால் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். கணவனுக்கும் மனைவிக்கும் மட்டுமே பயண அனுமதி கிடைத்திருந்த நிலையில், தன் சிறு வயது மகளையும் தன் இளம் வயதுடைய தங்கையையும் எங்கே, யாரிடம் விட்டுச் செல்வது என்ற பிரச்சினை டாட்கர் டுகாலுக்கு எழவேயில்லை! உயிருக்குயிரான டாக்டர் சித்தீகி இருக்கிறார் அல்லவா?
நண்பரின் விருப்பத்தை அறிந்த போது, டாக்டர் சித்தீகியும் இன்முகத்துடன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார், திருமணமாகாத சித்தீகியுடன் வயது வந்த தங்கையையும் மகளையும் விட்டுச் செல்கிறோமே என்ற எவ்விதத் தயக்கமும் எழவில்லை டாக்டர் டுகாலின் மனத்தில்! அந்த அளவுக்குத் தூய்மையான பக்குவப்பட்ட இஸ்லாமிய அழைப்பாளர் டாட்கர் சித்தீகி!.
டாக்டர் டுகாலின் ஆங்கிலேய மனைவி கிறிஸ்தவராயிருந்த போதிலும், தன் மகளையும் மைத்துனியையும், குடும்பத்துடன் சூடானில் வசிக்கும் மற்ற இந்தியர்கள் அல்லது பிரிட்டிஷ்காரர்களிடம் விட்டுச் செல்வதைவிட, ஒழுக்கச் சீலரான டாக்டர் சித்தீகியிடம் விட்டு செல்வதையே அவரும் விரும்பினார்!
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் B.A.B Ed., படித்துத் தேறியிருந்த செல்வி வனிதா டுகால் 1954 இல் பிறந்தவர். தனது 22ஆம் வயதில் (1975) அண்ணன் B.P. டுகாலைச் சந்திப்பதற்காகக் கார்ட்டுமுக்கு வந்திருந்தார். அப்போதுதான் வனிதாவின் அறியாமைக் காரிருள் முடிந்து. அல்லாஹ்வின் பேரருள் விடிந்தது!
வனிதாவிடம் இயற்கையாகவே ஓர் உயர்ந்த குணம் குடிகொண்டிருந்தது, இளமை முதல் தீமைகளின் மீது ஒரு வித வெறுப்பும், அவற்றை எதிர்க்கும் ஆவேசமும், அவற்றைப் போக்குவதற்கான போராட்ட குணமும் அவரின் உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்தன.
டாக்டர் டுகாலும் மனைவியும் வெளிநாடு புறப்பட்டு விட்டார்கள்; அவர்களின் மகளும் வனிதாவும் டாக்டர் சித்தீகியுடன் தங்கிவிட்டார்கள்.
டாக்டர் சித்தீகி தமது வழக்கமான இஸ்லாமியப் பிரச்சாரத்தை வீட்டிலேயே நடத்துவார். அதுவே வனிதாவுக்கு, தவறாமல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. நாளடைவில், வீட்டுப் பெண் என்ற உரிமையோடு தானும் அதில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டார். டாக்டரின் அப்பழுக்கற்ற நடைமுறைகளும், விவேகமான விளக்கங்களும், அன்பு கலந்த ஆதரவும் வனிதாவைக் கவர்ந்ததில் வியப்பில்லை!
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த தன் அண்ணனிடமும் அண்ணியிடமும் வனிதா கூறிய செய்தி, அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதிர்ச்சியாக இருக்கவில்லை! "அண்ணா! நான் அவரைக் காதலிக்கிறேன்" என்று வனிதா துணிவுடன் கூற, "யாரை?" எனக் கேட்டார் டாக்டர் டுகால்.
தாம் உற்ற நண்பர் டாக்டர் சித்தீகி, தம் தங்கையின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார் என்று அறிந்தபோது, டாக்டர் டுகால் மகிழத்தான் செய்தார். ஆனால், தங்கையின் இந்த விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிப்பார்களா? இந்த எண்ணத்தைத் தங்கையிடம் வெளியிட்டபோதுதான், (இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கண்டபடி) வனிதாவின் தீர்மானம் வலுவாக இருந்ததை டாக்டர் டுகால் கண்டார்.
பெற்றோரின் சம்மதமே இறுதியானது என்று தங்கைக்கு கூறிவிட்டு தன் பெற்றோருடன் தொடர்பு கொண்டார் டாக்டர் டுகால். டாக்டர் சித்தீகி ஒரு முஸ்லிம் மட்டுமல்லர், அவர் ஓர் அற்புதமான மனிதர், அபூர்வமானவர் என்றெல்லாம் வாதிட்டு, எளிதாகத் தன் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுவிட்டார்! பிறகு என்ன? டாக்டர் சித்தீகியிடம் பேச வேண்டியதுதான்.
டாக்டர் சித்தீகி தனது குடும்ப நண்பர், முஸ்லிம்! இவர்களோ வேற்று மதத்தவர்கள்! ஆனால், டாக்டர் சித்தீகி போன்ற ஒருவர் தன் தங்கையின் கண்வராக அமைவது பெரும் பேறு என்று எண்ணினார் டாக்டர் டுகால். தீர்க்கமான ஒரு முடிவுடன் டாக்டர் சித்தீகியை அணுகித் தங்கையின் விருப்பத்தைத் தயங்கித் தயங்கி வெளியிட்டார் டுகால்.
டாக்டர் சித்தீகியின் இதயத்திலும் வனிதா பற்றிய ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. இஸ்லாத்தில் பெண்ணுரிமை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய பெருமை பற்றி அவர் விளக்கும் போதெல்லாம் வனிதா உருகிப் போவார். இஸ்லாத்தின் மற்ற கொள்கைகளாலும் நடைமுறைகளாலும் கவரப்பெற்ற இளம் பெண் அவர். தாம் தேடிக் கொண்டிருந்த, தம் தாய் ஆசைப்பட்ட, தமக்கு உகந்த ideal wife இவள்தான் என்று அடையாளம் கண்டு கொண்டார் டாக்டர் சித்தீகி. அதனால், அவருடைய இசைவு எளிதில் கிடைத்து விட்டது.
டாக்டரின் நிபந்தனைப்படி, 1975 பிப்ரவரியில் கார்ட்டூமின் மஸ்ஜிது ஃபாருக்கில் வனிதாவுக்கு "ஷஹாதா" சொல்லிக் கொடுக்கப்பட்டு, இஸ்லாமிய உறுதிமொழி பெறப்பட்டது. அன்று முதல் வனிதா 'சல்மா'வானார்! அதே ஆண்டு ஜூன் 24ஆம் தேதியன்று, 36 வயதுடைய டாக்டர் முஹம்மது முர்த்தஸா சித்தீகி அவர்களுக்கும், 22 வயதுடைய சல்மாவுக்கும் இந்தியாவில் திருமணம் இனிதே நடந்தேறியது.
மற்றவர்களைப் போன்று நானும் டாக்டர் சித்தீகியின் அறிவாற்றலாலும் ஒழுக்க நடைமுறைகளாலும் கவரப்பெற்றேன். அவரை man of character ஆக அறிந்து கொண்டேன். இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் தூயவர் அவர். எதைச் சொன்னாரோ, அதைத் தாமே கடைப்பிடிப்பவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். நயவஞ்சகத் தன்மை என்பது நஞ்சு போன்றது அவருக்கு! அவரின் சந்திப்புக்குப் பிறகு எனது உலகில் ஏகப்பட்ட மாற்றங்கள், உள்ளத்து உணர்வால், ஒழுக்கத்தால்! அதனால்தான் அவரைக் கணவராகப் பெற்றுக் கடைந்தேற முடிவு செய்தேன்" என்றார் சல்மா சித்தீகி.
திருமணத்திற்குப் பின்னர் ஒருநாள், டாக்டர் சித்தீகியின் மைத்துனர்களுள் ஒருவரும், டில்லியின் காவல்துறைத் துணைக் கமிஷனருமான திரு A.P.டுகால் டாக்டர் சித்தீகியிடம் கேட்டார்: "டாக்டர் சாஹிப்! என் சகோதரியை அவள் ஹிந்துவாக இருந்தாள் என்பதைத் தெரிந்தும், எப்படி உங்களால் திருமணம் செய்துகொள்ள முடிந்தது?"
‘’B.P.டுகாலின் தங்கையிடம் இனம் புரியாத தெவீகத் தொடர்பு ஒன்று இருந்ததை உணர்ந்தேன். அவள் எனது இஸ்லாமியச் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்டாள். மேலும், அடக்க ஒடுக்கமான பெண்ணாயிருந்தாள். ஓர் இஸ்லாமிய ஒளி அவளிடமிருந்து வெளிப்பட்டதை உணர்ந்தேன். அப்போதுதான், 'எனக்கு வேண்டிய, நான் தேடிக் கொண்டிருந்த ideal wife இவள்தான் என்று எனக்குத் தோன்றிற்று. படைத்தவனின் அருளால் கிடைத்துவிட்டாள் அவள்!"
டாக்டர் சித்தீகி அவர்கள் தத்துவப் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய நிலையிலும், அவரது இஸ்லாமியப் பிரச்சாரத்தால் முதியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் பயன் பெற்றனர். அப்போதெல்லாம், வனிதாவாக இருந்த சல்மா, டாக்டரின் எல்லா வகுப்புகளிலும் கலந்து கொள்வார். டாக்டர் சாஹில் சிறுவர் சிறுமியருக்கு குர்ஆனையும் இஸ்லாமிய நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுத்த போது, சல்மாவும் அவர்களோடு ஒருத்தியாக இருந்து, ஆர்வமாக கற்றுக் கொள்வதுண்டு. அவருடைய ஆர்வத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போவார் டாக்டர் சித்தீகி!
உண்மையில், திருமதி சல்மா சித்தீகி பேறு பெற்ற மெண்மணிதான்! நேர்மையான இஸ்லாமியப் பிரச்சாரகரை, சொல்லுக்கும் செயலுக்கும் இயந்தவரை, தத்துவப் பேராசிரியரை, உயர்ந்த உதாரண புருஷரைத் தேடிப்பெற்றுக் கொண்டார் அல்லவா!
அது மட்டுமா? அந்தத் தத்துவப் பேராசிரியர் மூலம் முத்துக்கள் இரண்டைப் பெற்றெடுத்தவர் சல்மா சித்தீகி! 1978இல் ரூபினா என்ற மகளையும், 1980இல் சமீர் என்ற மகனையும் திருமதி சல்மா ஈன்றெடுத்தார். ரூபினா MBA பட்டதாரியாகவும், சமீர் கணினி மென்பொருள் பொறியாளர் (Computer Sotware Engineer) ஆகவும் வளர்ந்து சிறந்துள்ளனர்.
டாக்டர் சித்தீகி என்ற புண்ணிய சீலர் தற்போது இல்லை! (இன்னாலில்லாஹி வ் இன்னா இலைஹி ராஜி ஊன்) திருமதி சல்மா சித்தீகியும் அவருடைய இரண்டு மக்களும் அந்தச் சிறு குடும்பத் தலைவரின் சீரிய பாட்டையில் இப்போது தங்களைப் பதியச் செய்து பயணம் செய்கின்றனர்.
2 Responses So Far:
இவர்கள் பேறு பெற்ற பெண் மணிகளே !
இதேபோல் நம்மிடையே இன்னும் ஆலமரமாக படர்ந்து விரிந்து நிறைய சகோதரிகளும் இருக்கிறார்கள் நம்மோடும் !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
நேரமின்மை அதோடு குழந்தைகளின் படிப்பு இப்படியாக இருப்பதனால் கருத்திட முடியவில்லை.
எங்கள் வாழ்விலும் நிகழ்ந்ததை எழுதுவதுபோல் நினைவுகள் பின்னோக்கி ஓடுகிறது.
தொடர்ந்து பதியுங்கள் பேறு பெற்ற பெண்மணிகள் புத்தகம் இரண்டு பாகங்களையும் இன்ஷா அல்லாஹ்.
Post a Comment