Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் - 31. 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2013 | , , ,

இஸ்லாமியப் பொருளாதாரம்.- சமூகத்துக்கான நீதி.
கடந்த சில வாரங்களாக இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளில் மூழ்கி முத்தெடுத்து வருகிறோம். இத்தனை வாரங்களும் நாம் சுட்டிக்காட்டிய கோட்பாடுகள், கொள்கைகள், திருமறை மற்றும் நபி மொழியின் வாக்குகளிலிருந்து நாம் அறிந்தும் தெரிந்தும் கொள்வது யாதென்றால் இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது ஒரு சமூக சமத்துவ சகோதரத்துவத்தை நிலைநாட்டும் ஒரு கோட்பாடாகும் என்பதேயாகும்.

ஆரம்ப அத்தியாயங்களில் நாம் எடுத்துக் காட்டியது போல இந்த உலகில் பொதுஉடைமை தத்துவம், முதலாளித்துவம், தனிமனித உடமை, அரசுடைமை, எனப் பல்வேறு பொருளாதாரக் கோட்பாடுகள் உலகை ஆட்டிப் படைக்கின்றன. இங்கே நாம் குறிப்பிட்ட அத்தனை தத்துவங்களில் இருந்தும் இறையச்சம் என்கிற ஆணிவேரின் அடிப்படையும் , மறுமை எனும் மகத்தான நம்பிக்கையும் மனித குலத்தின் அன்றாட வாழ்வில் கலந்து வெளிப்படும் செயல்களே இஸ்லாமியப் பொருளாதார நடவடிக்கைகளாகும். எந்த செயலைச் செய்தாலும் அது சமுதாயத்துக்கான நீதியை நிலைநாட்டும் செயலாகவும் இறைவனின் பொருத்தத்துக்கு ஆளான செயலாகவும் இருக்க வேண்டுமென்பதே இஸ்லாமியப் பொருளாதார வழிகாட்டல்களின் அடிப்படை. இந்த வகையில் கடந்த பல அத்தியாயங்களில் இறைவனின்  எச்சரிக்கை, வழிகாட்டல், பெருமானார் ( ஸல்) அவர்களின் வாழ்வு முறை உதாரணங்கள்  பலவற்றை நாம் விவரித்துக் காட்டி இருக்கிறோம்.

“இறை நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய  தூய்மையானவற்றை  உண்ணுங்கள் “ (2: 172) என்று இறைவனும் வலியுறுத்துகிறான்.

இந்த நிறைவு அத்தியாயம் நாம் சுட்டிக் காட்டிய பல தலைப்புகளின் தொகுப்பாக இருக்கும்.     முதலாவதாக, இந்த உலகை இன்று ஆட்டிப் படைக்க  முதலாளித்துவமும், பொது உடைமைத் தத்துவமும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் இஸ்லாம் இவை இரண்டையும் அனுமதிக்கிறது. தனிமனித உடைமை  முறைகளுக்குத் தண்ணீர் வார்த்து வளர்க்கும் இஸ்லாம் , பொது உடைமை மற்றும் அரசுடைமைகளையும் அங்கீகரிக்கிறது.   

மனிதனுடைய தனித்திறமைகளுக்கேற்ப அவன் செல்வத்தை தனக்கும் தனது சந்ததிகளுக்கும்  தேடி  சேர்த்துக் கொள்வதை அனுமதிக்கும் இஸ்லாமியப் பொருளாதாரம். அப்படி சேர்த்ததில் இருந்து இல்லாதோர்க்கு ஆன்மீக ரீதியில் வாரி வழங்கவேண்டுமென்ற கட்டாயக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இந்த தர்மத்தை மிக உயர்வான குணமாகப்  போற்றுகிறது. இதற்காக இறைவனிடத்தில் நல்ல கூலி  உண்டு என்று எடுத்து இயம்புகிறது. தனது முயற்சியால் பொருள் திரட்டியவனிடமிருந்து தட்டிப் பறிக்காமல்,  அவனைத் தட்டிக் கொடுத்து தர்மத்தின் வாசலுக்கு இழுத்துச் செல்வதன் மூலம் சமூக நீதியை நிலை நாட்டுவதே இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை.  

“உங்களில் வசதி படைத்தவர்களுக்கிடையே செல்வம் சுழன்று கொண்டிருக்கலாகாது “ என்று இறைவனின் திருவசனம் ( 59:7) எடுத்து இயம்புகிறது.  பணக்காரர்களின்  தலைகளைக் கொய்து சீனச் செஞ்சதுக்கத்தில் தொங்கவிட்டால்தான் சமத்துவம் வரும் என்று எண்ணிக கொண்டிருக்கும் எண்ணங்களை- கொள்கைகளை கோட்பாடுகளை குழிதோண்டி புதைப்பது  இந்த இறைவசனமாகும்.

சோம்பேறியாய் இருக்காதே ! உழைத்து வாழ் என்று உழைப்பின் மேன்மையை எடுத்துச் சொல்லியது இஸ்லாமாகும். உழைப்பின் பலன் உழைத்தவருக்கு வந்தே தீருமென்று வாக்களித்துச் சொன்னது இஸ்லாமாகும். இதில் பாகுபாகுபாடுகள் இல்லை என்று பறைசாற்றும் விதமாக "ஆண்களுக்கு அவர்கள் பாடு பட்டதில் பங்குண்டு; பெண்களுக்கும் அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு" என்று இறைவசனம் (4:32) எடுத்து இயம்புகிறது. சமூக நீதியே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பதை அறுதியும் உறுதியும் செய்வதில் ஆணும்  பெண்ணும் சமமே என்கிற கோட்பாடு இதனால் தெளிவாகிறது.

மேலும் பிச்சை எடுத்து வாழ்வதை ஒரு வாழவல்ல என்று கண்டிக்கிறது  இஸ்லாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் " ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். "[புஹாரி,1471]

உழைப் போரின்  கூலியை உடனே கொடுத்துவிடவேண்டுமென்று வரையறுக்கும் இஸ்லாம்,  தொழிலாளி முதலாளி  உறவை பலபடுத்த பல முறைகளை வாழ்வின் உதாரணங்களை எடுத்து இயம்புகிறது. வேலைக்காரரின் வியர்வை உலரும் முன்பே அவரது கூலியை கொடுத்திவிடவேண்டுமென்று பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறியது உலகப் பொருளாதாரக் கோட்பாடுகளில்  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவையாகும். உலகம் பொறித்து வைத்திருக்கிறது. இந்த வார்த்தைகளைப் பாராட்டாத அறிஞர்களே உலகில் இல்லை.

”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்,

சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்

கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி: 2270.

அடுத்து வணிகம் செய்வோருக்கான வரைமுறைகளை வகுத்துத்தந்திருப்பது இஸ்லாமியப் பொருளாதாரம். சமூகத்தின் சமமான நீதிக்கு வணிகம் செய்வோர் ஆற்றவேண்டிய கடமைகளை கட்டுப் பாடுகளை கைகாட்டி சொல்லிக் கொடுப்பது இஸ்லாம். கலப்படம் செய்யாதீர்கள் ! அளவை நிறுவைகளில்  மோசடி செய்யாதீர்கள்! வணிக உடன்பாடுகளை நிறைவேற்றுங்கள்! என்று கட்டளை இடுவது இஸ்லாம்.

“யார் நம்பிக்கை கொண்டு நற்பணியாற்றுவார்களோ, முறையோடு செயல்படும் அத்தகையோரின் பலனை நாம் வீணாக்குவதில்லை” (18:30 )

என்றும்

“உங்களுடைய செல்வங்களோ மக்களோ உங்களை நமக்கு மிக நெருங்கியவர்களாக்கு வதில்லை. நம்பிக்கை கொண்டு நற்பணிகள் புரிபவர்கள் தவிர. இத்தகையோருக்கே அவர்கள் புரிந்த நற்பணியின் காரணமாக இரட்டிப்பான பலன் உண்டு . மேலும் அவர்கள் ( சொர்க்கத்தின்) மேல்  மாடிகளில் நிம்மதியாக வசிப்பார்கள். “ (34:37) என்று கூறுகிறது .

மேலும் இன்றைய வணிக உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் யூக வணிகம் என்கிற விலைகளை உயர்த்தி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் ஆன் லைன் வர்த்தகத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதையும் பல ஆதாரங்களுடன் இத்தொடரின் நாம் விளக்கி இருந்தோம். நபி ( ஸல்) காலத்தில் குத்து மதிப்பாக உணவுப்  பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்களின் இருப்பிடத்துக்குக் கொண்டு சென்று சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக கண்டிக்கப் பட்டார்கள் என்று இப்னு உமர்   ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  ( புகாரி . 2137)

தன்னிடம் இல்லாத சரக்கை விற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். அன்றைய அரபகத்தில் “நஜ்ஷ் “ என்கிற வியாபார முறை இருந்தது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். ஒருவருக்கு தேவைப்பட்ட பொருளை அவர் விலை பேசிக் கொண்டிருக்கும்போது தனக்கு தேவை இல்லாவிட்டாலும் அந்தப் பொருளை விலை ஏற்றி விடுவதற்காகவே மற்றொருவர் கூடுதல் விலைக்கு கேட்பார். இதனால் உண்மையில் தேவைப்படுபவரின் தலையில் அதிக விலைக்கு அந்தப்பொருள் கட்டிவிடப்படும். அநியாயமான கூடுதல் இலாபத்தை பொருளின் சொந்தக்காரரும் விலையை ஏற்றிவிடுபவரும் பிரித்துக் கொள்வார்கள். இந்த முறையே தடைசெய்யப்பட்டது. அப்படியானால் ஆன்லைன் வர்த்தக முறையும் தடை  செய்யப்பட வேண்டியதே.   தங்களிடம் இல்லாத பொருள்களை விற்கவேண்டாம் என்கிற  இஸ்லாம் வகுத்துள்ள சமூக  நீதி காக்கும் இந்தப் பொருளாதாரக் கோட்பாடு  சமூக நலனிலும் சமுதாய மேம்பாட்டிலும் தலைமை இடம் வகிக்கத் தக்கது.

உலகில் இறைவனால் படைக்கப் பட்ட வளங்கள் உற்பத்திப் பொருள்கள் பற்றாக்குறையானவயல்ல என்றும் ஆனால் மனிதன் தனது சுயனலத்தாலும் , அரசியல் காரணங்களாலும்  பலவீனமான நிர்வாக முறையினாலுமே பற்றாக்குறையும் பஞ்சமும் பசியும் ஏற்படுகிறது என்பதையும் நாம் இத்தொடரில் ஆதாரங்களுடன் காட்டி இருக்கிறோம். அல்லாஹ் படைத்தவை அகில உலக மக்களுக்கும் காய்தல் உவத்தல் இன்றி பகிரப் பட வேண்டுமென்பதே இஸ்லாமியப் பொருளாதார சட்டம். இதுவும் சமத்துவத்தை பறை சாற்றுகிறது  என்பதற்கு   சான்று பகரும் சட்டம்.

சமூகப் பொருளாதாரப் புரட்சிக்கு வித்திட்டு இன்று உலகம் இஸ்லாத்தை நோக்கி கை கட்டி வாய் பொத்தி நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் இஸ்லாம் தடை  செய்துள்ள வட்டியாகும். ஏழைகளிடம் இருக்கும் சிறு செல்வமும் அவர்களிடமிருந்து  பணக்காரரிடம் செல்லும் ஒரு பாதைக்கு நான்குவழிப் பாதையை  உண்டாக்குகிறது. அதன் விளைவாக, சமுதாயத்தின் செல்வம் ஒரு சிலருடைய பணப்பெட்டிகளில் குவிந்து, இறுதியாக அது சமுதாயம் முழுவதையும் ஏற்றத்தாழ்வான  பொருளாதார வீழ்ச்சியிலும் அழிவிலும் கொண்டு சேர்த்து விடுகின்றது.

ஏராளமான பணம் படைத்தோர் அதை வட்டிக்குக் கடன் கொடுத்து, இன்னும் ஏராளமான பணத்தை அதிகரிக்கிறார்கள். இந்த அதிகரிப்பு முன் பணம் வாங்கிய தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைக் குறைத்ததிலிருந்து கிடைத்தது. பல தொழிலாளர்கள் கொத்தடிமையாக வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பணக்காரர் பெரும் பணக்காரராகின்றார்கள். ஏழைகள் மேலும் மேலும் வட்டிக்குக் கடன் வாங்கி பரம ஏழைகளாகின்றார்கள். இறுதியாக சமுதாயம் ஆட்டம் கண்டுவிடுகிறது. இந்த சமுதாய ஆட்டத்தை தடுத்து நிறுத்துவது அச்சுறுத்தும்  இஸ்லாமியப் பொருளியலாகும்.

மிகக் கடுமையான சட்டங்களை இஸ்லாமியப் பொருளாதாரம் வட்டிக்கு எதிராக வழங்கி இருக்கிறது. நிச்சயமாக, இது பொருளாதாரச் சட்டங்களில் மிக்க அறிவு நிறைந்த சட்டமாகும் என உலகப் பொருளியல் வல்லுனர்கள் வியந்து கூறுகிறார்கள். . எந்தெந்த நாடுகளில் உயர்ந்த வட்டி விகிதம் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கைத்தொழிலிலும், வியாபாரமும் , மக்கள் நிலையும்   முன்னேற்றமடையவே  முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் இன்று  கூறுகின்றார்கள். சமூக நல வளர்ச்சிக்காக இஸ்லாம்  கண்ட முறையே வட்டி இல்லா வங்கி முறை என்பதாகும். இந்தத் தொடரில் வட்டி இல்லாத வங்கி முறைகளை ஓரளவுக்கு விளக்கினோம். இன்னும் தனித் தொடராக விளக்க இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப் பட்டு, உலகில் மனித இனம் வாழ்வதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத். படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத். இஸ்லாமிய ஷரியத் வரையறுத்துள்ள சட்டங்களின்படி ஜகாத் வழங்கப் படுமானால் சமூகப் பொருளாதார நீதி தழைக்குமென்பதை  தரணிக்கு எடுத்து இயம்புவது இஸ்லாம்.

பொதுநலம்  பேசும் ஏனைய கோட்பாடுகளில் இல்லாத வித்தியாசமான  வறுமை ஒழிப்பு அம்சமே ஜகாத் என்பதை உலகுக்கு வரையத்துச் சொன்னது இஸ்லாம் மட்டுமே. தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை ஏழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பாவித்துப்  பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிற போது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்கு சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

மேலும் ஜகாத்தை எந்த முறையில் திரட்டி வழங்கினால் அது ஏழைகளிடம் முறையாகச் சென்று  சேரும் என்பதையும் விளக்கமாக பல அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்துக் காட்டி இந்தத்தொடரில்  விவாதித்து இருக்கிறோம்.  இதன்மூலம் பைத்துல்மால் போன்ற அமைப்புகளின் சாதக பாதகங்களையும் உலகின் ஆய்வுக்கு விட்டு இருக்கிறோம்.

மேலும் சமூகப் பொருளாதாரம் தழைக்க வேண்டுமானால் தனிப்பட்ட குடும்ப உறவுகள் நல் வழியில் மலரவேண்டுமேன்று வரையறுத்ததும் இஸ்லாம். குடும்ப உறவுகளோடு தொடர்புடைய சமூகப் பொருளாதார சட்டங்களை இஸ்லாம் வரையறுத்து வைத்திருக்கிறது. தெளிவுபடுத்தி நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. விரிவாக நன்கு தெளிவுபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் வாழ்வை தொடங்கிவைக்கும் திருமணம் முடித்தல், விவாகரத்து, வாரிசுரிமை, வஸ்ஸியத்து செய்தல்   போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட சட்டங்களனைத்தும் ஆணித்தரமாக விவரிக்கப் பட்டுள்ளன. குடும்பப் பிரச்னைகளை அணுகுவது போன்றவை இறை நம்பிக்கையோடு தொடர்பு படுத்தும்  இறையச்சத்தோடு இணைத்துக் காட்டுவது இஸ்லாத்தின் சிறப்பியல்பாகும். குடும்பத்தின் புனிதத்தைக் காப்பது தனிமனிதக்  கடமை என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.    

முக்கியமாக பெற்றோரைப் பேணுதல் , பிள்ளைகளை கல்வி கொடுத்து உணவூட்டி வளர்த்தல், மணக்கொடை கொடுத்து மணம் புரிதல், உறவினர்களை ஆதரித்தல், அண்டை அயலார்களின் நலம் பேணுதல் , அனாதைகளை  ஆதரித்தல், அநாதைகளின் சொத்துக்களை நிர்வகித்தல், அடிமைகளை நடத்துதல் , உண்ணும்  முறை, விருந்தோம்பும்  முறை, ஆகியவை பற்றிய மார்க்கத்தின் சட்டங்கள் எடுத்துரைக்கும் யாவும்  இஸ்லாமிய சமூகப் பொருளாதார அமைப்பில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தும் செயல்களாகும்.  

அதேபோல் கணவன் மனைவி உறவுகள், கணவன் மனைவிக்கு வழங்கும் உரிமைகள் தொடர்பான சட்டங்களை வலுவான முறையில் ஏற்படுத்தி பெண்ணுரிமை! பெண்ணுரிமை!  என்று இன்று உலகம் முழுதும் எழும் குரல்களை ஒடுக்கும் வண்ணம் பொருளாதாரத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, வாழ்வுரிமை போன்றவைகளை சமத்துவமாக வழங்கி வரலாறு படைத்தது இஸ்லாம். அதன் அடிப்படையில் உருவானதே இஸ்லாமியப் பொருளாதாரம்.  

குடும்பக்கட்டுப்பாடு என்கிற பெயரில் உருவான கருவை அழிப்பதை எதிர்த்தும் அதேநேரம் தேவை ஏற்பட்டால்  அதற்கு அனுமதி அளித்தும் நடைமுறைக்கு ஏற்ற மார்க்கமாக தன்னை நிலை நிறுத்தி சமூக நீதி காப்பதும் இஸ்லாமியப் பொருளாதாரமே. 

நிறைவாக, பெருமானார் ( ஸல்) அவர்களின் ஒரு அமுதவாக்கை எடுத்துக் காட்டி இத்தொடரை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

“முஸ்லிமின் ஒவ்வொரு அங்கமும் அடுத்த முஸ்லிமுக்கு ப் புனிதமானதாகும். அவனது உயிர், மானம் , பொருள் ஆகிய அனைத்தும் புனிதமாகும் “ ( திர்மிதி)

என்பதே அது.   இதுவே சமூக நீதிக்கு சான்று பகரும் பொருளாதாரம். ஒருவரின்  பொருளை மற்றவர்  தவறான முறையில் அபகரிக்காமல், ஒருவரை ஒருவர் மதித்து , அன்புகாட்டி, அரவணைத்து, இருப்போர் இல்லாதோர்க்கு ஈந்து, இறைவன்      கூடாதென விலக்கியதை விலக்கி, அனுமதித்ததை ஏற்று சமத்துவ சமுதாயத்தை சமைக்கும் பொருளாதாரம். மார்க்கத்தையும் பொருளாதாரத்தையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாமல் ஆன்மீகத்தோடு இணைந்த அழகிய பொருளாதாரம். வணங்குவது  கடவுளுக்காக ,  வைக்கோல்  திருடுவது மாட்டுக்காக என்று மாற்றார் வகைப் படுத்தி இருக்கும் பொருளாதாரம் போல் இல்லாமல் இறைவனின் கட்டளைகளே , நபிமணி         ( ஸல்) அவர்களின் வாழ்வுமுறைகளே பொருளாதாரம் என்று இறையச்சமும் ஈமானும் பின்னிப் பிணைந்ததே இஸ்லாமியப் பொருளாதாரம்.

இந்தப் பொருளாதார அமைப்பின்  வீச்சின்  வேகம் உலகமெங்கும் பரவத்தொடங்கினால் உலகெங்கும் சகோதரத்துவமும், சமத்துவமும் ஓங்கும் ; தழைக்கும்; வளரும் என்பதே சான்றோர் கண்டுள்ள முடிவு. இந்தக் கோட்பாடுகளை உலகோரிடம் எடுத்துச் சென்று பரப்பும் அழைப்புப் பணியில் அகிலமெங்கும் உள்ள முஸ்லிம்கள் தங்களை ஈடுபடுத்தி ஈருலக வெற்றியைத்தேடிக்கொள்ள வேண்டும் என்ற அவாவைத்தெரிவித்து இந்தத்தொடரை நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.


முக்கிய குறிப்பு : மிகப் பொறுமையுடன் படிக்க வேண்டிய இந்தத் தொடரை அவ்வாறே படித்து வினாக்கள் எழுப்பிய என்னை புடம் போட்ட அன்பு நெஞ்சங்களுக்கும் , வாரா வாரம் படித்து ஆக்கபூர்வமான கருத்துரை இட்ட சகோதரர்களுக்கும், உற்ற துணையாகவும்  உறுதுணையாகவும் இருந்த உடன் பிறவா சகோதரர்களான நெறியாளர் மற்றும் அமீர்  அவர்களுக்கும் ஜசக் அல்லாஹ் ஹைரன்.
இன்ஷா அல்லாஹ் இந்தத்தொடர்  சில அறிஞர்களின் ஆலோசனை மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு மேலும் மெருகு ஊட்டப் பட்டு நூல்  வடிவம் பெற வைக்க அதிரை நிருபர் பதிப்பகத்தார் சார்பாக நிய்யத் செய்து இருக்கிறோம்.  அனைவரும் கரம்  ஏந்தி எங்களுக்காக து ஆச்  செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.  

இபுராஹீம் அன்சாரி

28 Responses So Far:

Unknown said...

ஒரு அழகிய கருத்தும் ஆழமும் செறிந்த ஒரு சிந்தனை தொடர், எந்த கல்லூரியிலும் போய் கற்க முடியாத , கற்க வாய்ப்பில்லாத இந்த பொருளாதாரத் தொடர் உன்மையிலேய நிறைய விஷயங்களை தொட்டு சென்றிருக்கின்றது.

இன்றோடு நிறைவு பெற்ற இந்த தொடர் ஒரு சில திருத்தங்களுடன் நூல் வடிவம் பெற இருக்கும் செய்தி, நிறைவு பெற்ற செய்தியின் ஏக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மன திருப்தி அளிக்கும் செய்தியாகும்.

விரைவில் புத்தகம் எங்கள் கையில் தவழ, அம்முயற்சி வெற்றி அடைய
இறைவனை இறைஞ்சியவனாக !

அபு ஆசிப்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

காக்கா ஒரு வழியாக இஸ்லாமிய பொருளாதார்க்கொள்கையை அவசர அவசரமாக முடிவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ்
நீங்கள் இந்த தொடரை முடித்தாலும் இத்தொடரின் தொடர்புடைய வட்டியில்லா பேங்கிங் சம்பந்தமான தொடரை நீங்கள் இன்ஷா அல்லாஹ்
ஆரம்பிக்க இருப்பதால் என் மனம் சாந்தியும் சமாதானமும் அடைந்தது

புலி பதுங்குவது எதற்கென்று புரிந்து கொண்டேன்.

இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையின் தொடரில் கிடைத்த திருப்தி நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் வட்டியில்லா பேங்க் தொடரிலும் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர் பார்க்கின்றேன்.

adiraimansoor said...

//இன்ஷா அல்லாஹ் இந்தத்தொடர் சில அறிஞர்களின் ஆலோசனை மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு மேலும் மெருகு ஊட்டப் பட்டு நூல் வடிவம் பெற வைக்க அதிரை நிருபர் பதிப்பகத்தார் சார்பாக நிய்யத் செய்து இருக்கிறோம். அனைவரும் கரம் ஏந்தி எங்களுக்காக து ஆச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். //

நீங்கள் எண்ணியபடி உங்களின் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை தொடர் ஒரு நூல் வடிவம் பெற்று எனக்கும் என்னை போன்ற சகோதரளுக்கும் கிடைத்து அது பெரும் நண்மை பயக்கும் என்பதுடன்

உங்கள் இந்த ஆக்கம் விரைவில் நூல் வடிவம் பெற வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கின்றேன்.

Ebrahim Ansari said...

அன்புத்தம்பி அபூ ஆசிப் அவர்களின் முதல் கருத்தாடலுக்கு மிக்க நன்றி.

அன்புத் தம்பி மன்சூர் அவர்களுக்கு , அலைக்குமுஸ் ஸலாம்.

அவசர அவசரமாக நிறைவுக்குக் கொண்டுவரவில்லை. ஓரளவு எழுத வேண்டியவைகளை கவர் செய்து இருக்கிறேன் என்றே நம்புகிறேன். எதுவும் விடுபட்டு இருந்தால் அறிஞர்களின் ஆலோசனையுடன் நூலில் அவையும் பற்றி எழுதுவேன் இன்ஷா அல்லாஹ். அவை அதிரை நிருபரிலும் இணைப்பாக வெளிவரும். து ஆச் செய்யுங்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நவீன கால வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் அறிய வேண்டிய ஐயங்களையும் மிகத் தெளிவாக நம் தாய் மொழியில் படித்து அறிய வைத்த அருமை பொக்கிசம். இதன் பலன் நம்மவர்களுக்கு முழுமையாய் கிடைப்பதுடன் மாற்று மதத்தவரும் அறியும் வகையில் கல்லூரி சார்ந்த்தவர்களும் படித்திட வழிவகை செய்வது நலமாயிருக்கும்.

இன்சா அல்லாஹ் நிய்யத்து போல எல்லாம் மனநிறைவாய் அமைந்திடவும், அதற்க்கு ஈடு கொடுத்திட உடல் நலமும் முழுமையாய் கிடைத்திட துஆ செய்கிறேன்.

sabeer.abushahruk said...

காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எழுந்துநின்று அரங்கம் அதிர கைதட்ட வேண்டும்போலுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்!

தொடரின் சுவாரஸ்யத்தினால் நிறைவை மிகவும் விரைவாக எட்டிவிட்டதுபோல் தோன்றினாலும் பேசுபொருளைச் செரிவாகவே அலசிய திருப்தி இருக்கிறது.

தங்கள் எண்ணம்போல் எல்லாம் அமைய வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

அலைக்குமுஸ் ஸலாம். இந்தத் தொடர் எழுதும் நேரங்களில் அத்தியாயங்கள் வெளியிடப் படும்போது தாங்கள் கேட்ட கேள்விகள் எழுப்பிய சந்தேகங்கள் உணமையிலேயே இந்ததொடரின் வெற்றிக்கு ஒரு வலுவான காரணமாக அமைந்ததை நானும் அரங்கத்தில் ஒப்புக் கொள்கிறேன். என்னை புடம் போட்டவை என்று நான் நிறைவாக எழுதி இருப்பது உங்களைக் குறிப்பிட்டே.

ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

என்றும் அன்புடனும் நன்றியுடனும்,

உங்களின் அன்புக் காக்கா அன்சாரி.

Ebrahim Ansari said...

அன்பான தம்பி ஜகபர் சாதிக் அவர்களுக்கு,

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் பெரும்பாலும் முதல் பின்னுட்டம் இட்ட உங்களின் அன்பை யும் ஆர்வத்தையும் எனக்குத் தந்த ஊக்கத்தையும் மறக்க இயலாது.

ஜசாக் அல்லாஹ் .

KALAM SHAICK ABDUL KADER said...

குறைகளைக் காண வியலாத் தொடர் நிறைவுரை எட்டியதை நெஞ்சம் ஏற்க மறுத்தாலும், நூலுருவில் வருமென்ற எதிர்பார்ப்பில் ஓர் ஆறுதலைப் பெறுகின்றேன்.

Ebrahim Ansari said...

அன்பான தம்பி கவியன்பன் அவர்களுக்கு,

இந்தத் தொடரை ஒரு வணிக இயல் படித்த பட்டதாரி என்கிற முறையில் தாங்கள் படித்து சில அத்தியாயங்களுக்கு உரை நடையாகவும் பல அத்தியாயங்களுக்கு கவிதையிலும் பின்னூட்டமிட்டு அலங்கரித்து இருக்கிறீர்கள். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தாங்கள் தந்த ஊக்கத்துக்கும் நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். ஜசாக் அல்லாஹ் ஹைரா.

Aboobakkar, Can. said...

மதிப்பிற்குரிய இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களின் இந்தபதிவுகளில் பயன் அடைந்தோர் ஏராளம்....... இதற்காக கருத்திட்டவர்களை மட்டும் பாராட்டி இருக்கிறீர்கள் என்று நினைகின்றேன் ஆனால் கருத்திட முடியாத பல தமிழ் நெஞ்சங்களும் இந்த வலை தளைதில் அதிகம் உள்ளதை நான் அறிவேன் அவர்களையும் நிச்சயமாக நீங்கள் பாராட்டியாக வேண்டும் ........வேறுபாடுகள் சில கருத்தில் மட்டுமே இருக்கும் இதற்காக அடியேனை கருத்து வேறுபாடு உள்ளவனாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

Shameed said...

மாமா நீங்கள் சிரமத்தை பார்க்கமால் சர்ர மண்டபத்தை புக் செய்து அனைவரையும் கூட்டி பாராட்டு விழா நடத்தி விடுங்கள்

மாமா எனக்கு ஒரு டவுட் முடி வெட்ட வெட்ட வளரும் நகம் வெட்ட வெட்ட வளரும் மூக்கு உடைபட உடைபட வளருமா ?

Muhammad abubacker ( LMS ) said...

நவீன கால வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் அறிய வேண்டிய ஐயங்களையும் மிகத் தெளிவாக நம் தாய் மொழியில் படித்து அறிய வைத்த அருமை பொக்கிசம். இதன் பலன் நம்மவர்களுக்கு முழுமையாய் கிடைப்பதுடன் மாற்று மதத்தவரும் அறியும் வகையில் கல்லூரி சார்ந்த்தவர்களும் படித்திட வழிவகை செய்வது நலமாயிருக்கும்.

இன்சா அல்லாஹ் நிய்யத்து போல எல்லாம் மனநிறைவாய் அமைந்திடவும், அதற்க்கு ஈடு கொடுத்திட உடல் நலமும் முழுமையாய் கிடைத்திட துஆ செய்கிறேன்.

இஸ்லாமிய பொருளாதரத்தை பொறுமையாக படிக்க முடியவில்லையே என மிக வருத்தப் படுகிறேன்.அன்பிற்குரிய இ.அ.காக்கா நூல் வெளிவந்தால் மறக்காம எனக்கு ஓன்று தந்துடுங்க

Anonymous said...

//ஒருவன் விறகு கட்டை சுமந்து அதை விற்று வாழ்வது.......//

அதுசரி! விறகு வெட்டிக்கு அதிராம்பட்டினதில் பெண் கொடுப்பார் யார்?
தெக்கேயில்ல பெண் தேடி போவனும். அதுவும் இப்போ அ.நி.யில் சாதாரணமானவங்க கருத்திட [கருத்தடைஅல்ல] சட்டம் தயாரிக்கிறாங்கலா?

இ.பொ.சி. புத்தக உரு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி!..

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்..

அதிரை இணைய வரலாற்றில் ஆக்கபூர்வமாக ஏரளமான பதிவர்கள் தங்களின் படைப்புகளை அவரவர்களின் வாய்புகளுக்கு ஏற்ற்றவாறு சாதனைகள் படைத்து வருகிறார்கள்.

அதிரையர்களின் எழுத்தாற்றலும் அவர்களின் எழுத்து ஆளுமையையும் உலகறிந்ததே ! அதில் சிலருக்கு மட்டுமே நல்லதொரு அங்கீகாரம் கிடைத்து இன்னும் எழுத்துலகில் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் பெரும் மதிப்பிற்குரிய பந்நூல் ஆசிரியர் அதிரை அறிஞர் அதிரை அஹ்மது (காக்கா) அவர்கள் ஏராளமான நூல்களை எழுதி வெளி வந்து இருக்கிறது என்பதை யாவரும் அறிவீர்கள்.

அவர்கள் அதிரைநிருபரில் தொடராக எழுதிய கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை வெகுவிரைவில் அதிரைநிருபர் பதிப்பகத்தின் சார்பாக வெளியிட இருக்கிறோம் என்பதை இந்த தருணத்தில் சுட்டிக் காட்டுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

அந்த வரிசையில் இணைய உலகில் தனித்துவமான எழுத்துக்களால் சமுதாய சீர்கேடுகளையும், பொருளாதர ஆய்வுகளையும் ஏராளமாக எழுதி வரும் எங்கள் சகோதரர் அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் அ.இபுராஹீம் அன்சாரி M.Com.,(காக்கா) அவர்கள் எழுதிய மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா என்ற புத்தகம் ஏற்கனவே அதிரைநிருபர் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக வெளிவந்தது.

தற்போது நிறைவை எட்டியிருக்கும் "இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனை" என்ற ஆய்வுகள் நிறைந்த நெடுந் தொடர் விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !

இந்த தொடருக்கென்று எண்ணிடலங்காத இடர்கள் முட்டும் போதெல்லாம் அதனை ஒரு எட்டு உதைவிட்டு எவ்வித தடங்களின்றி கால நேரம் பார்க்காமல் நம் அனைவருக்கும் பரிசளித்த இ.அ.காக்கா அவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாகவும், அவர்களுக்கு பக்கபலமாக அனைத்து வகையில் உறுதுணையாக இருப்போம் இன்ஷா அல்லாஹ் !

எங்கள் அனைவரின் பிரார்த்தனை !

யா அல்லாஹ் உள்ளத்தாலும் உணர்வுகளாலும், உடலாலும், எழுத்தாலும், செயல்களாலும் எம் சமுதாயம் நலன் பெற உழைக்கும் நம் சகோதரர்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் திடமான மன உறுதியையும் வழங்கி அவர்களின் சேவை தொடர, நீடூழி வாழ அருள்புரிவாயாக !

அன்புடன்

நெறியாளர் மற்றும் அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள் வாசகர்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

பொருளாதாரம் பற்றிய தொடர் என்பதால் முடிந்துவிட்டதே என்ற மன வருத்தம் ஏற்படுவது இயல்புதானே.. இருப்பினும் மனநிறைவான அர்த்தமுள்ள தொடர் காக்கா..

நல்ல பல அறியாத தகவல்களை தந்து நேர்வழிக்கு ஒரு வழிகாட்டியாக இந்த அருமையான பயனுல்ல தொடராக இருந்தது. ஜஸக்கல்லாஹ் ஹைரா...

பதிவு எழுதுவது என்பது சும்மா கணினியின் அருகில் அமர்ந்து ஒரிரு பத்திகள் எதோ எழுவது அல்ல, மேலும் மார்க்க தொடர்பான பதிவுகள் எழுதுவது என்பது உண்மையில் மிகவும் சிரமமான ஒன்று என்பதை நானும் அறிவேன்.தொடர் பதிவு எழுதும் போது, இந்த வார பதிவு பற்றிய சிந்தனையினால்... உணவு, உரக்கம், உடல் நிலை போன்றவைகள் மறக்க செய்யும்.

சில சந்தர்பங்களில் இந்த தொடரில் வரும் இறைவசனங்கள், ஹதீஸ்களை சரி பார்க்கும் சந்தர்ப்பத்ததை நீங்கள் எனக்கும் தந்தது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

காக்கா... எனக்குத் தெரியும் இந்த தொடர் எழுதும் போது உங்களுக்கு பல முறை உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் இந்த தொடரை எழுதியுள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக. உங்கள் உடல் நலணைப் பேணிக்கொள்ளுங்கள்...

நீங்கள் இன்னும் நிறைய இந்த சமுதாயத்தின் நலனுக்காக எழுத வேண்டும். அதற்கு வல்லவன் ரஹ்மான துணை புரிவானாக.

இன்ஷா அல்லாஹ் புத்தக வடிவில் இந்த தொடர் வெளிவந்து இன்னும் நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற உங்கள் விரும்பமே எங்கள் விருப்பமும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

உங்கள் அன்புத் தம்பி

M. தாஜுதீன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
குறைகளைக் காண வியலாத் தொடர் நிறைவுரை எட்டியதை நெஞ்சம் ஏற்க மறுத்தாலும், நூலுருவில் வருமென்ற எதிர்பார்ப்பில் ஓர் ஆறுதலைப் பெறுகின்றேன்.
========
நன்றி:கவிதீபம் கலாம் காக்கா.

crown said...

Shameed சொன்னது…

மாமா நீங்கள் சிரமத்தை பார்க்கமால் சர்ர மண்டபத்தை புக் செய்து அனைவரையும் கூட்டி பாராட்டு விழா நடத்தி விடுங்கள்

மாமா எனக்கு ஒரு டவுட் முடி வெட்ட வெட்ட வளரும் நகம் வெட்ட வெட்ட வளரும் மூக்கு உடைபட உடைபட வளருமா ?
------------------------------------------------
ஹி...ஹி...ஹி.... வயிரு வலிதாங்கல போங்க!,இதுக்குத்தான் நான் கண்டதில் மூக்கை நுழைப்பதில்லை! எமக்குத்தெரியும் மரியாதையின் எல்லை!

Ebrahim Ansari said...

தம்பி கனடா அபூபக்கர் அவர்களுக்கு,

இணைய தளத்தில் கருத்திட்டவர்களை மட்டுமல்ல கருத்திட முடியாமல் படித்தவர்கள் பலர் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் பாராட்டி சொல்லி இருக்கிறார்கள். சிலர் அலைபேசியிலும் அழைத்து கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அதிரை நிருபர் என்பது ஒரு அன்பான குடும்பம். கருத்து மாறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. ஆக்கபூர்வமான கருத்துக்களை அனைவரும் என்றுமே வரவேற்போம். அன்புடன் பதில் தருவோம். தங்களின் அன்பான கருத்திடலுக்கு எனது அன்பான நன்றி.

Ebrahim Ansari said...

அன்பான தம்பி எல் எம் எஸ் அபூபக்கர் அவர்களுக்கு,

இந்த தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்தே தங்களின் அன்பான ஊக்கங்களினால் ஆர்வப்படுத்தப்பட்டவன் நான்.

இடையில் நீங்கள் இணைப்பில் வரமுடியாவிட்டாலும், அடிக்கடி அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துக் கொள்ளும் பண்பும் அன்பும் என்றுமே மறக்க இயலாது.

இப்போது பொருளாதாரத் தொடர் நிறைவுற்ற வேளையில் தங்களின் வருகை மனம் மகிழச் செய்கிறது. மனுநீதி நூல் வெளியீடு நேரத்தில் தாங்கள் அளித்த ஒத்துழைப்பை நான் மற்றும் தம்பி தாஜுதீன் ஆகியோர் மறக்க மாட்டோம்.

இன்ஷா அல்லாஹ் தங்களின் ஒத்துழைப்பைக் கோரி மீண்டும் வருவோம்.

Ebrahim Ansari said...

அன்புத்தம்பி கிரவுன் தஸ்தகீர் அவர்களுக்கு,

மணிக்கணக்கில் நாம் அலைபேசியில் பேசினாலும் தளத்தில் தங்களின் நான்கு வரிகளைக் காணும் பொது ஏற்படும் உற்சாகமே தனி.

தங்களின் தொடர்ந்த அன்புக்கு என்றும் அருகதை உடையவனாக அல்லாஹ் ஆக்கிவைப்பானாக!

Ebrahim Ansari said...

அன்பின் தம்பிகள் நெறியாளர் அபூ இப்ராஹீம் மற்றும் தம்பி தாஜுதீன் அவர்களுக்கு, அலைக்குமுஸ் ஸலாம்.

தங்களின் அன்பாலேயே இந்தத் தொடரை எழுதவும் நிறைவு செய்யவும் இயன்றது. பல நேரங்களில் உடல் நலக் குறைவால் அந்த வாரத்துக்குரிய பகுதியை அனுப்ப இயலாமல் போன நேரங்களில் உங்கள் இருவரின் ஆறுதலான அன்பான வார்த்தைகளாலேயே நான் நலம் பெற்றேன் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நான் செய்த ஏதோ நன்மைகள் என்னை உங்களுக்கு இடையில் ஒருவனாக ஆக்கிவைத்து இருக்கிறது என்று உளமாரக் கருதுகிறேன்.

கருத்திட்ட மச்சான் அவர்களுக்கும் மருமகன் சாவன்னா வுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அத்தியாயத்தில் கருத்திடாவிட்டாலும் என்றும் எனது பாசத்துக்குரிய தம்பி ஜாகிருக்கும் மருமகனார் யாசிர் அவர்களுக்கும் அவர்கள் தொடர்ந்து தந்த அன்பான ஊக்கத்துக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் அறிமுகமாகி இப்போது நமது தளத்தில் அறிவுபூர்வமான ஆக்கங்களைத்தந்து கொண்டிருக்கும் சவூதிப் புயல்கள் தம்பி அபூ ஆசிப் மற்றும் மன்சூர் ஆகியோருக்கும் எனது அன்பை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் அண்ணாவியார் அவர்கள் அடிக்கடி வந்து அன்பான கருத்திட்டு ஆர்வம் தருவார்கள் அவர்களுக்கும் எனது நன்றி.

எங்களது அன்புக்குரிய தம்பி இக்பால் எம் ஸாலிஹ் அவர்களுக்கும் நான் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன்.

எங்களது நிய்யத்தை நிறைவேற்றிவைக்க து ஆச செய்த , துஆச் செய்யம் அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரைன்.

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

தம்பி அஹமது அமீன், தம்பி ராசிக் ஆகியோரும் பல நேரங்களில் தங்களுடைய அன்பான கருத்துக்களை தந்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நெஞ்சம் மறவாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

adiraimansoor said...

//மாமா எனக்கு ஒரு டவுட் முடி வெட்ட வெட்ட வளரும் நகம் வெட்ட வெட்ட வளரும் மூக்கு உடைபட உடைபட வளருமா ?//

மூக்கு உடைபட உடைபட ரத்தமும் சீலும்தான்வரும்

Yasir said...

கடினமான இந்த தலைப்பை தொட்டு பல்வேறு சிரமங்களுக்கிடையே சீராகவும் சிறப்பாகவும், ஆய்வு மேற்க்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும் நேர்த்தியான நடையில் /வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வகையிலும் இத்தொடரை மெருகேற்றி தந்த நீங்கள் மென்மேலும் எங்களுக்கு பயனுள்ள பல தொடர்களை தர துவாச்செய்தவனாக

ZAKIR HUSSAIN said...

//.இந்த அத்தியாயத்தில் கருத்திடாவிட்டாலும் என்றும் எனது பாசத்துக்குரிய தம்பி ஜாகிருக்கும்//

Just came from Penang & North Malaysia...drove more than 900KM in 2 days. Will write tomorrow

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,


இத்தனை நாட்களாய் ஒரு யாகம் மாதிரி அல்லது எழுத்து மாரத்தான் ஓட்டம் நிறைவடைந்திருக்கிறது. இதற்காக பல சிரமங்கள் இருந்திருக்கும், எழுத உட்காரும்போது திடீர் வேலைகள் மூட் ஐ கெடுக்கும். பிறகு எழுத விடாமல் 'மந்திரிச்சி" விட்ட மாதிரி திரியச்சொல்லும். இதை எல்லாம் தாண்டி எழுதுவதுதான் யாகம்.

இதை மிக அருமையாக செய்திருக்கிறீர்கள். இந்த பொருளாதாரம் பற்றிய ஆக்கம் படிக்கும் பிள்ளைகளை போய் சேர வேண்டும். பெரியவர்கள் முதலில் 'வைரஸ்' க்ளீன் செய்து கொண்ட பிறகு படிக்கலாம். [ இல்லாவிட்டால் ஆயிரம் நொட்டை சொல்வாய்ங்க" ]

crown said...


ZAKIR HUSSAIN சொன்னது…

To Brother Ebrahim Ansari,


இத்தனை நாட்களாய் ஒரு யாகம் மாதிரி அல்லது எழுத்து மாரத்தான் ஓட்டம் நிறைவடைந்திருக்கிறது
-----------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும். ஜாஹிர் காக்கா நலமா? இப்படி சமுதாயம் மா(ர)றத்தான் காக்கா எழுதுகிறார்கள்.இன்சா அல்லாஹ் மாற்றம் வரும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு