Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 13, 2012 | ,

தொடர் : 14
உத்தமப் பெண்மணி உம்முசுலைம் (ரலி)

இஸ்லாம் என்பது வெறும் காற்றை ஆதாரமாக வைத்துக் கட்டப்பட்ட கற்பனைக் கட்டடமல்ல!

முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட ஈமான் எனும் இரும்பால் எழும்பிய அது ஒரு எஃகுக் கோட்டை!

அதை முழுதும் அறிய வேண்டுமானால் அங்கே வாழ்ந்து இருக்க வேண்டும். அந்த சுவர்க்கத்தின் தென்றலைச் சுவாசித்திருக்க வேண்டும். தியாக வேள்வியில் புகுந்து வெளிவந்து இருக்க வேண்டும். சுவனம் சென்று திரும்பிய அந்த மாமனிதரைச் சந்தித்திருக்க வேண்டும்.அப்போதுதான், மங்காப் புகழ் பெற்ற அந்த தங்கத்தலைவரை முன் மாதிரியாகக் கொண்டு, மிகமிகச் சாமான்ய மானிடர்கள் எத்தகைய புண்ணிய சீலர்களாக, பாவக்கறை படியாத பளிங்கின் தூய்மை கொண்டவர்களாக, இகத்திலும் பரத்திலும் தூய வாழ்வைத் தேடிக்கொண்டவர்களாக, அல்லாஹ்வுக்கு அடிபணிதலும் அதற்காகவே உயிர் வாழ்தலும் எப்படி என்ற அற்புதத் தத்துவத்தை அறிந்து கொண்டவர்களாக எங்ஙனம் மாறிப்போனார்கள் என்ற விந்தையை நாம் முற்றிலும் புரிந்துணர முடியும்!

இந்த மேன்மக்கள் ஆண்களில் மட்டுமல்ல. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சில பெண்களும் ஈமானில் எப்படிப்பட்ட இமாலய உறுதி பெற்றுத் திகழ்ந்தார்கள் என்பதை இதோ இந்த வீரத் தாயின் வரலாற்றில் நாம் அறியலாம்.

உத்தமப் பெண்மணி உம்முசுலைம் (ரலி) அவர்கள் மதீனாவின் பனூ நஜ்ஜார் குலத்தைச் சார்ந்தவர்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார், அப்துல் முத்தலிபின் அன்னை சல்மாவின் பேர்த்தியாவார்! இவர்தான் புகழ்பெற்ற சஹாபி அனஸ் இப்னு மாலிக் உடைய அன்னையுமாவார்! 

இஸ்லாம் மதீனாவை அடைந்தபோது முதலில் அதனை ஏற்றுக்கொண்டவர்களுள் முக்கியமானவர் உம்மு சுலைம் (ரலி).

வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்ந்த நற்குண நங்கை, தன் கணவர் மாலிக்கை அல்லாஹ்வின் மார்க்கம் நோக்கி அனுதினமும் அழைத்து வந்தார். ஆனால், அறியாமைக் கால அனுஷ்டானங்களை விட முடியாத மாலிக், மனைவி மீது வெறுப்புற்று சிரியா சென்று அங்கு ஒரு பழைய பகைவனால் கொல்லப்பட்டு இறந்தார்.

அதன்பிறகு, நல்லொழுக்கமும் கூர்மையான அறிவும் நிறைந்த உம்மு சுலைமை மணக்க செல்வந்தர் அபூ தல்ஹா முன்வந்து பெண் கேட்டபோது, "அபிசீனியத் தச்சனால் செய்யப்பட்ட மரச்சிலையை வணங்கும் மடையனை மணக்க முடியாது" என்று முகத்துக்கு நேராகவே தைரியமாகப் பேசினார்.

மஞ்சளும் வெள்ளையும் (தங்கமும் வெள்ளியும்) மஹராக எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாக அபூ தல்ஹா தயாரானபோது, "மனப்பூர்வமாக இஸ்லாத்தைத் தழுவினால், அதையே மஹராக ஏற்றுக்கொள்கிறேன் வேறு எதுவும் தேவையில்லை" என்று உறுதியாய் நின்று, அதில் வெற்றியும் கண்டார் உண்மை விசுவாசி உம்மு சுலைம்! இந்த இனிய தம்பதிகளுக்கு அபூ உமைர், அப்துல்லாஹ் என்ற இரு ஆண்மக்கள் பிறந்தனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களின் இல்லத்திற்கு அடிக்கடி வருகை தருவார்கள். அப்பொழுது அவர்கள் குழந்தை அபூ உமைருடன் சிரித்து விளையாடுவார்கள். 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்: 

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு ஒரு தம்பி இருந்தான். அப்போது அவன் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தான். நபி(ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), 'அபூ உமைரே! பாடும் உன் நுகைர் (சின்னக்குருவி) என்ன செய்கிறது?' என்று சிரித்துக் கொண்டே செல்லமாகக் கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். (*)

இப்போது நாம் சற்றே பின் சென்று "கண்ணாடிக் குடுவைகள்" என்ற இத்தொடரின் அத்தியாயத்தைத் தொட்டு வர வேண்டியிருக்கிறது. (படிப்பவர்களின் ஞாபகத்திற்காக) அந்த அத்தியாயத்தின் இறுதி வரிகள் இவ்வாறு நிறைவடைகின்றன: (**)

"ரசூலுல்லாஹ் அவர்கள் யாரையாவது ஏசினால், அது மறுமை நாளில் அவருக்கு பாவப் பரிகாரமாகவும் மேலும் அவரை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக ஆக்கி வைப்பதற்கான முன்னேற்பாடாக ஆகிவிடும் என்பதையும் இது விஷயத்தில் என்ன மாதிரியான உடன்படிக்கையை இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் வேண்டி வைத்திருந்தார்கள் என்பதையும் வேறொரு சம்பவத்தில் நாம் விரிவாகக் காண்போம், இன்ஷா அல்லாஹ்!"

அந்த சம்பவத்தை, அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்:

எங்கள் வீட்டில் வளர்ந்த ஓர் சிறுமியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே கண்டார்கள். ஆச்சர்யத்துடன் "ஓ. அந்தச் சிறுமியா நீ? மிகவும் பெரியவளாக வளர்ந்து விட்டாயே! இனிமேலாவது உன் வளர்ச்சி அதிகரிக்காமல் போகட்டும்!" என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.

அந்தச் சிறுமியோ, அழுதுகொண்டே உம்மு சுலைம் (ரலி) இடம் சென்றாள். 

மகளே! உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் அழுகிறாய்?

அவள் அழுகையை நிறுத்தாமல், "அல்லாஹ்வின் தூதர், என் வயது இனிமேல் அதிகரிக்காமல் போகட்டும் என்று எனக்கெதிராகப் பிரார்த்தித்து விட்டார்கள். இனிமேல் ஒருபோதும் என் வயது அதிகமாகாது!" என்றாள்.

உடனே உம்முசுலைம் (ரலி), தம் முக்காட்டுத்துணியைத் தலையில் சுற்றிக் கொண்டு நபியைக் கண்டுவர பரபரவென்று கிளம்பி விட்டார்.

அல்லாஹ்வின் நபியே! என் வீட்டில் வளரும் அனாதைச் சிறுமி அழுகின்றாள்! 

என்ன விஷயம் உம்மு சுலைமே?

"அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அதாவது அவளுடைய ஆயுள் கூடாமல் போகட்டும்" என்று தாங்கள் பிரார்த்தித்ததாகக் கூறினாள்.

இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனித்துளிகள் சிதறியதுபோல் சிரித்தார்கள்!

பின்னர் அவர்கள், "உம்மு சுலைமே ! என் இரட்சகனிடம் நான் கொண்டிருக்கும் கோரிக்கையை நீ அறிவாயா?

என் இறைவா! நான் மனிதரில் ஒருவன். எல்லா மனிதர்களும் மகிழ்ச்சி அடைவது போன்றே நானும் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லா மனிதரும் கோபப்படுவது போன்றே நானும் கோபப்படுகிறேன். எனவே, என் சமூகத்தாரில் யாரேனும் ஒருவருக்கு எதிராக நான் பிரார்த்தித்து, அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால், நான் செய்த அந்தப் பிரார்த்தனையையே அவருக்கு பாவப்பரிகாரமாகவும் மறுமையில் உன்னிடம் நெருக்கமாக்கி வைக்கும் அம்சமாகவும் மாற்றி வைத்து விடுவாயாக! என்ற உடன் படிக்கையை நீ அறிவாயா உம்மு சுலைமே! 

என்று உரைத்தார்கள் அருள் வடிவான அண்ணல் நபி (ஸல்) அவர்கள். (***) 

இவ்வாறாக, ஏந்தல் நபி அவர்கள் எந்தக் காலத்திலும் எந்த ஜீவனையும் சோகத்தில் ஆழ்த்திடக் கருதியதே இல்லை! அதற்கு மாறாக, சுகப்படுத்தவே முயன்றார்கள். தம் வாழ்வில் சந்தித்த அனைத்துத் துன்பங்களையும் தொல்லைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு அவற்றையெல்லாம் தம் உம்மத்துகளுக்கு இன்பமாகவும் இனிமையாகவும் மாற்றித் திருப்பி அளித்தார்கள் திருத்தூதர் அவர்கள்.

ஒருநாள் உம்மு சுலைமின் கணவர் அபூ தல்ஹா (ரலி) நோன்பு நோற்றிருந்தார். நோய் வாய்ப் பட்டிருந்த சிறுவன் அபூ உமைருக்கு இறைவனின் நாட்டப்படி இறப்பு வந்து விட்டது! இதனைக் கணவரிடம் தெரிவித்தால், இஃப்தாருக்கு உணவு ஏதும் உண்ண மாட்டார் என்பதை உணர்ந்த உம்மு சுலைம் (ரலி) குழந்தையைக் கபனிட்டு ஓரிடத்தில் மூடிவைத்து, உணவு சமைத்து, நறுமணம் பூசி கணவரை வரவேற்க தயாராக இருந்தார். கணவர் வீட்டிற்கு வந்ததும், மகன் இப்போது எப்படி இருக்கின்றான் என்று நலன் விசாரித்தார். "நேற்றைவிட இன்று அமைதியாக இருக்கின்றான்" என்று உம்மு சுலைமிடமிருந்து பதில் வந்தது! கணவர் திருப்தியாக உணவு உண்டதும் அன்றிரவு இல்லறச் சோலையில் இருவரும் இணைந்தனர்! 

அதி காலையில் குளித்து முடித்து, கணவரைக் கண்டதும்,

"ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருளை இரவல் கொடுத்தான். இரவல் கொடுத்தவன் பின்னர், அதை திருப்பிக் கேட்டால், உரியவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமல்லவா?" என்று வினவினார் கணவரிடம்!

ஆம். கண்டிப்பாகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். என்றார் அபூ தல்ஹா (ரலி).

பிள்ளையை நமக்குத் தந்தவன் திரும்பவும் அதனைப் பெற்றுக் கொண்டான் என்று குழந்தையின் இழப்பை அப்போதுதான் உரைத்தார் உம்மு சுலைம்.

அண்ணலாரிடம் போய் அபூ தல்ஹா ஆறுதல் தேடியபோது, "உங்களின் நேற்றைய இரவில் அல்லாஹ் அருள் செய்வானாக" என்று பிரார்த்தித்தார்கள் எம் பெருமானார் (ஸல்). அன்றிரவு கருவுற்ற உம்மு சுலைம் அவர்களுக்கு, அண்ணல் நபியின் துஆவை ஏற்றுக் கொண்டு, அப்துல்லாஹ் என்ற அழகிய மகவை அந்த ஆண்டு அல்லாஹ் அருளினான்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதிலும் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் மட்டும் தம் பணியைச் சுருக்கிக் கொள்ளவில்லை! உஹத் யுத்தத்திலும் ஹுனைன் யுத்தத்திலும் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு, நெருக்கடியான இந்த இரு போர்களிலும் வில்லும் அம்பும் கொண்டு எதிரிகளின் மீது தாக்குதலும் நடத்தினார் இந்த வீராங்கனைத் தாய்!

கைபர் போரில் உம்மு சுலைம், இடையில் வாளோடு நிற்பதைக் கணவர் அபூ தல்ஹா (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சுட்டிக் காட்டியபோது, 

"உம்மு சுலைமே! உன் வாள் கொண்டு என்ன செய்வதாய் உத்தேசம்" என்ற அண்ணலாரின் கேள்விக்கு, 

"உருவ வணங்கிகளில் எவனாவது என்னருகில் நெருங்கும் வாய்ப்பு வந்தால், அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விடுவதற்காகத்தான் இந்தப் போர்வாள் அல்லாஹ்வின் தூதரே!"

என்ற அபூதல்ஹா மனைவியின் பதில் கேட்டு "அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல" சிரித்தார்கள் செம்மல் நபியவர்கள்.

"நான் சுவனம் சென்றேன். அங்கு ஒரு மெதுவான குரலைக் கேட்டேன். அது எவருடைய குரல் எனக் கேட்டேன். அதுதான் உம்மு சுலைம் என்று கூறப்பட்டது" என்று அண்ணல் நபி (ஸல்) அருளியதிலிருந்து அவரின் உயர்வினை நாம் அறியலாம்.

உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா (****)அபூ பக்கர் (ரலி) அவர்களின் கிலாபத்தின்போது வபாத்தானார்கள்.

o o o 0 o o o

(*) ஆதாரம்: புகாரி 6203


(***) ஆதாரம்: முஸ்லிம் 5073

(****) உம்மு சுலைம் என்ற அழகிய பெயரை வைத்துத் தான் "உம்மா  சளி" "உம்மா  சளி " என்று சளி பிடிக்க அழைக்கின்றனர் நம் சமூகத்தினர்!
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M.ஸாலிஹ்

17 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

****
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதிலும் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் மட்டும் தம் பணியைச் சுருக்கிக் கொள்ளவில்லை! உஹத் யுத்தத்திலும் ஹுனைன் யுத்தத்திலும் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு, நெருக்கடியான இந்த இரு போர்களிலும் வில்லும் அம்பும் கொண்டு எதிரிகளின் மீது தாக்குதலும் நடத்தினார் இந்த வீராங்கனைத் தாய்!
***

யா அல்லாஹ் ! எங்களைப் போன்ற பெண்மக்களுக்கும் பொறுமையையும், மனத் திடத்தையும், சகிப்புத் தன்மையையும் அருள்வாயாக !

ஜாஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரர் அவர்களே!

sabeer.abushahruk said...

"தங்கமும் வெள்ளியும் வேண்டாம், தங்களின் மதமாற்றம் வேண்டும் மஹராய்! என்றுமே நிலைக்கும் ஓரிறையை ஏற்கின்ற ஈமானே என்னை மணமுடிக்க எதிர்பார்க்கும் தகுதி!"

எத்துணைத் திடமானது இவர்களின் ஈமான்.

வியாழக்கிழமைகளை எதிர்பார்க்கத்தூண்டும் தொடரினைத் தரும் தோழா, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா - டா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒவ்வொரு வரியிலும் தெரியும் மின்னல் கீற்றின் பளிச் !

அவைகள் சொல்ல வரும் கருத்திலும் வர்ணனையிலும் மின்னுகிறது !

மாஷா அல்லாஹ் !

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான பதிவு

"அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல" சிரித்தார்கள் செம்மல் நபி (ஸல்) அவர்களை பற்றின சம்பவங்கள் அனைத்தும் இனிமை

மேலும் மேலும் இப்பதிவு முடிவில்லா தொடராக தொடர அமைந்து அதற்குண்டான நற்கூலியை அல்லாஹ் தந்தருள்வானாக...ஆமீன்

வீரப்பென்மணி உம்மு சுலைம் அவர்களை பற்றின தெரியாத பல தகவல்களை அறிய தந்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

"பாசத்தலைவனின் பசியறிந்து பரிமாறிய பரிவுமிக்க தம்பதிகள்!" (அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி))


M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நபிகளாரின் அரிய தகவல்கள்!

// தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள்.//

தண்ணீர் தெளிக்கப்படுவது எதற்காக
கொஞ்சம் விளக்கம் தருவீர்களா?

Yasir said...

புல்லரிக்கின்றது ஒவ்வொரு சம்பவங்களும்,அதனை நீங்கள் விளக்கி சொல்லும் விதமும்...இத்துனை தியாகங்கள் செய்து ரெடிமேடாக நம்மிடம் இஸ்லாத்தை அவர்கள் ஏத்தி வைத்து இருக்கின்றனர் அதனை பேணிநடப்பதும் பிறர்க்கு ஏத்தி வைப்பதும் நம் கடமை..அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா

Unknown said...

----மனப்பூர்வமாக இஸ்லாத்தைத் தழுவினால், அதையே மஹராக ஏற்றுக்கொள்கிறேன் வேறு எதுவும் தேவையில்லை" என்று உறுதியாய் நின்று, அதில் வெற்றியும் கண்டார் உண்மை விசுவாசி உம்மு சுலைம்! -----
எப்பேர்பட்ட மனஉறுதி , இறையச்சம்,,,,
இக்கால பெண்களுக்கு அன்னை உம்மு சுலைம்- படிப்பினை
சத்தியம் எனும் நூலெடுத்து நபிமணியின் நகைசுவையை கோர்த்து பெண்கள் அணிகலனாய் அணிய வேண்டும்.
இறையச்சமுள்ள சமுதாயத்துக்கு இதைவிட என்ன படிப்பினை வேண்டும். தொடரை தொடர்ந்து எழுதுங்கள்.,,, விழிப்புணர்வை விட மேலான சமுதாய பணி ஏதுமில்லை. சிந்திக்கும் மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன. அல்ஹம்துலில்லாஹ்
---------------------
இம்ரான்.M.யூஸுப்

KALAM SHAICK ABDUL KADER said...

\\இஸ்லாம் என்பது வெறும் காற்றை ஆதாரமாக வைத்துக் கட்டப்பட்ட கற்பனைக் கட்டடமல்ல!

முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட ஈமான் எனும் இரும்பால் எழும்பிய அது ஒரு எஃகுக் கோட்டை!\\

என்னே அற்புதமான-அழகான-நிதர்சனமான வார்த்தைகள்!

Canada. Maan. A. Shaikh said...

அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான தகவல் யா அல்லாஹ் இக்கால பெண்களுக்கு அன்னை உம்மு சுலைம் போல் ஈமானயும்
இறை அச்சதையும் கொடுப்பாயாக அமீன்

sabeer.abushahruk said...

//"ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருளை இரவல் கொடுத்தான். இரவல் கொடுத்தவன் பின்னர், அதை திருப்பிக் கேட்டால், உரியவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமல்லவா?"//

என்ன ஒரு அருமையான சமாதானம்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். படித்துகொண்டிருக்குபோது வழியதொடங்கிய அழுகை படித்துமுடித்ததும் மெதுவாகத்தான் வடிந்தது. அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

ஜாஹிர்
ஒழித்து = ஒளித்து

Iqbal M. Salih said...

மதிப்பிற்குரிய சகோதரி ஆமினா அவர்களுக்கும்

அன்பிற்குரிய சகோதரர்கள் அபுஇப்ராஹீம், அதிரைத்தென்றல் இர்ஃபான், இம்ரான் கரீம், பிறவிக்கவிஞர் கலாம், தஸ்தகீர், யாசிர், சபீர், ஷெய்க் ஜலாலுத்தீன், ஜஃபர் ஸாதிக் ஆகியோருக்கும் கருத்துகளுக்காக நன்றிகள்!

தம்பி ஜஃபர் ஸாதிக் அறியவும்:

இந்நிகழ்ச்சியை ஒட்டிய மற்றொரு ஹதீஸை அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், மதிய வேளையில் ஓய்வெடுப்பதற்காக எங்கள் இல்லம் வந்து தோள் விரிப்பில் படுத்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது. என் தாயார் உம்மு சுலைம் அவர்கள், வியர்வை கொட்டும் பகுதியில் நின்று, அதைத் துடைத்து, கண்ணாடிக்குடுவை ஒன்றில் சேகரம் ஆக்கினார்கள்.

இதைக் கண்டு எழுந்த நபி (ஸல்) அவர்கள், உம்மு சுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தங்களின் வியர்வையை நறுமணப்பொருளில் சேர்க்கிறேன் என்றார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்! (ஆதாரம்: நஸயீ 5276)

வியர்வை படிந்திருந்த தோல்விரிப்பில் தொழுவதற்காக சிறிது நீர் தெளித்து சுத்தம் செய்திருக்கலாம். அல்லது சற்றுத் தூசுகள் இருந்திருக்கலாம். பொதுவாக, நாம் தொழத் தொடங்குமுன், முஸல்லாவை ஒரு உதறு உதறித்தானே விரிக்கின்றோம்!

அல்லாஹுவே அனைத்தையும் அறிந்தவன்!

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பிற்கினியத் தம்பி இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களிடம் அல்லாஹ் வழங்கியுள்ள “ஹதீஸ்களைப் பற்றிய” நினைவாற்றலுடன் கூடிய அறிவுக் களஞ்சியத்தை எண்ணி வியக்கின்றேன்! உங்களின் அன்பு உடன்பிறப்பும் எங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜெமீல் பின் முஹம்மத் ஸாலிஹ் காக்கா அவர்கள் துபையில் நடந்த பிரிவு உபசார விழாவில் எனக்கு அன்பளிப்பாகத் தந்தவைகள் யாவும் ஹதீஸ் நூல்கள்.அவற்றைப் படித்து விட்டு என்னிடம் இங்கு (அபுதபியில்) ஆங்கில இலக்கணம் பயிலும் கீழக்கரை மாணவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டேன். உங்களின் இத்தொடர் மூலம் நாங்கள் இதுவரை அறிந்திராத எத்தனையோ ஹதீஸ்கள அறிவதற்கு ஒரு வாய்பை நீங்களும் அதிரை நிருபர் வலைத்தளமும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டீர்கள்= ஜஸக்கல்லாஹ் கைரன்.

Iqbal M. Salih said...

டியர் கவியன்பன்,

தங்களின் கீழக்கரை மாணவருக்கு என் ஸலாமும் சொல்லுங்கள். தங்களுக்குக் கிடைத்ததையே, பிறருக்கு அளித்துவிட்டதன் மூலம், இறையருளால், மிகப்பெரும் 'சதக்கத்துல் ஜாரியாவை'ப்பெற்றுக்கொண்டீர்கள். அதன்பொருட்டு மனம் மகிழுங்கள். பிரதிபலன் இன்ஷா அல்லாஹ், இங்கும் அங்கும் பன்மடங்கில் இருக்கும்!

KALAM SHAICK ABDUL KADER said...

டியர் ப்ரதர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்,

உண்மையில் எனக்கும் மகிழ்ச்சித் தான் என் மாணவனுக்கு அன்பளிப்பாக வழங்கியதற்கான காரணங்கள்:
1) அந்நூல்கள் ஆங்கிலத்தில் இருந்ததால், அம்மாணவனின் ஆங்கிலப் புலமைக்கும் வழிகாட்டும்
2) நான் அறிந்த வரை “மேலைநாட்டுப் பழக்கங்களில்” மூழ்கிக் கிடக்கும் நம் இளைஞர்கட்கு ஹதீஸ்களைப் பற்றித் தெரியப் படுத்த வேண்டும்
3) அம்மாணவனிடம் சொல்லித்தான் கொடுத்தேன், “இவைகள் எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்;அதுவும் நான் மதிக்கும் பெரியவரிடமிருந்து பெற்றவைகள்; ஆனால், நீ பெற்ற மதிப்பெண்ணுக்குப் பகரமாக ஏதேனும் அன்பளிப்பு வழங்குவதானால் இவ்வுலகாதாயமுள்ள பொருட்களை விட மறுமைக்கான ஆதாயமுள்ள பொருட்கள் யாவை என்று பார்த்தேன்;அவற்றுள் இந்த ஹதீஸ் நூல்கற்றான் மிகர்வும் சிறப்பானவை என்று என் மனம் கூறியதால் உன்னிடம் தந்து விட்டேன்” என்றேன்.

நிற்க. அம்மாணவனுக்கு இப்பொழுது அவரின் பாடத்தின் சுமைகள் கூடியதால் என் வகுப்பை நிறுத்தி விட்டேன். அதனால் அவர்களின் இல்லத்திற்குச் செல்வதில்லை; இன்ஷா அல்லாஹ் இனி காணும் வாய்ப்புக் கிட்டினால் உங்களின் அமானிதமான சலாத்தை ஒப்படைப்பேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மதிப்பிற்குரிய இக்பால் காக்கா அவர்களுக்கு,
தங்களின் உயர்ந்த விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

அதோடு என் பெயரை மிகச்சரியாக இதுவரை எழுதிவருவதற்கும் நன்றி. ஆங்கிலமும் தமிழும் ஃ போடுவதில் மோதிக்கொண்டதில் 'ஹ' என என் பெயரின் 2 வது எழுத்தை மாற்ற வேண்டியதாகி விட்டது. அல்லாஹ் மன்னிக்கனும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு