Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் - 11 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2013 | , , , , , ,

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடி இருந்த எம்ஜியாரின் இதயத்தை இடையில் சில காலம்  பிரிந்து இருந்த அடிமைப் பெண் ஆக்கிமிக்கத்தொடங்கினார். இதற்கு சில பார்ப்பன சக்திகள் துணை இருந்ததாகக் கூறுகிறார்கள். மெல்ல  மெல்ல கட்சியிலும் பின்னர் ஆட்சியிலும் அதிகாரங்களைப் பிடித்துக் கொள்ள  ஜெயலலிதாவோடு எம்ஜியாரின் கடந்தகால உறவையும் அதன் நெருக்கத்தையும் உரிமையையும் பயன்படுத்த மந்திர ஆலோசனைகள் நடைபெற்றன. இவற்றை ஆர். எம் வீரப்பன் மோப்பம் பிடித்தார். ஆனாலும் ஜெயலலிதா எம்ஜியாரின் அந்தரங்கத்தின் அரசியானார். அதனால் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பதவி ஜெயலலிதாவிடம் தூக்கித்தரப் பட்டது. மேலும் இராஜ்ய சபை உறுப்பினராகவும் ஆக்கப் பட்டார். 

கட்சிக்காக காலமெல்லாம் கஷ்டங்களைச் சுமந்த  ஆர். எம். வீரப்பன், எஸ். டி. எஸ். மற்றும் கே. ஏ.கே ஆகியோர் உள்ளூர ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். ஆனால்  “நினைப்பதை நடத்தியே முடிப்பவன் நான்! நான்! நான்! “  என்கிற எம்ஜியாரின் முன்  அவை எடுபடாமல் போயின. உலக வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருந்த பலரின் வரலாறு ஒரு பெண்ணின் ஓரக் கண்பார்வையில்  ஒன்றுமில்லாமல் போனதை பார்த்து இருக்கிறோம். இதற்கு எம்ஜியாரும் விதிவிலக்காகவில்லை.

கட்சிக்கு சோதணை வரும் நேரங்களிலெல்லாம், உள்கட்சிப் பூசல்கள் வெளிவரும் நேரங்களில் எல்லாம் எதையாவது சொல்லி பிரச்னையை திசை திருப்புவது எம்ஜியாருக்குக் கை வந்த கலையாக இருந்தது. ஆர். எம். வீரப்பனுக்கு திருமதி ஜானகி அம்மையாரின் மறை முக ஆதரவும் இருந்தது. அத்துடன் ஆர் எம் வீரப்பனுக்கு கருணாநிதியுடன் இரகசிய உறவு இருந்ததாகவும் ஜெயலலிதாவுக்கு ராஜீவ் காந்தி உடைய ஆதரவு இருந்ததாகவு ம் செய்திகள் கசிந்தன.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுவதுபோல் எம்ஜியாருக்கும் மரணம் வந்தது. தான் இறந்தால் தனது இறப்பை முதலில் கருணாநிதிக்குத் தெரியப் படுத்திவிட்டே பத்திரிகைகளுக்கு அறிவிக்க வேண்டுமென்று எம்ஜியார் ஒரு வாய்மொழி உதத்தரவை தனது செயலருக்கும் ஜானகி அம்மையாருக்கும் இட்டு இருந்தார். அதன்படி விடியற்காலை யாரும் அறியாத வண்ணம் கருணாநிதி ஆற்காடு வீராசமியுடன் இராமவரம் தோட்டத்துக்கு சென்று இறுதி அஞ்சலியை முதலில் செலுத்திவிட்டு சென்றதும்  எம்ஜியார் இறந்த விஷயம் நெடுஞ்செழியனால் அரசுமுறையாக  அறிவிக்கப் பட்டது.  மக்கள் இந்த மரணத்தை ஏற்கவே மறுத்தனர். தமிழக தலை நகரம்  அல்லோகலப் பட்டது. அழுகுரல்கள் அடுத்த கண்டத்துக்கும் கேட்டன. அன்று மட்டும் கூவம் ஆறு, மக்களின் கண்ணீரைத் தாங்கி ஓடியது. சென்னை நகரம்  தவிடு பொடியானது. அண்ணா சாலையில் திராவிடக் கழகம் நிறுவிய கருணாநிதியின் உருவச்சிலை சிதைக்கப் பட்டது. சமூகவிரோதிகளால்  கடைகள் சூறையாடப் பட்டன.

எம்ஜியாரின் மரணம் ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப் படவில்லை. வீறு கொண்டு எழுந்த ஜெயலலிதா இராமவரம் தோட்டம் நோக்கிப் புயலெனப் புறப்பட்டார். ஆனால் இராமவரம் தோட்டத்தில் ஜெயலலிதா வாயிலிலேயே தடுக்கப் பட்டார்.       அதையும் மீறி லிப்டில் ஏறி , மாடிக்குப் போனார். லிப்டிலேயே வைத்துப் பூட்டினார்கள். எம்ஜியார் உடலை பார்க்க விடாமல் பலவாறு தடுக்கப் பட்ட ஜெயலிதாவுக்கு ‘ உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் “ என்று இருவரும் பாடியதன் பொருள் தெரிந்தது, மீண்டும் வீறு கொண்டு எழுந்தார். இன்று போல் ஜெயலலிதாவுக்கு துணை நிற்க யாரும் இல்லை. இன்று அவரோடு இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் எம்ஜியாரைப் பார்க்க விடாமல் நெட்டித் தள்ளியவர்களே. அன்றைய நிலையில் தனிமரமாக நின்ற ஜெயலலிதாவின் மனதில் உறுதி மட்டும் இருந்தது.

அதோடு எம்ஜியார் உடைய உடல், பொது  மக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்ட இராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கும் அவருக்கு அதே வரவேற்பு. ஆனாலும் கையறு நிலையில்  கதறிக் கொண்டு நின்றார். அந்த நேரம் உலகமே பார்த்துக் கொண்டிருக்க, அரசு வாகனத்தில் எம்ஜியாரின் உடல் ஏற்றப் பட்டு இறுதி சடங்கு நடக்கவிருந்த திசை நோக்கி அரசு வாகனம் நகரத் தொடங்கியது. அப்போது தலைவிரி கோலமாக மகாபாரத பாஞ்சாலியின் கோபத்தோடு ஓடிவந்த ஜெயலலிதா  அந்த டிரக்க்கின்  பின்புறம் தாவி ஏறினார். அவர் தனது மார்பளவுக்குத் தாவி டிரக்கில் ஏறியபோது அவரது மார்பில் பெண்ணென்றும் பாராமல் சில பல உதைகள் விழுந்தன. ஆனால் ஜெயலலிதா பிடியைத் தளர்த்தவில்லை. பலரும் கூடி அவரை டிரக்கிலிருந்து கீழே தள்ளவே முற்பட்டனர்.  மக்கள் கூட்டம் இதைப் பார்த்துக் கொண்டு இருந்தது. அப்போதே சில அறியாப் பெண்கள் அடிமைப் பெண் படத்தில் பேச நடக்க முடியாமல் இருந்த தலைவருக்கு பேசவும் நடக்கவும் சொல்லிக் கொடுத்த உனக்கா இந்தக் கதி என்று கூக்குரலிட்டனர். மக்களின் இந்த அறியாமைதான் இன்றுவரை ஜெயலலிதாவுக்கு அறுவடையைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

தைரியத்தின் மொத்த உருவாகவோ அல்லது இதைவிட்டால் அனுதாபம் தேட வரு வாய்ப்பு அரிது என்றோ அந்த சூழ்நிலையை தனக்கு அனுதாப அலையாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்  ஜெயலலிதா.

அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் கேள்வி எழுந்தபோது , முதலில்  மறுத்த எம்ஜியாரின் மனைவி  வி. ஏன். ஜானகியை ஆர். எம். வீ மிகவும் கட்டாயப்படுத்தி  பதவி ஏற்க வைத்தார். ஜெயலலிதா பக்கத்திலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அணி திரண்டனர். ஜெயலலிதாதான் முதல்வராக வரவேண்டும் அவரே அரசியல் எம்ஜியாரின் வாரிசு என்று எம்ஜியாரால் அடையாளம் காட்டப்பட்டவர் என்கிற விவாதம் வைக்கப்பட்டது. ஜானகி அம்மையார் எம்ஜியாருடைய சட்ட பூர்வமான மனைவியாக இருந்தாலும் ஜெயலலிதாவும்  அந்தத் தகுதிக்கு கிட்டத்தட்ட உரியவராகவும் தலைவரின் இறுதிக் காலத்தில் அவரது அன்புக்கு உரியவராகவும் கட்சியில் பொறுப்புகள் வழங்கப் பட்டவராகவும் கல்வியறிவும் நாவன்மையும் பெற்றவராகவும் ஜெயலலிதா இருந்ததால் அவரே முதல்வராக வேண்டுமென்று அணிதிரண்ட அணி தோல்வி கண்டது. ஜானகி அம்மையார் முதல்வராக பதவி ஏற்றார்.

சட்டமன்றத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்று இரு அணியினரும் சங்கல்பம் மேற்கொண்டனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற நிலையில் கருணாநிதியும் காய் நகர்த்த்னார். சட்டமன்றம் கூடியது. சக்களத்திகளின் சண்டையை சட்டமன்றம் பார்த்து சந்தி சிரித்தது.   பாரம்பரியம் மிக்க தமிழக  சட்டமன்றத்தில் மாட்டப் பட்டிருந்த முன்னாள் முதல்வர்களின் படங்கள் மவுனமாக  இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தன. அதிலும் பக்தவத்ச்சலத்தின் படம் காமராஜரின் படத்தை பார்த்து கண்சிமிட்டிக் கேட்டது “ விஷக் கிருமிகள் பரவிவிட்டன “ என்று அன்று சொன்னது இன்று நடப்பதைப் பார்த்தீர்களா என்பது அதன் பொருள் . ஒரு வழியாக ஜானகி அரசு கலைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் வந்தது.

எம்ஜியார் காலத்தில் கால் தவறி விழுந்த கருணாநிதி, ஏமாளிகளின் தோள்களில் ஏறி மீண்டும் அரியணை ஏறினார். கடந்த தேர்தலுக்குப் பின் வெற்றி விழாவில் கட்டிக் கொள்வதற்கு கருணாநிதி எடுத்துவைத்திருந்த பட்டுவேட்டிக்கும்  இருமனைவிகளின் பட்டுப் புடவைகளுக்கும் உடுத்தி மகிழும் வேலை வந்தது.

இந்த முறை கருணாநிதி அடக்கி வாசித்தார். கட்சிகாரர்களையும் அடக்கிவைத்து இருந்தார். அரசு அலுவலகங்களில் எம்ஜியார் காலத்தில் நகராமல் இருந்த பல கோப்புக்கள் நகர ஆரம்பித்தன. அரசு அலுவலர்களின் அவலங்கள் துடைக்கப் பட்டன. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதப்படி சம்பளம்  வழங்க உத்தரவிடப் பட்டன. அப்போது நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மூலமாக வந்தது ஆபத்து.

காங்கிரசுடன் நெருக்கமான உறவு வைத்து  இருந்த ஜெயலலிதாவின் நெருக்கடி மற்றும் இலங்கைச் சூழ்நிலை காரணமாக அன்றைய ஆளுநர் பர்னாலாவிடமிருந்து கட்டாயப் படுத்தி ஒரு அறிக்கை கேட்கப் பட்டு அவர் அதைத்தர மறுத்த நிலையில் காஞ்சிமடம், ஆர். வெங்கட்ராமன், ஜெயலலிதா ஆகிய பிராமணக் கூட்டணி செய்த சதியால்   இந்திய இறையாண்மைக்கு கருணாநிதியின்  தமிழகத் தலைமை ஆபத்து எற்படுத்திவிடுமென்று காரணம் காட்டப்பட்டு ஆட்சி கலைக்கப் பட்டது.  கருணாநிதி  பதவி இழந்தார். ஜனநாயகத்தின் கழுத்து இந்திய ஜனாதிபதியாலேயே நெரிக்கப் பட்டது. அரசியல் சட்டத்தின் பக்கங்கள் அழுக்காகிப் போயின. 

வந்தது மறுதேர்தல். இம்முறை மக்கள் அனுதாபம் கருணாநிதியின் பக்கம். மீண்டும் அரியணை ஏறுவார் என்று உலகம் எதிர்பார்த்த நிலையில் அந்த எண்ணத்தில் மண் அல்ல வெடி விழுந்தது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீ பெரும்புதூருக்கு வந்த இந்திய அரசியலின் இளம் நட்சத்திரம்- இந்திராவின் மைந்தன் இராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளினால் வெடிவைத்துக் கொல்லப் பட்டார்.

ஒரு நாள் போட்டிகளில் கடைசி  ஓவரில் ஆட்டத்தின் திசை மாறுவதுபோல் ராஜீவின் மரணத்தால்  எழுந்த  அனுதாபத்தின்  அலை சுனாமியாக அடித்தது. இந்திரா காங்கிரசும் ஜெயலலிதாவும் இணைந்த கூட்டணி அமோக வேற்றி பெற்றது. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல் விடுதலைப் புலிகளுக்கு  பாம்பென்று அறியாமல் அனுதாபப் பால் வார்த்த குற்றத்துக்காக கருணாநிதி தண்டிக்கப் பட்டார். தமிழினம் என்றும் தமிழினத் தலைவர் என்றும் கொண்டாடப் பட்ட கருணாநிதியும் அவர் கட்சியும் கொலை செய்யத் தூண்டினார்கள் என நாடெங்கும் சுவர்களில் ஒட்டப்  பட்ட சுவரொட்டி மக்களின் மனங்களிலும் ஒட்டிக கொண்டது அவர்களின் மனதை மாற்றி ஆட்சியைப் பறித்தது. அத்துடன் தனது சுய வெற்றி  வரலாறு விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக கருணாநிதி மட்டுமே அந்தத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினரானார். திமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. ராஜீவ் காந்தியின் இறப்பின் மேல் ஜெயலலிதாவுக்கு சிம்மாசனம் போடப் பட்டது,

ஜெயலலிதா தமிழக முதல்வரானார். 

பிறகு? ஜெயலலிதாவின் ஆட்சியையும் சசிகலாவின் நிழல் ஆட்சியையும். பார்க்கலாமே!

இன்ஷா அல்லாஹ். தொடரும்...
ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சேவல் கதை ரொம்ப சுவராஸ்யமாக இருக்கு ரெட்டெ புறா கதை முடிஞ்சிருச்சா...

அடுத்து சேவலோட (கோழி) தோழி கதையும் சொல்லுங்க, ஆவலுடன்....

sabeer.abushahruk said...

கூத்தாடிகளின் அரசியல், C ஏரியாவில் சக்கைப்போடு போடுமளவுக்கு நிறைய அதிரடி காட்சிகளோடான் பக்கா மசாலாப்படம்போல உள்ளது.

ஹீரோ எம்ஜிஆரும் ஹீரோயின் ஹெயலலிதாவும் வில்லன் கருனாநிதியும் அவர்களைச்சுற்றி ஏகப்பட்ட கேரக்ட்டர்களும் ஜமாய்த்தாலும் அவர்கள் யாவரும் "வச்சு காமெடி பண்ணது என்னவோ சாட்ச்சாத் பொதுஜனத்தைதான்"

அப்போவெல்லாம் விழிப்புணர்வு இல்லாமல் ஆட்டுமந்தை என இருந்த மக்கள் இப்போ வெவரமான ஆட்டுமந்தைகளாக இருக்கிறார்கள்.

கூத்தாடிகள் மாறினாலும் கூத்து ஜெகஜ்ஜோதியாகத் தொடர்கிறது.

திரைக்கதை வடிவத்தைக் கேட்பதுபோல் அவ்வளவு சுவாரஸ்யம் வாசிக்க வாசிக்க.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காஸ்.

Unknown said...

நல்லவரோ கெட்டவரோ சந்தர்ப்பத்தை சரியாக பயன்பாட்டுக்கு ஜெயலலிதா கொண்டு வந்து அரியணை ஏறியது அவருடைய விடா முயற்ச்சியை காட்டுகின்றது.

எவ்வளவு காலம்தான் தமிழினத்தலைவர், தமிழினத்தலைவர் என்று மக்கள் ஏமாறும் ? ஏமாற்றுத்தனத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டுதானே ?

தமிழக முஸ்லிம்களை , காயிதே மில்லத் என் கையில் ஒப்படைத்து விட்டு சென்றார் (ஏதோ அநாதை குழந்தையை ஒப்படைத்துவிட்டு செல்வதுபோல்)
என்று சொல்லியே இன்றுவரை கருவேப்பிலையாகத்தானே நம்மை பார்க்கின்றனர்.

நமக்கென்று (முஸ்லிம்களுக்கு) சட்டமன்றத்தில் என்றைக்கு கௌரவம் நிறைந்த M.L.A.க்கள் வருமோ அதுவரை நாம் கருவேப்பிலைகளே.

அபு ஆசிப்.

adiraimansoor said...

ராஜீவ் காந்தியின் எதிர்பாராத மரணம்தான் ஜெயலலிதாவின் டெர்னிங்க் பாயின்ட்

அதிமுக அந்த நேரத்தில் காங்கிரசின் அலைன்ஸில் இருந்ததாலும்
ராஜீவ் காந்தியின் விகார மரணத்தின் வாயிலாக எழுந்த அனுதாப அலையின் எழுச்சிதான் காரணமாகவும் ஜெயலலிதாவுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது


மேலும் அந்த நேரத்திலும் சரி இந்த நேரத்திலும் சரி தி.மு.கவை எதி கொள்ள சரியான கட்சிகள் இல்லாததும் ஒரு காரணம். எம்.ஜி ஆர் மரணத்தின்போது ஜெயலிதாவின் பின்னாடி எம் ஏக்கள் அணிதிரண்டதும் அவளின் இளமை ஒரு காரணமாக இருந்தாலும் அந்த நேரத்தில் தி.மு.கவை தவிற வேறு நன்கு வளர்ந்த கட்சி என்று சொன்னால் அ.தி.மு.கவை தவிற வேறு ஒன்றும் இல்லை என்பதாலும் ஜெயலலிதாவுக்கு அது மிகபெரிய வாய்ப்பாக மாறியது.

அதை அவள் சரியாக பயன் படுத்திக் கொண்டால் என்றாலும் நிர்வாக திறமை உடையவள் என்றும் யாரும் தப்பு கணக்கு போட்டுவிடக் கூடாது. அன்று முதல் இன்று வரை தி.மு.கவின் குடும்ப அரசியலின் ஏற்படும் அதிர்ப்தியின் காரணமாகவே மக்களின் மன நிலை அடிக்கடி மாற்றிக் கொள்வதாலும் இன்றுவரையும் ஜெயலலிதாவினால் அங்கு நிலைத்து நிற்க முடிகின்றது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அரசியல் கூத்துகளை விட, எழுத்து நடை விறுவிறு என்று நிமிர்ந்து செல்கிறது ! அளவான உவமைகள், காட்டுகள், ஒப்பீடு என்று ஆர்பரிக்கிறது !

இந்த கருவாக்கத்திற்கு அதனை உருவாக்கத்திற்கும் காரணகர்த்தாவான இரண்டு காக்காமார்கள் இருவருக்கும் நன்றிகள் !

இந்த களோபரத்தில் சிலவற்றை அவசியம் கவனித்தே ஆகவேண்டும்...!

'தாத்தா'வின் அயாரத உழைப்பு, தளராத முதிர்ச்சி, கட்டிக் காக்க்கும் லாவகம் !
'அம்மா'வின் விடா முயற்சி தன்னம்பிக்கை, காலுக்கடியில் அமைச்சர்களுக்கு சொர்க்கம் என்று காட்டிய துணிவு !

இதை எழுத முயன்ற எங்கள் மூத்த சகோதரர்கள், இனி அதிரை முத்துப்பேட்டை நல்லுறவையும், நகைச்சுவைகளையும் எழுதச் சொன்னாதான் எழுதுவார்கள் என்றில்லை...

நிச்சயம் அதனையும் ஒரு குறுந்தொடராக எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தவனாக ! :) இருக்கிறேன் !

Yasir said...

சுவராஸ்யமான தொடர்...வரலாற்று நிகழ்வுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன ஒவ்வொரு வரிகளும்..தொடருங்கள் நானா

Anonymous said...

//M.G.R. காலத்தில் கால் தவறி விழுந்த கருணாநிதி ஏமாளிகளின் தோளில் ஏறி மீண்டும் அரியணை அமர்ந்தார்//

அண்ணாவுக்கு பின் வந்த திராவிட ஆட்சி யெல்லாம் ஏமாந்தவன் தோளில் ஏறி சவாரி செய்வதே!

கருணாநிதி எடுத்த அந்த ரெண்டு பட்டு புடவையும் இன்னும் இருக்கா? இல்லே பழைய பாத்திரக்காரன்டே போட்டு பேரீச்சம் பழம் வாங்கியாச்சா?

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு