Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 10 14

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய இரண்டு அத்தியாயங்களில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்விலிருந்து சில சம்பவங்களை நினைவுகூர்ந்து நம் செயல்களோடு சுயபரிசோதனை செய்யும் விதமாக பல படிப்பினைகளை அறிந்தோம். இனி நபி(ஸல்) அவர்களும் உத்தம தோழர் பிலால்(ரலி) அவர்களும் ஒன்றாக இருக்கும்போது நடைபெற்ற பல உருக்கமான சம்பவங்களை நாம் பார்க்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாம் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்னால், இவ்வுலகம் இப்படியா இருந்தது என்று நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத நிலை. காரணம் நாகரீகமற்ற நடைமுறைகள் தலைவிரித்தாடியது அன்றைய காலகட்டத்தில். இன்று நாகரீகத்தில் முன்னேறிய (?) என்று சொல்லும் மேற்கத்திய உலகம் நாகரீகத்தில் அன்று இருளில் மூழ்கி இருந்தது என்பது வரலாறு. ஒரு சில மனித இனத்தையே உணர்வற்ற இனமாக அடிமைப்பட்ட இனமாக சித்தரித்து, அந்த சமூகத்தினருக்குள்ளே பொழுது போக்குக்காக சண்டையிட்டுக் கொள்ள வைத்து அதனை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அவல நிலையே அன்றைய நகரீகமாக இருந்தது. இன்றும் சில இடங்களில் அது போன்ற அவல நிலை தொடரத்தான் செய்கிறது. இது போன்ற அறியாமை காலத்தில் தான் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தூய இஸ்லாத்தை மக்கள் முன் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அந்த காலகட்டத்தில்தான் ஒரு அடிமையின் மகனாக கருப்பினத்தை சேர்ந்த பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்று உலகில் தான் அடிமைபட்டு இருந்தச் சூழலில் பட்ட கஷ்டங்களில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

ஒரு இனத்தை உணர்வற்ற இனமாக சித்தரித்து அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலை அன்றைய காலகட்டத்தில், அவ்வகை அநீதிக்குட்பட்ட சமூகத்திலிருந்து வந்தவரான பிலால் (ரலி) அவர்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதும் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்று வரலாற்று ஏடுகளை புரட்டி பார்த்தால், கல் நெஞ்சம் கொண்ட எவரும் உருகிவிடுவார்கள்.

பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற அன்று முதல் நபி(ஸல்) அவர்களுடனே இருந்து, நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அவர்களோடு மக்காவிலும், மதீனாவிலும் ஒன்றாக இருந்தார்கள். ஹதீஸ் தொகுப்புகளில் நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி) அவர்களும் வரும் சம்பவங்களில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள். “நானும் பிலாலும் இருந்தோம், நானும் பிலாலும் சென்றோம், நானும் பிலாலும் சாப்பிட்டோம், நானும் பிலாலும் உறங்கினோம். நானும் பிலாலும், என்னுடைய பிலால், எங்கள் பிலால்” என்று சொல்லும் ஆதாரங்களைப் பரவலாகக் காணும் போது எந்த அளவுக்கு பிலால்(ரலி) அவர்களைக் கண்ணியப்படுத்தி, தன்னிகரில்லா மனித நேயமிக்க தலைவராக திகழந்துள்ளார்கள் நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்கள்.

சஹாபி ஒருவர் பிலால்(ரலி) அவர்களை ‘கருப்பியின் மகனே’ என்று ஒரு சந்தர்பத்தில் பேச்சு வாக்கில் சொல்லி விட்டார். இந்த விசயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது, உடனே அந்த சஹாபியை அழைத்து, “உங்களிடம் இன்னும் அறியாமைக் கால குணம் போகவில்லை” என்று கண்டித்தார்கள். அந்த சஹாபி பிலால்(ரலி) அவர்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்கள் என்றால், நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு ஒரு அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற பிலால்(ரலி) அவர்களை கண்ணியப்படுத்தி, நகரீகமாக பேசுபவர்களின் தலைவராக வாழ்ந்துள்ளார்கள் உலக முஸ்லீம்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள்.

எங்கெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பட்டினியாக இருந்தார்களோ அங்கெல்லாம் உத்தம தோழர் பிலால்(ரலி) அவர்களும் பசியோடு பட்டினியோடு இருந்துள்ளார்கள். பயணங்களில், போர்க்காலங்களில் ஒன்றாக நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி) அவர்களும் எண்ணிலடங்கா கஷ்டங்களை சகித்துக் கொண்டிந்திருக்கிறார்கள். ஒரு சந்தர்பத்தில் நபி(ஸல்) அவர்கள் எப்படி பசியால் இருவரும் இருந்துள்ளார்கள் என்பதை விளக்க இப்படி சொல்கிறார்கள். நானும் பிலாலும் உணவின்றி பட்டினியில் இருந்தோம், எங்களிடம் சாப்பிடுவதற்காக இருந்தது பிலாலிடம் இருந்த தோல் பை மட்டுமே என்பதை வாசிக்கும் போது, இப்படி ஏழையோடு ஏழையாக வாழ்ந்த ஏழைகளின் தலைவர் நபி(ஸல்) அவர்களிடம் பாடம் பெற தவறிவிட்டத் தலைவர்கள் ஏராளம்.

புனித மக்கா வளாகத்தில் கால் பதிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த அந்த அடிமைச் சமூகத்திலிருந்து வந்த உத்தம சஹாபி பிலால்(ரலி) அவர்களுக்கு, முதல் வரிசையில் தொழுகையில் நிற்கும் தகுதியை பெற்றுத்தந்த தலைவர் நம் நபி(ஸல்) அவர்கள், பிலால்(ரலி) அவர்களை தொழுகைக்கு அழைக்கும் பொறுப்பை கொடுத்து மக்கா, மதீனாவில் உள்ள மக்களை தொழுகைக்கு அழைத்தார்கள். இந்த உயரிய அந்தஸ்தை நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களைத் தவிர முதன் முதலில் வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. இதனால் தான் பிலால் (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை நபி(ஸல்) அவர்களின் நினைவோடு இருந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் தம்மோடு வாழ்ந்த மக்களோடு எப்படி வாழ்ந்தார்கள் என்று மிகத்துல்லியமாக அவதானித்தால் ஒவ்வொரு சம்பவத்திலும் ஏராளமான படிப்பினைகளை நாம் பெறலாம்.

உலக மாந்தர்க்கு முன்மாதிரி நபி(ஸல்) அவர்கள் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் நாம், பிலால்(ரலி) அவர்களோடு நபி(ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை  வைத்து வசதி வாய்ப்புகள் நிரம்ப பெற்றுள்ள நாம் எப்படி நம்மை சுற்றியுள்ளவர்களிடமும், புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களிடமும் நடந்து கொள்கிறோம் என்பதை சீர்தூக்கி சிந்திக்க வேண்டும்.

ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி அவர்கள், பசியோடும் பட்டினியோடும் தம்மோடு இருப்பவர்களோடு வாழ்ந்த அல்லது வாழும் ஆட்சியாளர்களை எங்காவது ஒரு வரலாற்றில் காணமுடியுமா?

அடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிறத்தால், இனத்தால், குலத்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்று சொன்ன நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியாக கொண்டுள்ள நம் ஜமாத் தலைவர்கள் நபி(ஸல்) அவர்கள் போன்று பசி பட்டினியால் அவர்கள் சார்ந்திருக்கும் மக்களோடு இருந்துள்ளார்கள் என்று ஒரு சம்பவத்தை இன்று காட்ட முடியுமா?

நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகள் ஆயிரமாயிரம் வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டியவைகள், தெருப்பெருமை, குலப்பெருமை, இனப்பெருமை பற்றி பேசும் அறிவீனர்கள் சிந்திப்பார்களா?

நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களோடு நடந்துகொண்ட இன்னும் பல சம்பவங்களை வரும் வாரங்களில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நம் அனைவரையும் மனித நேயமிக்க நன்மக்களாக ஆக்கி அருள் புரிவானாக.
தொடரும்...
M. தாஜுதீன்

14 Responses So Far:

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் முக்கியமான வரலாற்று சம்பவங்கள் தொடர்ந்து கேள்விகள்.

இஸ்லாத்தை பரப்ப வேண்டும் எத்தி வைக்க வேண்டுமென்று செய்லபடுகிறவர்கள் கூட இஸ்லாத்துடன் இணைத்துக் கொண்டவர்களுக்கு தொடர்ந்து துணை இருக்காமல் நட்டாற்றில் விட்டது போல் விட்டுவிடுவதை பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.

நீங்களே கோபப்பட்ட ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு பெரிய கண்ணியமான பதவியை வகித்தவர்- பிள்ளைகள் எல்லாம் பெரிய படிப்புகளைப் படித்தவர்கள் -தன் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைகிறார். அவர் மனைவி உட்பட முக்காடு போட்டுக் கொண்டு வெளியே வந்த பிறகே நம்மிருவரையும் ஸலாம் சொல்லி வாங்க என்று கூப்பிடுகிறார். நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம். அப்போது உள்ளூரில் இருந்து ஒருவர் வருகிறார்- ஒரு பத்திரிக்கைக்கு சந்தா கட்டும்படி இஸ்லாத்துக்கு வந்தவரைக் கேட்டு.

அப்போது அந்த கண்ணியம் நிறைந்த இஸ்லாத்தைத் தழுவிய பெருமகன் சொல்கிறார். நான் என்ன பத்திரிகைகளுக்கு சந்தா காட்டுவதற்குத்தான் இஸ்லாத்தில் சேர்ந்தேனா?

நம் இருவருக்கும் சுருக் என்றது.

அவர் தொடர்ந்தார். ஊரில் நடக்கும் எந்த ஜமாஅத் நிகழ்ச்சிகளுக்கும் என்னை நீங்கள் அழைப்பது இல்லை. திருமணங்களில் கலந்து கொள்ள செய்வதில்லை. எனக்கும் என் குடும்பத்துக்கும் இஸ்லாம் அங்கீகாரம் தந்துள்ளது. ஆனால் ஊர் ஜமாஅத் எங்களை ஏன் புறக்கணிக்கிறது ? என்று நெற்றியடியாகக் கேட்டார்.

உடனே அந்த சந்தா வசூலிக்க வந்தவரை நீங்கள் பிடித்தீர்களே ஒரு பிடி. அன்று பக்ரீத் குர்பானிகள் கொடுக்கப் படும் தினம். இவர்கள் வீட்டுக்கு குர்பானி கறி அனுப்பினீர்களா என்று நீங்கள் கேட்டதும் இதோ இப்போது ஏற்பாடு செய்கிறேன் தம்பி. எங்களை மன்னித்துவிடுங்கள் இனி நாங்க தவறு இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தொப்பியை ஒரு ரவுண்டு கழற்றி வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு விட்டாரே ஓட்டம.

இது போல நிலைமைகள் இருக்கின்றன. முத்துப் பேட்டையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்று ஒரு முஸ்லிமை மணந்து தனது சொந்த ஊரைத்துறந்து வந்த ஓர் பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னையை நானும் எனது நண்பர் அஜீஸ் அவர்களும் தலையிட்டு அந்தப் பெண் வாழ வழி செய்து அந்தப் பையனை தாமரங்கோட்டை பள்ளியில் சேர்த்துவிட்டு தீர்த்தோம். இதை சுய விளம்பரத்துக் க்காக சொல்லவில்லை. புதிதாக நம்மை நோக்கி வருபவர்களுக்கு நாம் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும். அவர்களை நமது சபைகளில் சரிசமமாக அம்ரவைக்கவேண்டும். இதுவே மற்றவர்களுக்குப் பாடமாக அமையும்.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Anonymous said...

//நபி [ஸல்] அவர்களின் நற்பண்புகள் ஆயிரம் ஆயிரம் வரலாற்று ஏடுகளில்...... இன்று தெரு பெருமை, குலப்பெருமை, இனப்பெருமை, பற்றி பேசும் அறிவீனர்கள் சிந்திப்பார்களா?//

அஸ்ஸலாமுஅலைக்கும்.

சபாஷ்! சரியான சூடு! சூடுசொரணை இருந்தால் சிந்திப்பார்கள்!

இல்லையென்றால் அது இல்லைதான்; உண்டு என்றால் அது உண்டுதான்.

மைத்துனர் இப்ராஹீம் அன்சாரியின் கமெண்டை வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து, கமா, காற்புள்ளி, அரைபுள்ளி, முக்காற்புள்ளி, முழுப்புள்ளி
வரை முழுமனதுடன். வழிமொழிகிறேன்.

குறிப்பு : எழுத்துப்பிழைகள் இருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல!.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//அவர் தொடர்ந்தார். ஊரில் நடக்கும் எந்த ஜமாஅத் நிகழ்ச்சிகளுக்கும் என்னை நீங்கள் அழைப்பது இல்லை. திருமணங்களில் கலந்து கொள்ள செய்வதில்லை. எனக்கும் என் குடும்பத்துக்கும் இஸ்லாம் அங்கீகாரம் தந்துள்ளது. ஆனால் ஊர் ஜமாஅத் எங்களை ஏன் புறக்கணிக்கிறது ? என்று நெற்றியடியாகக் கேட்டார்.//



வெளி ஊரில் இருந்து நம் ஊருக்கு பிழைப்பு அல்லது கல்யாணம் செய்து வரும் முஸ்லிமையோ வந்தான் வரத்தான் என்று ஒரு கீழ்த்தரமான வார்த்தையை சொல்லி வந்தவர்களை கேவலப்படுத்தி விடும் ஒரு சில மார்க்கம் அறியாத கூட்டமும் இன்னும் திரிந்து கொண்ண்டுதான் உள்ளது மேலும் அப்படி திரியும் கூட்டம் வெளி நாட்டில்போய் வேலை செய்யும் போது அவர் அந்த நாட்டில் வந்தான் வரத்தான் தானே என்பதை யாராவது அவர்களுக்கு செவிட்டில் அடித்தாற்போல் சொல்லுங்களேன்!

நிலைமை இப்படி இருக்கும்போது மாற்றுமத்தில் இருந்து நம் தூய இஸ்லாம் மதத்திற்கு வருபவர்களை வரேவேர்ப்பது பற்றி இன்னும் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நபி(ஸல்) அவர்கள் தம்மோடு வாழ்ந்த மக்களோடு எப்படி வாழ்ந்தார்கள் என்று மிகத்துல்லியமாக அவதானித்தால் ஒவ்வொரு சம்பவத்திலும் ஏராளமான படிப்பினைகளை நாம் பெறலாம்.//

இலகுவான தீர்வு !

Anonymous said...

//இப்ராஹிம் அன்ஸாரி சொன்னது :- ''இனி நாங்கள் தவறு இல்லாமே
பார்த்துக் கொள்கிறோம்'' என்று சொல்லி விட்டு தொப்பியே கழட்டி
ஒரு ரவுண்டு சுழற்றி வியர்வையை துடைத்து இருந்தாலும் நீங்க இப்புடிச் செய்ய படாது! வேவா வெயிளுலேயும் பாக்காமே வேர்வையோடு சந்தா கேட்டு வந்த மனுஷன் ஒரு சந்து குர்பான் கறி கொடுக்கலேங்குறதுக்காக
'வெறுங்கையோடு' அனுப்புனது என் மனசுக்கு என்னமோ போலே இருக்குங்க!.
// சந்துகொடுக்கலே!-சந்தாகொடுக்கலே!//

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Abu Easa said...

படிப்பினை பெற வேண்டிய சம்பவங்கள் இறைத் தூதர் மற்றும் அவர்களின் கன்னியமிக்க தோழர்களின் வாழ்க்கையில் ஏராளம் இருக்கின்றன. ஆனால் நல்லுணர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் கொன்ட மக்களுக்கே தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

இதுபோன்று தொடர்கள் மூலமாக மக்களின் உள்ளத்தை உலுக்கும் முயற்சி பாரட்டிற்குரியது. மா ஷா அல்லாஹ்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நமகும் அநியாயக்காரர்களை துணிவுடன் எதிர் கொள்ளும் மனவலிமையும் அவர்கள் பெற்றதைப் போன்ற வெற்றியையும் அல்லாஹ் நமக்கும் தந்தருள்வானாக.

தீனுடைய அழகு வரலாறுகளுக்கு நன்றி சகோ.தாஜுதீன்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அறிவமுதம் அள்ளி பருகிகொண்டே இருக்கலாம் . சிறப்பான தொடர்.அல்ஹம்துலில்லாஹ்! நம் மறதி நோய்க்கு நல்ல நினைவூட்டும் மருந்து இந்த தொடர்.இப்படி ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்களைப்போன்ற நல்லடியார்கள் சஹாபாக்களின் நினைவூட்டல் நம் ஈமானை புதிப்பிக்க உதவுகிறது. நன்றியும், வாழ்த்தும்.

sabeer.abushahruk said...

பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நமகும் அநியாயக்காரர்களை துணிவுடன் எதிர் கொள்ளும் மனவலிமையும் அவர்கள் பெற்றதைப் போன்ற வெற்றியையும் அல்லாஹ் நமக்கும் தந்தருள்வானாக.

தீனுடைய அழகு வரலாறுகளுக்கு நன்றி சகோ.தாஜுதீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், இப்றாஹீம் அன்சாரி காக்கா,

நாம் சந்தித்த அந்த மூத்த சகோதரர் சொன்ன அந்த நிகழ்வுகள் இன்னும் என் மனதில் கோபமாகவே உள்ளது. மீண்டும் ஒரு முறை அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இது போல் நான் ஊரில் இருக்கும்போது இஸ்லாத்திற்கு வந்த ஒரு சகோதரர் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரிடம் தொழுகை இபாத்துக்கள் இல்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் என்னை உறுத்திக் கொண்டே உள்ளது.

"இஸ்லாத்துக்கு வாங்க வாங்க என்று அழைத்தார்கள், ஆனால் நாங்கள் இஸ்லாத்துக்கு வந்த பிறகு எங்களை ஒரு தனி இனமாகவே பலர் நடத்தினார்கள், இரண்டாம்தர மக்களாகவே நாங்கள் நடத்தப்படுகிறோம், எங்களுக்கு வணக்க வழிபாடுகளை ஒழுங்காக கற்றுக்கொடுக்கவில்லை அதற்குறிய சரியான வாய்ப்பையும் இந்த ஊரில் ஏற்படுத்தி கொடுக்கவில்லை, எப்படி எங்களுக்கு இறையச்சம் ஏற்படும்? பெரும்பாலும் எங்களை வெறும் வேலைக்காரர்களாக மட்டுமே நடத்துகிறார்கள் என்று சொன்னார். எங்களை திருமணம் செய்ய எத்தனை பூர்வீக முஸ்லீம்கள் தயாராக உள்ளார்கள்? என்று சொன்னார். என்னால் முடிந்த ஒரு சில உருக்கமான நபி(ஸல்) அவர்களின் பசி பட்டினி, ஸஹாப்பாக்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி சொல்லி,அறுதல் சொல்லி, தொழுகையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தேன். தற்போது அவரின் ஈமானின் நிலை எப்படி உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. அல்லாஹ் அவருக்கும் நம் எல்லோருக்கும் நேர் வழி காட்டுவானாக..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எங்கே அப்துல் காதர் காக்காவையும், மன்சூர் காக்காவையும் காணேம்?

Yasir said...

தங்கமான தாஜூதீனின் மனதை உலுப்பும் / பயனுள்ள தொடர்..அல்லாஹ் இதற்க்கான கூலியை உங்களுக்கு தருவான்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு