Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

‘அதிரையன்’ என்ற அபுல் ஹசன்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2013 | , , , , , ,


நான் முன்பு ஓர் இழையில் மேற்கண்ட தலைப்பில் தகவல்களைத் திரட்டித் தருவதாக வாசகர்களுக்கு வாக்களித்திருந்தேன்.  நீண்ட இடைவெளியாகிப் போனதாலும், குறிப்புகள் தரவிருந்த மூத்தவர்களின் நினைவாற்றல் குறைவினாலும், சிலவற்றை மட்டுமே திரட்ட முடிந்தது.

வாவன்னா சார், ஹாஜா முஹைதீன் சார் ஆகிய இருவரிடமிருந்து திரட்டிய தகவல்களுடன், எனது நினைவில் உள்ளவற்றையும் சேர்த்து உருவானதே இந்தப் பதிவு.

நமதூரில், பழைய அஞ்சல் அலுவலகத்தின் எதிரில் இயங்கிவந்த ‘ABC பிரிண்டர்ஸ்’ உரிமையாளர் அபூபக்ர் அவர்களின் இளைய மகனாகப் பிறந்தவர்தான், நமது ‘அதிரை எழுத்துலக முன்னோடி’ அபுல்ஹசன் அவர்கள். 

அவரின் உலகம் மிகக் குறுகியது.  அதாவது, அவருடைய வீட்டின் கிழக்குப் பக்க அறை.  ஏறக்குறைய ஒரு House arrest மாதிரியான ஒரு குறுகிய வாழ்க்கை!  காரணம், ஏதேனும் ஒரு நோயா?  தெரியவில்லை.  அல்லது சாபமா?  தெரியாது.  மன நிலை சரியில்லையா?  தெரியாது.  கல்விக் குறைவா?  அதுவும் தெரியாது.  ஆனால், ஒன்று மட்டும் என் நினைவில் இருக்கின்றது.  அந்த வீட்டில் மிக நீண்ட காலமாக, ‘பக்கீர்மத்தா’ என்ற வெளியூர் மூதாட்டி இருந்துவந்தார்.  அவருக்குச் செல்லப் பிள்ளை நமது கதாநாயகன்.  

அபுல் ஹசனின் நடமாட்டம் வீட்டில் இல்லையென்றால், ‘எங்கே எம்புள்ளே’? என்று தேடத் தொடங்கிவிடுவார் அந்த மூதாட்டி.  அவர் வெளியில் போய்த் திரும்பிவரத் தாமதமானால், அந்தக் கிழவி வாசலிலேயே காத்துக் கிடப்பார்.  படிப்பது பள்ளிக்கூடத்தில்தான் என்ற நியதி, அந்தக் கிழவிக்குப் புரியாது.  இதையும் உடைத்து, ராஜாமடத்தின் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, ஒரு சைக்கிளையும் வாங்கிக் கொடுத்திருந்தார் அபுல் ஹசனின் தந்தையார்.  தன் மகனின் திறமையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். வாப்பாவின் ஆசை, தன் பிள்ளை கல்வியில் சிறந்தவனாக உருவாக வேண்டும் என்பதே.  ஆனால் கிழவியின் நோக்கமோ, பிள்ளை பத்திரமாக இருக்க வேண்டும் என்பது.  கல்வியும் பாதுகாப்பும் இன்றியமையாமல் இருக்கும் இந்தக் காலம் வேறு;  அந்தக் காலத்தில் யார் இதைப் பற்றிச் சிந்தித்தார்?  ‘பாதுகாப்பு இல்லை’ என்ற காரணத்தால், அபுல்ஹசனின் கல்வி இடையில் நின்றது.  1950 களில் பள்ளிப் படிப்பை சீரியஸ் ஆகப் பலரும் எடுத்துக்கொண்டதில்லை.  முடிவில், வாப்பாவின் முயற்சியால் தொடர்ந்த பள்ளிப் படிப்பு, இடைநிறுத்தத்திற்கு ஆளானது.  ‘East or west, home is best’ என்றாயிற்று அபுல்ஹசனுக்கு.  

அந்தக் காலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ‘சுதேசமித்திரன்’ என்ற நாளேடு, கதிர், குமுதம், கல்கண்டு, ஆனந்த விகடன், கலைமகள், மஞ்சரி, கல்கி, முஸ்லிம் முரசு என்று எல்லாப் பத்திரிகைகளையும் வாசிக்கும் பழக்கத்தைத்  தமது அன்றையப் பொழுது போக்காக ஆக்கிக்கொண்டார் அபுல் ஹசன்.  தன் மகனின் வாசிப்பு ஆர்வத்தைக்  கண்டு, தவறாமல் அந்தந்தப் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கொணர்வார் தந்தையார்.  சில மாதங்களில் தந்தையார் அபூபக்ர் அவர்கள் சென்னையில் வர்த்தகம் ஒன்றைத் தொடங்கினார்.

இதுதான் தக்க தருணம் என்று, அபுல்ஹசனை மதராசுக்குக் கூட்டிச் சென்றார் தந்தை.  சில மாதங்களே கழிந்த சென்னை வாழ்க்கையில் அபுல் ஹசன் வெறுப்படைந்தார்.  ஒரு நாள் தந்தைக்குத் தெரியாமல், புகை வண்டி ஏறி ஊருக்குப் பயணமானார் அபுல் ஹசன். நடு ராத்திரி நேரத்தில் வண்டி கடலூர் நிலையத்தில் நின்றபோது, வண்டியை விட்டு இறங்கி, தன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார்!  ஊருக்குப் புறப்பட்டுவிட்டான் பிள்ளை என்றறிந்த தந்தையார், வீட்டுக்குத் தெரிவித்தார்.  அதிராம்பட்டினத்துப் புகைவண்டி நிலையத்தில் பிள்ளை வந்திறங்குவான் என்ற எதிர்பார்ப்புடன் நின்றவர்களுக்கோ ஏமாற்றம்!  அந்தக் காலை வண்டியில் வரவில்லை; இரவு வண்டியிலாவது வருவார் என்ற எதிர்பார்ப்பில் உறவினர்கள் நின்றனர்.  அப்போதும் வரவில்லை!

‘என்ன ஆனார் அபுல் ஹசன்?’ என்ற கேள்வி, எல்லார் மனத்தையும் அச்சமூட்டிற்று.  கடலூர் நிலையத்திலிருந்து, மாயூரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி என்று எல்லா ஊர்களிலும் ஆட்களை அனுப்பித் தேடுதல் வேட்டை தொடங்கிற்று.  ஐந்தாறு நாட்கள் சென்ற பின், உடைகளில் அழுக்குப் படிந்தவராக ஊருக்கு வந்து சேர்ந்தார் அபுல் ஹசன்!  பக்கீர்மத்தாவின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை!  ‘எம்புள்ளை எங்கும் போகவேண்டாம்; வீட்டிலேயே இரு வாப்பா’ என்று கூறினார் பக்கீர்மத்தா.  அபுல் ஹசன் மீண்டும் தனது ‘கல்வத்’ (தனித்திருப்பு) வாழ்க்கையைத் தொடர்ந்தார்.  அடுத்து வந்த சில ஆண்டுகள், அவரின் இறப்பு வரை, அந்த மூதாட்டியின் விருப்பப்படியே அமைந்துவிட்டது!

அந்த நாட்களில்தான், அவர்களின் வீட்டுக்கருகில் நாங்கள் ‘இக்பால் நூலகம்’ என்ற நூலகத்தைத் தொடங்கினோம்.  அங்கிருந்த நூல் பட்டியலை அவரிடம் காட்டினோம்.  என்னென்ன புத்தகங்கள் எங்கள் நூலகத்தில் இருக்கின்றன என்பதை அபுல் ஹசன் மச்சான் தெரிந்துகொண்டார். எங்கள் நூலகத்தின் நிரந்தர வாசகரானார்.  அந்தக் காலகட்டத்தில்தான், சிறுவர்களான நாங்கள், ‘அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா’வைப் பொது நிகழ்ச்சியாக மரைக்கா பள்ளிக்கு வெளியில் பந்தல் போட்டு நடத்தி முடித்தோம்.  அதில் பங்கெடுத்தவர்கள்: அ. இ. செ. முஹைதீன் பி.ஏ. அவர்களின்  தலைமையில், பேராசிரியர் அப்துல் கபூர், டாக்டர் இக்ராம் (உருதுப் பேச்சு), உள்ளூர் பேச்சாளர் ஒருவர் ஆகியோர் சொற்பொழிவு ஆற்ற, வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் நூற்றாண்டு விழாவை!

அபுல் ஹசன் மச்சானின் வீட்டு மேற்குப் பக்க அறைதான் எங்கள் ‘இக்பால் நூலகம்’ ஆகும்.  அந்த நேரத்தில்தான், அவரது முதல் கதை, ‘செல்லாத காசு’ என்ற பெயரில் ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று!  கதாசிரியரின் பெயர், ‘அதிரையன்’ ஆகும். எங்களுக்கெல்லாம் ஏகப்பட்ட மகிழ்ச்சி.

எங்கள் நூலகத்திற்கு அடுத்த வீட்டில்தான், காதர் முகைதீன் கல்லூரியின் அன்றைய முதல்வர், பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள் தங்கியிருந்தார்கள்.  தமக்கு அடுத்த வீட்டில் அபுல்ஹசன் என்ற கதாசிரியர் இருக்கிறார் என்று அறிந்தவுடன், ஒரு நாளைக்கு அவரைச் சந்திக்கவேண்டும் என்ற ஆசை பேராசிரியருக்கு.  நாங்கள் வீட்டாரின் அனுமதியைப் பெற்று, பேராசிரியரை அழைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றோம்.  பேராசிரியர் நலம் விசாரித்து முடித்தவுடன், “இன்னும் எழுதுங்கள்.  நிறைய எழுதுங்கள்” என்று அவருக்கு ஆர்வமூட்டினார்.

பத்திரிகைகள், மற்ற நூல்கள் வாசிப்பு அல்லாமல், இன்னும் சிலவற்றில் அபுல் ஹசனுக்கு நல்ல ஈடுபாடு.  ‘டெலிவிஷன்’ வந்தில்லாத அந்தக் காலத்தில், கால்பந்தாட்டம், கிரிக்கெட் முதலியவற்றின் ‘கம்மென்டரி’ ரேடியோவில்தான் ஒலிபரப்பு செய்யப்படும்.  அதை விரும்பிக் கேட்பார் அபுல் ஹசன்.  கமெண்டரியை வர்த்தக விளம்பரத்துக்காக இடைநிறுத்தம் செய்திருக்கும்போது, அபுல் ஹசனின் கமெண்டரி ஆரம்பமாகிவிடும்.  அதாவது, இன்ன டீம் ஜெயிக்கும்; இன்ன டீம் தோற்கும் என்று ஆரூடம் சொல்வார்.  முடிவும் அது போலவே நடக்கும்!  ஆட்டக்காரர் ஒவ்வொருவர் பற்றியும் அவருக்கு விவரம் தெரியும்.

புத்தக வாசிப்பு அல்லாமல், அவருக்கு இன்னொரு பணியும் இருந்தது.  அதாவது, குடும்பத்துப் பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுப்பது.  ‘மகனின் வாழ்க்கை இப்படிச் சுருங்கிவிட்டதே’ என்ற கவலை வாப்பாவுக்கு அதிகம்.  அதனால், ஏதேனும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து, அதைக் காரணமாக்கி, மகனை வெளியில் அழைத்துச் செல்லக் காத்திருப்பார் வாப்பா.  வாப்பாவின் நண்பர் குழாம் விரல் விட்டு எண்ணுமளவுக்கே இருக்கும்.   அன்றைய தி. மு. க. நட்சத்திரப் பேச்சாளர் N.S. இளங்கோ, அவர்களுள் ஒருவர்.  இளங்கோவின் ‘சித்ரா ஸ்டோர்’க்குப் போய் இருக்கும்படி அறிவுறுத்துவார் தந்தை, இப்படியாவது தன் மகனின் வெளியுலகத் தொடர்பு வரட்டுமே என்ற எதிர்பார்ப்பில்.  ‘ராணி அச்சகம்’ என்ற பெயரில், இளங்கோவுக்கு ஓர் அச்சகமும் இருந்தது.  அதிலாவது தன் மகன் சம்பளமில்லாத ஊழியராக இருக்கட்டும் என்பது தந்தையின் எண்ணம்.

பத்திரிகைகளில் ‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதியில் தனது கருத்தைப் பதிவு செய்வதன் மூலமே பத்திரிகை மற்றும் எழுத்துத் தொடர்பு தொடங்கிற்று எனலாம்.  எந்தப் பத்திரிகையிலும் தன் பெயர் ‘அபுல் ஹசன்’ என்று வந்துவிடக் கூடாதே என்பதில் கவனமாயிருக்கும் ஒரு notorious character.  அதனால்தான், ‘அதிரையன்’, ‘வாவன்னா’ போன்ற புனைபெயர்களில் பதிவு செய்வார் அபுல் ஹசன்!

முறையாகக் கல்வியைக் கற்று, வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்திகொண்டு, எழுத்துத் துறையில் ஈடுபாட்டையும் உண்டாக்கியிருந்தால், அதிரையின் முன்னோடி எழுத்தாளராகவும், அறிஞராகவும் ஆகியிருப்பார் ‘அதிரையன்’ என்ற அபுல் ஹசன்.  இறைவன் விதித்த விதி!  அதுதானே நடக்கும்!

அதிரை அஹ்மது 

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் மாமா !

அபுல் ஹசன் சாச்சாவின் நினைவுகள் என்னையறியாமலே கண்களில் கண்களில் கண்ணீர் சொட்டியது !

சின்ன வயதில் அதிகாலை தினமணி பத்திரிகையை வாசிக்க எவ்வளவு சீக்கிரம் சென்று வாசிக்கலாம் என்று சென்றாலும் அவர்கள் வாசித்துக் கொண்டிருப்ப்பார்கள் அதிலிருந்து அவர்கள் வாசித்து முடித்த பேப்பரை வாங்கிப் படிப்பேன்.

இன்னும் ஜூனியர் விகடன் விஷுவல் டேஸ்ட்'க்கு அவர்களின் அறிவுறுத்தலின் படியே நான் எடுத்த புகைப்படம் அனுப்பி வைத்து அது ஜு.வியில் பிரசுரமானது. (அந்த புகைப்படம் : எனது சின்ன மாமா மகன் மச்சான் "முஹ்ஸீன்"னுடைய ஒன்றரை வயது ஃபோட்டோ, எங்கள் பழைய ஓட்டு வீட்டின் இடைவெளியில் விழும் சூரிய ஒளியின் கீற்றி குழந்தையின் மிது விழுவது போன்ற படம்]

அது மட்டுமன்று, இன்னும் நிறைய இருக்கு.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வாசிக்க வாசிக்க வசீகரிக்கின்றது இந்தப் பதிவு. முன்பின் கண்டிராத அபுல்ஹஸன் காக்கா மீது ஏனோ ஓர் இனம்புரியாத அன்பும் இறக்கமும் ஏற்படுகிறது.

அந்த குறுகிய அறையில் இருந்துகொண்டே தன் அறிவை விசாலப்படுத்திக்கொண்ட காக்காவிடம் இன்றைய இணையம் கிடைத்திருந்தால் அந்தக் குடத்திலிட்ட விளக்கு குவலயத்தை வென்றிருக்குமோ என்று தோன்றுகிறது.

கொடும் வெயிலில் நெடிய பாதையில் நடக்கும்போது வாய்த்த அடர்த்தியான மர நிழலாய் தங்களின் கதைசொல்லும் திறன் எங்களைச் சொக்க வைக்கிறது.

அடிக்கடி சொக்கிப்போக கொடுப்பினைதான் இல்லை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா,காக்கா.

Ebrahim Ansari said...

//அந்தக் காலகட்டத்தில்தான், சிறுவர்களான நாங்கள், ‘அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா’வைப் பொது நிகழ்ச்சியாக மரைக்கா பள்ளிக்கு வெளியில் பந்தல் போட்டு நடத்தி முடித்தோம். அதில் பங்கெடுத்தவர்கள்: அ. இ. செ. முஹைதீன் பி.ஏ. அவர்களின் தலைமையில், பேராசிரியர் அப்துல் கபூர், டாக்டர் இக்ராம் (உருதுப் பேச்சு), உள்ளூர் பேச்சாளர் ஒருவர் ஆகியோர் சொற்பொழிவு ஆற்ற, வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் நூற்றாண்டு விழாவை!//

எனக்கு நன்றாக நிவைருக்கிறது. இந்த நூலகத்துக்கு அடிக்கடி வுருபவன் நான். அப்போது ஆறாவது அல்லது ஏழாவது படித்துக் கொண்டு இருந்தேன் என நினைக்கிறேன். இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நூற்றாண்டு விழாவிலும் முதல் வரிசையில் உட்கார்ந்து கேட்டுவிட்டு நேரம் கழித்து வீட்டுக்குப் போய் திட்டு வாங்கிய நினைவும் உண்டு.

எ. பி. சி. அபூபக்கர் காக்காவைத்தெரியும் . அவர்களது வித்தியாசமாக செதுக்கப் பட்ட மீசை நினைவில் இருக்கிறது. தூய்மையான ஜிப்பா ஆடை சுத்தமான பேச்சு என் எஸ் இளங்கோ வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். அங்கும் ஒரு நூல் நிலையம் இருக்கும். இளங்கோ அவர்களின் மருமகன் சேகர் எனது பால்ய நண்பன். ( இப்போது ஷீசெல்சில் ) எனக்கு அந்த வீட்டில் பூரண சுதந்திரம். . ஆனால் இந்த பதிவின் கதாநாயகனை நான் அறிந்தவனல்ல.

அன்று ஒருமுறை அஹமது காக்கா அவர்களிடம் கேட்ட அதே கேள்வி இக்பால் நூல் நிலையத்தில் இருந்த நூல்கள் எங்கே? ஏன் அந்த நூல் நிலையத்துக்கு புத்துயிர் கொடுக்கக் கூடாது?

Ebrahim Ansari said...

//அடிக்கடி சொக்கிப்போக கொடுப்பினைதான் இல்லை.// இதுதான் பொடி வைத்துப் பேசுவது. நான் வழிமொழிகிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த எழுத்தொளியை இத்தனை ஆண்டுகட்குப் பின்னர்க் கணினிக்குள் பரவச் செய்து, படிக்கப் படிக்க “அதிரையன்” அபுல்ஹசன் காக்கா அவர்கள் மீது ஓர் இனம் புரியாத ஓர் ஈர்ப்பை உண்டாக்கி விட்டீர்கள்.

ZAKIR HUSSAIN said...

நமது முன்னோர்கள் [ எழுதுவதில் ] இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு மாற்றினால் அவ்வளவு சீக்கிரம் மனது ஏற்றுக்கொள்ளாது என்பதின் உண்மை 'அதிரையன்" வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.

இது ஒவ்வொரு படைப்பாளிக்கும் பொருந்தும். கூட்டை மாற்றிஅமைக்கும் வேலை எல்லாம் எந்தபடைப்பாளியும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை.

அபூ சுஹைமா said...

மிகச்சில முறைகளே சந்தித்து அநேகமாக ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேசிய உறவினர் அபுல்ஹசன் சாச்சா. இடைக்காலத்தில் ஃபாரூக் பெரியப்பாவின் மரணத்திற்குப் பின் மிகச்சிறிது காலம் வீட்டுக்கு வெளியே பார்த்த நினைவுண்டு.

அப்துல் கறீம் சாச்சாவும் கல்வத் வாழ்க்கைதானே மாமா?

இவர்களுக்கு முன்னோடி கல்வத் அப்பாவாக இருக்குமோ?

Unknown said...

எனது நூலகப் பாதுகாப்பு, இக்பால் நூலகத்தில் தொடங்கி, ஜாவியாவில் 'இமாம் புகாரி' நூலகமாகி, பின்னர் 'சமுதாய நல மன்ற நூலகமாகி, அது மூடப்பட்ட பின்னர், புதுப் பள்ளியில் தஞ்சம் புகுந்து, சிலரால் உரிமை கொண்டாடப்பட்டு, எங்கெங்கே போனதோ, அல்லாஹுக்குத்தான் வெளிச்சம்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு