Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழகத்தில் விரைவில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவ கல்லூரி! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


சமீபத்தில் ஆஸ்திரேலியா வருகை தந்த கவிகோ அப்துல் ரஹ்மான் அவர்களை எங்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கும் ஒரு வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி தந்தான். 

இங்கு சிட்னி, மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு விஜயம் செய்து இஸ்லாத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசிய அவர்கள், தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்காக அவர்கள் வக்ப் வாரிய தலைவராக இருந்தபோது எடுத்த முயற்சிகளைப் பற்றியும், அது பல்வேறு காரணங்களினால் இயலாமல் போனதைப் பற்றியும், அந்த முயற்சியை மறுபடியும் துவங்கி இருப்பதை எடுத்துக் கூறினார்கள்.

இந்த மருத்துவ கல்லூரி, சமுதாய சிந்தனையில் எந்த வித லாப நோக்கமும் இல்லாமல் தொடங்கப்பட இருக்கிறது. இதை துவங்க அவர்களுக்கு 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக  அளிக்க திருநெல்வேலியை சார்ந்த ஒரு சகோதரர் முன் வந்துள்ளார். இதைப்பற்றிய கவிக்கோவின் காணொளியை இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.


மருத்துவக் கல்லூரி பற்றிய மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் கீழ்கண்ட என்னுடைய தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோதொடர்பு கொள்ளலாம் : email: msahib@gmail.com   Phone: +61 433 077 660.

நாமும் பங்கெடுத்துக் கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஈடுபாட்டுடன் செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ், நமதூருக்கு உள்ள டாக்டர்கள் பற்றாக்குறை நமது வம்சங்களுக்கு நீங்கும்.  

இன்ஷா அல்லாஹ், கவிக்கோ அவர்களை நமதூருக்கு வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களது முயற்சி கை கூடியதும் தெரியப்படுத்துகிறோம்.

தகவல் : மீரான் சாஹிப் - ஆஸ்திரேலியா

கண்கள் இரண்டும் - தொடர் - 5 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


அதிகாலையில் கண் விழிப்பவர்கள்

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பார்கள் என்று கூறியுள்ளனர். 

இரவு நேரங்களில் விடிய விடிய வேலை பார்ப்பவர்களும் ஆட்டம் போடுபவர்களும் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. வார இறுதி கொண்டாட்டம் வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மறுநாள் காலை 10க்கு அல்லது 12 மணிக்கு இன்னும் சிலபேர் பகல் 2 மணிக்கே கண் விழிக்கின்றனர்.

அன்று முழுவதும் அவர்களிடம் ப்ரஷ்னெஸ் இருக்காது. எதையோ இழந்த மாதிரியும், நோயாளிகள் போன்றும் சுறு சுறுப்பின்றி அந்த முழு நாள் முழுதும் இருப்பார்கள். இதெல்லாம் இரவுகளில் சரியாக தூங்காததினால் ஏற்படக்கூடியவை. இவற்றை வார விடுமுறை நாட்களில் இரவு முழுதும் கண்விழித்து ஆட்டம்போடும் எல்லோராலும் உணரமுடியும். இதற்கு தோதாக இப்பொழுது அரபு நாடுகளில் பெரும்பாலும் வெள்ளி, சனி என்று வாரத்திற்கு இரண்டு  நாட்கள்  விடுமுறை நடைமுறைப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்கள் போடும் ஆட்டத்தின் கலைப்பு நீங்குவதற்குள் அடுத்த வீக் எண்டை எட்டிவிடுகின்றோம். வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு விட ஆரம்பத்த்திலிருந்து நாட்கள் வெகு சீக்கிரமாக நகர்கின்றன. இப்படி ஆட்டம் பாட்டத்துடன். நாட்கள் நகர்வதினால் மவுத் நம்மை நெருங்குவதை நாம் உணரவில்லை.

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.   

1438 வருடங்களுக்கு முன்னாடியே நமக்கு அருளப்பட்ட இறைவேத்தில் எல்லாத் தொழுகையையும் (சுபுஹுத்தொழுகை உள்பட  சேர்த்து) சொல்லும் வசனம்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்த்கையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேனுவார்கள் .  அல்குர்ஆன் 23:,2,9

சுபுஹுத்தொழுகை பற்றி அண்ணலாரின் பொன்மொழிகள்

“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என் நபிகள் (ஸல்) அவ்ர்கள் கூறினார்கள் 
ஆதாரம்: புஹாரி

பல ஊர்களில் “தூக்கத்தைவிட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று ஃபஜர் பாங்கு சொல்லும்போது அரபியல் அஸ்ஸலாத்து கைரும்மின நவ்ம் என்று இரண்டு முறை குரல் கொடுக்கின்றனர். தொழ ஆரம்பிக்கும் சுமார் 10 நிமிடத்திற்கு முன் “தூக்கதை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர் அப்படி இருந்தும் பெரும்பாலான மக்கள் தூக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுபுஹு தொழுகைக்கு கொடுப்பதில்லை. 

25 வருடங்களுக்கு முன்பு சுபுஹுத் தொழுகைக்கு இளைஞர்களை பெரும்பாலும் காணமுடியாது இளைஞர்களிடம் தவ்ஹீதின் எழுச்சி வந்த பின்பு சுபுஹுத் தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் இளம் வயதினரை பள்ளிவாசல்களில் கனிசமாக காண முடிகின்றது. சுபுஹுத் தொழுகை சம்பந்தமாக மக்களிடையே குறிப்பாக இளஞர்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும் சில சமயங்களில் அவர்களிடம் இருக்கும் பொடுபோக்கைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் “வைகல் தோறும் தெய்வனம் தொழு” என்பதும் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று” என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கும் மற்றும் காலைத் தொழுகையான பஜர் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதைக் காண மகிழ்வாக இருக்கும். 

காலையில் எப்படியாவது வைகறை (பஜர்) தொழுகைக்கு எழுந்தாக வேண்டும். தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். தூய்மையான் அதிகாலை காற்று உடல் நலத்திற்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும்போது சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் உற்சாகம் அது மிகவும் உயர்வானது. 

பால் காரர்களும் பேப்பர் காரர்களும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல்பட முடிகின்றது.  சுபுஹு தொழுத நாட்களையும் சுபுஹு தொழாத நாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைகள் உங்களுக்கு விளங்கும். அதிரைநிருபரில்  வளம் வரும் நண்பர்கள் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பாகள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

இன்ஷா அல்லாஹ் அடுத்த 6 வது தொடரில் கண்களின் முக்கிய பாகங்கள்  அதன் அமைப்பு பற்றியும் பார்வை பாதிப்பை பற்றியும்  பார்போம்
தொடரும்...
அதிரை மன்சூர்

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 8 15

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2013 | , ,

D.H.Lawrence: டி.ஹெச்.லாரன்ஸ் இங்லாந்தில் நோட்டிங் ஹாம் ஷயர் என்ற ஊருக்கு அருகேயுள்ள ஒரு சிறு கிராமத்தில் 1885-ஆம் ஆண்டு பிறந்தார். ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட பெயர்களில் இவர் பெயரும்அடங்கும்.

ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பத்தில் பிறந்தவர். வறுமைதான் பாட்டன் பூட்டான் தேடிவச்ச பரம்பரைச் சொத்து. பள்ளி ஆசிரியை பணி செய்த அவருடைய தயார், குடும்பத்தை பீடித்த வறுமைப் பிசாசை விரட்ட அல்லும் பகலும் அயராது உழைத்தார். லாரன்சின் தாய் தந்தையரின் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாய் மறைந்தது. கையில் காசு இல்லாதவன் வீட்டில் சுற்றமும் நட்பும் சூழவருமோ? குடும்பத்தில் சண்டையும் வம்பும் புகுந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. வறுமைபுகுந்த இடத்தில் இவையெல்லாம்ஒன்று கூடி மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றும்.

தாய்-தந்தையரின் சண்டை சச்சரவுகளை கருத்தூன்றி கவனித்த  லாரன்சின் இளமனதில் சோகம் பசுமரத்து ஆணிபோல் ஆழாமாக பதிந்தது. அதன் தாக்கம் பிற்காலத்தில் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக மாற்றியது. 

Sons and Lovers என்ற ஒரு நாவல் எழுதினார். இந்த  நாவலின் பின்புலமே அவர் தாய்-தந்தையர்களின் தாம்பத்திய உறவின் பிரதிபலிப்பே. இது அவர் 1913-ஆண்டு எழுதிய முதல் நாவல்.

அடுத்து  1920-இல் The Rainbow என்ற நாவல். 

ஆண்-பெண் பாலுறவு விஷயங்களை Women in Love என்ற நாவலில் வெளிப்படையாகவே எழுதினார். அதை அடுத்து Aarons Road, Kangaroo, The Plumed Serpent, நாவல்களையும் எழுதி எழுத்துலகில் பெயர் பதித்தார்.

1928-ம் ஆண்டில் அவர் ஒரு கதை எழுதினார். அதை வெளியிட முயற்சி தொடங்கும் போதே ஆரம்பித்தது தலைவலி. ஆரம்பத்திலேயே தலைவலி தந்த புத்தகம் எந்த புத்தகம்? அது தான் "லேடி சாட்டர்லியின் காதலன்". Lady Chatterley’s lover. கதையின் கையெழுத்து பிரதியை தன் உதவியாளரிடம் டைப் செய்யகொடுத்தார்.

டைப் செய்வதை பாதியில் நிறுத்திவிட்டு “இது ரெம்ப ஆபாசம். நான் இதை டைப் செய்ய மாட்டேன்னு” என்று  உதவியாளர் திருப்பி கொடுத்து விட்டாளாம்.

எப்படியோ சமாளித்து பல அச்சு கூடங்களில் முட்டி மோதிய பின் ஒரு பதிப்பகம் மட்டும் அதை வெளிட முன் வந்தது. முதலில் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளி வந்தது. அவை எல்லாம் சீக்கிரமே விற்று முடிந்து இரண்டாம் பதிப்பும் வெளியானது. 

ஆசிரியரின் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக அச்சிட்டு வெளியாகும் புத்தகங்கள் [pirate] மார்க்கெட்டில் பெருக்கெடுத்து ஓடியதுடன் கதை விவகாரம் [பாலுறவு] வெளியில் கசிந்து போலீசின் எலி காதுகளுக்கு எட்டியது. கடை கடையாக புகுந்து ஒரு புத்தகக் கடை கூட பாக்கி விடாமல் "சாட்டர்லீயின் காதலனை" போலீஸ் வேட்டையாடியது. லாரன்சு மனம் ஒடிந்து போனார். pirate கொள்ளையர்கள் ஒருபுறம், போலீஸ் அட்டகாசம் மறுபுறம். ‘உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளதிற்கு இருபக்கம் இடி’ என்பதுபோல லாரென்ஸு இருபுறமும் மாறி மாறி அடி வாங்கினார். இதை ஒரு ஏழை எழுத்தாளனால் தாங்க முடியுமா?

இதற்கிடையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றோடு ஒன்று ‘’மோதிக்” கொண்டன [ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன’ என்ற இந்த வரி ’ஜஸ்ட் உங்கள் வாசிப்புக்காக சும்மா போட்டது தானே தவிர நீங்கள் ஒன்றும் நம்நாட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற ‘குழாயடி’ சண்டை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்].

கடைசியாக 1958-ம்-ஆண்டு பிரிட்டிஷ் அரசு lady Chatterley’s lover-ருக்கு விதித்த தடையே நீக்கியது, அதோடு மட்டுமல்ல, அது பெற்ற தண்டனைக்கு ‘கழுவாய்’ யாக  இலக்கிய அந்தஸ்தையும் கொடுத்தது. பாவம் இந்த நல்ல செய்தியை கேட்டு மகிழ அதை எழுதிய லாரென்சுதான் இல்லையே!. ஏவனோ ஒருவன் நெத்தி வியர்வை நிலத்தில் சிந்தி இரவும் பகலும் பாடுபட்டு உழைத்து உருவாக்குகிறான். வேறு எவனோ ஒருவன் உண்டுகளிக்கிறான். இதுகாலம் போடும் ‘ராங்கால்’ [wrongcall] இதை மாற்ற எவன் வருவான்?

ladyChatterley”s Lover தடை மேலை நாடுகளில் அகற்றப்பட்டாலும் கீழை நாடுகள் பலவற்றில் இன்னும் தடை நீக்கப்பட வில்லை. 

Lady Chatterley’s Lover தமிழ்நாட்டு திராவிட கட்சிகளின் அரசியலிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. 1961 ஆண்டில் வேலூரில் நடந்த தி.மு.க பொதுக் குழுகூட்டத்தில் E.V.K.சம்பத் மாற்றங்களை கொண்டுவர முயற்சித்த போது ராசா-பாச நிகழ்வுகள் நடந்தேறியது. சம்பத் கொண்டு மாற்றங்களில் ஒன்று தி.மு.க. தலைவர்கள் மேடைகளில் ஆபாச வார்த்தைகளை பேசக்கூடாது என்பதும் ஒன்று. இதை ஏற்று கொள்வது போல் ஏற்றுக் கொண்ட அண்ணா சிலநாட்கள் கழித்து மாயவரம் பொது கூட்டதில் Lady Chatterle’s Lover கதையை விவரித்து பேசினார். இதனால் சம்பத் தி.மு.க.வை விட்டு விலக இதுவும் ஒரு காரணமானது.

Sir.Arthur Conan Doyle எழுதிய கதைகளில் வரும் துப்பறியும் சிங்கம் ‘ஷெர்லோக் ஹோல்ம்ஸ்’க்கு ஐரோப்பா, அமெரிக்கா முழுதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஷெர்லோக் ஹோல்ம்ஸ் வில்லனுடன் சண்டைசெய்த போது ஆற்றில் விழுந்து இறந்து விடுவதாக 1893ல் கோனாண்டோயல் ஒரு கதைஎழுதினார். அந்த கதையோடு புகழ்பெற்ற ஹோல்ம்ஸு கதாபாத்திரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி போட்டதோடு துப்பறியும் கதை எழுதுவதையும் நிறுத்திவிட்டார். தங்கள் "இதய தெய்வம்" துப்பறியும் சிங்கம் ‘ஹோல்ம்ஸ்’ கதைகள் ‘இந்தா‘ வரும்’ அந்தா வரும்’ என்று ஐந்து ஆண்டுகள் காத்திருந்து எதிர்பார்த்த ரசிக பக்தர்களுக்கு ஏமாற்றமே பதிலாக கிடைத்தது. காத்திருந்த ரசிகர்கள் பொறுமையிழந்து கொதித்துப் போனார்கள். "பொறுத்தது போதும் தோழா! பொங்கி எழு" என்று போர் முரசு கொட்டி முழக்கமிட்டு போராட்டத்தில் குதித்தார்கள். மறியல் செய்தார்கள்! பத்திரிகைகளில் அறிக்கை விட்டார்கள். ஒன்றும் ஒப்பேறவில்லை. இவர்களின் போராட்டம் போர்முரசு ஒன்றும் எழுத்தாளர் கேநோண்டோயில் காதில் ஏறவில்லை. காவிரியில் தண்ணீர் விடக்கோரி தமிழ்நாட்டில் கூட இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்ததில்லை.

கடைசியாக எழுத்தாளர் ஆர்தர் கோனண்டோயல் வீட்டுமுன் மறியல் செய்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். ‘ஹோல்ம்சை’ மீண்டும் உயிருடன்” கொண்டு வரவேண்டும். துப்பறியும் கதை எழுத வேண்டும்’’ என்று ஆர்தர் கோனண்டோய்ல் இடம்’ கருணை மனு’’ சமர்பித்தார்கள். ’இது என்னடா பெரிய பேஜ்ஜாரா போச்சுன்னு’ புலம்பியபடியே ஆர்தர் கொனண்டோயல் மனுவை வாங்கி ஆர்பாட்டகாரர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்., ஆர்பாட்டகாரர்களும் ‘கொனோண்டோயல் வாழ்க! ஆர்தர் கொனண்டோயல் வாழ்க!! எழுத்துலகச் சிற்பி வாழ்க’ என்ற கோஷத்துடன்  அமைதியாக களைந்து போனார்கள். இந்த அமளி துமளி எல்லாமே தன் இமேஜை வளர்த்து கொள்ள கேநோண்டோயலே முன்கூட்டியே போட்ட திட்டம் என்று நினைக்காதீர்கள். அந்த அரசியல் தந்திரம்யெல்லாம் அங்கே கிடையாது. வேறே எங்கேன்டு கேக்குரியாள? உ...ஸ்....ஸ்....ஸ் ரகசியம்.

ஆர்தர்கோனண்டோயல் “வெள்ளை”க் காரர் அல்லவா! கொடுத்த வாக்கு மாறாமல் செத்துப்போன ஹோல்ம்சை எமனிடம் மன்றாடிக் கேட்டு வாங்கி மீண்டும் கதாநாயகனாக போட்டு துப்பறியும் கதைகள் எழுதினார். இதுவே நம்ம  நாட்டு எம்.பி, எம்.எல்.ஏ.வாக இருந்தா கொடுத்த வாக்கை காப்பாத்துவானுங்களா?" ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொன்னதோடு சரி. சொன்னதையல்லாம் காத்துலே உட்டுட்டு அவங்க ஜோலியே பார்த்துகினு போயே போயீடு வானுங்க. இனிமே அவங்க மூஞ்சியெ அடுத்த எலக்சன் டயத்துலேதான் பாக்க முடியும், ஆனா வெள்ளக்காரன் வெள்ளக்கரந்தான் சொன்னத செய்வானுங்க செய்வதை சொல்வானுங்க. அதனாலேதான் அவன் நாடு முன்னுக்கு வந்துச்சு. இல்லேன்னா நம்ம மாதிரி குந்திகின்னு ஈக்க வேண்டியதுதான்
தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்

மீண்டெழுவாய் எங்கள் சகோதரா (MSM-n)! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2013 | , , ,

அதிரைநிருபர் பங்களிப்பாளர்களில் முதன்மையில் இருப்பவர்களில் ஒருவரான எங்கள் அன்புச் சகோதரர் MSM நெய்னா முஹம்மது அவர்களின் அருமைத் தாயார் அவர்கள் இன்று அதிகாலை 1:30 மணிக்கு வஃபாத்தான செய்தி அறிந்து வருந்துகிறோம். சகோதரர் MSM-நெய்னா முஹம்மது அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த இழப்பினை பொறுத்துக் கொள்ளும் சக்தியையும் சாந்தியையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டி நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

சகோதரா,

என்ன செய்துவிடமுடியும் ?
உன்னால்
என்னதான் செய்துவிடமுடியும்?

உறுப்புக் கெட்டுபோனால்
உன்னுறுப்பை
அறுத்துக் கொடுப்பாய்,
இரத்தம் திரிந்துவிட்டால்
நித்தம் கொடுப்பாய்,
உயிரைப் பகிர
உம்மாவுக்குப் புகட்ட
உன்னால் முடியுமா?

கண்ணுக்கு இமையென
உம்மாவைக் காத்தாய்
கண்மூடிய பின்பும்
கண்ணான உன்னைக்
காக்கும் உன்தாயின் துஆ

அகவை முதிர்ந்த உம்மாவைப்
பறவை தன் குஞ்சைச்
சிறகைக் கொண்டு காப்பதுபோல்
உறவைக் கொண்டு பார்த்தாய்

சொற்களாகவும் செயல்களாகவும்
உன்னுள் வாழும் உம்மா
இறப்பதில்லை சகோதரா

உள்ளத்தை உருக்கி
கண்ணீராய் உதிர்க்கும் நீ
உம்மாவின் நினைவை
உதறிவிட முடியாது என
பதறிவிடாதே
பறிகொடுத்ததை எண்ணி
தன்னிலைச்
சிதறிவிடாதே

நீ
அடக்கம் செய்து வைத்த
உம்மா
உன்னைத்
தொடக்கம் செய்துவைத்தது
முடக்கம் கொள்ளவல்ல

தந்தவன் எடுத்துக்கொள்வதும்
வந்தவர் செல்வதுவும்
கணக்குச் சரிதான் என்று
தனக்குத் தானேசொல் ஆறுதல்

உன்னை மொய்த்துக்கொண்டிருக்கும்
உம்மா நினைவிலிருந்து
மீண்டுவா சகோதரா

எல்லா துஆக்களும்
ஒலித்து ஓயும்
உம்மாவின் துஆ மட்டுமே
நிலைத்து நீளும்

வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறது!
(அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்)

அதிரைநிருபர் பதிப்பகம்.

‘அதிரையன்’ என்ற அபுல் ஹசன்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2013 | , , , , , ,


நான் முன்பு ஓர் இழையில் மேற்கண்ட தலைப்பில் தகவல்களைத் திரட்டித் தருவதாக வாசகர்களுக்கு வாக்களித்திருந்தேன்.  நீண்ட இடைவெளியாகிப் போனதாலும், குறிப்புகள் தரவிருந்த மூத்தவர்களின் நினைவாற்றல் குறைவினாலும், சிலவற்றை மட்டுமே திரட்ட முடிந்தது.

வாவன்னா சார், ஹாஜா முஹைதீன் சார் ஆகிய இருவரிடமிருந்து திரட்டிய தகவல்களுடன், எனது நினைவில் உள்ளவற்றையும் சேர்த்து உருவானதே இந்தப் பதிவு.

நமதூரில், பழைய அஞ்சல் அலுவலகத்தின் எதிரில் இயங்கிவந்த ‘ABC பிரிண்டர்ஸ்’ உரிமையாளர் அபூபக்ர் அவர்களின் இளைய மகனாகப் பிறந்தவர்தான், நமது ‘அதிரை எழுத்துலக முன்னோடி’ அபுல்ஹசன் அவர்கள். 

அவரின் உலகம் மிகக் குறுகியது.  அதாவது, அவருடைய வீட்டின் கிழக்குப் பக்க அறை.  ஏறக்குறைய ஒரு House arrest மாதிரியான ஒரு குறுகிய வாழ்க்கை!  காரணம், ஏதேனும் ஒரு நோயா?  தெரியவில்லை.  அல்லது சாபமா?  தெரியாது.  மன நிலை சரியில்லையா?  தெரியாது.  கல்விக் குறைவா?  அதுவும் தெரியாது.  ஆனால், ஒன்று மட்டும் என் நினைவில் இருக்கின்றது.  அந்த வீட்டில் மிக நீண்ட காலமாக, ‘பக்கீர்மத்தா’ என்ற வெளியூர் மூதாட்டி இருந்துவந்தார்.  அவருக்குச் செல்லப் பிள்ளை நமது கதாநாயகன்.  

அபுல் ஹசனின் நடமாட்டம் வீட்டில் இல்லையென்றால், ‘எங்கே எம்புள்ளே’? என்று தேடத் தொடங்கிவிடுவார் அந்த மூதாட்டி.  அவர் வெளியில் போய்த் திரும்பிவரத் தாமதமானால், அந்தக் கிழவி வாசலிலேயே காத்துக் கிடப்பார்.  படிப்பது பள்ளிக்கூடத்தில்தான் என்ற நியதி, அந்தக் கிழவிக்குப் புரியாது.  இதையும் உடைத்து, ராஜாமடத்தின் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, ஒரு சைக்கிளையும் வாங்கிக் கொடுத்திருந்தார் அபுல் ஹசனின் தந்தையார்.  தன் மகனின் திறமையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். வாப்பாவின் ஆசை, தன் பிள்ளை கல்வியில் சிறந்தவனாக உருவாக வேண்டும் என்பதே.  ஆனால் கிழவியின் நோக்கமோ, பிள்ளை பத்திரமாக இருக்க வேண்டும் என்பது.  கல்வியும் பாதுகாப்பும் இன்றியமையாமல் இருக்கும் இந்தக் காலம் வேறு;  அந்தக் காலத்தில் யார் இதைப் பற்றிச் சிந்தித்தார்?  ‘பாதுகாப்பு இல்லை’ என்ற காரணத்தால், அபுல்ஹசனின் கல்வி இடையில் நின்றது.  1950 களில் பள்ளிப் படிப்பை சீரியஸ் ஆகப் பலரும் எடுத்துக்கொண்டதில்லை.  முடிவில், வாப்பாவின் முயற்சியால் தொடர்ந்த பள்ளிப் படிப்பு, இடைநிறுத்தத்திற்கு ஆளானது.  ‘East or west, home is best’ என்றாயிற்று அபுல்ஹசனுக்கு.  

அந்தக் காலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ‘சுதேசமித்திரன்’ என்ற நாளேடு, கதிர், குமுதம், கல்கண்டு, ஆனந்த விகடன், கலைமகள், மஞ்சரி, கல்கி, முஸ்லிம் முரசு என்று எல்லாப் பத்திரிகைகளையும் வாசிக்கும் பழக்கத்தைத்  தமது அன்றையப் பொழுது போக்காக ஆக்கிக்கொண்டார் அபுல் ஹசன்.  தன் மகனின் வாசிப்பு ஆர்வத்தைக்  கண்டு, தவறாமல் அந்தந்தப் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கொணர்வார் தந்தையார்.  சில மாதங்களில் தந்தையார் அபூபக்ர் அவர்கள் சென்னையில் வர்த்தகம் ஒன்றைத் தொடங்கினார்.

இதுதான் தக்க தருணம் என்று, அபுல்ஹசனை மதராசுக்குக் கூட்டிச் சென்றார் தந்தை.  சில மாதங்களே கழிந்த சென்னை வாழ்க்கையில் அபுல் ஹசன் வெறுப்படைந்தார்.  ஒரு நாள் தந்தைக்குத் தெரியாமல், புகை வண்டி ஏறி ஊருக்குப் பயணமானார் அபுல் ஹசன். நடு ராத்திரி நேரத்தில் வண்டி கடலூர் நிலையத்தில் நின்றபோது, வண்டியை விட்டு இறங்கி, தன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார்!  ஊருக்குப் புறப்பட்டுவிட்டான் பிள்ளை என்றறிந்த தந்தையார், வீட்டுக்குத் தெரிவித்தார்.  அதிராம்பட்டினத்துப் புகைவண்டி நிலையத்தில் பிள்ளை வந்திறங்குவான் என்ற எதிர்பார்ப்புடன் நின்றவர்களுக்கோ ஏமாற்றம்!  அந்தக் காலை வண்டியில் வரவில்லை; இரவு வண்டியிலாவது வருவார் என்ற எதிர்பார்ப்பில் உறவினர்கள் நின்றனர்.  அப்போதும் வரவில்லை!

‘என்ன ஆனார் அபுல் ஹசன்?’ என்ற கேள்வி, எல்லார் மனத்தையும் அச்சமூட்டிற்று.  கடலூர் நிலையத்திலிருந்து, மாயூரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி என்று எல்லா ஊர்களிலும் ஆட்களை அனுப்பித் தேடுதல் வேட்டை தொடங்கிற்று.  ஐந்தாறு நாட்கள் சென்ற பின், உடைகளில் அழுக்குப் படிந்தவராக ஊருக்கு வந்து சேர்ந்தார் அபுல் ஹசன்!  பக்கீர்மத்தாவின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை!  ‘எம்புள்ளை எங்கும் போகவேண்டாம்; வீட்டிலேயே இரு வாப்பா’ என்று கூறினார் பக்கீர்மத்தா.  அபுல் ஹசன் மீண்டும் தனது ‘கல்வத்’ (தனித்திருப்பு) வாழ்க்கையைத் தொடர்ந்தார்.  அடுத்து வந்த சில ஆண்டுகள், அவரின் இறப்பு வரை, அந்த மூதாட்டியின் விருப்பப்படியே அமைந்துவிட்டது!

அந்த நாட்களில்தான், அவர்களின் வீட்டுக்கருகில் நாங்கள் ‘இக்பால் நூலகம்’ என்ற நூலகத்தைத் தொடங்கினோம்.  அங்கிருந்த நூல் பட்டியலை அவரிடம் காட்டினோம்.  என்னென்ன புத்தகங்கள் எங்கள் நூலகத்தில் இருக்கின்றன என்பதை அபுல் ஹசன் மச்சான் தெரிந்துகொண்டார். எங்கள் நூலகத்தின் நிரந்தர வாசகரானார்.  அந்தக் காலகட்டத்தில்தான், சிறுவர்களான நாங்கள், ‘அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா’வைப் பொது நிகழ்ச்சியாக மரைக்கா பள்ளிக்கு வெளியில் பந்தல் போட்டு நடத்தி முடித்தோம்.  அதில் பங்கெடுத்தவர்கள்: அ. இ. செ. முஹைதீன் பி.ஏ. அவர்களின்  தலைமையில், பேராசிரியர் அப்துல் கபூர், டாக்டர் இக்ராம் (உருதுப் பேச்சு), உள்ளூர் பேச்சாளர் ஒருவர் ஆகியோர் சொற்பொழிவு ஆற்ற, வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் நூற்றாண்டு விழாவை!

அபுல் ஹசன் மச்சானின் வீட்டு மேற்குப் பக்க அறைதான் எங்கள் ‘இக்பால் நூலகம்’ ஆகும்.  அந்த நேரத்தில்தான், அவரது முதல் கதை, ‘செல்லாத காசு’ என்ற பெயரில் ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று!  கதாசிரியரின் பெயர், ‘அதிரையன்’ ஆகும். எங்களுக்கெல்லாம் ஏகப்பட்ட மகிழ்ச்சி.

எங்கள் நூலகத்திற்கு அடுத்த வீட்டில்தான், காதர் முகைதீன் கல்லூரியின் அன்றைய முதல்வர், பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள் தங்கியிருந்தார்கள்.  தமக்கு அடுத்த வீட்டில் அபுல்ஹசன் என்ற கதாசிரியர் இருக்கிறார் என்று அறிந்தவுடன், ஒரு நாளைக்கு அவரைச் சந்திக்கவேண்டும் என்ற ஆசை பேராசிரியருக்கு.  நாங்கள் வீட்டாரின் அனுமதியைப் பெற்று, பேராசிரியரை அழைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றோம்.  பேராசிரியர் நலம் விசாரித்து முடித்தவுடன், “இன்னும் எழுதுங்கள்.  நிறைய எழுதுங்கள்” என்று அவருக்கு ஆர்வமூட்டினார்.

பத்திரிகைகள், மற்ற நூல்கள் வாசிப்பு அல்லாமல், இன்னும் சிலவற்றில் அபுல் ஹசனுக்கு நல்ல ஈடுபாடு.  ‘டெலிவிஷன்’ வந்தில்லாத அந்தக் காலத்தில், கால்பந்தாட்டம், கிரிக்கெட் முதலியவற்றின் ‘கம்மென்டரி’ ரேடியோவில்தான் ஒலிபரப்பு செய்யப்படும்.  அதை விரும்பிக் கேட்பார் அபுல் ஹசன்.  கமெண்டரியை வர்த்தக விளம்பரத்துக்காக இடைநிறுத்தம் செய்திருக்கும்போது, அபுல் ஹசனின் கமெண்டரி ஆரம்பமாகிவிடும்.  அதாவது, இன்ன டீம் ஜெயிக்கும்; இன்ன டீம் தோற்கும் என்று ஆரூடம் சொல்வார்.  முடிவும் அது போலவே நடக்கும்!  ஆட்டக்காரர் ஒவ்வொருவர் பற்றியும் அவருக்கு விவரம் தெரியும்.

புத்தக வாசிப்பு அல்லாமல், அவருக்கு இன்னொரு பணியும் இருந்தது.  அதாவது, குடும்பத்துப் பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுப்பது.  ‘மகனின் வாழ்க்கை இப்படிச் சுருங்கிவிட்டதே’ என்ற கவலை வாப்பாவுக்கு அதிகம்.  அதனால், ஏதேனும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து, அதைக் காரணமாக்கி, மகனை வெளியில் அழைத்துச் செல்லக் காத்திருப்பார் வாப்பா.  வாப்பாவின் நண்பர் குழாம் விரல் விட்டு எண்ணுமளவுக்கே இருக்கும்.   அன்றைய தி. மு. க. நட்சத்திரப் பேச்சாளர் N.S. இளங்கோ, அவர்களுள் ஒருவர்.  இளங்கோவின் ‘சித்ரா ஸ்டோர்’க்குப் போய் இருக்கும்படி அறிவுறுத்துவார் தந்தை, இப்படியாவது தன் மகனின் வெளியுலகத் தொடர்பு வரட்டுமே என்ற எதிர்பார்ப்பில்.  ‘ராணி அச்சகம்’ என்ற பெயரில், இளங்கோவுக்கு ஓர் அச்சகமும் இருந்தது.  அதிலாவது தன் மகன் சம்பளமில்லாத ஊழியராக இருக்கட்டும் என்பது தந்தையின் எண்ணம்.

பத்திரிகைகளில் ‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதியில் தனது கருத்தைப் பதிவு செய்வதன் மூலமே பத்திரிகை மற்றும் எழுத்துத் தொடர்பு தொடங்கிற்று எனலாம்.  எந்தப் பத்திரிகையிலும் தன் பெயர் ‘அபுல் ஹசன்’ என்று வந்துவிடக் கூடாதே என்பதில் கவனமாயிருக்கும் ஒரு notorious character.  அதனால்தான், ‘அதிரையன்’, ‘வாவன்னா’ போன்ற புனைபெயர்களில் பதிவு செய்வார் அபுல் ஹசன்!

முறையாகக் கல்வியைக் கற்று, வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்திகொண்டு, எழுத்துத் துறையில் ஈடுபாட்டையும் உண்டாக்கியிருந்தால், அதிரையின் முன்னோடி எழுத்தாளராகவும், அறிஞராகவும் ஆகியிருப்பார் ‘அதிரையன்’ என்ற அபுல் ஹசன்.  இறைவன் விதித்த விதி!  அதுதானே நடக்கும்!

அதிரை அஹ்மது 

பிளாக் ஹோல் !? 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2013 | , , ,

அதிரைநிருபர் தனது இணையப் பயணம் துவங்கிய நாள் தொட்டு தோளோடு தோளாக, உறவோடு உறவாக, உணர்வுகளோடு உண்மையாக எல்லாச் சூழலையும் எதிர்கொள்ளப் பக்கபலமாக இருந்த எங்கள் அன்பிற்குரிய நண்பர், சகோதரர், எந்த அடைமொழியிட்டாலும் அனைத்திற்கும் பொருத்தமானவர், அதிரைநிருபரில் புகைப் படங்களைப் பேச வைத்தவர், இச் என்றாலும் நச் என்றாலும் சுருக்கமான கருத்துக்குச் சொந்தக்காரர் Sஹமீது என்ற எங்கள் எம்.எஃப்.சாஹுல் ஹமீது அவர்கள் [அதிரைநிருபரின் மூத்த பதிவர்களில் மரியதைக்குரிய மூத்த காக்கா S.முஹம்மது ஃபாருக் அவர்களின் மகனார்] இதுவரை அதிரைநிருபரில் எழுதிய, பேசிய பதிவுகளில் இந்தப் பதிவு 100 வது பதிவாகப் பதிக்கப்படுவதில் மகிழ்கிறோம்.

  அதிரைநிருபர் பதிப்பகம்  

உலகம் உருவானது எப்படி என்ற கட்டுரையில் பிளாக் ஹோல் (black hole) பற்றி நேரம் கிடைக்கும் போது  பார்ப்போம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது இப்போது அந்த பிளாக் ஹோல்  பற்றி இந்த பதிவில் விவரமாகப் பார்ப்போம் 

பிளாக் ஹோல்  என்றால் என்ன  ?

பிளாக் ஹோல் என்றதும் அது ஏதோ ஒரு இருட்டு ஓட்டை என்று நினைத்து விட வேண்டாம் அது ஓட்டையோ  அல்லது   வெற்றிடமோ அல்ல அது  ஒரு முன்னாள்  நட்சத்திரம்  பிளாக் ஹோல் என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பலபொருட்களின் கூட்டு தொகுப்பாகும். மிகக் குறைந்த இடத்தில் நிறைய பொருட்களை அதிகமான அழுத்தத்தில் அமுக்கி அமுக்கி வைக்கும்போது  அவற்றின் ஈர்ப்புவிசை அதிகமாகும். ஆகவே  பிளாக் ஹோல் என்பது  தம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் அதிக விசையுடன் இழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்  பிளாக் ஹோல்கள் விண்வெளியில் எவ்வித ஒளியையும் வெளியிடாததாலும் கருநிறத்திலுள்ள ஒரு துளையைப் போன்று கருதுவதாலும் இதற்கு (கிடா வெட்டி)  பிளாக் ஹோல்கள் என பெயர் வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.


பிளாக் ஹோல் விண்வெளியில் உள்ள  ஆற்றலும்    அதிக ஈர்ப்பு விசையும்  கொண்டதுமான ஒரு பொருளாகும். நமக்கு தெரிந்த வரை மிக வேகமாக பயணிக்க கூடியது ஒளியாகும் அதன் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கி.மீ. இந்த ஒளியானது கூட இந்த பிளாக் ஹோலில் இருந்து தப்ப முடியாது  ஒரு நொடிக்கு 300,000 கி.மீ வேகத்தில்  பயணிக்க கூடிய ஒளிக்கே இந்த கதி என்றால் நாம் நம்ம  நிரந்தர பானையைத் தூக்கிக் கொண்டு என்ன வேகத்தில் தான்  ஓட முடியும்  இந்த பிளாக் ஹோலின் முன்னாள்.

ஒரு பெரிய நட்சத்திரத்தின்  எரிபொருள் முடிந்து விட்டால் (அங்கேயும் எரிபொருள் இருக்கு) அந்த நட்சத்திரம் அதன் எடையைத் தாங்க  முடியாது . நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன்  அடுக்குகள் அந்த நட்சத்திரம் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அழுத்தத்தினால்  நட்சத்திரம் சுருங்கி அளவில் சிறியதாகும். கடைசியில்  நட்சத்திரம் அணுவைவிட மிகச் சிறியதாக  உருமாறிவிடும் எப்புடி இருந்த நான்  இப்படி ஆயிட்டேன் என்பது  போல ஒரு பெரிய நட்சத்திரம் சுருங்கி அணுவைவிடச் சிறியதாகும் போது அதன் அடர்த்தியும் அதன்  ஈர்ப்புவிசையும் மிகமிக அதிகமாகி  பிளாக்ஹோல் உருவாகின்றது. இந்த மிக பெரும்  ஈர்ப்பு விசையால் அது தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனக்குள் இழுத்துக் கொள்ளும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ஆனால் இந்த நட்சத்திரம் சிறுத்தும் அதன் காரம் கூடுதலாகிவிடும் நட்சத்திரம் சுருங்கி  பிளாக் ஹோலானால் அதன் எடை கொஞ்சம் கூட குறையாது என்பதுதான் இங்கே மிக பெரிய ஆச்சர்யம் 

பிளாக் ஹோல்களின் அளவு அவற்றில் எந்த அளவுக்குப் பொருட்கள் உள்ளனவோ அதைப் பொறுத்து வேறுபடும். மிகப்பெரிய நட்சத்திரங்கள்  அழிந்து அவற்றின் எச்சங்கள்  பிளாக் ஹோல்களாகியுள்ளன. நமது சூரியனைவிடச் சிலமடங்கு பெரிய  பிளாக் ஹோல்கள் உள்ளன. இவை மற்ற  பிளாக் ஹோல்களோடு ஒப்பிடும்போது அளவில் மிகச் சிறியதாகும். சில நட்சத்திர மண்டலங்களின் மையத்தில் ஒரு  சில பிளாக் ஹோல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சூரியனில் உள்ள பொருட்களைக் காட்டிலும் 100 மில்லியன் மடங்குப் அதிகமான  பொருட்களையே கொண்டிருக்கும்.

பிளாக் ஹோல்களை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் விண்வெளியாளர்கள்  பிளாக் ஹோல்கள் உள்ள இடத்தினைக் இலகுவாக கண்டறிய முடியும். பிளாக் ஹோல்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அதிவேகத்தில் இழுப்பதினால் அப்பொருட்கள் அதிக வெப்பமடைந்து X கதிர்களை வெளியிடும்.  இந்த X கதிர்களைப் புவியிலிருந்து மிக சுலபமாக  கண்டறியலாம். எப்படி என்றால் இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலை நோக்கிகள் மூலம் உணர முடியும்.  X கதிர்கள் அதிகம் காணப்படும் இடங்களில் இந்த பிளாக் ஹோல்கள் இருப்பதாக  விஞ்ஞானிகள் கணித்து விடுகின்றார்கள் 

நமது பால் வீதியின் மையத்தில் மிகப்பெரிய  பிளாக் ஹோல் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருக்கின்றது  அது சூரியனைவிட 3 மில்லியன் மடங்கு எடை கொண்டது. புவியிலிருந்து 24,000 ஒளிஆண்டுகள் (Light Years) தொலைவில் உள்ளது. இந்த  பிளாக்ஹோல் பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளதால்  இந்த பிளாக் ஹோலால்  தற்போதைக்கு  நமக்கு (பூமிக்கு) பாதிப்பும்  கிடையாது.

மற்றொமொரு பதிவில் சந்திக்கலாம் இன்ஷா அல்லாஹ் !

Sஹமீது

“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம் ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2013 | , , , ,


சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில்
............சாரும் புவியின்  முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள்
…….......இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத்
..........…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச்
............…சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்

அரபு நாட்    டுக்குள்ளோர்    நாடு - அங்கே
.......….அகிலமுஸ்     லிம்களின்  கூட்டுமா   நாடு
 மரபு  வழிகளில்  தேடல்  -புவி
........….மனித  நதிகளின்  சங்கமக் கூடல்

வெள்ளை யுடையில் மகிழ்ச்சி - மக்கள்
......வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சி
உள்ளம் அழுக்கினைப் போக்கும் —அங்கே
......…உள்ஹிய்யா என்பதும் இந்தநல் நோக்கம்

நிலவதும்   நாணியே  கேட்கும் -  ஹாஜி
 … நிலவிடும்  பேரொளி  உன்னிப்பாய்ப்  பார்க்கும்
 உலவும்   சமத்துவம்  மெய்க்கும் — உண்மை
 …….உலகம்  தெளிந்திட  நாட்டியே வைக்கும்

“கவியன்பன்” கலாம்

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -12 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2013 | , , ,

“திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ”  என்று எம்ஜியாரால் பாடப் பட்ட செல்வி  ஜெயலலிதா ஜெயராம் தமிழ்நாட்டின் முதல்வரானார். முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் எல்லோரையும் போல இவரும் வழக்கம் போல பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.  அதிலே ஒன்று நல்லாட்சி நடத்துவேன் என்பதாகும். அதன் அடையாளமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே தான் மாதச் சம்பளமாகப் பெறுவேன் என்று அவர்  அறிவித்தபோது “அம்மா நீர் வாழ்க!" என்று அடுத்தது வரப்போவது தெரியாமல் முழக்கமிட்டனர் அறியாத மக்கள்.  அந்த எண்ணத்தில்தான் அரியணை ஏறினார் என்று நம்பலாம். ஆனால்  ஆட்சி பீடம் அவ்வளவு எளிதானதல்ல.

நல்லவர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களை அதிர்காரவர்க்கங்கள் எப்படியாவது கைப்பாவையாக்கி அடிமைப்படுத்திவிடும் என்பதற்கு ஜெயலலிதாவும்  விதிவிலக்காகவில்லை. அதிகாரத் தேனை உறிஞ்சும் எறும்புக் கூட்டங்கள் அவரை மொய்க்க ஆரம்பித்தன. வீடியோ கேசட்டுகளின் வடிவில் வீட்டுக்குள் படையெடுத்த நவீன – நம்ப முடியாத உறவுகள் விலாவாரியாக வலம் வர ஆரம்பித்தன. தனது இரத்த சொந்தங்களை பல சொந்தக் காரணங்களுக்காக் பிரிந்து தனிமையில் வாழ்ந்துவந்த ஜெயலலிதாவை அரவணைக்கிறோம் - ஆதரவு காட்டுகிறோம் - அன்பு செலுத்துகிறோம் -பணிவிடை செய்கிறோம் என்கிற போர்வையில் நடராஜாக்களின் நடமாட்டம் அதிகரித்து உட்புகுந்தனர். 

ஒரு நிழல் முதலமைச்சர் சசிகலா என்கிற உயிர்த்தோழி மூலம் உருவானார். அமைச்சரவை அமைத்தல்- அமைச்சர்களின் துறைகளை ஒதுக்கல் - அரசின் ஐ எ எஸ் செயலார்கள் மற்றும் ஐ பி எஸ் உயர் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது பதவி  உயர்வு கொடுப்பது போன்ற முதலமைச்சருக்கே உரித்தான தனி அதிகாரங்கள் நிழல் அதிகாரத்தின் கைகளின் அங்கீகாரத்துக்கே முதலில் வந்தன.என்ன காரணமோ ஜெயலலிதா இவற்றுக்கெல்லாம் தலையாட்டினார். நீட்டிய இடத்தில் கையெழுத்தும் இட்டார். மைசூரில் பிறந்த ஜெயலலிதா முதலமைச்சார் ஆனால் ஆட்சி செய்தது என்னவோ மன்னார்குடி என்று அரசியல் நிலை ஆட்டம் போட்டது. 

பாசி பிடிக்கும் அளவுக்குப் பணம் சேர்ந்தது. சூட்கேசுகளின் விலை தாறுமாறாக ஏறின. மனதில் மாசில்லை என்று கூறியே எம் எல் ஏக்களை தூசியாகப் பார்த்தனர். ஆட்சிக்கு ஆபத்து உண்டாகுமோ என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கவலைப் பட்டார்கள். கட்சிக்காக ஆரம்ப காலம் தொட்டு உழைத்து அடி உதை வாங்கி சிறை வாசம் சென்றவர்கள்  அலட்சியப் படுத்தப் பட்டார்கள். ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்தது. தொண்டர்களின் தொண்டையில் முள் தைத்தது. எட்டில் அடங்காத எண்ணற்ற அவலங்கள் அங்கே ஆட்சி புரிந்தன. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு பலனளிக்கும் விதத்தில் அரசின் திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. 

சசிகலாவும் ஜெயலலிதாவும் கடவுள் பக்தி நிறைந்தும் காணப்  பட்டனர். பலமுறை யாகங்கள் நடத்தினார்கள்.  அதில் ஒரு விளைவு இவர்களின் ஆட்சிக் காலத்தில் கும்பகோணத்தில் நடந்த மகாமகம் நிகழ்ச்சியில் இருவரும் குளிப்பதைக் ஆனவந்த பல மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து பலியாயினர். மேலும் பிரம்மானந்தா என்கிற போலிச் சாமியாருடன் சசிகலா தொடர்பு வைத்து சில பூஜைகள் நடத்தினார் என்றும் பேசப்பட்டது. 

இந்த அவலங்களுக்குள் குறிப்பிடப் பட வேண்டிய அம்சம் “ வளர்ப்பு மகன் திருமணம். “ சசிகலாவின் உறவினரான சுதாகரன் என்பவரை ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக அறிவித்து அவருக்கு நூற்று கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதலமைச்சருக்கு இப்படி ஆடம்பரத் திருமணம் நடத்த எங்கிருந்து வந்தது பணம் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்தனர். 

இப்படியே அடுத்த தேர்தல் வந்தது. இம்முறை தனது ஆடம்பரங்களால் மக்களின் நம்பிக்கையை இழந்த ஜெயலலிதா தோற்கடிக்கப் பட்டு காத்திருந்த கருணாநிதி முதல்வரானார். முதல்வரானதும், ஜெயலலிதா மேல் பல வழக்குகளைப் பாய்ச்சினார். போயஸ் கார்டன் தோட்டம் ஒரு சுப தினத்தில் சோதனையிடப் பட்டது. அங்கே கிடைத்தவைகளில் பல சொத்து, நகை பட்டுப் புடவைகள் இதர ஆவணங்களைஎல்லாம் விட முக்கியமானது குவியல் குவியலான ஒரு முறை மட்டுமே உபயோகப் படுத்தப் பட்ட செருப்புக்களாகும். 

ஜெயலலிதா கைது செய்யப் பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். நாடே அல்லோகலப் பட்டது. புகழ்பெற்ற நடிகையாக பழமொழிப் படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு இவை ஒன்றும் பெரிய சொத்தல்ல. ஆனால் எல்லா சொத்தும் முதலமைச்சர் ஆகுமுன்பே கைவிட்டுப் போன நிலையிலும் அரசியல் அம்பலத்தில் ஆடப் போகும் போது அதிகாரமும் கைவிட்டுப் போனபின் பிரச்னைகளை சமாளிப்பது சாமான்யமா?இந்த வழக்கின் சோதனையில் சிக்கிய ஜொலிக்கும் நகைகளையும் செல்வங்களையும் செருப்புக்களையும்  தொலைக் காட்சிகள் இரவு பகல் தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பின. இந்த வழக்குகளின் தொடர்ச்சிதான் இன்று வரை பெங்களூர் தனி நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவுக்கு  எதிரான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்காகும். திருவளர்ச் செல்வி சேராத இடந்தனிலே சேராமல் இருந்திருக்கலாமோ  என்று சிந்திக்க ஆரம்பித்தார்.  

மீண்டும் அரியணை ஏறிய கலைஞர் காய்ந்த மாடு களங்களில் மேயப் புறப்படுவது போல் கட்சிக் காரர்களுக்கு ஆட்சியின் அனைத்துக் கதவுகளையும் திறந்துவிட்டார். தனது முந்தைய  தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்  கொள்ளத் தவறினார் முத்தமிழ் அறிஞர். மீண்டும் பழைய குருடி கதவைத்திறந்தாள். மக்களின் ஏகோபித்த வெறுப்பு அடுத்த தேர்தலில் தோல்வியைக் கொடுத்து வழக்குகளில் சிக்கி சின்னாபின்னப் பட்ட ஜெயலலிதாவை மீண்டும் அரியணை ஏற்றியது.   

அப்போது ஒரு சட்டச் சிக்கல் ஏற்பட்டது. பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க முடியுமாஎன்ர சட்டச் சிக்கல் ஏற்பட்டது. நாடெங்கும் விவாதம். அப்போது தமிழ் நாட்டின் கவர்னராக இருந்தவர் கேரளா நாட்டின் முஸ்லிம் பெண்மணியான பாத்திமா பீவியாவார். சுப்ரீம் கோர்டில் நீதிதேவதையாக இருந்து கரை படாத கரங்களுக்கு சொந்தமான சட்டம் படித்த சம்பிரதாயங்களைத் தாண்டாதவர் என்று பெயர் பெற்றவர். வழக்குகளில் சிக்கி தண்டனைக்குக் காத்து இருக்கும் ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணத்தை பாத்திமாபீவி செய்து வைக்க மாட்டார் என்று  நாடு எதிர்பார்த்தது, கலைஞரும் கொக்கரித்தார். ஆனால் அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டார் பாத்திமாபீவி.  பாக்தாத் திருடன் என்கிற  திரைப் படத்தில் எம்ஜியாருக்கு ஒரு பெயர் சூட்டப் பட்டு இருக்கும். அந்தப் பெயர் தாங்கிய இடத்தில் தூவப் பட்ட விபூதியால் செய்வது அறியாது தவித்த பாத்திமா பீவி வாடிய முகத்தோடு காரில் வந்து இறங்கிய ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அலறினார் முத்தமிழ் வித்தகர். ஆனால் அந்த அலறல் யார் காதிலும் விழவில்லை. 

ஆட்சியில் அமர்ந்த  ஜெயலலிதா ஆர்வம் காட்டி கவனித்து அரங்கேற்றிய அரசியல் நாடகத்தின் பெயர்தான் “பழி வாங்கும் படலம்". நள்ளிரவில் காவல்துறையை ஏவிவிட்டு கலைஞரைக் கைது செய்ய வைத்தார். அதற்காக மேம்பாலம் கட்டுவதில் ஊழல்  என்ற ஓரங்க நாடகத்தை சித்தரித்தார். கைது செய்யப் படும்போது கருணாநிதி கதறிய கதறல் இன்னும் பலர் காதுகளில் ஒலிக்கின்றது. அதே தினம் மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு மற்றும் ஸ்டாலின் வரை கைது எனத் தொடர்ந்தது இந்த படலம். மத்திய அரசு தலையிட வேண்டியதாயிற்று. இந்த ஐந்தாண்டுகளின் ஆட்சியில் நாட்டு நலனை கவனிக்காமல் திமுகவினரை பழிவாங்கும் போக்குடன் பல முறை ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வண்ணம் நடந்துகொண்ட ஜெயலலிதா, சர்ச்சைக்குரிய மதமாற்ற தடை சட்டம் போன்றவற்றையும் நிறைவேற்றினார். அத்துடன் எம்ஜியாருடைய பெயரையும் சிறுகச் சிறுக இருட்டடிப்புச் செய்தார். இதனால் மீண்டும் மக்களின் சாபத்துக்கு ஆளான ஜெயலலிதா அடுத்த தேர்தலில் மீண்டும் தோற்கடிக்கப் பட்டார். விளைவு.... / மீண்டும் கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வரானார். 

ஆட்சி பீடம் ஏறியதும் கருணாநிதி திரும்பவும் தனது கதை வசனத்தில் பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறை கருணாநிதி வேறு வழியாக சிந்தித்தார். ஒரு வேளை இதுவே தனது இறுதிப் பதவிக்காலமாக இருக்கக் கூடும் என எண்ணினாரோ என்னவோ ஊழல் வெள்ளத்துக்குக் கதவுகளைத் திறந்துவிட்டார். ஆத்திலே போகிற தண்ணீரை அம்மா குடி அப்பா குடி என்று கட்சிக்காரர்கள் அள்ளி அள்ளிக் குடித்தார்கள். அரண்மனை போல வீடுகள், ஆடம்பரக் கார்கள், கல்வி நிலையங்கள், நில பேரங்கள், நில அபகரிப்புகள்  என கண்டபடி செல்வம் குவிய ஆரம்பித்தது. குறிப்பாக தனது குடும்பத்தைச் சார்ந்தோர் பலதுறைகளிலும் அரசியல் பதவி பெறவும், ரியல் எஸ்டேட் மற்றும் திரைப்படம் போன்ற பணம் கொழிக்கும் வணிகங்களில் ஈடுபடவும் வழி செய்து கொடுத்தார். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை. குடும்பத்தினர் தவறு செய்தால் அதை நியாயப் படுத்திப் பேச ஒரு கூட்டத்தையே வைத்து இருந்தார். இவை மக்களை சலிப்படையச் செய்தன.

இலவச அரிசி முதலிய பல நல்ல திட்டங்களால் மக்களைக் கவர முடியாமல் கருணாநிதி நடத்திய குடும்ப அரசியல் மத்திய மாநில அரசுத்துறைகளில் வரலாறு காணாத ஊழல் என்கிற குற்றச்சாட்டுகளை கருணாநிதியின் அரசியல் வாழ்வுக்குப் பின் அடுக்கிக் கொண்டே போனது. இந்த நிலையில் மீண்டும்  தேர்தல் வந்தது. கருணாநிதியின் சாதனைகளுக்கு மீறிய குடும்ப அரசியல் மீண்டும்  ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக இன்றைய முதல்வராக்கியது. காயிதே மில்லத், கருத்திருமன் போன்றவர்கள் இருந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவின் பிறப்பிடமான அதே கோடம்பாக்கத்தில் இருந்து வந்த விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார்.  

தமிழகத்தின் தலைவிதி  கருணாநிதியை விட்டால் ஜெயலலிதா, ஜெயலலிதாவை விட்டால்  கருணாநிதி என்று பதவி நாற்காலி சுழன்று கொண்டே வந்தது. ஆனால் தனது ஆட்சியின் தவறுகளில் இருந்து -மக்கள் பாடம் போதித்தாலும்- இவர்கள் பாடம் படி த்துக் கொள்ளவில்லை என்பதே வேதனையான உண்மை. 

இன்று சட்டமன்றம் நடைபெறுகிறது. உணமையான எதிர்க் கட்சியான திமுக ஒன்று வெளியேறுகிறது அல்லது வெளியேற்றப் படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிகளின் எதிரில் உள்ள மேசைகள்தான் ஒலி எழுப்புகின்றனவே தவிர உறுப்பினர்கள் பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார்கள் . அப்படியே பேசினாலும் அம்பிகையே ! ஈஸ்வரியே! எமை ஆளவந்த தேவதையே ! என்று புகழ் பாடுவதிலேயே பொழுது போய் விடுகிறது. இதைப் புன்னகையுடன் ஜெயலலிதாவும் ரசிப்பதால் தனிநபர் புகழ்ச்சி சட்டமன்றத்தில் பட்டொளி வீசிப் பறக்கிறது. 

இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எம்ஜியாரோடு கதாநாயகியாக நடித்த அஞ்சலிதேவி, பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, லதா ஆகிய அனைவரும் ஒரு அளவுக்குப் பின்னர் திருமணம் முடித்துக் கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டு குடும்பத்தலைவிகளாக ஆகிவிட்டனர் .  ஆனால் வெண்ணிற ஆடை என்கிற திரைப் படத்தில் அறிமுகமான ஜெயலலிதாவுக்கு குடும்ப வாழ்வு கொடுத்து வைக்காத ஒன்றாகிவிட்டது. மனம் போன போக்கில் அவர் வாழ்ந்ததால் ஒரு நல்ல மனைவியாக, தாயாக, தரணியில் ஒரு குடும்பத் தலைவியாக மன அமைதியுடன் வாழவேண்டிய வாழ்க்கை அவரது கையை விட்டுப் போய்விட்டது. இதனால் விவேகானந்தர் போன்ற துறவிகளுடன் தன்னை தானே ஒப்பிட்டுப் பேசவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது. 

ஆனாலும்  அரசியலில் அவர் நுழைந்த காரணத்தால் அதற்குரிய நெளிவு சுளிவுகள் இன்று அவருக்கு அத்துப் படியாகிவிட்டன. அதற்காக  சில அரசியல் ஆலோசகர்களை தன்னுடன் வைத்திருக்கிறார். அவர்கள் இவருக்கு நல்லதைத் தவிர கெட்டதையே போதிக்கின்றனர்.   திரைப்படத்தில் வென்னிற ஆடையுடன் தொடங்கிய ஜெயலலிதா, அரசியலில் நுழையும் போதும்  அவர் எம்ஜியாரின் சவப் பெட்டியின் தலைமாட்டில் அவர் வெண்ணிற ஆடையே அணிந்து சோகமாக அமர்ந்து இருந்தே தொடங்கினார்.

தனி மனிதப் புகழ்ச்சிக்கு மயங்காமல், தன்னைச்சுற்றி இருக்கும் கூட்டத்தை கட்டுப் படுத்தி, பழிவாங்கும் படல நிகழ்வுகளை நிறுத்தி ஆள முற்படுவரானால் உண்மையிலேயே ஒரு சரித்திர நாயகியாக வரக்கூடிய வாய்ப்பு குடும்பம் குழந்தைகளற்ற  ஜெயலலிதாவுக்கு உண்டு. இன்னும் சொல்லப் போனால்   இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆக வரக்கூடியவராக இருக்கலாம் என்கிற பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு   தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வைத்திருக்கிற  ஜெயலலிதாவைப் பாராட்டவே வேண்டும். அதேநேரம் பழி வாங்கும் ஆயுதத்தை கைகளில் எடுத்து முந்தைய அரசின் நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிப் போடுவது இவரது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே செய்யும். 

உதாரணமாக ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மூடிப் போட்டு வைத்து இருப்பது, பலகோடி ரூபாய் செலவழித்துக் கட்டப் பட்ட நவீன தலைமைச் செயலகத்தை வாழா வெட்டியாக்கி வைத்திருப்பது, எதிர்க் கட்சித் தலைவர்கள் மேலெல்லாம் அவதூறு வழக்குகளை ஏவிவிட்டு ஊருக்கு ஊர்  அலைக்கழிப்பது, வயது முதிர்ந்த முதியவர்கள் என்றும் பாராமல் குற்றம் சாட்டப் பட்டவர்களை நள்ளிரவில் சிறைவிட்டு சிறைக்கு மாற்றுவது போன்ற செயல்களை நிறுத்திக் கொண்டால் அது ஜெயலலிதாவின் பதவிக்கு கண்ணியம் சேர்க்கும். எதிர்க் கட்சித்தலைவர் விஜயகாந்த் மீது 34 ஊர்களின் நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு. அதே நேரம் எதிர்க் கட்சியில் இருந்து தனது கட்சிக்கு கட்சி மாறி வந்த நாஞ்சில் சம்பத் , பரிதி இளம் வழுதி ஆகியோர்  மீது போடப்பட்டு இருந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும் போக்கு உண்மையான ஜனநாயகத்தை விரும்புவோர்க்கு இவர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் செயலாகும். 

இன்னும் பெங்களூர் நீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்பை நாடே எதிர் நோக்கி இருக்கிறது. இது என்னவாகுமென்பது சசிக்கே வெளிச்சம். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலை இன்னும் ஒரு புரட்டுப் புரட்டலாம்.  பார்க்கலாம்!  தருமபுரி போல் பேருந்துகள் எரிக்கப் படப்  போகின்றனவா  அல்லது அகர்வால் பவன் மற்றும் ஆனந்த பவனின் ஸ்வீட் பாக்கெட்டுகள் காலியாகப் போகின்றனவா என்பதை. 

இன்னும் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

அதிரைச் சகோதரர் ஐ.ஏ.எஸ். ஆகிறார் (இன்ஷா அல்லாஹ்) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2013 | , , , , ,

அதிரை மக்களின் உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்ற நீண்டதொரு திட்டத்தை மையமாக கொண்டு அதிரைநிருபர் வலைத்தளம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தியது அடுத்தடுத்த வருடங்களில் சகோதர அமைப்புகள் அதனை முன்னெடுத்துச் சென்றனர்.

நமது கனவு நனவாகும் தருணம் கைகூடி இருக்கிறது இந்தச் சிறப்பினை தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ்) !

சென்னை மவுன்ட்ரோட்டில் அமைந்திருக்கும் மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்படும் அழகிய கடன் அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நமது சமுதாய மக்களுக்கென்று அரசு உயர் பதவிகளுக்கான பயிற்சியை 2012ம் வருடம் முதலே அளித்து வருவதை நாம் நன்கறிவோம்.

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான அதிரை சகோதரர் J.முஹம்மது மீராஷாஹிப் (தகப்பனார் பெயர் : M.ஜமால் முஹம்மது) அழகிய கடன் ஐ.ஏ.எஸ் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் UPSC மற்றும் TNPSC Group-1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். அடுத்த வருடம் 2014 நமதூர் சகோதரர் I.A.S.ஆக இருக்கிறார் இன்ஷா அல்லாஹ் !

The Hindu ஆங்கில நாளிதழ் செய்தி : http://www.thehindu.com/todays-paper/mosque-helps-students-crack-ias-exam/article5143672.ece

NDTV ஆங்கில செய்தி தொலைகாட்சி காணொளி : http://www.ndtv.com/video/player/news/a-mosque-in-chennai-which-helps-muslim-men-fulfill-the-ias-dream/291261

வாழ்த்தி வரவேற்போம் ! மேலும் வெற்றிகள் தொடரவும், நம் சமுதாய நலனுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் சேவைகள் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம்
பரிந்துரை : குதுபுதீன் அஹ்மது ஜலீல் (குதுப்)

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 12 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நபி(ஸல்) அவர்கள், அன்று மக்கா குரைஷிகளால் வெறுக்கப்பட்டவராக இருந்த பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவர்களோடு எவ்வாறு நடந்து கொண்டார்கள், அவர்களுக்கு எவ்வகையான கண்ணியம் கொடுத்தார்கள் என்பதைப் பார்த்தோம் படிப்பினையையும் அறிந்து கொண்டோம்.

பிலால்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு மதிப்பு கொடுத்தார்களோ அதே அளவு கண்ணியத்தை கலீஃபாக்களான அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), இருவரும் கொடுத்தார்கள் என்பதை ஹதீஸ் ஏடுகளில் பார்க்கும் போது உண்மையில் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற சத்திய சஹாபாக்கள் நபி வழியை கூட்டவும் குறைக்கவும் இல்லை என்பது மிகத் தெளிவாக அறிய முடிகிறது.

பிலால்(ரலி) அவர்கள் உபைத் இப்னு கலப் என்பவரிடம் அடிமையாக இருந்து எண்ணிலடங்காத் துயரங்களுடன், கஷ்டப்படுவதை கண்ட நபி(ஸல்) அவர்கள் மனம் பொறுக்காமல், பிலால்(ரலி) அவர்களை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று, அன்று செல்வந்தராக இருந்த அபூபக்கர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். இதற்கு தான் பொறுப்பேற்று, பிலால்(ரலி) அவர்களை விடுவிக்க உபைத் இப்னு கலபிடம் சென்றார்கள்.

உபைத் இப்னு கலப் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் கேட்கிறான், “பிலால்(ரலி) உங்கள் சகோதரர் தானே அவரை பணம் கொடுத்து வாங்குங்களேன்” என்று கூறினான். 

“எங்களுடைய பிலாலுக்கு (ரலி) எவ்வளவு பணம் வேண்டும்?” என்று கேட்டார்கள் அபூபக்கர்(ரலி). 

உபைத் இப்னு கலப் சொன்னான் “நான்கு ஊக்கியா” (உதாரணமாக 40,000 ரூபாய்). 

அவன் கேட்ட பணத்தை கொடுத்து பிலால்(ரலி) அவர்களை வாங்கி அடிமைத் தனத்திலிருந்து மீட்டெடுத்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். அப்போது உபைத் இப்னு கலப் சொன்னான் “இவரை ஒரு ஊக்கியாவுக்கு கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன்.” என்று கிண்டலாக அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்து சொன்னான். 

பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “எங்கள் பிலால்(ரலி) அவர்களுக்கு நீ நூறு ஊக்கிய கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என்று சொன்னவுடன் உபைப் இப்னு கலப் வாயடைத்துப் போனான். உபைப் இப்னு கலபினால் ஒன்றுக்கு பெருமதியில்லாதவர் என்று சொல்லப்பட்ட பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக 100 மடங்கு பெருமதியானவர் என்று சொல்லி அவரை விலைக்கு வாங்கி அடிமைத் தனத்திலிருந்து விடுவித்தார்களே அந்த சித்தீக் நம்முடைய முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் உண்மையில் சரித்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு இடம் பெறும் மாபெரும் ஆட்சியாளார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

இது போல் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்பு, கவலையின் சோகத்தால் “முஹம்மதுர் ரஸூல்லுல்லாஹ்” என்ற வார்த்தையை சொல்லும் தைரியத்தையே இழந்த பிலால்(ரலி) அவர்களை ஆறுதல்படுத்தி அபூபக்கர்(ரலி) அவர்கள் மீண்டும் மதீனாவில் நீங்கள் தான் பாங்கு சொல்ல வேண்டும் என்று வேண்டினார்கள். 

பிலால்(ரலி) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்து “நீங்கள் என்னை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்தது உங்களுக்காகவா? அல்லாஹ்வுக்காகவா?” 

அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “நிச்சயம் அல்லாஹ்வுக்காக”. 

“அப்படியானால் என்னை விட்டுவிடுங்கள்” என்று பிலால்(ரலி) கூறினார்கள்..

‘நாம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள், உங்கள் மேல் உள்ள நட்பின் அடிப்படையிலும், நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போது நீங்களல்லவா ஃபஜரிலும், லுஹரிலும், அஸரிலும், மஃக்ரிபிலும், இஷாவிலும் பாங்கு சொன்னீர்கள். அல்லாஹ்வுக்காக நீங்கள் மீண்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்று அன்போடும் மரியாதையோடும் கோரிக்கையை வைத்து’ பிலால்(ரலி) அவர்களை மீண்டும் பாங்கு சொல்ல வைத்தார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அடுத்ததொரு அற்புதமான, கம்பீரமான ஆட்சியை செய்த உமர்(ரலி) அவர்கள். நீதி செலுத்துவதில் அற்புதமான மாமனிதராக வாழ்ந்துள்ளார்கள் உமர் (ரலி) அவர்கள். இஸ்லாமிய ஆட்சியின் ஆளுமை வளர்ந்து ஒரு மிகப்பெரும் வல்லரசாக மாறியிருந்த சமையத்திலும், அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் தனது இருக்கைக்கு அருகில் இரு இடங்கள் வைத்திருப்பார்களாம், அவைகளில் பிலால்(ரலி) அவர்கள் அமருவதற்கும், உஸாமா(ரலி) அவர்கள் அமர்வதற்கும் வைத்திருப்பார்களாம். 

ஒரு முறை பிலால்(ரலி) அவர்களுக்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய செல்வந்தர் அபூ-சுஃப்யான்(ரலி) போன்ற சஹாபிகள் உமர்(ரலி) அவர்களை சந்திக்க அனுமதி கோரி காத்திருந்தார்கள். அப்போது யாருடைய அனுமதியுமில்லாமல் இரு தோழர்கள் கப்பாப்(ரலி) அவர்களும் பிலால்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் மாளிகைக்கு சென்று உமர்(ரலி) அவர்கள் அருகில் அமர்ந்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சில சஹாப்பாக்களுக்கு இதனை கண்டதும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதனை அறிந்து கொண்ட உமர் (ரலி) அவர்கள்ட அந்த சஹாபிகளைப் பார்த்து கூறினார்கள். “தோழர்களே! நபி(ஸல்) அவர்கள் நம் எல்லோருக்கும் தான் இஸ்லாத்தை சொன்னார்கள். ஆனால் இந்த பிலால்(ரலி) அவர்களும், கப்பாப்(ரலி) அவர்களும் நம்மைவிட முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள். இந்த பிலால் யார் தெரியுமா? என்னுடைய தலைவர் அபூபக்கர்(ரலி) அவர்கள் உரிமை விட்ட இன்னொரு தலைவர் பிலால்(ரலி) அவர்கள் தலைவரால் உரிமைவிட்ட தலைவர்” என்று சொல்லி கண்ணியப்படுத்தினார்கள்.

உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் நபி(ஸல்)  அவர்களின் பிரிவின் தாக்கத்தால், மதீனாவில் இருக்க முடியவில்லை என்று சொல்லி பிலால்(ரலி) அவர்கள் சிரியா நாட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் ஆட்சியில் இஸ்லாம் வளர்ந்து பல நாடுகளை வெற்றி கொண்டதோடு பைத்துல் முகத்திஸும் வெற்றி கொள்ளப்பட்டது. இந்த சந்தர்பத்தில், இஸ்லாத்திற்காக அடிவாங்கி, மிதி வாங்கி, ஓடி ஓடி உழைத்த அந்த பிலால்(ரலி) தான் அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்களுக்கு நினைவில் இருந்தது, பிலால்(ரலி) அவர்கள் சிரியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு “நீங்கள் தான் இங்கு பைத்துல் முகத்திஸில் பாங்கு சொல்ல வேண்டும்” என்று கூறினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு பிலால்(ரலி) அவர்களின் பாங்கோசையை கேட்க ஆவளோடு தோழர்கள் அங்கு கூடியிருக்க. பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். ‘அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூல்லுல்லாஹ்’ என்ற வார்த்தை சொன்னவுடன் பிலால்(ரலி) அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள், அதனைக் கண்ட உமர்(ரலி) அவர்களும், அங்கு கூடியிருந்த ஸஹாபாக்களும் அழுது விட்டார்கள் என்ற இந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் போது நிச்சயம் நம் கண்களிலும் கண்ணீர் வந்தே தீரும். சுப்ஹானல்லாஹ்.

ஹிஜ்ரி 20வது வருடத்தில் தன்னுடைய 70வது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார்கள் பிலால்(ரலி) அவர்கள்.

அன்பானவர்களே, பிலால்(ரலி) அவர்களோடு நம் கலீஃபாக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அபூபக்கர்(ரலி) அவர்கள் செல்வந்தராக இருந்தும், தன்னால் உரிமையிடப்பட்ட பிலால்(ரலி) அவர்கள், இஸ்லாத்தை ஏற்றார் என்ற காரணத்திற்காகவும் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்தார்கள்  என்ற சிறப்பிற்காகவும் கண்ணியப் படுத்தினார்களே, இது போன்ற அபூக்கராக(ரலி) எத்தனை பேர் நம்மிடையே உள்ளோம்?

உமர்(ரலி) அவர்கள் வீரமிக்கவர்களாக அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் இருந்தை அனைத்துலகும் நன்கறியும். பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார் என்ற காரணத்திற்காகவும் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்தார்கள் என்ற சிறப்பிற்காகவும் கண்ணியப்படுத்தினார்களே, இது போன்ற உமராக (ரலி) எத்தனை பேர் நம்மிடையே உள்ளோம்?

எத்தனை பேர் பிலால்(ரலி) என்ற தியாகியின் தியாகங்களில் எத்தனை துளிகளை நமது பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறோம், அதேபோல் நம் உள்ளம் பன்பட எண்ணியிருப்போம் சிந்திக்க வேண்டும்.

பிலால்(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் நிறைய படிப்பினை பெற வேண்டும். 

எந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத பிலால்(ரலி) போல் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.
தொடரும்...
M தாஜுதீன்

இன்று இரு தகவல்கள் - தொகுத்தளிப்பது யாசிர் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2013 | , , , ,

நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு கீபோ(ர்)டை ஆக்கத்திற்காகத் தட்டுவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த இடைவெளிக்குள் எத்தனையெத்தனைச் சிறந்த எழுத்தாளர்கள் அதிரைநிருபரை அலங்கரித்துத் தங்கள் திறமைகளையும் நம் சமுதாயப் பெருமைகளையும் பரப்பிக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்ப விசயத்திற்கு வருவோம்..

பம்முக்காலே (Pamukkale )

என்னடா இப்ப வந்ததும் வராததுமா வித்தியாசமா ஆரம்பிக்கின்றானே, ‘மூக்காலே சிந்துரதுதானே நமக்கு தெரியும். இப்படி பம்முக்காலே என்றால் பல மூக்காலே ஒன்றாக ஒரே சமயத்தில் சிந்துவதா என்று ஒரு கணம் சிந்திப்பவர்களுக்கு..

அல்லாஹ்வின் படைப்பையும் அதன் பயன்களையும் அறிந்து கொள்ள முற்பட்டால் நம் ஆயுள் முழுவதும் செலவழித்தாலும் போதாது.

அப்படித்தாங்க “பம்முக்காலே” அல்லது “பருத்திக்கோட்டை” எனப்படும் ஓர் இடம் துருக்கியில உண்டுங்க, சிறப்பு என்னவென்று கேட்கின்றீர்களா, சொல்றேன் இருங்க… ’சாவன்னா காக்கா கேமராவை நல்ல கழுவி எடுத்து வைத்து கொண்டு கிளம்பிடாதீங்க (இடம் அப்படி) நம்மூர்ல தண்ணி ஓடிக்கிட்டே இருந்தா அந்த இடம் வெத்திலைப் பாக்கு கறைபோல ஒட்டுமாவு சாப்பிட்ட பற்களைப் போல பளிச்சென்று இருப்பதுபோல (பாவம் எவ்வளவு நாளைக்குதான் சிகரெட் குடிச்ச கறைண்டு சொல்றது), இங்கே ஒடுற தண்ணி அதில உள்ள கார்பனேட் தாதுக்களை ஒதுக்கிவிட்டு ஒடுதுங்க. அதனாலே அது ஒதுங்கி ஒதுங்கி சேகரமாகி மலைபோல் குவிந்து பருத்திப் பஞ்சுகளை பரத்தியது போல் அழகா காட்சி தருது இந்த இடம். யாரு இந்த கார்பனேட்-ப்பா (CO2/3) என்று அதட்டி கேட்பவர்களுக்கு மகபூப் அலி சார் அவர்களின் முகவரியை தந்து விடுகின்றேன், அவுக தான் எங்களுக்கு இதையெல்லாம் கிளாஸுல சொல்லி தந்தாங்க) படத்தைப்பார்த்து விட்டு ஐஸ்கட்டியை காட்டிட்டு கதையை என்னமா மாத்தி சொல்ராருப்பா என்று சிலர் நினைக்கலாம். கூகுள் மாமா ஆயுசு இருக்கும் வரைக்கும் நாம எதையும் தப்பா சொல்ல முடியாது.

துருக்கி -மண்டுராஸ் ஆற்றின் பள்ளத்தாக்கில் தன் அழகாலும் மருத்துவ குணம் கொண்ட தண்ணீராலும் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கின்றது இந்த பம்முக்காலே


பஞ்சுபோதிபோல் இருக்கா இல்லை பஞ்சரான டையர்போல இருக்கா ?

என்ன மருத்துவ குணம்பா ?  இரண்டு மொடக்கு எடுத்து குடித்தா இருமல் போயிடுமா என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு… ஸ்பா(SPA) தெரியுமா கொழுப்பு உள்ள கோழியை சுடுதண்ணில போட்டு எடுத்தா கொழுப்பு குறைந்து சமைப்பதற்கு ஏதுவாக இருக்குமுல அந்த மாதிரிதான் இந்த ஸ்பா ஆவி பறக்கும் அதே சமயம் உடல் தாங்க கூடிய அளவிற்கு சூடு இருக்கும் இந்த தண்ணில நாம் குளித்தால் உடம்பில் உள்ள கொழுப்பு கரைந்து (நம்மூருக்கு நிறைய தேவைப்படும், ஆனால் மனக்கொழுப்பை கரைக்க முடியாது) உடல் ஆரோக்கியம் அடையும் அந்த ஸ்பா-வை இயற்கையாக மிதமான சூட்டுடனும் அதில் குளிப்பவர்களுக்கு சுகத்தையும் அள்ளி வழங்குகின்றது இந்த பம்முக்காலே.

பனிக்கட்டியல்ல ..சத்தியமா சொல்றேன் உப்புதானுங்க

நிலப்பரப்பிற்கு கீழே ஓடிக் கொண்டிருக்கும்  எரிமலை செயல்கள் தான் இப்ப நிலவும் அதீத வெப்பநிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்..என்னங்க கிளம்பலாமா ? ஆமா நம்மூர் பக்கதுல இருக்கின்ற சுண்ணாம்புகாளேக்கே நாம மெல்ல போக நேரம் இல்ல உம்மாட்ட சொன்னா தண்ணிய அடுப்புல வச்சு சூடு பண்ணி தர்ராங்க இது என்னங்க பிஸ்கோத்து என்று சிலர் முணுமுணுப்பதும் சரிதானுங்க


ஐ!!! நிறைய சால்ட் வீட்டுக்கு அள்ளிகிட்டு போவோமா ?

கூடுதல் தகவல் கிளியோப்பட்ரா குளிப்பதற்க்கு தன் வீரர்களை இங்கு அனுப்பி தண்ணி எடுத்துவரச்செய்து குளிப்பாளாம்,யாரு பார்த்ததுண்டு கேட்காதீங்க அந்த பீப்பீங் சாம் வேலையெல்லாம் நம்மளுக்கு தெரியாதுங்க

பிலோப் மீன் (Blobfish)

என்ன இது கொடுவா / காளை / பண்ணா என்று பறந்து பறந்து அவியலும் ஆனமும் உண்ட நமக்கு இது கிடைக்காம  தப்பிடுச்சே என்று நினைப்பவர்களுக்கு இது சாப்பிடக்கூடிய மீன் கிடையாது. ஒரு கிலோமீட்டருக்கு மேற்பட்ட ஆழ்க்கடலில் 30செ.மி சைஸூக்கு வளரும்/வாழும் ஒரு ஆபூர்வ மீன் இனம்,ஆஸ்திரேலியா கடற்பகுதிகளதான் இதன் வாழ்விடம்


உண்மையை சொல்லுங்க நம் சின்ன வயசில பார்த்த யாரோ ஒரு தெரு அப்பாவின் ஞாபகம் வரலயாண்டு

கொழுகொழுவென்று சதைப்பிடிப்புடன் காணப்படும் இந்த மீன் ரப்பர்போல கடலின் மேற்மட்டதிற்கு வந்து பலூன் மிதப்பதுபோல் மிதக்கும்..சரியான சோம்பேறி நீச்சல் அடிச்சா உடம்பு குறைந்து விடும் என்று மிதந்து மிதந்தே வரதட்சணை வாங்கிய அதிராம்பட்டினம் மாப்பிள்ளை போல் தன் வாழ்வை ஒரே இடத்தில் இருந்து கழித்து கொண்டு இருக்கின்றது இந்த மீன்.

நன்றி : வைக்கீப்பிடியா
என் கம்பெனி (இதுக்கெல்லாம் சம்பளம் கொடுக்குறாங்களே)
Mohamed Yasir

பாலியலுக்கு பலியாகாதே - 5 தொடர்கிறது.... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2013 | , ,

உறுதியோடு போராடுங்கள்...!

நாட்டில் பாலியல் வன்முறைக் கெதிராக எத்தனை வீரியமிக்க போராட்டங்களை கையிலெடுத்தாலும் அந்த போரட்டத்திற்கு மத்தியிலேயே பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளவதை யாராலும் தடுத்துவிட முடிவில்லை. காரணம் நாடக மேடைகளில் சுழற்றப் படுகிறது நீண்ட பெரிய வாள்களைப் போலவே போலியாக இருக்கின்ற நம் நாட்டின் சட்டங்கள். மேடையில் அந்த வாள் எவ்வளவு வேகமாகச் சுழற்றப்பட்டாலும் எதிராளியை எத்தனை முறை தாக்கினாலும் பார்க்கும் நமக்கு மட்டுமே தாக்கப்படுவதாக தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் தாக்கப்படுவதில்லை என்ற நிலையில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது என்பது அத்துனை இலகுவான காரியமில்லை.

மது மயக்கத்தில், காம வெறியில் வீதிகளில் திரியும் வெறி நாய்களுக்கு குழந்தைகள், சிறுமியர், பெண்கள், வயோதிகர்கள் என்ற வேற்றுமைகளும் புரிவதில்லை.

இன்னிலையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருப்பதால் அதற்கான சில வழிமுறைகளை இதற்கு முந்திய பதிவுகளில் பார்த்தோம். மேலும் அவ்வழிமுறைகளைப் பேணி என்னதான் தீய பார்வைகளிலிருந்தும் அதனால் ஏற்படுகிற பாலியல் தாக்குதல்களிலிருந்தும் நம்மை நாம் பெரும் பகுதி பாதுகாத்துக் கொன்டாலும், விஷமிகளால் வேண்டு மென்றே திட்டமிட்டு நடத்தப்படுகிற பாலியல் வன்முறைகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில-தற்காப்பு நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

வீட்டிற்குள் புகுந்து அன்டை வீட்டினரால் ஒரு இளம் பெண் வன்புணரப்பட்ட செய்தியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தங்களுடைய வீடுகளில் இருந்தாலும் நம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக் குறிதான் என்ற மோசமான முன்னுதாரனமாக இச்சம்பவம் இருப்பதோடு பெண்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையும் இதில் மறைந்திருக்கிறது.

பாலியல் வன்முறைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பெண்கள் சிறிய கத்தியை தன்னுடன் வைத்திருப்பது சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும் என்ற ஆலோசனை பலராலும் சொல்லப்படும் நிலையில் சமீபத்தில் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகையும் பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அழுத்தமகச் சொன்னதாக செய்தியிலே பார்க்க முடிந்தது.

பெண்களுக்கு தற்காப்பு ஏற்பாடுகள் அவசியம். அதே சமயம் கத்தி போன்ற ஆயுதங்கள் அப்பெண்களுக்கே ஆபத்தாக அமைந்து விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மேலும் கத்தி போன்ற ஆயுதங்களைக் கையாள்வதற்கு போதிய பயிற்சிகள் அவசியம். எனவே பெண்கள் ஆண்களின் பலகீனங்ளை அறிந்து கொன்டால் அதன் காரனமாக பாலியல் தொல்லைகள் ஏற்படும்போது இலகுவாக அவர்களைத் தாக்கி அந்தச் சூழலிருந்து இறவன் உதவியால் தங்களை பாதுகாத்து கொள்ள இயலும். மேலும் சில சமயோசித நடவடிக்கைகளும் சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும்.

பல சந்தர்ப்பங்களில் ஆண்களின் சூழ்சிகளில் தங்களையறியாது பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். சமீபத்திலே தன் மனிவியின் சகோதரியை வாகனத்தில் ஏற்றிச் சென்றவன் ஆள் அரவமற்ற காட்டுப் பகுதிக்குக் கொன் டுபோய் வன்புணர்ந்த செய்தியைப் படிக்க நேர்ந்தது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் சற்று நிதானமக செயல்பட்டு அவர்களோடு ஒத்துழைப்பது போன்ற பாசாங்கு செய்து சூழ்நிலையை சாதகமாக சுட்டிக்காட்டி வேறொரு ஒரு சந்தர்ப்பம் உருவாகலாம் என்று என்று நம்பவைத்து அந்த சூழலிலிருந்து தப்பிக் கொண்டால் பின் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவைகள் கைகூடாமல் அந்த அயோக்கிய ஆண் பலப்பிரயோகம் செய்தால் அப்போது அவர்களுக்கு காயங்கள் ஏற்படுவிதமாக முடிந்த வரை கையில் சிக்கும் பொருட்களைக் கொண்டு தாக்கி தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டு சில நிமிடங்களைப் பயன்படுத்தி அச்சூழலிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட முயற்சிக்கனும்.

மேலும் ஆண்களின் இச்சையைத் தூண்டு பகுதிகளை தாக்கியும் தப்பித்துக் கொள்ளலாம். ஆண்களுக்கென்று பலகீனமான உறுப்புகள் என்று உடலில் உள்ளது. அதன் மேல் ஒரு சிறு அடிபட்டாலும் சில நிமிடங்கள் அவர்களை நிலை குலையச் செய்துவிடும்.

யாரும் பெண்களை நெருங்காமல் அவர்களை பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்திவிட முடியாது. அவ்வாறு அவர்கள் நெருங்கும்போது சரியான நேரத்தில் தாக்குதல் நடத்தி அப்போது கிடைக்கும் சில வினாடிகளைப் பயன்படுத்தி அதிலிருத்து தப்பிவிட்டால் கூட பிறகு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தங்களின் மானத்தையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள கொலை செய்தாலும் அது கொலையல்ல என்று சட்டம் சாதகமான நிலையில் இருக்கும் போது எதற்கும் அஞ்சாமல் போராடும் குணம் பெண்களுக்கு வேண்டும். ஒரு பெண்ணின் கற்பு சூரையாடப்படுகிறது என்றால் அது அவள் அறியாத நிலையில் நடந்திருக்க வேண்டும். மரணத்திற்கு அஞ்சாமல் பெண்கள் உயிருல்ல வரை, உணர்வுள்ள வரை தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போரட வேண்டும். அதற்காக கோழைத்தனமாக தங்களை தாங்களே மாய்துக் கொள்ளுதல் கூடாது. அக்கிரமக்காரர்களைக் கொன்றேனும் வெற்றி! இல்லையேல் போராடி வீர மரணம்!

இன்ஷா அல்லாஹ் தொடரும் 
அபு நூரா

கண்கள் இரண்டும் - தொடர் - 4 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2013 | , , ,


பார்க்கக்கூடாது என்று  தடை விதிக்கப்பட்டவற்றை மீறி காணும் போது பெரும்பாலோரில் சிலர் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோன்ற நிகவுழ்வுகளை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் அப்படிபட்ட சம்பவங்கள் சவூதியில் நடந்தால் தலை போய்விடும். உண்மையிலேயே பிடிபட்டால் தலை வெட்டுதான். 

மேலும், சவூதி அரேபியாவில் தடைவிதிக்கப்பட்ட வீடியோக்கள் பார்ப்பது குற்றம். மற்ற நாடுகளிலும் குற்றமாக இருந்தாலும் சவூதியில் இதற்கு கடும் தண்டனை கொடுப்பார்கள்.    அப்படி தகாத வீடியோக்கள் பார்த்து யாரும் பிடிபட்டால் மயக்க மருந்துகள் ஒன்றும் கொடுக்கப்படாமல் (இங்குள்ள குற்றவியல் சட்டப்படி) அவர்களின் விரல் நகம் கழற்றப்பட்டது, அதே போன்று சவூதியில் பெண்களை உன்னிப்பாக (கூர்ந்து) பார்க்கக் கூடாது பார்த்து பிடிபட்டால் கசையடிகள் கொடுக்கப்பட்டது. 100 கசையடி 200 கசையடி இப்படியாக குற்றத்திற்கேற்ப கசையடிகள் மாறுபடும். 100 கசையடிகள் என்றால் தொடர்ந்து தரமாட்டார்கள்.

அப்படி தொடர்ந்து கசையடி கொடுக்கப்பட்டால் கசையடி வாங்கியவரின் மையத்தைத்தான் பார்க்க முடியும், ஆதலால் கசையடி வாரத்திற்கு 20 வீதம் தவணை முறையில் கொடுக்கப்படும். ஒவ்வொரு கசையடியும் உம்மாவிடம் குடித்த பால்யாவும் வெளியேறி விடும் என்று சொல்லப்படுகின்றது. இந்த தண்டனைகள் யாவும் ஒவ்வொரு ஜும்மா தொழுகைக்கு பின் ஜும்மா பள்ளியின் வளாகத்திலேயே கொடுக்கப்படும். இவைகள் யாவும் பார்வையைப் பாதுகாக்காததால் தானாக வாங்கிக் கொள்ளும் தண்டனைகள்.

பாதுக்க வேண்டிய  பார்வையை   பாதுகாக்கப்படாமல் விதிகள் மீறும்போது அரங்கேறும் நிகழ்வுகள். இப்பொழுது அந்த தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது  எடுக்கப்பட்டு விட்டதா? தெரியவில்லை. மேற்சொன்ன காட்சிகள்  15 வருடங்களுக்கு முன்பு அடிக்கடி அரங்கேறும் என்பது பல வருடங்கள் சவூதியிலே வாழ்ந்தவர்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் சவூதியில் வாழ்ந்த சகோதரர்கள் அத்தனை பேரும் கண்ட அல்லது கேள்விபட்ட காட்சிகள் தான் அவைகள். இப்பொழுது அந்த தண்டனைகள் ஒருவேளை இருந்தாலும் அதிகமாக அவ்வாறு தண்டனைகள் வழங்கும் வழிமுறை காணப்படுவதில்லை.

இந்த உலகத்தில் நம்மை போன்ற மனிதர்களால் கொடுக்கப்படும் தண்டனைகள் இப்படி என்றால் மறுமையில் இறைவனால் கொடுக்கப்படும் தண்டனைகள் எவ்வளவு கடுமையாக இருக்கும். அல்லாஹ்தான் எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து நம் அனைவரையும் ஈமானுள்ள மக்களாக மாற்றி நல்ல ஈனமானுடன் மரணிக்கச் செய்து அவனுடைய தண்டனைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

பிறவியிலே கண் பார்வை இழந்தவர்கள், கண் பார்வை உடையவர்களை விட சொர்க்கம் செல்லும் வாய்ப்புகள் அதிகம். அவர்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்ய புறக்கண் இல்லாவிட்டலும் அகக்கண் திறந்து அதன் மூலமாக சிறப்பாக செயல் படுகின்றனர். பாவம் இழைக்க துணையாக இருப்பது புறக் கண்ணே. புறக் கண்கள் இல்லாவிட்டால் அந்த கண்களினால் பாவமிழைப்பது மிக மிக  குறைவாகத்தான். இருக்கும் அல்லது இருக்காது. ஆனாலும் கண்கள் இரண்டும் இல்லாமல் சில பேரின் அற்புதமான நிகழ்வுகளும் உண்டு.

உதாரணத்திற்கு நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரியிலே லெக்சரராக ஒரு இஸ்லாமிய சகோதரர் பணியாற்றினார். இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் என்று நினக்கின்றேன். பிரவியிலேயே பார்வை இல்லாமல் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது. பார்வை இல்லாமல் அவரும் கல்வி கற்று, பார்வை உடையோருக்கு கற்றும் கொடுக்கின்றார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை சிந்திக்க கடைமை பட்டுள்ளோம்.

அதுவல்லாமல் சமீபத்தில்   யு-டியூபில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது அதில் பிரவியிலேயே பார்வயைப் பெறாத  சிறுவன் ஒருவன் அல்குர்ஆன் 30 ஜுஸையும் மனப்பாடம் செய்து பிறருக்கு எத்தி வைக்கும் எண்ணம் இருப்பதையும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது மனதை தொட்ட வீடியோவில் அதுவும் ஒன்று. அல்லாஹ் நாடினால் எல்லாமே சாத்தியமாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டே, இப்படி அகக்கண்ணை திறக்க வைத்து இறைவன் எத்தனை பெரிய வேலைகளை  பார்வை இல்லாதவர்களிமே வாங்குகின்றான் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை மிக அன்புடன் அழைக்கும்போது கண்களின் முக்கியத்துவத்தை பிரதிபளிக்கும் விதமாக கண்ணா என்றும் கண்ணே என்றும் அழைப்பது உண்டு. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிப்பவர்களுக்கும், ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் விருப்பமானவர்களை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே”  என்று அழைக்கின்றனர். 

இதன் முதல் பதிவின் பின்னூட்டத்தில் மு.செ.மு. நெய்னா முஹம்மது கூறியபடி பாசத்தின் வெளிப்பாடாய், அன்பின் உச்சமாய் நம் ஊர் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை "கண்ணான உம்மாவே" என்றும் ஆண் பிள்ளைகளை "கண்ணான வாப்பாவே" என்றும் அழைப்பார்கள். அப்படி கண்ணை போன்று நம்மை பாதுகாத்த அவர்களை, நாம் வளர்ந்ததும் அவர்கள் நமக்கு உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் பணத்தாலும் நமக்கு செய்த பெரும் தியாகத்தை எண்ணிப் பாராமல் அவர்களை கவனிப்பார் யாருமின்றி விட்டு விடுவது எவ்வளவு பரிதாபத்துக்குரியது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.  

இல்லையேல் பின்னால் தான் பெற்ற பிள்ளைகளால் இதேபோல் நிந்திக்கப்படுவாய் என்பதையாவது மனதில் வைத்து தாய் தந்தை செய்த தியாகத்திற்கு இல்லாவிட்டாலும் தனது சொந்த நலனுக்காவது தாய் தந்தையை நன்கு கவனிக்க தவறக்கூடாது. என்பது நியதி. இதை நன்கு ஒவ்வொருவரும் மனதில் பதியவைக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு நாம் கண்களாக இருந்தோம். நம் தாய் தந்தையரை நமது இரு கண்கள் போன்று நன்கு கவனித்துக்கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த 5 வது தொடரில் பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற அதிகாலையில் கண் விழிப்போரை பற்றியும் பார்போம்.
(தொடரும்)
அதிரைமன்சூர்

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 7 26

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2013 | , , ,


H.G.wells ஆங்கில எழுத்துலகில் விஞ்ஞானக் கற்பனைக் கதைககள் எழுதியவர்களில் இவரும் ஒருவர். இவரின் Time Machine, wars of the World, Food of the Gods, Invisible Man ஆகியவை ஆங்கில இலக்கிய பீடத்தை அலங்கரித்த ஆபரணங்களில் அடங்கும். Outline of History என்னும் வரலாற்று நூல் ஒன்றும் இவருடைய கை வண்ணம் பட்டு பிறந்தது. இவர்எழுதிய பலபுத்தகங்கள் பள்ளி பாடநூல் வரிசையில் இடம் பிடித்தன.H.G.wellsஎழுதிய Outline of History யில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்து இஸ்லாமீயர்கள் பாய்மரக் கப்பலில் எகிப்து நாட்டுக்கு சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்த வந்ததாகவும் பின் அந்நாட்டை ஆண்ட மன்னனின் கொடிய ஆட்சிக்கு பயந்து மீண்டும் பாய்மரக் கப்பலிலேயே அதிராம்பட்டினம் திரும்பிய வரலாறு குறிப்பு இருப்பதாக http://adiraihistory.blogspot.ae/2010/09/blog-post_29.html என்ற வலைப்பூவில் சகோதரர் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து பதிந்திருந்தார்கள்.

Allex Halley என்பவர் எழுதிய The Roots என்ற ஆங்கில மொழி புத்தகத்தை "வேர்கள்" என்ற பெயரில் இவர் மொழியாக்கம் செய்து வெளியிட்டு இருப்பதாகவும் படித்த நினைவு. அந்த வலைத்தளமும் அதிராம்பட்டினம் சார்ந்ததாகவே இருந்தது. 

Carl Jung [1875-1911] சுவீடன் நாட்டுக்காரர். இவர் ஒரு மனோவியல் ஆய்வாளர் Sigmand Freud “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” என்று சொன்ன ஆசாமி இவர்தான். இவரோடு கூட்டாக கொஞ்ச நாள் ஆய்வு நடத்திய பின் Freud-டின் கருத்துக்களில் உடண்பாடு கொள்ளாமல் விலகி தனியாக மனோவியல் ஆய்வை தொடங்கினார். அதன் விளைவு Psychology of Unconscious‘’ சுய உணர்வு இழந்த மனோநிலை’’ என்ற ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இது மனோவியல் துறையில் ஒரு வேத நூலாக கருதப்படுகிறது.

George Bernard Shaw [1856-1950] இவர் ஒரு பழுத்த சோஷலிச வாதி. Fabian Party ஆதரவாளர். 'அறிஞர் பெர்னாட்ஷா’ என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பிரிட்டனில் பிறந்த இவர் ஒரு சித்தாந்தவாதி, எழுத்தாளர். 'Arms and the Man', 'The Devil’s Disciple', 'Candida, Caesar and Cleopatra', 'The Apple cart' நாடகங்களை எழுதி புகழ் பெற்றவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1925லும் ஆஸ்கார் விருது 1938லும் பெற்றார். இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே ஒரு நபர் அறிஞர் பெர்னாட்ஷா மட்டுமே! இவருடைய நாடகங்கள் கதைகள், கட்டுரைகளில் சமுதாய சீர்திருத்த கருத்துகள் மேலோங்கி நிற்கும், இவர் சமூக சீர்திருத்த  சிந்தனை கொண்டவர்.

1950-ஆம் ஆண்டு இவர் உலக வாழ்விலிருந்து விடை பெற்றுச் சென்றார். "அவர் கைபட்டு மை தொட்டு எழுதிய "பேனா" என்னை கைவிட்டு  போனானே என் காதலன்!’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. உலகில்  மனிதன் பிறந்த நாள் முதல் மறைந்த நாள் வரையிலான நாட்களை விரல் விட்டு எண்ணி சரித்திரம் அவனுக்கு இடம் கொடுப்பதில்லை. உலகில்அவன் ’செய்த சாதனை என்ன?’’ என்ற கேள்விக்கு கிடைக்கும் விடையை ஆரஅமர எடை போட்டு பார்த்த பின்தான், சரித்திரக் கோட்டை கதவுகள் திறக்கும். சாதனையாளர்களை தவிர வேறு யாரையும் அது அனுமதிப்பதில்லை. அந்தக் கோட்டையின் கதவுகள் பெர்னாட்ஷாவுக்கு திறந்தே இருந்தது.

பிரபல திரைப்பட நடிகை எலிசபெத் டைலர் பெர்னாட்ஷாவை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது. 

"மிஸ்டர் பெர்னாட்ஷா! நீங்கள் ஒரு அறிவாளி! நான் ஒரு பேரழகி. நீங்களும் நானும் கல்யாணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் பிள்ளை உங்களைப் போல் அறிவும் என்னைப் போல் அழகும் உடையதாய்இருக்கும்அல்லவா? ஆதலால் நாம் ஏன் திருமணம்செய்து கொள்ளகூடாது ?"  என்றாள்.

"ஆமாம்! நீ சொல்வதும் சரிதான். ஆனால், என்னைப் போல அழகும் உன்னை போல அறிவும் கொண்ட பிள்ளை பிறந்து விட்டால் என்ன செய்வது?" என்றார்.

அங்கிருந்த எல்லோரும் "கொள்" என்று சிரித்தார்கள். இப்படி  நகைச்சுவைபட பேசுவதில் பெர்னாட்ஷா வல்லவர்.

Dr. Zhivago இது ஒரு எழுத்தாளர் பெயர் என்று நினைத்து விடாதீர்கள். 1957களில் உலகம் முழுதும் பரபரப்பு காட்டிய நோபல் பரிசு பெற்ற புத்தகம். போரிஸ் பாஸ்டர்னாக் Boris Pasternak ரஷ்ய எழுத்தாளர். இவர் எழுதிய ‘டாக்டர் சிவாகோ’ என்ற புத்தகத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் 'பரிசை' வாங்க கூடாது’ என்று ரஷ்யா கம்யூனிச அரசு ஆசிரியருக்கு தடைபோட்டது.

1905-லிருந்து இரண்டாம் உலகப் போர் வரையிலான ரஷ்யாவின் பின்புலத்தை கதை மையமாக கொண்டு உருவான  ‘டாக்டர் சிவாக்கோவை’ வெளியிட ரஷ்யஅரசு தடை போட்டது. 

பின்னர் கதையின் கையெழுத்துப் பிரதிஒன்று இத்தாலி மிலான் நகருக்கு கடத்தப்பட்டு 1957ஆண்டு "டாக்டர் சிவாகோ" வெளி  உலகம் வந்தார்.இந்த புத்தகம் வாசகர் வட்டத்தில்பெரும் வரவேற்ப்பை பெற்று விற்பனையில் சக்கை போடு போட்டது.

ரஷ்ய அரசு புத்தக ஆசிரியருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. ‘இம்சை’ தாங்க முடியாத ஆசிரியர் போரிஸ் பாஸ்ட்டர் நாக்கை 1960–ம் ஆண்டில் சுவாசப்பை புற்று நோய் மண்ணகம் விட்டு வின்னகம் கொண்டு  சென்றது.

19-ம் நூற்றாண்டின் ரஷ்யாவின் சிறந்த இலக்கிய படைப்பாளர்களில்  Foydor Dostoevisky என்பவரும் ஒருவர். Crime and Punishment  -‘குற்றமும்-தண்டனயும்’ என்ற நாவல் அவர் படைப்புகளில் மிகச் சிறந்த ஒன்றாகும்.

19-ம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியங்களில் "குற்றமும் தண்டனையும்" தவிர வேறு சிறந்த படைப்புகள் ஏதும் இல்லை. 1846-ல் டெஸ்ட்டோ விஸ்கியின் முதல் படைப்பான Poor Folk, வெளியானது. அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 1848-ஆண்டு கைதாகி, கடும் தண்டனை பெற்று சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். 1858ஆம் ஆண்டு விடுதலை பெற்று ரஷ்யா திரும்பினார். Crime and Punishment, குற்றமும் தண்டனையும் சைபீரியா சிறை விடுதலைக்குப் பின் அவர் எழுதிய முதல் நாவல். இதைத் தொடர்ந்து The Gambler, The Idiot, The Brothers of Karamazov ஆகிய நாவல்களையும் எழுதினார். 

19ம் நூற்றாண்டில் அவர் படைப்புகளுக்கு தகுந்த பரிசு கிடைக்கவில்லை. ஆனால், இருபதாம் நூற்றாண்டு அவரை கை விடவில்லை. புகழும் பாராட்டும் அவரை தேடித் தேடி அலைந்தது. எங்கெங்கு தேடினும் புகழின் கையிலும் பாராட்டின் கையிலும் அவர் அகப்படவே இல்லை! ‘இன்று வரும் நாளை வரும்’என்று வருகின்ற வழி மீது கண்வைத்து கதவோரம் காத்திருந்தபோது வராத புகழும் பாராட்டும், அவரை தேடித் தேடி அலைந்த போது அவர் எங்கே போனார்!? தேடிய போதும் வயிற்றுப் பசியால் வாடிய போதும் வராத செல்வமும் புகழும் தேடாத போது வருவதெல்லாம் கலைஞனிடமும் தேசத் தொண்டனிடமும் காலம் விளையாடும் வாடிக்கையான கண்ணா மூச்சி விளையாட்டுகளே!

புகழும் பாராட்டும் தேடி  வரும் வரை காலம் காத்திருப்பதில்லை. காலம் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும். டேஸ்டோ விஸ்கி தன் மண்ணுலக பயணத்தை முடித்து வின்னுலகம் போய் ரெம்ப நாளாச்சுங்க! பரிசு பிந்தியதா? அல்லது டெஸ்ட்டோ விஸ்கி முந்தினாரா? விடை கிடைக்காத கேள்வி. Inbox சில் இதை போட்டு வைப்போம். ஒரு நாள் பதில் கிடைக்கலாம்!

டெஸ்ட்டோ விஸ்கியின் படைப்புகளில்  பல உலக மொழிகளில் வெளிவந்த போது இலக்கியக் காதலர்கள் ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி "யார் இவர்?". இலை மறை காயாக இருந்த ஒரு இலக்கியச் சிற்பி குன்றின் மேல் தீபமாக உலகெங்கும் ஒளிவீசி புகழ் பெற்றார். அதுமட்டுமே அவர் ஆன்மாவின் சாந்திக்கு உலகம் கொடுத்த சன்மானம்.
தொடரும்...
S.முஹம்மது ஃபரூக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு